பூவன்பழம்

மூலம்                   : காரூர் நீலகண்டப் பிள்ளை

ஆங்கிலம்                 : கே.எம். ஷெரீப்

தமிழாக்கம் : தி.இரா.மீனா

நிலக்கிழாரான அந்த நம்பூத்ரியின் பண்ணை வீடு, எங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில்தான் இருந்தது.  அவர்களின் பண்ணையாட்கள், நாங்கள், அவர்களைச் சார்ந்திருப்பவர்கள். சரியாகச் சொல்லப் போனால் எங்களுக்கு எஜமானர்களாகவும், வேலையாட்களாகவும் ஒருவரின் தேவை மற்றொருவருக்கு வேண்டும். அந்த வீட்டில் ஏதாவது விசேஷமென்றால் —  பிறந்த நாள், ஆறுமாத, ஒரு வயதுக் குழந்தைக்கு அன்னம் தரும் விழா, ஒரு திருமணம் அல்லது திதி நாட்களில் எங்கள் வீட்டில் எதுவும் சமைக்கவே மாட்டோம். திருவாதிரை தினத்தன்று கைகொட்டிக்களி எங்குமிருக்கும். ஆனால் எங்கள் வீட்டுப் பெண்கள் பண்ணை வீட்டிற்குத்தான் நடனமாடப் போவார்கள். கோடைக் காலத் தொடக்கத்தில், மாம்பழங்கள் பழுத்துக் கிடக்கும் போது, குழந்தைகளான நாங்கள் பண்ணை வீட்டிலிருக்கிற உயரமான அந்தப் பெரிய மரத்தைச் சுற்றி வந்து பழங்களைப் பொறுக்குவோம்.எங்களின் சிறிய கோட்டைகளை மண்ணில் உருவாக்கி, அதன் கீழ் வைப்போம். ஓணம் வந்து விட்டால், முற்றத்திலிருக்கும் பெரிய மரத்தின் நிழலுக்குச் சென்று ஊஞ்சலாடுவோம். எங்களுக்கு வீட்டை விட உயர்வானது. அந்தப் பண்ணை வீடு.

அந்த வீட்டில் என் வயதில் வாசுக்குட்டன் என்றொரு பையன் இருந்தான். எங்களுக்குள் சமூக ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இணை பிரியாத நண்பர்களாக இருந்தோம். பாவம் வாசுக்குட்டன்! மூன்று வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்டான்.

அவன் அம்மா சோகத்தில் தளர்ந்து போனாள். கணவனின் இறப்பிற்குப் பிறகு அவளுடைய ஒரே ஆதாரம் அவன்தான். பத்து வருடங்களாக அவளுக்குள் இருந்த கனவுகள் அவன் இழப்பில் நொறுங்கிப் போயின.

வீட்டுப் பெண்களுக்கு அவள் விதி பொறுக்க முடியாததாக இருந்தது. 

அவளை அறிந்தவர்கள், ஒரே ஒரு தடவை அவளிடம் பேசியவர்கள் கூட அவள் நலம் விரும்பிகள்தான். அவளுடைய விதியை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல் ஒருவர் கூட அவளைக் கடந்து போனதில்லை. சந்தோஷம் என்பதே அவளுக்கு மறந்து போனது. இனி வாழ்க்கையில் அவளுக்காக என்ன இருக்கிறது?

அவளுடைய உண்மைப் பெயர் ’உன்னிம்மா, அல்லது நங்கையா அல்லது அது போல ஏதாவதிருக்கலாம். ஆனால் அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் அவளுக்கு ’பூவன்பழம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். அது பட்டப் பெயரில்லை. அவள் ’பூவன்புழா’ என்னும் இடத்தைச் சேர்ந்தவள். ’பூவன்பழம்’ என்பது ஏறக்குறைய அது போலவே ஒலித்ததால் அது அவளுடைய பிரபலமான பெயராகி விட்டது. அவள் நல்ல நிறமாகவும், சதைப் பற்றாகவும் இருந்ததால், அந்தப் பெயர் அவளுக்குப் பொருத்தமானதாகவும் இருந்தது.

