இதுபோன்ற தனிமனித அனுபவப்பதிவுகளால் வாசிப்பின்பம் தவிர வேறென்ன பயனிருக்கக்கூடும்? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஏழு மாத பெங்களூர் வாழ்க்கையில் சில விஷயங்கள் தெளிவாகின. மல்லேஸ்வரத்தில் ஒரு பப்பாளிப்பழம் விற்கும் வண்டிக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கூறினார் “பிரச்சினைனு வந்துச்சுன்னா ஊரப்பாத்து ஓடிர வேண்டியதுதான்…” அவர் கூறியது காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான தமிழர் – கன்னடர் இடையேயான பிரச்சினை குறித்து. நடிகர் ராஜ்குமார் இறந்தபோது ஏற்பட்ட கலவரங்கள் இன்னும் அவருக்கு மறக்கவில்லை. 2002 ல் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தபோது நடந்த ஆர்பாட்டத்தினால் தண்ணீர் திறந்துவிடக் கோரிய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையே புறக்கணித்தது என் நினைவில் உள்ளது. இது ஒரு ஆயிரம் ஆண்டுகாலம் பழமையான பிரச்சினை என்று சற்றுப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன்.
பெங்களூருவில் கெம்பெகௌடா என்னும் பெயரை யாரும் தவிர்க்க முடியாது. மத்திய பேருந்து நிலையம், சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரயில்நிலையம் ஆகியவை இவர் பெயரைத் தாங்கி நிற்கின்றன. 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ‘பெங்களூர் பேட்டை’யை நிர்மாணித்தவர் இவர்தான்.விஜயநகரப் பேரரசில் முக்கிய அமைச்சராக இருந்தவர். கடவுளுக்குக் காணிக்கையாக கன்னிப்பெண்களின் விரல்களைத் துண்டிக்கும் கொடூரவழிபாட்டை ஒழித்தவர்.
கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக கோலார் தங்கவயல், சிவனசமுத்திரம் மின்னுற்பத்தித் திட்டம் போன்று பலதிட்டங்களை செயல்படுத்தியவர் தமிழரான மைசூர் திவான் சேஷாத்ரி ஐயர். பெங்களூரிலுள்ள சேஷாத்ரிபுரம் இவர் பெயரால் ஏற்பட்டதுதான்.

பழைய பெங்களூர் – பசவனகுடி, மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் – இன்றும் கூட ‘கார்டன் சிட்டி’தான். விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளில்மட்டும் வெறும் சிட்டி. தமிழ்நாட்டை விட இங்கு முதியவர்களுக்கு மதிப்பளிக்கிறார்கள். குறிப்பாக பேருந்தில். தலை நரைத்தவர் வந்தால் உட்கார கண்டிப்பாக இடமுண்டு, ‘சீனியர்..சீனியர்’ என்று யாரோ எழுந்து இடம் கொடுக்கிறார்கள். மேலும் முதியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட நான்கு சீட்டுகள் எப்போதும் உண்டு. கட்டணத்தில் ஐம்பது சதவீதம் சலுகை. சென்னையை விட ஐந்து மடங்கு பெரிய மெட்ரோ ரயில் வசதி. பச்சை, மஞ்சள், ஊதா என்று எல்லா கலரிலும் ‘ரூட்’ டுகள் உண்டு. ஊருக்குப் புதியவர்கள் செல்லும் ரூட்டின் நிறம், நாம் செல்லும் மெட்ரோ நிலையம் எந்த நிலையத்திற்கு அடுத்து உள்ளது, கடைசி நிலையம் எது முதலிய தகவல்கள் தெரியாமல் சென்றால் வழிதவறித் திண்டாட வேண்டியிருக்கும்.
‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞர் பாடல் எனக்கு ஏனோ நம்மூர் மூத்திரச் சந்துகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும். இந்த ஊரில் நான் மூத்திரச்சந்துகளையே பார்க்கவில்லை, ஆச்சரியம். அவ்வளவு மோசமில்லாவிட்டாலும் வேறொரு வகையில் அதை ஈடுகட்டுகிறார்கள் பெங்களூரியன்ஸ். ஆண், பெண் பேதமில்லாமல் கண்ட இடத்தில் துப்புவதுதான் அது. குப்பைகளைத் தரம்பிரித்து சேகரிப்பது, மழைநீர் சேகரிப்பு போன்றவற்றை செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும்.
‘வுமன் எம்பவெர்மெண்ட்’ என்றால் என்னவென்று இங்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது. நம் ஊரில், சென்னையிலேயே தனியே டீக்கடைக்கு வந்து டீ குடிக்கும் பெண்கள் அநேகமாக இல்லை. இங்கு தனியாக சிகரெட் பிடித்துக்கொண்டு போகும் பெண்ணைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பெண்களின் உடை, உடல்மொழியில் நாம் பலவருடங்கள் பின்னால் இருப்பதுபோல ஒரு பிரமை. ரோட்டோரக் கடைகளில் இளைஞர்களும், இளைஞிகளும் ஒரே ‘தம்’மை மாறி மாறிப் பாவித்துக்கொள்வது சாதாரணமாக இல்லாவிட்டாலும், எப்போதாவது காணக்கிடைக்கிறது. ‘மேடம் இஸ் வெரி பர்டிகுலர் அபௌட் ப்ளாக்லாபெல்’ என்று யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார் என் அலுவலகத்தில் ஒரு உயரதிகாரி. பெண்கள் பப்புக்குச் செல்வது, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இயல்பாக உள்ளது. குடியின் பரவலாக்கம் ஒப்புநோக்க தமிழகத்தைவிட அதிகமாக இருந்தாலும், குடியினால் நிகழும் வன்முறையின் அளவு குறைவாகவே உள்ளது. அதேபோல ‘கோஎட் ‘ பள்ளிகளில் ஆண்களோடு பெண்கள் பழகுவதும் இயல்பாக உள்ளது. தனியே சுற்றும் பெண்ணோ ஆணோ அதிசயம்தான். இருவர்,மூவராகத்தான் உலாப்போவது.
