
மேலே காணப்படும் இந்த புகைப்படம் காட்டுவது, வெயில் படரும் ஒரு காடு, பனி விலகா மலைச் சிகரங்கள், பிங்க், நீலம், வெண்மை, காலை அல்லது மாலையின் வானம்.
இது அழகியல் மட்டுமில்லை. அமைதியும், தனிமையும், தெய்வீக வணங்குதலும் இணைந்த மூன்று தத்துவங்களையும் சொல்லும் ஒன்றல்லவா?
இந்த உலகத்தை இரண்டென்று பார்ப்பது இயல்பே-ஆண்- பெண், பிறப்பு- இறப்பு, பகல்- இரவு. ஆனாலும், இரண்டு என்பதையும் மீறி அதனுள்ளே மறைந்திருக்கும் மூன்றை மெய்யியலாளர்களும், இயற்பியலாளர்களும் அறிந்து கொண்டார்கள். நமது இன்றைய உலகில் க்ளாசிக் கணினி பயன்படுத்துவது 0,1 என்ற இரட்டையரை. இவற்றின் இடையே 0.01- 0.9999 என்பதைப் பயன்படுத்துவது குவாண்டம் கணினி. ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிவியல், கலை, மெய்யியல், உளவியல், வடிவமைப்பு மருத்துவம் இவற்றிலெல்லாம் மும்முறை என்ற கருத்தாக்கம் நிலவுகிறது. மூவகை இயற்கை சக்திகள், மூன்று அடிப்படை துகள்கள், மரபியல் குறியீடுகளில் மூன்று முக்கிய அம்சங்கள், மூளை, மனம், சைதன்யம் என்ற முவ்வமைப்பு, அனைத்தும் நாம் அறிந்த ஒன்று.
இயல்பில் மனிதர்களும், சமூகமும் இந்த மூன்று என்ற குணங்களைக் கொண்டிருந்தாலும், பல்வேறு அழுத்தங்களால், நம் சரஸ்வதி நதியைப் போல அந்த மூன்று கண்களுக்குப் பொதுவாக புலப்படுவதில்லை. இரட்டையர்கள் (1,2) நிலைத்துவிடுகிறார்கள்.
பழங்குடியினர், தொடர்ச்சியாக ஒரு சிக்கலிலும், சண்டைகளிலுமே இருப்பதற்கான காரணம் என்று இதைச் சொல்லலாம். அவர்கள் உண்மை என்பதை இரண்டாகப் பார்க்கிறார்கள். தங்கள் குழுவைச் சாராத ஒருவரை வேறுபடுத்திவிடுகிறார்கள். சமீபத்திய பழங்குடி மரபுகளில், தங்கள் கொள்கைகளுக்கு உடன்படாதவர்களை அவர்கள் துரத்தி விடுகிறார்கள், அடிமையாக்குகிறார்கள், கொன்றுவிடுகிறார்கள், நிலம் பறிக்கப்படுகிறது, கட்டாயப் புலப்பெயர்வும் நடக்கிறது. அந்த எச்சம் இன்றைய நவீன சமூகத்திலும் இருப்பதை நீங்களே பார்த்து வருகிறீர்கள்.
