“ஏம்மா, திலகா அஸ்வத்தை பலமா அடிச்சிட்டா…” என ராம் கூறியபோது ராணி தன் காலிலிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் திரும்பி பதில் சொல்லாதபோதும் அவள் இவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிவார். வார்த்தைகளின் தொனியை வைத்தே அவர் உணர்வுகளை இவளும் அறிவாள். இது முப்பத்தைந்து ஆண்டுகால இல்லறத்தின் பயன்.
இதைச் சொல்வதன் மூலம் அடுத்து எதை நோக்கிப் போவார் என்பதையும் ராணியால் யூகிக்க முடிந்தது. ஆனால் அதை அவரால் ஒருபோதும் சொல்லமுடியாது. திலகா மேல் இவளைவிட அவருக்குத்தான் பாசம் அதிகம்.
நேற்று நடந்ததை இவளும்தான் பார்த்தாள். அஸ்வத் தவழ்ந்தபடி சப்பனமிட்டு அமர்ந்து வலது கையை விரித்து தரையை காரின் வைபர்போல தடவிக்கொண்டிருந்த திலகாவிடம் சென்றுவிட்டான். அவளுக்குப் பார்வையும் மிகவும் குறைந்துவிட்டது. தடவிக் கொண்டிருந்த கைமேல் அஸ்வத்தின் தவழ்ந்த மென்மையான முட்டி பட்டதும் சட்டென ஆக்ரோசமாக கையை வீசினாள். கை சப்ப்… என்ற சத்தத்துடன் அஸ்வத்தின் முதுகில் மோதியது.
ராம் சில கணங்களில் மீண்டு ஓடிவந்து தூக்கினார். இது மூன்றாவது முறை. ராணிக்கு ஒருகணம் மின்னல் தாக்கியதுபோன்ற அதிர்ச்சியில் லேசாக மயக்கம் தோன்ற அமர்ந்த வாக்கில் சுவரில் சாய்ந்துவிட்டாள். இதுபோல் நடக்காமல் இருக்க நால்வருமே முயற்சி செய்தாலும் எப்படியோ நடந்துவிடுகிறது.
திலகா பிறந்தபோது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ராம் லாட்டரி சீட்டு விற்கும் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். குறைந்த சம்பளம். சிறிய வீடு. இருவரின் அம்மாக்களும் உடனிருக்க அதிக நெருக்கடியான சூழல். கடும் புழுக்கத்தில் இனிய தென்றலென அந்த சமயத்தில் திலகா பிறந்தாள்.
வீட்டிலிருக்கும் பொழுதுகளில் ராம் அவளை கீழே வைப்பதேயில்லை. அவர் முகம் புதுமலர்போல அத்தனை பொலிவுடன் திகழ்ந்தது. திலகா பிறந்த பதினைந்தாவது நாளில் ஐந்தாயிரம் பரிசு விழுந்தது.

பொதுவாக விற்காத சீட்டுகளுக்கு பரிசு விழுந்தால் அதை வைத்திருக்கும் கடைக்காரரே அதற்கு உரிமையானவர். ராம், ஒவ்வொரு குலுக்கலுக்கான சீட்டுகள் வந்தவுடன் மனதிற்குத் தோன்றும் ஏதாவது ஐந்து சீட்டுகளை தனியே வைத்துக் கொள்வான். அவற்றிற்கு பரிசு விழுந்தால் பரிசுப் பணத்தை இவன் வைத்துக் கொண்டு கமிசன் பணத்தை முதலாளிக்கு அளிப்பான். பரிசு விழாவிட்டால் விற்காத கணக்கில் திருப்பி அளித்துவிடுவான். முதலாளிக்கு மூன்று கடைகள். மற்ற இரண்டு கடைகளை விழிப்புடன் கண்காணிப்பார். ராம் முதலாளிக்கு நெருங்கிய உறவினன் என்பதாலும் இவருக்கு சூதுவாது தெரியாது என நம்பியதாலும் இவர் பொறுப்பு வகித்த கடையை பெரிதாக கண்டுகொள்ளாமல் கொடுக்கும் கணக்கை ஏற்றுக்கொண்டார்.
அதுவரை அவ்வப்போது ஐநூறு ரூபாய் வரை பரிசு விழுந்திருந்தது. திலகா பிறந்தவுடன்தான் ஐந்தாயிரம் என்பதால் இது பிள்ளையின் அதிர்ஷ்டம் என்றானது. பரிசு விழுந்த மகிழ்வுடன் ராம் திலகாவை தூக்க வந்தபோது அவரிடம் அவள் செல்ல மறுத்து அழுதாள். அன்றைக்கு முழுக்கச் செல்லவில்லை. அதன் பிறகும் இரண்டுமுறை ஐந்தாயிரம் விழுந்தது. அந்த நாட்களிலும் திலகா அழுதபடியே இருந்தாள். அவளுக்கு ஒரு வயதாவதற்கு முன்பே சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கவும் அம்மா அப்பா தாத்தா போன்ற வார்த்தைகளை மழலைக் குரலில் சொல்லவும் தொடங்கியிருந்தாள்.
