நிலத்தில் வீழ்கையில்
காற்றாடியின் ஆன்மா
விசையிழக்கும்
கவிஞர்: குபோத்தா குஹோன்தா (1881-1926)
சிநிஒரிதே
தாகோநிதமாஷிஇ
நகரிகெரி
地におりて
凧に魂
無かりけり
காற்றாடியை முன்வைத்து ஆன்மாவைப் பேசும் ஹைக்கூ.
ஆன்மா தன்னைச் சுற்றியிருக்கும் வெளியிலிருந்து தனக்கான விசையை எடுத்துக்கொள்கிறது. விசையை உள்வாங்கி எழுவதற்கு ஏற்ற வகையில் ஆன்மா படைக்கப்பட்டிருக்கிறது. நிலத்தில் வீழாமல் அல்லது நிலத்தில் வீழ்கின்ற நேரம் வராத வரையில் ஆன்மா வெளியிலிருக்கும் விசையைத் தனக்குள் ஏற்று இயங்குகிறது, உயர்கிறது, பறக்கிறது. நேரம் வந்ததும், தன்னைச் சுற்றிலும் முன்பு இருந்த அதே வெளி இப்போதும் இருந்தும், அதிலிருந்து தனக்கான விசையை எடுக்க இயலாமல் வீழ்கிறது.
காற்றாடியும் தன்னைச் சுற்றியிருக்கும் காற்றாலும், தான் இணைக்கப்பட்டிருக்கும் நூலாலும் உயரே பறக்கிறது. காற்றின் விசையால் உயர்கிறது, பறக்கிறது. நூலின் இணைப்பால் நிலைத்து நிற்கிறது. காற்றாடிக்கு நூலுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகையில் காற்றின் விசையால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் வீழ்கிறது.
மேற்சொன்ன இரண்டு பார்வைகளிலும், நிலத்தில் வீழும் வினையைக் கவிதை அழுத்தமாக முதல் அடியில் சொல்கிறது.

சி நி ஒ ரி தே என இங்கு குறிப்பிடப்பட்ட வாக்கியம் ‘சி’ என்னும் எழுத்து காஞ்சி வரிவடிவிலும், மற்ற நான்கு எழுத்துகளும் ஹிராகனா வரிவடிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ஒரி’ என்னும் சொல் ‘ஒரிரூ’ என்னும் காஞ்சி வரிவடிவிலும் உண்டு. ஆனாலும், இங்கு அது ஹிராகனாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
地 சி இதன் ஒலிப்பு ‘ச்சி’ இந்தக் காஞ்சி வடிவின் ஹிராகனா ち ச்சி, சில இடங்களில் இது ஜி என்றும் ஒலிக்கும். ‘சி’யின் பொருள் நிலம், பூமி, மண். இது சில இடங்களில் ட்சுசி, ட்சுஷி என்றும் ஒலிக்கும். இந்தக் கவிதையில் இதன் ஒலிப்பு சி. அடுத்த ஹிராகனா に நி, பொருள் ‘இல்’ 地 (ち) சி に நி, சி நி – நிலத்தில். சி+நி = நிலத்தில்.
அதைத்தொடர்ந்து வரும் மூன்றும் ஹிராகனா வடிவில் உள்ள எழுத்துகள். お ஒ, り ரி, て தே. ஒரிதே என்னும் இந்தச் சொல் ‘ஒரிரூ’ என்னும் வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்டது. ‘ஒரிரூ’வின் பொருள் தாழ்தல், இறங்குதல், ஓய்வெடுத்தல், பொழிதல், வீழ்தல். பனி பொழிவது ‘ஒரிதா’, பேருந்திலிருந்து இறங்குவது ‘ஒரிமாஷிதா’. இந்தக் கவிதையில் அது வீழ்கையில் ‘ஒரிதே’ என ஒலிக்கிறது. ஒரி+தே = வீழ்கையில்.
முதல் அடி: 地におりて சி நி ஒ ரி தே – நிலத்தில் வீழ்கையில்.
குறிப்பு:
ஜப்பானியக் காகிதக்கலை ‘ஓரிகமி’. இது பரவலாக அறியப்பட்ட வார்த்தை. இதில் வருகின்ற ‘ஓரி’ – மடித்தல், முறிதல், வளைதல் இப்படியாகப் பொருள்படும்.