நான் இருந்த மல்லேஸ்வரத்தில் சம்பங்கிபூ, வேப்பம்பூ பெயரில் இரண்டு முக்கியச் சாலைகள் சம்பிகே ரோடு மற்றும் மார்கோசா ரோடு. மரங்களடர்ந்த சாலைகள். பகலிலேயே கிளிகள் மற்றும் கழுகுகளின் சத்தம் கெட்டவண்ணமிருக்கும். இவற்றிலும், இவற்றின் குறுக்காக ஓடும் பதினெட்டு குறுக்குத் தெருக்களிலும் விடுமுறைநாட்களில் நடமாட முடியாத அளவுக்குக் கூட்டமிருக்கும். மனிதனால் நுகரப்படக்கூடிய எந்தப் பொருளுக்கும் நாம் மலைத்து நிற்கும்படியான அளவிலும், எண்ணிக்கையிலும் கடைகள் உண்டு. காலை,மாலை நடைசெல்ல “சாங்கி குளம்” சிறப்பான இடம். ரிச்சர்ட் சாங்கி என்கிற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது. ஆனால் பொதுவாக தெருவோர நடைபாதைகள் மோசமாகவே பராமரிக்கப்படுகின்றன.

குளிக்கிறோமோ இல்லையோ ‘காராபாத், கேசரிபாத், சௌசௌ பாத், பிசிபேளாபாத்’ இவைதான் உணவகம் தோறும். எந்தக்கடையிலும் காபி நன்றாக இருப்பது ஆச்சரியம். தெருவில் இருக்கும் இருபது கடைகளில், பதினைந்து உணவகங்கள். காலை ஏழுமணிக்கே சி டி ஆர் – Central Tiffin Room – ல் வரிசைகட்டி நிற்கிறார்கள் ‘பெண்ண தோச’ தின்ன. ராமேஸ்வரம் கஃபேயில் சாப்பிடுவது மோஸ்தராக உள்ளது. ‘காண்டிமெண்ட்’ என்று நொறுக்குதீனிக்கான தனிக்கடைகள் வேறு. ‘நாட்டி ஸ்டைல்’ , தொன்னை பிரியாணிக் கடைகளும் உண்டு. அய்யர்மெஸ் (1959), வீணா ஸ்டோர் (1977), ராகவேந்திரா ஸ்டோர் (மல்லேஸ்வரம் ரயில் நிலையம் அருகே) போன்ற பழையஉணவகங்கள் பிரசித்தமானவை. கன்னடத்திற்காக ரொம்ப மெனக்கெட வேண்டாம். அநேகமாக தெருவோர வியாபாரிகள், தூய்மைப் பணியாளர்கள் தமிழர்கள்தான். அநேகமாக திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சி. மற்றவர்களுக்கும் தமிழ் தெரிகிறது.
நம்மூர் போலவே சினிமாப் பைத்தியம் அதிகம். அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு அம்பரீஷ், விஷ்ணுவர்தன் போன்ற அந்தக்கால நடிகர்களுக்கே ஐம்பதடி “கட் அவுட்” வைத்து மாலை போடுகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயனுக்கும் வைத்திருந்தார்கள். அநேகமாக புனித் ராஜ்குமார், அபூர்வமாக சங்கர்நாக், விஷ்ணுவர்தன் படங்கள் இல்லாத ஆட்டோவே இல்லை. சங்கர்நாக் பெயரில் பேருந்துநிலையமே இருக்கிறது. ஆனால், இவர் படம் இல்லாமல் கடை ஆரம்பிக்க அரசு அனுமதி இல்லையோ என்னும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் புனித் ராஜ்குமாரின் முகம்தான். சிலைகள் தனி. இவர் தந்தை கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார். இவரும் நடிகர்தான். நாற்பத்தாறு வயதிலேயே மாரடைப்பால் இறந்தார். இறந்தபிறகே இவர் இவ்வளவு புகழடைந்தார். அவர் செய்த நன்கொடைகள், தர்மகாரியங்கள் அவர் இறப்புக்குப் பின்னரே தெரிய வந்திருக்கின்றன. இவரைப்பற்றி பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்ற இவர் மனைவியின் கோரிக்கை ஏற்கப்பட்டது குறித்து பத்திரிகைச் செய்தி படித்தேன். இதற்கு அரசியல், சாதியக் காரணங்களும் உண்டு என்கிறார்கள். ருக்மணி வசந்த் என்ற நடிகைக்கும் பெரிய அளவில் ‘பாப்புலாரிட்டி’ இருக்கிறது. அவரைப்போலவே அழகான பெண்கள் தெருவிலேயே சாதாரணமாகக் காணக்கிடைக்கிறார்கள். காந்தாரா படம் இரண்டாம்பாகம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் வருகிற இசைத்துணுக்கு ஒலிக்காத கைபேசியே இல்லை என்னும் படிக்கு போகுமிடமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது.
