மூலம் : லாரி கோல்வின்
தமிழாக்கம்: மைத்ரேயன்

சென்ட்ரல் பார்க்கைப் பார்க்கும்படி இருந்த ஜன்னலருகே, தன் ஆஸ்பத்திரி அறையில் ஃப்ரெட்டி டெலீயல், ஃபிப்ரவரி மாதத்தின் ஒரு குளிர்ச்சியான மழை நாளில் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய குழந்தை பிறக்க வேண்டிய நாளுக்கு ஒன்றரை வாரம் முன்பு அவள் அங்கே சேர்க்கப்பட்டிருந்தாள், அவளுடைய ரத்த அழுத்தம் திடீரென்று எகிறி விட்டிருந்ததுதான் காரணம். அவளுடைய மருத்துவர் அவளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அவளுக்கு முழுதும் படுக்கையில் ஓய்வு வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.
பளீரென்ற சிவப்பு நிறத்தில் மோசமான வானிலைக்கேற்ற மாதிரியான உடுப்பணிந்த தனியொரு ஓட்டப் பயிற்சியாளர், மின்னுகிற ஈரம் கொண்ட பாதையில் மெதுவாக எதிரே ஓடினார். கிளைகளில் இலைகள் ஏதுமில்லாத மரங்கள் கருப்பாக நின்றன. வேறு ஒரு ஜீவனையும் வெளியில் பார்க்க முடியவில்லை. ஐந்து நாட்களாக ஃப்ரெட்டி அந்த மருத்துவ மனையில் இருக்கிறாள். கிறீச்சிட்ட ஓசையால் முதல் நாள் காலையில் அவள் விழித்துக் கொண்டாள். சிறு குழந்தைகள் பேணப்படும் அறைக்கு அடுத்து அவளுடைய அறை இருந்ததால், அந்தச் சத்தம் புதிதாகப் பிறந்த ஏதோ ஒரு குழந்தை எழுப்பிய ஓசை என்று அவள் நினைத்தாள். விடியற் காலையில் அடுத்த நாள் எழுந்து கொண்டவள், எதிரே இருந்த புல்வெளி கடல் நாரைகளால் நிரம்பி இருந்ததைப் பார்த்தாள், அவை ஒவ்வொரு காலையும் சூரியன் எழுமுன் அங்கே கூடின என்று தெரிந்து கொண்டாள்.
குழந்தைகள் பேணப்பட்ட இடம் மென்மையான மஞ்சள் நிறத்தில் சாயம் பூசப்பட்ட பெரிய அறை. தினசரி அவளுக்கு அனுமதிக்கப்பட்ட சிறு தூர நடைப் பயிற்சிக்காக அவள் போகும்போது, தங்களுடைய சிறு ப்ளாஸ்டிக் தொட்டில்களில் படுத்திருந்த வரிசையான அந்தக் கைக்குழந்தைகளைப் பார்ப்பதை அவள் கவனமாகத் தவிர்த்தாள் என்றாலும், தனக்கு அவற்றைப் பார்ப்பதற்கான பசி எழுவதை அவள் ஒவ்வொரு நாள் உணர்ந்தாள். அம்மாவின் பெயரோடு, நீல நிறத்திலோ (‘நான் ஒரு பையன்’) அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ (‘நான் ஒரு பெண்’) ஓர் அட்டை ஒவ்வொரு தொட்டிலிலும் ஒரு பசை நாடாவால் ஒட்டப்பட்டிருந்தது. குழந்தைகள் எழுப்பும் ஓசைகளில் எத்தனை விதங்கள் இருந்தன என்பது ஃப்ரெட்டிக்கு வியப்பாக இருந்தது:பூனை போல மியாவிட்டன, வாத்துகள் போல கவாக்கின, ஆடுகள் போலக் கத்தும், பறவைகள் போல ஊதும், கிறீச்சிடும் சத்தங்களை எழுப்பின. இந்த மாதிரி ஒரு ஜீவனைத் தானும் பெறப் போகிறோம் என்ற உண்மை புலப்படும்போது அவளுக்குக் குழப்பமும், அச்சமும், ஆவலும் ஒரு சேர ஏற்பட்டன.
படுக்கையில் படுத்துக் கிடப்பதும். தன் தோலுக்கடியில் இன்னும் பிறக்காத குழந்தை நகர்வதைக் கவனிப்பதும்தான் கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்குக் கிட்டிய கேளிக்கையில் தலையாயன. காஃபி கோப்பை இருந்த தட்டை, அதிரவும் சிறிது எம்பி நடனமாடவும் செய்ததோடு, வயிற்றின் மீது இருந்த புத்தகத்தைத் தட்டியும் விட்டது அந்தக் குழந்தையின் அசைவு.
குணத்தாலும், விருப்பத்தாலும் ஓர் இயற்கையாளராக இருந்த அவளது கணவர் க்ரே,செய்கிற தொழில்படி ஒரு வழக்கறிஞர், அவரது படுக்கைக்கு அருகிலிருந்த சிறு மேஜையில் வானவியல், மற்றும் பறவைகள் பற்றிய புத்தகங்கள் நீக்கப்பட்டு, குழந்தை வளரும் விதம் பற்றியும், குழந்தை உளவியல் பற்றியுமான புத்தகங்கள் கொண்டு வைக்கப்பட்டன, குழந்தை ஒன்றைப் பெறுவது என்பது அவருக்கு மிக இயல்பான ஒரு நடப்பு. குழந்தைகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கவென்று மர்ம நாவல்களைப் படிப்பதைக் கைவிட்டார் அவர். கர்ப்பத்திலிருக்கும் குழந்தையால் ஒலிகளைக் கேட்க முடியும் என்று ஒரு புத்தகம் அவருக்குத் தெரிவித்ததால், ஒவ்வொரு நாள் இரவும் ஃப்ரெட்டியின் வயிற்றை நோக்கி ‘நானொரு பழைய மாட்டிடையன்,” என்ற பாட்டை அவர் பாடினார். இன்னொரு புத்தகம் பிறக்குமுன்னரே குழந்தைகளின் கல்வியைத் துவக்கலாம் என்று தெரிவித்ததால், க்ரே பிறக்காத குழந்தைக்கு எண்ணச் சொல்லிக் கொடுக்கலாமா என்று யோசித்தார்.
