யமுனை சீராகப் பாய்கிறது

மலையாள மூலம் : பி.கேசவ்தேவ்

ஆங்கிலம்                : டாக்டர் கே.ராகவன் பிள்ளை

தமிழாக்கம் : தி.இரா.மீனா

எல்லோருக்கும் அந்தக் காதலைப் பற்றித் தெரியும்: இதற்கு மேலும் அதை மறைப்பது இயலாதது. தவிர, மறைப்பதற்கான தேவையோ அல்லது விருப்பமோ அவர்களுக்கில்லை.

அவர்களின் காதல் கல்லூரியின் ஒழுங்கை மீறும் வகையில் இல்லை; சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவுமில்லை. எல்லைக்கு உட்பட்டதாக கௌரவமாகவே அது வளர்ந்தது.

மதுவும், ரவியும் இளம் பருவத்துத் தோழர்கள். மது காதலனாகவும், ரவி கவிஞனாகவும் வளர்ந்தார்கள். இருவரும் கல்லூரிக்குச் சேர்ந்தே போவார்கள். எல்லோருக்கும் முன்பாகவே போய் விடும் அவர்கள், வராந்தாவின் கல் தூணருகே நின்று கொண்டு அவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அவள் எப்போதும் வகுப்புகள் ஆரம்பிக்கும் சில கணங்களுக்கு முன்னால் தான் தனியாகக் கல்லூரிப் போர்டிகோவிற்குள் நுழைவாள்.

அவளைப் பார்ப்பதற்காகவே மற்ற மாணவர்களும் கூட்டமாக நிற்பார்கள், ஆனால் வேறு எதையோ பார்ப்பது போன்ற பாவனையில். அவர்கள் தன்னை வெறிப்பதை அறிந்தவளாகக் கூச்சத்தோடு அவள் கேட்டைக் கடந்து போவாள். அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் மௌனம் வியாபிக்க எல்லோரும் அமைதியாக நிற்பார்கள். 

இடதுகை மார்போடு புத்தகங்களை அணைத்திருக்க, வலதுகை காற்றினால் முகத்தில் வந்து விழும் சுருட்டை முடியை நீவிச் சரிப்படுத்த, அவள் வராந்தாவிற்குள் வருவாள். அரையாக மூடிக் கனவில் மிதக்கும் அவள் கண்கள், வராந்தாவின் நெடிய வரிசையை நோக்கிப் பாயும். பிறகு ஒரு கனவு கண்டதைப் போல விரியும்.

அந்த நெடிய வரிசையில் இரண்டு ஜோடி விழிகள் அவளுடைய வரவேற்பிற்குக் காத்திருக்கும். காதலன் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான்; கவிஞன் ஒரு முறை பார்த்து விட்டுத் தன் பார்வையை விலக்கிக் கொள்வான். காதலனும் ,கவிஞனும்! ’யமுனை சீராகப் பாய்கிறது ’ என்ற தலைப்பில் ரவி ஒரு கவிதை எழுதினான். ஆமாம். யமுனா— அதுதான் அவள் பெயர். கல்லூரி இலக்கியக் கூட்டத்தில் அந்தக் கவிதை வாசிக்கப் பட்டது :

ஆறு மலைப் பாதையில் தாவிக் குதித்து கீழிறங்குகிறது. சில சமயங்களில் வளைந்தும், தவழ்ந்தும். சில சமயங்களில் மெதுவான, கள்ளத்தனமான முணுமுணுப்பாக. சில சமயங்களில் நுரைத்தும், மூச்சிரைத்தும். ஏதோ காட்டு விலங்குகளுக்கு பயந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்துடன். படிப்படியாக, மலைகளின் அடியைத் தொட்டு மெதுவான முணுமுணுப்பில் தன் பாடலை பயமில்லாமலும், இயல்பாகவும் பாடுகிறது என்பது கவிதை. 