சம்பிகே ரோடு நூலகத்தில் தினமலர், தினகரன் கிடைக்கிறது. சில மாதங்களாக வாசித்ததில் தமிழகத்தை ஒப்பு நோக்க குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது. காங்கிரஸ் அரசு. “ஐந்து வருடங்களும் நானே முதலமைச்சராக இருப்பேன்” என்று முதலமைச்சர் சித்தராமையாவும், “அதை மேலிடம்தான் முடிவு செய்யும்” என்று துணை முதலமைச்சர் டி கே சிவகுமாரும் மாறி மாறி அறிக்கை விடுவது தினப்படிச் செய்தி. இருவரும் ஆளுக்கு ரெண்டரை வருடம் ஆளுவதாக ஒப்பந்தமாம். BBMP,BMT,EKATTA போன்ற சொற்கள் காதில் விழுந்தவண்ணமிருந்தன. ஒப்புநோக்க பிஜேபி அரசின் காலத்தில் லஞ்ச, லாவண்யங்கள் குறைவாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்று பெங்களுரு தகவல்தொழில்நுட்பத் தலைநகராக இருப்பதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் இருந்த காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்கிறார்கள்.
போக்குவரத்துச் சிக்கலை சரிசெய்வது தொடர்பான துணை முதல்வர் டி கே சிவகுமாரின் அறிக்கைகளும் தினசரிச் செய்தி. போக்குவரத்து நெரிசல் காரணமாகவே உள்ளூரிலேயே வீடு இருந்தாலும் விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் உண்டு. சி ஏ போன்ற முழுநேரத் தயாரிப்பு தேவைப்படும் படிப்புகளுக்கு ஏற்ற ‘ஸ்டடி சென்டர்’ கள் நிறைய உண்டு. ஏ சி ஹாலில் தனி டெஸ்க், புத்தக அலமாரி கொடுத்துவிடுவார்கள். மாத வாடகை. காலையிலிருந்து மாலைவரை படித்துவிட்டு வரலாம்.
மல்லேஸ்வரம் சம்பிகெ ரோடு சென்ட்ரல் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நமது தமிழ்நாட்டு நூலகங்களில் கன்னடப் புத்தகங்களை நான் பார்த்ததில்லை. அதிலும் இப்பிடி ஒரு புத்தகத்தைப் படிப்பேன் என்று நினைக்கவேயில்லை. கன்னட எழுத்தாளர் சேஷநாராயணாவின் “காவேரி – ஒந்து சிம்மு, ஒந்து ஹொரலு” நூலின் தமிழாக்கமான “காவேரி – ஒரு துள்ளல் ஒரு இரைச்சல்”. தமிழாக்கமும் அவரே. பழைய காலத்திலிருந்து இன்றுவரை காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பாக உள்ள இருமாநிலங்களுக்கிடையான பிரச்சினைகளை நுணுக்கமாக, விரிவாக எழுதியுள்ளார். தமிழ்நாடு எப்படியெல்லாம் ‘வஞ்சிக்க’ப்பட்டது என்று புலம்பும் நமது அரசியல்வாதிகளுக்கு பதில்சொல்லும் முகமாக கர்நாடகா எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்று விரிவாக எழுதியுள்ளார். மழைக்காலம் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாதபோது இருக்கிற தண்ணீரை பிரச்சினை இல்லாமல் பிரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார் ஆசிரியர். அதில்தான் பிரச்சினையே. காவிரி பாசனப் பரப்பு கர்நாடகாவைப்போல இரண்டுமடங்கு தமிழ்நாட்டில். இடியாப்பச்சிக்கல்தான்.
தமிழகத்திலிருந்து இத்தகைய நூலுக்கு பிரசுர சாத்தியம் இல்லையென்பதால் கர்நாடகத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர்தான் பிரசுரித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு ஒன்று தோன்றியது. ஒருவேளை காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடுதான் நியாயமானது என்று வலியுறுத்தும் கன்னடப் புத்தகம் ஏதாவது ஒன்றை தமிழர் எவராவது எழுதியிருப்பாரோ? நம்மூரிலுள்ள கன்னட நண்பர்களைத்தான் கேட்கவேண்டும்.
இந்த நூலின் நோக்கம் என்னவாக இருக்கும், உள்ளூர்த்தமிழர்களாவது புரிந்துகொண்டு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சொல்லமாட்டார்களா என்பதுதான் ஆசிரியரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இதோ அங்கு வலசைபோன நான் படித்துவிட்டேன். உங்களுக்குச் சொல்லியும்விட்டேன்.

எந்தெந்த காலங்களில் என்னென்ன உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன. குறிப்பாக தண்ணீரின் அளவான டி எம் சி பகிர்தலில். ஒரு முறை மழைபொய்த்தால் எவ்வளவு குறைவாகப் பகிர்ந்தார்களோ அதனை அடுத்தடுத்த வருடங்களில் ஈடுசெய்வது போன்ற நியாயமற்ற ஷரத்துகளினால் கர்நாடகா எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை பலவாறு விளக்குகிறார். அந்த தண்ணீர்க் கணக்குகளைத் தவிர வேறுசில சுவாரசியமான விஷயங்களும் இந்த நூலில் இருந்தன. இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தன்னுடைய சுயசரிதையில் கர்நாடகாவிற்குச் சாதகமான ஒரு ஷரத்தை சுட்டிக்காட்ட, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அவர் ‘தமிழனத் துரோகி’ யாக சித்தரிக்கப்பட்டதைக் கூறுகிறார் ஆசிரியர். எனக்கும் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இணையத்தில் அது குறித்துத்தேடினால் எதுவும் கிடைக்கவில்லை.காவிரி தொடர்பான தமிழர் கன்னடர் பகை ஆரம்பித்த காலம் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடித்துவந்திருக்கிறது. இதன் பழமையான ஆதாரம் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடத்தின் புராதன நூலான கேசிராஜனின் ‘சப்தமணி தர்ப்பணம்’ என்னும் நூலில் உள்ளது. இதில் வரும் ஒரு செய்யுள் கீழே.