“அத்தோடு ஏன் நிறுத்தணும்?” ஃப்ரெட்டி சொன்னாள். “அதுக்கு பின்னமெல்லாம் சொல்லிக் கொடுங்களேன்.”
ஃப்ரெட்டி ஒரு பொருளாதார வரலாற்றாளர். பாசம், உணர்ச்சி வசப்படல் எல்லாம் பற்றி அவளுக்கு ஒவ்வாமை இருந்தது. ரகசியமாக – இதை வெளியே காட்டுவதை விட செத்தே போய் விடுவாள் – தன் குழந்தையைப் பற்றிய எண்ணமே அவளுக்குக் கண்ணீரை வரவழைத்தது. அவளுடைய கனவுகள் எல்லாம் சிறு குழந்தைகளைப் பற்றி வந்தன. எங்கே பார்த்தாலும் குழந்தைகளே தென்பட்டார்கள். பஸ்கள் எல்லாம் கர்ப்பமான பெண்களால் நிரம்பி வழிந்தன. (குழந்தைப் பிறப்பு என்ற) அந்த நிகழ்வே பாதி அற்புதமாகவும் பாதி சகிக்க மாட்டாததாகவும் அவளுக்குத் தெரிந்தது. கூட்டமான தெருவில் தன்னைச் சுற்றிப் பார்த்து அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள், “இந்த மக்களில் ஒவ்வொரு மனிதரும் பிறந்தவர்கள்தான்.”
அவளுடைய நீண்டநாள் தோழி பென்னி ஸ்டெர்ன், அவளிடம் சொன்னாள், “இந்தக் கர்ப்பம் உன்னை பிரசவகாலத்து உடைகளைப் போட வைக்குமுன்னு நாங்கள்லாம் எதிர்பார்க்கிறோம், ஏன்னா நீ வழக்கமாப் போடற துணிங்களை விட அதெல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்.” ஒரு சில மிகப் பழைய ஸ்கர்ட்கள், க்ரேயின் பழையதாகிப் போன ஸ்வெட்டர்கள், தவிர தன் தம்பி ஒதுக்கிய சட்டைகளைத்தான் ஃப்ரெட்டி வழக்கமாக அணிவாள். அவள் சொன்னாள், “நான் கர்ப்பமாக இல்லாதபோது பஃப் வச்ச கையும், ஃப்ரில் வச்ச மேலங்கியும், கழுத்தைச் சுத்தி ரிப்பன் நாடாவும் வச்சு எதையும் போட்டுக்கறதில்லை. கர்ப்பமா இருக்கறத்தால மட்டும் அதையெல்லாம் எதுக்குப் போட்டுக்கணும்னு எனக்குத் தெரியல்லை.” கடைசியில், அவள் க்ரேயின் ஸ்வெட்டர்களையும், இடுப்பில் எலாஸ்டிக் பட்டை வைச்சு, கொசகொசன்னு இருக்கற இரண்டு ஸ்கர்ட்களையும்தான் அணிந்தாள். பென்னி கட்டாயப்படுத்தி அவளை ஒரே ஒரு அழகான கருப்பு ஆடையை வாங்க வைத்தாள். வியாபாரக் கல்லூரியில் பொருளாதார வரலாற்று வகுப்பை வாரம் தோறும் நடத்த அதையே அணிந்து கொண்டு போனாள்.
பொருட்களைப் போட்டு வைக்கப் பயன்பட்ட ஒரு சிறிய உபரி அறையை க்ரே புதுப்பிக்க ஆரம்பித்தார். தரையைச் சுரண்டி விட்டு, அதற்கு மெருகு ஏற்றினார், சுவரில் அலமாரிகளைப் பொருத்தினார், சுவர்களுக்கு வெளிறிய ரோஜாநிறச் சாயம் அடித்தார், மேல் விதானத்திற்கும், அங்கே சுவர் ஓரத்து மரச் சட்ட வேலைப்பாடுகளுக்கும் மின்னுகிற வெள்ளைச் சாயமடித்தார். இந்த அறையை முன்பு அடைசல்களைப் போட்டு வைக்கிற அறை என்று அவர்கள் வைத்திருந்தார்கள். இப்போது அதை குழந்தையைப் பேணுகிற அறை என்று அழைத்தார்கள். தன் சேமிப்பாக இருந்த, கண்ணாடிக்குள் பொருத்தப்பட்ட பறவைக் கூடுகளின் தொகுப்பை, அங்கு ஒரு அலமாரியின் மேல் தட்டில் க்ரே வைத்தார். தன்னோடு இயற்கையைப் பார்க்கச் செல்லும் நடைப்பயணங்களில் வரப்போகும் துணையாக அந்தக் குழந்தையை ஏற்கனவே அவர் வரித்திருந்தார்.
பிள்ளைப்பேறு மருத்துவத்துறையில் ஏற்பட்ட பற்பல அறிவியல் முன்னேற்றங்களுக்கு முகத்தில் எந்த பாவமும் காட்டாமலும், செயல் முனைப்போடும் தன்னை ஆட்படுத்திக் கொண்டாள் ஃப்ரெட்டி. பனிக்குட நீரில் சிறிது வெளியிழுத்து அதை ஆய்வுக்குட்படுத்தி, பிறக்காத குழந்தையின் மரபணு நலத்தைச் சோதிப்பது சாத்தியமாகி இருந்தது. வேண்டுமென்றால் குழந்தையின் பாலடையாளத்தையும் அறிய முடியும். சோதனை மேஜையில் படுத்தபடி, பிறக்காத குழந்தை கருப்பையில் இருக்கையிலேயே. அல்ட்ராசோனிக் கதிர்வீச்சுச் சோதனை மூலம் அதைப் பார்க்க முடிந்திருந்தது, அந்தக் காட்சியின் படம் ஒன்றைக் கூடக் கொடுத்தார்கள். க்ரேயைக் கேட்டால், வாராவாரம் அந்த சோனோக்ராம் சோதனைக்கு ஃப்ரெட்டி போவதைக் கூட அவர் விரும்புவார். ஃப்ரெட்டியின் மருத்துவர், ஜார்டன் பெல் என்ற பெயருடைய, நேர்த்தியான ஆனால் சிறிது சோகமான தோற்றம் கொண்ட தென் ஆஃப்ரிக்கர், அந்தத் திரையில் கோளங்களின், மேகங்களின் தொடர்களாகத் தெரியும் உருக்களை தலை, தோள்கள் மேலும் முதுகு என்று அடையாளம் சொல்லும்போது க்ரே அதையெல்லாம் மிக்க ஆர்வத்துடன் கவனித்திருந்தார். ஜார்டன் பெல்லின் அலுவலக அறையில், அவளுடைய குழந்தையின் ஒலி பெருக்கிய இதய ஒலியை ஒவ்வொரு மாதமும் ஃப்ரெட்டி கேட்டாள், அவள் கேட்டவை தூரத்தில் பாய்ந்தோடும் குதிரைகள் எழுப்பும் ஒலியை ஒத்திருந்தன.
