என் நண்பன்

தெலுங்கில்: ஸ்ரீவல்லி ராதிகா

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 

களைத்துப் போன உலகம் தம்மை மறந்து உறங்கிய வேளையில், நிலவும் நட்சத்திரங்களும் மட்டுமே குனிந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையாக ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த அப்சரசைப் போல இருந்தாள் சந்தியா. 

அழகொளிரும் புன்னகையோடு சூரியனுக்கு சுப்ரபாதம் பாடியபடி, வாசல் தெளித்துக்  கோலம் போடும் சந்தியாவைப் பார்க்கும் போது, யாரோ பெயர் தெரியாத ஓவியனின் கைவண்ணமோ இப்பெண் என்று தோன்றாமல் போகாது. 

எந்த நாளானாலும், எந்த மாதமானாலும் சந்தியா வாசலில் கோலம் போடும் நேரம் மட்டும் தவறாது. ஒரு நிமிடம் கூட முன் பின்னாக மாறாது. அந்தக் காட்சியைக் காணத் தவறக் கூடாதென்ற திடமான ஆசையால் எனக்கு விழிப்பு வரும் நேரத்திலும் அரை நிமிடம் முன் பின்னாக மாறாது. 

ஆனால் சூரியனுக்கும் இயற்கைக்கும் அந்த நேரம் தவறாமை இருப்பதில்லை. அதனால் சந்தியா போடும் கோலத்திற்குப் பின்னணி மட்டும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாக இருக்கும். அன்று அது அற்புதமாக அமைந்தது. 

விடியும் வரை சிரமப்பட்டு மாலை நேரத்தை வரைந்த ஓவியன், விடிந்து விட்டது என்று தெரிந்தவுடம் தூரிகைகளை அங்கேயே எறிந்துவிட்டு ஓடி விட்டான் போலிருந்தது.  ஆகாயத்தில் சிவப்பு, வெள்ளை, கருப்பு நீலம் என்று எல்லா வண்ணகளும் ஒன்றோடொன்று கலந்திருந்தன. அந்த நிறங்களின் நடுவிலிருந்து வெண்ணிறப் பாவாடை, தாவணியில் மலர்ந்த நந்தியாவட்டைப் பூவைப் போல நடந்து வந்தாள் சந்தியா. 

அவளையே மகிழ்ந்து பார்த்திருந்த என் பக்கம் திரும்பி, வழக்கம்போல “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். வழக்கம் போல என்றால், ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக அதே வழக்கம். எந்த சென்டிமென்ட்டுக்கும் தலைகுனியாத நான், காலை எழுந்ததும் சந்தியாவின் முகத்தைப் பார்க்காவிட்டால் எதையோ இழந்தது போல் உணரும் அளவுக்கு ஆகிவிட்டது அந்த வழக்கம். 

“இன்னைக்கு காலேஜ் இருக்கா?” என்று கேட்டேன். 

“ம்… இருக்கு” என்று உள்ளே சென்ற சந்தியா, மீண்டும் தலையை நீட்டி, “எதுக்கு கேக்குறீங்க?” என்றாள்.

நான் எதுவும் பேசவில்லை. “கதை சொல்லப் போறீங்களா?” என்று கேட்டாள். 

“சொல்லலாம்னு நெனச்சேன்” என்றேன். 

“அப்படின்னா காலேஜுக்கு போகல. இன்னைக்கு அத்தனை முக்கியமான க்ளாஸஸ் எதுவும் இல்ல. ஒரு மணி நேரம் கழிச்சு வரவா?” என்று கேட்டாள்.

“சரி” என்பதாகத் தலையசைத்தேன். அதைப் பார்த்த உடனே ஒரு நொடி கூட வீணடிக்க விரும்பாதவள் போல் தட்டாம்பூச்சியாக உள்ளே பறந்து விட்டாள். நான் நேரடியாக எழுதும் பழக்கத்தை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன்.  இப்போது நான் எந்தப் படைப்பு எழுத நினைத்தாலும் அதை சந்தியாதான் எழுதிக் கொடுக்கிறாள். அவளை என்னுடைய வலது கை என்று சொல்லலாம். 

****** 

இப்போது எழுத்தாளனாகிய என்னில் ஒரு பகுதியாகி விட்ட சந்தியா, நாங்கள் இந்த வீட்டுக்கு வந்த போது நான்கு வயது சிறுமி. அப்போது நான் எழுதத் தொடங்கியிருந்த நேரம். புதிதாக வேலையில் சேர்ந்த நாட்கள் அவை. புதிதாகத் திருமணமான ஆண்டு கூட. புதிய புதிய சிந்தனைகள், கற்பனைகள் எல்லாம் உற்சாகமாக வெளிவந்தன. 

அந்த வீட்டில் கால் வைத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பக்கத்து போர்ஷனில்   விளையாடிக் கொண்டிருந்த சந்தியா கண்ணில் பட்டாள். மூன்று சக்கர வண்டியை தள்ளிக் கொண்டு மழலையில் ஏதோ பேசிக்கொண்டு எங்கள் போர்ஷன் வரை வந்தவள், புது மனிதரைப் பார்த்ததும், பெரிய கண்களை உருட்டி பார்த்து, டக்கென்று நின்று விட்டாள்.  

அதுவரை சின்னக் குழந்தைகளை அவ்வளவாகத் தூக்கிக் கொஞ்ச விரும்பாத நான், அந்தச் சிறுமியை பார்த்ததும், என்னை அறியாமல் இரு கைகளையும் நீட்டி, “பாப்பா இங்க வாம்மா” என்று அழைத்தேன். 

ஆச்சர்யமாக அந்தப் பெண் குழந்தை எந்தவித தயக்கமும் இன்றி சக்கர வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு, சிறுசிறு அடிகளோடு நடந்து வந்து, என் முழங்காலைச் சுற்றிக் கொண்டாள். நான் மேலே தூக்கிப் போட்டு பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டேன். அன்று முதல் அவளோடு எனக்கு அற்புதமான ஒரு பாசம் உருவானது. என் எழுத்துக்களால் எனக்குப் பெயரும் புகழும் வேகமாக வளர்ந்தன. அதை விட வேகமாக  சந்தியாவும் வளர்ந்தாள். 

அவளுக்கு அப்போது பதினோரு வயதிருக்கும். ஒரு நாள் காலை நேரத்தில் தோட்டத்தில் பூச்செடிகளைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து  சந்தியாவுக்கு அவள் அம்மா தலை பின்னி விட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அவர்கள் பேசியது மெதுவாகக் காதில் விழுந்தது. 

