ஒரு மிசோஜினிஸ்ட்டின் உளுந்த வடை

நரிக்குளத்தின் மூக்கு நீண்ட முனையில் இருக்குமிடம் தெரியாதிருக்கும் எங்கள் வழக்கமான ஈட்டானில் காத்திருந்தான் அரவிந்தன். நரிக்குளம் பல மனங்களை விட பறந்து விரிந்த குளுமை தாங்கிய நிலம். ஈட்டான் என்றால் எங்களுக்கான இடம். அடையாளம், சுற்றிலும் சூழ்ந்த புகை. நெடிது நின்ற அவன் உருவத்தைச் சுற்றி ஒரு புகைச் சுருக்கு. எனக்குமானதாய் யோசித்தபடி நெருங்கிச் சென்று சிரிக்க முயன்றேன். இருபுறமும் விடைத்தடங்கும் மூக்கை மீறி எப்படிச் சிரிப்பது! கூர்ந்த பார்வையில் புரிந்தபடி தலையசைத்தான். புரியாவிட்டாலும் அப்படித்தான் அவனது அசைவு. புகைக்க அழைக்க, வேண்டாமெனத் தலையாட்டி நீள் மூச்சுகளில் நின்றேன். 

“எப்படித்தான் அஞ்சாவதும் பெத்துக்கிட்டானோ நம்ம கிருஷ்ணன்! இங்க ரெண்டுக்கே மூச்சு முட்டிட்டு வருது.” நான் என்ன பேச நினைத்தாலும் அவனுக்கும் அதுவே மனதில் இருப்பது என்றும் ஆச்சரியம் தான். இல்லை, இது எனக்கேயான ஒரு யுத்தியாகவும் இருக்கும். 

“அவனுக்கு முடியுது. பெத்துக்கிறான். அவன் அதப் பெருமையா சொல்லிட்டுத் திரியானாம், தெரியுமா ல? கடைசி காலத்துல அவனச் சுத்தி நாலு பேரு நிக்கணும்னு ப்ளான் போட்ருக்கான் பாரு. நாலு இல்ல, அஞ்சு. ஆனா, பாரேன்.. அஞ்சும் ஆம்பளப் பிள்ளைங்க!” 

“அண்ணே, எங்க வீட்டுல உள்ள ரெண்டையும் வந்து பாக்கச் சொல்லணும் அவன, ரெண்டு நாளுல ஓடிருவான். நாம தவம் இருந்து பெத்தது அப்பிடில்லா! என்ன, ராத்திரி தூக்கம் இல்ல, போல?” 

“அத விடு, நீ என்ன, காலங்காத்தாலேயே இங்க? நா எப்ப வந்து உன்ட்ட நிப்பேன்னு காத்துட்டு இருந்தியா, என்ன?” 

“அண்ணனுக்கு ஒரு பிரச்சினைன்னா தம்பி வரலன்னா எப்பிடி! எனக்கு காதுல வந்து ஒரு பல்லி சொல்லிச்சிண்ணே.”

பல்லிச் சத்தம் அக்கணம் நிஜமாய்க் கேட்டது.  

“என்னத்தச் சொல்ல தம்பி! நம்மளப் பத்தி நமக்கே ஒன்னும் தெரியாது போலருக்கு. கடுப்பு மயிருல எத்தன நாளைக்கி தான் மத்தவங்கள ஏசிட்டு தப்பிச்சிப் போறது? ஒத்த அடில கொன்னு போட்டுற மாதிரில்லாம் தோணுது. நல்ல வேளையா, வெளிய வந்துட்டேன்.” 

“என்னண்ணே? என்னாச்சு? அண்ணி என்ன சொன்னாங்க இப்போ?” 

“அவள என்ன சொல்ல? அவ இப்பல்லாம் நம்மள விட்டாச்சு. நான் இல்லாட்டாலும் அந்தக் குடும்பத்துக்கு ஒன்னும் பெருசா இழப்பு இல்ல தான். ஆமா, அதான் நெலம.” 