வெளித் தோற்றத்துக்கு ஏதும் பாதிக்காமலிருப்பது போலத் தன் வேலைகளை ஃப்ரெட்டி செய்து கொண்டிருந்தாள். தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினாள், கல்லூரியில் போதிப்பதைத் தொடர்ந்து செய்தாள். குட்டித் தூக்கம் போடாமல் இருந்த நேரங்களில், இடையில், குழந்தைக்கான பொருட்களைத் தயார் செய்தாள்: தொட்டிலுக்கான விரிப்புகள், ஒரு தள்ளு வண்டி, டி சட்டைகள், டயபர்கள், போர்வைகள். அவளும் பென்னியும் குழந்தை பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில், கடைகளுக்குப் போய் மேலும் வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். கடைசி நிமிடம் வரை இவற்றை ஒத்திப் போடாமலிருந்ததற்கு அவள் சந்தோஷம் கொண்டாள், ஏனெனில் ஏதும் நடக்காது சாதாரணமாக முன்னேறிய கர்ப்பகாலத்தில் ஒன்பதாவது மாதம் துவங்கிய போது அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிறகு அவள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாள். தான், க்ரே மேலும் பிறக்காத அந்தக் குழந்தை மட்டும் இருக்கும் தனிமையுணர்வை அவள் ரசித்திருந்தாள், அது இப்போது போய் விட்டிருந்தது. அவள் முன்பின் பார்த்திராத செவிலியரின் மேற்பார்வையில் அவள் இப்போது இருந்தாள், அவர்களோடு நீண்ட உரையாடல்களைத் தான் நடத்துவதை அவள் பார்த்திருந்தாள். மருத்துவ மனையில் அந்த அறையில் இருந்ததில் சளைத்துப் போனவளாக, நிச்சயத் தன்மை இழந்தவளாக ஆனாள்.
பென்னி அவளை வாங்க வைத்த நல்ல கருப்பு உடையை அணிந்தபடி ஃப்ரெட்டி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள், பூங்காவைப் பார்க்கும்படி இருந்த அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். முதுகில் கட்டும் நாடாவோடு இருந்த ஆஸ்பத்திரி கவுனும், இரண்டு துண்டுகளும் அவளுடைய படுக்கையில் கீழ் பக்கம் வைக்கப்பட்டிருந்தன. படுக்கையில் படுப்பதற்காக பின்மாலையில் ஆடைகளைக் கழற்ற வேண்டியிருப்பது குட்டித் தூக்கம் போடுவதற்காக கட்டாயமாக அனுப்பப்படும் சிறு குழந்தை போல அவளை உணரச் செய்தது. அவள் அந்த கவுனை அணியவில்லை. மாறாக, நடு இரவில் வலியெடுத்து மருத்துவ மனைக்குப் போக நேர்ந்தால் என்ன செய்ய என்று கருதி, சில வாரங்களுக்கு முன்பே தன் பையில் அவள் வைத்துக் கொண்டிருந்த க்ரே அணிகிற கட்டமிட்ட ஃப்ளானெல் இரவுச் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
“இப்பவே இதை எல்லாம் நான் வெறுக்கறேன்,” ஃப்ரெட்டி சொன்னாள்.
“இங்கேருந்து வெளியில பார்க்கிறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு,” க்ரே சொன்னார். “இந்த சீஸன்லெயே இன்னும் கொஞ்ச நாள் தள்ளி இங்கே வந்திருந்தா, நான் என்னோட பைனாகுலரை எடுத்து வந்திருப்பேன், எதெல்லாம் கூடு கட்டறதுன்னு பார்க்கலாம்.”
“இங்கேருந்து நா வெளியிலே போகவே போறதில்லை,” என்றாள் ஃப்ரெட்டி.
“ இங்கேருந்து நீ வெளியிலே போகப் போறேங்கறது மட்டுமில்லை,” என்றார் க்ரே, “உன்னை விடுவிக்கும்போது நீ முழுசும் மாறிப்போன ஒரு பெண்ணா இருப்பே. ஜார்டன் சொல்றதை நீ நிறைய தடவை கேட்டிருக்கே, ’எல்லாக் குழந்தைகளும், ஒரு வழில, இல்லைன்னா இன்னொரு வழியில பிறக்கத்தான் செய்யும்.’”
குழந்தைகளாக இருக்கும்போது, லண்டனில் ஒரு பள்ளிக்கூடத்தில் க்ரேயும் ஃப்ரெட்டியும் சந்தித்திருந்தனர். அங்கே அவர்களும், பென்னி ஸ்டெர்னும், சிறு குழுவான அமெரிக்கர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் அன்யோன்யமாகத் தெரிந்து இருந்தது. ஃப்ரெட்டி சலிப்படைந்தால், தன்னுடைய உயிரற்று நீண்டு தொங்கும் பழுப்பு முடி கண்களை மறைக்காமல் ஒதுக்குவாள். சோர்வடைந்தால் தன் முகத்தை அழுத்தித் தேய்ப்பாள். வருத்தமுற்றால், தன் தாடைகளை இறுக்கிக் கொள்வாள். ஆனால் அவள் இத்தனை வருத்தமுற்று க்ரே இதற்கு முன் பார்த்ததில்லை. அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டார். “கவலைப்படாதே,” என்றார். “இதொண்ணும் சீரியஸ் இல்லைன்னு ஜார்டன் சொன்னார். இது ஒரு சின்னச் சிக்கல். குழந்தை நல்லாத்தான் இருக்கும், நீயும் நல்லா இருப்பே. அது மட்டுமில்லை,குழந்தைக்கும் தான் எப்படிக் குழந்தையா இருக்கணும்னு தெரியாது, நமக்கும் எப்படிப் பெத்தவங்களா இருக்கணும்னு தெரியாது.”
