மூலம் : லாரி கோல்வின்
தமிழாக்கம்: மைத்ரேயன்
முந்தைய பகுதி
காலை ஆறு மணிக்கு பானி நியர் அவளை எழுப்பினார். “பல் தேயுங்க,” என்றார். “ஆனா தண்ணி எதுவும் குடிக்காதீங்க. உங்களோட மன நிலை சிகிச்சைக்காரர் உங்களைப் பார்க்க வந்திருக்கார், அதனாலெ ரொம்ப நேரம் பண்ணாதீங்க.”
கதவு திறந்தது, பென்னி உள்ளே வந்தாள். “நாம இன்னிக்கி எப்படி இருக்கோம்?” என்று கேட்டாள். “விசித்திரமான கனவோ, இல்லை பொருந்தாம ஏதாவது எண்ணமோ இருக்கா?”
“நீ எப்படி இங்கே வந்தே?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“நான் உன்னோட மனநிலை மருத்துவர், இன்னக்கி உனக்கு செயற்கையா பிரசவத்தைத் தூண்டப் போறாங்களாம்னு சொன்னேன்,” பென்னி சொன்னாள். “உனக்கு வாழ்த்துச் சொல்லத்தான் வந்தேன். வீட்டுல என்னல்லாம் மாறுதல் செய்தோம்னு இதுல இருக்கு. க்ரேயைத் தொடர்ந்து கூப்பிட்டுகிட்டு இருக்கச் சொல்லு. உங்களை எல்லாம் இன்னக்கி ராத்திரி வந்து பார்க்கிறேன்.”
பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஃப்ரெட்டிக்கு, ஒரு பெரிய எலாஸ்டிக் இடுப்புப் பட்டையால் கர்ப்பத்துச் சிசுவின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் உணர்த்திகள் கொண்ட ஒரு மானி, வயிற்றின் மீது பொருத்தப்பட்டது. மருத்துவ மனையின் பச்சை நிறச் சீருடையுடன், முத்து மாலையும், மிகச் சீராகப் பூசப்பட்ட ரோஜா நிற உதட்டுச் சாயமும் பூண்டு, நாசூக்காகத் தோற்றமளித்த செவிலி ஒருவர், கதவு வழியே தலையை நீட்டினார்.
“ஹை!” என்று ஒளிரும் குரலில் பேசினார். “நான் ஜோஆன் கெல்லி. நீங்க இன்னிக்கி என்னோட பராமரிப்பில இருக்கப் போகிறீங்க.” தனி உரையாடலில் யாரும் அந்த மாதிரிக் குரலையோ, சிரிப்பையோ பயன்படுத்துவார்கள் என்று ஃப்ரெட்டியால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. “இப்ப சொல்லுங்க, எப்படி இருக்கோம் நாம? எல்லாம் சரி. நாம் இப்ப செய்யப் போறது இதெல்லாம்தான். முதல்ல, இந்த ஐ.வீ (இண்ட்ராவீனஸ்) குழாயை உங்க கையில போடப் போறோம். இது கொஞ்சம்தான் வலிக்கும், அப்றமா அதுல பிடோசின்னு அழைக்கப்படற ஒரு மருந்தை உங்களுக்குக் கொடுப்போம். டாக்டர் பெல் இதுல ஏதாவது உங்களுக்கு விளக்கிச் சொன்னாரா?”
“எல்லாத்தையும்,” என்றாள் ஃப்ரெட்டி.
“வசதியாப் போச்சு,” ஜோஆன் கெல்லி சொன்னார். “சிகிச்சைக்கு வரவங்களுக்கு நல்லா விஷயம் தெரிஞ்சிருக்கிறது எங்களுக்குப் பிடிக்கும். உங்க கையை நீட்டுங்க, ப்ளீஸ்.” ஃப்ரெட்டி தன் கையை நீட்டினாள். ஜோஆன் கெல்லி ஒரு ரப்பர் குழாயை அவளுடைய முழங்கைக்குக் கீழ் சுற்றினார். “நல்ல ரத்தக் குழாய்ங்க,” என்றார் அவர். “நீங்க அபாரமான போதையடிமையாக இருந்திருப்பீங்க.
“பிடோசினை இப்போ துவங்கப் போறோம்,” ஜோஆன் கெல்லி சொன்னார். “நீங்க எப்படி அதை எடுத்துக்கிறீங்கன்னு பார்க்கணும், அதனால மெதுவாத் துவங்கறோம். அப்பறமா உசத்திக்கலாம்.” ஃப்ரெட்டியை மேலும் கீழும் அவர் பார்த்தார். “ஓகே,” என்றார். “நாம ஆரம்பிச்சாச்சு. அடுத்த அறையில ஒரு பெண் முனகிக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருக்காங்க, நான் போய் அவங்களுக்குக் கொஞ்சம் பயிற்சி கொடுக்கணும். சீக்கிரமா திரும்பி வந்துடுவேன்.”

கடிகாரத்தைப் பார்த்தபடி ஃப்ரெட்டி படுத்துக் கிடந்தாள், அல்லது பிடோசினும், க்ளூகோஸும் தன் கைக்குள் சொட்டி இறங்குவதைப் பார்த்தாள். சௌகரியமான நிலைக்கு அவளால் வர முடியவில்லை, வயிற்றுக் குழந்தையின் இதயத் துடிப்புக்கான மானியோ அதிக சத்தம் போட்டது, கடுமையாக ஒலித்தது. அந்த எந்திரம் தன்பாட்டில் தகவல்களைப் பொழிந்தது.
அவளுடைய படுக்கையின் கால்மாட்டில் ஜார்டன் பெல் தோன்றினார். “விறுவிறுப்பான நாள்- ஆமாமா, ஃப்ரெட்டி?” என்றார் அவர். “க்ரே எப்போ வருவார்?”
“அவரை நிறைய நேரம் தூங்கச் சொல்லியிருக்கேன் நான்,” என்றாள் ஃப்ரெட்டி. “எல்லா நர்ஸுங்களும் இதெல்லாம் நிறைய நேரம் ஆகும்னு எங்கிட்டே சொன்னாங்க. இது வேலை செய்ய ஆரம்பிச்சா எனக்கு என்ன மாதிரி இருக்கும்?”
“எல்லாம் நல்லபடியா போச்சுன்னா, உங்களுக்கு நோவெடுக்க ஆரம்பிக்கும், அப்புறம் அது மேல மேல வலுவாப் போகும், பிறகு உங்களுக்கு உங்க குழந்தை கிடைச்சுடும்.”
“அவ்வளவுதானா எல்லாம்?”
”அனேகமா அப்படித்தான்.”
ஐந்து மணி வரையில் அதிகமாக எதுவும் நடக்கவில்லை. க்ரே படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவ்வப்போது, அவர் தகவல்களைச் சோதித்தார். நாள் முழுவதும் அவற்றை அவர் சோதித்துக் கொண்டுதான் இருந்தார். “அந்தக் குறுக்கம் அபரிமிதமாக இருந்ததா இந்த அளவுப் பட்டியல் காட்டறது,” என்றார் அவர். “உனக்கு எப்படி இருந்தது?”
“கடுமையா,” ஃப்ரெட்டி சொன்னாள். “ஆனா வலிக்கத்தான் இல்லை.”
“நீங்க இன்னும் ஆரம்ப கட்டத்துலயே இருக்கீங்க,” என்றார் அவளைச் சோதிக்க வந்த ஜார்டன் பெல். “நீங்க இன்னும் தொடர விரும்பினா நான் இருக்கிறேன், ஆனால் குழந்தை இன்னிக்கி இல்லாம நாளைக்குத்தான் பிறக்கும்னு தோணறது.”