“காவேரிய
காலனா திகுளனே கடகொண்டனோ?
பட்டிகொண்டனோ?”
(சூத்திரம் 170, கிரியா ஸமாசம்)
காவிரி கால்வாய்களை தமிழன் (திகுளன்) கடனுக்கு வாங்கியிருக்கிறானா, வட்டிக்கு வாங்கியிருக்கிறானா? அன்று ஓங்கியிருந்த தமிழர்களின் எதேச்சாதிகாரத்தின் மூலம் கன்னடர்கள் அடைந்த மனக்கசப்பு இதில் தெரியவருகிறது. இன்னும் பழைய ஆதாரங்கள் நம் பண்டைய தமிழ்நூல்களில் கிடைக்கின்றன. கி பி 1140 – 1163 வரை சோழநாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டாம் ராஜராஜனின் காலத்தின்போது மைசூர் பகுதியை ஆண்டுகொண்டிருந்த மன்னன் போசள நரசிம்மன். இவன் காவிரிக்கு நடுவே செயற்கைக் குன்றுகளை ஏற்படுத்தி நீரின் போக்கைத் திருப்பிவிட்டான். தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து இல்லாமலாகியது. இரண்டாம் ராஜராஜன் படையெடுத்துவந்து அந்தக் குன்றுகளைத் தகர்த்து காவிரி எப்போதும் போல தமிழ்நாட்டை நோக்கி ஓட வழிசெய்தான். இதற்கு ஆதாரங்கள்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வாராச ராசன் கைவாளென்ன வந்தே
- தக்க யாக பரணி சுழியிட்ட காவிரிக்குச் சோநாடுவாழ
வழியிட்ட வாழ்காண வாரீர் - ராஜராஜன் உலா
அடுத்த நிகழ்வு 17ஆம் நூற்றாண்டு. கன்னட அரசன் சிக்க தேவராஜன். இவனும் நரசிம்மனைப்போல புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காமல் செய்தான். அப்போது தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த சரபோஜியும் மதுரையை ஆண்டுகொண்டிருந்த ராணி மங்கம்மாளும் அந்த நீர்தேக்கங்களை உடைக்க கூட்டாகப் படையை அனுப்பிவைத்தனர். ஆனால் படை அங்கு போய்ச்சேருவதற்கு முன்னாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டு நீர்த்தேக்கங்கள் தாமாகவே உடைந்துபோயின. மிகவும் பின்னால் மைசூரை ஆண்ட திப்புசுல்தானுக்கும் காவிரியில் அணைகட்ட ஆசைவந்தது. அதற்கான கால்கோள் விழா நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. ஆனால் திட்டம் நிறைவேறாமல் போனது.
கரிகால் சோழனுக்குப் பிறகு காவிரியில் இன்னொரு அணை கட்டப்பட மேலும் ஆயிரத்து எண்ணூறு வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. அன்றைய கண்ணம்பாடியில் கடும் இன்னல்களுக்கிடையே அப்படி ஒரு பிரும்மாண்டமான அணையைக் கட்டி சாதித்துக் காட்டியவர் நவபாரதத்தின் உண்மையான சிற்பியான சர் மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரைய்யா. அதுவே கே ஆர் எஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கிருஷ்ணராஜசாகர்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் 1885 ல் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த விஸ்வேஸ்வரய்யா அணைகள், பாலங்கள், துறைமுகங்கள் பலவற்றை நிர்மாணித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திரமாக உயர்ந்துவிட்டிருந்தார். கடினமான கட்டுமானம் ஒன்றை அமைத்து ஹைதராபாத் நகரை, நிரந்தரமாக முசி ஆற்றின் வெள்ளத்தின் பிடியிலிருந்து மீட்டார். பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த மற்ற நாடுகளிலும் கடினமான கட்டுமானப்பணிகளைப் பொறுப்பேற்று முடித்துக்கொடுத்தார். பின்னர் மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் அழைப்பை ஏற்று கண்ணம்பாடி அணைத்திட்டத்தை தலைமையேற்றார்.
