போதி மரத்தடியில்

’புத்தம்’ நாவலின் முதல் அத்தியாயத்தை முன்வைத்து..

அன்றாடங்களின் தேவைகளால் ஆனது இவ்வாழ்வு, இவ்வுலகு. ஒவ்வொரு நாளும் ஒன்றையே திரும்பச் செய்யும்படி உயிரியல்பை அமைத்திருக்கிறது, மீண்டும் மீண்டும் வரும் இரவும் பகலும், பருவ காலங்களும்.

தாகமும், பசியும், அவற்றைத் தீர்க்க  மூன்று வேளை உணவும், ஆறேழு மணி நேரத் தூக்கமும், உடற்கழிவுகளின் நீக்கமும், எந்த அறிவார்ந்த தேடலுக்கிடையிலும் மேலான நாட்டங்களுக்கிடையிலும் அவசியமாகிறது. இவற்றுக்கிடையே இளமையில் பாலுணர்வு சார்ந்த குழப்பங்களும் அலைக்கழிப்புகளும் கனவுகளும் ஏமாற்றங்களும் சேர்ந்துகொள்கின்றன.

சுற்றிச்சூழ அன்றாடங்களும் அதன் தேவைகளும் அவத்தைகளும் அலைக்கழிப்புகளும் இனிமைகளும் சோர்வுகளுமே நிறைந்துள்ளன. காலை எழுவது, உண்பது, வீட்டு வேலையோ அலுவலக வேலையோ செய்வது, மீண்டும் உண்பது, கொஞ்சம் தூக்கம், மாலையில் தேனீர் பின்னர் பொழுதுபோக்கு, இரவு உணவு, ஒரு நாளை முடித்த ஆசுவாசம், உறக்கம். ஒரு நாள் என்பது இவ்வளவு தானே? ஒரு மாதத்துக்கும், வருடத்துக்கும், வாழ்நாளுக்கும் இதேபோன்ற சுழற்சிகளே உள்ளன. இடையிடையே கொஞ்சம் வாசிப்பு, அறிவார்ந்த ஈடுபாடுகள், வாழ்நாள் திட்டங்களில் ஏற்படும் வெற்றிகளும் தோல்விகளும்.. இதோடு முடித்துக்கொள்கிறோம்.

இதில் மெய்மை என்பதும், ஞானம் என்பதும் எங்கே வந்தது? ஞானம் என்பது இந்த அன்றாடங்களில் இருந்து தப்பிச் செல்வதல்ல என்பதை அடிப்படை விதியாகக் கொள்வோம். அப்படித் தப்பிச் செல்ல ஞானம் தேவையும் இல்லை. அன்றாடங்களின் இடையூறுகளுக்கிடையில் ஞானத்தை வேறு ’என்ன ஏதென்று’ விசரிக்க வேண்டுமா? அது என்ன என்பது ஒரு புறம். அது எதற்கு என்பது மறுபுறம். 

ஞானம் குறித்து பேசப்படுவதெல்லாம் மீண்டும் அன்றாடத்துக்கே வந்து சேர்கிறது. ஞானத் தேடல் பற்றிய சீனக் கதையொன்று உண்டு. எருதைத் தேடிக் கிளம்பும் ஒருவன், அதன் கால்தடம் அறிந்து, பின் அதனை தூரத்தில் பார்த்து, பிடித்து, வசமாக்கி, வீடு திரும்பி, எருதை மறந்து, பின் தன்னையே மறந்து, இயற்பண்பை ஏற்று, மீண்டும் சந்தைக்குச் செல்கிறான் என முடிகிறது அக்கதை. ஏற்கெனவே சந்தையில் கடை விரித்திருக்கும் ஒருவன் எதற்காக முதலில் எருதைத் தேடவேண்டும்? சந்தையைப் புரிந்துகொண்டால் போதாதா? இங்கே எருதின் தேவை தான் என்ன?

ஞானம் என்பது துக்க விடுதலை என்றால் ஞானமடைந்த புத்தர் துக்கமே இன்றி தான் ஞானத்துக்குப் பிறகான எஞ்சிய வாழ்வைக் கழித்தாரா? எத்தனை இழப்புகள், எத்தனை நோவுகள்.. 