“நான் களைச்சுப் போயிட்டேன்,” என்றாள் ஃப்ரெட்டி.
“நாம் இதப் பண்ணலாம்,” ஜார்டன் பெல் சொன்னார். “இப்படியெ தொடர்ந்து முயற்சிக்கலாம், இல்லை நாளைக்கு மறுபடியும் ஆரம்பிக்கலாம்.”
“நாளைக்கு,” என்றாள் ஃப்ரெட்டி.
தலை இடித்தபடி இருக்க, ஃப்ரெட்டி முழுதும் களைத்தவளாக விழித்தாள். மேகமூட்டமாக இருந்த வானத்தின் பிரகாசம் அவள் கண்களை வருத்தியது. இரவில் அவளுடைய ரத்த அழுத்தம் ஏறிப் போயிருந்தது. அதற்கான ஊசியைப் போட வேண்டாம் என்று அவள் வேண்டினாலும் – அதைப் போட்டுக் கொண்டு எப்படி பிரசவ முயற்சியைத் தொடங்க முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை – அது அவளுக்குக் கொடுக்கப்பட்டது. அது ஒரு ஓய்வில்லாத நீண்ட இரவாகப் போயிற்று.
வேறொரு பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள், ஒரு கண்ணைத் துண்டு ஒன்றால் மூடிக் கொண்டு தனியே படுத்திருந்தாள், குறைத் தூக்கம் போட முயன்றாள், அப்போது அவளருகே ஒரு புதிய செவிலி வந்தார். இவருக்கு சுருட்டை முடி, தடித்த இளஞ்சிவப்பு நிற வில்லைக் கண்ணாடி அணிந்திருந்தார், தோற்றத்தில் மிக இளமையாக இருந்தார். அவருடைய பெயரட்டையில், “ஈவா கோட்லீப்” என்று இருந்தது. அதன் கீழே “ஈவா: நாம் கொணர்கிறோம்” என்று வார்த்தைகள் இருந்த பித்தான் ஒன்றை அணிந்திருந்தார்.
“ஹை,” என்றார் கோட்லீப். “உங்களை எழுப்பறதுக்கு நான் வருந்தறேன், ஆனால் இன்னிக்கி நான் தான் உங்களோட நர்ஸ், உங்களுக்கு இன்னிக்கான வேலைகளை நான் துவக்கணும்.”
“மூளைல ஒரு பகுதியை வெட்டறத்துக்குதான் நான் இன்னிக்கி வந்திருக்கேன்,” என்றாள் ஃப்ரெட்டி. “நீங்க எனக்கு என்ன செய்யப் போறீங்க?”
“நான் ஒரு குழாயை இணைக்கப் போறேன்,” ஈவா கோட்லீப் சொன்னார். “அப்புறம் என்ன ஆகும்னு எனக்கு இன்னும் தெரியாது. உங்க ரத்த அழுத்தம் அதிகமா இருக்கிறதாலெ ஜார்டன் இங்கே வர வரைக்கும் நான் காத்திருக்கணுமாம்.” அவர் ஃப்ரெட்டியைக் கவனமாகப் பார்த்தார். “இது ரொம்ப கலவரமாகத் தெரியலாம்,”அவர் சொன்னார். “ஆனா இருக்கறத்துலேயே ரொம்ப மோசமா என்ன நடக்கும்னா, உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்வாங்க, அது அத்தனை கஷ்டமானதில்லே.”
ஃப்ரெட்டியுடைய தலைக்குள் தெறித்தது. “உங்களுக்கென்ன சுலபமாச் சொல்வீங்க,” என்றாள். “நான் தானே வெட்டப்படப் போறேன்.”
ஈவா கோட்லீப் புன்னகைத்தார். “நான் ஒரு பிரமாதமான நர்ஸ்,” என்றார், “நான் உங்களோடெயே இருக்கப் போறேன்.”
ஃப்ரெட்டியின் கண்களில் நீர் பொங்கியது. “நீங்க எதுக்கு அதைச் செய்யணும்?”
“பாருங்க, முதல்லே என்னோட வேலை இதுதான்,” என்றார் ஈவா. “ரெண்டாவது, நீங்க ஒரு நியாயமான ஆளாத் தெரியறீங்க.”
ஈவாவை ஃப்ரெட்டி உற்று நோக்கினாள். உடனடியாக, பரிபூரணமான நம்பிக்கை அவளுக்கு வந்தது. ஒருவேளை மருத்துவ மனைகளுக்கு வருவதும், அங்கே குழந்தைகள் பெறுவதிலும் இது ஒரு அங்கம் போலும். நம்மோடு தொடர்பு கொள்ளும் எவரோடும் நாம் துரிதமாக நெருங்கி விடுகிறோம்.
ஃப்ரெட்டியின் தலைக்குள் தெறித்தது. குழந்தையின் இதயத் துடிப்பைக் காட்டும் மானியோடு ஃப்ரெட்டியை அவர் இணைத்துக் கொண்டிருந்தார். அவளுடைய தொடுகையே உறுதியாகவும், தெளிவானதாகவும் இருந்தது, ஃப்ரெட்டிக்கு எதையும் பேச வேண்டாம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எந்திரத்தை அவர் ஓடவிட்டார், பழக்கமாகி இருந்த, குதிரை ஓடுகிற சத்தத்தை ஃப்ரெட்டி கேட்டாள்.
“இதோட சத்தத்தைக் குறைக்க ஏதாவது வழி உண்டா?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“நிச்சயமா,” என்றார் ஈவா. “ஆனா சில பேருங்க இது ஆறுதலா இருக்கிறதாச் சொல்றாங்க.”
காலை கடந்து போயிற்று, ஃப்ரெட்டியின் ரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டேதான் இருந்தது. ஈவா அவளோடு தொடர்ந்து இருந்தாள்.
“அவங்க எனக்கு என்ன செய்யப் போறாங்க?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“நான் என்ன நினைக்கிறேன்னா, உங்களோட ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறதுக்காக, அனேகமா அவங்க உங்களுக்கு மக்னீசியம் சல்ஃபேட்டைக் கொடுக்கப் போறாங்க, அதுக்கப்புறம் உங்களுக்கு அறுவை சிகிச்சை நடக்கும். ஜார்டன் அந்த வேலையை அருமையாச் செய்வார், என்னை நம்புங்க. உங்களுக்கு முதல்லே விளக்கிச் சொல்லாம எதையும் அவங்களை நான் செய்ய விடமாட்டேன், நாளைக்கிக் காலையில படுக்கையிலேர்ந்து எழுந்து, நடமாட ஆரம்பிச்சீங்கன்னா நீங்க நல்லாயிடுவீங்க.”
இருபது நிமிடங்கள் கழித்து, ஃப்ரெட்டி முன்னால் பார்த்திராத ஒரு டாக்டர் அவளுக்கு மக்னீசியம் சல்ஃபேட்டை ரத்தக் குழாயில் ஏற்றினார்.
“நீங்க இதைச் செய்திருக்க முடியாதா?” ஃப்ரெட்டி ஈவாவைக் கேட்டாள்.
“அது பெரிய-விஷயம்,” ஈவா சொன்னார். “டாக்டர்தான் அதைச் செய்யணும்.”
“என் வீட்டுக்காரர் வர வரைக்கும் அவங்களால காத்திருக்க முடியாதா?”
“அது ஆபத்தானது,” என்றார் ஈவா. “இதைச் செய்தே ஆகணும். நான் உங்க கூட இருக்கேன்.”