எப்போதும் குளிர்ச்சியான, பளிங்காக மின்னுகிற சிறிய ஆற்றின் தண்ணீரை எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள்ளிறங்க யாருக்கும் தைரியமில்லை. அதன் அழகு எல்லோரையும் கவர்ந்தது. ஆனால் அதன் தூய்மை தார்மீக பயத்தை ஏற்படுத்தியது. 

வசந்தத்தில் இந்த யமுனை எங்கெங்கே பாயும்? என்று கவிஞன் கேட்டான். அது எங்கே போகிறதென்று எல்லோருக்கும் தெரியும்.’அது எங்கே வேண்டுமானாலும், எந்த இலக்கிலும் பாயட்டும். அதனுடைய சீரான ஓட்டத்திற்கு குறுக்கே நாம் நிற்க வேண்டாம். அதனுடைய இசை, லயம், நீரோட்ட அழகு ஆகியவை மட்டுமே நமக்குச் சொந்தம்.’ என்று கவிதை இருந்தது.

பார்வையாளர்களைக் கவிதை கட்டிப் போட்டது. ஆனால் கவிஞன் மட்டும் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் .

யமுனா தலைகுனிந்து நிற்க, மது சிரித்தான்.

இந்தச் சம்பவம் மூலமாக வெளிப்பட்ட கலை நயமான படைப்பு நிழலடிப்பானது. ரவி, யமுனா இடையேயான காதல் விரைவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின் மறக்கவோ, ஒதுக்கவோ பட்டது. அதற்குப் பதிலாக ரவியின் கவிதை எல்லோராலும் ரசிக்கப்பட்டு, ரவி மாணவர் உலகத்தின் கதாநாயகனானான்.

யமுனை சீராகப் பாய்கிறது— இந்த வார்த்தைகள் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்கள், மேஜைகள் மற்றும் சுவர்கள், வகுப்பறைகள், மாணவர்கள் விடுதியின் சில பகுதிகள் என்று எல்லா இடங்களிலும் இடம் பெற்றது.

கவிதையின் இந்தக் குறிப்பிட்ட வரிகளை மாணவ ,மாணவிகள் மனதில் பதித்துக் கொண்டார்கள்; கல்லூரி வளாக மாமரத்தினடியில் அது பாடப்பட்டது. வகுப்பறைகளிலும் அது எதிரொலித்தது. குளியலறைகளிலும், காண்டீனிலும் அடிக்கடி கேட்டது.

புத்தகங்களை மார்போடு அணைத்தபடி, ஒரு கையால் கன்னத்தில் விழும் சுருட்டை முடியைச் சரிப்படுத்தியபடியும் யமுனா தினமும் கல்லூரிக்கு வந்தாள். வராந்தாவின் தூணருகே உள்ள தன்னுடைய ’கனவைப்’ பார்த்தபடியே வருவாள். கண்களில் காதல் பொங்க மது அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்; ரவி ஒரு முறை பார்த்து விட்டுக் கண்களை விலக்கிக் கொண்டு விடுவான்.

யமுனாவும் சிரிப்பாள், அது வெள்ளை மேகத்தைத் திரையாக்கிக் கொண்டிருக்கும் நிலா வெளிச்சம் போல மர்மமாக இருக்கும்.

அந்தச் சீரான ஓட்டத்திற்கு யாரும் தடையாக இல்லை. பாடலின் லயம் யாரையும் சோர்வாக்கவில்லை. அந்த ட்யூனிற்கு யாரும் போலியைக் கற்பிக்கவில்லை.

மது அழகான, ஆரோக்கியமான, பணக்கார இளைஞன். அவர்கள் ஒருவருக்கொருவர் என்று உருவாக்கப்பட்டவர்கள் என்பது போல இருந்தார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்தச் செய்தியால் கல்லூரியில் யாரும் ஆச்சர்யப் படவில்லை. யமுனை சீராகப் பாய்கிறது பாடலைப் பாடி எல்லோரும் வாழ்த்தினார்கள்.

தேர்வுகள் முடிந்தன. வெற்றியின் நம்பிக்கைகள், தோல்வி பயங்கள், கணக்கற்ற நினைவுகளோடு மாணவர்கள் கலைந்தனர்.