தன் மேலங்கியை கழற்றினார் க்ரே, அப்போது அதில் அவள் தன் கன்னத்தைச் சாய்த்திருந்த இடத்தில் ஈரமாக இருப்பதைக் கவனித்தார். அவளை எப்படித் தேற்றுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
“இயற்கைதான் இதையெல்லாம் கவனிச்சுக்கணும், நமக்கு வேணுங்கிறதை எல்லாம் அது செய்யும்னு நான் நினைச்சேன்,” ஃப்ரெட்டி அவர் கையை நோக்கிச் சொன்னாள்.
“அது செய்யும்,” என்றார் க்ரே.
ஏழு மணிக்கு பார்வையாளர் நேரம் துவங்கியது. சிரிப்பையும், கொஞ்சல்களையும், கிரீச்சிடல்களையும் மூடிய கதவுகளுக்கு அப்பால் ஃப்ரெட்டியால் கேட்க முடிந்தது. கதவு திறந்திருந்தால், ஷாம்பெய்ன் புட்டிகளிலிருந்து கார்க் மூடிகள் சத்தத்தோடு உருவப்படுவதை அவளால் கேட்க முடிந்தது.
க்ரே கதவை மூடினார். “சாப்பாட்டுல கொஞ்சமாத்தான் நீ சாப்பிட்டிருக்கே,” என்றார். “தெரு முக்கில இருக்கிற சாப்பாட்டுக் கடைக்கு நான் போய் உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
“எனக்குப் பசியில்ல,” ஃப்ரெட்டி சொன்னாள். தனக்கு என்ன நடக்க இருக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை, அல்லது இன்னும் எத்தனை நாட்கள் இந்த அறையில் இருப்போம் என்றோ, குழந்தை எப்போது பிறக்கும் என்றோ கூட அவளுக்குத் தெரியவில்லை.
“பென்னியைக் கூப்பிட்டு அவளை ஏதாவது கொண்டு வரச் சொல்றேன்,” என்றார் க்ரே.
“அவ கிட்டே நான் ஏற்கனவே பேசிட்டேன்,” ஃப்ரெட்டி சொன்னாள். “அவளும், டேவிடும் உங்களை டின்னருக்குக் கூட்டிட்டுப் போகப் போறாங்க.” டேவிட் பென்னியின் கணவர். டேவிட் ஹூக்ஸ்.
“என்னைத் துரத்தப் பாக்கிறே நீ,” என்றார் க்ரே.
“இல்லவே இல்லை,” ஃப்ரெட்டி சொன்னாள். “நெசம்மாவே நாள் பூரா இங்கேயே நீங்க இருந்திருக்கீங்க. உங்களுக்குச் சாப்பாடு போட்டு, உங்களை யாராவது பாத்துக்கிறாங்கன்னு தெரிஞ்சா எனக்கு நிம்மதியா இருக்கும். நீங்க சீக்கிரமா போகணும்னு நான் நினைக்கிறேன்.”
“இது ரொம்பவே சீக்கிரம்,” என்றார் க்ரே. “பார்வையாளர் நேரம் முடிஞ்சா அப்பாக்கள்லாமும் போகணும்னு இல்லை.”
“நீங்க இன்னும் அப்பாவா ஆகல்ல,” ஃப்ரெட்டி சொன்னாள். “போங்க.”
அவர் போனவர், தெருவைக் கடந்து, பஸ்சுக்காகக் காத்திருப்பதை ஜன்னலருகே நின்று அவள் பார்த்தாள். அங்கே இருட்டாக, குளிர்வதாக இருந்தது, பனிப் படலமாக விழத் தொடங்கி இருந்தது. அவரைப் பார்த்தபோது தனித்து விடப்பட்ட உணர்வு தன்னைத் துளைப்பதாக உணர்ந்தாள். காற்று அவருடைய அலையாக வளைந்த முடியூடாக அடித்துப் போயிற்று, அவர் ஒட்டக முடியாலான தன் பழைய மேலங்கியை அணிந்திருந்தார். திரும்பியவர், அவளுடைய ஜன்னல் இருக்குமிடம் தேடி விசிறி நோக்கில் கட்டடத்தைப் பார்த்தார். அவளைப் பார்த்தது, கையை அசைத்தார், சிரித்தார். ஃப்ரெட்டியும் கையை ஆட்டினாள். அவருடைய கையசைப்பைத் தனக்கென்று எண்ணிய டாக்ஸி ஒன்று நின்றது. க்ரே உள்ளே ஏறிக்கொண்டதும், அது கிளம்பிப் போயிற்று.
நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் உஷ்ணத்தை அளக்க மூன்று மணி நேரத்துக்கொரு முறை செவிலியர் ஃப்ரெட்டியிடம் வந்தார்கள். க்ரே போனபிறகு இரவு நேரத்துச் செவிலி வந்தார். திருமதி.பெர்ச் என்ற பெயருடைய உயரமான, நடுவயது கருப்பினப் பெண்மணி அவர். மானிகளும், கம்பிகளும் நிரம்பி இருந்த சூட்கேஸ் போல இருந்த ஒரு பெட்டியைக் கையில் வைத்திருந்தார்.
”கலவரப்படாதீங்க,” என்றார் திருமதி பெர்ச். மேற்கிந்தியத் தீவினரின் மென்மையான உச்சரிப்பு அவருடைய பேச்சிலிருந்தது. “கர்ப்பத்திலுள்ள சிசுவின் இதயத் துடிப்பை அளக்கும் மானி, பல இடங்களுக்கு எடுத்துப் போக வசதியாகச் செய்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல காலை, நல்ல மாலை என்று முகமன் சொல்ல உங்களுக்கு உதவும்.” ஃப்ரெட்டியின் வயிற்றில் குளிர்ச்சியான நீல ஜெல்லியில் ஒரு திட்டைப் பிதுக்கி இட்டார், ஓர் ஒலி உணரியை அதற்குள் இட்டுத் துழாவியபடி, குழந்தையின் இதயத் துடிப்பு ஒலியைத் தேடினார். உடனே ஃப்ரெட்டிக்கு ஓடும் குதிரைகளின் குளம்பொலிகள் கேட்டன. தன் கைக்கடிகாரத்தோடு அந்தத் துடிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தார் திருமதி பெர்ச்.