வாசுக் குட்டன் இறந்த பிறகு, அவளை ஒரே ஒரு தடவை பார்த்ததாக எனக்கு நினைவு. வளர்ந்து விட்டவனாக என்னை நானே கணித்துக் கொண்ட காலம் அது.

ஒரு நாள், “அப்பு, சுவரருகே பார், பூவன்பழம் உன்னைக் கூப்பிடுகிறாள்.”  என்று சொன்னாள் அம்மா.

நான் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். அவளுக்கு வேண்டிய ஏதோ ஒரு சின்ன வேலைக்காக என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டும். இது என்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். வீட்டில் நாங்கள் எல்லோரும் — ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் அந்த வீட்டின் வேலைக்காரர்கள். இப்போது நான் உயர்நிலைப் பள்ளி மாணவன், என்பதால் அது என்னுடைய கௌரவத்தைக் குறைப்பதாக நினைத்தேன். வறுமைதான் எங்களை அந்த வீட்டில் வேலை செய்யத் தள்ளியிருக்கிறது. ஆனால் அந்த வேலை, வறுமையிலிருந்து எங்களை மீட்சியடையச் செய்யவில்லை. பண்ணை வீட்டிலிருந்து கிடைக்கும் அன்றாட உணவுப் பொருட்களினால் திருப்தி அடைந்தவர்களாக எல்லோரும் இருந்தார்கள். யாருக்கும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஆசையிருப்பதாகத் தெரியவில்லை. என் முழுக் குடும்பமும் சிக்கிக் கொண்டிருக்கிற இந்த நிரந்தரமான அடிமைப்  போக்கிலிருந்து வெளியேறும் ஒரு வழிக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். நான்தான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

அந்த வீட்டைப் பெருக்கித் துடைத்து, துணி துவைத்துப் போராடும் பெண்களுக்கு வயலில் வேலை செய்வதும் ,களையெடுப்பதும் மிக கௌரவமான வேலையாக இருக்கும். ஆண்களைப் பொறுத்த வரை அவர்கள் ஏன் வெளியிடங்களில் வயல்களை உழும் வேலைக்கோ அல்லது வேலி போடுதல் போன்ற வேலைகளுக்கோ போகக் கூடாது? ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் என் மீது  கனிவு காட்ட அங்கு யாருமில்லை.  இரக்கம் காட்டினால் கூப்பிட்ட குரலுக்கு ஓர் ஆள் வருவது குறைந்து போகுமே.

’பூவன்பழம் பாழாய்ப் போகட்டும்!’ எனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, பண்ணை வீட்டிலிருந்து எங்கள் காம்பவுண்டைப் பிரிக்கும் மண் சுவரை நோக்கி நடந்தேன். 

“என்ன “ சுவரை அடைவதற்கு முன்பே பெரிய குரலில் கத்தினேன்.

அவள் இடுப்பளவு உயரத்தில் தான் அந்தச் சுவர் இருந்தது. தோள்களைச் சுற்றிக் கம்பளி அணிந்திருந்தாள். அவளது அழகான நீண்ட கூந்தலின் ஒரு கற்றை முடி முகத்தில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது. தனக்கான சொந்தம் என்று இந்த உலகில் யாரையும் சொல்லிக் கொள்ள இயலாத அந்தப் பெண்மணியிடம், கட்டுக்கடங்காமல்  தங்களால் நடந்து  கொள்ள முடியுமென்று அவைகளுக்குத் தெரியும். ஏறக்குறைய பதினைந்தடி தொலைவில் நான் நின்றிருந்தேன்.

“அப்பு , நான் உன்னைப் பார்த்து எவ்வளவு காலமாகி விட்டது ! வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? “

’நான் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.”