அந்த மருந்து அவளைச் சூடாக்கியது, உடலெல்லாம் சிவந்து போயிற்று, ஆனால் ரத்த அழுத்தத்தை உடனே கீழிறக்கியது. அடுத்த ஒரு மணி நேரம், ஃப்ரெட்டி தூங்க முயன்றாள். அவள் ஒருநாளும் இத்தனை களைப்பாக இருந்ததில்லை. அவள் வாயில் சப்புவதற்கு உடைத்த ஐஸ்கட்டிகளை ஈவா கொணர்ந்தார், கூடவே அவள் நெற்றியில் போட குளிர்ச்சியான துணியையும் கொணர்ந்தார். குழந்தை நெளிந்தது, அசைந்தது, இதயத் துடிப்பு மானி அதன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்தது. இறுதியாக, க்ரேயும், ஜார்டன் பெல்லும் வந்து, அவளுடைய படுக்கையின் கால்மாட்டில் நின்றார்கள்.
“ஓ.கே, ஃப்ரெட்டி,” என்றார் ஜார்டன் பெல். “இதுதான் நாள். அந்தக் குழந்தையை நாம வெளியில கொண்டு வரணும். மாக் சல்ஃபேட் பத்தி க்ரேயிடம் நான் விளக்கிச் சொல்லி இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யணும்னு ஒத்துக்கிட்டிருக்கோம்.”
“எப்ப?” என்றாள் ஃப்ரெட்டி.
” இன்னும் ரெண்டு பேரை அடுத்த ஒரு மணியில நான் சோதிக்கணும், அதுக்கப்புறம் நாம பந்தயத்துல இறங்க வேண்டியதுதான்.”
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” ஃப்ரெட்டி க்ரேயிடம் கேட்டாள்.
“அது சரிதான்,” என்றார் க்ரே.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” ஃப்ரெட்டி ஈவாவிடம் கேட்டாள்.
“இதைப் பண்ணித்தான் ஆகணும்,” என்றார் ஈவா.
ஓர் உண்மையான புன்னகையோடு ஜார்டன் நின்றார், கவர்ச்சியாகவும் மகிழ்வோடும் இருப்பதாகத் தோற்றமளித்தார்.
“அவர் ஏன் அத்தனை உற்சாகமா இருந்தார்?” அவர் வெளியே கூடத்தில் விரைந்து போனபிறகு ஃப்ரெட்டி ஈவாவிடம் கேட்டாள்.
“ஆபரேடிங் ரூமை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.,” என்றார் ஈவா. “அவருக்குக் குழந்தைப் பிரசவங்கள் ரொம்பப் பிடிக்கும். அதை இப்படிப் பாருங்களேன்: கடைசியா உங்களோட குழந்தை உங்களுக்குக் கிடைக்கப் போறது.”
கூடத்தின் மறுகோடிக்குத் தள்ளிச் செல்லப்பட வேண்டி, தள்ளுவண்டிப் படுக்கையில் ஃப்ரெட்டி படுத்திருந்தாள். அறுவை சிகிச்சை அறைக்கான சுத்தமான உடைகளை அணிந்து, க்ரே அவளருகே அவள் கையைப் பிடித்தபடி நின்றிருந்தார். சுத்திகரிக்கப்பட்டு, தண்டுவடத்தின் மேலுறை வழியே மயக்க மருந்து செலுத்தப்பட்டுத் தயாராக இருந்த ஃப்ரெட்டியால் தன் கால்களை உணர முடியவில்லை. “என்னை பாருங்க,” என்று க்ரேயிடம் சொன்னாள். “எங்கே பார்த்தாலும் ஒரே குழாயாச் செருகி இருக்காங்க. நவீன அறிவியலின் அற்புதம் நான்.” தன் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள்.
தன் தலையை அவளுடைய தலைக்கருகே கொணர்வதற்காக, க்ரே அந்த வண்டி அருகே குந்தி அமர்ந்தார். ஒரே நேரம் கவலைப்படுபவராகவும், களைத்துப் போனவராகவும், எதையோ எதிர்பார்ப்பவராகவும் தெரிந்தவர், அவள் தன் முகத்தை உற்று நோக்குவதைக் கவனித்தபோது புன்னகைத்தார், “எல்லாம் நல்லா நடக்கப் போறது,” என்றார். “ குட்டி வில்லியமா இல்லை குட்டி எல்லாவான்னு நமக்குத் தெரியப் போறது.”
தன் பயத்தை முச்சுக் காற்றால் ஊதித் தள்ள முனைபவளாக ஃப்ரெட்டி தான் மூச்சு விடுவதை நிதானமாக்கிக் கொண்டாள், ஆனால் தன் பங்குக்கு ஏதாவது பேச வேண்டுமென்று நினைத்தாள். “நாம உடலுறவே வச்சுகிட்டிருக்கக் கூடாதுன்னு நான் முன்னேயே நினைச்சேன்.” க்ரே அவள் கையைக் கெட்டியாகப் பிடித்தபடி சிரித்தார். ஈவா வாய்விட்டுச் சிரித்தார். “நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டுப் போயிடாதீங்க,” ஃப்ரெட்டி சொன்னாள்.
ஒரு ஊழியர் ஃப்ரெட்டியின் வண்டியை உருட்டிக் கொண்டு கூடத்தின் மறுபுறத்துக்குப் போனார். க்ரே ஒரு கையையும், ஈவா மற்ற கையையும் பிடித்திருந்தனர். பிறகு அவள் அறுவை சிகிச்சைக்கான சுத்தப்படுத்தலுக்காகப் போனபோது விலகினர்.
அவள் வெளிர் பச்சை நிறத்தில் இருந்த பெரியதோர் அறைக்கு இட்டுச் செல்லப்பட்டாள். மேல் விதானத்தில் ஒரு மூலையில் சாயம் உரிந்து கொண்டிருந்தது. அவள் தலைக்கு மேல் பெரும் விளக்கு ஒன்று தொங்கியது. மயக்க மருந்து மருத்துவர் வந்தார், அவள் காலைத் தட்டினார். “இதை உங்களால உணர முடியறதா?” என்றார்.
“அதை உணர்ச்சின்னு சொல்ல முடியல்லை,” ஃப்ரெட்டி சொன்னாள். தான் மூச்சு விடுவதைச் சீராக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.
“எக்ஸெலண்ட்,” என்றார் அவர்.
அப்போது அவள் கால்புறம் ஜார்டன் பெல் வந்தார், க்ரே அவளது தலைமாட்டில் நின்றார்.
ஈவா குனிந்தார். “இதை நீ வெறுப்பீங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் இப்போ உங்க கைகளை ஒட்டற நாடாவால கீழே ஒட்டப் போறேன். அதோட ஆக்ஸிஜன் முகமூடியை உங்க முகத்தில பொருத்தப் போறேன். குழந்தை பிறந்த உடனே அதை எடுத்துடுவோம். இது உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.”
ஃப்ரெட்டி ஆழமாக மூச்சிழுத்தாள். அறை மிகவும் சூடாக இருந்தது. அவளுடைய நெஞ்சின் மீது ஒரு திரை பொருத்தப்பட்டது.
“நீங்க அதைப் பார்க்காம இருக்கத்தான் இந்தத் திரை,” என்றார் ஈவா. “இதோ முகமூடி. இது உங்களுக்குப் பீதியைக் கொடுக்கலாம்னு எனக்குத் தெரியும், ஆனா சீரா மூச்சு விட்டுகிட்டே இருங்க. இதெல்லாம் ரொம்பவே வேகமா ஆயிடும், என்னை நம்புங்க.”
