சித்திரம் பேசுதடி

கலை மற்றும் அறிவியல் துறைகளில் அரங்கேறிய பல புதுமைகளுக்கு இன்றுவரை லியோனார்டோ டா வின்சி பெயர் பெற்றவர். சமீபத்தில், அமெரிக்க வேதியியல் சங்கத்தின் இதழான (Journal of American Chemical Society or JACS) வெளியிடப்பட்ட புதிய பகுப்பாய்வுகள், அவரது ஓவியங்களுக்கு அடியில் உள்ள அடிப்படை அடுக்குகளுக்கும் கூட அவரது ஆர்வம் பரவியிருப்பதைக் காட்டுகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, மோனா லிசா மற்றும் கடைசி இரவு உணவு, இரண்டிலிருந்தும் கிடைக்கப்பட்ட மாதிரிகள், அவர் ஈயம்(II) ஆக்சைடை (லிதார்ஜ், PbO) வைத்துக் கொண்டு பரிசோதித்ததற்குச் சாத்தியமான தரவுகளை தந்துள்ளன.1,2 2023‑இல் வெளியான இந்த ஆய்வு, மோனா லிசா ஓவியத்தின் அடித்தளப்பூச்சினில் மறைந்திருக்கும் சேர்மங்களை ஆராய்ந்ததில் “இயற்கை ரசவாதம்” காலத்தை எவ்வளவு முற்றிலும் கடந்து நிற்கின்றது என்பதைத் தெளிவாக்குகிறது.

இவரது கலைப்படைப்புகளுக்குக் கீழே காணப்படும் ப்ளம்போனாக்ரைட் (Plumbanocrite) என்ற அரிய தாது உருவாகியதற்கான தேடலை அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் எடுத்துக் காட்டுகிறது.
அந்த மெல்லிய வெளிர் அடுக்கு விவரிக்கும் கதை, 500 ஆண்டுகளாக மெதுவாக மாறிக்கொண்டே இருந்தாலும், அதன் மேல் அவர் வரைந்த உருவம் சிதறாமல் இன்றும் ஒரு மர்மமான புன்னகையுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
அவரது அன்றைய ஸ்டுடியோவை சற்று கற்பனை செய்து பார்க்கலாம். ஃப்ளோரன்சின் ஒரு காலை நேரம். லியோனார்டோ டா வின்சியின் ஓவியக் கூடம், ஓர் ஆய்வுக்கூடமாக இருந்திருக்கும். நசுக்கிப் பொடியாக்கப்பட்ட தூள்கள் நிறங்கள் ஒழுக, எண்ணெய், சுண்ணாம்பு மற்றும் ஒளிந்து நிற்கும் உலோக நறுமணங்களுடன் காற்றில் கலந்து அறை முழுவதும் பரவியுள்ளது. கையில் மரக்கரண்டி பிடித்துக் கொண்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் லியோனார்டோ எண்ணெயை மெதுவாகக் கிளறிக் கொண்டிருக்கிறார்; உருகிய எண்ணெய் ஒரு பாம்பு போல் நெளிந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இன்னும் எந்த வண்ணமும் சேர்க்கப்படவில்லை.
கனத்த மஞ்சள் சாயம் கொண்ட ஈய ஆக்சைடு (PbO, litharge) தூள், பாத்திரத்துக்குள் அவர் சேர்க்கும்போது, மரக்கரண்டியில் மெல்ல கிளுகிளுக்கிறது. அச்சமயத்தில் ஓவியர்கள் அனைவரும் அறிந்த ஈய வெள்ளை (lead white), அதாவது செருசைட் (cerussite) மற்றும் ஹைட்ரோசெருசைட் (hydrocerussite) துகள்கள் கலந்த வெண்ணிற ப்ரைமராகப் பயன்படுத்தும் கலவை அல்ல.