குளத்தின் மேலாகத் தழுவி வந்த மிச்சக் காற்று என் முகத்தில் வந்து அலையடித்து நீடித்தது. மீண்டுமொரு சிகரெட். புகைச் சுழல். தலை குனிந்தும் நிமிர்ந்துமான மூச்சுகள் மட்டும். நான் விளக்கமாகச் சொல்ல அரவிந்தன் கொடுக்கும் இடைவெளி. 

..

என்னைப் பார்த்து தான் அரவிந்தன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தான். அல்லது என் குழந்தைகளைப் பார்த்து. எனக்கு இரண்டு மகள்கள். அவனுக்கு இரண்டு மகன்கள். ‘சின்ன மருமகள எப்போண்ணே அனுப்பி வைக்கப் போறீங்க?’ என்று கிங்பிஷர் உள்ளே செல்லும்போதெல்லாம் கேட்டு விடுவான். ‘டௌரி நீ குடுத்துட்டு கூட்டிட்டுப் போய்க்கோ ல தம்பி’ என்று சொல் மாறாமல் நானும் சொல்லி வைப்பேன். ஒரு சில கணங்களில் அப்படி ஒரு திருமணம் மனக்கண்ணில் முழுதாக விரிந்ததும் உண்டு.

‘பெரியவள அனுப்பி வச்சாலும் சந்தோசம்தான் அண்ணே. நம்ம பய ரெண்டு மூணு வயசு சிறுசானா என்ன, நமக்கு ஓகே தான். சொல்ல முடியாது, அவனுக்கும் ஓகேவா இருந்தாலும் இருக்கும். இப்ப உள்ள பிள்ளைங்க என்ன செஞ்சாலும் சரிதான். பின்ன, எது சரி, எது தப்புன்னு யாரு சொல்ல முடியும். நம்ம மட்டும் ஒழுக்கமா, என்ன?’ இது இரண்டாம் கிங்பிஷர் அருள். 

“அடம்.. ஒரு அளவுக்கு இருந்தா பரவல்லடா. அழுக புடிச்சின்னா புடிச்சது தான். என்னத்த சொன்னாலும் நிறுத்த மாட்டா. நம்ம எவ்ளோ தான் பொறுமையா இருக்கது? எனக்கு சத்தம் கேட்டாலே ஆகாது. மனுசன் எதுக்கு தான் பேசுறான்? சும்மா சத்தமில்லாம வேலைய மட்டும் செஞ்சிட்டுப் போக வேண்டியது தான! எதுக்கு தேவையில்லாம பேசணும். மொதல்ல எதுக்கு மொழின்னு கேக்கேன். ஆதியில எல்லாம் ஜெனிச்சு தானே கெடந்திருக்கோம். ஒன்னும் கெட்டுப் போகலையே! இப்ப,  மொளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சிட்டு தான் வருதுங்க. எங்க தொட்டா இவன் அசைவான்னு நல்லா தெரியுது. நமக்கும் பின்ன பொறுமை கம்மி தான்.” 

“யாரு, சின்ன மருமகளா? அவ செல்லக்குட்டில்லாண்ணே! நீங்க பாட்டுக்கு அவளக் கொண்டு என் வீட்டுல விட்டுட்டுப் போங்க. நாம் பாத்துக்கிடுறேன்.” 

அவன் சொல்லியதை நான் விரும்பவில்லை என்று அவனுக்குத் தெரியட்டும் என்றே அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். ஒரு அறை விட்டாலும் சரி தான். மீண்டும் சிகரெட்டை என் பக்கம் நீட்டினான். வாங்கி நீண்ட ஒரு இழுப்பு. நிலைமையின் தீவிரம் அவனுக்குப் புரிந்திருக்கும். 

“பிள்ளைய அடிச்சிட்டீங்களாண்ணே? என்ன பண்ணா அவ?” 