ரவிக்கும் பல ஞாபகங்கள் — சில இனிமை, சில கசப்பு என்று சிரிப்பும், அழுகையும் கலந்த நிகழ்வுகள்.

சோகமான ஒரு ட்யூனை விசிலடித்தபடி அவன் கிளம்பத் தயாரானான். புத்தகங்கள், படுக்கை என்று எல்லாமும் தயாராகக் கட்டப்பட்டிருந்தன. ஆனால் மனதில் ஏதோ ஒன்றை மறந்தது மாதிரியான ஓர் உணர்விருந்தது.

ஜன்னலினருகே நின்றான். தொலைவில், கிழக்குத் திசையிலான கருநீலக் குன்றுகள் தெளிவான நீல வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. கருநீலத்திற்கும், தெளிவான நீலத்திற்கும் இடையிலான கோட்டை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு தட்டப்படும் ஒரு மிக மெல்லிய ஓசை. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று …..என தட்டப்படும் தன்மை. ரவி மிக மெதுவாகக் கதவின் அருகில் நகர்ந்து, திறந்தான். 

’யார்’ என்று கேட்டு, ஆச்சர்யத்தில் உறைந்தான். அது ஒரு கனவு என்பது போல ’யமுனா, யமுனா ’என்று முனகினான். காலைப் பின்னுக்கிழுத்து நடந்து ஜன்னலருகே நின்றான். ’யமுனை சீராகப் பாய்கிறது யமுனை’ என்று முனகிக் கொண்டிருந்தான்.

மூச்சு விட முடியாதது போல முகம் முழுவதும் வியர்வைத் துளிகள் பெருக அவள் அறைக்குள் நுழைந்தாள். சுருண்டிருந்த தலை முடியை நீவிக் கொண்டு, வியர்வையைத் துடைத்தபடி, ஆதரவு தேடுவது போல மேஜையில் சாய்ந்து நின்று கொண்டாள். திடீரெனத் தலையைக் குனிந்து, அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

’யமுனை சீராகப் பாய்கிறது ’ கனவிலிருப்பவன் போல ரவி மீண்டும் முணுமுணுத்தான்.

யமுனா நிமிர்ந்து பார்த்தாள் ;ஆற்றிலிருந்து ஒரு பாடல் முணுமுணுப்பாக எழுந்தது.

“சீராகப் பாய்ந்த வண்ணமிருக்கிறது. ஆழ் கடலின் அலைகளோடு கலக்க ஆறு இங்கே காத்திருக்கிறது.” அவள் பெருமூச்சு விட்டாள். கூந்தல் தளர்வாகி முதுகில் சிற்றலைகளை உருவாக்கியது. “ஆறு,கடல் இரண்டையும் நான் வாழ்த்துகிறேன்.” ஜன்னல் கம்பிகளை இறுக்கியபடி ரவி சொன்னான். 

“நான் அனுமதி கேட்க இங்கே வரவில்லை” முகத்தைச் சுருக்கிக் கொண்டு உறுதியாகச் சொன்னாள். 

“கடலின் அலைகளோடு அமிழ்ந்து விட வேண்டுமென்று வந்திருக்கிறீர்கள்; மதுவின் தழுவலில் பரவசம் தேடுகிறீர்கள். அப்படித்தானே? ஆனால் அவன் இப்போது இங்கில்லை.” சிரித்துக் கொண்டே இரக்கத்தோடு சொன்னான்.

“அதனால்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.” பார்ப்பதைத் தவிர்த்தாள். ரவி நடுங்கினான்.

“யமுனை சீராகப் பாய்கிறது” முணுமுணுத்தான்.

’”ஆமாம். கடலை நோக்கி, கடலின் அலைகளை நோக்கி“ அவனைப் பார்த்தபடி தீவிரமாகச் சொன்னாள்.

