போதும் என்ற மனமே…

இது இந்தத் தொடரின் மூன்றாம் பாகம். முதலிரண்டு பாகங்களின் சுட்டிகள் இங்கே. 

இன்றைக்கு மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் மிகவும் வருந்தத்தக்க ஒன்று குடும்ப மருத்துவர் என்ற முறை மாறி எல்லா வகையான உபாதைகளுக்கும் நேரடியாகச் சிறப்பு மருத்துவர்களை நாடும் வழக்கம்தான். இதன் தாக்கம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகவே இருக்கிறது. நம் குடும்ப மருத்துவர் நம்மைப் பற்றி, நம் வாழ்வு முறை பற்றி, நம் குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்தவராக இருந்த காரணத்தினால் நம்மைப் பற்றிய முழுமையான தோற்றம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு சிறப்பு மருத்துவர் தான் சிகிச்சை அளிக்கும் பாகத்தினை மட்டுமே பார்ப்பது போலல்லாமல் தன்னிடம் வருபவர்களை முழுமையாகக் கவனித்து சிகிச்சை அளிக்கும் திறன் குடும்ப மருத்துவர்களுக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாவற்றுக்கும் சிறப்பு மருத்துவமனைகளையும் சிறப்பு மருத்துவர்களையும் நாடும் பொழுது முன்பிருந்த உபாதைகள், அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய வரலாறு தெரியாமல் போய்விடுகிறது. இதனால் இயல்பாக எளிதாகச் செய்யக் கூடிய சிகிச்சைகள் கூடக் கடினமானவையாகவும் குழப்பமானவையாகவும் மாறி விடுகின்றன. 

இவ்வளவுச் சிறப்பு மருத்துவர்கள் இருந்தாலும் கூட, மூத்தோர் நல மருத்துவத்திற்கானச் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. தற்சமயத்தில்தான் வயோதிக மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மருத்துவத் துறையினைச் சார்ந்தவர்களுக்கே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றிருக்கும் மக்கள் தொகைக்குத் தேவையான அளவு இச்சிறப்பு மருத்துவர்கள் இல்லை. இருக்கும் சிலருமே நகர்புறத்தில் இருப்பவர்களுக்குச் சேவை அளிக்கிறார்களே தவிர சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இருப்பவர்களுக்கு இவர்களுடைய சேவை கிடைப்பதே இல்லை. இதனால் வயோதிக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள் பொது மருத்துவர்களாக இருக்கிறார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட உடற்பாகத்திற்கானச் சிறப்பு மருத்துவர்களாக இருக்கிறார்கள். பழைய முறைப்படி ஒருவரை நோயாளியாகப் பார்க்காமல் மனிதராகப் பார்த்து அவர்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு முன்பு நடந்த சிகிச்சைகளை மனத்தில் கொண்டு, ஒரு முழுமையான சிகிச்சையை அளிக்கும் குடும்ப மருத்துவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள். 

குழந்தை மருத்துவ முறையும் வயது  வந்தோருக்கான மருத்துவ முறையும் எப்படி வேறு வேறோ, அதே போல வயது வந்தோருக்கான மருத்துவ முறையும் வயோதிகர்களுக்கான மருத்துவ முறையும் கூட வேறு வேறானதே. வயோதிகர்களின் உடலியல், வளர்சிதை மாற்றம், முதன்மையான தேவைகள் என எல்லாமே வேறானவை. உதாரணமாகக் க்ரியேடினின் என்னும் வேதிப்பொருள் அவர்கள் உடம்பில் அதிகமாக இருந்தால் உடனேயே சிறுநீரகப் பாதிப்பு என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர்களுக்கு மறதி ஏற்பட்டால் உடனே மறதிநோய் என்று அதற்கான சிகிச்சையைத் தொடங்கிவிடக் கூடாது. அது அவர்கள் எடுத்துக் கொள்ளும் வேறு மருந்தின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். இன்றைய சூழலில் சிறப்பு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இந்த வயோதிக நோயாளிகளின் உடல் நிலை ஒத்துழைக்குமா என்று எண்ணிப் பார்க்காமல் அவர்களைத் தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளில் சேர்த்துப் பரிசோதனை எலிகளாக்கி அத்தனை விதமான பரிசோதனைகளையும் செய்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். இத்தனையும் தேவையா, அதனால் மூத்தோரின் வாழ்க்கைத் தரம் முன்னேறப்போகிறதா என்பதை எல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

