காற்றையும் நீரையும் போல் நித்தியம்

இந்த மந்தமான கலங்கிய நதி வழியாகத்தான்
என் சொந்த நகரை நிறுவப் படகுகள் வந்தனவா?
– The Mythical Founding of Buenos Aires” by Jorge Luis Borges

பி. ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி (2011) அதிகார அமைப்புசார் ஊழலிலும், தனிப்பட்ட துயரங்களிலும் சிக்கித்தவிக்கும் ஒருவன், காந்தியை துருவ நட்சத்திரமாகக் கொண்டு உண்மையை நோக்கிய தன் விடாப்பிடியான பயணத்தைச் சொல்கின்றது.

கதாநாயகன் ரமேஷ் தற்காலிகப் பணிநீக்கத்தில் இருக்கையில், ஒரு விபத்துக்குள்ளாகி ஓய்வெடுக்கும்போது “தெருவுக்கு மறுபக்கம் இல்லை” என்னும் நாவலை எழுதுகின்றான். இந்தத் தலைப்பு  ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் எழுதிய “புவெனஸ் அயர்ஸின் ஸ்தாபன புராணம்(The Mythical Founding of Buenos Aires)” என்னும் கவிதையின் இறுதியில் வருகிறது. 

புவெனஸ் அயர்ஸ் நகரத்திற்கு ஆரம்பம் இருந்ததென நம்புவது கடினம்.  ஒருபுறம் கடலும், மறுபுறம் திறந்தவெளியில், விடியல்களும், மழையும், கடும் தென்கிழக்குக் காற்றும் சூழ்ந்தது.  நிறங்களும், நறுமணமும், இசையும் மனிதர்களும் கூடி நேற்றின் நீட்சியாக அதன்  (புவெனஸ் அயர்ஸின்) இன்றை நிகழ்த்துகிறார்கள். அது காற்றையும் நீரையும் போல் நித்தியமானது. மறுபக்கம் இல்லாத தெருவாக வளர்ந்த வண்ணமே உள்ளது. அந்நகரத்தின் ஆன்மா, அங்கு வாழும் மனிதர்களின் நினைவுகளிலிருந்தும், கற்பனையிலிருந்தும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. காலத்தின் நீட்சியாக என போர்ஹெஸ் சொல்கிறார். 

நகரம் கழிமுகத்தில் உருவான வரலாற்றைச் சொல்லும் பொழுது இந்த “கலங்கிய நதியிலா?” எனத் தொடங்கும் போர்ஹெஸ்,  சற்று ஆழ்ந்து யோசித்தால் நதி  வானத்தின் நீட்சியாய் நீலமாக இருந்திருக்கலாம் என்கிறார்.

அதுபோல் பி. ஏ. கிருஷ்ணன் ஒரு கற்பனையை நிகழ்த்துகின்றார். வரலாற்றைத் தாண்டிய புனைவொன்றின் வழியாகக் காலத்தின் நதியில் பயணிக்கிறார். போர்ஹெஸ் கவிதையின் வரியைக் கலைத்து முன், பின் மாற்றி வாசகரைத் தன் புனைவுக்குள் இட்டுச் செல்கின்றார். இந்தத் தெருவிற்கு மறு வரிசை இல்லை என்னும் கவிதை வரியில் துவங்கி, கலங்கிய நதியாக நாவல் நம்முன் விரிகிறது.  

கதாநாயகி-சுகன்யா, ரமேஷ் எழுதும் நாவலின் அத்தியாயங்களை அவன் நண்பர்களுக்கு அனுப்புகிறாள்.  நண்பர்களுடனான அக்கடிதப் பரிமாற்றங்கள், நாவலின் இடையிடையே தோன்றி,  இடைவெளிகளைப் பூர்த்தி செய்கின்றன; சில நேரங்களில் கதை ஓட்டத்தைத் தாண்டியும், பாத்திரங்களைப் பற்றிய விமர்சனங்களையும், பரிணாமங்களையும் பகிர்ந்து, வாசகனை இழுத்துக்கொள்கின்றன. வாசகக் கற்பனைக்குக் கோடிட்டும், நாவலுக்கு வேறொரு அடுக்கையும் அமைக்கின்றன. கதாபாத்திரங்களின் பன்மைத்தன்மையை இவ்வகை கூறு முறையில் நாம் அறிய முடிகிறது.

