எதிர்மறை சோதனை வழக்கு

எனக்கான மதிய, மற்றும் மாலை சிற்றுண்டி அடங்கிய பையை பாறை மீது வைத்தான் சலாவீன். காட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடும் எனக்கு உணவு எடுத்து வந்து தந்து உதவுகிறான். பதிலுக்கு அவன் குடும்பத்தின் மருத்துவ தேவைகளுக்கு நான் உதவுவதாக எங்களுக்குள் எழுதிக்கொள்ளாத ஒப்பந்தம். ஒவ்வொருமுறை எனக்கு உணவு எடுத்து வருகையிலும், இளைப்பாரும்  நேரம் என்னிடம் அளவளாவிவிட்டுச் செல்வது அவனது வழமை. 

எப்போதும் போல், என்னால் அங்கே உருவாக்கப்படும் காகிதங்கள், மருந்து வில்லைகள், பயன்படுத்தப்பட்ட இலைகளாலான தட்டுகள் போன்றவற்றை ஒரு சிறிய குழிக்குள் தள்ளி தீவைத்து எரித்தான். அதன் பிறகு, 

“ஒரு சின்ன உதவி” என்றுதான் துவங்கினான் சலாவீன் அன்றைக்கு.

“என்ன?” என்பதாய் ஏறிட்டேன்.

“எனது சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தங்களால் உதவமுடியுமா?” என்றான்.

“நகர வாழ்வில் தான் சிறு நீரகத்தில் கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதென்றால், காட்டு வாழ்விலுமா?” என்றேன் நான் நம்பமாட்டாமல்.

சலாவீன் எதுவும் பேசவில்லை. அமைதியாக என்னையே ஏறிட்டான்.

கைப்பையிலிருந்து, ஆராய்ச்சிக்கென நான் உலகெங்கிலுமுள்ள பொது மக்களிடமிருந்து பெறும் உதவித்தொகையிலிருந்து கொஞ்சம் பணம் உருவி அவனுக்குக் கொடுத்தேன்.

“நன்றி. நான் இரவு உணவுடன் மாலை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சலாவீன் காட்டின் விளிம்பை நோக்கி நடக்கலானான்.

நான் என் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத் துவங்கினேன்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்திலமைந்த ஒரு காட்டில், ஒரு வாழ்விடம் அமைக்க, குழி ஒன்றை வெட்டிய அந்த இடத்தில்.  முன்னொரு காலத்தில், மருத்துவத்துறை சார்ந்த அல்லது மாந்திரீகத்தில் ஒன்றில் பணி செய்த ஒருவரின் இடமாக இருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப் போதுமான பொருட்கள் கிடைத்தன.  

சல்ஃபர்,  பாஸ்பரஸ் ஆகிய வேதிப்பொருட்கள், பாதரசம் மற்றும் உப்பு. பாஸ்பரஸ் தயாரிக்கக் கிடைத்த செய்முறை விளக்கம் சற்று நகைப்பூட்டியது உண்மை. ஆயிரத்து ஐந்நூறு லிட்டர் சிறுநீரைக் காய்ச்சி அதிலிருந்து வெளியேறும் நீராவியை சேகரித்து வடிகட்டி மேலும் ஒரு வேதிப்பொருள் சேர்க்க சில நூறு கிராம் அளவுக்கு பாஸ்பரஸ் கிடைத்ததாம். 

வேடிக்கையாக இருக்கிறதல்லவா என்று எண்ணி புறம் தள்ளிவிட மனமிருக்கவில்லை.