இதற்குத் திறமை குறைவினைக் காரணமாகச் சொல்ல முடியாது. இது அணுகுமுறை சார்ந்த பிரச்னை. இன்றைக்கு மருத்துவம் எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறதே தவிர, அந்நோயாளி வேண்டுவது என்ன என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. பல உபாதைகள் இருக்கும் எண்பத்து ஐந்து வயது முதியவர், தன் நோய் குணமாகத் தீவிரச் சிகிச்சை அளிப்பதையும் விட இருக்கும் கொஞ்ச நாட்கள் வலியின்றி நிம்மதியாக இருக்க முடியுமா என்று நினைக்கலாம். சரியான கண்ணோட்டம் கொண்ட வயோதிகர்களுக்கானச் சிறப்பு மருத்துவர் எப்பொழுது குணப்படுத்த வேண்டும் எப்பொழுது இப்படி நிம்மதியைத் தர வேண்டும் என்ற மெல்லியக் கோட்டை உணர்ந்தவராக இருப்பார். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட எது செய்தால் சரியாக இருக்கும் என்று பார்ப்பவராக இருப்பார். 

வயோதிகர்கள் இருக்கும் குடும்பத்தாருக்கும் இந்தப் பிரச்னை உண்டு. தாம் பார்த்துக் கொள்பவர்கள் உடலில் தோன்றும் எல்லா நோய் அறிகுறிகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவற்றுக்கான சிகிச்சைத் தேவை இல்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வதே கடினமான ஒன்றாக இருக்கிறது. நம் மருத்துவத் துறையின் கண்ணோட்டமோ இதற்கு நேர் மாறாக இருக்கிறது. பரிசோதனை முடிவுகளில் எதேனும் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அதை சரி செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திலேயே மருத்துவர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. இது ஒரு தன்னியல்பான செயலாக இருந்தாலும் கூட வயோதிகர்களின் உடலுக்கு நன்மை செய்வதைக் காட்டிலும் கூடுதல் தீமைகளையே செய்கிறது. 

வயதானவர்கள் நிதமும் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத சிறப்பு மருத்துவர்கள் அவரவர் பங்குக்கு மருந்துகளை எழுதித் தருவதால் வரும் வினை இது. இப்படி ஒரு மருந்துக் கடையே வயதானவர்களின் படுக்கை அருகே இருப்பது ஒரு வித தொற்றாகவே ஆகிவிட்டது. இரண்டு மருந்துகளின் கலப்பால் அவர்களுக்கு தலைசுற்றலும், குழப்பமும், கீழே விழுவதும் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு. அப்படி ஆனால் மீண்டும் மருத்துவமனை, மேலும் மருந்துகள் என இவர்கள் பாடு திண்டாட்டம்தான். இதனால் அவர்களுக்கு நன்மை ஏற்படுவதை விட அவர்கள் வாழ்வின் தரமே குறைந்து போகத் தொடங்குகிறது. 

அதற்காக இவர்களுக்கான கவனிப்பு குறைய வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. அந்த கவனிப்பு திறம்பட இருக்க வேண்டும். அவர்களுடைய சௌகரியம், செயல்படும் தன்மை, சுய மரியாதை ஆகியவற்றை மேம்படச் செய்ய வேண்டும். ஒரு நல்ல மருத்துவருக்கு சிகிச்சையை எப்பொழுது எளிமையாக்க வேண்டும், எப்பொழுது குறைக்கவும் வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதுமே ஒரு வகைச் சிகிச்சை என்பதை உணர வேண்டும். வயதானோர் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளில் வேண்டாதவற்றை விடுத்து, அவசியம் என்பதை மட்டுமே தருவது, அவர்களை எந்த விதத்திலும் புறக்கணிப்பது இல்லை. மாறாக அவர்களை மரியாதையோடு நடத்தும் முறை என்பதை மருத்துவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஐம்பது வயதில் எது இயல்போ, அதுவே எண்பது வயதிலும் இருக்காது. எண்பது வயதிற்கான இயல்பு வாழ்க்கை என்பது வேறு என்பதைக் குடும்பத்தினரும் உணர்ந்து கொள்வது அவசியம். அவர்களின் வேகம் குறையும், உண்ணும் அளவு குறையும், கொஞ்சம் ஞாபக மறதி வரும். இவை எல்லாம் எந்த வித நோய்கான அறிகுறிகள் இல்லை. அவர்களின் உடல் இயற்கையாகவே தளர்வதைத்தான் இவை காண்பிக்கின்றன. 