சந்தியா கூறினாள், “அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல எஸ்ஸே ரைட்டிங் காம்ப்பெடிஷன் இருக்குமா. நானும் பேர் குடுக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“உனக்கென்ன எழுதத் தெரியும்?” என்று கேட்டாள் அவளுடைய அம்மா. 

“நானே எழுத வேண்டாம். யார்ட்டயாவது கேட்டு எழுதலாம். ஏற்கெனவே தலைப்பு கொடுத்துட்டாங்க” என்றாள் சந்தியா. 

“சரிதான். நல்லா இருக்கு. உனக்கு இப்போ யாரு சொல்லித் தருவாங்க? இது நடக்குற வேலை இல்லை” என்ற தாய், மகளின் பின்னலுக்கு ரப்பர் பாண்ட் போட்டு விட்டு  எழுந்தாள்.

“பக்கத்து வீட்டு அங்கிளைக் கேட்டு எழுதப் போறேம்மா. எனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்” என்று சந்தியா கூறியது காதில் விழுந்ததும் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. எனக்குக் கிடைத்த பல விருதுகள் கொடுக்காத மகிழ்ச்சியை அந்தச் சிறுமியின் சொற்கள் அளித்தன.  

அப்போது வரை என் புத்தகங்கள் எதையும் அவள் படித்ததில்லை. என் சொற்பொழிவுகளையும் கேட்டதில்லை. ஆனாலும் நான் சொல்லித்தரும் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைக்கும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கை எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தது. 

நான் மகிழ்ந்து போய் அங்கேயே நின்றிருந்தேன். அதற்குள் அவளுடைய அம்மா, “சரிடி. இப்போ அவர் உனக்கு அதெல்லாம் சொல்லித் தருவாரா, என்ன? அவர் ஏதோ புது புஸ்தகம் எழுதறாப்போல இருக்கு. அங்கே போய் அவருக்குத் தொந்தரவு கொடுக்காதே” என்று மகளைக் கண்டித்தாள். 

ஆனால் தாயின் பேச்சை சந்தியா முழுவதும் கேட்கவில்லை. உள்ளே ஓடிச் சென்று நோட்டுப் புத்தகமும் பேனாவும் எடுத்து வந்தாள். நான் எதையும் அறியாதவன் போல என் போர்ஷனுக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். அவள் வந்து கட்டுரை பற்றிய விஷயத்தைச் சொன்னாள். நான் சொல்லச் சொல்ல அவள் எழுதிக் கொண்டாள்.

உண்மையில் கட்டுரையை அவ்வாறு சொல்லி எனக்குப் பழக்கமில்லை. பதினோரு  வயது மாணவியின் அளவுக்கு இறங்கி வந்து கட்டுரை எழுதுவது சிரமமாக இருந்தது. ஆனால் நான் சொன்ன அளவுக்கு சந்தியா உயர்ந்து வந்தாள் என்றே சொல்ல வேண்டும். நான் சொல்வதைச் சரியாக புரிந்து கொண்டு எழுதி முதல் பரிசு பெற்றுவிட்டாள். 

நாட்கள் செல்லச் செல்ல என்னுடைய சிந்தனையின் அளவு உயரந்தது. என்னுடைய கற்பனை ஓடும் வேகத்திற்கு உடல் இடம் கொடுக்கவில்லை. சோர்வு ஏற்பட்டு வேலையில் தடங்கல் நேர்ந்தது.

சரியான நேரத்தில் அந்தக் குறையை சந்தியா தீர்த்து வைத்தாள். நான் கூறும் போது எழுதுவது, என் கதைகளை நல்ல பிரதி எடுப்பது என்று எல்லா வேலைகளையும் எனக்காக அவள் செய்யத் தொடங்கினாள்.

சந்தியா இத்தனை தூரம் என் வாழ்வுக்குள் புகுந்து விட்டாலும், அவளை நீண்ட நாட்கள் வரை நான் சரியாக கவனிக்கவில்லை. என் எழுத்துக்களின் தாக்கமும், என் சொற்களின் வேகமும் அவளை எத்தனை தூரம் பாதித்தது என்பதை நான் கவனிக்கத் தவறி விட்டேன். கவனித்த பின்பு வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. 

என் சிந்தனை, என் விருப்பம், என் ஆளுமை எல்லாம் என் கண் முன்னால், என்னைவிட அழகான வடிவம் தாங்கி நிற்கும் போது ஏற்படும் ஆனந்தம் உண்மையில் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. 

ஆனால் என்னை அவ்வளவு தூரம் புரிந்து கொண்ட சந்தியாவிடம் எனக்கு எரிச்சல் ஏற்படுத்தும் ஒரு குணம் இருந்தது. தினமும் பூஜை செய்கிறேன் என்று நேரத்தை வீணடிப்பாள். ஒவ்வொரு ஞாயிறன்றும் கோவிலுக்குப் போவாள். நான் நாத்திகன். விரதங்களையும் பூஜைகளையும் விமர்சிப்பவன். அதை அறிந்தும் கூட அவள் காட்டும் தெய்வ நம்பிக்கை எனக்கு வியப்பை அளித்தது. இன்னுமொரு வியப்பு என்னவென்றால் அவள் என்னில் கூட கடவுளையே கண்டாள். அவளுடைய தோழிகள் அவளுடைய வழிபாட்டைப் பார்த்து கேலி செய்வார்கள். “உன் கடவுள் என்ன சொல்றார்?” என்று கேட்பார்களாம். 

***** 

நான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சந்தியா எப்போது வந்தாளோ தெரியாது.  பேனாவும், பேப்பரும் எடுத்து வைத்துக் கொண்டுத் தயாராக இருந்தாள். “சொல்லுங்க அங்கிள்” என்றாள். 

நான் தலையை நிமிர்த்தி, ஒரு நொடி அவளைக் கூர்த்து பார்த்தேன். இப்போது அவளுக்குப் பதினாறு வயது. தலைக்குக் குளித்திருந்தாள். நெற்றியில் வைத்திருந்த திலகத்தின் கீழ் சின்ன குங்குமப் பொட்டு. தலையில் குங்குமம் ஒட்டியிருந்த அரளிப் பூவைச் செருகியிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று அவள் கூறியதன் காரணம் புரிந்தது. 

“கோவிலுக்குப் போனியா?” என்று கேட்டேன். 

என் குரலில் தெளிவாகத் தெரிந்த எரிச்சலை உணர்ந்து ஒருமுறை தலையைத் தூக்கி என்னைப் பார்த்தாள். சிறிய புன்னகை புரிந்து மீண்டும் தலையைக் குனிந்து கொண்டு எழுதத் தயாரானாள். எனக்குக் கோபம் வந்தது. இந்த ஒரு குணம் தான் அவளிடம் எனக்குப் பிடிக்காதது. எல்லாவற்றிலும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத இந்தப் பெண் கடவுள் விஷயத்தில் மட்டும் நான் கூறுவதை ஏன் ஏற்க மறுக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. 

