க. நா. சுப்ரமண்யம் எழுதிய நூல்களை ஆறுமாத காலம் தேடி, 2011ஆம் ஆண்டில் கட்டுரை எழுதிய பழ. அதியமான், ‘கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் ஒருவனால் படித்துவிட முடியும் என்று சொல்ல முடியவில்லை’ என்று எழுதினார். அவருக்கு முன் தஞ்சை ப்ரகாஷ், கி. அ. சச்சிதானந்தம் இருவரும் மேற்கொண்ட முயற்சிகளும் இடைக்கண் முறிந்தன.
ஒருசேர பார்ப்பதே அரிது என்று ஆகிவிட்ட க.நா.சு.வின் படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிவிட்டது. நல்நோக்கம் கொண்ட அரசாங்கத்தின் இந்தத் திட்டம் பாதகமான விளைவுகளையும் உண்டாக்கி வருகிறது. நாட்டுடைமையான படைப்புகளைப் பதிப்பிக்கும் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தியவர்கள் குறைவு. அத்தகைய பதிப்பகத்தாரிடம் மாட்டிக்கொண்ட நூல்கள் அநேகக் குளறுபடிகளுடன் வெளியாகி வருகின்றன. க.நா.சு.வின் படைப்புகள் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.
நாட்டுடைமையாக்கம் க.நா.சு.வின் படைப்புகள் மறுமதிப்பு காணவும் அதிக வாசகர்களைச் சென்றடையவும் வழிகோலியது என்றாலும், இவ்வழியில் மீண்டும் புழக்கத்துக்கு வந்த க.நா.சு.வின் படைப்புகளில் சகட்டுமேனிக்குப் பிழைகள் மிகுந்துள்ளன. பதிப்புணர்வு இல்லாத தமிழ் வாசகர் கூட்டம் அந்தப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த நூல்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அறியும் முன்பாக க.நா.சு.வின் காலத்தில் அவரது படைப்புகள் வெளியான வரலாற்றை நெட்டோட்டமாகப் பார்க்கலாம்.
தமிழில் க.நா.சு. நூல்களின் வெளியீட்டுக் காலத்தை மூன்று கட்டங்களாகப் காணலாம். 1939 முதல் 1966 வரை முதல் கட்டம். அதிலிருந்து 1985 வரை ஒரே நூல் மட்டும் வெளியான இரண்டாவது கட்டம். 1985 முதல் 1988 வரை பல மறுபதிப்புகளும் புதிய படைப்புகளும் வெளியான மூன்றாவது கட்டம்.
க.நா.சு. எழுதி அச்சேறிய முதல் நூல் 1939ஆம் ஆண்டு வெளியான ‘பொம்மையா, மனைவியா?’ என்ற மொழிபெயர்ப்பு நூல். அதிலிருந்து அறுபதுகளின் நடுப்பகுதி வரை அவரது பல நூல்கள் வெளிவந்தன. ஐம்பதுகளின் பிற்பகுதியில் விமர்சனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியதும் பதிப்பகங்களும் பத்திரிகைகளும் அவரது எழுத்தை வெளியிடாமல் தவிர்க்கலாயின. 1965ஆம் ஆண்டளவில் க.நா.சு. தமிழ்நாட்டைத் துறந்து புது தில்லி வாசத்திற்குச் சென்றார். 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘கருகாத மொட்டு’ என்ற சிறுகதைத் தொகுப்புக்குப் பின்பு க.நா.சு. நூல்கள் தமிழ்நாட்டில் வெளியாவது குதிரைக்கொம்பானது. இந்த இடைவெளி 1965 முதல் சுமார் இருபது ஆண்டுகள் நீண்டது. 1977 ஏப்ரலில் தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட ‘மயன் கவிதைகள்’ தொகுப்பைத் தவிர, வேறு நூல் வெளியீடு இல்லை. க.நா.சு. தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் எழுதுவதும் அற்றுப்போனது. இந்த இருபது ஆண்டுகளில் க.நா.சு. ஆங்கிலத்தில் எழுதுவதில் முனைப்பாக இருந்தார்.