இரண்டாவது அடியின் பொருள் ‘காற்றாடியின் ஆன்மா’. 凧に魂, ஒரு காஞ்சி வரிவடிவம், ஒரு ஹிராகனா, இன்னொரு காஞ்சி என எழுதப்பட்டிருக்கிறது. முதல் காஞ்சி 凧 இதனைப் பிரித்து ஹிராகனாவில் எழுதினால் தா た, கோ こ, தாகோ – பட்டம், காற்றாடி. நி அல்லது னி に – இன். 凧にதா கோ நி たこに – காற்றாடியின்.
காற்றாடியினைத் தொடரும் அடுத்த சொல், ஆன்மா. 魂 காஞ்சி வரிவடிவில் உள்ள இதனை ஹிராகனாவில் பிரிக்க, அது த- た, ம – ま, ஷி – し, இ – い, தமாஷிஇ என விரியும். தமாஷிஇ – 魂 – たましい பொதுவாக ஆன்மாவை மட்டுமல்லாமல் மன உறுதியையும் குறிக்கும். ஆன்மா, மனஉறுதி, இயக்கத்துக்கு முக்கியமான ஒன்று, முனைப்பு இப்படிப் பல பொருள்களைக் கொண்ட வார்த்தை அது. இந்தக் கவிதையில் அகவயப் பார்வையில் ஆன்மாவைக் குறிக்கும். த மா ஷி இ – たましい – ஆன்மா.
இரண்டாம் அடி: காற்றாடியின் ஆன்மா 凧に魂 – த கோ நி த மா ஷி இ.
மூன்றாம் அடியின் பொருள் ‘இழக்கும்’. இதில் ‘விசை’ என்பதற்கான ஜப்பானியச் சொல் சொல்லப்படவில்லை. காஞ்சி வரிவடிவில் இருக்கும் ‘ந’ 無, ஹிராகனா வரிவடிவில் な ந, い இ என இரண்டு எழுத்துகளாக விரியும். அது இல்லாமற் போவதைக் குறிக்கும். இக்கவிதையில் ‘ந’ மட்டும் இடம்பெற்று அதே பொருளைக் குறிக்கும்.
இதே காஞ்சி, ‘மு’ என்னும் ஒலிப்பையும் கொண்டது. அதன் பொருளும் இல்லாமற்போவதுதான். ஒவ்வொரு காஞ்சி வரிவடிவமும் குன்யோமி, ஒன்யோமி என இரண்டு வெவ்வேறு ஒலிப்புகளைக் கொண்டது. இதன் குன்யோமி ஒலிப்பு ‘நஇ’, ஒன்யோமி ஒலிப்பு ‘மு’.
‘ந’வுடன் சேரும் அடுத்த சொல், க -か, ரி -り, கரி. இது தன்னைக் குறிக்கும். け- கெ, り – ரி இங்கு அசைச்சொல். தனியாக எழுதுகையில் இது உதை (kick) என்னும் பொருளைத் தரினும், மூன்றாம் அடியில் ‘நகரிகெரி’ எனக் கூட்டாக ஒலிக்கையில் தனிப்பொருளாக அல்லாமல் அசைச்சொல்லாக நிற்கும்.
மூன்றாம் அடி: இழக்கும் 無かりけり – நகரிகெரி.
இந்த ஹைக்கூவை வரிக்கு வரி மொழிபெயர்த்தால்,
சிநிஒரிதே – நிலத்தில் வீழும்பொழுது
தாகோநிதமாஷிஇ – காற்றாடியின் இயக்கம்
நகரிகெரி – இழக்கும்
இதனை உள்வாங்கி,
நிலத்தில் வீழ்கையில்
காற்றாடி தன் உறுதியை
இழக்கும்
எனவும் மொழியாக்கம் செய்யலாம்.
காற்றாடி மட்டும் இந்த ஹைக்கூ பேசவில்லை, காற்றாடியைக் குறியீடாக முன்வைத்து அடங்கும் நேரத்தின் ஆன்மா தன் விசையை இழப்பதைக் குறிப்பிட்டு, கவிஞர் குபோத்தா குஹோன்தா சொல்ல விழைகின்ற நிலையாமைத் தத்துவத்தின் அடிப்படையில்,
நிலத்தில் வீழ்கையில்
காற்றாடியின் ஆன்மா
விசையிழக்கும்
என்றும் ஹைக்கூவை மொழியாக்கம் செய்யலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