ஆனால் இது வேறு! இங்கு எண்ணெய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, அது உலோகத்துடன் கூடியதால் ஏற்படும் எதிர்வினை. லின்ஸீட் எண்ணெயின் கொழுப்பு அமிலங்கள், ஈய அயன்களோடு சேர்ந்து மெதுவாக சோப்புச் சேர்மங்களை உருவாக்குகின்றன. அவற்றைப் பின்னர் அடித்தளமாக பூசும்போது, எண்ணெயை பலம் உடையதாக்கி வெடிப்பு ஏதுமில்லாமல் விரைவாக உலரச் செய்கின்றன.
வெளிப்பார்வைக்கு இது சமையல் கலை போலத் தோன்றினாலும், உண்மையில் அது நீண்ட கால பாலிமரைசேஷனின் முதல் அத்தியாயம். ஆக்சிடேஷன் மூலமான குறுக்கு இணைப்புகள் உருவாகி, கடைசியில் அடர்த்தியுள்ள நெகிழ்வான தரைஅடுக்காக உறைபடும் ஒரு நிகழ்வு.
கண்களுக்குப் புலப்படாத அக்கட்டிடத்தில், அந்த ஈயம் கலந்த எண்ணெய் வெப்பம் பெற்று வந்ததும், லியோனார்டோ அதைத் தயாரிக்கப்பட்ட மரப்பலகையின் மேல் பரப்பத் தொடங்கினார்.
அந்தப் பலகையில் ஏற்கனவே ஜெஸ்ஸோ – பசுமம் (animal glue) மற்றும் ஜிப்ஸம் ஆகியவை கலந்த சுண்ணாம்புப் பசை பூசப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தன் சமகால ஓவியர்கள் பலரைப் போலில்லாமல், லியோனார்டோ ஒரு புதிய பாதையைத் தேடுகிறார். இங்கு காய்ந்துகொண்டிருக்கும் கார எண்ணெயில் மாற்றியமைக்கப்பட்ட ஈய வெள்ளையைக் கலக்கிறார்.
2025ல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற மூவரும் இப்படிப்பட்ட ஒரு பிணைப்பினை (coordination polymers) வெவ்வேறு உலோகத்திற்கும் கார்பாக்ஷிலேட்டிற்கும் இடையை உருவாக்கி, அதை
ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மனித முடியின் அகலத்துக்கு சமமான ஒரு சிறிய நுண்மாதிரி ஒன்றை எடுத்து ஆராயும் போது தான் அந்தச் சிறிய “மாறுபாடு” அறிவியல் கண்களுக்கு வெளிப்படுகிறது.
https://pubs.acs.org/doi/10.1021/jacs.3c07000

சின்க்ரோட்ரான் எக்ஸ்‑கதிர் விலக்கம் மற்றும் மைக்ரோ‑FTIR போன்ற நுண்ணிய ஆய்வுகள், அந்தத் தரைஅடுக்கில், ஈய கார்பனேட் துகள்கள் நிரம்பி, ஆனால் வழக்கமான செருசைட் குறைந்து, ஹைட்ரோசெருசைட் அதிகமாக இருப்பதை காட்டின; அவை அனைத்தும் மிகத் தீவிரமாக சோப்பு போல மாறிய ஈய எண்ணெய் வலையில் கைப்பற்றப் ப்பட்டிருந்தன.
இந்தச் சிறிய துகள்பங்கு மாற்றம் வெறும் ஒளிர்வு வேறுபாடு மட்டுமின்றி, ஒரு புதிய செய்முறையைக் குறிக்கிறது.
வெண்ணிறத்திற்காக மட்டும் அல்லாமல், உருமாற்றம், அடர்த்தி, உலர்தல் வேகம் – அனைத்தையும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட சூத்திரம் போல அது காட்டுகிறது. இன்னும் “ரியாலஜி”, “கருவியலான உலர்தல்” என்று சொற்கள் இல்லாத காலத்தில், லியோனார்டோ ஒரு ‘பொருள் விஞ்ஞானி’ போல் ஈய–எண்ணெய் மாதிரியைத் திட்டமிட்டு மாற்றியமைத்துக் கையாள்கிறார்.
