வங்க & ஆங்கில மூலம்: ரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்
பிறைநிலா (The Crescent Moon)

பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்கள் மற்ற மொழிகளில் ஏன் இல்லை என்பது ஒரு நியாயமான சந்தேகம். குழந்தைக் கவிதைகளைப் பற்றிய மொழியாக்கங்களைப் படிக்கும்போது இவற்றைத் தேடுவதும் உண்டு. இவற்றைப்பற்றிய அனுமானங்களையும், சிந்தனைகளையும் பிறிதொரு சமயம் விவாதிக்கலாம்.
ரவீந்திரநாத் தாகூரின் ‘பிறைநிலா’ எனும் கவிதைத் தொகுப்பில் குழந்தையின் பலதரப்பட்ட சிந்தனைகளையும் செயல்களையும், அவற்றிற்குப் பெற்றோர் அளிக்கும் பெரிய மனிதத்தனமான விளக்கங்களையும், அன்புப் பெருக்கின் முழுக்காட்டல்களையும் காணலாம்.
பிறைநிலா கவிதைத் தொகுப்பினின்று விளையாட்டுப் பொருள்கள் எனும் தாகூரின் கவிதை. எந்தச் சிறிய பொருளையும் கண்டு மகிழ்ந்துவிடும் சிறுகுழந்தை. அதன் உள்ளப்பாங்கை அழகாக விவரித்து அதனை வளர்ந்த ஆறறிவு மனிதனின் எண்ணங்களோடு பொருத்திப் பார்க்கிறார்.
~o0o~
குழந்தாய்! புழுதியில் அமர்ந்துகொண்டு, உடைந்த சிறு குச்சியை வைத்துக்கொண்டு எத்தனை சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறாய்.
அந்த சிறு குச்சியுடனான உனது விளையாட்டைப் பார்த்து நான் புன்னகைக்கிறேன்.
தகப்பனின் புன்னகை குழந்தையின் அறியாமையைக் கண்டா? அல்லது சின்னச்சின்ன சமாசாரங்களில் மகிழ்ச்சியடையும் தன்மையைக் கண்டா?
ஒன்றுமே தெரியாத சிறு குழந்தையாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நம்மில் பலர் எத்தனைமுறை எண்ணியிருப்போம்?
‘கவலைகளே வேண்டாம். யாராவது இதனைப் பார்த்துக் கொள்வார்கள்,’ என்று இருந்து விடலாமல்லவா?
குழந்தையின் விளையாட்டும் அதனால் அவன் அடையும் சந்தோஷமும் தகப்பனுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதோ? ஆகவே ‘இவனாவது கவலைகளில்லாது தனது குழந்தைப் பருவத்தைக் கழிக்கட்டும்,’ எனும் அர்த்தம் நிறைந்த புன்னகைதான் எனக்கூட எண்ணத் தோன்றுகிறது.
மணிக்கணக்காக எண்களைக் கூட்டியபடி நான் எனது வரவு – செலவுக் கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறேன்;
நீ என்னைப்பார்த்து எண்ணுகிறாயோ என்னவோ: “என்ன முட்டாள்தனமான செயல், காலைப்பொழுதினை வீணாக்குவதற்கு.”
இந்த உலகில் வாழ உணவு, உடை, வீடு முக்கியம். ஆனால் மனித மனம் அதனால்மட்டும் திருப்தியடைந்து விடுகிறதா? ஒன்று கிடைத்ததும் அடுத்ததை விழைகிறது உள்ளம்; இதுவே மானிட இயற்கை; எதிர்காலத்திற்காகச் சேமிப்பதும், வருங்கால சந்ததியினருக்காகப் பொருள் சேர்ப்பதும் இயற்கை; அளவுக்கு மீறி ஆசைப்படுவதும் இதில் சேர்த்திதான் போலிருக்கிறது. ‘ஆசை அறுமின்கள்’ எனத் திருமூலர் சொல்வதனை யார் காதில் வாங்கிக் கொண்டோம்!
குழந்தையின் பாடு மிக எளிது. இன்றைய கவலையை நாளையே அல்லது அடுத்த சில மணி நேரத்திலேயே மறந்துவிடும் உள்ளம் அவனுக்கு உண்டு. தாயும் தந்தையும் சில செயல்களைச் செய்வதனால்தான் இவ்வுலகில் தாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என அவனுக்குத் தெரியாது. தெரிந்தாலும் புரியாது. காலையில் என்னோடு விளையாடாமல் வேறென்ன செய்கிறார்கள் இவர்கள்? என்றுதான் அவன் எண்ணுகிறான். அதைத்தான் தந்தை தனது கணிப்பிற்கேற்ற வண்ணம் தான் செய்யும் செய்கைகள் முட்டாள்தனமாக உள்ளன எனத் தன்னைப்பற்றிக் குழந்தை என்னுவதாக நினைக்கிறாரோ?
குழந்தாய்! நான் சிறு குச்சிகளிலும், மண்ணால் செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களிலும் உள்ள கலைவடிவான ஆர்வத்தை மறந்துவிட்டேன் போலுள்ளது.
நான் விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தேடியலைகிறேன், தங்கத்தாலும் வெள்ளியாலுமான உருண்டைகளைச் சேகரிக்கிறேன்.