கொழ கொழவென்ற மனித இந்திரியங்கள் அடங்கிய கோப்பையை ஒரு வாழை இலையின் மீது வைத்துக் கவிழ்த்தேன். இந்திரியங்கள் நாலாபுரமும் வழிந்தோட முற்பட்டன. சட்டென அருகே இருந்த கற்கள், பாறைகளை எடுத்து, சுற்றிலும் அடுக்கித் தடுத்தேன். இந்திரியங்கள் நடுவாந்திரமாகக் குவிந்தன. பெண் இந்திரியம் என்னுடையது. ஆண் இந்திரியம்? அது யாருடையது என்பது முக்கியமில்லை. அது ஒரு ஆணுடையது என்பது மட்டுமே முக்கியம்.  ஒரு முனையில் சல்ஃபர். மற்றொரு முனையில் உப்பு. நடுவே, பாலம் அமைத்தது போல் பாதரசம். இந்த அமைப்பின் மீது மின்சாரம் பாய்ச்சினேன்.  சன்னமாக வெடித்தது. அதை அப்படியே தென்னங்கீற்றாலான குடுவை ஒன்றைக் கொண்டு மூடினேன். 

ஒரு வாரம் சென்றிருக்கும். அந்த ஒரு வாரமும், சலாவீன் ஒவ்வொரு நாளும் எனக்கு உணவு எடுத்து வந்தான். மாலை வந்து இரவு உணவு தந்துவிட்டு, மதிய உணவுக்கான பாத்திரங்களை வாங்கிச்சென்றான். அவனது உதவியால் உணவு குறித்த கவலை ஏதுமின்றி நான் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.  இடைப்பட்ட காலத்தில் காடு பேய் மழை ஒன்றிற்கும் இலக்கானது. ஆராய்ச்சிக்கென அமைக்கப்பட்ட குடிலில் பல மணி நேரங்கள் கழிக்க நேர்ந்தது. வாசித்து முடிக்க திட்டமிட்டிருந்த நூல்களை வாசித்தும், உடற்பயிற்சிகள் செய்தும் நேரத்தைக் கடத்தினேன்.

ஒரு வாரத்தின் முடிவில் எட்டாவது நாள், மதியத்தின் பிறகு ஏதாவது நடக்குமென்று கூர்ந்து அவதானித்தேன்.  நொடிகள் நிமிடங்களானது. நிமிடங்கள் மணித்தியாளங்களானது. பசி மயக்கமா? அல்லது தசை  நார்களின் வீழ்ச்சியா? தெரியவில்லை. நினைவு திரும்பி நான் எழுந்தபோது என் முன்னே ஒரு பாறை இருந்தது. வடிவில் சற்று பெரிதாயிருந்தது. இந்திரியங்களைச் சுற்றி நான் வைத்த பாறைகள் அளவில் சிறியவை. அவைகள் இப்போது எங்குமே காணப்படவில்லை. என் முன் இருந்த பாறை சுண்ணாம்பு நிறத்தில் ஒரு சிறிய பாண்டா கரடியின் அளவில் இருந்தது. இந்திரியங்களுக்கு என்னானது என்று நான் தேடினேன். அதைச் சுற்றி வைத்த பாதரசம், உப்பு முதலானவைகளும் கூட காணாமற்போயிருந்தன.

நான் அங்குமிங்கும் ஓடினேன். மரங்களின் பாதங்களிலும், செடிகளின் இடுக்குகளிலும் தேடினேன். எங்குமே நான் இந்திரியங்களைத் தொகுக்கப் பயன்படுத்திய கற்கள், பாறைகள் இல்லை. காட்டில் பெய்த பேய் மழையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. அங்கே ஒரு பரிசோதனை நடந்ததற்கான எவ்வித சமிஞையும் தெரியவில்லை. ஏதோ நான் மேற்கொண்டதாக நினைக்கும் பரிசோதனை, அதுகாறும் நடக்கவே இல்லை என்பது போல் தோற்றமளித்தது. தேடித்தேடி ஓய்ந்து சலித்துத் திரும்பியபோது தான் கவனித்தேன். 

முன்பு பாறை இருந்த இடத்தில், இப்போது சுண்ணாம்பு நிறத்தில் சருமம் அமையப்பெற்ற ஒரு சின்னஞ்சிறு உயிரினம் ஒன்று தெரிந்தது. அதன் உடல் மெல்ல அசைந்தது. முதலில் அந்த சுண்ணாம்பு நிறம் அந்த உயிரினத்தின் முடிகள் அடர்ந்த சருமம் என்றே நினைத்தேன். ஆனால், வெகு அருகாமையில் பார்த்ததில் அது முடிகள் அல்ல என்பது புரிந்தது.  சருமமே அப்படித்தான் இருப்பதாகப் பட்டது. அது வினோதமாக இருந்தது. என் விரல்களால் அதனை நான் மெல்ல வருடினேன். ஒரு உயிரை, அதன் சருமத்தை வருடுவது போலத்தான் இருந்தது.  அமிழ்ந்தது. அசைந்தது. 