“விடுமுறை நாட்களிலும் நீ ஓய்வேயில்லாமல் இருக்கிறாயே?”

“அப்படியெல்லாம் இல்லை. என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு?”

“நீ எப்போதும் என் வாசுவை நினைவு படுத்துகிறாய். அவன் உன்னை விட ஒன்றரை மாதம்தான் சின்னவன்.”

தன் மகனின் பெயரை உச்சரித்த அளவில் அவள் அழுது விடுவாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தலையை மட்டும் ஆட்டினேன்.

’கடவுள் அவனைக் கூப்பிட்டுக் கொண்டு விட்டார்.” அவள் குரலில் தடுமாற்றமில்லை. ஆனால் அந்த நீல விழிகளில் இழப்பின் வீர்யத்தை என்னால் பார்க்க முடிந்தது.

“என் நேரம் எப்போது வருமென்று தெரியவில்லை.” அவள் பெருமூச்சு விட்டாள்.

சில கணங்களுக்குப் பிறகு, நான் என்ன சிற்றுண்டி சாப்பிட்டேன்? எந்த வகுப்பில் படிக்கிறேன்? பள்ளிக் கட்டணம் எவ்வளவு? சம்ஸ்கிருதம் ,ஆங்கிலம் இரண்டில் எதைக் கற்றுக் கொள்வது கடினம்? இப்படிப் பல விதமான கேள்விகளைக் கேட்டாள்.

“உன்னை எதற்குக் கூப்பிட்டேன் என்பது மறந்தே போய் விட்டது,” என்று சொல்லி விட்டு, “கொஞ்சம் தையல் வேலை இருப்பதால், மெல்லிய ஊசியும், ஒரு சின்ன நூல் கண்டும் வாங்கித் தர வேண்டும்.”

“சரி, நான் வாங்கி வருகிறேன்.”

அருகே என்னை அழைத்து, கையை நீட்டி, ஒரு நாணயத்தை என் உள்ளங்கையில் போட்டாள்.

“இது போதுமா? ஒன்றும் அவசரமில்லை. நாளைக்கு வாங்கி வந்தாலும் பரவாயில்லை. சரி. நீ போய்ப் படி.. உம். என்ன கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாய்?”

இதைத்தான் நேரத்தைப் போக்கும் பேச்சு என்பார்கள். எதற்கு இவ்வளவு ஆர்வம்? நான் போட்டுக் கொண்டிருக்கும் கணக்கின் மீது அவளுக்கு எந்த சுவாரஸ்யமுமில்லை. ”காலம், வேலை சம்பந்தமான கணக்கு”, என்று பதில் சொன்னேன்.

“எனக்கு வேலை மட்டும் தானிருக்கிறது. பரவாயில்லை. அதைப் பற்றிச் சொல்லு.”

எனக்கு எரிச்சல் வந்தது, என்றாலும் என் நண்பனின் அம்மா அவள். அதை விளக்கிச் சொன்னேன். கிருஷ்ணனை விட ராமன் இரண்டு மடங்கு  வேகமாக வேலை செய்வான். அவர்களிருவரும் சேர்ந்து ஒரு வேலையை பத்து நாட்களில் செய்வார்கள். அவர்களிருவரும் தனித்தனியாக அந்த வேலையைச் செய்ய எவ்வளவு நாட்களாகும்?

அவளுக்குள் ஒரு விருப்பம் எழுவதைப் பார்த்தேன். என்னைப் பாராட்டும் விதத்திலான புன்னகை — ஒரு மலர்ந்த அழகான ரோஜாவைப் போல ஒரு புன்னகை.

ஊசியையும், நூலையும் என் தம்பி மூலம் அனுப்பி வைத்தேன்.  