அன்றைய சென்னை மாகாணத்தின் அழுத்தம் (கரடிப்பிடி என்கிறார் ஆசிரியர்)காரணமாக திட்ட முன்வரைவு பலமுறை நிராகரிக்கப்பட்டது. விஸ்வேஸ்வரய்யா இடைவிடாது போராடி ஆங்கில அரசின் சம்மதத்தைப் பெற்றார். 1911 ல் ஆரம்பித்த கட்டுமானப்பணி 1924 ல் நிறைவுபெற்றது. மைசூர் மற்றும் மாண்டியாவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றது. பிரிட்டிஷ் மற்றும் சுதந்திர இந்தியாவின் எல்லா உயரிய விருதுகளையும் ( பாரதரத்னா உட்பட), கணக்கில்லாத டாக்டர் பட்டங்களையும் தான் வாழும் காலத்திலேயே பெற்றார் விஸ்வேஸ்வரய்யா. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற உலகநாடுகளுக்கு சொந்தச்செலவில் இரண்டுமுறை சென்று அங்குள்ள தொழில்புரட்சியைக் கண்டு அதேபோன்ற எண்ணற்ற தொழிற்சாலைகளையும், கல்விநிலையங்களையும் இந்தியாவில் நிறுவியவர். பத்ராவதியில் இந்தியாவின் முதல் உருக்காலை, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், மைசூர் பல்கலைக்கழகம், மைசூர் சோப் ஃபேக்டரி அவற்றில் முக்கியமானவை. மைசூர் திவானாகவும் இருந்து அரும்பணிகளைச் செய்தார். இவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர் தினமாக இந்தியாவில் மட்டுமல்லாது ஶ்ரீலங்கா மற்றும் தான்சானியாவிலும் கொண்டாடப்படுகிறது.
ஒருமுறை மாண்டியாவில் ஒரு கவுடரின் வீட்டு பூஜையறையில் விஸ்வேஸ்வரய்யாவின் புகைப்படத்தைக்கண்ட ஆசிரியர் “என்ன கவுடரே, இவர் படத்தை வைத்திருக்கிறீர்கள்?” என்றபோது அந்த விவசாயி சொன்னாராம் “இவர் கடவுள் இல்லையென்றால் வேறு யாரப்பா கடவுள்?” என்று.
ஹம்பியில் புராதன விஜயநகரப் பேரரசின் அழிவுகளைப் பார்க்கச் சென்றிருந்தேன். கணிசமான பார்வையாளர்கள் வெளிநாட்டினர். ஓரிரு மாதங்களுக்கு முன்தான் ஒரு அயல்தேசப் பெண்மணி கற்போடு உயிரையும் இழந்திருந்தாள். ஒரு வழிகாட்டியை கைது செய்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அழிந்துபோன, அழியக்காத்திருக்கும் கோயில்கள். அநேகமாக இந்துக்கடவுள்கள். விருபாக்ஷா கோயிலைத் தவிர வேறெங்கும் வழிபாடு இல்லை. முழுக் கர்நாடகாவுமே ஒரு பாறைவெளியோ என்னும் வகையில் இருந்தது ஹம்பி மற்றும் பதாமி பயணம். சில வாரங்களுக்கு முன் சென்ற மேக்கெதாட்டுவும், சிவனசமுத்திரமும் அதையே உறுதிசெய்தது. அங்கே கரும்பாறை. இங்கே செம்பாறை.

அங்குள்ள மியூசியத்தில் விஜயநகரப் பேரரசின் கடைசி அரசரும், கிருஷ்ணதேவராயரின் மருமகனுமான ராமராயரைப்பற்றிய குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். 1565 தலைக்கோட்டைப் போரில் ராமராயரின் தலை கொய்யப்பட்டதோடு விஜயநகரப் பேரரசு சுல்தான்கள் வசமானது. ராமராயர் என்றவுடன் எனக்கு மதுரை அழகர் திருவிழா நினைவுக்கு வந்தது. ராமராயர் மண்டபத்தில்தான் தீர்த்தவாரி நடைபெறும். சேஷநாராயணாவின் புத்தகத்தில் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். மதுரையில் நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசின் சிற்றரசர்களாகத்தான் அரசாண்டுகொண்டிருந்தனர். ஆனால் விஜயநகரப் பேரரசின் சாதனைகள் நாயக்கர் அரசின் சாதனைகளாகத் திரிக்கப்படுகின்றன என்கிறார். விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டில் செய்துள்ள பாசனவசதிகள் சோழர்கள் செய்ததற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்று சான்றுகளையும் அளிக்கிறார்.

துங்கபத்ராவில் குளித்துவிட்டு ஹொசப்பேட்டில் பதாமிக்கு ரயிலேறினேன். மும்பைவரை செல்லும் அதிவிரைவுவண்டி. கழிவறை, வெளியிலுள்ள வாஷ்பேசின் இரண்டுகுழாய்களையும் மூடமுடியவில்லை. பலரும் முயன்றார்கள். தண்ணீர் வீணாகிக்கொண்டே இருந்தது. பதாமிக்கு மூன்று மணிநேரப்பயணம். இரண்டு மணிநேரத்திலேயே தண்ணீரெல்லாம் தீர்ந்துவிட்டது தெரியாமல் எல்லோரும் மதியவெய்யிலில் உறங்கத் தொடங்கியிருந்தனர். ஐயோபாவம்தான்.

பன்றிகள் மேயும் தெருக்கள் வழியாக பதாமி குடைவரைக் கோயில் தொகையை அடைந்தேன். கூட்டம் கூட்டமாக பள்ளிக்குழந்தைகள். எங்கு திரும்பினாலும் செங்காவி நிறத்தில் பாறைமலைகள், ஜைனக் குடைவரைகள் மாலைவெயிலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. சாளுக்கியர் காலத்து 6 ஆம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோயில்கள்.சிற்பங்களின் வேலைப்பாடு பிரமிப்பூட்டுகிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரமிப்பு பழகிவிடுகிறது. ஹம்பி, பதாமி இரண்டு இடங்களிலும் குரங்குகளின் தொல்லை பயப்படும் அளவுக்கே இருந்தது.

