விண்ணகத்தில் அண்ணன் லூசிஃபரும் தம்பி கிறிஸ்துவும் காலந்தோறும் ஆடிவரும் நன்மையின்மை, நன்மை ஆகியனவற்றுக்கு இடையிலான போராட்டத்தை மண்ணில், மனிதவுருவில் தொடங்கினால் என்னவெல்லாம் நிகழுமோ அதுவே இந்தக் ‘கடல்’ நாவல்.
உள் மனத்தில் ஒளியணைந்தோ, ஒளியேற்றியோ என இருநிலைகளுள் ஒன்றில் மட்டுமே இங்கு மனித வாழ்க்கை நிகழக்கூடும். மனித ஆத்மா ஒளி குறையக் குறைய லூசிஃபரின் அணியிலும் ஒளி சுடரச் சுடர கிறிஸ்துவின் அணியிலும் சென்று சேர்கிறது.
மனித ஆத்மாவுக்குள் பல்வேறு அகப்புறக் காரணங்களால் ஒளி ஒரு கணம் சுடர்ந்தும் மறுகணம் மங்கியுமாக மனித ஆத்மாவை அலைக்கழிக்கிறது. இந்த அலைவின் எதிரெதிரான இருவேறு எல்கைகளிலிருந்து லூசிஃபரும் கிறிஸ்துவும் அந்த ஆத்மாவைக் கைக்கொள்ளப் போராடுகின்றனர்.
ஆத்மாவில் ஒளி சுடர்பவர்கள் கிறிஸ்துவிலும் ஒளி அணையப்பெற்றவர்கள் லூசிஃபரிலும் ஓய்வுகொள்கின்றனர். ஒளி சுடர்பவர்கள் மேலே மேலே மேலேயென அணையாச் சுடரெனும் பெருநட்சத்திரத்தை நோக்கியும் ஒளியணையப் பெற்றோர் கீழே கீழே கீழேயென இருள் கவிந்த பேராழத்தை நோக்கியும் முடிவற்றுப் பயணிக்கிறார்கள்.
எவ்வளவு ஆழத்திலிருந்தாலும் ஒரு துளி ஒளிபோதும் மீட்புக்கு. அந்தத் துளி ஒளிக்காகவே ஒட்டுமொத்த மானுடமும் காத்திருக்கிறது. இருளென்பதே மிகக் குறைந்த ஒளிதானே! ஆதலால், எல்லோருக்கும் மீட்புண்டு.
ஒளியை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு சிந்தனைத் துளியும், செயல்சார்ந்த நகர்வும் நம்மை லூசிஃபரிலிருந்து விலக்கி, கிறிஸ்துவை நோக்கிக் கொண்டுசெல்லும். அதேபோலவே, இருளை நோக்கி நாம் சென்றால் கிறிஸ்துவை உதறி, நாம் லூசிஃபரை அடையலாம். மனிதகுலத்திற்கு இந்த இரண்டே வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாய்ப்பு உள்ளதாகக் கற்பனை செய்துகொள்கின்றனர். அது வெற்றுக்கற்பனை மட்டுமே! இது பகுத்தறிவுவாதம் அல்ல. அது இவற்றைக் கடந்ததோர் அறிவியல் போர்வையிலான பெருங்கற்பனை. அதைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.
ஒளிக்கும் இருளுக்கும் இடைப்பட்ட நிலை என்று ஏதும் இருக்கிறதா? இல்லை. அதுபோலவே லூசிஃபர் சார்பு, கிறிஸ்து சார்பு இரண்டையும் தவிர்த்து பிறிதொன்று இருக்கிறதா? இல்லை. ஏன்? ஒளியும் இருளும் கலந்த ஒன்று இருக்க முடியுமா? நன்மையும் நன்மையல்லாதவையும் கலக்க முடியுமா? முடியாது.
காரணம், நடைமுறையில் இரண்டு நிறங்கள் இணைந்து பிறிதொரு நிறம் உருவாகும் தன்மை இவற்றுக்கு இல்லை. ஒன்று ஒளி இருக்கும் அல்லது ‘இருள்’ எனக் கருதப்படும் மிகக் குறைந்த ஒளி இருக்கும். அதேபோல நன்மை இருக்கும் அல்லது ‘தீமை’ என்று கருதப்படும் நன்மையல்லாதது இருக்கும். ஆனால், ஒளியே அல்லாத இருளோ, நன்மையோடு கலந்துவிட்ட தீமையும் நம் மனத்தின் கற்பனைகளே! இந்தக் கற்பனை உருக்களைப் புறவுலகில் தேடத் தொடங்கினால், ஏமாற்றமே மிஞ்சும்.