“இந்தச் சிறிய அறையில்….” தன் வார்த்தைகளை முடிக்காமல் ரவி உடைந்து, ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

“ஆமாம். இந்தச் சிறிய அறையில் அந்தக் கடல் தனது உன்னத அலைகளை அடக்கி வைத்திருக்கிறது.” அவனது வாக்கியத்தை அவள் முடித்து வைத்தாள். திடீரென்று தலையைக் குனிந்து கொண்டு அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

“கடலின் அலைகளில் கலந்து, அந்தத் தோள்களில் சாய்ந்திருக்க..” வார்த்தைகளின்றித் திணறினாள்.

’யமுனா!  அவன் குரல் நடுங்கியது. கால்கள் அவனை முன்னே இழுத்தாலும், கைகள் ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றியிருந்தன. ’ரவி’ அழைத்த போது, அவள் குரலும் நடுங்கியது.

ஒரு கணத்தில் அவள் அவன் தோள் அணைப்பில் இருந்தாள். ஆறு, கடல் அலைகளைத் தழுவியது.

அமைதி.. முகங்கள் அருகருகே; அவள் சுவாச மணத்தில் அவன் சுவாசிப்பு. இதழ்களின் சந்திப்பு. திரை விலகிய நிலவொளியாய் அவள் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை; அவன் முகம் கவிழ அவர்கள் பிரிந்தார்கள். அவள் மேஜையை நோக்கிப் போக, அவன் ஜன்னலை நெருங்கினான்.

அவள் கண்களில் ஒரு திருப்தி வெளிப்பட்டது. கனவு விலகி, ஓர் அசாதாரணமாக நிலையில் கண்கள் ஒளிர்ந்தன. அந்த விழிகள் வெற்றியின் பதாகைகள்.

’ரவி’ அவளுடைய மென்மையான குரல் அமைதியை உடைத்தது. அவன் எந்த பதிலும் சொல்லாமல் ஜன்னலினூடே தொலை தூரப் பார்வையுடன் அமைதியாய் நின்றான். கிழக்கு மலைகள் அடிவானத்தைத் தொட்டன. கரு நீலம் வெளுத்த நீலத்தை முத்தமிட்டது.

“எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வர வேண்டும்.” அவளுடைய இனிய குரல் மீண்டும் அமைதியை உடைத்தது.

ரவி திகைத்துப் போய் அவளைப் பார்த்தான். அமைதியும் ,உறுதியும் அந்த முகத்தில் வெளிப்பட்டன. தளர்ந்திருந்த லேசை இறுகக் கட்டிக் கொண்டாள்

“நீங்கள் கண்டிப்பாக எங்கள் திருமணத்திற்கு வர வேண்டும். உங்கள் முன்னிலையில் தான் நான் அவர் மனைவியாக வேண்டும்.”

உறைய வைக்கும் குளிர் அலை அந்த அறையில் பரவியது. அந்தக் குளிர் அலையில் மரத்துப் போய் ரவி ஒரு கற்சிலையாய் நின்றான்.

“நீங்கள் வர வேண்டும். வருவீர்கள் அல்லவா?” உறுதியான குரலில் கேட்டாள்.

“இது நிகழ்ந்த பிறகுமா?” சிலை பேசியது.

“ஆமாம்.” அவள் குரல் இன்னும் உறுதியானது.” ஆமாம், இது நடந்த பிறகுதான். இந்த ஆறு, கடல் அலைகளுக்குள் நுழைந்த பிறகு ஆமாம். உங்கள் தோள்களில்….” அவள் உடைந்து போய் தலையைக் குனிந்து கொண்டாள். “நீங்கள் கண்டிப்பாக எங்கள் திருமணத்திற்கு வர வேண்டும். உங்கள் முன்னிலையில் தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்.” அவள் தலையை உயர்த்தி, நெஞ்சு குலுங்க மீண்டும் ஆணையிட்டு நின்றாள். கடல் அலைகளுக்குள் மட்டும் அவள் நுழையவில்லை, அவற்றின் உச்சியிலும் வெற்றிகரமாக அவள் நடனமாடியது போலிருந்தது.. பிறகு ஒரு கை தேர்ந்த மந்திரவாதி போல, கண்கள் அவன் மீது பதிந்திருக்க அவனை நோக்கி மிக மெதுவாக நகர்ந்தாள்—இல்லை அந்தக் கற்சிலையை நோக்கி. அவள் புன்னகைக்க, சிலையும் புன்னகைத்தது.