ஃப்ரெட்டியின் கைகள் நாடாவால் கட்டி மேஜையில் ஒட்டப்பட்டன, கால்கள் மரத்துப் போயிருந்தன, ஊடாகப் பார்க்கக் கூடிய மாதிரி ப்ளாஸ்டிக் முகமூடி அவள் வாய் மற்றும் மூக்கின் மேல் பொருத்தப்பட்டது. அவள் பயந்து போனாள், கத்த வேண்டுமென்று உணர்ந்தாள், ஆனால் அது முடியவில்லை. மாறாக காதரீன் வால்டென் அவளுக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சீராக மூச்சு விட்டாள். தீவிரமான பய அலை எழும்போதெல்லாம், மூச்சு விடுவதைக் கொண்டு அதை அடக்கினாள். க்ரே அவள் கையைப் பிடித்திருந்தார். அவருடைய முகம் வெற்றாக இருந்தது, மூக்குக் கண்ணாடியில் ஆவி படர்ந்து வெள்ளையாக இருந்தது. அவருடைய தலைமுடியை பச்சைக் குல்லாய் மூடியிருந்தது, நெற்றி ஈரமாக இருந்தது. அவர் கையை அவள் இறுக்குவதைத் தவிர, அவளால் அவருக்கு ஏதும் செய்ய முடியாமல் இருந்தது.
“இப்ப பாருங்க, ஃப்ரெட்டி,” என்றார் ஜார்டன் பெல். “உங்க வயித்து மேல ஏதோ குளிர்ச்சியாப் படறதா உங்களுக்குத் தெரியும். பேட்டாடைனை அங்கே பூசப் போறேன். சரி, இதோ ஆரம்பிக்கிறோம்.”
ஃப்ரெட்டி ஏதோ இழுக்கப்படுவதை மந்தமாக உணர்ந்தாள். நுரைக்கும் தண்ணீரின் ஒலியைக் கேட்டாள். அப்போது குழந்தை தன்னுள்ளிருந்து நழுவி எடுக்கப்படுவதை உணர்ந்தாள். க்ரேயைப் பார்க்கத் தலையைத் திருப்பினாள். அவர் கண்ணாடியில் ஆவி படர்ந்திருந்தது, அவர் கண்கள் கால் டாலர் காசு போல உருண்டையாக இருந்தன. உச்ச ஸ்தாயியில் கோபமான கத்தலைக் கேட்டாள்.
“இதோ உங்க பையன்,” என்றார் ஜார்டன் பெல். “இதொரு அழகான, ஆரோக்கியமான பையன்.”
ஈவா முகமூடியை ஃப்ரெட்டியின் முகத்திலிருந்து அகற்றினார்.
“அவன் முழுக்க ஆரோக்கியமா இருக்கான்,” ஈவா சொன்னார். “அந்த நுரையீரல்கள் எப்படி இருக்குன்னு கேளுங்க!” அவர் குழந்தையின் எடையைப் பார்க்கவும், இதர சோதனைகளைச் செய்யவும் எடுத்துப் போனார். “அவன் கச்சிதமா இருக்கான், ஆனால் அவன் கொஞ்சம் – அஞ்சு பௌண்டுகளுக்குக் கொஞ்சம் குறைவா இருக்கு எடை. சீக்கிரமாப் பிறந்த குழந்தைகளோட பராமரிப்பு அறைக்கு அவனை எடுத்துப் போகணும். அஞ்சு பௌண்டு எடை இல்லைன்னா அப்படிச் செய்யணும்னு ஆஸ்பத்திரியோட நடைமுறை.”
“அவனை எங்கிட்டே கொடுங்க,” ஃப்ரெட்டி சொன்னாள். தன் கைகளை விடுவித்துக் கொள்ள முயன்றாள், ஆனால் அவை பத்திரமாக ஒட்டிக் கட்டப்பட்டிருந்தன.
“அவனை உங்க கிட்டே கொண்டு வரேன்,” ஈவா சொன்னார். “ஆனா, அவன் இங்கேயே இருக்க முடியாது. ரொம்ப சிறிசா இருக்கான். குழந்தையோட நல்லதுக்காகத்தான் செய்யறோம். நான் உங்களுக்கு உறுதி தரேன்… இங்கே பாருங்க, அவன் வந்திருக்கான்.”
குழந்தை அவளுடைய நெற்றிக்கெதிராகப் பிடிக்கப்பட்டிருந்தான். அவளருகே வந்த அடுத்த கணம் அவன் கத்துவதை நிறுத்தினான். ஈரமாகவும், தோலின் நிறம் ஏறுமாறான திட்டுகளாகவும் கொண்டிருந்தான்.
“தயவு செய்து எங்கிட்டே அவனைக் கொடுங்க,” என்றாள் ஃப்ரெட்டி.
“அவன் நல்லா இருப்பான்,” ஈவா சொன்னார். பிறகு அவனை வெளியே எடுத்துப் போய் விட்டார்.
அடுத்த நாள் காலையில், நர்ஸைக் கூப்பிட மணியை அழுத்தினாள் ஃப்ரெட்டி, தன் கையில் இணைக்கப்பட்டிருந்த ரத்தக்குழாய் ஊசியை அகற்றச் சொல்லிக் கேட்டாள். இருபது நிமிடங்களில், அவள் படுக்கையை விட்டு எழுந்து, மெள்ள நடக்கத் தொடங்கினாள்.
“யாரோ என் இடுப்பு எலும்பை எல்லாம் நொறுக்கின மாதிரி இருக்கு எனக்கு,” என்றாள் ஃப்ரெட்டி.
“அதைத்தானே செய்திருக்காங்க,” என்றார் கூட வந்த செவிலி.
இரண்டு மணி நேரம் கழித்து, அவள் ஒரு சக்கர நாற்காலியில் இருத்தப்பட்டு, செவிலி ஒருவரால் எலவேட்டருக்குள் கொணரப்பட்டு, சிறுகுழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையத்துக்கு அழைத்துப் போகப்பட்டாள். கதவருகே, “நான் உங்களை உள்ளே தள்ளிகிட்டுப் போறேன்,” என்றார் அந்தச் செவிலி.
“என்னால நடக்க முடியும்,” ஃப்ரெட்டி சொன்னாள். “ஆனா உங்களுக்கு ரொம்ப நன்றி.”
உள்ளே, அறுவை சிகிச்சை அறைக்கான சோப் ஒன்றால் கைகளை நன்கு சுத்தம் செய்யச் சொன்னார்கள், பிறகு கிருமிகள் இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட மேலங்கி ஒன்றை அணிவித்தார்கள். பிறகு அவள் அந்தக் கூடத்தினுள் மெதுவாக, விறைப்பாக நடந்தாள். ஒரு சீனப் பெண் நர்ஸ் அவளை நிறுத்தினார்.
“நான் வில்லியம் டெலீயலின் அம்மா,” என்றாள் ஃப்ரெட்டி. “அவன் எங்கே இருக்கான்?”
அந்த நர்ஸ் கையிலிருந்த அட்டையிலிருந்த பெயர்ப்பட்டியலைச் சோதித்தார், ஃப்ரெட்டியை அந்தக் கூடத்தில் மேலும் உள்ளே போகச் சுட்டினார். பக்கவாட்டிலிருந்த ஓர் அறையிலிருந்த இன்னொரு நர்ஸ், தனிமைப்படுத்தும் பெட்டி ஒன்றைச் சுட்டினார் – பெரிய கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கூண்டு போன்ற அமைப்பு அது. அங்கு, ஒரு வெள்ளைத் துணியில், அவளுடைய குழந்தை படுத்திருந்தது.