நம்மிடையே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்களே தவிர, சமயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்து, மற்றவற்றைக் கொஞ்சம் பாராமுகமாகக் கடந்து, வயதில் மூத்தோருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட அவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

அதே போல வயதானவர்களின் குடும்பத்தாருக்கும் அவர்களுக்கு வரும் தொல்லைகள் அனைத்தையும் மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும். நமக்கு இன்று தேவையாக இருப்பது மூத்தோர் நலச் சிறப்பு மருத்துவர்கள் மட்டுமில்லை, எப்பொழுதும் அவர்கள் உடலில் கை வைக்காமல் சும்மா இருக்க முனையும் கலாச்சாரமும்தான். வயதாவது என்பது ஒரு குறைபாடு இல்லை, அது வாழ்வின் ஓர் அங்கம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். அந்தப் பருவத்திற்கான சிகிச்சை என்பது மற்ற பருவங்களுக்கானதாக இல்லாமல் அப்பருவத்திற்கானச் சிறப்பு மருத்துவமாக இருக்க வேண்டும். 

இந்தக் கலாச்சாரத்தில் வயதானவர்களை ஒரு மருத்துவ பரிசோதனைக்கான களமாகப் பார்க்காமல், தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்லும் மனிதர்களாகப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது நிகழும் வரை நாம் வயதானவர்களை மிகுந்த கருணையுடன் பார்த்துக் கொள்வதே சரியான வழியாக இருக்கும். 

அறுவை சிகிச்சைக்குப் பின்னோ அல்லது வேறு எதோ காரணத்திற்காகவோ நம் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்தோர் மருத்துவமனை செல்ல நேர்ந்தால் அதனால் உண்டாகும் குழப்பங்களைப் பார்த்தோம். அவர்கள் நலம் பெற்று வீடு திரும்பிய உடன் ஒரு பெரும் பிரச்னை முடிவுக்கு வந்த நிம்மதி நமக்குக் கிடைக்கிறது. ஆனால் இந்த நிம்மதி அந்த ஒரு கணத்திற்கானதுதான். அவர்கள் வீடு திரும்பிய பின் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை என்ற அடுத்த பிரச்னை உடனே தலையை தூக்கிவிடுகிறது. 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் முதியோர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இது பல வாரங்கள், மாதங்கள் செய்ய வேண்டிய வேலையாகப் பெரும்பாலான நேரங்களில் நேர்ந்துவிடுகிறது. துரதிர்ஷடவசமாக இதற்கு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நம்மைத் தயார்படுத்துவதே இல்லை. அவர்களின் காயத்திற்கான கட்டுகளைப் பிரித்து மாற்ற வேண்டும், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும், சிலருக்கு உணவினை ஊட்டி விட வேண்டும், அவர்களால் உண்ண முடியாது போனால் உணவுக் குழாய்கள் மூலம் உணவைச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும், அவர்கள் நடக்கப் பயிற்சி தர வேண்டும், துணை இருக்க வேண்டும்,  அவர்களை கழிப்பறைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும், செல்ல முடியாதவர்களின் மூத்திரப் பைகளை மாற்றிப் பராமரிக்க வேண்டும், படுக்கையில் விழுந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் உடலில் புண் வராது பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் செய்வது எளிதான வேலை இல்லை. அதற்கான பயிற்சி தேவை, பொறுமை தேவை, நேரமும் வேண்டும். இந்தியாவில், வெளி உதவி கிடைப்பது கடினமாக இருக்கும் நிலையில், இது குடும்பத்தில் இருப்பவர்களின் தலையில்தான் விழும், அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்டிர் தலைகளில். 

வயது முதிர்ந்தோருக்கு வீட்டில் பேணுவது என்பது இன்று அங்கீகாரம் இல்லாத, ஒழுங்கமைக்கப்படாத துறையாகத்தான் இருக்கிறது. பெரிய நகரங்களில் இப்படி வீட்டில் நலம் பேணக்கூடிய சேவை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் இருந்தாலும் அவை பெரும் பொருட் செலவை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. அப்படிச் செய்தாலும் அவர்கள் அளிக்கும் சேவையின் தரத்திற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. அவர்கள் அனுப்பும் செவிலியரும் கூடப் பொதுவான கவனித்தலில் தேர்ச்சி பெற்றிருப்பார்களே தவிர அவர்களுக்கு மூத்தோர் கவனிப்பிற்கான தனிப் பயிற்சி ஏதும் கிடையாது. அதனால் அவர்களுக்கு மூத்தோர்களுக்கு வரும் சில பிரச்னைகளைச் சமாளிக்கக் கூடிய திறம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியதே. உதாரணத்திற்கு மறதி நோயால் ஏற்படக்கூடிய கலக்கத்தைச் சமாளிப்பது எப்படி என்றோ மருந்து அளவில் ஏற்படும் சிறிய மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அறிகுறிகளை கண்டறிவது எப்படி என்றோ தெரிந்திருக்காது. இதனால் முதியோர்களுக்கு, அவர்கள் குடும்பத்தாருக்கு, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் செவிலியருக்கு என்று எல்லாருக்குமே பிரச்னைதான் அதிகம். குறிப்பாக வயதில் முதிர்ந்தோர் தாம் மற்றவர்களுக்குச் சுமையாக இருப்பதாகவே எண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். 