1985ஆம் ஆண்டில் க.நா.சு. சென்னைக்குத் திரும்பி வந்தபோது அவரது புதிய நூல்கள் வெளிவந்தன. பழைய நூல்களும் மறுபதிப்பு கண்டன. பல பத்திரிகைகளில் தொடர்கள் வெளியாயின. சில தொடர்கள் விரைவில் நூல்வடிவும் பெற்றன. இந்தப் பதிப்பு வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு க.நா.சு. நூல்களின் பிந்தைய பதிப்புகளில் முளைத்த பிரச்சினைகளை நோக்கலாம்.
2
க.நா.சு.வின் காலத்திலேயே அவரது நூல்கள் அவர் விரும்பாத திருத்தங்களுடன் வந்திருக்கின்றன. அன்றைய பதிப்பகங்கள் தனது அனுமதியின்றி செய்துவிட்ட திருத்தங்கள் பற்றி அந்தந்த நூல்களின் முன்னுரையில் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார்.
‘அழகி முதலிய கதைகள்’ (1944) தொகுப்பின் முன்னுரையில் வரும் குறிப்பு இது:
‘அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு இன்னும் பல விதங்களிலும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். “ஆசிரியர் கதைகளைத்தான் சிரமப்பட்டு எழுதினார்; அச்சுப் பார்த்துத் திருத்தும் சங்கடமான வேலையையும் அவரிடம் தந்து அவரைச் சிரமப்படுத்துவானேன்?” என்று பிரசுராலயத்தார் தாங்களே பார்த்து அச்சிட்டுவிட்டார்கள். அதற்கும் எனது நன்றி. இதில் உள்ள கதைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.’
‘கதைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு’ என்று பதிப்பகத்தார் செய்த திருத்தங்களைத் தாம் ஏற்கவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். இதேபோல ‘பொய்த்தேவு’ (1946) நாவலிலும் பதிப்பகத்தார் கைவரிசை காட்டியிருப்பதைக் குறிப்புணர்த்துகிறார்.
‘தமிழில் ஆசையும், தமிழ் இலக்கணம் என்று சொல்லப்படுவதில் அவநம்பிக்கையும் கொண்ட என்னுடைய இந்தப் புஸ்தகத்தில் காணப்படுகிற இலக்கண சுத்தங்களுக்கெல்லாம் கலைமகள் காரியாலயத்தார் “தாம்” பொறுப்பு.’
இந்த நூல்களில் பதிப்பகத்தார் செய்த திருத்தங்கள் தனக்கு உவப்பானவை இல்லை என்பதை இக்குறிப்புகள் மூலம் உணர்த்துகிறார். இன்னும் பல நூல்களும் க.நா.சு.வின் காலத்திலேயே அவரது அனுமதியின்றி திருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவரது நூல்கள் நாட்டுடைமையான பிறகு வந்த வெளியீடுகள் பல பிழைமலிந்த பதிப்புகளாக உள்ளன. அதன் உச்சமாகக் கருதவேண்டியது ‘அசுரகணம்’ நாவலில் நிகழ்ந்துள்ள பதிப்புக் குளறுபடிகள்.

‘அசுரகணம்’ நாவலை முதலில் தமிழ்ப் புத்தகாலயம் 1959 ஜூலையில் வெளியிட்டது. பின்னர் 1985 டிசம்பரில் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட ‘மூன்று நாவல்கள்’ என்ற தொகுப்பிலும் இந்நாவல் இடம்பெற்றது. மற்ற இரு நாவல்கள் ‘பசி’, ‘ஏழுபேர்’. இந்த நாவல் தொகுப்பை ‘அசுரகண’த்தின் இரண்டாவது பதிப்பாகக் கருதலாம். இந்த நாவலுக்கு க.நா.சு.வின் காலத்தில் வெளியான பதிப்புகள் இவை இரண்டும்தான்.