மறுநாள் ஐஹொளே, பட்டடக்கல். வழியில் மலப்பிரபா ஆற்றில் கெத்து கெத்தென்று நிறைய தண்ணீர் சென்றது. வெள்ளிக்கிழமையாதலால் கூட்டம் பெரிதாக இல்லை. பலஇடங்களில் புராதனச் சின்னங்களை நெருங்க முடியாதவாறு மாடுகளைக் கட்டி வைத்திருந்தார்கள். மூத்திரவாடை வேறு. சில வீடுகளிலிருந்து கழிவுநீர் நடுத்தெருவில் வந்து சேர்கிறது.ஆளொழிந்த கோயில்கள். தெய்வமொழிந்த கருவறைகள். எனவே பார்த்த கோயில்களையே பார்ப்பதுபோல் ஒரு பிரமை.

சில கோயில்களில் மேல்விதானங்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள். பல கோயில்களில் மேல் விதானம் சிற்பமொழிந்து வெறுமையாக இருந்தது. அங்கிருந்த சிற்பங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதாகக் கூறுகிறார்கள். சிலரின் தனிப்பட்ட சேகரிப்பிலும் இருக்கலாம். சிலர் சிற்பங்களைப் பார்ப்பது நமக்கே சந்தேகத்தைக் கொடுக்கிறது. பாதுகாப்பு அந்த அளவுக்கே. துர்க்கா காம்ப்ளெக்ஸ் மாத்திரம் ஓரளவு நன்றாகப் பேணப்படுகிறது. ராவணப்பதியின் சிற்பங்கள் பிரமிப்பூட்டுகின்றன. குறிப்பாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்.

பிறக்கும்போது எண்பது வயதாக இருக்கவேண்டும், வருடத்துக்கொன்றாக வயது குறைந்துகொண்டேவந்து இருபதில் நிரந்தரமாக நின்றுவிடவேண்டும் என்று ‘மார்க் ட்வைன்’ கூறியது ஏனோ சிற்பங்களைப் பார்க்கும்போது நினைவில் வந்தது. பாறையிலிருந்து பிறந்த எல்லாச் சிற்பங்களும், காற்று மற்றும் ஒளியின் செதுக்கலில் மறுபடியும் பாறையை நோக்கிய பயணத்திலிருந்தன. வெளியூர் சுல்தான்களோ, உள்ளூர் சைத்தான்களோ பல இடங்களிலும் சிற்பங்களை உடைத்து நாசம் செய்திருந்தனர். நிறையக் கோயில்களில் கருவறையில் லிங்கங்கள். சமணத்தின் மீதான சைவத்தின் ஆக்கிரமிப்பாகவும் இருக்கலாம்.

ஐஹொளே துர்கா காம்ப்ளெக்ஸில் நானிருந்தபோது ஒருபெண் பாவாடையை சுழற்றிக்கொண்டு ஸ்டைலாக ‘போட்டோஷூட்’ எடுக்க ஆரம்பிக்க அங்குள்ள காவலர் அனுமதி மறுத்தார். பரவாயில்லையே என்று நினைத்தேன். இன்னொரு இடத்தில் கைடு ஒருவர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘போட்டோஷூட்’ நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு பெரும்கூட்டம் வந்திறங்கியது. ஏதோ ஆன்மீகப்பேரவையிலிருந்து வந்தவர்கள் போல. லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அனைவர் நெற்றியிலும் வீபூதிப்பட்டை. பேதையிலிருந்து பேரிளம்பெண்வரை எல்லாவயதிலும் இருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் டீன் ஏஜ் ஒளவையார்களை வரிசையாக நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நிறையப் பள்ளிப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள். சந்தைக்கடையை விட மோசமாக இருந்தது. பொதுஇடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

பட்டடக்கல்லில் வேசர, நாகர, திராவிட பாணியைச் சேர்ந்த எல்லாக்கோயில்களும் ஒரே வளாகத்தில் உள்ளதால் பாதுகாப்பும், பராமரிப்பும் நன்றாக உள்ளது. எனக்கு முன்னால் ஜெர்மனிலிருந்து வந்த ஒரு குழு. அவர்களோடு ஒரு ஜெர்மன் வழிகாட்டியையும் அழைத்துவந்திருந்தனர். நம்மூர் கைடு கூறிய எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவர்களிடம் ஜெர்மனில் விளக்கிக்கொண்டிருந்தாள் அந்த ஜெர்மானியப் பெண். நம்மாள் கூறிய ‘கதை’ களைத் தவிர்த்துவிட்டு வரலாற்றை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது தெரிந்தது. நல்ல வடிகட்டிதான். அனைவரும் நான் சாப்பிட்ட உணவகத்திலேயே சோள ரொட்டியை ரசித்துச் சாப்பிட்டனர். அன்று அருங்காட்சியகம் விடுமுறை. “மியூசியத்துல ஒண்ணும் கெடையாது சார், இன்னைக்கு லீவு” என்றார் ஆட்டோ ஓட்டி. நல்ல கலாசாரத் தூதுவர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பெங்களூரில் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலை சில காரணங்களால் முடிவுக்கு வந்தபின் மேற்கொண்ட பயணங்கள்தான் இவை. ஹம்பி போய்வந்தபின் என்னுடைய அறை நண்பர் மங்களூர் ரயில் பயணம் இயற்கைக்காட்சிகளைக் காணச் சிறப்பானது என்று கூறியதால் ‘விஸ்டா டூம்’ உள்ள ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவுசெய்தேன். பலவருடங்களாகச் செல்ல நினைத்திருந்த கொல்லம் புனலூர் பயணத்தை இதோடு இணைக்கமுடியுமா என்று பார்த்து, குருவாயூர் செல்லவும் முன்பதிவு செய்தேன். அங்கிருந்து புனலூர் வழி மதுரை. இரண்டு பயணங்களுமே மழைக்காலத்தில் செல்லவேண்டியவை. ஆனாலும் இயற்கைக்காட்சிகள் நன்றாகவே இருந்தன.