எனில் இந்த ஞானம் என்பதெல்லாம் என்ன? மரபுகள் அளிக்கும் பதில்கள் திருப்தியுறச் செய்யவில்லை; எந்த நம்பிக்கைகளுக்கும் ஒப்புக்கொடுக்க இயலவில்லை; எல்லாம் நிலப்பிரபுத்துவ காலத்து கேள்விகளும் விடைகளுமாக இருக்கின்றன. சலிப்புறச் செய்கின்றன். நவீன மனிதனின் மனம் வேறு விதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. காட்டிலும் புல்வெளியிலும் வாழ்ந்த மூதாதையரின் வேட்கைகளும் பதற்றங்களும் வழிவழியாகத் தொடர்ந்து வந்து சேர்ந்திருந்தாலும் இன்றைக்கு அதன் வெளிப்பாடுகள், அர்த்தங்கள் வேறானவை. அதனால் உணவும் உறைவிடமும் கிடைத்துவிட்ட பிறகும் ’அன்றாடம்’ போதுமானது என்பதை ஏற்கமுடிவதில்லை. சந்தையில் கடை விரித்திருப்பவரும் எருதையோ பசுவையோ தேடிக் கிளம்பிச் செல்லத்தான் வேண்டியிருக்கின்றது.

நவீன வாசகனுக்கு இலக்கியம் இயல்பான முதல் போக்கிடமாக அமைகிறது. இலக்கியத் தரத்தோடு விவரிக்கையில்தான் மெய்மையும் ஞானமும் புரியக்கிடைக்கிறது. தத்துவ நூல்கள் அளிக்கும் உருவகங்கள் எல்லாம் இலக்கியத்துக்கு கச்சாப்பொருளாக ஆவது இவ்வாறு தான்.

இலக்கியம் வழியே ’ஞானம் என்பது என்ன’, அன்றாடத்தில் அதன் செயல்பாடு எவ்வண்ணம் அமைகிறது, என உசாவும் வாசகன் தவறவிடக்கூடாத நாவல் புத்தம். வி. அமலன் ஸ்டேன்லி அவர்களது எழுத்தில் தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது.

புத்த தரிசனத்தை, புத்தரின் போதனைகளை அவரது வாழ்வனுபவங்களின் பின்னணியில், அக்காலகட்டத்தை கித்தானாகக்கொண்டு அம்மக்களின் வாழ்வை வரைந்து விரிந்திருக்கும் பெருநாவல் புத்தம். 

புத்தர் ஞானமடையும் இரவில் இருந்து இந்நாவல் தொடங்குகிறது. அந்த இரவில் நடந்தது என்ன என்ற விசாரனை ஞானம் என்றால் என்ன என்ற வினாவுக்கும் விடையளிக்கக்கூடும். 

பழமையான புத்த நிகாயங்களில் அவ்விரவு குறித்து புத்தரின் விவரிப்பாக சில சூத்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்விரவின் முதல் சாமத்தில் அவர் தனது முற்பிறவிகள் அனைத்தையும் நினைவுகொள்கிறார். செயல்களின் விளைவுகளுக்கேற்ப தான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்ந்து மாண்டதை அறிகிறார். அகத்தெளிவால் இவ்வறிதல் வாய்க்கப்பெற்றார்.

அவ்விரவின் இரண்டாம் சாமத்தில் எல்லா உயிர்களும் அவ்வண்ணமே தத்தமது செயல்விளைவுகளுக்கேற்ப தோன்றி மறைந்து மீண்டும் தோன்றி முடிவுறா சுழலில் கிடப்பதை அறிகிறார். கம்மா எனப்படும் ஊழ்வினை குறித்து முழுமையாக உய்த்துணர்கிறார். அனைத்தையும் அறியும், கண்டுணரும் தெய்வீகக் கண்களால் இதனை அவர் அறிந்து தெளிகிறார்.

அவ்விரவின் முடிவில், விடியற்காலையில் நுகர்ச்சி வேட்கை, ஆகுதலுக்கான விழைவு, தவறான புரிந்துணர்வுகள், அறியாமை என அனைத்து மனமாசுகளும் நீங்கப்பெற்று ஞானமடைகிறார். இந்த மூன்றாம் சாமத்தின் போது தான் பதிச்ச சமுப்பதா எனப்படும் சார்பெழுச்சி குறித்து அறிந்துணர்கிறார்.

பின்னர் ஏழு நாட்கள் தியானத்தில் அமர்ந்திருந்து பூரண விடுதலையை அனுபவிக்கிறார். ஒன்றையொன்று சார்ந்தே இங்கே யாவும் எழுகின்றன, எழுந்தவை வீழ்கின்றன, பின்னர் மீண்டும் எழுகின்றன என்ற சார்பெழுச்சி எனும் மெய்மை தரிசனத்தை மீள மீள உய்த்துணர்கிறார். ஏழு நாட்கள் கழித்து சிறு சஞ்சலத்திற்குப் பிறகு தம்மத்தை உலகிற்கு போதிக்க முடிவெடுத்து வாரணாசிக்குக் கிளம்புகிறார். பின்னர் ஐம்பது வருடங்களுக்கு தம்மத்தை போதிக்கிறார். 