“ஒரு செகண்ட்ல தூக்கி சுவருல எறிஞ்சிருப்பேன் டா. மண்டைல ஓங்கி ஒரு அடி அடிச்ச மாதிரி சத்தம் கேட்டு தப்பிச்சு ஓடி வந்துட்டேன். பாவம் பிள்ள, பயந்துட்டா. ஒரே அழுக. அந்தச் சத்தம்.. அது மட்டும் எனக்குக் கேக்க வேண்டாம். அழுகச் சத்தம் கேட்டா எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வருகு. இவ மட்டும்ன்னு இல்ல. எங்க எந்தப் பிள்ள அழுதாலும் செரிதான். அப்பிடி ஒரு எரிச்சல். வெறி. இவ நம்ம காலச் சுத்திப் பிடிச்சுக்கிட்டு என்னப் போட்டு மிதி, மிதின்னு சொல்லுக மாதிரி இருக்கு. அவ அம்மா எப்போ தேவையோ அப்போ ஒரு அடி குடுத்தா இவ சரி ஆயிடுவா. ஆனா, என்ட்ட வேணும்னே வந்து இப்பிடிப் பண்ணுகா. எனக்கு அப்பிடி தான் தோணுது.”

“விடுங்கண்ணே..”

“இல்ல டா, எனக்கு பொறக்கப் போறது பொண்ணுன்னு இருநூறு சதவீதம் எப்பவோ தெரிஞ்சிட்டு. ஒன்ட்ட சொல்லிருக்கேன்லா? ஒன்னு இல்ல, ரெண்டும் பொண்ணுங்கதான்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்பிடித்தான் நடக்கும். மீறி நடக்க வாய்ப்பே இல்லன்னு அடிச்சுச் சொன்னேன். அப்பிடித்தான் நடந்துச்சு. அவ்ளோ புடிக்கும் எனக்கு பொம்பளப் புள்ளைங்கன்னா. ஆனா, இப்போ அப்பப்போ இப்பிடி ஏன் ஆகுதுன்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது.”

“அது வேற ஒன்னும் இருக்காதுண்ணே. வேலைல இருக்கற டென்ஷன். வீட்டுல உள்ளவங்க நம்ம நெலம தெரிஞ்சு தான் எப்பவும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுல்லா? எனக்கும் நடக்கது தான். எனக்கு ஆம்பளப் பிள்ள தான்னு எங்க அம்மையே சாபம் கொடுத்தா. பின்ன, எங்க அப்பன் பண்ணது கொஞ்சம் நஞ்சமில்லல்லா? சரி, சாபமா இருந்தா என்ன? நமக்குன்னு உள்ளது நமக்குன்னு தான் நான் எடுத்துக்கிட்டேன். இந்தா, ரெண்டு பயக்களும் கெடந்து பாடாப் படுத்ததான் செய்றானுங்க. என்ன, ஒங்கள மாதிரி நா அமைதி இல்லல்லா. ரெண்டு போடு அப்பப்போ போட்டுருவேன். பொறவு புரோட்டாவோ, கேக்கோ வாங்கிட்டுப் போனா செரி ஆயிரும். ஈஸியா விடுங்கண்ணே. ஒரு கட்டத்துக்கு மேல நாம யோசிச்சு ஒன்னும் பண்ண முடியாது.” 

பெட்டிக் கடை அண்ணாச்சியின் விரிசல் விழுந்த கண் கண்ணாடியின் வழியாக அவரது பெரிய கண்கள் என்னைக் கூர்ந்து பார்த்தன. முழுக்க நரைத்த கனத்த மீசை. நொடிக்கொரு முறை இழுத்துக் கொள்ளும் மூக்குப் பொடி. எப்போது பார்த்தாலும் தனித்துத் தொங்கும் கருத்த புள்ளிகள் கொண்ட மோரிஸ் குலை. சூடு தணிக்க ஊறுகாய் போட்டு அடித்த மோர். பெண்ணைப் படிக்க வைத்த பெருமையோடு ஒரு ஆட்டோ ஓட்டும் பையனுக்குக் கட்டி வைத்த நிறைவு. இனி உள்ள நாள் குளத்துக் காற்றும் பீடியுமாக, என்ன ஒரு நிம்மதியான வாழ்க்கை. 

“அப்பிடியெல்லாம் சொல்றதுக்கு இல்ல தம்பி. ஒனக்க கரகாட்டம் ஒனக்கு. எனக்க கரகாட்டம் எனக்கு.” சற்று கூவிச் சொன்னபடி சிரித்தார் அண்ணாச்சி. என்னையறியாமல் ஒரு சிறு புன்னகை. 