இந்த அடையாளமற்ற அடுக்கு மேல் தான், பின்னாளில் வரும் அனைத்து sfumato நிழல்கள், ஒளி–இருள் மாற்றங்கள் நிகழக் காரணமாகின்றன.

ஃபிரான்சின் கிரனோபிள் (Grenoble) ஒரு பெரிய வளைய பாதையில் ஓடும் சின்க்ரோட்ரான் வளையத்தில் சுழலும் ஆற்றல்மிக்க எக்ஸ்‑கதிர்கள், அந்தச் சிறு மாதிரிக்குள் நுழைந்து உருவாக்கிய விளிம்பு வளைவு முறை (diffraction pattern), விஞ்ஞானிகளை அசர வைக்கும் ஒரு அடையாளத்தைக் காண்பித்தது. ப்ளம்போனாக்ரைட் எனப்படும் அரிய தாது (ஈய கார்பனேட் ஆக்ஸிஹைட்ராக்ஸைட்), வழக்கமாக உபயோகிக்கப் படும் lead white துகள்களுக்குள் சிறு படிக மலைகளைப் போலத் தென்பட்டது. இது பலம் வாய்ந்த மாவுச்சத்து சூழலில் தான் நிலை நிற்க விரும்புகிறது; குறிப்பாக பழங்கால ஓவியங்களில் பின் உருவான சாதாரண ஈயவெள்ளை அடுக்குகளில் இது அரிதாகவே காணப்படுகிறது.
ஒரு வழக்கமான, தணிந்த அமில சூழலில் தயாரிக்கப்படும் ஈயவெள்ளையில் இந்த அளவுக்கு இது தோன்றுவதில்லை.
ஆனால் மோனா லிசா வின் அடித்தரைஅடுக்கில் ப்ளம்போனாக்ரைட் ஒரு கணிசமான அளவில் இருப்பது, லியோனார்டோவின் கலவையை எதிரொலிக்கும் கையெழுத்து அடையாளம். பலம் வாய்ந்த கார சூழலில், ஈய‑ஆக்ஸைடில் நிரம்பிய எண்ணெய், கரிமலவாயு (CO2) மற்றும் ஈரத்துடன் (H2O) மெதுவாக வினை புரிந்து, இந்த அரிய தாதுவை உருவாக்குகிறது.
இதே போன்ற ப்ளம்போனாக்ரைட் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரெம்ப்ராண்டின் Night Watch ஓவியத்தின் தடிப்பு impasto படலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லிதார்ஜை பைண்டரில் அதிகமாக சேர்த்ததால், அங்கு ஏற்பட்ட கார சூழலில், ஈயகார்பனேட்களை மீண்டும் மாற்றியமைத்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
2023 JACS ஆய்வு இந்த கதையை இன்னும் பின்னோக்கித் தள்ளுகிறது. ரெம்ப்ராண்டிற்கு முன்னரே, லியோனார்டோ தன் தரைஅடுக்கை ஈய‑ஆக்சைடு செயல்படுத்தப்பட்ட ஒருவித நவீன கூட்டிணைப்பாக மாற்றி, தடிப்பான, ஒளியை மறைக்கும், வேகமாக உலரும், இயந்திரத் தாங்கு சக்தியுள்ள அடித்தளத்தை உருவாக்கியிருப்பதை அது காட்டுகிறது.
நூற்றாண்டுகளாக நீளும் லியோனார்டோவின் தரைஅடுக்குக்குள், ரசாயனம் ஒருபோதும் முழுமையாக நின்றுவிடவில்லை. காற்றில் உள்ள ஆக்சிஜன் மெதுவாக சித்திரத்துடன் தொடர்பு கொள்ள, Siccatives or Drying oil என்று அழைக்கப்படும் எண்ணெய்களால் பிணைக்கப்பட்ட வலைகளில் (network), ஈய சோப்பு துகள்கள் இடை இடையே நங்கூரம் போலப் பரவிக் கிடக்கின்றன.