நாவல், ரமேஷின் சொந்தப் பிரச்சனைகளுடன் தொடங்குகிறது. தனது துடுக்குத்தனத்தால் அரசு அதிகார அமைப்பில் ஓரம் தள்ளப்பட்டு, புதிய  துறையில், ஒரு பொறியாளரின் (கோஷ்) கடத்தல் பேச்சு வார்த்தைக்காக அவன் அசாம் செல்ல நேர்கிறது. இன்னொரு குடும்பத்தின் துயரை உணர்கிறான். அதிகார அமைப்பில் அதற்கெல்லாம் இடம் இல்லை என அறிகிறான். புதிய நிலப்பரப்பில், அசாம் போராளிகளின் சமூகப்பிரச்சனை என அவன் வட்டம் மேலும் விரிகிறது. இந்திய பொதுச் சேவை அதிகார அமைப்பில் நிகழும் ஊழலின் பேருருவத்தைக் காண்கிறான். ஊழலின் அடிவரை சென்று உண்மையை அறிய முற்படுகிறான், பல தடைகளால், சிக்கல்களால் அலைக்கழிக்கப்படுகிறான். அரசு அதிகார அமைப்பில் ஒரு சிறு காயாக இருந்தாலும், பிடிவாதத்துடன்,  உண்மையுடனும் ரமேஷ் கலங்கலில் சுழல்கிறான். தனக்குச் சரியெனத் தோன்றுவதைக் கடைசிவரை பற்றிக்கொள்கிறான், அவன் நக்கல்களுடனும், துக்கங்களுடனும், சந்தோஷங்களுடனும்  நாமும் கலங்குகிறோம். அப்பெரும் சுழலிலும் பயமின்றிப் பயணிக்க காந்தியை கண்டடைகிறான். விடாப்பிடியான பிடிவாதத்துடனும், நம்பிக்கையுடனும், உண்மையை நோக்கிச் செயல் புரிகிறான். 

அணுக்கமானவர்களின் மரணங்கள் நிகழ்கின்றன, மரணம் பலவாறு ரமேஷை தொட்டுச்செல்கிறது. கறுப்பு மசூதியிலும், அசாம் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டிலும் அருகே செல்கிறது,  விசாகப்பட்டிணம் செல்லும் விமானத்தின் எஞ்சின் செயலிழக்கும்போது இன்னும் அருகே, கடைசியில் தவறாக காஸ் ரெகுலேட்டரை மாற்றி, அடுப்பில் கைபற்றி எரியும் பொழுது, மிக மிக அருகே தொட்டுச்செல்கிறது.  அந்நிலையிலும் எந்நிலையிலும், சுகன்யாவுடன் இருக்கவே விரும்புகிறான். அழகுணர்வுடன், அதிகமோ குறைவோ இன்றி, “கோல்டிலாக்ஸின்”  மிகச்சரியான விகிதத்தில்,  ரமேஷ்-சுகன்யாவின் அன்பு சொல்லப்படுகிறது.

பருவமழைக் காலத்தில், திசை தெரியாது தடுமாறி, கிராமவாசிகளின் செயற்கை விளக்குகளால் மேலும் ஈர்க்கப்பட்டு,  மிக எளிதாக இரையாகும் ஜதிங்கா பறவைகள், சிம்ஹாச்சலக் கன்றுகள்,  வசீகரிக்கும் மூங்கில் பூக்கள் உருவாக்கும் அபரிமிதமான விதைகளை உண்ண வரும் எலிகள் எனப்பல உருவகங்கள் அசாம் போராளிகளைப் பற்றி நாவல் முழுவதும் வருகின்றன.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போதும்,  உச்சத் தருணங்களிலும், ஆசிரியர் கவிதைகளால், ஓவியத்தால் அணி செய்கிறார். அதன் வழியே அடுத்த அடுக்கு விரிகிறது.

முழுக் கதையிலும், ரமேஷின் உள்ளத்தில் ஒரு பெண் குழந்தைக்கான ஏக்கம், அன்பு வெளிப்பட்டுக்கொண்டே உள்ளது. பிரியாவின் இழப்பைச் சொற்களால், உணர்வுகளால் அவன் வெளிப்படுத்துவதில்லை. அவனைத் தாண்டி அவன் கனவுகளில்  அது மீறித்தோன்றுகிறது. தெருப்புழுதியில் மண்ணோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியை அக்கணத்தின் தேவியென உணர்வது,  அவனின் மொழியற்ற ஏக்கத்தை ஒரு பெருமூச்சுடன் வெளிப்படுத்துவது. 