“நீங்கள் வருவீர்களா?” அவள் கேட்டாள்.

“எங்கே? எதற்கு ?” சிலை முணுமுணுத்தது.

“எங்கள் திருமணத்திற்கு.” சொன்னாள்.

சிலையின் கைகள் நகர்ந்து, முகத்தைக் கடுமையாகத் தேய்த்துக் கொண்டன. கண்களில் ஓர் ஓளியும்,முகத்தில் பாவனைகளும் வெளிப்பட்டன. சிலை பேசியது : “சில கணங்களுக்கு முன்னால் கடல் அலைகளோடு கலந்து விடக் காத்திருந்து, அடக்க முடியாத உணர்வுகளோடு என் கைகளுக்குள் ஒருவர்…” அது சொன்னது.

“முடிவடையாத உங்கள் வார்த்தைகள் ! ” மர்மமான புன்னகையோடு அவனைக் கேலி செய்தாள். “ நிறுத்தாதீர்கள் ரவி. நிறுத்தாதீர்கள். என் வாழ்க்கையின் அந்தக் கணங்களை விவரியுங்கள், என் காதல் அதன் உச்சத்தை அடைந்த அந்தத் தருணம்..” உற்சாகமான தொனியில் சொன்னாள்.

“விவரித்துச் சொல்லி அதை இறவாத கவிதையாக்குங்கள். உங்களால் மட்டும் தான் அது முடியும் ரவி. நிறுத்தாதீர்கள், ரவி நிறுத்தாதீர்கள். அதைப் பற்றிப் பாடுங்கள்.” அவள் தொடர்ந்தாள்.

ரவிக்கு உடல் நடுங்கியது. ஜன்னல் கம்பிகளைப் பிடித்த பிடி தளர, அவளை வெறித்தான்.

“நான் பாட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்! உங்கள் காதல் நிறைவை அடைய, என் மனதை துவம்சம் செய்த அந்தக் காட்சியை அழியாத கவிதையாக நான் பாட வேண்டும்? அப்படித்தானே?” முகம் உக்கிரமாக, அவன் பற்களைக் கடித்தான்.

“ரவி, உங்களுடைய அந்த நேர்மையான கோபத்தைப் பார்த்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு விமர்சகர், ஒரு கவிஞர். வாழ்க்கையை நீதி ,அநீதி என்று பிரித்துப் பார்ப்பீர்கள். அவசியமற்ற மதிப்புகளை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பீர்கள். நான் விமர்சகன் இல்லை. வாழ்க்கையை நான் அப்படியே எதிர் கொள்வேன் ; அதனோடு ஒட்டிக் கொள்வேன் ; நான்தான் வாழ்க்கை. ரவி, உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.. நீரோட்டத்திற்கு எதிராக நீங்கள் நீந்துவீர்கள்; நான் அதனுடன் நீந்துவேன்; நானேதான் நீரோட்டம்.. ரவி, நீங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து ,அதன் போக்கை மாற்ற முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நான்? அதை அப்படியே ஏற்கிறேன்.” யமுனா மென்மையாகச் சிரித்தாள். ஒரு ஞானியின் அமைதி அவள் முகத்தில் வெளிப்பட்டது..

ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உறுதியாகச் சொன்னாள். ரவி மீண்டும் சிலையானான். “ரவி, நீங்கள் வாழ்க்கையின் விமர்சகர். அதனால் பாடுகிறீர்கள், பாடி மகிழ்கிறீர்கள். உங்கள் கவிதைகள் எப்போதும் நிலைத்திருக்கட்டும். ஆனால் எனக்குப் பாட நேரமில்லை. நான்தான் வாழ்க்கை. நான் வாழ வேண்டும். எனக்குத் தேவை ஒரு கணவன், ஒரு கவிஞனில்லை.” ஆழமான மூச்செடுத்துக் கொண்டு மேலே தொடர்ந்தாள்.