“ஆரோக்கியமாக, அருமையாக இருக்கு,” திருமதி பெர்ச் சொன்னார்.
“குழந்தையின் எந்தப் பாகம் எங்கே இருக்கிறது?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“பாருங்க, குழந்தையின் தலை பின்னாடி இங்கே இருக்கு. அவனோட முதுகு அங்கே, இது புட்டம். கால்கள் உங்களோட விலா எலும்பு கிட்டே. இல்லன்னா அவளோடன்னும் வச்சுக்கலாம்தான்.”
“ஒரு கால் என்னை உதைக்கிறதோன்னு யோசிச்சேன்,” ஃப்ரெட்டி சொன்னாள்.
“என்னோட இரண்டாவது பையன் என் விலா எலும்புக்குக் கீழே காலை விட்டுக்கிட்டான், தன் வலுவை எல்லாம் கூட்டி உதைச்சான்,” திருமதி பெர்ச் சொன்னார்.
ஃப்ரெட்டி படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். திருமதி பெர்ச்சின் கையை இழுத்துப் பிடித்தாள். “இந்தக் குழந்தை நல்லபடியா இருக்கப் போறதா?”
“ஓ, பின்னே, ஆமாம்,” திருமதி பெர்ச் சொன்னார். “உங்க விஷயம் ஒண்ணும் சுவாரசியமா இல்லாதது. உங்களை விட நிறைய சிக்கலா இருக்கிற வேற நிறையப் பேரெல்லாம் சுகமா முடிச்சிருக்காங்க, நீங்களும் சுகமான முடிவை எட்டுவீங்க.”
விடிகாலை நான்கு மணிக்கு இன்னொரு செவிலியர் வந்தார்- சிவந்த உருக் கொண்ட இங்கிலிஷ்காரி அவர். தொண்டை காய்ந்து, இதயம் தடதடவென்று அடித்துக் கொண்டு அமைதியில்லாமல் இரவைக் கழித்திருந்தாள் ஃப்ரெட்டி.
எம்.விட்லி என்ற பெயரட்டையோடிருந்த அவர், “உங்களோட ரத்த அழுத்தம் கூடியிருக்கு, டியர்,” என்றார். “உங்களோட ரத்த அழுத்தம் கூடினா ஹைட்ராலஸீன் ஊசி ஒண்ணு உங்களுக்குப் போடணும்னு டாக்டர் பெல் கட்டளை இட்டிருக்கார். அது குழந்தைக்கு ஏதும் செய்யாது- அதை உங்களுக்கு அவர் விளக்கிச் சொன்னாரா?”
“ஆமாம்,” என்று அரைத் தூக்கத்தோடு ஃப்ரெட்டி சொன்னாள்.
“இது உங்களுக்குக் கொஞ்சம் தலைவலியைக் கொடுக்கும்.”
“வேறென்ன?”
“அவ்வளவுதான்,” மிஸ் விட்லி சொன்னார்.
அந்த ஊசியால் ஃப்ரெட்டிக்குத் தூக்கம் வந்தது, விழிக்கும்போது இடிக்கும் தலைவலியோடு எழுந்தாள். மணியை அடித்தாள், அவளை மருத்துவ மனையில் சேர்த்த செவிலி வந்தார். அவர் பெயர் பானி நியர், ஃப்ரெட்டியின் பகல் நேரத்து செவிலி அவர். ஃப்ரெட்டிக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்தார், நாக்கை அழுத்தி வாய்க்குள் பார்க்க உதவும் ஒரு மரக் குச்சியை வலைத் துணியில் சுற்றி ஒட்டும் நாடாவால் அவளுடைய படுக்கையில் தலைமாட்டில் ஒட்டி வைத்தார்.
“இது எதுக்கு?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“கேக்காதீங்க.”
“எனக்குத் தெரியணும்.”
பானி நியர் கட்டிலில் கால்புறத்து முனையில் அமர்ந்தார். குட்டையான முடியும், சிறு வைர காதுத் தோடுகளும் அணிந்து, கச்சிதமாகவும், இறுகிய கம்பி போன்றதுமான தோற்றம் கொண்டவர், ஃப்ரெட்டியை விடச் சில வருடங்களே மூத்தவராக இருப்பார்.
“அது ஆஸ்பத்திரி விதி,” என்றார். “ஹைட்ராலஸீன் உங்களுக்குத் தலைவலியைக் கொடுக்குது இல்லையா? அதைப் போக்கறதுக்கு ஏதாவது வேணுமுன்னு நீங்க மணியடிக்கிறீங்க. உங்களுக்கு ரத்த அழுத்தம் நிறைய இருக்கிறதாலே எல்லாரும் அதுதான் தலைவலியைக் கொடுக்கறது, அந்த மருந்து இல்லைன்னு நெனைப்பாங்க. ஐம்பத்தி அஞ்சு மிலியன் கேஸ்கள்ல ஒண்ணுக்கு வலிப்பு வரும், அது உங்களுக்கு வந்தா என்ன செய்யணும்னு சொல்ல இதை உங்க தலைமாட்டில ஒட்டி வைக்கிறோம்.”
முகத்தைத் திருப்பிக் கொண்டு ஃப்ரெட்டி ஜன்னல் வழியே வெளியே வெறித்துப் பார்த்தாள்.
“ஹேய், ஹேய்,” என்றார் பானி நியர். “அதெல்லாம் கூடாது. நீங்க அதிகமா கவலைப்படறவர்னு நேத்திக்கே கவனிச்சேன். ஆஸ்பத்திரியில இல்லாதப்ப நீங்க இப்படியா இருக்கீங்க? உங்களைப் பத்தி நான் கவலைப்பட்டா அதை உங்களுக்குச் சொல்லிடுவேன் நான். நான் கவலைப்படல்லை. நீங்க எல்லார் மாதிரியும், சாதாரணமான கேஸ்தான்.”