நான் பரிசோதனைக்குப் பயன்படுத்திய இந்திரியங்களின் கூட்டு விளைவா அது என்று வியப்பு என்னுள். நான் கையாண்ட இந்திரியங்களின் சேர்க்கை விளைவுதான் அது என்பதை ஊர்ஜிதம் செய்ய எனக்கு ஒரே ஒரு உபாயம் மட்டுமே இருந்தது. அதன் ரத்தத்தை எடுத்து சோதிக்க வேண்டும். சேர்க்கையில் எனது இந்திரியமும் இருந்தது. ஆகையால், ரத்தத்தில் எனது மரபணுவும் இருக்க வேண்டும். 

நான் அருகே இருந்த என் ஆய்வுக் கூடத்துக்கு ஓடினேன். ரத்தம் சேகரிக்கும் உபகரணங்கள் எடுத்து வந்தேன். ஊசி ஒன்றை எடுத்து அதில் செலுத்த, ஊசியின் முனை உடைந்தது கண்டு நான் வியப்புற்றேன். அது திடமாக இருந்தது. அமிழவில்லை. அசைவில்லை. ஒரு பாறை போல. என் விரல்களால் வருட அது பாறை தான் என்பது புரிந்தது. அதை நான் கையிலேந்தினேன். கனமாக இருந்தது. ஆகாயத்தில் மேல் நோக்கி வீசினேன். அது உயரே எழும்பி, காற்றில் தவழ்ந்து பின் மீண்டும் என் கரங்களை வந்தடைந்தது. நான் அதனை மீண்டும் அதனிடத்தில் வைத்தேன். 

உருவத்தில் ஒன்றே போல் தெரியும் இரு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கிறேனோ என்ற ஐயம் வந்து சுற்றிலும் தேடினேன். அங்குமிங்கும் அலைபாய்ந்தேன். பின் மீண்டும், அதன் அருகே சென்று என் விரல்களால் தொட இப்போது அது விலங்கின உடலாக இருந்தது. அமிழ்ந்தது. அசைந்தது. இன்னொரு ஊசியை அதனுடலில் செலுத்த அது எளிதாக உள் நுழைந்தது. சிறிது ரத்தம் எடுத்தேன். பரிசோதித்தேன். என் மரபணு தான் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், இப்போது அது மீண்டும் பாறையாகியிருந்தது. 

அதனருகே தான் அந்தப் பொருள் இருந்தது. பார்க்க, சிறிய தேங்காய் போல் இருந்தது. அங்கிருந்த இலைகளைக் கொண்டு என் சருமம் அதன் மீது படாதவாறு அப்பொருளைக் கையிலேந்தினேன். லேசாக சூடாக இருந்தது. அதன் மீதிருந்து மிதமான வெப்பம் வந்தது. அந்த அடர்ந்த வனத்தில் அது அத்தனை வெப்பத்துடன் இருக்க ஒரே ஒரு வாய்ப்பு தானிருந்தது – அது விண்ணிலிருந்து விழுந்திருந்தாலொழிய அது வெப்பமாக இருக்க வாய்ப்பில்லை. ஆக, விண்வெளியிலிருந்து பூமியில் விழுந்திருக்கும் பொருள் என்று நான் புரிந்துகொள்ள அது போதுமானதாக இருந்தது.

என்ன நடக்கிறது என்பது புரிந்தபோது நான் நின்றிருக்கும் தரை நழுவுவதைப் போல உணர்ந்தேன். 