முதல் பதிப்பு 70 அத்தியாயங்கள் கொண்டது. க.நா.சு.வின் ஐந்து பக்க முன்னுரையையும் உள்ளது. ‘அசுரகணம்’ உள்ளிட்ட மூன்று நாவல்களை ஸ்டார் பிரசுரம் ஒரு தொகுப்பாக வெளியிட்டபோது, அந்த நாவல்களைப் பற்றி பொதுவான முன்னுரை க.நா.சு. வழங்கியுள்ளார். ஆனால், அந்த நாவல்களின் முதல் பதிப்பு முன்னுரைகள் இல்லை.
பென்னம் பெரிய நூல்களை அச்சிடுவதில் ஆர்வம் காட்டும் காவ்யா பதிப்பகம் க.நா.சு. நூல்கள் நாட்டுடைமையானதைச் சாக்கிட்டு 2005-இல் அவரது 16 நாவல்களை எட்டு எட்டு நாவல்களாகக் கூறு போட்டு இரண்டு பெருந்தொகுதிகளை அச்சிட்டு விற்றது. இரண்டாவது பெருந்தொகுதியில் ‘அசுரகணம்’ நாவலும் உள்ளது. ஆனால், நாவலின் 65வது அத்தியாயத்தின் இறுதிப் பகுதியும் 66வது அத்தியாயம் முழுமையும் எப்படியோ மாயமாகிவிட்டது. இந்த விடுபடல் நேர்ந்தது எப்படி? இந்தக் ‘காவ்யப் பதிப்பு’ எத்தகைய ஊறு விளைவித்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு இந்த விடுபடல் நேர்ந்தது எப்படி என்பதையும் அறியலாம்.
க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுமையான சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நூற்றாண்டும் வந்தது. அதையொட்டி க.நா.சு. நாவல்கள் பலவற்றை வெளியிட்ட நற்றிணை பதிப்பகம் ‘மகத்தான நாவல் வரிசை’ என்ற முத்திரையுடன் ‘அசுரகண’த்தையும் 2011-இல் அச்சிட்டது. இந்தப் பதிப்பில் உள்ள நாவல் 11 அத்தியாயங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. 70 அத்தியாயங்கள் கொண்ட நாவல் 11 அத்தியாயங்களுக்குள் சுருங்கியது எப்படி? காவ்யா பதிப்பையும் நற்றிணை பதிப்பையும் ஒப்புநோக்கியதில், முன்னதில் விடுபட்டிருக்கும் பகுதி பின்னதிலும் இல்லாதிருப்பது தெரிந்தது. நற்றிணை பதிப்புக்கு மூலமாக அமைந்தது காவ்யா பதிப்புதான் என்றும் தெரியவந்தது. காவ்யா பதிப்பில் ஒரு அத்தியாயமே விடுபட்டிருப்பதைக் கண்டதும், அதை நேர்செய்ய சுலபமான ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாவலின் 70 அத்தியாயப் பகுப்பைக் கைவிட்டு, தான்தோன்றித்தனமாக 11 அத்தியாங்களாக நாவலைத் துண்டாடிவிட்டனர்.
மூலமாக எடுத்துக்கொண்ட காவ்யா பதிப்பில் விடுபடல் இருப்பதை அறிந்ததும், நாவலின் முதல் பதிப்பையோ ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நாவல் தொகுப்பையோ பார்த்து சரியான பிரதியைப் பெறலாம் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை போலும். நற்றிணையின் இந்த வெளியீட்டில் நாவலைப் பற்றி க.நா.சு எழுதியதாக ஒரு குறிப்பு, முன்னுரையப்போல வழங்கப்பட்டுள்ளது. அது எங்கிருந்து வந்தது? அதுவும் காவ்யா பதிப்பிலிருந்து வந்ததுதான்.