காலை செய்தித்தாளோடு இரண்டு கோப்பைகளில் காஃபியை எடுத்துக் கொண்டு தினசரி காலையில் க்ரே வந்தார். வீட்டில் அவர்கள் செய்தது போலவே இங்கும் ஃப்ரெட்டியும் அவரும் செய்தித்தாளைப் படிக்கையில், அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
”வீடு இன்னும் விழாம நிக்கறதா?” பல நாட்கள் கழித்து ஃப்ரெட்டி கேட்டாள். “பாங்கெல்லாம் திறந்துருக்கா? நீங்க தபாலை உள்ளே கொண்டு வந்தீங்களா? ஒரு வாரத்துக்குப் பதிலா, இங்கே பத்து மாசமா இருந்திருக்கற மாதிரி இருக்கு எனக்கு.”
“தபால்லெ கவனிக்கும்படி எதுவுமே இல்லை,” க்ரே சொன்னார். “மினெஸோட்டா லூன் சொஸைட்டியிலேருந்து ஒரு கையேடு வந்தது, அதுதான் வித்தியாசமா இருந்தது. ‘லூன் ம்யூஸிக்’னு ஒண்ணை நீ இப்ப வாங்கறதுக்கு ஆர்டர் போடலாம்ங்கிறது உனக்கு சந்தோஷம் கொடுக்கலாம். ஒரு பிரதி உனக்கு வேணுமா?”
“நான் கொஞ்சம் நகர்ந்துகிட்டா,” ஃப்ரெட்டி கேட்டாள், “நீங்க உங்களோட மேல் கோட்டைக் கழட்டிட்டு, என் பக்கத்துல வருவீங்களா?”
தன் காலணிகளையும், மேலங்கியையும் கழற்றி விட்டு, ஃப்ரெட்டியின் பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொண்டார் க்ரே. அவளுடைய தலைமுடியில் தன் மூக்கை அழுத்தி வைத்துக் கொண்டார், ஒரு வினாடியில் உறங்கக் கூடியவர் போலத் தோற்றமளித்தார். “தொட்டிலைப் பத்திக் கேட்க சைல்ட் வோர்ல்ட்லேருந்து கூப்பிட்டாங்க,” தூங்குபவர் போல இருந்தபடி அவர் சொன்னார். “இயல்பான பைன் நிறத்திலெயா, இல்லை வெள்ளை பெயிண்ட் அடிச்சு வேணுமான்னு கேட்டாங்க. நான் இயல்பான மரநிறம்னு சொன்னேன்.”
“அதைத்தான் நானும் ஆர்டர் செய்தேன்னு நினைக்கிறேன்,” ஃப்ரெட்டி சொன்னாள். “இவங்க கணவர்களை தங்க விடறாங்க. அவங்களை ‘அப்பாக்கள்’னு கூப்பிடறாங்க.”
“நீ சொன்ன மாதிரி, நான் இன்னும் அப்பா ஆகல்லை,” க்ரே சொன்னார். “ஒருவேளை இங்கே என்னைக் குட்டித் தூக்கம் போட விடுவாங்களோ என்னவோ.”
கதவு தட்டப்பட்டது. க்ரே துள்ளி எழுந்து நின்றார், ஜார்டன் பெல் நுழைந்தார். “ரொம்ப பதட்டமா இருக்காதீங்க ஃப்ரெட்டி,” என்றார் அவர். “நான் நல்ல சேதி வச்சிருக்கேன். உங்க ரத்த அழுத்தம் இறங்கல்லைன்னா, இந்தக் குழந்தையை வெளியில கொண்டு வரணும்னு நாங்க நினைக்கிறோம். அப்ப உங்களுக்கு பிரசவத்தைத் தூண்டி விடணும்னு நான் நினைக்கறேன்.”
ஃப்ரெட்டியும் க்ரேயும் மௌனமாக இருந்தனர்.
“பிரசவம் ஆரம்பிக்கும்போது உங்க மூளை ஒரு ரசாயனப் பொருளை உற்பத்தி செய்யும், அதோட செயற்கை வடிவில பிடோஸின்னு ஒரு மருந்து இருக்கு, அதை உங்க ரத்தக் குழாயில் சொட்டு முறையில சேர்ப்போம். அதுதான் தூண்டற முறை.”
“எங்களுக்குத் தெரியும்,” ஃப்ரெட்டி சொன்னாள். “பிரசவம் பத்தின வகுப்புல காதரீன் இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.” ஜார்டன் பெல்லுடைய செவிலி காதரீன் வால்டன். “இதை நீங்க எப்போ செய்யலாம்னு நினைக்கிறீங்க?”
“நாளைக்கி,” ஜார்டன் பெல் சொன்னார்.
“அது வேலை செய்யல்லைன்னா?”
“வழக்கமா அது வேலை செய்யும்,” ஜார்டன் பெல் சொன்னார். “அது வேலை செய்யல்லைன்னா, இரண்டாவது நாள் தூண்டறத்தைச் செய்வோம்.”
“அதுவும் வேலை செய்யல்லைன்னா?”
“பொதுவா அது வேலை செய்யும். அதுவும் வேலை செய்யல்லைன்னா, நாங்க அறுவை சிகிச்சைதான் செய்யணும், ஆனா நீங்க விழிச்சுகிட்டு இருக்கலாம், க்ரே உங்க கையைப் பிடிச்சுகிட்டு இருக்க முடியும்.”
“ஓ, அதுதான் எத்தனை வேடிக்கையா இருக்கும்?” என்றாள் ஃப்ரெட்டி.
ஜார்டன் பெல் சென்றவுடன், ஃப்ரெட்டிக்கு அழுகை பீறிட்டு வந்தது. “ஏன் எதுவுமே சாதாரணமா இருக்க மாட்டேங்கிறது?” என்றாள் அவள். “மத்தவங்க குழந்தைங்கல்லாம் கத்தறதைக் கெட்டுகிட்டு இங்கே நாளாவட்டம் நான் படுத்துக் கிடக்க வேண்டி இருக்கு? எனக்கு என் உடம்பே ஏன் இப்படி வஞ்சனை செய்யறது?”