அடுத்து வரும் ஆயிரம் ஆண்டு உலக வரலாற்றை பாத்தித்த அந்த இரவில் நிகழ்ந்தவை அத்தனை மகத்துவம் வாய்ந்தவையா?

அதன்பிறகு எத்தனை எத்தனை புதிய கருத்தாக்கங்கள் தோன்றிவிட்டன.. ஒரு புதிய சிந்தனை தோன்றிய தருணம் நாடகீயமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதன் தேவை என்ன? இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கழித்து அவ்விரவு குறித்து வாசிக்கும் ஒருவன் என்ன புரிந்துகொள்கிறான்? முற்பிறவி குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விகள் இன்றி ஏற்க வேண்டும் என்றா? நிகாயங்களின்படி புத்தர் முதல் சாமத்திலும் இரண்டாம் சாமத்திலும் அறிவது பிறவிகள் குறித்த கருத்தாக்கங்களையே. அவ்விரவு குறித்து தெளிவாகப் படித்து அறிந்த வாசகனுக்கும் புத்தருக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவ்விரவில் எது சித்தாத்தரை புத்தராக்கியது?

புத்தம் நாவலின் முதல் அத்தியாயம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. புத்தர் ஞானமடைந்த இரவை மறுபுனைவு செய்கிறது. 

“வானம் விட்டுக் கீழிறங்க கள்ளப்பருந்து ஆயத்தமானது” எனத்தொடங்கும் நாவல், தியானத்திலிருந்து எழ விருப்பும் விழைவுமற்ற நிலையைச்சுட்ட பருந்தை உவமையாகக் கொள்கிறது. அங்கிருந்து தொடங்கி அவ்வத்தியாயத்தின் முதல் பகுதி முழுக்க தியான அனுபத்தைத் தீவிரமாக விவரிக்கிறது. ஞானம் எனும் கண்டடைவை புத்தர் தியானத்தால் சென்றடைகிறார். அத்தியான அனுபவம் எத்தகையதாய் இருந்திருக்கும் என்பதை இப்பகுதியில் அறியலாம். தியானப் பயிற்சி இல்லாவிடினும் மொழியால், கவித்துவத்தால் பின்தொடர வாய்ப்பளிக்கிறது. கற்பனையால் விரிவாக்கிக்கொள்வதல்ல தியானம் குறித்த விவரிப்புகள். கவித்துவத்தையும் மீறி, ஆய்வகத்தின் கருவிகளில் அளக்கப்படும் துல்லியமான அளவீடுகள் போன்றிருக்கின்றன இவ்விவரிப்புகள்.

போதி இரவின் தியான அனுபவத்தைப் பேசும் முதல் அத்தியாயத்தின் முதற் பகுதி, “நெருப்பற்று, தண்ணென்ற ஒளி நீர்மையில் வெந்து தணிந்தது உடலெனும் காடு” என்ற வரிகளில் உச்சம் கொண்டு நிறைகிறது. ”எதைச் சரணுக்குட்படுத்த” எனத்தொடங்கும் கவிதை அந்த தியான அனுபவ விவரிப்பின் முடிவை அறிவிக்கிறது. இந்த விவரணைகள் எதுவும் புத்த சூத்திரங்களில் இல்லை. அனால் இந்த அனுபவம் வாயிலாகவே அடுத்து விவரிக்கப்படும் புரிந்துணர்வுக்கு புத்தர் வந்து சேர்ந்திருக்கிறார். அது என்ன புரிந்துணர்வு என்று தெளிவுபெற்றபின் தியான அனுபவங்களைப் பேசும் இம்முதற்பகுதி மேலும் ஒளிபெறுகிறது.

முதல் சாமத்தில் தவிர்க்க முடியாத தன் மரணத்தை உணர்ந்தேற்கிறார். இல்லாமலாதல் குறித்த அச்சம் விலகியதும் இருப்பு மேலும் ஒளி கொள்கிறது. அவ்வறிதலினூடே தியான அனுபவமும் தொடர்கிறது. முழுவிழிப்பில் இருக்கிறார். தன் உடல் அழிந்து சிதைவுறும் என்பதை அறிந்திருந்தலும் அக்கணம் அதனை முழுதாக ஏற்கிறார். இந்த அறிதலும் இது நிகழும் முழு விழிப்பு நிலையும் தியானத்தினால் சாத்தியமாகி இருக்கிறது. 