காவ்யா பதிப்பகத்தார் தங்கள் வெளியீட்டுக்கு ஸ்டார் பிரசுரத்தின் ‘மூன்று நாவல்கள்’ தொகுப்பை மூலமாகக் கொண்டுள்ளனர். முதல் பதிப்பு முன்னுரை இல்லாமல், ‘மூன்று நாவல்கள்’ நூலின் பொதுவான முன்னுரையை மட்டும் கொடுத்திருப்பதிலிருந்தே அவர்கள் முதல் பதிப்பைப் பார்வையிடவில்லை எனத் தெரிந்துவிட்டது. காவ்யா கொடுத்திருக்கும் இந்த முன்னுரையில் ‘அசுரகணம்’ நாவல் பற்றிக் குறிப்பிடும் ஒரு பத்தியை மட்டும் எடுத்து முன்னுரை போல சேர்த்திருக்கிறது நற்றிணை பதிப்பகம்.
காவ்யா பதிப்பை மூலமாக எடுத்துக்கொண்டு, அதில் விடுபட்ட பகுதியை மறைக்க அத்தியாயக் கணக்கைப் பதினொன்றாக மாற்றி, முன்னுரை போல ஒரு பத்தியை வெட்டி ஒட்டி, நற்றிணை தயாரித்த இந்தப் போலிப் பதிப்பு அதிக அளவில் விற்பனையானதோடு, நூலகங்களுக்கும் வாங்கப்பட்டு ஏராளமான வாசகர்களிடம் சென்றுள்ளது. நற்றிணையின் இந்த 11 அத்தியாய போலிப் பதிப்பை அடியொற்றி, புதிய ‘பதிப்பு’களை வேறு பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன.
யாவரும் பப்ளிஷர்ஸ் ‘அசுரகண’த்தை வெளியிட்டபோது, நற்றிணை திரித்து வெளியிட்ட 11 அத்தியாயப் பதிப்பை பின்பற்றவில்லை. அவர்கள் வெளியிட்டுள்ள பதிப்பில் 70 அத்தியாயங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களும் நற்றிணை செய்தது போன்ற தவறையே வேறு விதமாகச் செய்துள்ளனர். யாவரும் பதிப்பகத்தாரும் காவ்யா பதிப்பையே மூலமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். காவ்யா பதிப்பில் 65வது அத்தியாயத்துக்குப் பிறகு 67வது அத்தியாயம் வந்துவிட்டதைக் கண்டதும், 67வது அத்தியாயத்தை இரண்டாக வகுந்து 66, 67வது அத்தியாயங்களாகக் மாற்றிவிட்டார்கள்.
நற்றிணை, யாவரும் இரண்டு பதிப்பகங்களும் விடுபட்ட பகுதியைத் தேடி வேறு பிரதியைப் பார்க்க முயலவில்லை. மனம்போன போக்கில் நாவலின் அமைப்பைச் சிதைத்துள்ளனர். காவ்யா அசட்டையாக அச்சிட்டுத் தள்ளிய பதிப்புதான் இந்தப் போலிப் பதிப்புகள் தோன்ற வழிவகுத்தது.
காவ்யா பதிப்பில் ஒரு அத்தியாயமே மாயமானது எப்படி? காவ்யா பின்பற்றியது ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நாவல் தொகுப்புதான். அந்தத் தொகுப்பில் இடவலமாக உள்ள 324, 325ஆம் பக்கங்களில் உள்ள பகுதிதான் காவ்யா பதிப்பில் விடுபட்டுள்ளது. காவ்யாவுக்காக நாவலைத் தட்டச்சிட்டவர் இவ்விரு பக்கங்களைக் கவனப்பிசகாகக் கடந்துசென்றிருக்கிறார். அந்த இரண்டு பக்கங்களில் உள்ள 65வது அத்தியாயத்தின் இறுதிப் பகுதியையும் 66வது அத்தியாயத்தையும் பார்க்கத் தவறிவிட்டார். இரண்டு பக்கங்களை விட்டுவிட்டு, 326ஆம் பக்கத்துக்கு வந்தவர் அந்தப் பக்கத்தில் ஆரம்பமாகும் 67வது அத்தியாயத்தைத் தொடர்ந்து தட்டச்சிட்டிருக்கிறார். 66வது அத்தியாயத்தைத் தட்டச்சிடவில்லை என்பதை மறந்துவிட்டார்.