“அரவிந்தா, நான் இப்பிடி யோசிக்கேன். சரியான்னு பாரு. நம்ம பண்ணுக நல்லது, கெட்டது, கடந்து வந்த ஆளுங்க, புடிச்ச கை, புடிக்காம தட்டி விட்ட கைன்னு எல்லாத்தையும் யாரோ பாத்துட்டே இருக்காங்க போல. கணக்கு. அப்பிடியே இருக்கும். கொஞ்ச நாளைக்கு ஆட விட்டுட்டு எப்போ நம்ம எதிர்பார்க்காம இருக்கோமோ அப்போ சரியா நம்ம முன்னாடி வேற ஒன்னா வந்து நிக்கும். என்ன தலைகீழா நின்னாலும் ஒன்னும் பண்ண முடியாது. அது ஆடுக ஆட்டத்த ஆடிட்டு தான் அடங்கும். அதுக்க கைல நாம சரண்டர் ஆகணும். ஆகியே தீரணும். பொண்டாட்டியோ புள்ளையோ, யாருன்னு இல்ல, ஒரு சின்ன பார்வை, ஒரு சின்ன வார்த்த போதும் நம்மள அடியோட புடிச்சு ஆட்ட.”

“அண்ணே, ரொம்பப் போட்டு கொழப்பிக்கிறீங்க. விடுங்க. நாளைக்கு நீங்க தான் தோள்ல தூக்கி வச்சி ஆட்டம் போடப் போறீங்க. விடுங்க.” 

“இல்லடா, தெனமும் என் கைல தான் தூங்குவா சின்னவ, தெரியும்லா. சரியா கண்ணு சொக்குனதும் வந்து, அப்பா, h, a, n, d – hand-ன்னு சொல்லுவா. நா சத்தியமா சொல்லுகேன். எப்போ அவ அப்பிடி வந்து நின்னாலும் அடுத்த செகண்ட் எனக்குள்ள ஒரு எரிச்சல் தான் வரும். ஒரு பத்து செகண்ட்… பின்ன அவ முகத்தப் பாத்துட்டு வேண்டா வெறுப்பா கைய நீட்டுவேன். அவ கழுத்தோட சேர்த்து கட்டிக்கிட்டு ரெண்டே நிமிசத்துல கொறட்ட விட்டுருவா. ஆனா, அதோட இல்ல.. அவ தூங்கிட்டான்னு தெரிஞ்ச அடுத்த செகண்ட் அவளத் தூக்கி மெத்தைல போட்டுட்டு நான் தள்ளிப் படுத்துருவேன். ரெண்டும் பொண்ணுங்கதான்னு மெதந்துட்டு இருந்த அப்பன் எங்கப் போய்ட்டான்? அவள நான் வெறுக்கலடா. அது தெரியும். ஆனா, என்னால ஏன் பாசமா அவளக் கட்டிப் புடிச்சு தூங்க முடியல. நம்ம பண்ண பழசெல்லாம் சேந்து இப்பிடி வந்து நிக்குதோன்னு..” 

“அடப் போங்கண்ணே. ஊர்ல எவனும் செய்யாததயா நீங்க செஞ்சிருக்கப் போறீங்க? ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு மாதிரி தான். செரி, என்ன ஆச்சு நேத்தைக்கு?”