அந்த நொடியே முடிவெடுத்து விட்டேன். எப்படியாவது சந்தியாவை கடவுள் நம்பிக்கையில் இருந்து வெளியில் கொண்டு வரவேண்டு.ம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சந்தியா வீட்டுக்குச் சென்ற போது, “சாயந்திரம் அஞ்சு மணிக்கு வா. வெளியில போயிட்டு வரலாம்” என்றேன்.

“எங்கே?” என்று மாலை வெளியில் கிளம்பும் போது கூட அவள் கேட்கவில்லை. நான் கார் டிரைவ் செய்த போது பக்கத்து சீட்டில் அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். கார் ஊர் எல்லையைத் தாண்டியபோது தலையை நிமிர்த்தி என்னை வியப்போடு பார்த்தாள். ஊர், மைதானம் எல்லாவற்றையும் தாண்டி மூன்று மணி நேரம் பயணித்த பின் கடலின் கோஷம் காதில் விழுந்தது. கடற்கரையின் சுற்றுப் புறமெங்கும் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்தது. பனை மரங்களும், ஒற்றையடி மண் பாதையும்  தெரிந்தன. அந்த ஒற்றையடி மண் பாதையில் கார் எம்பிக் குதித்தபடி சென்றது. 

”எங்க போறோம் அங்கிள்?” என்று கேட்டாள் சந்தியா. 

“தெரியாது” என்றேன். 

என் சிறுவயதில் இங்கு அருகிலிருக்கும் கிராமத்திற்கு கடலில் குளிப்பதற்காக நான் வந்திருக்கிறேன். ஆனால் இப்போது அந்த ஊரையும் தாண்டி கடற்கரையை ஒட்டி வெகு தொலைவு வந்து விட்டோம். இந்த இடத்திற்கு என்ன பெயர் என்றும் எனக்குத் தெரியாது. கடலலையின் ஓசையைக் கேட்டபடி கடலுக்கு மிக அருகில் காரைச் செலுத்தியபடியே  அவளிடம், “சந்தியா, நீ கடவுளை ஏன் நம்புறேன்னு சொல்லு பார்க்கலாம்” என்றேன். 

அதற்கு பதில் சொல்லாமல், “நீங்க ஏன் நம்ப மாட்டேங்குறீங்க, அங்கிள்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள். 

நான் பதில் சொல்வதற்குள், “கடவுள் கண்ணுக்குத் தெரியாததால் நம்ப மாட்டேன்னு சொல்லாதீங்க. அது ரொம்ப பழைய வாதம். கண்ணுக்குத் தெரியாததெல்லாம் இல்லை என்று சயின்ஸ் கூட சொல்லாது” என்றாள் சந்தியா. 

இந்த விஷயத்தில் சந்தியாவின் எண்ணம் என்ன என்று அறிய வேண்டும் என்று எப்போதிலிருந்தோ நினைத்துக் கொண்டிருந்தாலும் இன்றைய என்னுடைய திட்டம் வேறு. 

அதனால் அவளோடு விவாதிக்க விரும்பாமல், “ஒருவேளை கடவுள் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை” என்றேன். 

என் குரலில் தொனித்த விளையாட்டுத் தனத்தைக் கண்டு பிடித்து விட்டவள் போல,   முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “ப்ச். கடவுள் இருக்கார்னு உணரும் அளவுக்கு உங்கள் இதயம் தயாராகவில்லை என்பது துரதிருஷ்டம், அங்கிள்” என்றாள்.

நான் அதிர்ந்து விட்டேன். எனக்குக் காலையில் பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது. காலையில் சந்தியா கோலம் போட்டபோது, வானத்தையும், சுகமான அந்த வானிலையையும் பார்த்து, “எந்த ஓவியன் வரைந்த படைப்போ?” என்று நான் நினைத்ததும், “உண்மையில் கடவுள் இருக்கிறார் போலிருக்கிறது. இல்லாவிட்டால் இத்தனை அற்புதமான ஓவியத்தை யார் வரைய முடியும்?” என்று எண்ணி மகிழ்ந்ததும் உண்மை. 

அந்த நினைவிலிருந்து வெளிவந்து, “அப்படிச் சொல்ல முடியாது. எனக்குக் கூட  ஒன்றிரண்டு முறை கடவுள் இருக்கார்னு தோணியிருக்கு, சந்தியா” என்று தயங்கித் தயங்கி மெதுவாகக் கூறினேன். 

தன்னை வேண்டுமென்றே சீண்டுகிறார் என்று நினைத்து சந்தியா சிரித்தாள். “உங்களுக்கு  ரெண்டு மூணு தடவை கடவுள் இருக்கார்னு தோணியிருக்கு, பாத்தீங்களா? ஆனா எனக்கு ஒரு தடவ கூட இல்லையோன்னு தோணவே இல்லை” என்று கூறி வாயைக் குவித்துச் செல்லமாகக் கூறினாள். அதில் கடவுள் மேல் அவளுக்கிருந்த பக்தி வெளிப்பட்டது. 

காரை நிறுத்தியபடி, “இப்போ தோணுது” என்றேன். பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில்   கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஆள் நடமாட்டமற்ற சூழல் தெளிவாகத் தெரிந்தது. எதிரில் சற்று தொலைவில் கடல் ஹோவென்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. மறுபுறம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பனங்காடு. அந்தச் சூழல், அந்த நிசப்தம், ஒரு நொடி எனக்கே உடல் சிலிர்த்தது.  

“இறங்கு” என்றேன். அந்த இடத்தை வியப்போடு பார்த்த சந்தியா, மெதுவாக இறங்கி, காரைச் சுற்றி வந்து என்னைத் திரும்பிப் பார்த்தாள். 

“எத்தனை நல்லா இருக்கு” என்றாள். அவள் கண்களிலும் குரலிலும் உற்சாகம் வெளிப்பட்டது. 

“பிடிச்சிருக்கா?” என்று கேட்டேன். 

“உம். நல்லாருக்கு” வெண்ணிலவில் அவள் கண்கள் மின்னலைப் போல ஒளிவீசின. 

“உனக்கு பயமாயில்லையா?” 

“ஊஹூம். பயமாயில்ல. ஆனா, என்னவோ போல இருக்கு. இத்தனை பெரிய மணற்பாங்கு. தூரத்தில் அவ்வளோ பெரிய சமுத்திரம். இப்படி எல்லையே இல்லாமல் இருக்குதேன்னு பார்த்தா மலைப்பா இருக்கு. இத்தனை பெரிய கடவுளின் படைப்பில் நான் எத்தனை அல்பமான சின்னவள்னு தோணுது. இதையெல்லாம் படைச்ச கடவுள் எத்தனை உயர்ந்தவர்னு தோணுது. அவரை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணுது” என்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெய் மறந்திருந்தாள்.   

