கல்லூரிக் காலத்தில் எழுதத் தொடங்கிய அய்யனார் ஈடாடி இன்று ஏழு படைப்புகளைத் தந்து தனித்தடம்பதித்து இலக்கிய உலகில் இடம் பிடித்துள்ளார். ‘ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி’ என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி இன்று மதுரை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ‘கிருதுமால் நன்செய்’ என்ற அற்புதமான சிறுகதைத் தொகுப்பை தமிழுக்கு வழங்கியுள்ளார். ‘மூதூர்க்காதை’ என்ற தலைப்பில் இதற்கு முன் சிறுகதைத் தொகுப்பைத் தந்திருக்கிறார். நாள்கள் செல்லச் செல்ல அவரது எழுத்து நடை நம்மை வசப்படுத்துகிறது.
கற்றது வேதியியல் துறையில் பொறியாளர் என்றாலும் அவர் பெற்றது விவசாயம் என்னும் உலகை வாழ்விக்கும் தெய்வப்பணி. மதுரையின் மகத்தான அடையாளம் வைகைநதி என்பது நம் அனைவருக்கும் தெரியும். மதுரை மக்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்த ‘கிருதுமால்’ நதியின் இன்றைய நிலை நம்மில் பலரும் அறிந்திராதது. மண்ணையும் மக்களையும் எப்போதும் தம் எண்ணத்திலும் எழுத்திலும் பதிவு செய்யும் அய்யனார் ஈடாடியின் திடகாத்திரமான எழுத்துகளைக் கொண்டு ‘சலசல’வென ஓடி வருகிறது கிருதுமால் நன்செய்.
“நிலத்தையே புரட்டிக்கொண்டு பாடிக்கொண்டிருக்கும் எளிமை நிறைந்த சம்சாரிகளே எனது கதைமாந்தர்கள். அவர்களை ஆரத்தழுவி கட்டியணைக்கிறேன்” என தனது கதைகளின் கதாநாயகர்களைப் பற்றிக்கூறுகிறார்.
துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
“ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல” ஒன்றிரண்டு கதைகளை மட்டும் சொன்னாலே அவரது படைப்புகளில் ஓடும் ஆன்மாவின் துடிப்பு நமக்குப்புலனாகும். முதல் கதையான ‘துணைஇல்’ கணவனை இழந்து, தன் வாழ்க்கை ஓட்டத்தை நடத்தும் ஆயிரமாயிரம் வெள்ளைத்தாய்களின் கனவினைச் சொல்கிறது. சேத்துப்புண்ணால் அவதிப்படும் வெள்ளைத்தாய் உண்மையைச் சொன்னால் வேலை கிடைக்காது என நினைத்து ‘வயித்துக்குச் சரியில்லை’ எனச்சொல்லி களையெடுக்கும் கவலை நிறைந்த நிலை நம்மையும் கவலையடைச் செய்கிறது. பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்களும் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருக்க எடை விறகு வெட்டும் நிலையை எதார்த்தமாகப் பதிவு செய்கிறார்.
“கவக்கம்புவை வச்சு கருவைத் தூரை ஆளு நின்னு வெட்டுறதுக்கு எசவா, முள்ளு மொடியை அகற்றினான் காசி. தூறல் போட்ட மேகத்தில் வெயில் சூடு பிடிக்க எழுந்தது.மொக்கை கருவத்தூருகளை வெட்டிச் சாய்த்து அரக்கி, குச்சிகளை ஒரு பக்கமும், கனத்த வெறகுகளை ஒரு பக்கமும் ஒதுக்கிப் போட்டான்.” கிராமத்தில் விறகு வெட்டும் காட்சியை நம் கண்முன்னே தன் எழுத்தின் மூலம் காட்சியாக வடிக்கிறார் கதையாசிரியர் அய்யனார் ஈடாடி. நேரில் பார்க்காதவர்களால் இப்படி எழுத்தில் வடிக்க முடியாது.