சமுதாயத்தை 19ம் நூற்றாண்டின் மார்க்சிஸம் இரண்டாகப் பிரித்தது; அடக்குபவர், அடங்குபவர். அதிலிருந்து, கருத்தால் கிளைத்த பெண்ணியம், ஆணை பலவகைகளில் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றும், பெண்ணிற்கு இயற்கை வஞ்சகம் செய்துவிட்டதென்றும் சொல்லத் தொடங்கியது; இருவரும் ஒரு முழுமையின் இரு பகுதிகள் என்றும், அதன் இணைப்பில் அல்லது இருப்பில் மேலென்றும், கீழென்றுமில்லை என்றும் உணராத இரு பாலரும் இருக்கிறார்கள். இந்து மதத்தில் ‘அர்த்தநாரீ- உமையொரு பாகன்’ என்ற அற்புதம் இருக்கிறது. வடிவ இணைப்பையும் மீறி, அது ஒன்றாவதையும், பிரிவினை அற்றது என்பதையும், உயர்வு- தாழ்வு எல்லாம் மனக் கிலேசங்கள் என்பதையும் காட்டும் உன்னதமான ஒன்று. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாததையெல்லாம், நாம் பரிகசிப்போம்- அதுதான் தமிழர்களின் உயர்குணம்! இரட்டை எனப் பிரிப்பது வாழ்வை உறுதிப்படுத்துவதில்லை, சுவையுள்ளதாக்குவதில்லை, வெற்றுச் சண்டைகளுக்கும், அமைதியின்மைக்கும் இட்டுச் செல்கிறது என மனித நாகரீகம் உணருமோ? தெரியவில்லை.
அறிவியல் கோட்பாடு
மரபியல், டிஎன்ஏ, ஆர்என்ஏ, புரதங்கள் என்ற மூன்றும் கொண்டு தனது திசுக்களை வடிவமைக்கிறது, வழி நடத்துகிறது. டிஎன்ஏவின் மரபியல் செய்திகள், செய்தியாளர் ஆர்என்ஏ மூலம் பெறப்பட்டு, புரதங்கள் தங்கள் கூட்டமைப்பை மேற்கொள்கிறது. மூளையிலும் பாரம்பர்யமான மூன்று அமைப்புகளைப் பார்க்கலாம்- உள்ளுணர்வு- ஊர்வன போன்ற அனைத்து இனங்களிலும் உண்டு; எலும்பு, மூட்டு,வடிவம் -விலங்கினம்; ஆழ சிந்தித்தல், தேடுதல், அறிதல், மேம்படுதல்- மனித இனத்தில் உள்ளது.
இயற்பியலில், முப்பரிமாணம், பொருண்மை உண்மையைக் காட்டும் ஒன்று. துணை அணுப் பொருளான ப்ரோடான், ந்யூட்ரான், எலெக்ட்ரான், மூன்றும் அணுவில் உள்ளது. மற்ற துகள்களும் மூவகையாக அமைகின்றன. இவை அனைத்தும் இணைந்தே அணுவின் குணாதியசங்களை, தன்மையை ஏற்படுத்துகின்றன. ஈர்ப்பு விசை தனித்த ஒன்று; அதி சக்தி, மெலிந்த சக்தி, மின்காந்தச் சக்தி என்று மூவகை. இதில் அதி சக்தியானது, ப்ரோடான், எலெக்ட்ரான் மற்றும் மற்ற துகள்களுடன் குவார்க்கைப் பிணைத்து, அணு மையக்கருவை ஒருமிக்க இணைக்கும் வேலையைச் செய்ய, பீட்டா சிதைவிற்கு மெலிந்த சக்தி பொறுப்பாகிறது.
பண்பாடு
மும்மூன்றாய் தொகுக்கப்படும் செய்திகளை உள்வாங்குவதும், நினைவில் நிறுத்துவதும் சுலபமாக இருக்கிறது. உளவியலின்படி ஒன்று என்பது எளிமையானது, இரண்டு என்பது இரட்டைத்தன்மை அல்லது எதிர்ப்பைக் குறிக்கிறது. மூன்றோ, முழுமையையும், ஒத்திசைவையும் குறிக்கிறது.
ரோமானிய எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், மூன்றின் சக்தியை எடுத்துக் காட்டி தங்கள் பேச்சுக்களில், எழுத்துக்களில் அதைக் கையாண்டார்கள். இது ஒரு அருமையான விதம் என்றே சொல்லலாம்; அறிமுகம், கருத்து அல்லது செய்தி, அதை நிறுவுதல் என்று செயல்படுவது தெளிவைக் கொடுத்தது.