எனக்கு அவளுடைய சொற்களைக் கேட்டுப் பொறாமையாக இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கடவுள் மேல் இத்தனை நம்பிக்கை எப்படி வந்தது? என்றுமே பார்த்திராத ஒருவர் மேல் இத்தனை அன்பா? இத்தனை பக்தியா? சட்டென்று நடந்து சென்று காரில் ஏறி அமர்ந்தேன். 

“இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம், அங்கிள்” என்றாள் சந்தியா கெஞ்சலாக. 

“நீ இங்கியே இரு. உன்னை நான் திரும்ப அழைச்சுட்டு போகப் போறதில்லை” என்றேன் 

சந்தியா என்னை வியப்போடு பார்த்தாள். “அதோ தூரத்தில் விளக்கு எரியுது பாரு. அங்கே ஒரு கிராமம் இருக்கு. அது ஒரு நாலு கிமீ தூரம் இருக்கும். நீ மெதுவா நடந்து அங்கே போனால் கூட அங்கேருந்து நம் ஊருக்கு இப்போ பஸ் எதுவும் இருக்காது. அந்த கிராமத்தில் யாராவது உனக்கு உதவி செய்றாங்களான்னு பாக்குறேன். நீ என்ன செய்யப்  போறேன்னு நானும் பாக்குறேன்” என்று தீர்மானமாகக் கூறிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தேன். 

சந்தியா பதற்றத்தோடு “அங்கிள்” என்று அழைத்து, கையை நீட்டி என் கையைப் பிடிக்கப் பார்த்தாள். அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை மகிழ்ச்சியோடு கவனித்தபடி, “ஆமாம். உன்னை இங்கேயே விட்டுட்டுப் போகப் போறேன். கடவுளை மூர்க்கத்தனமா நம்புவதால் எந்த பயனும் இல்லைன்னு உனக்குத் தெரியணும். பகுத்தறிவும், தர்க்கபுத்தியும் தேவைன்னு உனக்குப் புரியணும். எந்த சங்கடம் வந்தாலும் மனிதனை அவைதான் காப்பாத்துமே தவிர, கடவுள் இல்லை. அதை நீ புரிஞ்சுக்கறதுக்காகத் தான் உனக்கு இந்த டெஸ்ட்”   

ஷாக் அடித்தவளைப் போல என்னைப் பார்த்த சந்தியா நீட்டிய கையை வெடுக்கென்று திரும்ப எடுத்துக் கொண்டாள். சலனமின்றி அப்படியே நின்றவளைப் பார்க்கையில் மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவாளோ என்று அச்சமாக இருந்தது. 

இன்னும் ஒரு நொடி அங்கே இருந்தால் காரை விட்டிறங்கி இருப்பேன். ஆனால் அதற்குள் சந்தியா தெளிவாகி விட்டாள். மீண்டும் முகத்தில் குறும்பும், உதடுகளில் புன்னகையுமாக, “பரீட்சை வைக்குறீங்களா, அங்கிள்? எனக்கா? கடவுளுக்கா?” என்றாள். 

எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. என்ன பெண் இவள்? காரை ரிவர்ஸ் எடுத்து அவளருகில் வந்தேன். “நீ எத்தனை ஆபத்துல இருக்கேன்னு உனக்கு இன்னும் புரியல. அத்தனை தூரம் மரத்துப் போயிடிச்சு உன் மூளை. மடத்தனமா யோசிக்கறவங்க மூளையெல்லாம் இப்படித்தான் ஆகும். எந்த ஒரு ஆதாரமோ, அடித்தளமோ இல்லாம, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றி வந்துட்டிருப்பீங்க. உண்மையை உணர மாட்டீங்க. நீங்க எல்லாம் இப்படித்தான். உங்களால் ஒண்ணும் முடியாது” என்றேன். 

ஒரு நொடி நேரம் பேச்சை நிறுத்தி கடைசி முறையாக சந்தியாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் சிறிதாவது பயமோ அழுகையோ தென்பட்டாலும் சிரித்துவிட்டு, “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். கார்ல ஏறு” என்று சொல்லி அழைத்து வந்திருப்பேன். 

ஆனால், அப்போது கூட அவள் முகத்தில் கொஞ்சமும் சிதறாத நம்பிக்கை.  

“எங்களால ஒண்ணும் முடியாதுன்னு சொல்றீங்களே, அங்கிள். நாத்திகவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும் செய்யிற வேலையெல்லாம் நாங்களும்தான் செய்யிறோம். எங்களாலும் சிந்திக்க முடியும். கஷ்டப்பட்டு உழைக்க முடியும். ஆனால் அவுங்க ஆசையைக் கைவிட்டுட்ட கடைசி நிமிஷத்துல கூட எங்களால ஒரு வேலை செய்ய முடியும், தெரியுமா? அது அவுங்களால முடியாது” என்றாள். அவள் சற்று நிறுத்தியதும் நான் ஆர்வத்தோடு பார்த்தேன். 

“நாங்க அங்க நேரத்துல கடவுளை பிரார்த்தனை செய்வோம்” கண்களில் குறும்பு வெள்ளம் போல் பொழிந்து கொண்டிருக்க, அந்த இளம் பெண் கூறிக் கொண்டிருந்தாள். எனக்கு சிரிப்பும் கோபமும் ஒரு சேர வந்தன. 

சற்றும் அச்சமிலாமல் அவள் அப்படியே நின்று கொண்டிருந்தாள். நான் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பி விட்டேன். மூன்று கிமீ வந்த பின் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கடியாயரத்தில் நேரம் பார்த்தேன். இரவு எட்டரை ஆகியிருந்தது. காலை சீட்டில் நீட்டி அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். 

சந்தியா என்ன செய்கிறாளோ? பனை மரங்களின் இடையில் தனியாக அமர்ந்து, வெண்ணிலாவையும், அதற்கும் அப்பாலிருக்கும் இருளையும், எழும்பி விழும் கடலலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாளோ?

நடந்து வரத் தொடங்கியிருப்பாளா? இங்கு வருவதற்கு நாற்பது நிமிடங்களாவது ஆகும். அதற்குள் ஒரு தூக்கம் போட்டு எழுந்து விடலாம் என்று தோன்றியது. என் யோசனையை நினைத்து என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்படி ஒரு பெண் குழந்தையை விட்டு வந்ததுமில்லாமல் தூக்கம் வேறா? அவளுக்கு பயமில்லை என்பது சரிதான். ஆனால் அப்படிப்பட்ட மனித சஞ்சாரமில்லாத சூழலில் தனியாக ஒரு பெண்ணை விட்டு வந்ததை நினைத்து எனக்கு உடம்பு நடுங்கியது. இன்னொரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தேன். சாலையையே பார்த்தவாறு காருக்குள் அமர்ந்திருந்தேன். 