அடுத்த வாரம் அவள் திரும்பவும் என்னைக் கூப்பிட்டாள். தலையணை உறை தைக்க ஒரு மீட்டர் துணி வாங்கி வர வேண்டுமென்றாள். தனக்குத் தேவையானதை அவள் சொல்லி முடித்த பிறகு, “நான் போகலாமா?” என்று மென்மையாகக் கேட்டேன்.

“நீ எப்போதும் அவசரத்திலேயே இருக்கிறாய் அப்பு,”

“அப்படியெதுவுமில்லை.” என்றேன். அந்த வீட்டிலிருக்கிற யாருடனும் பேச எனக்குப் பிடிக்காது. அவர்கள் பெரிய மனிதர்கள், அவர்கள் முன் நான் பூஜ்யம்தான் என்பது எனக்கு வலி தரும் விஷயம்.

ஓர் அணில் கீறிச்சிட்டுக் கொண்டே சுவரில் ஓடியது.

“அது எவ்வளவு அழகாக இருக்கிறது! ராமர் அதன் முதுகில் கோடிட்டார் என்று சொல்வார்கள். உனக்கு அந்தக் கதை தெரியுமா அப்பு?”

“அது, இலங்கைக்குப் போவதற்கு பாலம் கட்டிய போது மணலெடுத்துத் தந்ததற்கான நன்றி அடையாளம் என்ற கதை என்பது எனக்குத் தெரியும்.” 

அந்த உரையாடலை முடிவுக்குக் கொண்டு வரும் அவசரத்தில் நானிருந்தேன்.

“உனக்குத் தெரியாதது எதுவுமேயில்லை என்று தோன்றுகிறது.” மீண்டும் அந்தப் பாராட்டுப் புன்னகை.

தன் மகன் உயிரோடிருந்தால் அவனுக்கும் இதுவெல்லாம் தெரிந்திருக்கும் என்ற உண்மை அவளை வேதனைக்குள்ளாக்கி இருக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்குப் பின்பு மீண்டும் என்னை அழைத்தாள். எனக்கு எரிச்சல் வந்தது. ஆனால் நான் முணுமுணுக்காமல் போனேன். அவளுக்காக எதுவும் செய்ய மகனில்லை. ஒரு சிறிய பொட்டலத்தை என் கையில் தருவதற்குப் பதிலாக கீழே வைத்தாள். திறந்த போது இரண்டு நெய்யப்பங்கள் வாழை இலையில் சுற்றப்பட்டிருந்தன. 

“அப்பு, சாப்பிடு. அது உனக்குத்தான்.” வீட்டிற்கு எடுத்துப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இரண்டையும் சாப்பிட்டு விட்டேன்.

“உனக்குப் பிடித்ததா?”

“நெய்யப்பம் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா?”

குறிப்பாக எதுவும் பேசாமல், நீண்ட நேரம் எதை எதையோ பேசி முடித்த பிறகுதான் என்னைப் போக அனுமதித்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு ,வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலைகள் பறிக்க என்னை அழைத்தாள். ஒரு பொருத்தமான வேலைக்காரனாக அவள் என்னை உருவாக்குவது போலத் தெரிந்தது. நான் பள்ளியின் இறுதியாண்டில் இருந்தேன். அந்தத் தேர்வில் நான் பாஸாகி விட்டால்—மாதம் ஓர் இருபது ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வேலை எனக்குக் கிடைக்கும். பிறகு அந்த வீட்டின் வேலைக்காரனாக இருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னால் எந்த அளவிற்கு என்னிடம் வேலை வாங்க வேண்டுமோ அந்த அளவிற்கு அவள் வேலை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவள் நல்லவளாக இருக்கலாம், ஆனால் என்னைப் போன்றவர்களை மேலே வர விடாமல் செய்யும், சாதியின் பொறாமையிலிருந்து விடுபட்டவளாக அவள் இருக்க முடியுமா?

“குன்னத்தேரம்மா, நீங்கள் வெற்றிலை போட மாட்டீர்கள் அல்லவா?”