அப்படியொன்று இருப்பதாக நினைத்துக் கொள்வதில் மானுடம் மகிழ்சியடைகிறது. காரணம், தேவைக்கு ஏற்ப நம்மை நாம் அழுக்காக்கிக் கொள்ளவும் சூழலுக்கு ஏற்ப நம்மை நாமே தூய்மையாக்கிக் கொள்ளவும் அது நமக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால்தான். இது ஒருவகையில் தப்பித்தல் நிலை. தன்னைத்தானே ஒளித்துப் புதைத்துக்கொள்ளும்நிலை. ஒருவகையில் இது தற்கொலைக்குச் சமம். தேவைக்கு ஏற்ப தலையையோ, வாலையோ காட்டித் தப்பித்துக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகள். லூசிஃபர் அணியில் நிற்பவரைக்கூட மன்னித்துவிடலாம். அவர்களைவிட இவர்களே ஆபத்தானவர்கள். இவர்களுக்குப் பரலோக ராஜ்யத்தில் மட்டுமல்ல, பாதாள உலகிலுங்கூட இடமிருக்காது.
இந்நாவலில் லூசிஃபரின் மண்ணக ஊர்தியாக பெர்க்மான்ஸ். கிருஸ்துவின் மண்ணக ஊர்தியாக சாம். இவர்களின் பகடையாடலின் ஆட்டக்காயாக தாமஸ். பாவிகளை நரகத்திலிருந்து சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லும் தேவதை பியாட்ரீஸாக இந்த நாவலில் செலினாவும் பியாவும் வந்துசெல்கின்றனர். ஒருவகையில் பார்த்தால் பெர்க்மான்ஸும் சாமும் இணைந்து சுமக்கும் பாரச்சிலுவையாகத்தான் தாமஸ்.
பெர்க்மான்ஸ், சாம், தாமஸ் ஆகிய மூவருக்குள்ளேயுமே லூசிஃபரும் கிருஸ்துவும் சம அளவில் ஆக்கிரமித்துள்ளனர். இருவருள் யார், எந்தத் தருணத்திலெல்லாம் மிகுதியாக ஆக்கிரமிக்கிறார்களோ (தடுத்தாட் கொள்கிறார்களோ) அந்தத் தருணத்தில் மட்டும் இவர்கள் மூவரும் அவரின் குரலுக்கு அடிபணியும் எளிய மானுடர்களாகவே (ஆட்டுக் குட்டிகளாகவே) மாறிவிடுகின்றனர்.
லூசிஃபர் விரிக்கும் வலையில் விழுந்துவிட்ட தாமஸ், தன்னுடைய வாழ்க்கைப்பாடமென இரண்டு முன்முடிவுகளை வரையறுத்துக் கொள்கிறான்.
“தனக்கு எதையும் எவரும் தரமாட்டார்கள் என்று அறிந்ததே அவனுடைய முதல்பாடம். தன் கையில் இருக்கும் ஒன்று அந்தக் கணத்தில் மட்டுமே தன்னுடையதென்று அறிந்தது இரண்டாவது பாடம்” (கடல்-41)
இவ்விரு பாடங்களே தாமஸை அவனுடைய எல்கைவரை கொண்டுசென்று நிறுத்துகின்றன.
கிறிஸ்துவையே நம்பியிருக்கும் சாம் அவ்வப்போது தம் வாழ்வில் அடைய நேரும் நம்பிக்கை இழப்புக்கு உரிய உவமையாகப் பின்வரும் வரிகளைக் காட்டலாம்.
“உயிர்க்காக்கும் மந்திரம் ஒன்று உயிருக்காகப் போராடி போராடி நீ பலமுறை சொன்னதனாலேயே பழகிப்போய் வெறும் சொல்லாக ஆகிவிடுவது எவ்வளவு பெரிய துக்கம்?” (கடல்-109)
மனிதர்களை இத்தகைய துக்கத்தில் ஆழத்துவதுதான் லூசிஃபரின் முதல் உத்தி. நம்பிக்கை இழப்பே ஒரு மனிதரை நிலைகுழையச் செய்து, முற்றிலும் எதிரான பாதைக்கு மாற்றிவிடும்.