க்ரே அவளை முத்தமிட்டார், பிறகு அவளுடைய கைகளைத் எடுத்துக் கொண்டார். “சாதாரணம்னு ஒண்ணும் கிடையாது,” அவர் சொன்னார். “நாம் பேசற எல்லாருக்கும் ஒவ்வொரு கதை இருக்கு – தலை ரொம்பப் பெரிசாவோ, அசையவே அசையாதவ குழந்தைங்களாகவோ, முப்பது மணி நேரம் பிரசவ வலி இருந்தவங்களாகவோ, இப்படி. அறுவை சிகிச்சைங்கிறது குழந்தையைப் பெத்துக்கிறதுல கண்ணியமான ஒரு முறைதான்.”
“என்னை என்ன சொல்வீங்க? எங்கே பார்த்தாலும் குழாயை நுழைச்சு வச்சுகிட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டப்பட்டு, நான் இருக்கப் போறேனே அதை என்ன சொல்றது?”ஃப்ரெட்டி கேட்டாள், ஆனால் உடனே அதற்கு வெட்கப்பட்டாள். “இந்த மாதிரி இருக்கறதை நான் வெறுக்கறேன். என்னையே தொலைச்ச மாதிரி இருக்கு எனக்கு, எனக்குப் பதிலா யாரோ ஒரு மோசமான, அழுமூஞ்சியா, ஒப்பாரி வைக்கிறவளா ஒரு ஆளு இங்கே உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு.”
“இன்னும் ரெண்டு மாசத்துல நாம எப்படி ஒரு ரெண்டு மாசக் குழந்தையைப் பூங்காவுக்கு எடுத்துட்டுப் போகப் போறோங்கறதைப் பத்தி யோசி.”
“எல்லாம் சரியா நடக்குமுன்னு நீங்க நெசம்மாவே நம்பறீங்களா?” ஃப்ரெட்டி கேட்டாள்.
“ஆமாம்,” என்றார் க்ரே. “நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆறு மாசத்துல நாம் எல்லாரும் மெய்ன் மாநிலத்துல இருப்போம்.”

அறைக் கதவு சாத்தியிருக்க, லூன் சொஸைட்டியிலிருந்து கிட்டிய அறிவிப்பைத் தன் படுக்கையில் படுத்திருந்தபடி படித்துக் கொண்டிருந்தாள் ஃப்ரெட்டி. மெய்ன் மாநிலத்தில் இருக்கும் ஜுவெல் நெக் என்ற ஊரில் உப்பங்கழி ஒன்றில் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் க்ரேயும் அவளும் வாடகைக்கு எடுக்கும் ஒரு குடிலைப் பற்றி நினைத்தாள். ஆழ்ந்த இருட்டு சூழ்ந்திருக்க, துளி வெளிச்சம் கூடத் தெரியாத இரவில், அங்கு அவர்கள் கூகைகளும், லூன் பறவைகளும் தம் இனங்களுக்குக் கூவி விளிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லூன் அம்மாக்கள் குஞ்சுகளைத் தம் முதுகில் ஏற்றிக் கொண்டு சென்றன. ஃப்ரெட்டிக்கு அது தெரியும். சென்ற முறை அந்தக் கூவலை ஃப்ரெட்டி கேட்டபோது அவள் மூன்றுமாதம் கர்ப்பமாக இருந்தாள். அடுத்த முறை அவள் கூவல்களைக் கேட்கும்போது அவளுக்கு ஒரு குழந்தை இருக்கும்.
பென்னி ஸ்டெர்ன் தன் கர்ப்பத்தைக் கொண்டாட பத்துப் பெண்களுக்கான பகல் விருந்து ஒன்றை அளித்ததை அவள் நினைத்துப் பார்த்தாள். இரண்டு அருமையான கரடி பொம்மைகளும், கால் வைத்த சிறு ஆடைகளும், சிறு ஸ்வெட்டர்களும், குழந்தைக்கான சிறு கம்பளி மற்றும் பருத்திப் போர்வைகளும், அவளுக்கும் க்ரேயுக்கும் விருந்தின் முடிவில் கொடுக்கப்பட்டன. அந்தக் கரடிகள் காஃபி மேஜையில் உட்கார்ந்திருந்தன. அவற்றைப் பார்க்கும்போது தன் நெஞ்சில் வினோதமான, மிதப்பது போன்ற ஓர் உணர்வு எழுந்ததை ஃப்ரெட்டி நினைவு கூர்ந்தாள். அவற்றை எடுத்துப் பார்த்தபோது ஆச்சரியத்தில் அவள் வாய்விட்டுச் சிரித்திருந்தாள்.
சுற்றிலும் குழந்தைக்கான அன்பளிப்புகளைக் கொண்ட பெட்டிகளும், பைகளும் இருக்க, சிவப்பு விளக்குக்காக நின்ற டாக்ஸியில் அமர்ந்திருக்கையில், ஃப்ரெட்டி எதிரே பார்த்தது அவளுடைய இதய ஓட்டத்தை ஒரு கணம் நிறுத்தியது: அவளுக்குப் பழக்கமாகி இருந்த ட்வீட் கம்பளி மேல் அங்கியும், பெய்ஸ்லி பாணி கழுத்து ஸ்கார்ஃபும் அணிந்த ஒருவர் எதிரே நடந்து வந்தார். அது ஜேம்ஸ் க்ளெமென்ஸ், இரண்டு வருடங்களுக்கு அவளுடைய கள்ளக் காதலனாக இருந்தவர்.
அவளுடைய குடும்பத்தைத் தவிர, க்ரேயுடனும், பென்னியுடனும் மட்டும்தான் ஃப்ரெட்டி நெருக்கமாகப் பழகி இருக்கிறாள். யாருடைய காதல் மோகத்துக்கும் அவள் இலக்காக இருந்ததில்லை. என்ன இருந்தாலும் அவளும் க்ரேயும்தான் திருமணம் புரிந்து கொள்ள விதிக்கப்பட்டவர்கள். க்ரேயைத்தான் தன் வாழ்நாள் பூராவும் அவள் காதலித்திருந்தாள். ஆனால் ஜேம்ஸ் அவளை நாடி வந்தார்; யாரும் அதற்கு முன்னர் அவளை நாடியதில்லை. இரண்டு வளர்ந்த மகன்கள் அவருக்கு இருந்தனர், பொருளாதாரத்தையும், கட்டடக் கலையையும் பற்றிப் புத்தகம் எழுதுவதற்காக முதலீட்டு வங்கி ஒன்றிலிருந்து முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். தன் வாழ்வில் ஃப்ரெட்டியைத் தவிர சுவாரசியமாக வேறெதுவும் இல்லை என்பது போல அவர் நடந்து கொண்டார்.