”அகம், புறம், தான், பிறவென ஏதுமற்று எல்லாமுமாகத் திகழ்ந்த பெருவிழிப்பு. பேரறிதல். அம் மெய்நிலை உய்த்துணர்ந்தவன் பிறகு அவனாக ஒருபோதும் இருப்பதில்லை. அவனுடையதென ஏதுமற்றதே அவன் அடையாளம் இனி.” இந்த அனுபவத்தின் வழியே முதல் சாமத்திலேயே தன்னின்மை என்பதை கண்டறிகிறார்.

இரண்டாம் சாமத்தில் நிலையாமையை அறிந்துணர்கிறார். தன் மரணம் மட்டுமின்றி உயிர்கள் யாவற்றின் மரணத்தையும் துக்கத்தையும் தெளிவாகக் காண்கிறார். நிலையாமையிலேயே உயிர்கள் தொடர் இயக்கத்தில் இருப்பதை உணர்கிறார். இயக்குபவர் என்ற மையமற்று இவ்வியக்கம் நிகழ்கிறது. தன்னின்மை எனும் தகைமையிலேயே பிரபஞ்ச இயக்கமும் இயல்கிறது என்பதை உய்த்துணர்ந்த மாத்திரத்தில் வெற்றுமை எனும் சூன்யம் குறித்த புரிந்துணர்வு பிறக்கிறது.

மூன்றாம் சாமத்தில் பிரபஞ்சப் பெருவெளியின் ஞானம் அவருள் சுடர்கிறது. ஞானம் என்பது தனித்த ஓருயிர் அடைவதல்ல. அது பிரபஞ்சத்தின் இயக்கத்தோடும் அடிப்படை விதிகளோடும் பின்னிப்பிணைந்திருக்கிறது. 

பிரபஞ்சத்தின் மூலக்கூறுகள் பெரும்பாலும் ஹைட்ரஜனாகவோ ஹீலியமாகவோ இருக்கிறது. நம்முடலை ஆக்கி இருக்கும் கார்பனும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும் நட்சத்திரங்களின் உயர் அழுத்த களனில் உருவாக்கப்பட்டவை. வானியல் பாலபாடமிது. ஒவ்வொரு முறை யோசிக்கும்போதும் சிலிர்க்கச் செய்யும். பின்னர் அடுத்த வேலையைப் பார்த்துச் சென்றுவிடுகிறோம். தலைக்கு மேல் எப்போதும் வானம் இருந்துகொண்டிருக்கிறது; இவ்வுண்மையை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எப்போதாவதுதான் அண்ணாந்து பார்க்கிறோம். உடல் என நாம் இக்கணம் உணரும் இதனை பிரபஞ்சத்தோடு, நட்சத்திர மண்டலங்களோடு தொடர்புபடுத்தியா அறிகிறோம்? 

தான் என்பதை இப்பிரபஞ்சத்தின் பகுதியாக அறிவால் அல்லாமல் தன்னுணர்வில் அறிந்துணர்கிறார் மூன்றாம் சாமத்தில். அந்த அனுபவம் தரும் நிறைவும் முழுமையும் அளப்பரியதாயிருக்கிறது. அறிந்துணர்வு, இவ்வுடலை அங்கங்களாக அல்லாமல் தாதுக்களாக அறிகிறது. அத்தாதுக்களே இவ்வுடலுக்கு வெளியிலும் இருப்பதை அறியும்போது தான் பிற என்ற எல்லைக்கோடுகள் அற்றுப்போய் தான் என்பது அறிதலுக்கே அவசியமற்றதாகிப் போகின்றது. பிரபஞ்சத்தை ஆக்கி இருக்கும் மூலக்கூறுகளே இருப்பதாகிறது; தான் என்ற தனித்த ஒன்று இல்லததாகிறது.

தனித்த இருப்போடு ஏதுமில்லை; ஒவ்வொன்றும் பிற யாவற்றையும் சார்ந்து எழுகின்றன, மறைகின்றன; அதனிடத்தில் வேறொன்று எழுகின்றது என்றறிகிறார். சார்பெழுச்சி எனும் இவ்வறிதல் நிலையாமை குறித்த புரிந்துணர்வில் இருந்து எழுகிறது. எழுந்தெழுந்து அடங்கும் இச்சுழற்சியிலிருந்து மீட்சி உண்டென்பதையும் கண்டறிகிறார்.