“நான் போட மாட்டேன். ஆனால் வீட்டிலிருப்பவர்களும் போட மாட்டார்கள் என்றாகி விடுமா? நீண்ட காலமாகவே நான் வெற்றிலை போடுவதில்லை. வெற்றிலை போட்டாலும், சுண்ணாம்பு உபயோகிப்பதில்லை. உன்னால் மரத்தில் ஏற முடியவில்லையென்றால் பரவாயில்லை. விட்டு விடு.”

ஏற முடியாதா! பின்னிப் பிணைந்த மரத்தின் மீது ஏற முடியாதென்று சொல்ல முடியாத அளவுக்கு நான் சிறியவன்.

“பரவாயில்லை. என்னால் ஏற முடியும். இருங்கள், அங்கே வருகிறேன்.”

“அந்தச் சுவற்றிலிருந்து குதித்து விடு.”

“உள்ளே வருவதற்கு முறையான வழி இருக்கும் போது, சுவற்றிலிருந்து குதிப்பது முறையில்லை.”

“முறையான வழி என்றெல்லாம் நீ கவலைப் படாதே அப்பு. உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ இங்கே செய்யலாம். வா.”

நான் சுவற்றிலிருந்து சுலபமாகக் குதித்தேன்.

“நீ எவ்வளவு புத்திசாலி!” மீண்டும் பாராட்டினாள். தன் மகன் உயிரோடு இருந்தால் என்னை மாதிரியிருப்பான் என்று ஞாபகப் படுத்திக் கொள்வது எவ்வளவு வேதனையானது.

வாழை மர வரிசையின் பின்னால் நின்று கொண்டு நான் மரமேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

’உனக்குக் கஷ்டமாக இருந்தால் வேண்டாம் ,அப்பு.”

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து என் துண்டில் போட்டுக் கொண்டு இறங்கினேன். வராந்தாவில் நின்று கொண்டிருந்த அவள் ’இங்கே கொண்டு வா’ என்று சைகை காட்டினாள்.

சுற்றிப் போய் வராந்தாவில் நின்று கொண்டு, துண்டை உதறினேன். விழுந்த இலைகளை நீவி ,அடுக்கினேன்.

“எவ்வளவு இளசாய் இருக்கிறது! எனக்கு வெற்றிலை போட வேண்டும் போலிருக்கிறது.” என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“கொஞ்சம் எடுத்துக் கொள்.”‘ நான் வேலையை முடித்த பிறகு சொன்னாள்.

“வெற்றிலையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்!” சொல்லி விட்டு நான் முற்றத்தில் இறங்கினேன்.

“நேற்று கேசவன் கல்யாணத்திற்குப் போனாயா?”

“ஆமாம்.”

“அது பிரம்மாண்டமான கல்யாணமா? நிறையப் பேர் வந்திருந்தார்களா?”

“சில பேர் வந்திருந்தார்கள்.”

“மதியச் சாப்பாடு என்ன?”

நான் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னேன்.

“நேற்று மணமகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்களா?’

நேரத்தைப் போக்கும் இன்னொரு விதமான பேச்சில் சிக்கிக் கொண்டேன் என்று தெரிந்தது.பல கேள்விகள் வர வேண்டுமே: மணமகளை வண்டியில்  கூட்டி வந்தார்களா? எங்கள் வீட்டில் எவ்வளவு பேர் கல்யாணத்திற்குப் போனோம்? மணப்பெண் ஏராளமான நகைகள் போட்டிருந்தாளா? இத்யாதி..அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முழுவதுமாக ஒரு நாள் வேண்டும். அந்த உரையாடலை நான் நிறுத்தியாக வேண்டும். 

அதற்குச் சிறந்த வழி, ஆமாம், இல்லை என்ற பதில்கள்தான்.

“உம்”

“அவள் கெட்டிக்காரியா?”

“உம்.”