“அவ என் கைல படுக்க முன்னாடி இந்தா, இந்தச் செம்புக்காப்ப கழத்தச் சொல்லுவா. அவளுக்கு அது லைட்டா தலைல படும் போல. அது கூட அவளுக்கு தொந்தரவா இருக்கக் கூடாது. அவ்ளோ சென்சிடிவ் தான் அவ. நானும் காப்பக் கழத்தி தான் வைப்பேன் எப்பவும். நேத்து என்ட்ட தூங்க வர முன்னாடி ஒரே அழுக, அவ அக்கா ஏதோ பண்ணான்னு. எப்பவும் இப்பிடி அழுக ஆரம்பிச்சா என்ட்ட வந்து படுத்தா சரி ஆயிருவா. நேத்து வந்ததும், அப்பா, காப்பக் கழத்துன்னு ஓன்னு அழுதா. அந்தச் சத்தம். என்னால கொஞ்சமும் தாங்கிக்க முடியல. எனக்கு கடுப்பாயிட்டு. காப்பெல்லாம் கழத்த முடியாது மயிரே, மூடிட்டுப் படுடின்னு கத்திட்டேன். அவளுக்கு என்ன வயசு டா, அவகிட்ட என்ன வார்த்த சொல்லிருக்கேன் பாரு. அவ விடல, அழுகா, அழுகா.. நான் வீம்புக்கு, திரும்பத் திரும்ப, மாட்டேன், கழத்த மாட்டேன்னு சொல்லிட்டே இருக்கேன். அழுது அழுது அவளுக்கு கை கால் நடுங்குது, ஒதடு பட படன்னு ஆடுது. நான் நிதானமா ஒரு சிரிப்போட அப்பிடியே சொல்லுகேன், பாரு, நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ, எவ்ளோ வேணுமோ அழுதுக்கோ, முடியாது, காப்பக் கழத்த மாட்டேன்.. காப்பக் கழத்த மாட்டேன்னு. போட்டா பாரு ஒரு கூப்பாடு… ஏதோ ஒரு நீலி வந்து புடிச்ச மாதிரி. ஆமா அரவிந்தா, நீலியே தான். அந்தச் சத்தம் நான் கேட்டிருக்கேன். எனக்குள்ள அது எப்பவுமே இருக்கு. அதுக்கப் பொறவு எனக்குள்ள என்ன ஆச்சின்னு தெரில. பிள்ளைய என்ன செஞ்சேனோ! கொஞ்ச நேரத்துக்கு கண்ணு நல்லா இருட்டிருச்சு. அடுத்து நா பாக்கேன், அவ அம்மா கைல இருந்து ஏங்கி ஏங்கி அழுது மயங்கி சரியிறா பிள்ள. எம் பொண்டாட்டி ஒரு வார்த்த சொல்லல. என்ன பாக்கக் கூட இல்ல. நான் என்ன பண்ணன்னு தெரியாம மாடிக்குப் போய்ட்டேன். ராத்திரி பூரா நடந்துட்டே இருந்தேன். காலைல வீட்டுக்குள்ள போக முடியல. இங்க ஓடி வந்துட்டேன்.”

அரவிந்தன் என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தானா? என்ன திமிர்! அவன் கையைப் பிடித்து முறுக்கி கன்னத்தில் ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தேன். ஆனால், பெட்டிக் கடை அண்ணாச்சி தடுக்கவேயில்லையே! ஏன் சிரித்துக் கொண்டிருந்தார்? ‘இவன் என்ன பெரிய இவனா? எனக்கு அறிவுரை சொல்ல இவன் யாரு? சின்னப் பய? அவன் கத என்னன்னு வீட்டுல பாத்தாதான தெரியும். அட்வைஸ் மயிரு பண்ண வந்துட்டான். அவனுக்கு ரெண்டு ஆம்பளப் பயக்கன்னா எனக்கென்ன? ரெண்டு மகா லட்சுமியாக்கும் நான் வச்சிருக்கேன். புல்லட்டுல கூட்டிட்டுப் போவம்ல. நீ பாப்ப. அட்வைஸ் மயிரு.’ 

“இந்தாங்கண்ணே, மொதல்ல டீய அடிங்க..” கலைத்துப் போட்டு நின்றான் அரவிந்தன். 