அவன் குப்புறப்படுத்திருந்தான், ஆழ்ந்து தூங்கினான், அவனுடைய ஒரு சிறு கை அவன் முன்னே நீட்டப்பட்டிருந்தது. க்ரே தூங்கும்போது அளிக்கும் தோற்றத்தின் கச்சிதமான பிரதி போல இருந்தான். அவனுடைய முதுகில் ஐந்து செண்ட் காசு போன்ற உருக் கொண்ட தட்டுகள், அவை கம்பிகளால் உடல் உஷ்ணத்தையும், அவன் இதயத் துடிப்பையும், மூச்சு விடும் அளவையும் கணக்கிடும் மானிகளோடு இணைக்கப்பட்டிருந்தன. அந்த மானிகள் அவனுடைய தனிமைப்படுத்தும் பெட்டியின் மேல் ஒரு கருவியில் இருந்தன. அவன் நீளமாக, ஒல்லியாக, அழகாக இருந்தான்.
“சின்னக் கோழிக் குஞ்சு போல இருக்கான்,” என்றாள் ஃப்ரெட்டி. “நான் அவனைத் தூக்கிக்கலாமா?”
“ஓ, கூடாது!” என்றார் நர்ஸ். “இன்னும் கொஞ்ச நாளைக்கு முடியாது. அவனைக் கொஞ்சமும் அலுங்க விட முடியாது.” அவர் ஃப்ரெட்டியை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார், பிறகு சொன்னார், “ஆனா நீங்க ஜன்னலைத் திறந்து அவனைத் தொடலாம்.”
ஃப்ரெட்டி ஒரு படகுடைய ஜன்னல் போல இருந்ததைத் திறந்தாள், அவனுடைய காலைத் தொட்டாள். அவன் இலேசாக நடுங்கினான். மானிகளோடு அவனுக்கிருந்த தொடர்பை எல்லாம் கழற்றி விட்டு, அவனை அப்படியே அள்ளித் தன்னோடு அணைத்துக் கொள்ள வேண்டும் என்றிருந்தது ஃப்ரெட்டிக்கு. அவனுடைய கால் மீது தன் கையை இலேசாக வைத்தபடி, அவள் அங்கே அமைதியாக நின்றாள்.
அந்த அறை வெளிச்சமாக, சூடாக, சுறுசுறுப்பாக இருந்தது. செவிலியர்கள் வந்து போனார்கள், கைகளைக் கழுவினார்கள், பட்டியல்களைச் சோதித்தார்கள், குறிப்பு எழுதிக் கொண்டார்கள், க்ளூகோஸ் கரைசல் புட்டிகளை மாற்றினார்கள். அந்த அறையில் வேறு மூன்று குழந்தைகள் இருந்தனர். ஒரு குழந்தை மிகச் சிறியதாக இருந்தது, அவனுடைய தலையிலிருந்த ஒரு ரத்தக் குழாயுடன், உருச்சுருக்கப்பட்ட ரத்தக் குழாய் ஊடு ஊட்டமளிக்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது. வில்லியமின் தனிமைப் பெட்டியின் பக்கவாட்டில் ஃப்ரெட்டி நோக்கினாள். அங்கு ஒரு நீல நிற அட்டையில், க்ரேயின் கையெழுத்தில் சிறு எழுத்துகளில் “வில்லியம் டெலீயல்” என்றிருந்தது.
அன்று காலை முடிவில், க்ரே அவளுடைய அறைக்குள் வந்தார், ஃப்ரெட்டி கண்ணாடியால் மூடப்பட்டிருந்த ஒரு பம்பினருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
“இது பெயர் பெற்ற பம்ப். முலைப்பாலை எடுக்க உதவும் இது, மின்சாரத்தால் இயங்குகிறது, ஸ்விட்சர்லாந்து தயாரிப்பு.”
“சாலிஸ்பரி கதீட்ரலில் இருக்கும் மத்திய காலத்துக் கடிகாரத்தைப் போல இருக்கு,” அதன் கண்ணாடிக் குடுவைக்குள் உற்று நோக்கியபடி க்ரே சொன்னார். “நான் வில்லியமைப் பார்த்துட்டு வரேன். நான் நினைச்சதை விட நிறையவே நீளமா இருக்கான். நம்ம அம்மா அப்பாக்களையெல்லாம் கூப்பிட்டுப் பேசிட்டேன். அன்னிக்கி உன்னை விட்டுப் போனப்பறம் ராத்திரி பூரா ஃபோன்லெதான் பேசிக்கிட்டிருந்தேன்.” அவர் அவளிடம் செய்திகளின் தொகுப்பு ஒன்றைக் கொடுத்தார். “அவங்க இன்னும் அரை மணியில அவனுக்குப் பால் கொடுக்கப் போறாங்க.”
ஃப்ரெட்டி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஆரம்பத்தில் ஒவ்வொரு முலையிலும் அந்த பம்ப்பை மூன்று நிமிடங்களுக்குப் பயன்படுத்தும்படி அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அவளுடைய பால், வில்லியமுக்குக் கொடுக்கப்படப் போவதில்லை. மருத்துவர்கள், அவன் இன்னும் அதைக் குடிக்க இயலாத அளவு இளையவன் என்றார்கள். கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு திரவம் அளவாக அவனுக்குக் கொடுக்கப்படும், பிற்பாடு அவள் அவனைப் புட்டியிலிருந்து மாற்றித் தன்னிடம் பாலருந்தும்படி செய்ய வேண்டும். அது நடப்பதற்கான வாய்ப்பு மிக அரிது என்று அவளுக்குத் தோன்றியது.
அந்த நாள் கடந்து செல்கையில் அவளுடைய அறையில் புத்தகங்களும், பூக்களும் நிரம்பின, ஆனால் அவளோ தீவிர சிகிச்சை அறையில்தான் பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள். வில்லியமை அவளால் தொட முடிந்தது, ஆனால் எடுத்து அணைத்துக் கொள்ள முடியவில்லை. அவளை மருத்துவ மனையிலிருந்து அனுப்பும் நாளன்று, காலை எட்டு மணிக்கு வில்லியமுக்கு ஃபார்முலா கொடுக்கப்படும் நேரத்தின்போது ஃப்ரெட்டி அவனைப் பார்க்கப் போனாள். தன் வீட்டில் கீழே தோட்டத்தில் உள்ள பறவைகளைப் பார்த்தபடி ஆடும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனுக்குப் பால் கொடுப்பது எத்தனை அருமையாக இருக்கும் என்று எண்ணினாள். இப்போது வில்லியமுக்கு வீடாக இருந்த இடத்தில் காலையும் இல்லை, மாலையும் இல்லை. அவன் இருண்ட அறை ஒன்றில் இருந்ததே இல்லை, பறவைகளின் ஒலியையோ, போக்குவரத்தின் சத்தத்தையோ கேட்டதில்லை, அல்லது குளிர்ந்த காற்றின் ஸ்பரிசத்தை உணர்ந்ததில்லை.
வில்லியம் டயபரும் ஒரு டி சட்டையும் அணிந்து படுத்துக் கிடந்தான். அவனைப் பார்த்த கணத்தில் ஃப்ரெட்டியின் மனத்தில் உணர்ச்சி பெருகித் ததும்பியது.
“இன்னிக்கி நீங்க அவனைத் தூக்கிக்கலாம்,” என்றார் அங்கிருந்த நர்ஸ்.
“நிஜமாவா?”
“ஆமாம், நீங்களே அவனுக்குப் பாட்டில் பாலும் கொடுக்கலாம்.”
ஃப்ரெட்டி தன் தலையைக் குனிந்து கொண்டாள். மூச்சை இழுத்து நிதானமாக்கினாள். “இந்த சாதனங்களெல்லாம் அவன் மேலே இருக்கறப்பொ நான் எப்படி அவனைக் கையிலெடுத்துக்க?” என்றாள்.