“எப்படி உனக்குத் தெரியும்?”

“பார்க்க அப்படித் தெரிந்தாள்.”

“அழகானவளா?”

“உம்.”

“நல்ல நிறமா?”

“ஓரளவு. அவ்வளவு இல்லை.”

“என்னைப் போலவா?”

“உம்.”

“இல்லை, என்னை விட நிறமா?”

“உம்.”

“அதை ஓரளவு என்று சொல்வாயா? வயது என்ன?’

“ஓ, அது போல.”

“ஓ, அது போல.”அவள் சிரித்தாள்.

“மன்னியுங்கள். நான் வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருந்தேன். இருபது இருக்கலாம்.”

“என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்?”

“ஓ, ஒன்றுமில்லை.”

“சொல்லேன்.”

“அவர்கள் குடும்ப்த்தைப் பற்றி நினைத்தேன். பணக்காரர்கள்.”

“அவளுக்கு இருபது வயது. கேசவனுக்கு?”

“அவன் அவளை விடப் பெரியவன்.’

“அது நமக்கெல்லாம் சகஜம்தான்.இல்லையா? ஆங்கிலேயர்களுக்கு வேறு மாதிரி என்பார்கள்.” புன்னகைத்தாள்.

இங்கே ஓர் அந்தர்ஜனம் அபூர்வமாக தன் வீட்டிலிருந்தே வெளியுலகைப் பார்க்கிறாள், ஐரோப்பிய வழக்கங்களைப் பேசுகிறாள். அதை அவள் சொல்வதைக் கேட்கும் ஒருவருக்கு அவள் உலகம் முழுவதும் சுற்றியிருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வரும். ஆனால் நான் அவளிடம் நாகரிகமற்று நடந்து கொள்ளக் கூடாது. பாவம் அவள்! கணவன்,குழந்தை இல்லாதவள்.

“உனக்குப் பதினெட்டு வயதில்லையா?”

“உம்.”

“பதிமூன்று வயதில் எனக்குத் திருமணமானது. இருபது வருடங்களுக்கு முன்னால்.”

“உம்.”

“அப்போது அவருக்குப் பதினெட்டு வயது.”

“உம்.”

நெஞ்சு கதவில் அழுந்தியிருக்கும்படி நின்றிருந்தாள். தோள்களைச் சுற்றிக் கம்பளி போர்த்தியிருந்தாள். ஆனால் கழுத்தைச் சுற்றியிருக்கும் பெல்ட்  போல அதன் இரு முனைகளும் தோளைச் சுற்றிப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் தாலி அணியவில்லை என்பதை மறைக்கும் வகையில் அது மார்பை மட்டுமே மூடியிருந்தது.

இதற்கிடையே என் பூனைக் குட்டி அங்கு வந்து விட்டாள். படிக்கட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டு என்னை உற்றுப் பாரத்தாள். எங்கள் உரையாடலை சுவாரஸ்யமானதாக அவள் உணர்ந்திருக்க வேண்டும்.

“அழகான குட்டி, இல்லையா?” அதெரம்மா சொன்னாள். ”ஆனால் மிகப் பொல்லாததும் கூட. என்னுடன்தான் தூங்குவாள். சத்தமில்லாமல் வந்து,என்னைக் கட்டிக் கொள்வாள்..”

“குன்னத்தேரம்மாவிற்கு தன்னைப் பிடிக்குமென்று அவளுக்குத் தெரியும். உடல்களின் வெம்மை அவளுக்குப் பிடிக்கும்” துளைப்பது போன்று அவள் என்னைப் பார்த்தாள். ஒரு கணத்தில் அவள் முகம் கதவுக்குப் பின்னால் மறைந்தது.

“நான் புறப்படுகிறேன்.” நான் முற்றத்தைக் கடந்து வெளியேறினேன்.

நான் அதற்குப் பிறகு பூவன்பழத்தை சில நாட்கள் பார்க்கவில்லை.