ஒரு சைக்ளோட்ரான் வேலை செய்வது எப்படி என்பது அவளுக்கு எப்படித் தெரியாதோ அதே போலவே காதல்வயப்படுவதின் துவக்க கட்ட அறிகுறிகளும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மோகத்தில் விழுவது சிறுபிள்ளைத் தனம் என்று அவள் நினைத்திருந்தாள். வயது வந்தவர்களுக்கு அதெல்லாம் நேராது என்று அவள் எண்ணம். பல முறை பார்க்க வந்த பிறகு, பகல் உணவுகள் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு, தற்செயல் நிகழ்வுகள் என்று ஃப்ரெட்டி நினைத்த பல சந்திப்புகளுக்கு அப்புறம், ஒரு நாள் அவர் அந்நாட்களில் பாவித்து வந்த, ட்வீட் கம்பளி மேலங்கியும், கேலிக் கூத்தான விதத்தில் நீண்டதாக இருக்கும் பெய்ஸ்லி கழுத்து ஸ்கார்ஃபும் அணிந்து ஜேம்ஸ் அவளைப் பார்க்க வந்தபோது, ஃப்ரெட்டிக்கு தான் அவரைக் காதலிப்பது, ஏதோ தப்பமுடியாத நிகழ்வு போலப் புரிந்தது.
திருப்பங்கள் இல்லாத, பெரும்பாலும் தீவிர உணர்ச்சிகள் எழாத ஃப்ரெட்டியின் வாழ்வில் நிகழ்ந்த பெரும் விந்தையான சம்பவம் ஜேம்ஸின் வருகைதான். வண்ணம் பூசிய தோரணங்களைப் போல மின்னுபவராக அவர் இருந்தார். அதே நேரம், ஃப்ரெட்டிக்கு நேர் எதிரான விதத்தில், அவர் மிக நேர்த்தியாக உடை அணிந்தார். அவருக்கு ஒரு மரத்துக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாது. எல்லாப் பறவைகளும் ஒன்று குருவி, இல்லை காக்கைதான் அவருக்கு. முழுமனத்தோடு பெருநகரவாசியாக இருந்தவர் அவர், அவருடைய சந்தோஷங்கள் எல்லாமும் நகரம் சார்ந்தவை. அவருக்கு ஆப்ரா, மதுபான விருந்துகள், பகலுணவுகள் மிகப் பிடித்திருந்தன. அவர்கள் பொருளாதாரக் கோட்பாடுகளிலும் ஒத்துப் போகவில்லை. ஆனாலும், ஃப்ரெட்டிக்கு இப்போது மிக ஆச்சரியமான அளவு என்று தோன்றுகிற நேரத்தை அவர்கள் சேர்ந்து கழிக்க ஆரம்பித்தார்கள். விதிகள், பாடல்கள், உச்சாடனங்கள், தடைகள் மற்றும் சடங்குகள் என்று நிலவும் ஒரு பழங்குடி சமுதாயத்தைப் போன்றதுதான் ஒரு காதலர் ஜோடி என்று ஃப்ரெட்டி தெரிந்து கொண்டாள். பின்புறமாக நீச்சல் குளத்துக்குள் விழுவதைப் போலத்தான் அவள் காதலில் விழுந்தாள். தன் வாழ்க்கை பாழாக்கப்பட்டதாக இறுதியில் அவள் உணர்ந்தாள்.
பல காலமாக ஜேம்ஸை அவள் பார்த்திருக்கவில்லை. சிவப்பு விளக்கில் அந்த பெய்ஸ்லி ஸ்கார்ஃபை அவள் ஒரு துரிதப் பார்வையில் கண்டாள். காற்றில் அதன் நீண்ட முனைகள் உதறி ஆடுவதை அவளால் பார்க்க முடிந்தது. அவளுக்கு அத்தனை நெருக்கமாக இருந்த ஒருவருக்கு அவளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பது தெரியாது என்பதை நினைக்க அவளுக்கு வியப்பாக இருந்தது. வாடகைக் கார் கிளம்பிப் போகையில், அவள் திரும்பிப் பார்க்கவில்லை. இறுக்கமாக முன்னே பார்த்து அமர்ந்திருந்தாள், இன்னும் பிறக்காத தன் குழந்தைக்கான அன்பளிப்புகள் அவளுக்கு இருபுறமும் சூழ்ந்திருந்தன.
குழந்தை உதைத்தது. ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்துக் கொண்டு கள்ளக் காதல்கள் பற்றி, அம்மாவாகப் போகிறவர்கள் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. அந்த மகப்பேறுப் பிரிவில் இருக்கிற மற்ற அம்மாக்களைப் போல, கள்ளக் காதல் ஏதும் இல்லாதவளாக இருந்தால், இப்படி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் தண்டனை உனக்கு விதிக்கப்பட்டிராது. மற்றவர்களைப் போல ஒரு சூட்கேஸுடன் மகப்பேறுப் பிரிவில் அனுமதிக்கப்பட அவசரமாக வந்து சேர்ந்துவிட்டு, எல்லாரையும் போல பிரசவம் ஆரம்பித்திருக்கும் தனக்கும். மற்றவர்களைப் போல நாளை இந்நேரம் அவளுக்கும் கையில் ஒரு குழந்தை இருக்கும்.
(தொடரும்)

லாரி கோல்வின் இந்தக் கதையின் ஆசிரியர். இங்கிலிஷில் எழுதப்பட்டது. ’அனதர் மார்வெலஸ் திங்’ மூலக்கதையின் தலைப்பு. இது 1985 ஆம் வருடம் நியூயார்க்கர் பத்திரிகையில் பிரசுரமான கதை. மொழிபெயர்ப்புக்கு ‘த ஒண்டர்ஃபுல் டௌன்: நியூயார்க் ஸ்டோரீஸ் ஃப்ரம் த நியூ யார்க்கர்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தப் புத்தகம் பிரசுரமான வருடம் 2000. தொகுப்பாசிரியர்கள்: டேவிட் ரெம்நிக், ஸூசன் சோய். பிரசுர நிறுவனம்: ராண்டம் ஹௌஸ், நியூ யார்க்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மற்றுமோர் அற்புதமான விஷயம்”