“நான் உங்களுக்குக் காட்டறேன்,” என்றார் நர்ஸ். சாதனங்கள் இணைக்கப்பெட்ட கட்டுப்பாட்டுக் கருவியை அணைத்தார், தனிமைப் பெட்டிக்குள் கையை நீட்டினார், மென்மையாக வில்லியமின் மேல் பொருத்தப்பட்ட உணர்த்திகளின் ஒட்டு நாடாக்களைப் பிரித்து எடுத்தார். பிறகு அவனுடைய டயபரை எப்படி மாற்றுவது, டி சட்டையை அணிவிப்பது எப்படி, பிறகு பருத்திப் போர்வை ஒன்றில் எப்படிச் சுற்றிக் கொள்வது என்றெல்லாம் செய்து காட்டினார். ஒரு கணத்தில், அவன் ஃப்ரெட்டியின் கையில் இருந்தான்.
அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான், ஆனால் சிறு சிறு கத்தல்களை வெளிப்படுத்தினான், தன் மூக்கைச் சுளித்தான். அவளிடம் திரும்பிச் சாய்ந்து கொண்டு, அவளுடைய கழுத்தில் தன் முகத்தை அடக்கிக் கொண்டான். நர்ஸ் அவளை ஒரு சாய்ந்தாடும் நாற்காலிக்கு அழைத்துப் போனார், முதல் முறையாகத் தன் குழந்தையோடு அவள் அமர்ந்தாள். அவளைச் சுற்றி எங்கும் விளக்குகள் வெளிச்சத்தோடு பொங்கின. வானொலிப் பெட்டி இரைந்தது, ஒரு இனிமையான ஆண் குரல் பாடியது, “ஐ வாண்ட் யூ டு பி மைன், ஐ வாண்ட் யூ டு பி மைன், ஐ வாண்ட் டு டேக் யூ ஹோம், ஐ வாண்ட் யூ டு பி மைன்.”
வில்லியம் தன் கண்களைத் திறந்து இமை கொட்டினான். பிறகு கொட்டாவி விட்டான், அழத் தொடங்கினான்.
“அவனுக்குப் பசி,” என்றார் நர்ஸ், ஃப்ரெட்டியின் கையில் ஒரு சிறு புட்டியைக் கொடுத்தார்.
அவள் அவனுக்குப் புகட்டினாள், ஏப்பம் விடச் செய்தாள், தன் கைகளில் அணைத்துக் கொண்டு ஆட்டித் தூங்கச் செய்தாள். அந்த வாக்கில், அவளுமே உறங்கிப் போனாள், நர்ஸும், தன் வேலையிலிருந்து வந்திருந்த க்ரேயும், அவளை எழுப்பினார்கள்.
”இப்ப அவனை நீங்க உள்ளே வைக்கணும்,” என்றார் நர்ஸ். “அவன் ரொம்ப நேரமா வெளியில இருந்துட்டான், அவனை நாம தொந்தரவு செய்யக்கூடாது.”
“ அவனோட அம்மாவோட இருக்கறது தொந்தரவுன்னு நினைக்கவே மனசுக்கு வேதனையா இருக்கு,” என்றாள் ஃப்ரெட்டி.
“ஓ, அப்படி இல்லை!” நர்ஸ் சொன்னார். “நான் அப்படிச் சொல்லல்லை. அவனோட தனிமைப் பெட்டியில உஷ்ணம் சீரா கட்டுப்பாட்டுல இருக்கும்னு சொன்னேன்.”
மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்ட பிறகு, ஃப்ரெட்டி வில்லியமைப் பார்க்க தினம் பயணம் செய்ய வேண்டியாதாயிற்று. காலையில் இரண்டு பால் புகட்டல்களுக்குப் போவாள், வீட்டுக்குத் திரும்பி வந்து சிறிது உறங்குவாள், ஐந்து மணிப் புகட்டலுக்கு க்ரேயைச் சந்திப்பாள். அவர்கள் விரைந்தோடி இரவுணவு உண்டு விட்டு, எட்டு மணிப் புகட்டலுக்கு மருத்துவ மனைக்குத் திரும்புவார்கள். இரவு பதினோரு மணி புகட்டலுக்கும் ஃப்ரெட்டியை இருக்க விட க்ரே மறுத்தார்.
புதுப் பிறப்புச் சிகிச்சைப் பிரிவில் தலைமை வகித்த டாக்டர் எட்மண்ட்ஸை தினம் காலையில் அவள் பார்த்தாள். தடித்த சட்டகங்கள் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிந்த அவருக்கு மண் நிறத்தில் தலை முடி இருந்தது, அவர் உயரமாகவும், நிதானமாகப் பேசுபவராகவும் இருந்தார்.
“வேறெந்த சமயத்திலும் நான் இப்பொ சொல்லப் போறதைக் கேட்க உங்களுக்கு விருப்பமிராது,” என்று ஃப்ரெட்டியிடம் சொன்னார் அவர், “ஆனா உங்களோட குழந்தை ரொம்ப சலிப்பூட்டறவன்.”
“அதெப்படி சலிப்பூட்டறான்?”
“ரொம்ப. அவன் என்ன செய்யணுமோ அதைத்தான் செய்யறான்.” வில்லியம் அவன் வயதுக்கேற்ற வளர்ச்சிக் கோட்டில் தாழ் நிலைக்குப் போய் விட்டு, இப்போது கொஞ்சம் வளரத் தொடங்கி இருந்தான். “இன்னும் கொஞ்சம் எடை போட்டதும், அவன் உங்களோட வந்துடுவான்.”
வில்லியமின் தனிமைப்பெட்டியின் முன் ஃப்ரெட்டி நின்று அவன் உறங்குவதைப் பார்த்திருந்தாள். “இது திருமணம் ஆன ஒரு ஆணோடு கள்ள உறவு வைத்திருப்பதைப் போல இருக்கு,” தன்னருகில் டயபர்களை மடித்து வைத்துக் கொண்டிருந்த நர்ஸிடம் ஃப்ரெட்டி சொன்னாள்.
புரிபடாமல் இருக்கவும் நர்ஸ் அவளைப் பார்த்தார்.
“என்ன சொல்றேன்னா, அந்த ஆளை நாம விரும்பறோம், ஆனா குறிப்பிட்ட நேரங்கள்லெதான் அவரைப் பார்க்க முடியும்,” என்றாள் ஃப்ரெட்டி.
இளம்பெண்ணாகவும், சிறிது பருமனாகவும் இருந்தார் அந்த நர்ஸ். “நீங்க சொல்றது எனக்குப் புரியறது,” என்றார்.