‘கடல்’ என்ற இந்த நாவலின் தலைப்பு இந்நாவலில் பல்வேறு விஷயங்களுக்குப் புறக்குறியீடாகவும் அகக்குறியீடாகவும் காட்டப் பட்டுள்ளது.
“உண்மையில் பிரார்த்தனை செய்வதற்குரிய இடம் கடல்தான். கண்முன்னால் விரிந்து நம்மை ஒன்றுமே இல்லாமலாக்கி ஒருகணம் மரணமும் மறுகணம் பேரழகுமாக நிறைந்து நிற்கும் கடல்தான் கடவுளின் பருவடிவம்.” (கடல்-157)
ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது. கடலின் மேற்பரப்பில் கிறிஸ்து. கடலின் அடிப்பரப்பில் லூசிஃபர். கடலில் விழும் எந்தவொன்றும் உடனேயே மிதந்துவிடாது. சில அடிகளேனும் மூழ்கித்தான் பின் மீளவேண்டும். ஆக, முதல் வெற்றி லூசிஃபருக்குத்தான். நிலைத்த வெற்றி என்றைக்கும் கிறிஸ்துவுக்கே!
அந்த வெற்றி, பின்வருமாறு ஒவ்வொன்றாகத்தான், சிறுக சிறுகத்தான், மிக மெதுவாகவேதான் கூடிப்பெருகும்.
“மெழுகுவர்த்தியுடன் வெளியே சென்றேன். எனக்குப் பின்னால் இன்னொருவன் ஒரு மெழுகுவர்த்தியுடன் வந்தான். நான் சாலையில் நடந்தபோது என்னைத் தொடர்ந்து மெழுகுவர்த்திகள் கிளம்பி வந்தன. மின்மினிக் கூட்டங்கள் போல. பின்பு சிவந்த ஒளியாலான ஒரு நதிபோல. என்னுடைய வாழ்க்கை மீண்டும் அங்கே ஆரம்பித்தது.” (கடல்-289)
கிறிஸ்துவின் வெற்றி பெருகத்தொடங்கியதும் ஒருபோதும் சுருங்குவதேயில்லை. ஒன்று என்ற எண்ணிட்ட பின்னர் அதனைத் தொடர்ந்து சுழிகளை இட்டு இட்டு எண்ணிக்கையைப் பெருக்குவதுபோல அதனைப் பெருக்கிக்கொண்டே சொல்லலாம். முடிவற்று… முடிவிலியை நோக்கி…
அவ்வாறு பெருக்கிச்செல்வோருக்கே புரியும், கடலின் விரிவும் ஆழமும். ஆம்! ‘கடல்’ எண்ணற்ற அலைக்குறியீடுகளைக்கொண்டே கடவுளின் பெருமையைப் பற்றிப் பேசும் மாபெரும் புத்தகம்.
“தாள்கள் புரளும் மிகப்பெரிய வேதாகம புத்தகம் போல மிகப் பெரிய நீல அலைகளைக் கொண்டிருந்தது கடல்.” (கடல்-500)
அனைத்து மானுடருக்கும் கிறிஸ்துவின் அருமைபெருமைதெரியும்தான். ஆனாலும் அவர்களின் மனத்தில் இருளென ஒரு விழைவு தங்கி, அவர்களை முதலில் லூசிஃபரை நோக்கியே உந்தித் தள்ளும். காரணம்,
“மானுடர் எளிதில் செல்லத்தக்க எல்லை தீமைதான்” (கடல்-509)
ஆம்! மிகுதியான எந்த முயற்சியும் இல்லாமல் மானுடர் ஆற்றக்கூடிய செயல் தீமையன்றி வேறென்ன இருக்க இயலும்? நன்மைக்குத்தான் ஆயிரம் அகம், புறம் சார்ந்த ‘பெரும்பாடுகள்’தேவை.

இந்த நாவலில் கிறிஸ்தவ இறையியல் சார்ந்த பல்வேறு அக, புற விளக்கங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றின் வழியாகவே போலி கிறிஸ்தவமும் போலி இறையியலும் தோலுரிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இணைந்தே கிறிஸ்தவப் பங்குத் தந்தையர்களின் நிதி வசூல், நிதிப் பங்கீடு மற்றும் அவர்களின் சுகபோக வாழ்வு முதலியனவும் அவர்களின் வழியாக நிலைநாட்டப்படும் உயர்அதிகார மையங்களும் கட்சியரசியல் பின்னணிச் சார்புகளும் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. தூய கிறிஸ்துவின் பாதையில் இவையெல்லாம் ஏன், எவ்வாறு நிகழ்ந்தன, நிகழ்கின்றன? இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம், ‘இங்கு வேதாகமத்தைப் ‘படிக்கும் முறை’யில் ஏற்பட்ட பிழையே!’