ஒரு சிறு விளையாட்டு சாமான் குழந்தைக்கு எத்தனை களிப்பைத் தருகிறது. உணவுகூட வேண்டாம். மண்ணால் செய்யும் வீடுகளும், ஓலையால் செய்யும் ஊதல்கள், காற்றாடிகள் ஆகியவையும் அவனுடைய பெரும் பொக்கிஷங்கள். இவ்வாறு தொடங்கும் சிறு விளையாட்டுகள் பல மனிதர்களிடம் பெரிய அளவில் வளர்ந்து கலை உணர்வாகப் பரிணமிக்கின்றன. ஓவியம், இசை, நாட்டியம் இவையனைத்துமே குழந்தைப்பருவ நிகழ்வுகளின் தொடர் வடிவங்கள் தாம் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து அதுபோல சமையல் செய்வதும், பாடுவதும், ஆடுவதும், விளையாட்டாக ஓவியம் வரைவதும், இலைகளாலும் மண், கற்களாலும் விருந்து படைப்பதும் (பிள்ளைத்தமிழில் சிற்றில் இழைத்தல்) “போலச்செய்தல்’ எனும் செய்கையே எனக் கூறுவார்கள். ஆனாலும் பெரியவர்களின் செயல்களை சிறு குழந்தைகள், அவர்கள் வளர்ந்த பின்னரும் தொடர்ந்து செய்கிறார்கள்; ஆனால் அந்தச் சிறுபருவச் செயல்களை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்து செய்கிறார்கள் எனக் கொள்ளலாமா? அதில் என்ன தவறு?
விவரம் தெரிந்தபின் தங்கமும் வெள்ளியும்தாம் மதிப்புயர்ந்த பொருட்கள்; இவற்றை எத்தனைக்கெத்தனை சேர்க்கிறோமோ, அத்தனை நன்மை உண்டு என எண்ணுகிறோம். இது உலகவழக்கு. ஆசை ஒரு அளவில் நிற்பதில்லை. இவையே நமது விளையாட்டு, சேகரிக்கும் பொருள்கள். விலையுயர்ந்த பலவிதமான கைக்கடிகாரங்களைச் சேர்த்து வைப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். பலவிதமான நகைகள், வாகனங்கள், நம் வசதிக்கும் விருப்பத்திற்குமேற்ப சேர்த்துக் கொள்கிறோம். இவற்றைத் தேடி அலைகிறோம். இதுதானே உண்மை?
நீ என்ன பொருள் உனக்குக் கிடைக்கிறதோ அதனால் உனது மகிழ்ச்சியான விளையாட்டுகளை உருவாக்கிக் கொள்கிறாய், நான் எனது நேரத்தையும் முயற்சியையும் என்னால் அடைய முடியாத பொருள்களில் விரயம் செய்கிறேன்.
நான் விளையாடுவதும் விளையாட்டு ஒன்றினையே என்பதையே மறந்துவிட்டு, எனது வலுவற்ற படகில் நான் ஆசை என்னும் கடலைக் கடக்க இயலாமல் தத்தளிக்கிறேன்.
இவற்றை உணர்ந்து பச்சாதாபம் எல்லை மீறும்போது தந்தை எண்ணுகிறார்: ‘குழந்தை கொடுத்து வைத்தவன்! கையில் என்ன பொருள் கிடைத்தாலும் அதனால் ஒரு விளையாட்டை உண்டுபண்ணிக் கொள்கிறான். கடற்கரை மணலின் கிளிஞ்சல் அவனுக்குப் பெருவியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பழந்துணியால் பாட்டி செய்து கொடுக்கும் பொம்மை குட்டிப் பேத்திக்கு பேரானந்தத்தை உண்டாக்குகிறது. ‘நான் மட்டும் ஏன் அடைய முடியாத ஒன்றினை இலக்காகக் கொண்டு அலைகிறேன்?’ எனத் தந்தை எண்ணுகிறார். தன் நேரத்தையும் முயற்சியையும் விரயம் செய்வதாக உணர்கிறார்.
அது சிறுபிள்ளை விளையாட்டு; இது பெரியவர்கள் விளையாட்டு போலும். தாகூரே இன்னொரு கவிதையில் கூறியிருப்பதுபோல ‘இந்த உலகின் விழாவிற்கான விருந்தாளியாக நான் அழைக்கப்பட்டேன். விழா முடிந்துவிட்டது; விடை பெற்றுக் கொள்கிறேன்.’ விழாக் கொண்டாடும் உலகில் நாம் செய்ய வேண்டிய அல்லது விளையாட வேண்டிய விளையாட்டுகள் இவை என்றுதான் எண்ண வேண்டும். என்ன செய்தும் என்ன, ஆசை எனும் பெருங்கடலைக் கடக்க முடியவே இல்லையே! ‘நான்’ எனப்படும் இந்தப் படகிற்கு அதற்கான வலுவும் வேகமும் இல்லையே! எனும் ஏக்கம் நம் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது.
~o0o~
இதனைத்தான் தாகூர் தமது அழகான கவிதையில் குழந்தையின் சின்னஞ்சிறு விளையாட்டாகக் கூறுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் மேலும் சுவாரசியமான பொருள் காணலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