‘விஸ்டா டூம்’ ரயில் பெட்டி நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே இயற்கைக் காட்சிகளைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உங்கள் இருக்கையை ஜன்னலை நோக்கி முழுதாகத் திருப்பிக்கொள்ள முடியும். இதிலுள்ள சங்கடம் எதிர்ப்பக்கத்தில் நல்ல காட்சிகள் வந்தால் காணமுடியாது. எனவே அதைத் தவிர்த்தேன். இன்னொரு சங்கடம். என்னுடைய கண்ணாடி ஜன்னல் காட்சிகளைத் தெளிவாகக் காணமுடியாதபடி அழுக்காக இருந்தது. டிக்கெட் பரிசோதகரிடம் சொல்ல, அவர் தூய்மைப் பணியாளரிடம் கூறினார். அடுத்த நிறுத்தத்தில் அவர் ஒரு அழுக்குத் துணியைக் கொண்டு துடைத்து
நிலைமையை மேலும் மோசமாக்கினார். நான் கோச்சுக்கு வெளியே உள்ள லாபி போன்ற பகுதியில் இயற்கைக்காட்சிகளைப் பார்ப்பதற்காக ஒரு மணிநேரம் நின்றுகொண்டு வந்தேன். என்னுடன் ஒரு ஜெர்மன்காரரும் நின்றுகொண்டு வந்தார். அவருக்கும் இதே அனுபவம். உங்கள் பயண அனுபவத்தை நாசம் செய்ய ஒரு அழுக்குத்துணி போதும். வேறெந்த ஊரிலாவது இப்படி நடக்குமா?
மங்களூர் கர்நாடகச்சாயல் ஒழிந்து கேரளா போல்தான் உள்ளது. மங்களாதேவி கோயிலுக்குச் சென்றேன். மங்களூர் ரயில்நிலையத்தின் தங்குமறையில் மறுநாள் காலை திருச்சூர் செல்லவேண்டிய வந்தேபாரத் பயணச்சீட்டை சரிபார்த்தபோதுதான் டிக்கெட்டை தவறுதலாக நேற்றைய தினத்தில் பதிவு செய்திருந்தது தெரிந்தது. நேற்று காலை பெங்களூரிலிருந்து மங்களூர் கிளம்பும்போது ‘உங்கள் வந்தேபாரத் ரயில் திருச்சூர் செல்லத் தயாராக உள்ளது’ என்று வந்த குறுஞ்செய்தியை ஏதோ ரயில்வேயின் தவறு என்று மனம் ரத்து செய்ததை நினைத்து அந்த எரிச்சலிலும் சிரிப்பு வந்தது. மாறி மாறி டிக்கெட்டுகளை பதிவு செய்ததில் குழப்பம். சொகுசாக வந்தேபாரத்தில் சாப்பிட்டுவிட்டு போய் திருச்சூரில் இறங்கவேண்டிய நான் சாதாரண ரயிலில் பட்டினியோடு நாலுமணி நேரம் தாமதமாகப் போய் குட்டிபுரத்தில் இறங்கினேன். இதனால் திருச்சூர் வடக்கும்நாதனைப் பார்க்க இருந்த திட்டமும் வீணானது. ஒற்றை ஆளாகப் போனதால், குருவாயூர் கோயில் விடுதியில் மனைவியிடம் கைபேசியில் விசாரித்து அனுமதிபெற்ற பின்னரே அறை கொடுத்தார்கள். இரண்டு மணி நேரம் காத்திருந்து இரவு குருவாயூரப்பன் தரிசனம். கிட்டதட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு வருகிறேன்.
மறுநாள்காலை குருவாயூர் விரைவு வண்டியில் கொல்லம், புனலூர் வழியே மதுரை. உறவுகளையும்,நட்புகளையும் புதுப்பித்துக்கொள்ள நிலக்கோட்டை, தேவதானப்பட்டி என்று சிறுபயணங்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சென்றேன். கூட்டமில்லாத காலைவேளையில் அமைதியான தரிசனம். நூறுமுறை சென்றிருப்பேன். இன்றும் ‘என்ன அழகு,என்ன அழகு’ என்று வாய்விட்டு அரற்றும்படி இருந்தது அந்த அழகுக் கோயில். கோயில்முழுதும் பராமரிப்புப் பணிகள். ஓரிரு மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கீழக்குயில்குடியிலுள்ள சமணமலை சென்றேன். மலை உச்சியில் இருந்த தூணில் அழகர் தேவர் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. தூரத்தில் திருப்பரங்குன்றம் மலை தெரிகிறது. எங்கோ ஒரு கிராமத்தில் ஒலிபெருக்கியில் தேவர்குலத்தின் வீரகதைப்பாடல் யாரோ ஒரு மண்ணின் மைந்தனின் குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த காலை பதினொருமணி வெயிலிலும் நிறைய இளஞ்சோடிகள் ஆங்காங்கிருந்த பாறைநிழல்களில். படிகளெல்லாம் புதுசாகப் போட்டிருக்கிறார்கள். போடாதபோதும் பதினைந்து வருடங்களுக்கு முன் வந்திருக்கிறேன். கீழே அய்யனார் குளக்கரையில் கறி விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. இரவு மதுரையிலிருந்து ரயிலேறி மறுநாள் காலை பெங்களூர் திரும்பினேன்.