”சார்பின் ஆணிவேர் நீங்க எழுச்சியுமில்லை வீழ்ச்சியுமில்லை; இரண்டுமற்றதின் வெறுவெளியில் பிரக்ஞையின் காலமற்ற இருப்பில் நிலைகொள்ளும் தவமுறையைக் கண்டறிந்தார்.”

பற்றுதல் தவிர்த்தலே விடுதலைக்கான பாதை என்பது தெரியவருகிறது. பற்றுதலில் மிக நுண்ணியது தற்பற்று. அதையும் விட்டுவிடுகையில் தன்னின்மை ஒளிர்கிறது. ”தன்னின்மை என்பது எதுவுமற்ற வெறுமையல்ல. தான் என்பதுண்டு. ஆனால் அது கணத்திற்குக் கணம் மாறக்கூடிய, உள்ளீடற்ற, நிரந்தரமற்ற, வெற்றுமையைக் கொண்ட ‘தான்’ மட்டுமே.”

ஒன்றை ஒன்று சார்ந்து நிகழும் இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு உயிரும் கொண்டிருக்கும் சுதந்திரம் அனுபவப்படுகிறது.

இப்போது மாரன் வருகிறான். மாரன் இங்கே தனித்த இருப்பு கொண்ட ஒருவன் அல்ல. விழிப்பிலிருந்து கணநேர சறுக்கல் சாத்தியமா என்று எதிர்பார்த்து காத்து நிற்கும் உயிரியல்பின் இன்னொரு கூறு. தவத்தாலேயே மாரனை வெல்கிறார் புத்தர். தவமும் அதன் விளைவுகளும் உயிரியல்பின் மற்றுமொரு கூறாகிறது.

உடல், உணர்ச்சிகள், அறிந்துணர்வு, மனவுருவாக்கம், தன்னுணர்வு என ஐந்து கந்தங்களால் ஆனவையே இங்கிருக்கும் யாவையும் என்றறிகிறார்.

”ஒவ்வொரு கந்தத்தையும் தனித்தனியென விழிப்புடன் உற்றறிய, உய்வும் தெள்ளமைதியும் உள்ளுக்குள் எப்போதும் சுரந்தபடி இருப்பின் ஆழத்தில் தென்பட்டன”.

இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது. 

பற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல்; இங்கிருக்கும் பேரியக்கமும் அவ்வியக்கத்தின் பகுதியாக தான் என்பது ஆகி வருதலையும் அறிதல்; எதுவும், இவ்வறிதலும் கூட, நிலையானதல்ல, அதன் மீதும் பற்று கொள்ளுதல் ஆகாது என்பதை அறிந்துணர்ந்து கைவிடல் என ஞானத்தின் தன்மைகளை விளங்கிக்கொள்ளலாம். 

சரி ஞானமடைந்த பிறகு என்ன செய்வது? அவ்வொளிர்வோடு சந்தைக்குத் திரும்பும் முடிவை புத்தர் எடுப்பதில் நிறைகிறது புத்தம் நாவலின் முதல் அத்தியாயம். தியான அனுபவம், அதன் வழியான புரிந்துணர்வுகள், அதிலிருந்து கிளைக்கும் போதனைகள் ஆகியவற்றை விவரித்து நிறைகிறது.

இனியும் அவருக்கு பிணி, மூப்பு, சாக்காடு உண்டு. நெருங்கியோரின் நோயும் மரணமும் வதைக்கத்தான் செய்யும். அவமானங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளத்தான் போகிறார். மீண்டும் ஒரே ஒரு முறையாகிலும் சறுக்கி விழுகிறாரா என்றறிய மாரன் விடாது பின்னால் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருப்பான்.

என்றாலும் அவ்விரவின் அனுபவம் மகத்தானது. மீண்டும் மீண்டும் வாய்க்கத்தக்கது மட்டுமல்ல; யாவருக்கும் சாத்தியமாவதும் கூட. 

புத்தர் அவ்விரவில் கண்டுணர்ந்ததைத் தான் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு தமது போதனைகள் வழியே செழுமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அதைத்தான் புத்தம் நாவல் அடுத்த எழுநூறு பக்கங்களுக்கு விவரிக்கின்றது. 