Oil Painting Driers: Essential Guide for Artists
ஆண்டுகள் பல கடந்து செல்லும் போது, இவைகள் மெதுவாகத் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன; சில நேரங்களில் ஓவிய மேற்பரப்பில் பூத்த மாதிரி தோன்றும் மாற்றங்களுக்கும் காரணமாயின.
கரிமலவாயு தொடர்ந்து ஈய அயன்களோடு தொடர்பு கொண்டு செருசைட் , ஹைட்ரோசெருசைட் மற்றும் ப்ளம்போனாக்ரைட் படிவங்களுக்கிடையேயான சமநிலை சீராக மாறிக்கொண்டே இருக்கும். ஈரக்காற்றின் ஊடாக மரம்/ஜெஸ்ஸோ, எண்ணெய், ஈய துகள்கள் இடையிலான நுண்ணிய இடைமுகங்களில் கரையவும் மீண்டும் படியவும் நேர்வதால், அந்த அடித்தரையை ஒரு மெல்லிய leaching–reprecipitation நடைபெறும் ரசாயன உலையாகக் கருதலாம்.
இதையெல்லாம் இன்று பல்கலைக்கழக ஆய்வகங்களில் இருந்து வரும் அளவீடுகள் எளிதாக்குகின்றன. மைக்ரோ‑FTIR ஆய்வுகள், அந்த எண்ணெய் “மிகவும் சோப்புபோல மாறியிருக்கிறது” என்று காட்டுகின்றன – கடுமையாக சோப்பாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு பாலிமர்கள், PbO–எண்ணெய் வினையின் தீவிரத்தை நினைவூட்டுகின்றன. இந்த கார சூழல்தான் plumbonacrite‑ஐ நிலையான தாதுவாக தாங்கிக் கொண்டு நிற்கின்றது; இல்லையெனில் அது பொதுவான ஈய கார்பனேட்டு கட்டமைப்புகளுக்குள் மீண்டும் மாறி இருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். உலர்ந்த ஒரு தரைஅடுக்கு போலத் தோன்றும் இந்தப் படலத்தின் உள்ளே, எதிர்வினை இடைநிலையாக உருவாகி, இடையறாது மெதுவாகத் தன்னைச் சீரமைத்துக் கொண்டிருக்கும் ஒரு அணு உலகம்.
PbO-Pb(OH)2-Pb(CO3) இன்றும் அறிந்திடப்படாத ஒரு சிக்கலான கட்ட வரைபடம் (phase diagram)
மோனா லிசா வின் புன்னகை, இப்போது பார்க்கப்படும் ஒளிக் கோணத்தில் இன்றும் மர்மமாகத் தான் தெரிகிறது; ஆனால் அதற்குள் இருக்கும் இந்த சிற்றுறுதி நிலை (metastable state), அதாவது ஈய கனிமங்களின் கூட்டமைப்பு, நாம் ரசிக்கும் ஒவ்வொரு ஒளியையும் நானோ கண்ணாடி மலைகள் போல சிதறடித்துக் கொண்டு மீண்டும் அலைவரிசையோடு நம்மிடம் அனுப்பிக் கொண்டிருக்கும் ஓர் சிக்கலான கட்டமைப்பு.
லியோனார்டோவின் ஆழமான பரிசோதனை மற்றும் அந்த நவீன ஆய்வு, லியோனார்டோவின் நோட்டுப் புத்தகங்களையும் ஒரே நேரத்தில் மீண்டும் வாசித்துக் காட்ட முயல்கிறது. அங்கே லிதார்ஜை அவர் சில சமயங்களில் முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான கலவைகளில், சில வேறுவகை செய்முறைகளில் குறிப்பிடுகிறார்; ஆனால் லின்ஸீட் எண்ணெயை லிதார்ஜுடன் சூடாக்கி, அதன் மூலம் தரைஅடுக்கு செய்ய வேண்டும் என்று நேரடியான தடம் பதித்த தரவு ஒன்றும் இல்லை. ஆனால் அவரது ஓவியத்தின் அந்தச் சிறு துகள்தான், அந்த எழுதப்படாத பரிசோதனையை, புத்தகங்களை விட நம்பகமான சாட்சியமாக கொடுத்து நிற்கிறது.