வீட்டில், வில்லியமின் அறை அவனுக்காகக் காத்திருந்தது. தொட்டிலை வீட்டிற்குக் கொண்டு கொடுத்து விட்டிருந்தார்கள், அதன் இணைப்பு வேலைகளை க்ரே செய்து முடித்திருந்தார். ஃப்ரெட்டி மருத்துவ மனையில் இருந்த போது, க்ரே வில்லியமின் அறையைத் தயார் செய்யும் வேலையை முடித்திருந்தார். கரடி பொம்மைகள் அடுக்கலமாரிகளின் மேல் அமர்ந்திருந்தன. வாத்துகளும், அன்னங்களும் உருக்களாகத் தொங்கிய சுழல் சக்கரம் அவன் தொட்டிலுக்கு மேல் தொங்கியது. பழைய ஆடும் நாற்காலி ஒன்றை வாங்கி அதற்கு சிவப்புச் சாயம் பூசியிருந்தார் க்ரே. வில்லியமுடைய காலியான அறையைத் தன்னால் பார்க்கவும் முடியாது என்று ஃப்ரெட்டி நினைத்திருந்தாள். மாறாக, அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வரவே அவளுக்கு மனமில்லை. அவனுடைய துணிகளை மறுபடி மறுபடி மடித்து வைத்தாள், அவனுடைய இழுப்பறைகளைச் சீர் செய்தாள், தொட்டிலில் போர்வைகளை மாற்றி அமைத்தாள். வீட்டுக்கு எடுத்து வரும்போது அவன் என்ன துணிகள் அணிய வேண்டும் என்று தீர்மானித்து அவற்றையும், கூடவே அவனை எடுத்து வரவென்று சிறியதான, கச்சிதமான அளவு கொண்ட ஒரு பருத்திப் போர்வையையும், கம்பளிச் சால்வையையும் மேஜை மீது எடுத்து வைத்தாள். அவன் அப்படி ஒன்றும் நொய்ந்தவனாகத் தெரியவில்லை அவளுக்கு என்றபோதும் – அவன் சிலந்தியைப் போலவும், தெம்பானவனாகவும் தெரிந்தான் – நாட்கள் மிக நீண்டதாகத் தெரிந்தன, அவன் ஒருபோதும் அவளிடம் வந்து சேரமாட்டான் என்பது போல அடிக்கடி ஃப்ரெட்டிக்குத் தோன்றியது. அவன் பிறந்த தினத்திலிருந்து எண்ணினால், மருத்துவ மனையில் ஒட்டு மொத்தமாக வில்லியம் தங்குவது பத்து நாட்களிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்று அவளிடமும் க்ரேயிடமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனியும் தன்னால் தாங்க முடியாது என்று அவள் எண்ணிய ஒரு தினம், ஃப்ரெட்டியிடம் அவனுக்கு முலைப்பாலூட்ட முயலுமாறு சொல்லப்பட்டது.
வில்லியமுடைய அறையில் அவள் ஒரு தடுப்புக்குப் பின்னே அமர்த்தப்பட்டாள், அருகிலிருந்த ஒரு தனிமைப் பெட்டியில் பெருத்த உருவுடைய ஒரு குழந்தை சுவாசிக்கத் திணறிக் கொண்டிருந்தது. கிருமியில்லாது சுத்திகரித்த மேலங்கி ஒன்றைப் போட்டுக் கொண்டிருக்கும்படி அவளிடம் சொல்லப்பட்டது. கிருமியற்ற தண்ணீர் கொடுக்கப்பட்டு, அதனால் அவளுடைய முலைகளைக் கழுவும்படி சொல்லப்பட்டது. நேரே தெரியும் அம்மாவின் முலையைப் பார்த்ததும் வில்லியம் கதறி அழத் தொடங்கினான். அந்த மேலங்கி அவனுடைய முகத்தின் மேல் விழுந்தது. ஃப்ரெட்டிக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளைச் சுற்றி எங்கு பார்த்தாலும் செவிலியர்கள் பேசினார்கள், தடதடக்கும் ஒலி எழுப்பினார்கள், உலோகப் பெட்டிகளுக்குள் டயபர்களைப் போட்டு மூடிகளை ஓசையோடு அடித்து மூடினார்கள்.
“வாப்பா, வில்லியம்,” என்றாள் ஃப்ரெட்டி. “இதுதான் அம்மாவும் குழந்தையும் ஒண்ணாச் சேர்ந்து அனுபவிக்கப் போற பெரிய சந்தோஷம்னு எல்லாப் புஸ்தகமும் சொல்றது.”
ஆனால் வில்லியம் ஓலமிடத் தொடங்கினான். நர்ஸ் பால் புட்டியுடன் தோன்றினார். உடனடியாக வில்லியம் அழுவதை நிறுத்தி விட்டுப் புட்டியிலிருந்து பாலைச் சந்தோஷமாகக் குடிக்கத் தொடங்கினான்.
“கவலைப்படாதீங்க,” நர்ஸ் சொன்னார். “அவனுக்குப் பிடிபட்டுடும்.”
இரவில் ஜன்னலருகே அவள் அமர்ந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. தன் வாழ்வில் எதிலிருந்தும் இத்தனை பிரிக்கப்பட்டதாக அவள் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. தன் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் முயற்சியாக, க்ரே வில்லியமுடைய அறையில் மேல் புற மர வேலைப்பாட்டின் கீழே சுவரில் சில சித்திரப் பாணிகளை அச்சிட்டுக் கொண்டிருந்தார். கோதுமையும், சோளப் பூக்களும் கொண்ட துவக்க கால அமெரிக்க வரைவு ஒன்றை அவர் கண்டு பிடித்திருந்தார். நீல ஜீன்ஸ் அணிந்து, ஏணி ஒன்றின் மீது நின்றபடி, அந்த அச்சு உருவை வெளிர் நீலச் சாயத்தில் சுவரில் கவனமாக பதித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இரவு, குழந்தையின் அறைக் கதவருகே நின்று அவரைப் பார்க்கப் போனாள் ஃப்ரெட்டி, ஆனால் க்ரே ஏணி மீது நிற்கவில்லை. ஆடும் நாற்காலியில் அமர்ந்தவரின் தலை அவர் கைகளில் புதைந்திருந்தது. அவர் தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவருடைய வானொலிப் பெட்டி உரக்க ஒலித்ததால், அவரால் ஃப்ரெட்டி வந்ததைக் கேட்க முடியவில்லை.
வில்லியம் பிறக்கும்போது அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டே அருகில் இருந்தார், இத்தனை நாள் தைரியமாகவும், உற்சாகமாகவும்தான் இருந்தார். அவளிடம், மாஜிக் நிபுணர் தன் மனைவியைப் பாதியாக அறுப்பதாக மேடையில் காட்டுவதைப் போல அந்த அறுவை சிகிச்சை இருந்தது என்று சொல்லியிருந்தார். தனிமைப் பெட்டியில் வில்லியம் இருப்பதைப் படமெடுத்து, அவர்களின் பெற்றோர்களுக்கும், எல்லா நண்பர்களுக்கும் அனுப்பி இருந்தார். வளர்ச்சி வளைகோடுகள் பற்றிப் படித்து வைத்திருந்தார், முலைப் பாலூட்டுவதைப் பற்றிய புத்தகத்தை ஃப்ரெட்டிக்காகக் கொணர்ந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவமனை மேலங்கிகளை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டார், ஒவ்வொரு வருடமும் வில்லியமுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அணியத் திட்டம். ஆனால் இப்போது அவரே உடைந்து போயிருந்தார்.
அறைக்குள் வருவதாக ஓசை எழுப்பினாள், அவரருகே குனிந்து தலை முடியை வருடினாள். அவரிடமிருந்து சோப்பும், பெயிண்ட்டை மெலிதாக்கும் வேதிப் பொருளும் கலந்த வாசனை எழுந்தது. அவரைத் தன் கைகளால் சுற்றிப் பிடித்துக் கொண்டவள் வெகுநேரம் விடவே இல்லை.
திரைக்குப் பின்னே வில்லியமுக்குப் பாலூட்ட நாளொன்றில் மூன்று முறைகள் ஃப்ரெட்டி முயன்றாள், ஒவ்வொரு தடவையும் கடைசியில் அவனுக்கு ஃபார்முலா புட்டிப் பாலைத்தான் கொடுக்க நேர்ந்தது. இறுதியாக, ஒருநாள் ஒரு செவிலியிடம் ஃப்ரெட்டி கேட்டாள், “இந்தக் குழந்தையோடு தனியாக நான் அமர்ந்திருக்க ஓர் அறை கிடைக்குமா எனக்கு?”