தன்னின்மையும் வெற்றுமையும் சார்பெழுச்சியும் நிலையாமையும் துக்கமும் துக்க காரணமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் உபாயமும் அவ்விரவில் அனுபவப்பட்டபின் சார்பெழுச்சியின் ஆரக்கால்கள் பன்னிரண்டு என்று வகுப்பதும், துக்க நிவர்த்திக்கான உபாயம் என்பது எட்டு அங்கப் பாதை, முடிவுக்கு வரும் களங்கங்கள் ஐந்து என்றெல்லாம் எண்ணிட்டு போதனைகளை செழுமைப்படுத்துவதை எஞ்சிய வாழ்நாளெல்லாம் செய்திருக்கிறார் புத்தர்.

புத்தம் நாவலின் முதல் அத்தியாயம் புத்த சூத்திரங்களை விடவும் அதிக நெருக்கமாக புத்தரை, அவரது தியான அனுபவங்களை, அதன் வழியாக கண்டுணர்ந்த போதனைகளை பின்தொடர்ந்து சென்று விவரித்திருப்பதை வாசகர்கள் அறிய முடியும். சூத்திரங்களின் சொல்லெண்ணித் தொடுத்த கூர்மையோடே இவ்வத்தியாயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. 

ஞானம் என்பது எங்கோ இருக்கும் எருதைத் தேடிச்செல்வது எனும் உருவகத்தை விட இங்கே இக்கணம் அடியற்ற ஆழத்தினுள் இறங்கி அவ்வனுபவத்தினால் அறியப்பெறுவது என்று தெளிவளிக்கிறது. 

இத்தனை அறிதல்களும் அத்தியாயத்தின் முதல் பகுதியில் வரும் தியான அனுபவத்திலேயே கரு வடிவில் அடங்கி இருப்பதை இரண்டாம் வாசிப்பில் அறியமுடிகிறது. அப்பட்டமாக ’இதுதான், இவ்வளவுதான்’ என்று யதார்த்தத் தளத்தில், அனுபவ விவரிப்பில் ஞானத்தை விவரிக்கும் இந்நாவலின் முதல் அத்தியாயம் மீண்டும் மீண்டும் வாசிப்பவரைத் தன்னுள் ஈர்க்கும் மாயத்தன்மை கொண்டிருக்கின்றது. வாசிக்கும்தோறும் மெய்யனுபவம், மெய்நிகர் அனுபவமாக ஏதோ நாமே ஞானத்தை அறிந்துணர்ந்துவிட்ட கண நேரத் தெளிவை அளிக்கின்றது. 

மேரியின் அறை என்ற புகழ்பெற்ற எண்ணச்சோதனை ஒன்றுண்டு.

பிறந்தது முதல் கருப்பு வெள்ளை அறையிலேயே வளர்ந்து வருகிறாள் மேரி. வேறு வண்ணங்கள் எதையும் அவள் பார்த்தாளில்லை. அவளுக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களும் அதனை உறுதி செய்தன. சிறு வயதில் வண்ணம் என்பதைப் பற்றி படிக்கிறாள். அது என்ன என்று ஆர்வம் மேலிடுகிறது. வண்ணங்கள் பற்றிய இயர்பியல் விதிகளை எல்லாம் துல்லியமாக அறிகிறாள். 

அடுத்து, வண்ணம் எவ்வாறு அனுபவப்படும் என்பதை அறிய விரும்புகிறாள். கண்களின் இயங்கு முறையையும் மூளை நரம்பியலும், கற்றுத் தேர்கிறாள். வண்ணங்கள் பற்றி அவள் அறியாததென்று ஏதுமில்லை. சிவப்புக்கும் பச்சைக்கும் அலைவரிசை வித்தியாசம் முதல் அவ்வண்ணங்கள் மூளையில் எந்தப் பகுதியை எவ்வண்ணம் சீண்டும் என்பது வரை அவள் அறிந்திருக்கிறாள். ஆனால் கருப்பு – வெள்ளை வண்ணமடித்த அறைக்குள்ளேயே தான் வாழ்கிறாள்.

முதல்முறையாக தன்னறையில் இருந்து வெளியே வரும் அவள் புதிதாக எதை அறிகிறாள்? அறிதலுக்கும் அனுபவிப்பதற்கும் அதுவே வேறுபாடு. அறிவதும் அனுபவப்படுவதும் ஒன்றல்ல என்பதையே புத்தம் நாவலின் முதல் அத்தியாயம் உணர்த்துகிறது. ஞானம் என்பது அறியப்படுவதல்ல, அனுபவப்படுவது என்ற தெளிவை அளிக்கின்றது. அது யாவருக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.