ஒரு கிரகம், தன்னிடமுள்ள இந்திரிய சாத்தியங்களைக் கொண்டே உயிர்களை உருவாக்க இயலும்.  பூமிக்கிரகத்தின் இயல்பின் நிமித்தம் உருவான உயிர்கள் கார்பன் அடிப்படையிலானவை. பிரிதொரு கிரகத்தில் சிலிக்கான் அடிப்படையில் உயிர்கள் இருக்கலாம் என்றெல்லாம் நான் படித்திருக்கிறேன். நான் மேற்கொண்ட பரிசோதனையில் விளைந்தது இரண்டு. முதலாவதாக, சிலிக்கான் அடிப்படையிலமைந்த உயிர். இரண்டாவது, கார்பன் அடிப்படையிலமைந்த உயிருக்கும், சிலிக்கான் அடிப்படையிலமைந்த உயிருக்கும் இடையிலான இணைப்பு அல்லது தழுவும் தன்மை. ஆங்கிலத்தில் அடாப்டர் (Adapter) என்பார்கள். ஒரு தழுவு கருவியால், கார்பன் மற்றும் சிலிக்கான் அடிப்படையிலான உயிர்களுக்கிடையிலான தழுவல் சாத்தியப்படுத்தப்பட்ட உயிர். 

இதன் பொருள் என்னவெனில், பூமியில் மனித உருவில் இருக்கும் நான், உயிர் வளர்ச்சியற்ற செவ்வாய் போன்ற ஒரு கிரகத்தில் வெறும் பாறையாக நீண்ட நெடும்காலம் கடத்த முடியும். அதே போல், சனிக்கிரகத்தில் மீத்தேன் சார்ந்த உயிராக நீள முடியும். செவ்வாய் கிரகம் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, உயிர்களை உருவாக்க நேர்கையில் நான் மனித உருவத்திற்கு வர முடியும். இந்தப் புரிதலை நான் அடைந்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது.

இதன் பின்னணியில், உயிர்களின் சாத்தியங்கள் குறித்து தீவிரமான சிந்தனை போனது எனக்குள். ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு  நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன? 

இவ்வாறு நான் சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில் சலாவீன் இரவு உணவுடன் வந்தான்.

“என்னப்பா? மருத்துவரிடம் காட்டிவிட்டாயா?” என்றேன்.

“இல்லை. இன்னும் காட்டவில்லை. இன்று ஏராளமான நோயாளிகள். ஆதலால், சந்திப்புக்கு வாய்ப்பு அமைந்திருக்கவில்லை” என்றான் சலாவீன்.

சட்டென்று எனக்கு அந்த யோசனை தோன்றியது. அத்தழுவு கருவியை எடுத்து சலாவீன் மீது வைக்க, அவன் நொடிப்பொழுதில் கல்லாகிப்போனான். 

ஒரு சிலை போல் தோற்றமளித்தான். அச்சு அசலாக மனிதன் போன்றே தோற்றமளிக்கும் ஒரு கல். இப்போது மீண்டும் அக்கல்லை, தழுவு கருவி கொண்டு தொட அவன் மனித உருவெடுத்தான். மயக்கத்திலிருந்து மீண்டவன் போல் சிலிர்த்தான். இங்கும் அங்கும் பார்த்து, உடலை ஒருமுறை சிலுப்பிக்கொண்டான்.

“என்ன? என்னானது?” என்றான் அதிர்ச்சி விலகாமல். 

“உன்னைச் சற்று  நேரம் கல்லாக்கினேன்” என்றேன். பிறகு அவனைச் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று என்னிடமிருந்த கருவிகள் கொண்டு சோதித்ததில் அவனது சிறு நீரகக் கல்  மறைந்திருந்தது கண்டு நான் அதிர்ந்தேன்.

“என்ன கல்லாக்கினீர்களா? அது சாத்தியமா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான் சலாவீன் ஆச்சர்யத்துடன்.

“ஆம். சாத்தியமே எனக்கே இப்போது சற்று முன் தான் தெரிந்தது”

“ஏன் கல்லாக்கினீர்கள்?”