எப்போது அவள் என்னை அழைத்தாலும்,” நான் இல்லையென்று அவளிடம் சொல்லி விடுங்கள். குழந்தைத்தனமாக பேச அவளுக்கு நிறைய நேரமிருக்கிறது. எனக்கு இல்லை.” என்று சொல்லி விட்டேன்.

ஒரு நாள், பூவன்பழத்திற்கு உடல் நலமில்லை என்று யாரோ சொன்னார்கள். அந்தச் சமயத்தில்தான் அந்த வீட்டின் முதிய நம்பூத்ரி மூன்றாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டார். மணப்பெண்ணைக் வீட்டிற்கு அழைத்து வரும் ’குடிவைப்பு’ அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லையென்றாலும் விருந்தாளிகளுக்கு விருந்து இருந்தது. நான் சாப்பிட்டு விட்டு எழுந்த போது, பூவன்பழம் என்னை அழைத்தாள். 

அவள் இன்னமும் குணமடையவில்லை. மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு வேளை என்னை அழைத்திருக்கலாம். அவளுக்கு உதவி செய்யக் குழந்தைகளில்லை. சுற்றிப் போய் முற்றத்தில் படியருகே நின்றேன். 

அவள் தன் அறையில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நீண்ட முடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க, கண்கள் பொலிவின்றி இருந்தன. புருவங்கள் மட்டும் லேசான பழைய சாயலோடு இருந்தன.

“சாப்பாடு உனக்குப் பிடித்ததா?”

“உம்.”

“எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. பசியேயில்லை.”

“உம்.”

“இங்கு அடுத்த விருந்து ஒரு ’பிண்டம்’தான்.”

“ஆமாம். அப்பு, அது ஒரு பிண்டம்தான்.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் குன்னத்தேரம்மா?’”

“குன்னத்தேரம்மா !…”

அவள் வலிந்து சிரிக்க முயற்சித்தாள்.

கடவுளின் அருள் என்று சொல்வது: செல்வம், அழகு, இளமை…

ஊமையாகிப் போனவளை உற்றுப் பார்த்தேன். மற்றவர்களைப் போல நானும் அவமரியாதையாக நடந்து கொண்டு, அவளைக் காயப்படுத்தி விட்டேனா? 

“நீ போகலாம் அப்பு” நான் எதுவும் சொல்வதற்கு முன்னால் அவள் 

கதவைச் சாத்தி விட்டாள்.


Poovanpazham – Karoor Neelaakanta Pillai

நன்றி :  Under The Wild Skies , An Anthology of Malayalam Short Stories,

National Book Trust, India  Editor K.Sachidanandan 

காரூர் நீலகண்டப் பிள்ளை மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர். இருபத்தி மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், மூன்று ஓரங்க நாடகத் தொகுப்புகள், பதினோரு குழந்தை இலக்கியத் தொகுப்புகள் இவருடைய பங்களிப்பு. மோதிரம் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காகவும், ஆனைக்காரன் என்ற சிறுவர் இலக்கியத்திற்காகவும் கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.                       

கைகொட்டிக்களி—திருவாதிரையின் போது ஆடப்படும் ஒருவகை நடனம்
அந்தர்ஜனம்—வீட்டிற்குள்ளேயே இருக்கும் நம்பூத்ரி பெண்களைக்
குறிப்பிடுவது.
அதேரம்மா— பின் தங்கிய வகுப்பினர், மூத்த நம்பூத்ரிப் பெண்களை
அழைத்தல்
குன்னத்தேரம்மா— பின் தங்கிய வகுப்பினர், நடுத்தர வயது நம்பூத்ரிப்
பெண்களை அழைத்தல்.
குடிவைப்பு— நம்பூத்ரி இனத்தவரிடையே மணமகளை, மணமகன் வீட்டிற்கு
அழைத்து வரும் சடங்கு.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.