இதை எல்லாம் சமாளிக்க இன்றைக்கு நமக்கு தேவை மூத்தோரை வீட்டில் பேணும் செவிலியர். இவர்கள் வயது முதிர்ந்தோரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மூத்தோரின் உடல்நிலை, மனநிலை, மருத்துவத் தேவைகளை நன்கு அறிந்தவர்களாக இருத்தல் அவசியம். இங்கு செவிலியர் என்ற பதத்தைப் பயன்படுத்தி இருந்தாலும் அவர்கள் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அங்கீகரிக்கப்பட்டச் செவிலியராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களை விட குறைந்த பயிற்சி பெற்றவர்களாகக் கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் பேறுகால உதவிக்குத் துணைச் செவிலியர் (ANM – Auxiliary Nurse Midwife) இருப்பதைப் போல முதியோரைக் கவனித்துக் கொள்ளவும் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புகளைக் கொண்டு வரலாம். 

இந்த வேலை வசீகரமான ஒன்று இல்லை என்றாலும் கூட மனிதத்தன்மை மிகுந்தது. முதியோரை வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைய விடாமல் அவர்களை கண்ணியமாக வாழ வகை செய்ய பயிற்சி பெற்ற செவிலியரால் முடியும். மருத்துவமனையில் இல்லாத அமைதியும் அன்பும் தொடர்ந்த கவனிப்பும் இவர்களால் வீட்டிலேயே தர முடியும். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதைத் தவிர்க்கவும் முடியும். சொல்லப் போனால் மூத்தோரை அவர்களுக்கு பழகிய வீட்டுச் சூழலில் வைத்து அடிப்படை கவனிப்பை அளிப்பது அவர்கள் மனநிலைக்கும் கூடச் சரியானது. 

இன்றைக்கு ரத்தப் பரிசோதனைக்காக வீட்டிலேயே வந்து ரத்தம் எடுத்துச் செல்வது நகர்புறங்களில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதே போல மருந்துக் கடைகளில் இருந்து மருந்துகளும் வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்பதும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சி வீட்டிலேயே மூத்தோருக்குத் தேவையான மருத்துவக் கவனிப்பையும் செய்து தருவதுதான். 

குடும்பத்தினர் எண்ணிக்கை குறைவாகவும் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகமாகவும் இருக்கின்ற இக்காலத்தில் வீட்டிலேயே மருத்துவக் கவனிப்பு என்பது சொகுசு என்பதை விட அடிப்படை தேவை என்றே ஆகிவிட்டது. வயது முதிர்ந்தோர் அவர் வாழ்வை கண்ணியமாகக் கழிப்பதற்கு இத்தகையக் கவனிப்பு அவசியமான ஒன்று. 

(தொடரும்)

பி.கு.1:  மூத்தோர் நல மருத்துவம் என்பது வயதானவர்களின் நலத்தைப் பேணும் மருத்துவத் துறை. இதனை ஆங்கிலத்தில் Geriatrics என்று அழைக்கிறார்கள். மூத்தோருக்கு நோய்கள் வருமுன் காப்பதும், அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சை அளிப்பதும் இந்தச் சிறப்புத்துறையில் அடங்கும். வயதானவர்களுக்கே உரிய சிக்கலான மருத்துவத் தேவைகளைச் சமாளிப்பது இந்தத் துறையினரின் அடிப்படை வேலை. வயதானவர்களின் நோய்களைக் கவனிப்பது, அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் வரும் எதிர்வினைகளைச் சமாளிப்பது, ஆற்றல் குறைதல், அவர்களின் உடல்களுக்கான மறுசீரமைப்பு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பொழுது நேரும் அறக்குழப்பங்களை சமாளிப்பது என்று மூத்தோர் நல மருத்துவத்திற்குப் பலப் பரிமாணங்கள் உண்டு. மற்ற சிறப்பு மருத்துவத் துறைகளைப் போலவே இதிலும் பட்ட மேற்படிப்புக்கான வழிவகைகள் உண்டு. பல மருத்துவக் கல்லூரிகளில் மூத்தோர் நல மருத்துவத் துறையில் பட்டயப் படிப்பும் ஆய்வு வாய்ப்புகளும் இருக்கின்றன. 

பி.கு.2:  டாக்டர் விஜய் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய தொடரை  அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட கட்டுரை.


Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.