“அப்படி ஓர் ஏற்பாட்டுக்கு இங்கு வசதியில்லை,” என்றார் அந்த நர்ஸ். “ஆனால் உங்களை பொருள்கள் வைக்கும் அலமாரியறை ஒன்றில் உட்கார வைக்க முடியும்.”
அங்கு, பயன்படுத்தப்படாத தனிமைப் பெட்டிகளும், அட்டைப் பெட்டிகளும், கிருமியற்ற தண்ணீர்ப் புட்டிகளும் வைக்கப்பட்ட இடத்தில், அவற்றின் நடுவே இருக்கையில், வில்லியம் முதல் தடவையாக அவளிடம் பால் குடித்தான். அவள் அவன் கன்னத்தைத் தொட்டாள். அவன் அவளை நோக்கித் திரும்பினான், அது புத்தகத்தில் சொல்லப்பட்டது போலவே இருந்தது. அப்போது அவளுடைய கண்கள் செருகிக் கொண்டன. “ஓ, என் கடவுளே!” என்றாள்.
ஒரு நர்ஸ் உள்ளே நுழைந்தார். “வலிக்கிறது, இல்லையா?” என்றார். “அவனுக்கு நல்லது. அப்படின்னா அவனுக்கு இது பிடிபட்டுடுத்துன்னு அர்த்தம். ரொம்ப நேரம் வலிக்காது.”
அவனுடைய மாலை நேர பால் புகட்டலின்போது அவன் மறுபடி ஓலமிட்டான்.
“உண்மையான அன்புடைய பாதை ஒரு போதும் சீராக இருந்ததில்லை,” என்றார் க்ரே. வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு பூங்காவைத் தாண்டி மெல்ல நடந்து போனார்கள் இருவரும். அது ஒரு குளிரான, ஈரமான இரவு.
“நான் குழந்தை இல்லாத அம்மா,” என்றாள் ஃப்ரெட்டி.
இரண்டு நாட்கள் கழிந்த பின், வில்லியம் அவனுடைய தனிமைப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு ப்ளாஸ்டிக் தொட்டியில் இடப்பட்டான். உடல் வெப்பம், மூச்சு விடுதல் மற்றும் இதயத் துடிப்புக்கான மானிகள் ஏதும் அவன் மேல் பொருத்தப்பட்டிருக்கவில்லை, ஃப்ரெட்டி எதனுடைய தொடர்புகளையும் விடுவிக்காமல் நேராக அவனை எடுத்துக் கொள்ள முடிந்தது. மாலையில் அவனுக்கு உணவு கொடுக்கும் நேரத்தில் அந்த அறை அமைதியாக இருந்தபோது, ஃப்ரெட்டி அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே கூடத்துக்குப் போனாள், அவனோடு அந்தக் கூடத்தில் மேலும் கீழுமாக நடந்து போனாள்.
அடுத்த நாள் டாக்டர் எட்மண்ட்ஸ் அவளுக்கு முகமன் தெரிவித்தார். “உங்களோட குழந்தை வைத்தியரோடு நான் இப்பத்தான் பேசினேன்,” என்றார். “உங்களோட சலிப்பூட்டற குழந்தையை எப்படி வீட்டுக்கு எடுத்துப் போக விரும்பறீங்க?”
“எப்ப?”
“அவனுக்கான துணிகள் உங்க கிட்டே இருந்தால், இப்பவே,” டாக்டர் எட்மண்ட்ஸ் சொன்னார். “டாக்டர் ஜேகப்ஸன் இன்னும் சில நிமிஷங்கள்லெ இங்கே வந்துடுவார், முறையா அவனை விடுவிச்சுடலாம்.”
அவள் கூடத்தில் ஓடினாள், அவருடைய அலுவலகத்தில் இருந்த க்ரேயைத் தொலைபேசியில் அழைத்தாள். “அவங்க அவனை விடுவிக்கிறாங்களாம். வந்து எங்களை அழைச்சிட்டுப் போங்க.”
“நாம அவனோட அங்கேருந்து வெளியில நடந்து போயிடலாம்னா சொல்றே?” க்ரே சொன்னார். “நான் என்ன கேட்கறேன்னா, அவனை நம்ம கையில தூக்கிக்கிட்டு வெளியில போயிடலாமா? அவனுக்கு நாம யாருன்னு கூடத் தெரியுமா?”
“உடனே இங்கே வாங்க. போர்வைகளை மறக்காதீங்க.”
வில்லியமுக்கு உடுப்புகளை அணிவிக்க ஒரு நர்ஸ் உதவினார். பச்சையும் வெள்ளையுமாக இருந்த ஒரு சிறு போர்வையால் அவன் சுற்றப்பட்டான், வெள்ளைக் கம்பளி சால்வையால் போர்த்தப்பட்டான். க்ரேயுடைய நீலமும் பச்சையும் கலந்து பின்னப்பட்ட ஒரு குல்லாய் அவன் தலைமேல் பொருத்தப்பட்டது. அது கொஞ்சம் பக்கவாட்டில் சரிந்தது, அவனை உல்லாசப் பேர்வழி போலக் காட்டியது.
எலவேட்டரில் அவர்களோடு ஒரு நர்ஸ் வந்தார். மருத்துவ மனையின் விதிமுறைப்படி நர்ஸ் அந்த மனையின் வாயில் வரை குழந்தையைக் கையில் வைத்திருக்க வேண்டும், வாயில் கதவருகே அவர்களிடம் கொடுக்க வேண்டும்.
குழந்தையோடு கட்டடத்தின் வெளியே நிற்பதில், ஃப்ரெட்டியின் தலை கிறுகிறுத்தது. ஒரு வங்கியைக் கொள்ளையடித்து விட்டு, தப்பித்து வந்தவள் போல உணர்ந்தாள்.
டாக்ஸியில், க்ரே வீட்டு முகவரியை ஓட்டுபவரிடம் கொடுத்தார்.
“ஆஸ்பத்திரி வாசலிலிருந்து வீட்டு வாசலுக்குப் போக வேண்டாம்,” ஃப்ரெட்டி சொன்னாள். “அந்த அவென்யுவில் வெளியே இறங்கி, தெருவோடு எல்லார் மாதிரியும் நடந்து போகலாமா?”
டாக்ஸி நின்ற போது அவர்கள் ஜாக்கிரதையாகக் கீழே இறங்கினார்கள். ஆகாயம் வெள்ளி மேகங்கள் நிரம்பி இருந்தது, காற்று சற்றுக் குளிராகவும் வேகமாகவும் அடித்தது. வில்லியம் அந்த ஒளியில் கண்ணைச் சுருக்கிக் கொண்டான், மூக்கையும் கசக்கிக் கொண்டான்.
ஃப்ரெட்டி தன் கைகளில் வில்லியமை கெட்டியாகப் பிடித்தபடி, மூவரும் அந்தத் தெருவோடு எல்லோரையும் போல நடந்தார்கள்.
(1985)
****லாரி கோல்வின் இந்தக் கதையின் ஆசிரியர். இங்கிலிஷில் எழுதப்பட்டது. ’அனதர் மார்வெலஸ் திங்’ மூலக்கதையின் தலைப்பு. இது 1985 ஆம் வருடம் நியூயார்க்கர் பத்திரிகையில் பிரசுரமான கதை. மொழிபெயர்ப்புக்கு ‘த ஒண்டர்ஃபுல் டௌன்: நியூயார்க் ஸ்டோரீஸ் ஃப்ரம் த நியூ யார்க்கர்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தப் புத்தகம் பிரசுரமான வருடம் 2000. தொகுப்பாசிரியர்கள்: டேவிட் ரெம்நிக், ஸூசன் சோய். பிரசுர நிறுவனம்: ராண்டம் ஹௌஸ், நியூ யார்க்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