“உன் சிறு நீரகத்தில் கல் இருக்கிறதென்றாயே”

“அது உப்புக்கல் தானே”

“மீண்டும் கல்லிலிருந்து மனிதனாக்குகையில், இந்தத் தழுவு கருவி, உன் சிறுநீரகக் கல்லை திசுவாக்கும் என்று நம்பினேன். என் நம்பிக்கை  நிஜமாகிவிட்டது”

சலாவீன் ஆச்சர்யத்துடன் என்னையே உற்று நோக்கினான்.

“ஆமாம். காலையிலிருந்து வயிற்றுப்பகுதியில் நான் உணர்ந்திருந்த லேசான வலி இப்போது இல்லை. பரிபூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்கிறேன்” என்றான் சலாவீன்.

“என் உடல் சுகவீனம் இத்தனை விரைவில் குணமாகும் என்று நான் நினைக்கவே இல்லை” என்றான் தொடர்ந்து.

“அங்கே தான் ஒரு சிறு பிரச்சனை” என்றேன் நான் என் சிந்தையை ஆக்ரமித்திருந்த எண்ணங்களினூடே.

“என்ன பிரச்சனை?” என்றான் சலாவீன், தன கைகளைத் தன் பிதுங்கிய தொப்பை வயிற்றில் அலையவிட்டபடி.

“இதை நிச்சயமாக யாரோ உருவாக்கியிருக்கிறார்கள். உனக்கு இதை எப்படிப் புரியவைப்பது என்று…..” என்று நான் இழுக்க,

“நானும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் சார். சொல்லுங்கள்” என்றான் சலாவீன்.

“பெருவெடிப்பிலிருந்து எல்லாமும் உருவாகியிருக்கிறது. அதன் பொருள் என்ன?” என்றேன் நான்.

“என்ன?” என்று எதிர்கேள்வி கேட்டான் சலாவீன்.

“காலையில், நான் பயன்படுத்தி வீசிய குப்பைகளை எரித்தாயே. நினைவிருக்கிறதா?”

“ஆமாம்”

“எல்லாமும் எரிந்து இறுதியில் என்னானது?”

“கரியானது”

“அப்படியானால், காகிதமாக இருந்தாலும், மரப்பட்டையாக இருந்தாலும், மருந்து வில்லைகளானாலும் எல்லாமும் எரிந்தால் கரியாகத்தான் ஆகிறது. இல்லையா?”

“ஆம்”

“அதாவது எல்லா பொருட்களையும் நெருப்பு எரித்து, ஒற்றைப் பொருளாக்குகிறது என்பதை கவனிக்கிறாயா?”

சலாவீன் யோசனையாய் தலையசைத்தான்.

“பெருவெடிப்புக்கு முன் எல்லாமும் ஒற்றைப் பொருளாகத்தான் இருந்திருந்திருக்கிறது. பெருவெடிப்பில் அந்த ஒற்றைப்பொருளே பற்பல தனிமங்களாக, கருப்பொருளாக, தூசிகளாக, வாயுக்களாக விரிந்திருக்கின்றன. ஆக எல்லாவற்றுக்கும் மூலம் ஒற்றைப் பொருள் தான். நாளை ஒருக்கால், காலம் பின்னோக்கிப் பயணிக்கின், எல்லாமும் சுருங்கிச் சுருங்கி அந்த  ஒற்றைப்பொருளாகிவிடும். இல்லையா?” என்றேன் நான்.

சலாவீன் தலையசைக்க மறந்தவனாய் நான் சொல்வதையே இமைகொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

“உன்னை அக்கருவி கல்லாக்கியிருக்கிறது. அதற்கு முன் நான் உருவாக்கிய ஒரு உயிரையும் அது கல்லாக்கியது. ஆக, எல்லா தனிமங்களையும், அணுக்களையும் அது சிலிக்கானாக்குகிறது. சிலிக்கான் தான்  இக்கருவி உருவாக்கும் அல்லது உருவாக்க விதிக்கப்பட்ட அந்த ‘ஒற்றைப் பொருள்’”

சலாவீன் ஏதோ புரிவதைப் போல் தலையசைத்தான். ஆயினும் இன்னமும் அவனது முகத்தில் தெளிவின்மையின் ரேகைகள்.