ஒரு ரசாயனவியலாளரின் பார்வையில், லியோனார்டோ, எண்ணெயை லிதார்ஜுடன் காய்ச்சி, ஈயசோப்புகளை உருவாக்கி ஒரு பலம் வாய்ந்த கார பைண்டரை திட்டமிட்டுத் தயாரித்திருக்கிறார். அதனுடன் மாற்றியமைக்கப்பட்ட ஈயவெண்மையைச் சேர்த்து, கைக்குச் சற்று பாந்தமாக, ஒளியை மறைக்கும், மரத்தின் தண்டுகளின் கூர்மைகளையும் வடிவப் பிழைகளையும் சமப்படுத்தும் வகையில் தடிப்பான தரை அடுக்கு ஒன்றை அமைத்திருக்கிறார். ஐந்து நூற்றாண்டுகளாக, இந்தக் கலவையினுள் நடக்கும் ரசாயன மாற்றங்கள் ப்ளம்போனாக்ரைட்டை நிலையான சாட்சியமாக உருவாக்கி அதை இன்றளவும் தாங்கிக் கொண்டு வந்திருக்கின்றன; இது அனைத்தும் அந்தத் தரைஅடுக்கின் ஆரம்ப காரத்தின், ஈயம் செறிந்த சூழலின் நேரடி விளைவு.
இன்று பாதுகாப்புச் சீரமைப்பு நிபுணர் (conservator) ஒருவர் “தரை அடுக்கு” என்பது, தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ஒரு வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டு பூச்சு (functional coating). இதன் ஒளி சிதறல், ஒட்டுதல், உலர்தல் வேகம், இயந்திரக் கடினம் – அனைத்தையும் நுணுக்கமாக சரி செய்யும் வகையில், அறிவியல் சொற்கள் எதுவும் இல்லாத அக்காலத்தில், அனுபவம்தான் அவரது கருவியாயிருந்தாலும், அவர் எடுத்த முடிவுகள் அவரை ஒரு நவீன பொருள் வேதியியலாளர் போல காண முடிகிறது.
புன்னகையும் கதிர்வீச்சும்
இன்றும் லூவர் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள், தடுப்புக் கம்பிக்குப் பின் நின்று தங்கள் கைப்பேசிகளை உயர்த்தி, அந்த நிழலாடும் முகத்தையும், கன்னத்தில் இருந்து அரைச்சாயல் தீண்டிக் கொண்டிருக்கும் ஒளியையும் படம் பிடிக்கிறார்கள். யாரும் அந்த ஓவியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேதியல் நிகழ்வுகளைப் பார்ப்பதில்லை. இருப்பினும், அவர்கள் கண்களில் விழும் ஒவ்வொரு ஒளிக் கதிருக்கும், அந்த மறைந்த ரசாயன அடுக்குகளின் அமைப்பு முக்கிய பங்கை வகிக்கிறது.
சின்க்ரோட்ரானில், காட்சி முழுவதும் தலைகீழாகிறது. அங்கே அந்தப் புன்னகை, அந்தக் கண்களின் ஆழம் – எதுவுமே இல்லை. அங்குள்ள கணினித் திரையில் தெரியும் “முகம்”, சில கூர்மையான நிலைகள் கொண்ட எக்ஸ்‑கதிர் டிஃப்ராக்ஷன் புள்ளிகள் மட்டுமே; அவை cerussite, hydrocerussite, plumbonacrite போன்ற தாதுக்களின் படிக வலையமைப்பை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. அகச்சிவப்பு நிறமாலையில் ஈயசோப்புகளின் பட்டைகள் மற்றும் ஆக்சிஜனேற்றம் அடைந்த எண்ணெயின் தடயங்கள் பிரகாசிக்கின்றன. நுண் மாதிரி மீது செய்யப்படும் Rietveld களவீச்சுகள், லியோனார்டோ தன் ஸ்டுடியோவில் ஒரு அமைதியான நாளில் பூசிக்கொண்டதன் நுணுக்கமான கட்டிடங்களை கணக்கீட்டு மொழியாக மாற்றுகின்றன.