சந்தியாவை என்னோடு ஒரு பங்ஷனுக்கு அழைத்துச் செல்வதாகவும் காலையில் திரும்ப வருவோம் என்றும் வீட்டில் கூறிவிட்டு வந்தேன். என்னோடு வந்ததால் சந்தியா நலமாக  இருப்பாள் என்று நம்பி, அவர்கள் கவலையின்றி இருப்பார்கள். சந்தியா என்றால் எனக்கு உயிரைவிட முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். 

பெண் குழந்தை பிறந்தால் சுஷ்மிதா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் அவளை  டாக்டராக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டேன். முதல் ஆசை நிறைவேறாவிட்டாலும் இரண்டாவது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். சந்தியாவை டாக்டராக்க வேண்டும். அதற்கும் முன்னால் மூட நம்பிக்கைகளையும் பாட்டியம்மா யோசனைகளையும் அவளிடமிருந்து விலக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். குளிரில் என் உடல் உதறலெடுத்தது. 

என் கண்கள் உறக்கத்தை வேண்டின. கண்களை மூடக் கூடாது என்று நினைத்த போது மேலும் அவை மூட முயன்றன. அவ்வாறு எத்தனை நேரம் கடந்ததோ தெரியாது. தொலைவில் ஏதோ ஒரு பறவையின் கத்தல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். நேரம் பதினோரு மணி காட்டியது. ஐயோ அத்தனை நேரமாகி விட்டதா? இரண்டரை மணி நேரமாக இப்படியே உட்கார்ந்திருந்தேனா? 

சந்தியா இன்னும் வரவில்லையே. என்ன செய்கிறாளோ? நடக்க பயந்து அங்கேயே உட்கார்ந்து விட்டாளா? காரை விட்டிருங்கி மெதுவாக பின்னோக்கி நடக்கத் தொடங்கினேன். சால்வை, மப்ளர் எல்லாம் ஏற்பாடாக எடுத்து வந்திருந்தேன். தேவை இல்லாவிட்டாலும் டார்ச் லைட் கூட எடுத்து வந்தேன். சந்தியா எதிரில் வருகிறாளா  என்று கவனமாக பார்த்துக் கொண்டே நடந்தேன். 

பாதி தூரம் நடந்த போதே மூச்சு வாங்கியது. பயமும் பரபரப்பும் துணைக்கு வந்தன. காரை எடுத்து வந்திருக்க வேண்டும். இப்போது திரும்பச் சென்று வருவது கஷ்டம். சமீபத்தில் இத்தனை தூரம் நடந்து பழக்கமில்லாமல் போய்விட்டது. 

மூன்று கிமீ தூரத்தையும் நடந்து முடிப்பதற்குள் மணி பன்னிரண்டானது. பயங்கரமான நிசப்தத்தின் பின்னணியில் கடலின் ஹோ என்ற சப்தம் இன்னும் பயங்கரமாக ஒலித்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை சந்தியா தென்படவில்லை. எனக்கு இதயம் நின்று விடும் போலானது. கடற்கரையில் அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரை ஓடினேன். எங்குமே அவளைக் காணவில்லை. எனக்கு நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. 

இங்கேயா அவளை விட்டு வந்தேன்? இன்னும் கொஞ்சம் தொலைவிலா? இங்கேதான் என்று நினைக்கிறேன். டார்ச் லைட்டை அடித்து காரின் டயர் தெரியும் அடையாளத்தைத் தேடினேன். எனக்கு எதுவும் புரியவில்லை. பயத்தில் இதயம் நின்று விடும் போலிருந்தது. பின்னால் திரும்பி பனந்தோப்புக்குள் ஓடினேன். அங்கும் இல்லை. தலை சுற்றுவது போலிருந்தது. ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றேன். 

“பகவானே” என்று என் உதடுகள் என்னையறியாமல் உச்சரித்தன. அடுத்த நொடி மனம் திடுக்கிட்டது. இது என்ன? நான் என்ன சொன்னேன்? “பகவானே” என்று கடவுளையா அழைத்தேன்? சந்தியா இப்படித்தான் சொல்வாள். அப்படியே நானும் உச்சரித்தேன் என்று உணர்ந்தேன். எந்தச் சின்னக் கஷ்டம் வந்தாலும் அவள் “பகவானே” என்பாள். அதைக் கேட்கும் போதெல்லாம் நான் அதை மறுப்பேன். 

அப்படிப்பட்ட நான் “பகவானே” என்று அழைத்து விட்டேன். என் மேல் எனக்கே கோபமாக வந்தது. வெட்கத்தில் என் தலை குனிந்தாற்போலிருந்தது. அப்போது தொலைவில் சந்தியாவைப் பார்த்தேன். என் இதயம் வேகமாக அடித்துக் கொள்வதையும் பொருட்படுத்தாமல் ஒரே ஓட்டமாக அவளை நோக்கி ஓடினேன். 

குளிரில் உடலை சுருக்கிக் கொண்டு, கைகளை முழங்கால்களில் செருகிக் கொண்டு  படுத்திருந்த சந்தியாவைப் பார்த்ததும் என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. 

நான் மனிதன்தானா? இல்லை அசுரனா? இன்னும் ஒரு வாரத்தில் சந்தியாவுக்கு பரீட்சை இருக்கிறது. பாதி ராத்திரியில் இப்படிக் குளிரில் தவிக்க விட்டு, சாப்பாடும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல், இப்படியா செய்வான் ஒருவன்? மனிதாபிமானமுள்ள ஒருவன் செய்யும் செயலா இது? 

என் வாயிலிருந்து சொற்கள் கூட வெளிவர மறுத்தன. “சந்தியா” என்று அழைப்பது கூட கஷ்டமாக இருந்தது. ஒரு முறை லேசாக அவளைத் தோளில் தட்டியதும் எழுந்து உட்கார்ந்தாள். 

உண்மையிலேயே தூங்குகிறாளா? அல்லது தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாளா? அவள் முகம் நான் கிளம்பிச் சென்ற போது இருந்ததைப் போலவே தெளிவாக இருந்தது. முழங்காலைக் கட்டுக் கொண்டு அமர்ந்தபடி, “என்ன அங்கிள்? அதுக்குள்ள வந்துட்டீங்க? பரீட்சை நாளைக்கு காலை வரைக்கும் உண்டு தானே?” என்று கேட்டாள் தூக்கக் கலக்கமான குரலில்.