ஸ்டார் பிரசுரத்தின் 324 மற்றும் 325ஆம் பக்கங்களில் உள்ள நாவல் பகுதி காவ்யா பதிப்பில் காணாமல்போனது இப்படித்தான். தட்டச்சிட்டவரின் கவனக்குறைவால் 66வது அத்தியாயம் முழுவதும் விடுபட்டிருப்பதை காவ்யா பதிப்பகத்தார் கவனிக்கவே இல்லை. மெய்ப்பு நோக்க எவரும் இருக்கவில்லையா? தட்டச்சிட்ட பிரதி அப்படியே அச்சேறிவிட்டதா? மேலோட்டமாகப் பார்த்திருந்தாலே இந்த விடுபடலைச் சரிசெய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. தட்டச்சிட்டதை அப்படியே அச்சேறிவிட்டார்கள் போலும்.
கவனக்குறைவினாலும் அலட்சியத்தினாலும் நேர்ந்த இந்தப் பிழை பல ஆண்டுகளாக ஏராளமான வாசகர்கள் இந்த நாவலின் ஒரு அத்தியாயத்தையே படிக்க முடியாமல் செய்திருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ‘அசுரகணம்’ நாவலை விடுபடல் இல்லாமல் தரும் ஒரு பதிப்பு வந்தது. 2018ஆம் ஆண்டில் சந்தியா பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு அது. 70 அத்தியாங்களும் சரியாக அமைந்த இந்தப் பதிப்பும் முழுக்கக் குறையில்லாதது எனச் சொல்வதற்கில்லை. இவர்கள் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நாவல் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு, நாவலைச் சரியாக வெளியிட்டிருந்தாலும், க.நா.சு. எழுதிய முன்னுரையை வழங்கவில்லை. பதிப்பாளரே சம்பிரதாயமான முன்னுரை ஒன்றை எழுதிச் சேர்த்துள்ளார். சந்தியா வெளியிட்டதும் நேர்த்தியான பதிப்பு அல்ல.
விடுபடலும் குறைகளும் இல்லாத ‘அசுரகண’த்தின் செம்பதிப்பொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பதிப்புதான் அது. நாவலை முழுமையாகத் தருவதுடன் முதல் பதிப்பின் முன்னுரையும், ‘மூன்று நாவல்கள்’ தொகுப்பின் முன்னுரையும் அடங்கியது இது. இந்தப் பதிப்புக்குப் பயன்பட்ட பழைய பதிப்புகளின் முகப்புகளும் உள்ளன. ‘அசுரகணம்’ நாவலின் பதிப்பு வரலாறும் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் பதிப்பு வெளியாகி 66 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்தப் பதிப்புதான் ‘அசுரகணம்’ நாவலின் முதல் முழுமையான மறுமதிப்பு. முதன்முதலில் இந்நாவல் வெளியானபோது க.நா.சு. எழுதிய முன்னுரையும் இந்த மறுபதிப்பில்தான் உள்ளது.
3
‘அசுரகணம்’ தவிர க.நா.சு.வின் வேறு நூல்களின் மறுபதிப்புகளில் நேர்ந்த பிழைகளையும் பார்க்கலாம்.