புகழ் பெற்ற மூன்று வார்த்தைகள்:
- ஜூலியஸ் சீசரின் ‘வந்தேன், கண்டேன், வெற்றி பெற்றேன்’ ( “Veni, vidi, vici”)
- வாழ்க்கை, சுதந்திரம், இன்பம்- அமெரிக்க விடுதலை முழக்கம் கூறிய உரிமைகள் (Life, Liberty, and the Pursuit of Happiness)
- சுதந்திரமான, சம்த்துவமான, சகோதரத்துவமான – ( Liberté, égalité, fraternité )1790க்கு முந்தைய ஃப்ரெஞ்ச் முழக்கம்.
- வேகம், மேன்மை, வலிமை- ஒலிம்பிக்.
- மூன்று புத்தியுள்ள குரங்குகள்- தீயதைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே.
கிருஸ்துவத்தில் மூன்று தெய்வங்கள்- முதன்மைக் கடவுள், அதன் துணை, அவர்களின் குழந்தை. இந்த மூன்றுமே ஒரு முக்கோணத்தைப் போல, கடவுள், கடவுள் தன்மை, நிரந்தரம் எனச் சுட்டுகின்றன. தந்தைக் கடவுள், குழந்தைக் கடவுள், பரிசுத்த ஆவி- அதாவது மூன்றும் இணையும் ஒற்றுமை, அறிவு, ஆன்மா. இதையே நீதி, உண்மை அருள் என்றும் சொல்வார்கள். வெவ்வேறு மூன்று வடிவங்கள்- இயற்கையில் ஒன்றாக இருக்கிறது.
Al-Lat, Al-Uzz a, and Manat என்ற முத்தெய்வங்கள், இஸ்லாமிற்கு முந்தைய அரேபியாவில் வணங்கி கொண்டாடப்பட்டன. இந்த தெய்வங்களின் வழிபாடு, சிரியாவிற்கும் பரவியது. இவற்றில் அல்- லாட் என்ற தெய்வம் வளமையையும், அல்- உஸ்ஸா என்ற தெய்வம் வலிமையையும், மேனாட் செல்வம், விதி, போன்றவற்றையும் குறிக்கிறது.

***
இந்து மதத்தில், இந்த மூன்று அருமையாக பலதுறைகளில் கையாளப்பட்டுள்ளது. “அ உ ம” மூன்றும் சேர்ந்ததே பிரணவம். திரிசூலம், முக்கண், மும்முலை, மூன்று தமிழ்ச் சங்கம், முத்தமிழ், மும்மூர்த்திகள், முக்கனிகள், மூன்று கோடு திருநீறு, மூன்று பாக நாமம், பல முக்கோணங்களால் உலகம் தோன்றியதை இன்னமும் விஸ்தரிக்கக் கூடிய ஸ்ரீ சக்ரம், ஃ எனும் எழுத்து.. சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்ரீ சக்ரம் அல்லது ஸ்ரீ யந்திரம் முக்கோணங்களால் அமைந்தது. மேல் நோக்கும் முக்கோணம், நெருப்பையும், ஆன்மீக மேல்தளத்தையும் குறிக்கும்; கீழ் நோக்கும் முக்கோணம் நீரை, பெண்ணின் கருவறையைக் குறிக்கும்; உள்துளைத்து செல்லும் முக்கோணம் புலனுணர்வயும், தன்னுணர்வையும் குறிக்கும்.

அண்டவியல், தத்துவம், குறியீட்டியல் அனைத்திலும் இந்து மதம் இந்த மூன்றை மதிப்பாகக் கையாண்டுள்ளது. பூமி, வளிமண்டலம், சொர்க்கம் (நரகம்) என்று அண்டத்தை மூன்று பெரும் பிரிவுகளாகச் சொன்னது. மண்ணிற்கு கீழே அதிலேயே நாட்டம் கொண்டுள்ள உலகமொன்று, மண்ணில் ஒரு காலும், விண்ணில் ஓரு காலும் பதிக்க ஆசைப்படும் நம் உலகம், தேவர்கள் வாழும் விண்ணுலகம்; நாம் 14 உலகங்களை அறிந்திருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள்; வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் ஆதிக்கத்தைப் பொறுத்து உடலில் வரும் நோய்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.