ஆம்! வேதாகமத்தை ஒரு புத்தகத்தைப் படிப்பதுபோலப் படித்து, அதில் உள்ள இறைவசனங்களை மனனம் செய்தால் நாம் கிறிஸ்துவைப் பற்றி ‘அறிய’ மட்டுமே முடியும். ஆனால், வேதாகமத்தை உலகளாவிய தத்துவக் கண்ணோட்டத்திலும் உலக மதங்களின் மெய்யியல் புரிதல்களோடும் உலக மெய்ஞானியர்களின் வாழ்வியலோடும் இணைத்தும் உரசியும் விமர்சித்தும் ‘பயிலும்’போது மட்டுமே நாம் மெய்யான கிறிஸ்தவ இறையியலை அணுகி, கிறிஸ்துவை ‘நெருங்க’ முடியும்.
தமிழகத்தில் அத்தகைய ‘பயில்முறை’ கிறிஸ்தவத்தில் குறிப்பாக கிறிஸ்தவ இறையியலில் நிகழவில்லை என்பதே கசப்பான உண்மை. நான் கிறிஸ்தவ கல்லூரியில் ஐந்தாண்டுகள் பயின்றவன். அதனால், இதனை என்னால் உறுதிபடக் கூறமுடிகிறது.
இந்நாவலில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கிறிஸ்தவ மதப்பரவலும் அது சார்ந்து எழுப்பப்பட்ட தேவாலயங்களும் புதிய கிறிஸ்தவ திருச்சபைகளும் அவற்றோடு இணைந்து அரசர்களைப் போன்று வாழும் பாதிரிமார்களும் அவர்களுக்கு நிதி அளிப்போர்களின் பின்னணியையும் எழுத்தாளர் ஜெயமோகன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
புதிய தேவாலயங்களுக்கும் புதிய கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் பெரும் நிதியளிப்பவர்களுள் பெரும்பான்மையானோர் உள்நாட்டைச் சார்ந்த திடீர்ப் பணக்காரர்களே! ஏன் அவர்கள் அளிக்கிறார்கள்? காரணம், தங்களின் மதம், சாதி சார்ந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, வெளியேறி புதிய அந்தஸ்தையும் அடையாளத்தையும் பெறுவதற்காகவே.
அவர்கள் எப்படித் திடீர்ப் பணக்காரர்களானார்கள் என்பது தனிக்கதை. அவர்கள் காலவோட்டத்தில் தமக்குக் கிடைத்த கடல்சார்ந்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகத் ‘தவறான வழி’களில் பயன்படுத்திக் கொண்டமையால்தான் என்று இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.
காலப்போக்கில் கடற்புரத்தில் கட்டுமரங்கள், மீன்பிடிப் படகுகளாகுகின்றன. பின்னர் ‘லாஞ்சுகள்’ எனப்படும் அதிவிசைப் படகுகளாகின்றன. அவர்களின் மீன்பிடிப்புப் பகுதி விரிவடைகிறது. உயிரைப் பணயம்வைத்து சர்வதேச எல்லைவரை சென்று மீன்களையும் மற்றவற்றையும் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கடலில் உயிரை வைத்தும் கரையில் உடலை வளர்த்தும் பெரும் பணக்காரர்களாகின்றனர். அவர்கள் தேவாலயத்திற்கோ புதிய கிறிஸ்தவ திருச்சபைகளுக்கோ பெரும்நிதியளிப்பதன் வழியாகப் பாவமன்னிப்பைத் தேடிக்கொள்கின்றனர். அவர்களுக்கு மன்னிப்போடு இணைந்தே அடையாளமும் அந்தஸ்தும் கிடைக்கின்றன என்று இந்த நாவல் நமக்குக் குறிப்புணர்த்துகிறது.
இந்த நாவலில் மிக முக்கியமான பகுதி என நான் கருதுவது பெருங்கவிஞர் தாந்தே அலிகேரி வருவதே. முக்திக்கான பாதையை அவர் காட்டும்போது, மொத்த வாழ்க்கையையுமே ‘பரமபத’ விளையாட்டுத்தான் என நம் மனம் உணர்கிறது. பாம்புகளால் தீண்டப்பட்டுக் கீழிறங்கியும் ஏணிகளால் உந்தப்பட்டு மேலேறியும் அகமனம் ஆடும் ‘பரமபதம்’ இது.