கருத்து விடைத்து நின்ற கருங்கல். முகம் சிவக்கக் குங்குமம். திலகமிட்ட செஞ்சந்தனம். செவ்வரளி மாலை. சூழ்ந்து உயர்ந்து சென்ற ஆல். கிளை பரப்பி நிழல் விரித்து நீண்டு ஊரெல்லை வரை செல்லும் ஒற்றைப் பேர் யானை அந்த ஆல். இரவில் தனக்கென ஒரு குரல் கொண்டு முனக ஆரம்பிக்கும். மெல்ல அது உறுமலாக மாறும். ஒரு கணத்தில் வெறி கொண்ட வேட்டை மிருகமெனத் திமிறி ஆடும். கருங்கல் வளர்ந்து நிமிர்ந்து ஆலின் உள்ளாகத் துளைத்து எழும். ஆலிடைக் கல் கண் பெற்று நட்ட நடுவில் நிலைத்து நின்று திறக்கும். அதன் மூர்க்க ஆட்டம் மெல்லத் தணிந்து தன்னைத் தானே தாலாட்டி ஆடும். பக்கக் கிளையொன்றில் துளிர்த்துச் சிலிர்த்து மெல்லிய ஆடல் கொண்டு சிரிக்கும் ஓர் இளம் விழுது. ஆலின் உள்ளிருந்து உயிர் பெற்று நீளும் அருளின் கை. மெல்ல ஆடி ஆடி ஆலின் இருளில் தனக்கான ஒளி உருவாக்கி நீண்டு செல்லும் அச்சிறு ஆல். சிறு துளிரின் ஊடாட்டம் தன்னுள் ஒரு சிறு நடுக்கத்தைக் கொடுக்க திமிறி மீண்டும் உறுமியது ஆல். அதன் ஆட்டம் அச்சிறு துளிரை அச்சம் கொள்ள வைத்தது. அதை மீறி தொடர் ஆட்டத்தில் நீண்டு ஒரு கணத்தில் நனைந்து ஊறிக் கிடந்த தரையைத் தொட்டே விட்டது அத்துளிர். ஆலின் நடுக்கம் பெரும் ஆட்டமாக மாறி தன் சிறு துளிரை உதறி விடத் துடித்தது. பெரும் கிளைகள் புயல் கொண்டு அங்குமிங்கும் ஆடின. ஏதும் அறிய விரும்பா சிறு துளிர் மெல்லிய புன்னகையும் குறும்பும் காட்டி தரையைத் துளைக்க எத்தனித்தது. தன் கொடும் பற்களைக் காட்டி தன்னைத்தானே கடித்துக் குதற நின்றது ஆல். தரை துளைத்து கனம் கூட்டி பலம் காட்டி நின்று சிரித்தது அச்சிறு துளிர். ‘உன்னில் உனையுண்டு உண்டு நான். அல்லேல் இல் நான்.’

“அண்ணே, என்னாச்சு, அங்க என்னத்த மலச்சுப் பாத்துட்டு இருக்கீங்க? அண்ணே, அண்ணே.. அண்ணாச்சி, கொஞ்சம் இங்க வாங்க. என்னாச்சுன்னு தெரில. அண்ணன் அசைவில்லாம இருக்காரு.” 

அண்ணாச்சி வந்து என் தலையில் கை வைத்து, “தம்பி. இங்கப் பாரு. இங்கப் பாரு.” என்று சிரித்தார். அவரது உடைந்த கண்ணாடி. அந்தப் பெரிய கண்களில் பின்னிருந்த குளிர் குளத்தின் மெல்லிய அலைகள். நான் மீண்டு அரவிந்தனைப் பார்த்து கை நீட்ட, அவன் புரியாது நின்றான். 

“இந்தக் கையால என்னவெல்லாம் பண்ணிருக்கேன் பாருல. எல்லா ஆம்பளையும் ஒரு விதத்துல மிசோஜினிஸ்ட் தான்ல. அதப் பெருமையா வேற சொல்லிக்குவோம். தன்னோட அம்மா கிட்ட எல்லாத்தையும் உறிஞ்சிக்குவான். ஆனா, ஒரு நொடி போதும். சின்ன நன்றி கூட இல்லாம திரும்பிப் பார்க்காம போயிருவான். பொண்டாட்டி எல்லாம் சும்மா நாடகத்துக்கு தான். எங்க இவ நம்ம ஈகோவத் தாண்டி நம்மள விட மேல நிமிர்ந்து ஒரு படி நின்னுருவாளோன்னு ஒரு எண்ணம். ஆனா, வெளிய சொல்லவே மாட்டான். என் பொண்ணுங்க என் கிட்ட தான் பாசம். என் கை பட்டா தான் தூங்குவாங்க. என்னப் பாக்காட்டா காய்ச்சல் எங்கருந்து தான் வருமோ! இப்பிடி எல்லாத்துலயும் ஒரு ரொமான்டிசைஸ் பண்ற வேல. ஆனா, ஆழ் மனசுல நல்லா தெரியும் நமக்கு. நமக்கு வேற போக்கிடம் கிடையாது. ஆனாலும் அதக் காட்டிரக் கூடாது. சர்வைவல்… பிட்டஸ்ட்ன்னு எதையாவது நம்பிர வேண்டியது.. ஒரு சின்னப் பிஞ்சு.. இந்தா, ஆட்டிட்டா பாத்தியா? சரி, இப்பவாச்சும் புத்தி வரும்ங்கிற? மயிரு வரும். புத்தி வந்து திரும்பிப் போயிட்டா நம்மளப் பாத்து பழம்னு சொல்லிருவானுக பாரு. அதெப்பிடி நாம விட்டுக் கொடுக்க முடியும்.”