“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?” கோபத்தோடு சத்தமாகக் கேட்டேன். “நான் உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்? நீ என்ன செய்துட்டிருக்கே? பாதி ராத்திரில இந்த மாதிரி ஒரு இடத்துல உன்னை மறந்து தூங்குறியே? இங்கே ஏதாவது பாம்பு கீம்பு வந்துச்சின்னா என்ன ஆகும்? நான் இங்கே பக்கத்துல ஒரு பாம்பைக் கூட பார்த்தேன். நான் வர்றதுக்கு ஒரு நொடி லேட்டாயிருந்தாலும் நீ உயிரோட இருக்க மாட்ட” என்றேன். 

“அப்படியா?” கண்களை விரித்துக் குறும்பாகக் கேட்டாள் சந்தியா.  

நான் தடுமாறினேன். “நான் எப்பவாவது பொய் சொல்லியிருக்கேனா?” என்றேன். 

சந்தியா சிரித்தாள். “நீங்க எப்பவுமே பொய் சொல்லமாட்டீங்க. அதுனாலதான் எப்பவாவது  சொன்னால் மாட்டிக்குவீங்க” என்றாள்.

முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு அவளிடம் கூறினேன், “பாம்பு இல்லாட்டா இன்னொண்ணு. இங்க ஆபத்து எதுவும் இல்லைன்னு நெனச்சியா? உனக்கு இந்த அளவு கூட பயமில்லாட்டா எப்படி?” என்று பொரிந்து தள்ளினேன். 

சந்தியா பின்னால் திரும்பப் பார்த்தாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு மேலே அண்ணாந்து பார்த்தாள். “எனக்கு எதுக்கு அங்கிள் பயம்.? நீங்க தான் இருக்கீங்களே” என்றாள். 

அவள் சொன்னதைக் கேட்டு அவள் தலையில் இரண்டு குட்டு குட்டினேன். 

“ரொம்ப கெட்டிக்காரி. எத்தனை அழகா பிளேட்டை திருப்பி போடுறே?” என்றேன். 

“நான் பிளேட்டைத் திருப்பிப் போட்டேனா?” 

“பின்ன? நான் கிளம்பிப் போகும்போது நீ என்ன சொன்னே? எனக்குக் கொஞ்சமும் பயமில்லை. கடவுள் பார்த்துக்குவார்னு சொன்னே. இப்போ அந்த கடவுள் யாரும் உதவிக்கு வராததால, “அங்கிள், நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம்?”னு சொல்றே. உனக்கு இப்பவாவது கடவுள் மேல பக்தி தொலஞ்சுதா இல்லையா?” என்று விடாமல் கேட்டேன். 

என் பேச்சு முடிவதற்குள் சந்தியா பெரிதாகச் சிரித்து விட்டாள். இரண்டு நிமிடங்கள் நிறுத்தாமல் சிரித்தாள்.

“எதுக்கு இப்போ சிரிக்குறே?” என்று கேட்டேன். 

எழுந்து நின்றவள் என் கையை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, என் தோளில் தலை சாய்த்து நடக்கத் தொடங்கினாள். “எனக்கு நீங்க கடவுளுக்குச் சமம் அங்கிள். உங்ககிட்ட இதுவரைக்கும் இதைச் சொல்லல” என்றாள். 

நான் டக்கென்று நின்று விட்டேன். சந்தியாவின் முகத்தைப் பார்த்து, “இதோ இதுக்குத் தான் பிளேட்டு மாத்துறதுன்னு பேரு” என்று கூற வாயெடுத்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை யூகித்த சந்தியா கையைக் காட்டி என்னை நிறுத்தினாள்.

“அங்கிள், உங்களுக்குத் தெரியும். எனக்கு உங்கள் மேல வழிபாட்டு உணர்வு உண்டுன்னு. கடவுள்னு நினைக்கும்படியான நம்பிக்கை உங்க மேலே எனக்கு உண்டு. இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எப்ப உங்களைப் பத்தி பேசினாலும் “ஓ உன் கடவுளா?” ன்னு கிண்டல் செய்வாங்க. அப்படியிருக்கும் போது என் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும்னு நான் ஏன் நினைக்கணும்? அதுனாலதான் நான் நம்பிக்கையை இழக்கல. அழவுமில்லை. பயப்படவுமில்லை” என்றாள் சந்தியா. 

என் விதண்டாவாதம் அங்கு எடுபடாது என்றுணர்ந்து என் கையை உதறி விடுவித்துக் கொள்ள முயன்றேன். அதை உணர்ந்த சந்தியா என் கையை இன்னும் உறுதியாகப் பற்றிக் கொண்டாள். என் கழுத்தைச் சுற்றி கையை வளைத்துப் போட்டுக் கொண்டாள். 

“ஏன் அங்கிள் இத்தனை கோபம் உங்களுக்கு? நீங்கதானே எங்கிட்ட மனசுல நினைக்குற ஒவ்வொரு சிந்தனையையும் எக்ஸ்ப்ரெஸ் செய்யத் தெரியணும். எதுக்கும் பயபடக்கூடாதுன்னு சொன்னீங்க?” 

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் அப்படிக் கேட்டபோது அந்தக் குழந்தையைக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. ‘என்னமாப் பேசுறா?’ எனக்குச் சிரிப்பு வந்தது.

“கோபம் இல்லம்மா. பாரு, நமக்கு நல்லா விவாதம் செய்யத் தெரியும்கறதுனால ஒரு பலவீனமான விஷயத்தை பலமானதாக வர்ணிக்கக் கூடாது. வாக்குவாதம் பண்றது தான் முக்கியம்னா, உன்னை விட என்னால் நல்லா விவாதம் பண்ண முடியும். ஆனால் உண்மை என்று ஒண்ணு இருக்கு. கண்ணுக்குத் தெரியாத கடவுள் மேல் பக்தி இருப்பதால் என்ன பிரயோஜனம்? சொல்லு. கண்ணுக்குத் தெரியும் மனிதர்களையும் செயல்களையும் நம்பாமலும் மதிக்காமலும் ஒரு பொய்யை மெய்யாக நினைத்து வழிபடுவது முட்டாள்தனம் இல்லையா? காரணம் இல்லாத காரியங்களைச் செய்துட்டு அதனால எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதுன்னு சொன்னால், இனி அதுக்கு பதில் யாரும் சொல்ல முடியாது” என்றேன் விரக்தி மேலிட. 