இதில் உள்ள அப்படை விதிகளையும் விளையாடும் முறைகளையும் விளக்கிக் கூறுகிறார் கதைமாந்தர் ‘தாந்தே’. ஆடத் தொடங்கியதுமே ஒவ்வொருடைய அகமும் ‘மொத்த வாழ்க்கையுமே மாபெரும் சூதாட்டம்’தான் என அறிகிறது. முடிவற்ற சூதாட்டம். இறையின் பேராடல்.
முக்திக்கான பாதையில் நடந்துசெல்ல முடியாது. வென்றுதான் செல்ல வேண்டும். தன்னைத்தானே மறுதலித்து மறுதலித்துத்தான் தன்னை வெல்ல முடியும். வெல்லும்போதே முன்னேற முடியும். அந்த முன்னேற்றம் ஒன்றுக்குள் ஒன்றெனச் சூழலும் ஐந்நிற வட்டங்களைக் கடக்க உதவும்.
வெளிவட்டம் நீல நிறம். அதற்குள் சிவப்பு நிற வட்டம். அதனை அடுத்து அடர்மஞ்சள் நிற வட்டம். அடுத்து பொன்னிறவட்டம். இ(அ)றுதியாகத் தூயவெள்ளை நிற வட்டம்.
‘இதுவே நான்’ என நினைக்கும் வழக்கமான இனிய வாழ்க்கையே வெளிவட்டமான நீல நிற வட்டம். ‘இவ்வளவுதானா நான்? நான் இதுவல்ல!’ எனத் தன்னையே வினாவுக்கு உட்படுத்தி மீறல்களையும் பிழைகளையும் பாவங்களையும் புரிவதன் வழியாக இரண்டாவது வட்டமான சிவப்பு நிற வட்டத்துக்குள் நுழைந்துவிடலாம்.
இதிலிருந்து வெளியேற வேண்டுமானால் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. அச்சத்தோடும் குற்றவுணர்ச்சியோடும் வெளியேற ஒரு வழி. பைத்தியமனநிலையில் கொண்டாட்டத்தோடு வெளியேற மற்றொரு வழி. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றின் வழியாக வெளியேறினால் நகரத்திற்குச் சென்றுவிடலாம். அதுதான் அடர் மஞ்சள் நிற வட்டம். ஒருவகையில் இது மறுவார்ப்பு உலைக்களம்தான்.
இதிலிருந்து வெளியேற இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று எரிந்து சாம்பலாகி வெளியேறுதல். மற்றொன்று அழுகிக் கரைதல். இவற்றில் ஒன்றன் வழியாக வெளியேறினால் நாம் அடைவது போலிச் சொர்க்கம் எனப்படும் பொன்னிறவட்டம். இதுவே பேரின்பம்தான். பேரின்பத்திற்குப் பின்னரும் ஏதேனும் உள்ளனவா எனத் தேட விழைவோருக்கென இருப்பது தூயவெள்ளை நிற வட்டம். இது முத்தி. அதாவது மீளாநிலை.
சாம், பெர்க்மான்ஸ், தாமஸ் ஆகிய மூவரும் இந்த ஐந்து வட்டங்களில் எவற்றைக் கடந்தனர், எவற்றில் தேங்கினர்? என்பதனை நாம் இந்த நாவலை முழுவதுமாக மனத்துக்குள் ஓட்டிப் பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம். அதோடு இணைத்து நாம் எந்த வட்டத்தில் இருக்கிறோம், எதில் இருக்க வேண்டும் என்று சுயசரிபார்ப்பும் செய்துகொள்ள வேண்டும். இலக்கியமே ஓர் ‘உரைகல்’தானே? அதில் நம் அகத்தைச் சிறிது உரசிப் பார்த்துக் கொண்டாலேபோதும். நாம் செல்ல வேண்டிய திசை நமக்குத் தெளிவாகிவிடும்.