“அண்ணே, இங்கப் பாருங்க. வாங்க, நம்ம கொஞ்சம் நடப்போம்.” அரவிந்தன் என் தோளில் கைவைத்து அழுத்தினான். சட்டெனத் திரும்பி அவன் முகத்தோடு அறைந்தேன். 

“கேளுல மயிர. நான் பேசிட்ருக்கேன். பெரிய மயிரு மாதிரி பண்ணுக. மூடிட்டுக் கேளு. ஒன்ட்ட நான் ஒன்னும் ஆறுதல் வேண்டி வரல. முட்டாப்பய.. என்ன சொல்லுவ? சின்ன மருமகளா? நீயும் நம்ம எனம் தாண்டி.. ரொம்ப நடிக்காதல, நாளைக்கு அவளே மருமக ஆனாலும் அவள என்ன பண்ணுவியோ! மானங்கெட்டப் பொழப்பு ல.. த்தூ.”

அரவிந்தன் மலைத்து நின்றான். அண்ணாச்சி என்னைப் பார்த்து இன்னும் புன்னகைத்தபடி தான் நின்றார். 

“இவரு என்னல சிரிக்கது? எல்லாம் பெரிய ஆளுன்னு தான் நெனைப்பு. ஒம்ம மகளுக்கு நீரு தான செய்யணும். அதுல என்ன பெரிய பெரும வேண்டிக் கெடக்கு? பெருசா சாதிச்சுக் கிழிச்ச மாதிரி ஒரு மெதப்பு என்ன? ஒம்ம மக நாளைக்கு மவன் பொறந்தா ஒம்ம பேர வைப்பாளா? சார், ஒடஞ்ச கண்ணாடி சார், சொல்லுங்க சார், சொல்லுங்க. இதுல சிரிப்பு மயிரு வேற! ஒம்ம பொண்டாட்டி கிட்ட கேட்டா சொல்லுவால்லா கத கதையா..ஆமா, பொண்டாட்டி.. மண்ணாங்கட்டி.”

“அண்ணே, மரியாத…”

“அரவிந்தன் சார்.. இருங்க. இப்ப தான் புரியுது. பொண்டாட்டி.. அது தான் சார் விசயம். நம்ம எல்லாம் தாண்டி ஒரு கால்ல போய் கெடக்குறோம்லா! அது தான். அது தான் ஆட்டி வைக்கது. அவளால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டா. அதுக்கு மேல முடியல, இப்போ, என் இரத்தம். என் பிள்ளையையே எனக்கு எதிரா திருப்பி விட்டிருக்கா. ஆமா, அது தான் நடக்கு. என்ன சொல்றீங்க அரவிந்தன் சார்? ஒங்களுக்குப் பிரச்சினை இல்ல. ரெண்டும் ஒங்கள மாதிரி ஆண் சிங்கங்கள். அண்ணாச்சி ஒத்தப் பிள்ளைய கை கழுவி விட்டாச்சு. நம்மள மாதிரியா? ரெண்டு மகாலட்சுமில்லா! அது தான் மேட்டரு.. எல்லாம் என் பொண்டாட்டி பண்ற சதியாக்கும். நம்ம இல்லாத்த நேரமாப் பாத்து பிள்ளைகள்ட்ட என்னல்லாம் சொல்லிக் குடுத்தாளோ தெரியல. அதான் இப்பிடி காலச் சுத்திட்டு வருது. இவனுக்கு எது புடிக்காதோ அதச் செய்ங்கடின்னு சொல்லி விட்டுருப்பா. அடுக்களைல நின்னு கை கட்டிப் பாத்து ரசிச்சாலும் ரசிப்பா போல, என்ன! நேர்மையா நம்மள ஜெயிக்க முடியாதுல்லா! அதனால அவ்வோ பயன்படுத்துக பிரம்மாஸ்திரம் இது. எதுவும் பண்ண முடியாதே! அப்பால்லா! பாசம் காட்டித்தான ஆகணும். நடிக்கணுமே! சின்னப் பிள்ளைங்க கேட்டுருவாங்க இல்லையா, கரெக்ட்டா கேப்பாங்க! சொல்ல முடியாது, ஒருநாள், நெஜமா நீ தான் எங்க அப்பனான்னு கேட்டாலும் கேப்பாங்க. நம்மல்லாம் சும்மா அரவிந்தன் சார். இல்ல, இல்ல.. நான்லாம் சும்மா..”