சந்தியா எதுவும் பேசவில்லை. தலையைக் குனித்தபடி நடந்து வந்தாள். நானும் எதுவும் பேசவில்லை. இருவரும் மெளனமாகக் காரில் ஏறினோம். எனக்கு மனம் எதிலும் ஒட்டாமல் எரிச்சலாக இருந்தது. நான் செய்த செயலை நினைத்து எனக்கே கோபம் வந்தது. 

“இது என்ன விவாதம்? அவரவர் நம்பிக்கை அவரவருக்கு இருக்கும். அதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. ஒருவர் மனத்தை வேறொருவர் மாற்ற முடியுமா என்ன? நான் எத்தனை முட்டாள்தனமான காரியத்தைச் செய்தேன்?” என்று நினைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு வண்டியை ஓட்டினேன். 

சந்தியா காரில் வைத்திருந்த ப்ளாஸ்கைத் திறந்தாள். அதிலிருந்த காபியைப் பார்த்து “காபி குடிக்குறீங்களா அங்கிள்?” என்று கேட்டாள்.

“வேண்டாம்” என்று தலையசைத்தேன். 

சற்று பொறுத்து பிஸ்கட் பாக்கெட்டைத் திறந்தாள். “பிஸ்கட் வேணுமா?” என்று கேட்டாள்.

நான் எதுவும் பேசவில்லை. சந்தியாவின் கண்களில் கண்ணீர். “உங்களுக்கு என் மேல கோபம் தானே?” என்று கேட்டாள். அழுதுவிடுவாள் போலிருந்தது அவள் குரல்.  

“இல்லை சந்தியா” என்று கூற நினைத்தேன். ஆனால் வாயைத் திறக்கவோ பேசவோ எனக்கு விருப்பமில்லை. 

திடீரென்று சந்தியா குரலெடுத்து அழத் தொடங்கினாள். “இனிமே இந்தப் பெண்ணுகிட்ட எதுவும் சொல்லக் கூடாது. இவ எப்படிப் போனா நமக்கென்னன்னு நினைக்குறீங்களா அங்கிள்?” என்று விம்மிக் கொண்டே கேட்டாள்.

“ச்ச ச்ச. அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று கூற நினைத்தேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை. சரியாக அதே சொற்களை சற்று முன்னால் நான் நினைத்தேன் என்பது உண்மை. அதனால் மெளனமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். சந்தியா பெருமூச்செறிந்தாள். ஒரு வினாடி என்னைக் கூர்மையாகப் பார்த்தாள். 

“நான் ஒண்ணு சொல்லலாமா?” என்று கேட்டாள். அதற்கும் நான் பதில் சொல்லவில்லை. 

“அதனால் தான் கடவுள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் உங்களை மாதிரி கோவிச்சுக்க மாட்டார்” என்றாள். அவள் குரலில் பழி வாங்கும் உணர்வு வெளிப்பட்டது. அவள் கூறிய விதத்தைக் கேட்டு அவளைத் தலையைத் திருப்பி பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. 

“ஆமாம். அவரோடு எனக்கு எப்போதுமே வாக்குவாதம் வராது. நான் சொன்னது பொய்யானால் அது அவருக்குத் தெரிந்து விடும். அதனால் அது உண்மை என்று அவரிடம் விவாதிக்க முடியாது. நான் சொல்வது உண்மையானால் அதுவும் கடவுளுக்குத் தெரிந்து விடும் விவாதிக்க வேண்டிய தேவையே இருக்காது” என்றாள் முடிவாக.

அவள் கூறியதை கேட்டு மனம் விட்டுச் சிரித்தேன். இடது கையை அவள் தலை மேல் வைத்து அங்குமிங்கும் திருப்பினேன். “எங்கே கற்றுக் கொண்டாய் இந்த விதண்டாவாதத்தை?” என்று கேட்டேன். அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தலையை விடுவித்துக் கொண்டாள். 

கால் இரண்டையும் சீட்டில் தூக்கி வைத்துக் கொண்டு முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். எதிரில் சாலையைப் பார்த்தபடி கூறினாள், “நான் ஒண்ணும் அறிவில்லாமலோ முட்டாள்தனமாகவோ கடவுளை நம்பவில்லை. நான் அவருக்காக செலவழிக்கும் நேரம் வீண் போகாது. அதனால் மீதி நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்குறதுக்குத் தேவையான சக்தியும், அமைதியும் கிடைக்கும். உங்களுக்கு என்ன தெரியும்? அவர் எவ்ளோ நல்ல ஃப்ரெண்ட் தெரியுமா? என் வயசு, சிந்திக்கும் திறமை, வசதி வாய்ப்புகள் எதையும் பொருட்படுத்தாமல் அவர் என்னோடு ஃப்ரெண்ட்ஷிப் பண்ணியிருக்கார். நான் சொல்லும் ‘கவி போத்தனா’ செய்யுள் எல்லாம் சந்தோஷமா கேப்பார். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவார். நான் பாடுற தியாகராஜ கிருதி எல்லாம் சுவாரஸ்யமா கேப்பார். அவர் என்னை விட எத்தனை பெரியவர்? ஆனாலும் எங்க காலேஜ் லெக்சரருக்கும் அவர் ஃப்ரெண்ட். எங்க ப்ரின்சிபாலுக்கும் ஃப்ரெண்ட். சின்ன வயசுல அவரும் என்னப் போலவே நிலா வேணும்னு அழுதார். தெரியுமா அங்கிள்? வெண்ணெய் கூட திருடினார். எத்தனை அட்வென்ச்சர்ஸ் செஞ்சாரு தெரியுமா? இப்போ இனிமையா புல்லாங்குழல் ஊதுறார் என் நண்பன்” கடகடவென்று பேசிக்கொண்டு வந்த  சந்தியா மூச்சு விடுவதற்குச் சற்று நிறுத்தினாள். 

“உங்களுக்கு எப்படிச் சொல்றதுன்னு எனக்குப் புரியல அங்கிள். அவர் எங்கேயும்   எப்போவும் எனக்கு நண்பன் தான். மீதி உள்ள உலகத்துக்கும், எனக்கும் நடுவில் இருக்குற லிங்க் பத்தி உங்களுக்குத் தெரியுமா அங்கிள்? இந்த உலகம் முழுவதையும் என் ஃப்ரெண்ட்தான் படைச்சார். இன்னொரு விஷயம் சொல்லவா? அவர் படைச்ச இந்த மனிதர்களில் நெறைய பேர் என் ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்ட்ஸ்தான். அவரை நான் விரும்புறதுக்கும், அவர் மேலே அன்பு செலுத்துவதற்கும் இதை விட வேறென்ன காரணம் வேணும்? சொல்லுங்க, அங்கிள்” என்று கேட்டு நிறுத்தினாள். 