எல்லோருக்கும் மீட்பு நிச்சம். ஆனால், அது சிலருக்கு விரைவாகவும் பலருக்குத் தாமதமாகவும் கிடைக்கும். காரணம், அவரவர் இந்த உலகில் தத்தம் வாழ்க்கையைச் செல்லும் பாதையைப் பொருத்து. நீதியின் பாதை முட்களாலும் அநீதியின் பாதை மலரிதழ்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. நீதியின் பாதையில் செல்வோரை கிறிஸ்து கைநீட்டிக் காக்கிறார். அநீதியின் பாதையில் செல்ல நினைத்தாலே போதும் உடனே லூசிஃபர் அவரைத் தன் உள்ளங்கையில் ஏந்திக்கொள்கிறார். கிறிஸ்து நம்மைப் புறவயமாக மேலே மேலே என உயர்த்திச் செல்கிறார். லூசிஃபரோ நம்மை அகவயமாகக் கீழே கீழே என அழுத்திச் செல்கிறார்.
இந்த நாவலில் புறவயமாகக் கூறப்பட்ட ஒவ்வொன்றும் (கடல், அலை, அன்பு, சினம், இன்பம், துன்பம், அழுக்கு, தூய்மை போன்றன) மானுடருக்கு அகவயமாக உட்பொருள் கொள்கின்றன. மானுடப் பெருவாழ்வெனும் கடலில் சூழ்நிலைகள் எனும் அலைகளால் அன்பும் சினமும் சம அளவில் வருகின்றன. இரண்டும் மானுடரை முழுக்காட்டி இன்பத்தையும் துன்பத்தையும் அளித்துச் செல்கின்றன. சிலர் இன்பத்திலும் பலர் துன்பத்தியும் திளைக்கின்றனர். அவரவருக்கான இன்பம், அவரவருக்கான துன்பம் எனத் தெரிந்தே அவற்றைக் கொண்டு சுயவதைப் படுகின்றனர்.
அழுக்கிலிருந்து தூய்மைக்கும் தூய்மையிலிருந்து அழுக்கிற்குமான இந்த ஊசலாட்டம் எல்லோருடைய வாழ்விலும் மிக எளிதாகவே தொடர்ந்து நடைபெறுகின்றது. முடிவற்ற இந்த ஊசலாட்டம் சர்க்கஸில் நிகழும் ‘பார்’ விளையாட்டுப்போல அகமனத்துக்குள் அந்தரத்தில் நடைபெறுகிறது. மொத்த வாழ்வுமே அபத்தமாக மாறும்போது, வெறுமை கவியும்போது இந்த ஊசலாட்டம் அழுக்கு அல்லது தூய்மை என்ற ஈரெல்கைகளுள் ஒன்றில் கொண்டுசென்று அழுத்திவிடுகிறது. சிலருக்கு அழுக்கு அலுத்த பின்னர்தான் தூய்மையை நோக்கி நகர்கின்றனர். சிலருக்குத் தூய்மையே பழகிவிடுகிறது. அவர்கள் தூய்மையிலேயே தம்மை இருத்திக் கொள்கின்றனர். இறுதியில் மீட்பு இருவருக்கும்தான்.
உலக வாழ்க்கை மொத்தமும் சிலுவைப்பாடுதான். நீங்கள் கீச்சானாக (ஆழ்கடல் சுறாக்களைவிட மிகவும் சாமர்த்தியமானவை) மாறாவிடில் இந்த உலக வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. உள்ளத்தில் ஒளி குன்றாதவரையில் நீங்கள் கடவுளின் குழந்தைதான்!.
எதை எழுதினாலும் அதன் உச்சத்தை மட்டுமே எழுத இயன்ற எழுத்தாளர் ஜெயமோகனின் மற்றுமொரு ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece) இந்த நாவல்.
ஆமென்.

- 📕கடல் (நாவல்)
- ✍️ஜெயமோகன்
- விஷ்ணுபுரம் பதிப்பகம், கோயம்புத்தூர், இந்தியா.
- 📃- 576
- ₹ – ரூ.690.
- 📨: contact@vishnupurampublications.com
- ☎️ : 9080283887
- கடல் நாவல் வாங்க
- 📑கடல் மின்னூல் வாங்க
மேலும்:
- “கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்… | எழுத்தாளர் ஜெயமோகன்
- தவிப்பின் கடல்- சிறில் அலெக்ஸ்
- கடல், அகக்கடல் | கண்ணன் பார்த்தசாரதி
- ஆத்மாவின் அலைகடல் | ஜெய்ஸன் சாமுவேல்
- ஆழி அறிவது- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்
- கடல்- கடிதம் | மணிகண்டன், கோவை
- பிரபு மயிலாடுதுறை: கடல் : மூன்று மனிதர்களின் கதை
- சினிமா விகடன்; கடல் படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் நாவலாக எழுதி முடித்திருக்கிறார்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