படைப்புக் கடவுள் ப்ரும்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, மறைத்தருளும் கடவுள் சிவனென்றும், மூன்றும் வடிவங்களால் வேறு எனத் தோன்றினாலும், ஒரே தெய்வமென்றும் சொல்கிறோம். தத்ராத்தேயர் வடிவமே முத்தெய்வ இணைப்பு. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் இருக்கிறது. பரிபாடல் 5ல் முருகன், அருள், அன்பு, மேன்மை என்று குறிப்பிடப்படுகிறார்; பரிபாடல் 2 விஷ்ணுவை அவ்வண்ணமே சொல்கிறது.
தத்துவ கோட்பாடு
செயலைச் செய்யும் எண்ணம், அதற்கான செயல்முறை, அதனால் பயன்பெறுவோர் என்ற மூன்றும் தேவை. வாக்கிய அமைப்பிலும் இதை நாம் உணரலாம். உண்மை என்று உணரப்படுவதும் இந்த மூவகையில் தான். மூன்று வசந்தக் கோட்பாடும் அதைச் சொல்கிறது- பல நிலைகளில் ஊசலாடுதல், துடிப்புகள், துல்லியம். இதையே விரிவாகப் பார்த்தால், இயக்கமும், நிறுத்தமும் எனப் புரிபடும். முக்காலங்களாக நேற்று, இன்று, நாளை அல்லது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் சொல்லப்படுகிறது. இலக்கியத்திலும், கதை சொல்வதிலும் ஆரம்பம், மத்தி, முடிவு இருக்கிறது- அதன் வரிசை மாறலாம். இந்த மூன்றானது புகைப்படங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒன்றை, தட்டையாகக் காட்டாமல், அதில் எந்தப் பகுதியில் பார்வையாளர்களின் கோணம் பதியவேண்டுமோ அதைக் குறி வைத்து மேம்படுத்துவதை ‘புகைப்படங்களில் மூன்று என்ற சிந்தனை விதிகள்’ எனச் சொல்கிறார்கள். இதனால், அது அசைவது போலவும், மெய்யாகக் காணப்படுவதும் போலவும் தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனும், நேரத்தால், காலத்தால், தன் மனக் கண்ணாடியில் தன்னைக் காணும் பிம்பங்களால் மூன்றாகிறான் என்று சொல்வதுண்டு. இந்த மனக்கண்ணாடி பிரதிபலிப்புகளுக்கு எல்லையில்லை.

(மூன்றின் சதுர எண்கள் ஒன்பது என்ற எண்ணில் முடிவதை நான் செய்து பார்த்தேன். உதாரணமாக,
3^2=9, 3^3=27 கூட்டுத் தொகை 9, 3^18= 387420489 கூட்டுத் தொகை 9 3^25= 847288609443 கூட்டுத் தொகை 9. மூன்றில் மூச்சிருக்கிறது- வல நாடி, இட நாடி, மறைந்துள்ள சூக்ஷம நாடி)
உசாவிகள்:
https://subhashkak.medium.com/binaries-and-the-power-of-three-79aff8e309ac
இலக்கியம், மற்றும் இணைய தளங்கள்
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமையான பதிவு. மூன்றின் முக்கியத்துவத்தை பல முனைகளில் இருந்து அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி. மதத்திலிருந்து அறிவியலில் இருந்து விஞ்ஞானத்திலிருந்து இன்று அனைத்திலும் மூன்றின் பெருமையை எடுத்து கூறிய விதத்திற்கு பாராட்டுக்கள். கட்டுரையாளர் மென்மேலும் இவ்வாறான புதிய தரவுகளோடு பதிவுகளை வெளிக் உணர வேண்டும். வாழ்த்துக்கள்
Thank you