காலை பெங்’குளுரு’ நடுக்கியது. கடல்மட்டத்திற்கு மேல் ஆயிரம் மீட்டர் உயரே உள்ளதால் இதமான தட்பவெட்பம் எப்போதும் இருந்தாலும் பெங்களூரின் குளிர்காலம் மட்டும் இங்குவரும் சென்னைவாசிகளுக்கு பெரும்சவால்தான். அதுவும் மாலையில் மற்றும் இரவில் வீசும் அந்த குளிர்காற்று ஒரு கிலியைக் கொடுக்கவே செய்யும். காலைவேளையில் மங்கலான கருப்புவெள்ளைப் படம்போலத் தெரியும் பொருட்கள் துலக்கம்பெற நண்பகலாகிவிடும். மழைக்காலம் முழுதும் எப்படியோ குடையில்லாமல் சமாளித்துவிட்டேன். இங்கு பொதுவாக பதினைந்து நிமிடங்களுக்குமேல் மழைபெய்வது அபூர்வம். சிறுதூறலாக இருக்கும் பட்சத்தில், பக்கத்தில் போவதாக இருந்தால் நிறைய மரங்கள் இருப்பதால் நனையாமல் போய்விடமுடிகிறது.கோடைகாலம் வரவர மோசமாகி வருவதாகக் கூறுகிறார்கள். நான் அதற்குமுன்பே சென்னை திரும்பவேண்டியதாகி விட்டது.
கடைசி வாரம் பெங்களூரில். கப்பன் பார்க், லால்பாக், இஸ்கான் கோயில் என்று தினம் ஒன்றாக பார்க்காத இடங்களையெல்லாம் பார்த்தேன். குடிக்காத கடைகளிலெல்லாம் காபி குடித்தேன். நடக்காத வழியிலெல்லாம் நடந்தேன். கடைசி நாளன்று சந்திரசேகர ஆசாத் கிரவுண்டில் காலைநடை சென்றேன். ‘ நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே…’ என்று அரைக்கால்சட்டை அணிந்த பத்துப்பேர் பாடிக்கொண்டிருந்தார்கள். நூறுவருடம் கழித்து இங்குவந்தால் இதுபோன்ற காட்சியைக்காண முடியுமா? மாலை எனக்குப்பிடித்த பார்க்கில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். செவன்த் கிராஸ் ‘பை டூ’ காபியைக் குடித்து, அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான காபி ‘டிக்காக்ஷன்’ னையும் வாங்கிக்கொண்டு பெங்களூரிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டேன்.
கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா (நம்மூர் கட்டபொம்மன் போல தூக்கில் தொங்கியவன்) ரயில்நிலையத்தில் நுழையும்போது சுற்றியிருந்த சத்தத்தையும் மீறி ஏனு மாடுதீரா? என்ற அலறல் கேட்டு திடுக்கிட்டேன். வறண்ட தொண்டையிலிருந்து பெரும் அலறல். ஷாப்பிங் செல்வதற்கு வீட்டிலிருந்து இறங்கிய தோற்றத்தில் இருந்த அந்த இளம்பெண் வெற்றிடத்தை வெறித்து நோக்கி கத்திக்கொண்டிருந்தாள். கூட்டத்தோடு நானும் விலகிச் சென்றேன். ஒவ்வொரு ஏனு மாடுதீராவும் முந்தையதைவிட வலுவாக இருந்தது. எவ்வளவு நேரமாகவோ? இனியும் எவ்வளவு நேரமோ? ஏனு மாடுதீரா? என்ன செய்றீங்க? யார் என்ன செய்திருப்பார்கள்? சமநிலைக்குலைவு.
சென்னைக்கு ரயில் முதல் நடைமேடைதான். ரயிலில் ஏறி அமர்ந்தேன். ஏதேதோ நினைவுகள். நூறுவருடம் கழித்து பெங்களூர் வரும் ஒருவர் இன்றைக்குக் காணும் எதையெல்லாம் காண்பார்? நூறுவருடங்களுக்கு முன் இருந்த எவையெல்லாம் இன்று இருக்கின்றன. காடு மல்லேஸ்வரரும், கவிகங்காதரேஸ்வரரும் இருப்பார்கள். லால்பாக்கில் இருக்கும் காலங்கடந்த அந்தப் பெரும் பாறைக்குன்றும் இருக்கும். காவிரிப் பிரச்சினையும் இருக்கும். இறங்கி தண்ணீர் பிடிக்கச் சென்றேன். தண்ணீர்பிடித்துவிட்டு வரும்வழியில் மறுபடியும் ஏனு மாடுதீரா..? மழைத் தவளைக்குரல் தூரத்திலிருந்து கேட்டது. அவள்தான்….போய் தண்ணீரைக்கொடுத்தால் குடிப்பாளா? நூறுவருடம் கழித்து காவிரிப் பிரச்சினையோடு இவளும்கூட இருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். சற்றுத் தயங்கியபிறகு ரயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