‘படித்திருக்கிறீர்களா?’ முதல் தொகுதியில் 21 கட்டுரைகள் உள்ளன. அதிலிருந்து இரண்டு கட்டுரைகளை மட்டும் நீக்கி, மற்ற கட்டுரைகளை ‘க.நா.சு. பார்வையில் இலக்கிய வளர்ச்சி’ (மே, 1986) என்ற நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரு கட்டுரைகள் நீக்கத்துக்கும் தலைப்பு மாற்றத்துக்கும் என்ன காரணமோ தெரியவில்லை.
டி. எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த ‘நவசக்தி’ பத்திரிகையில் க.நா.சு. எழுதிவந்த தொடர், பின்னர் ‘மனிதகுல சிந்தனை வளம்’ (வைரம் பதிப்பகம், 1966) என்ற நூலாக வெளியானது. இதே நூல் எண்பதுகளில் மறுபதிப்பு கண்டபோது ‘மனித சிந்தனை வளம்’ (கலைஞன் பதிப்பகம், 1985) எனத் தலைப்பு மாறியுள்ளது. முதல் பதிப்புடன் ஒப்பிடும்போது மறுபதிப்பில் பல வேறுபாடுகள் தெரிகின்றன. முதல் பதிப்பில் 23 இயல்கள் உள்ளன. கலைஞன் மறுபதிப்பில் 19 இயல்களே உள்ளன. மறுபதிப்பு முதல் 17 இயல்கள் வரை முதல் பதிப்பை ஒத்திருக்கிறது. பின், அடுத்த இரண்டு இயல்களுடன் நிறைவடைகிறது. மாறாக, முதல் பதிப்பில் 17வது இயலுக்குப் பிறகு உள்ள ஆறு இயல்கள் உள்ளன. முதல் பதிப்பில் இணைப்பாகத் தரப்பட்ட கொடிவழி வரைபடங்கள், அட்டவணைகள் மறுபதிப்பில் இல்லை. மறுபதிப்பில் நேர்ந்துள்ள வேறுபாடுகளுக்கு காரணம் என்னவென்று விளக்க பதிப்புரையோ சிறுகுறிப்போ இல்லை.
‘அவதூதர்’ (ஸ்டார் பிரசுரம், செப். 1988) நாவலை க.நா.சு. ஆங்கிலத்தில்தான் எழுதினார். அறுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலை க.நா.சு. கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் லதா ராமகிருஷ்ணன். ஆனால், இந்த நாவல் வெளியானபோது நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டதைப் போலவே வெளியாகிவிட்டது. க.நா.சு. எழுதிய முன்னுரையில், தன்னிடமிருந்து தட்டச்சுப் பிரதியைப் பெற்று லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தார் என்ற குறிப்பு உள்ளது. ஆனால், ஸ்டார் பதிப்பகத்தார் மொழிபெயர்ப்பாளர் பெயரை உரிய வகையில் நூலில் குறிப்பிடவில்லை. இப்போது வரை ‘அவதூதர்’ நாவலை மறுபதிப்பிடும் பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை நூல் முகப்பில் குறிப்பிடுவதே இல்லை. இந்த நாவலின் முதல் பதிப்பில் தொடக்கத்தில் ‘Zen Flesh Zen Bones’ என்ற நூலிருந்து ‘அப்படியா?!’ என்ற கதை கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் எந்த மறுபதிப்பிலும் காணமுடியவில்லை.
‘குங்கும’த்தில் எழுதிய தொடர் கட்டுரைகள் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ (மணிவாசகர் பதிப்பகம், டிச. 1985) என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றன. இதில், புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரையில் சில குறிப்பிடத்தக்கப் பாட வேறுபாடுகள் இருக்கின்றன. நூலில் உள்ள எல்லா கட்டுரைகளையும் ஒப்புநோக்க, ‘குங்குமம்’ இதழ்கள் முழுவதும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. ‘குங்கும’த்தில் எழுதிய தொடரில் எல்லா கட்டுரைகளும் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் அடங்கவில்லை எனவும் க.நா.சு. குறிப்பிட்டுள்ளார். ‘குங்கும’த்தில் வெளியான தொடர் கட்டுரைகளை முழுமையாகச் சேகரித்தால், இன்னும் சில கட்டுரைகள் கிடைக்கலாம். அவற்றை உள்ளடக்கி இந்நூலுக்கு விரிவாக்கிய பதிப்பையும் கொண்டுவரலாம்.