வெள்ளத்தாயிதான் கதையின் முதன்மைக் கதைமாந்தர் என்றாலும் துணைமாந்தர்களாக ஆடுமேய்ப்பவரும், விறகு ஏவாரியும், டிரைசைக்கிள்காரனும், விறகு உடைப்பவனும் என கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
விறகு வெட்டி அதனால் கிடைத்த இருநூறையும் அம்மாவிடம் கொடுக்க, அவள் ஐம்பதை எடுத்துக்கொண்டு மீதி நூற்றைம்பதை தன் பிள்ளைகளான காசிக்கும் மொக்கைக்கும் கொடுக்க, அவர்கள் அதை உண்டியலில் சேமித்தனர் என சேமிப்புப் பழக்கத்தையும் போகிற போக்கில் விதைத்துச் செல்கிறார். பழைய திரைப்படப்பாடலான “மணப்பாறை மாடுகட்டி…” எனத்தொடங்கும் பாடல் வரி மனதிற்குள் வந்து போனது. கணவன் இல்லையென்றாலும் பிள்ளைகள் தன்னைக் காப்பதை நினைத்து மகிழ்கிறாள் வெள்ளைத்தாயி. மாடக்குழியில் தீபம் நிமிர்ந்து எரியத் தொடங்கியது என கதையை சுபமாக முடிக்கிறார். இனி அவர்களது வாழ்க்கையில் வெளிச்ச ஒளி பரவத்தொடங்கியது என்பதை நாம் இதன் மூலம் அறியலாம்.
நிறைவுக்கதை ‘சில்லறைக் காசுகள்’. கொரனா காலகட்டத்தில் மதுரையில் பூல்பாண்டி என்ற ஒரு யாசகர் பிச்சை எடுத்து, பத்தாயிரம் ரூபாய் சேர்ந்ததும் அதை மாவட்ட ஆட்சியரிடம் தந்து மக்களுக்கு உதவும் நிதியில் சேர்த்து விடுவார். இப்படி ஒரு முறை இருமுறை அல்ல. பதினைந்து முறை யாசகர் பெற்று பத்தாயிரம் பத்தாயிரமாகக் கொடுத்ததை நாளிதழ் செய்தியில் படித்திருக்கிறேன். இக்கதையைப் படித்ததும் அந்த யாசகரின் நினைவு எனக்கு வந்தது.
யாசகர் சன்னாசி பிச்சை எடுத்தாலும் அதை தனக்கென வைத்துக் கொள்ளாது பிறர்க்கும் தந்து மகிழ்வித்து வாழும் மனிதராக வலம் வருகிறார். சில்லறை கேட்பவர்களுக்கு மனமுவந்து தருகிறார். உணவகத்தின் முன் யாசகம் கேட்பவருக்குக் காசுகளுக்குப் பதிலாக உணவுப் பொட்டலம் கிடைக்கிறது. அதை காய் விற்பவர், பூ விற்பவர் என அனைவருக்கும் தந்து மகிழ்கிறார். அவரது பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருப்பதால் சன்னாசி பிச்சை எடுப்பது பிடிக்காமல் அவர்கள் சென்னைக்குச் சென்றுவிட்டார்கள். ஊரார்க்கும் இது பிடிக்கவில்லை. உணவகத்தில் வேலை பார்க்கும் சிங்காரம் செய்த ‘வேலையைக்’ கண்டதால் அவனால் எப்படி அடித்து, நிர்வாணமாக்கப் பட்டு, ஆஸ்பத்திரியில் அனாதைப் பிணமாகக் கிடந்தான் என்பதை விவரிக்கும் காட்சி வாசகர்களின் கண்களைக் குளமாக்குகிறது. அவரிடமிருந்த சில்லறைக் காசுகள் அனாதை இல்லத்தை நினைத்துக் கொண்டிருந்தன என கதையை முடிக்கிறார். நமது மனம் சன்னாசியின் உதவும் உள்ளத்தை நினைத்துக் கொண்டிருக்கிறது.
இடையில் உள்ள பதினான்கு கதைகளும் மதுரை மண்ணின் மணத்தைச் சுமந்தபடி நம் மனதில் புகுந்து வெளிவருகிறது. இங்கே இரண்டு கதைகளை மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். மற்ற கதைகளை நண்பர்கள் பெற்று வாசிக்க வேண்டும் என்பதற்காக. ‘கிருதுமால் நன்செய்’ மக்களின் வாழ்வியல் வாசத்தைக் காட்டும் பூவாக மலர்ந்திருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற படைப்புகளை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