ஒரு ஓவியத்திலுள்ள ஈய ரசாயனத்தின் பாதை, பாத்திரத்திலிருந்து கிளறப்பட்ட அந்தக் கலவையிலிருந்து, மரப்பலகையின் மேற்பரப்பில் விரிக்கப்பட்ட தரைஅடுக்கு வரை; அங்கிருந்து, இன்றைய கதிர்வீச்சு வளையங்களில் படிக்கப்படும் powder pattern வரை செல்லும் ஒரே நீண்ட செயற்கை வரலாறு. இந்தக் கதையில், லியோனார்டோ வெறும் ஒளியின் ஓவியர் அல்ல; அவர் ஒரு வினைத்திறன் கொண்ட பொருளின் அமைதியான மூலவடிவமைப்பாளர்.
ஈயத்தையும் எண்ணெயையும் சாதாரணத் தணிந்த சூழலின் வரம்பை விட்டுச் சேர்த்த இடத்துக்குத் தள்ளியதனால், நமது காலத்தில் பெயரிட்டு, ஒரு பெட்டகத்தில் வைத்துக் காணக்கூடிய ஒரு அரிய தாதுவை அவர் உருவாக்கி விட்டார். அவருக்கு அப்போது எவ்வித சூத்திரஙகளும், கட்ட வரைபடங்களும் இல்லாமல் இருந்தாலும், விரலின் தொடுதல், பரவுதலின் நடத்தை, உலர்தலின் வேகம், வெளிச்சம் பற்றுகிற விதம் – ஆகியவை எல்லாம், அவருக்கு இன்று நாம் தேடுமா அதே அறிவியலை அளித்தன.
2023‑இன் ஆய்வு, லியோனார்டோவின் ஓவியங்கள் உட்கொண்ட பொருட்கள் நூற்றாண்டுகளாக அமைதியாகக் கிசுகிசுக்கும் மொழியினைக் கற்று, அதை நவீன அறிவியல் மொழியாக மொழிபெயர்க்கிறது. அந்த மொழிபெயர்ப்பின் மையத்தில், ஓவியமும் இரசாயனமும் ஒன்றாகக் கலக்கின்றன.
ஒவ்வொரு ஓவியமும் ஒரு மௌனத்தில் நடத்தப்படும் பரிசோதனை; ஒவ்வொரு வீச்சிலும் விளைவது ஒரு கண்டுபிடிப்பின் முதல் குறிப்பு. நவீன அறிவியலுக்கு முன்பு, ஒளி, வடிவம், இயக்கம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஓவியம் ஒரு ஏற்ற ஆய்வகமாக இருந்தது. மாற்றம் முதன்முதலில் காணப்பட்ட இடமும் இதுதான்.
ரிக்வேதம் தொலைவில் உள்ள தெய்வத்துடன் தொடங்கவில்லை; உள்ளும் புறமும் உள்ள ஜ்வாலையுடன் தொடங்குகிறது.
அக்னி சுக்தம் கூறுகிறது:
“अग्निर्मूर्धा दिवस्पतिः”
Agnir mūrdhā divaspatiḥ
அக்னியே தலை, நாளின் அதிபதி
அக்னி என்பது எரிவது மட்டுமல்ல; ஆர்வத்தின் உள்ளுறைந்த தீ, மாற்றத்தை இயக்கும் தீப்பொறி. லியோனார்தோவின் படைப்புகள் நமக்கு சொல்வதும் இதுதான்: இயற்கையுடன் வாழ கற்றால்தான், அதை அறிய முடியும்; அதை அறிய முடிந்தால்தான், மாற்றத்தை உருவாக்க முடியும்.
சித்திரம் பேசுகிறது. அறிவியல் கேட்கிறது. அந்த உரையாடலில்தான் புதிய உலகங்கள் பிறக்கின்றன.