தன் பெரிய கண்களை விரித்து என்னைப் பார்த்து கேட்டாள் சந்தியா. என்னால் பதில் சொல்ல இயலவில்லை. “ஏன் பதில் சொல்ல வேண்டும்?” என்ற அகம்பாவம் காரணமல்ல. நிஜமாகவே எனக்கு பதில் தெரியவில்லை. முதல் முறையாக எனக்கு என் எண்ணங்களை விமர்சிக்க வேண்டும் என்று தோன்றியது. நான்தான் தவறு செய்கிறேனோ என்று ஐயம் உதித்தது. 

சந்தியாவின் குரல் மிருதுவாக ஒலித்தது. “அங்கிள், நான் சின்னப்பெண். உங்களோடு இத்தனை தூரம் விவாதம் செய்வது தப்போ சரியோ எனக்குத் தெரியல. ஆனால் எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். நம்முடைய சந்தோஷங்களை நமக்குப் பிடிச்சவங்களோடு  பகிரணும்னு தோணிச்சு. நான் பார்த்த அற்புதங்களை அவுங்களுக்கும் காட்டணும்னு எனக்கு ஆசையா இருக்கும். அதுனாலதான் இதை எல்லாம் உங்களோடு ஷேர் பண்ணிகிட்டேன். அதுவுமில்லாம” என்று பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள் சந்தியா. 

நான் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தேன். ஏன் பாதியில் நிறுத்திவிட்டாள் என்று புரியவில்லை. “ஏதோ சொல்ல வந்தியே, சொல்லு” என்றேன் ஆர்வத்தை அடக்க முடியாமல். 

சந்தியா தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டாள், “அதுதான் எப்படிச் சொல்றதுன்னு யோசிக்குறேன். அது கரெக்டா, இல்லையான்னு தெரியல. ஆனால் எனக்கு என்ன தோணுதுன்னா, மனுஷனுக்கு எப்பவும் தன்னை விட அதிக புத்திசாலியான ஆதர்சம் ஒண்ணு இருக்கணும். வாழ்க்கையில் நாம் வளரும்போது, அதாவது, நாம் எத்தனை முன்னேறினாலும் அதைவிட உயரத்துல நம்மோட ஃப்ரெண்ட் இருக்கணும். அவருக்கு நம்முடைய கடத்த காலம், நிகழ்காலம், தனிப்பட்ட ஆளுமை, கெட்ட குணங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். நம்மை அவர் ரொம்ப விரும்பணும். நாம் எதிர்காலத்தில் செய்யப்போற செயல்களுக்கும் யோசனைகளுக்கும் முயற்சிகளுக்கும் அவர் ஆதர்சமாக இருக்கணும். அப்படிப்பட்ட மனிதர் கிடைப்பது அரிது. கெடச்சாலும் அவர் எப்பவும் நம்மோடு நிலையாக இருப்பது ரொம்ப அரிது. இல்லையா அங்கிள்?” என்று சந்தியா கேட்டபோது, நான் திகைத்துப் போனேன். 

காரை என் கைகளால் எப்படி ஓட்டுகிறேன் என்பது கூட எனக்குப் புரியவில்லை. சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட மன நிலையில் அவள் கூறியதை உடன்பாட்டு உணர்வோடு கேட்கத் தொடங்கினேன். 

“அப்படி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு நீங்க கூட கடவுளை நம்பினால் நல்லா இருக்குமேன்னு தோணும் அங்கிள். உங்களுக்கு அப்படிப்பட்ட நல்ல ஃப்ரெண்ட், உங்க அளவுக்கு யோசிக்கக் கூடியவர் வேறே யார் கிடைப்பார்? சொல்லுங்க அங்கிள். எனக்கு நீங்க இருக்கீங்க. உங்களுக்கு யார் இருக்காங்க?” என்றாள்.

திகைத்துப் போனேன். நான் பேச மறந்து வெகு நேரமாயிற்று. மெதுவாக பொழுது விடிந்து கொண்டிருந்தது. கார் ஊருக்குள் நுழைந்தது. என் மனமும் சிறிது சிறிதாக உயிர் பெற்றது. 

பெரிய மேதைகள், சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவுவாதிகள் எல்லோருமே இறுதி நாட்களில் கடவுள் நம்பிக்கைக்குள் வந்து விடுகிறார்கள். ஏன்? அவர்களுக்கு என்ன ஆகிவிடும்? இறந்து விடுவோம் என்ற சூழ்நிலை வந்தவுடன் அவர்களை பயம் பிடித்துக் கொள்கிறதா? என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த சந்தேகத்திற்கு இப்போது பதில் கிடைத்தது போல் தோன்றியது. அத்தனை அறிவைப் பெற்றபிறகு, அவர்களோடு ஃப்ரெண்ட்ஷிப் செய்வதற்கு வேறு யார் இருப்பார்கள்? அவர்களுடைய மனத்துக்கு  நெருக்கமாக யார் இருப்பார்கள், எல்லாம் அறிந்த கடவுளைத் தவிர? நீண்ட நாட்களாக மனத்தை அரித்த கேள்விக்கு விடை கிடைத்தாற்போல இருந்தது. 

யாருடனும் கலக்க முடியாமல் போகும் எனக்கு, ஒருவேளை உண்மையாகவே கடவுள் நல்ல நண்பனனாக இருப்பாரோ? “ததாஸ்து” என்பது போல கோயில் மணி ஒலித்தது. தலையை உயர்த்திப் பார்த்தேன். சிவன் கோவில் கதவுகள் அப்போதுதான் திறந்தன போலிருந்தது. சாணம் தெளித்த தரையில் இருந்து ஈர மண் வாசனை வெளிப்பட்டது. கோவிலைச் சுற்றிலும் நந்தியாவட்டை பூத்திருந்தன கோபுரத்தின் மேல் புறாக் கூட்டம் பறந்தது.  

மெதுவாகக் காரை நிறுத்தினேன். சந்தியா வியப்போடு பார்த்தாள். அவள் பார்வையில்  கேள்விக் குறி இருந்தது. 

“கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போவோம்” என்றேன். 

ஒரு நொடி நேரம் ஆச்சர்யப்பட்டாலும் அடுத்த நொடியில் அவள் கண்கள் மின்னல் ஒளியைப் பாய்ச்சின. டக்கென்று காரை விட்டிறங்கி இரண்டு கைகளாலும் பாவாடையைப் பிடித்துக் கொண்டு இரண்டிரண்டு படிகளாகத் தாவி கோவிலுக்குள்  சென்றாள். 

அவளைத் தொடர்ந்து நானும் என்னுடைய புது நண்பனைச் சந்திப்பதற்காக முதல் படியில் கால் வைத்தேன். 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.