“அப்படியானால் நான் கல்லாகி மீண்டது…..” என்று அவன் இழுக்க,

“அங்கு தான் குழப்பமே. உன்னைக் கல்லாக்கியது. பின் மீண்டும் மனித சரீரத்திற்கு மீட்டது. இதை நாம் எப்படிச் சாத்தியப்படுத்தியிருப்போம்?”

“  நான் அதைச் செய்து பார்த்திருக்கிறேன் சார். எங்கள் காட்டிற்கு சில சமயம் மகிழுந்தில் வருபவர்கள் எஞ்சின் அடைத்து நின்றுவிடுவார்கள். நாங்கள் தான் எஞ்சினை அங்குலம் அங்குலமாகப் பிரித்து, பின் மீண்டும் கோர்ப்போம். எஞ்சினைப் பிரிக்கையில், ஒவ்வொரு பகுதியையும் குறித்து வைத்துக்கொள்வோம். பின் அந்த வரிசையிலேயே கோர்த்தும் விடுவோம்” என்றான் சலாவீன்.

“அப்படி, இந்தத் தழுவு கருவியை யார் செய்தார்களோ அவர்கள் அவ்விதம் செய்திருப்பின், உன் சிறு நீரகக் கல், கல்லாகவே நீண்டிருக்கும். அது அப்படி நீளவில்லை. மாறாக உன் சிறு நீரகக் கல் திசுவாகிவிட்டது.”

“அதற்கு என்ன அர்த்தம்?”

“நீ பிரித்துப் போட்ட எஞ்சினின் ஒரு சிறிய பகுதி கோர்க்கப்பட்ட பிறகு எதுவோ மாறியிருந்தால், எதுவோ பிறழ்ந்திருந்தால், எதுவோ ஒருங்கிணையாமல் போயிருந்தால்?”

“சரியாகக் கோர்க்கவில்லை என்று அர்த்தம். கோர்ப்பு வரிசையில் ஏதோ குளறுபடி என்று அர்த்தம்”

“அப்படியானால், அந்தக் குளறுபடி வரிசையை என்ன செய்வாய்?”

“உதவாது என்று கருதி தூக்கி எறிந்துவிடுவேன்”

“அதே தான் இங்கும் நடந்திருக்கிறது” என்றேன் நான்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்றான் சலாவீன் புரிந்துகொள்ள முயல்பவனாய்.

“இந்தத் தழுவு கருவி ஒரு முழுமையான கருவி அல்ல. இது, பிழையானதாக இருந்திருக்கவேண்டும். இது கோர்ப்பு வரிசையைத் தக்க வைப்பதில்லை. மாறாக அதில் சிறிய பிழையை அனுமதிக்கிறது. அதன் காரணத்தினாலேயே, அதை, அதனை உருவாக்கியவர்கள் கைவிட்டிருக்கவேண்டும். விண்வெளியில் அது அங்குமிங்கும் சுற்றி, இறுதியில் அது பூமியை வந்தடைந்திருக்க வேண்டும்” என்றேன் நான்.

“ஆனால், என் சிறு நீரகக் கல் பிரச்சனை சரியாகிவிட்டதே” என்றான் சலாவீன் திருப்தியடைந்தவனாய்.

“துரதிருஷ்டவசமாக, சலாவீன், அதுதான் கருவி தவறாய் வேலை செய்கிறது என்பதற்கான சோதனையும் கூட. இக்கருவியை உருவாக்கியவர்களின் அகராதியில் எதிர்மறை சோதனை வழக்கு (Negative Test Case) என்று தான் இக்கருவி குறிக்கப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். ஒரு அதியுயர் வேற்று கிரகவாசிகளின் எதிர்மறை சோதனை வழக்கு, நமக்கு கச்சிதமாக வேலை செய்கிறது என்பது,  நம் குறித்து, நம் உடற்கூடு குறித்து, அதன் இயங்கியல் குறித்து, அதன் அடிப்படையிலமைந்த நம் பூவுலக வாழ்வு குறித்து என்ன சொல்ல வருகிறது?” என்றேன் நான்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.