“வாழ்க்கையில் எனக்குத் துணையாக வர வேண்டியவன் என் மீது அக்கறை உடையவனாகவும், அன்பு காட்டுபவனாகவும், என் குழந்தைகளுக்கு ஆதரவான தகப்பனாகவும், என் குடும்பத்தைப் பாதுகாப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.”

முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தவளாய், ரவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

சிலை அசையவில்லை. அவள் முகத்தில் இருந்த ஞானியின் அமைதி        மறைந்தது. கண்களில் ஓர் அசாதாரணமான ஒளி வெளிப்பட்டது.

“ரவி. நான் புறப்படுகிறேன். நீங்கள் திருமணத்திற்கு வருவீர்கள் அல்லவா?”

அவள் குரல் மீண்டும் இசையானது. சிலை ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அசையவுமில்லை.

புறப்படப் போனவள் திடீரெனத் திரும்பினாள். ”இன்னும் ஒரு முறை. ஒரு முறை,” உற்சாகமாகச் சொல்லி விட்டு ,சிலையை அணைத்துக் கொண்டாள். 

“இன்னும் ஒரு முறை. ஒரு முறை” சொல்லி விட்டுத் தன் முகத்தை  நிமிர்த்தினாள். அவர்களின் இதழ்கள் சந்தித்தன. ஒரு கணத்தில் தன்னை விடுவித்துக் கொண்டு, அணிகலன்கள் குலுங்க ,அந்த அறையை விட்டு ஓடினாள். சிலை அசைந்தது. அவன் கதவை நோக்கி நகர்ந்தான்.

யமுனா தோட்டத்தினூடே ஓடி, கதவைத் திறந்து கொண்டு சாலைக்குள் பாய்ந்து, மறைந்தாள்.

’யமுனை சீராகப் பாய்கிறது ’ ரவி முணுமுணுத்தான். தனக்கு முன்னாலிருந்த வெறுமையை வெறித்தான். சிறிது நேரம் நின்று விட்டு, கதவைச் சாத்தி, உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு ஜன்னலருகே நின்றான்.

ஈரப் பசையுடன் இருந்த உதடுகளைக் கர்ச்சீப்பால் அழுந்தத் துடைத்துக் கொண்டு, கர்ச்சீப்பைப் பார்த்தான். திரும்பவும் உதடுகளைக் கடுமையாகத் துடைத்து விட்டு கர்ச்சீப்பைக் கசக்கி ஜன்னலின் வழியே தூர எறிந்தான். தொலைவில் பார்க்க முயன்றான். அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. கண்கள் தளும்பின. கர்ச்சீப்பைப் பாக்கெட்டில் தேட அது இல்லை.

கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. பிறகு கண்கள் தெளிவாகத் தெரிய அவன் தொலைவில் பார்த்தான். கரு நீலம் இள நீலத்தை முத்தமிட்டது. கவிஞன் புன்னகைத்தான், ஒரு சோகப் புன்னகை! 


கேசவ பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட பி.கேசவ்தேவ் மலையாள முற்போக்கு இலக்கிய படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர்.  சிறுகதை, நாடகம், நாவல், திரைத்துறை என்று பல துறைகளிலும் பங்களித்தவர். ஓடையில் நின்னு, நடி கண்ணாடி, ஸ்வப்னம் , ஒரு சுந்தரியோட கதா ஆகியவை அவர் படைப்புகளில் சிலவாகும்.

சாகித்ய அகாதெமி ,கேரள சாகித்ய அகாதெமி, சோவியத் நேரு விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.

நன்றி: Malayalam Short Stories ,   An Anthology

Kerala Sahithya Academy, Trichur 1960


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.