அண்ணாச்சி பெட்டிக் கடைக்குள் சென்று, ‘நிலவே என்னிடம் நெருங்காதே, நீ நினைக்கும் இடத்தில் நானில்லை…’ என்று பாடிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய கண்ணாடி தம்ளரை எடுத்து சுத்தமாகக் கழுவினார். நல்ல வெண் மஞ்சள் நிற எலுமிச்சை ஒன்றை எடுத்து கருத்த கத்தியால் இரு சரி பாதிகளாக வெட்டினார். இரு துண்டுகளையும் கைகளில் எடுத்து அளவு பார்த்ததைப் போல சிரித்தார். பின், ஒரு துண்டைப் பிழிந்து கண்ணாடி தம்ளரில் விட்டபடி என்னைப் பார்த்து தலையசைத்தார். நான் அரவிந்தன் கைகளை உதறியபடி அவரை நோக்கி நடந்தேன். ‘மலரே என்னிடம் மயங்காதே…’ என்றபடி ஒரு கோலி சோடாவை எடுத்து என் கையில் நீட்டினார். நான் ஏதும் பேசாமல் அதை வாங்கி சத்தம் வர உடைத்து அவரிடம் நீட்டினேன். அவர் அதை தம்ளரில் விட்டு ஒரு சிறு கரண்டி நிறைய உப்பை எடுத்துப் போட்டுக் கலக்கினார். குமிழிகள். பொங்கும் நுரை. குளத்தின் அலைகள். குளிர்ச்சி. பொங்கி வழிந்த தம்ளரை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து விட்டு தம்ளரை மெல்ல அவரிடம் நீட்டினேன். அரவிந்தன் என்னருகே வந்தான். புகைச் சுழல். சட்டெனத் திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன். 

வீட்டு வாசலில் நுழையும் முன் தயங்கி நின்றேன். என்ன நடந்தது. என்னவெல்லாம் செய்தேன். எப்படி இங்கே வந்து நின்றேன் என எனக்கு நானே யோசித்தபடி நின்றேன். உள்ளிருந்து குரல்கள்.

“பாப்போமா, எங்க அப்பா எனக்கு உளுந்த வட வாங்கிட்டு வருவாளே! எப்பிடி, எனக்குதான்… எனக்கு தான்..” சிறியவள். 

“அப்பாவே கோவத்துல போயிருக்கா. வந்ததும் அடி வாங்கிறாத.” பெரியவள். 

சிறியவள் மெல்ல முனகிப் பின் ஓவென அழுகை. “எம்மா.. அக்காவப் பாரு.. அப்பா உளுந்த வட வாங்கிட்டு வர மாட்டான்னு சொல்லுகா…” 

“ரெண்டுவேரும் சும்மா இருங்க. வெளிய விட்டுக் கதவ அடச்சிருவன், பேசாமக் கெடக்கணும்..” 

அழுகை நீண்டு நீண்டு ஏங்கும் சத்தம். 

“அப்பா, அப்பா.. உளுந்த வட… உளுந்த வட….அப்பா..அப்பா..” 

மெல்லத் திரும்பினேன். விரல் நகச்சதையைக் கடித்தபடி நடக்க ஆரம்பித்தேன். 


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.