பிழையான பதிப்புகளால் நேர்ந்த இழப்புகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். க.நா.சு. கவிதைகள் (சந்தியா பதிப்பகம், 2002), க.நா.சு. கதைகள் (காவ்யா, 2007) போன்ற தொகுப்பு நூல்களிலும் அநேக குழப்பங்கள் நேர்ந்துள்ளன. க.நா.சு. மொழிபெயர்த்த ‘தபால்காரன்’ நாவல் க.நா.சு. எழுதிய முன்னுரை இல்லாமலே நீண்டகாலம் மறுஅச்சாகி வந்திருக்கிறது. அண்மையில்தான் அந்த நாவலுக்கு எழுத்து பிரசுரம் மூலம் நல்ல பதிப்பொன்று வந்திருக்கிறது. ‘மதகுரு’ நாவலில் நூலாசிரியரின் முடிவுரையைக் கொண்ட மறுபதிப்பை இன்னும் பார்க்க முடியவில்லை. ‘பலிபீடம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலில் மூன்றில் ஒரு பகுதி க.நா.சு. மொழிபெயர்த்தது. ஆனால், அதன் மறுபதிப்புகளில் க.நா.சு.வின் பெயரைக் குறிப்பிடுவதே இல்லை.
க.நா.சு. நூல்களை மறுஅச்சிடுவோர் செய்யும் குளறுபடிகளும் பிழைகளும் எண்ணிறந்தவை. இன்றளவும் அத்தகைய பிழைமலிந்த வெளியீடுகள் வந்தபடி இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இரு நூல்கள் வரவிருக்கும் வரம்புமீறிய பதிப்பொன்றை முன்னறிவிப்பதாக உள்ளன.
க.நா.சு. மொழிபெயர்த்த ‘அன்பு வழி’, ‘பசி’ நாவல்கள் 2018-ல் வளரி வெளியிடாக வந்துள்ளன. அவற்றை மெய்ப்புப் பார்த்தவர் ‘சில திரும்பக் கூறல் சொற்களை’ நீக்கியும் திருத்தியும் க.நா.சு.வின் மொழிபெயர்ப்பையே முழுக்க சிதைத்திருக்கிறார். க.நா.சு. எழுதிய முன்னுரைகளும் தேவையில்லாதவை என்று கருதி நீக்கிவிட்டார். நூலில் மேற்கொண்ட திருத்தங்கள் பற்றி ஒருவரிக் குறிப்பைக்கூடத் தரவில்லை. இந்தப் போலிப் பிரதிகளை முதல் பதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


இங்கே மாதிரிக்காக ஒவ்வொரு பக்கங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. காவ்யாவின் பதிப்பிலிருந்து ‘அசுரகணம்’ நாவலின் போலிப்பிரதிகள் பெருகியதைப் போன்ற பின்விளைவு இந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் விஷயத்திலும் நடக்கலாம். இவ்விரு இந்த நாவல்களையும் திருத்திச் சிதைக்கும் காரியத்தைச் செய்திருப்பவர் இப்போது ‘மதகுரு’ நாவலிலும் தன் கைவரிசையைக் காட்டி, ‘செம்பதிப்பு’ வெளியிடப் போகிறாராம். ‘யானை புக்க புலம் போல’ ஆக்கிய பிரதியைத்தான் ‘செம்பதிப்பு’ என்று விளம்பரப்படுத்துகிறார். அதைச் ‘செம்பதிப்பு’ என்று சொல்வது ‘நல்ல பாம்பு என்பதைப் போன்ற மங்கல வழக்கு’ என்றுதான் கருதவேண்டும்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