புதிய  துறையில்,  புதிய நிலப்பரப்பில் நிறுவன அதிகாரியாக அனுபமா அறிமுகமாகிறாள். அசாமின் பிரச்சனைகளையும், போராளிகளைப் பற்றியும், ரமேஷ் அறிந்து கொள்ள உதவுகிறாள். அனுபமாவிடம் கரிசனம் கொள்கிறான். பைபிள் ஓவியம் ஜொனாவும் – திமிங்கிலமும் அனுபமாவின் உருவகமாக வருகிறது. அசாமின் பாம்பு தெய்வமான மானசா திமிங்கிலத்தை போலத் தன் வாயில் அசாமை வைத்துக் காப்பாள் என்று அனுபமா நம்புகிறாள். அசாம் போராட்டம் அவளையும் விழுங்கிக்கொள்கிறது.

கண்டசாலாவின் வாழ்வே மாயம் பாடல் போல, வண்டிச்சக்கர-பூரி சாப்பிட்டுக்கொண்டே கடத்தலுக்கான பிணைத்தொகை கொடுக்கும் வரை மிகச்சாதாரணமாக உச்சத் தருணங்கள் நிகழ்கின்றன. கடத்தப்பட்ட கோஷ், அவ்வாழ்க்கையில் நிம்மதியாகத் தூங்கி, சாப்பிட்டு, உடல் பெருத்து, உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.  கோஷ் ஒருவிதத்தில் நிம்மதியான கடத்தல் வாழ்வை அந்தரங்கமாக விரும்பக்கூடச் செய்கிறான். அவன் மீண்டு வந்தபின் ஒரு நன்றி உரைக்கக் கூட அவன் மனைவிக்கு நேரம் இல்லை.  கோஷுக்கும் ரமேஷ், இன்னும் சிறப்பாக, மேலும் பணம் கொடுத்து, பேரம் பேசி, கடத்தல் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு இருக்கிறது. சங்கரரின் மாயாவாதத்தை, வாழ்க்கை சொல்லிச்செல்கின்றது.

நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது.  காந்தியர்களை,  காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னாள் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான். 

எளிமையான, அணுகக் கூடிய,  நேரடியான அவர் பயமின்மையையும், மக்களுக்காக உழைப்பதையும் காந்தி கொடுத்த பரிசாகச் சொல்கிறார். காந்தியராகிய தன் தந்தையும் தைரியமும், காருண்யமும் காந்தி கொடுத்ததாகச் சொன்னதை நினைவு கூர்கிறான்.  அசாம் போராளிகளின் துண்டுப் பிரசுரத்திலும் காந்தியின் வார்த்தைகள். முதுகெலும்பை நிமிர்த்தி அச்சமின்றி நிற்க, உண்மை மட்டுமே வேண்டும் அதற்கான தேடலையும், பயணத்தையும் விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ள வெண்டும் என ரமேஷ் காந்தியின் சொல்லில் தன் தெளிவைப் பெறுகிறான்.  

காந்தியின் சொற்கள் – “நான் உனக்கு ஒரு தாயத்து தருகிறேன். எப்போது உனக்குச் சந்தேகம் எழுந்தாலும், எப்போது அகங்காரம் உன் மூச்சை பிடித்தாலும், இந்தச் சோதனையைச் செய். நீ பார்த்ததிலேயே ஏழ்மையான, வலிவற்ற மனிதனை நினைவுகொள். உன்னை நீயே கேட்டுக்கொள். நீ எடுக்க நினைக்கும் முடிவு அவனுக்கு உதவியாக இருக்குமா? அதனால் அவன் பயன் பெறுவானா? அது அவனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அவனது சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமா?  வேறு விதமாகக் கூறுவதானால், பசியுடனும் ஆன்மீக வறுமையுடனும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு விடுதலை தருமா?  அப்போது உன் சந்தேகங்களும் , அகங்காரம் கரைந்து மறைவதை நீ உணர்வாய்.”

ரமேஷ், இந்திய பொதுச் சேவைகளின் அதிகார அமைப்பில் தன்னால் ஒரு சிறு நசுங்கலைக்கூட ஏற்படுத்த முடியாது; சமூக மாற்றமெல்லாம் ஏற்படாது; ஆனால் தன்னால் முடிந்த கோஷின் வாழ்வில், அவனை விடுவிக்க என்ன செய்ய முடியுமோ அதை ஒரு புகாரும் இன்றி செய்கிறான். 

ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக என்ற காந்தியின் நம்பிக்கை வரிகளுடன் நாவல் முடிகிறது.

21 – ஆம்  நூற்றாண்டில் வாழ்வின் சிக்கல்களில் காந்தியை கண்டடைதலும்,   அவரின் தாயத்து இன்றைக்கும் பொருந்தமைவதும் இந்நாவல் படிப்பதன் சுவையுடன் வாசகன் ஈட்டிக்கொள்ளலாம்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.