1What’s Inside Leonardo’s Palette: A Scientist’s Take on Historic Art Materials: https://www.teravarna.com/post/what-is-inside-leonardos-palette-a-scientific-view
ஆசிரியர் குறிப்பு:
லியோனார்டோ டா வின்சியின் உலோகக் கலவைகளும் அடித்தளங்களும் எனும் உலகத்துடன் எனது தொடர்பு, ஓவியத்தின் வழியாக அல்ல — ரசாயனக் குழாய்களின் வழியாகத் தொடங்கியது. 1980‑களின் ஆரம்பத்தில் முனைவர் பட்டக் காலத்தில், என் ஆராய்ச்சி ஈயம், பிஸ்மத், தாலியம் ஆகிய உலோக சேர்மங்களின் மீது கொண்டு சென்றது; பின்னர், எனது ஆய்வுத் தலைப்பு முழுவதும் பிஸ்மத் ஆக்சைட்கள் சார்ந்தப் பொருட்களாக மாறியது. அந்த ஆண்டுகள் பொருளின் மாற்றங்களை ஆராய்ந்த சஞ்சலமான பரிசோதனைகளில் கழிந்தன. இயற்கையின் நுண்கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள என்னுள் விளைந்த ஆர்வம் பிற்பாடு வேறு வடிவத்தில் மலர்ந்தது. இந்திய அறிவியல் கழகத்தில் ஆறரை ஆண்டு காலம் பணியாற்றிய பின், 1986 ஜனவரியில் நான் இங்கிலாந்தின் எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்திற்கு மேம்பட்ட ஆராய்ச்சிக்காகப் பயணமானேன். அந்த ஆண்டின் வசந்தத்தில், கிரனோபிள் நகரில் உள்ள Institut Laue‑Langevin ஆய்வகத்தில் நான் இடைச்செருகப்பட்டப் பொருட்களுக்கான நியூட்ரான் சிதறல் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பும் வழியில் TGV எனும் அதி வேக ரயிலில் பாரிஸை நோக்கிப் பயணமானேன். ஒளியும் மறுமலர்ச்சியும் கலந்த நகரம். அங்கு நோத்ர டாம் கத்தீட்ரல், ஈஃபெல் கோபுரம், இன்னும் மேலாக லூவ்ர் அருங்காட்சியகம் ஆகியவை — மறுமலர்ச்சிக் காலத்தின் உயிர்மையமாய் தெரிந்தன. அதுவரையில் எனது ஓவிய உலகம் தஞ்சாவூரின் தங்கநிறப் படங்களுக்கும் மைசூரின் அரண்மனைச் செதுக்குப் படங்களுக்கும் மட்டுமே உள்பட்டது. ஆயினும் லூவ்ரில் ஆயிரக்கணக்கான மக்கள் மோனா லிசா என்ற ஒரு சிறிய ஓவியத்தை நோக்கிச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகு தான், ஒருவரால் எவ்வாறு கலை, அறிவியல், தத்துவம் ஆகிய மூன்றையும் கடந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். என் ஆய்வுக்கூடங்களில் வேதிப்பொருளாகப் பயன்படுத்திய ஈயம், லியோனார்டோவின் கையில் ஒளியின் பாத்திரமாக மாறியிருந்தது என்பது எனக்குள் ஒரு அலையெழத் தூண்டியது. ஆண்டுகள் கழித்து, Tevarna இதழில் பிபாஷா எழுதிய “What’s Inside Leonardo’s Palette: A Scientist’s Take on Historic Art Materials” என்ற கட்டுரையை தற்செயலாக வாசித்தபோது, அந்த பழைய நினைவு மீண்டும் உயிர்த்தது. அதுவே இந்த ஒளியின் ரசவாதம் என்ற இக்கட்டுரைக்கு விதையாயிற்று – ஒர் கலைஞனின் ஸ்டுடியோவும் ஒரு விஞ்ஞானியின் ஆய்வகமும் எவ்வாறு ஒரே ஒளியால் இணைந்து நிற்கின்றன என்பதற்கான சிந்தனையாக.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