சரியாக அவளின் முதல் பிறந்தநாளன்று ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது. அப்போது முதலாளியின் குடும்பத்தில் பெரும் பண நெருக்கடி. அவர் மனைவிக்கு பெரிய நோயென்று சென்னையின் உயர் கட்டண மருத்துவமனையில் சேர்த்திருந்தார். பதினைந்து நாட்களாக பணத்திற்கு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததில் கடைகளுக்கு சரியாக வருவதில்லை. ராமைப் போலவே பிற கடைக்காரர்களும் நடக்கத் தொடங்கினர்.
ஒரு லட்ச ரூபாயில் பிடித்தம்போக கிடைத்த பணத்துடன் மாலையில் ராம் வீட்டிற்கு வந்தபோது திலகா வீறிட்டழுதாள். ராமிடம் மட்டுமல்ல யாரிடமும் செல்லாமல் தரையில் அமர்ந்தும் உருண்டும் அழுது கொண்டேயிருந்தாள். மருத்துவமனைக்கு செல்வதற்கும் இசையாமல் கைகால்களை உதறிக் கொண்டிருந்ததில் எல்லோரும் அசந்துவிட்டார்கள். அழுதழுது களைப்புடன் அதிகாலையில் தூங்க ஆரம்பித்தவுடன்தான் இவர்களும் தூங்கினார்கள்.
பத்து மணிவரை தூங்கிக் கொண்டிருந்த ராமை எழுப்பிய ராணி திலகாவிற்கு காய்ச்சல் இருப்பதைக் கூறினாள். ஒத்தடம் கொடுக்க வறுத்துக் கட்டிய உப்புபோல உடைக்குமேல் சூடு கையில்பட்டது. வியப்பும் அச்சமும் ஒருசேர எழ, அடிபட்ட புறாவைப்போல நடுங்கிக் கொண்டிருந்த திலகாவை வேகமாக அருகிலிருந்த மருத்துவரிடம் தூக்கிச் சென்று ஊசி போட்டுக் கொண்டு வந்தார். மாலையில் காய்ச்சல் குறைந்து உடல் இயல்புக்கு வந்தது.
அடுத்த இரண்டாம்நாள் இவர்கள் இடத்திற்கான வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. எனவே, இடத்தின் பெயரில் கடன் வாங்கியும் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டும் வீட்டை விரிவாக்கிக் கட்ட திட்டமிட்டனர்.
ஒரு லட்சம் பரிசு விழுந்த பிறகு, ஒருவாரம் மட்டுமே ராம் கடைக்குச் சென்றார். தேவையான பணம் கிடைக்காததால் மனைவி இறந்துவிட, நகரத்தில் இருக்கப் பிடிக்காமல் மகனுடன் ஊர்ப்பக்கமாக செல்ல முடிவு செய்த முதலாளி கடைகளை விட்டுவிட்டார். வீடு கட்டும் பணியின்போது ராமின் இருப்பு அவசியம் என்பதால் இவர்கள் அதை பெரிதாகக் கருதவில்லை.
தெருவின் கடைசியில் இன்னொரு வீடு பார்த்து குடியேறி இருந்த வீட்டைக் கட்டினார்கள். நாள் முழுக்க திலகா பெரியவர்களிடமே இருந்தாள். வீட்டு வேலையின் காரணமாக அலைந்ததில் ராமுவும் ராணியும் அசதியுடன் வீட்டிற்கு இரவு வந்து உண்டவுடன், தூங்கும் திலகாவை தொட்டுக் கொஞ்சிவிட்டு படுத்துவிடுவார்கள்.
வீட்டைக் கட்டி முடிக்க ஆறுமாதம் ஆனது. சொந்தக்காரர்களுக்குச் சொல்லி புதுமனை புகுவிழா முடிந்து புது வீட்டில் குடியேறுவதற்கு மேலும் ஒருமாதம் ஆகிவிட்டது. அதன் பிறகுதான் இருவரும் ஆசுவாசம் அடைந்தனர். திலகாவுடன் பேசியபோது ஏதோ தவறாக உள்ளதை உணர்ந்தனர். வீட்டிலிருத்த பெரியவர்கள் இருவரும் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டே திரிந்ததால் இவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.
கேட்கும் கேள்விகளுக்கு திலகா சரியாக பதில் கூறவில்லை. முன்பு பேசிய அம்மா அப்பா போன்ற வார்த்தைகளைக் கூட சரியாகச் சொல்லவில்லை. இவர்கள் கேட்பதை அவள் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை உணர்ந்தபோது அச்சம் கொண்டனர். ஏதாவது கேட்டால் சம்பந்தம் இல்லாமல் வேறொன்றைச் சொல்லி சினத்தைத் தூண்டுவார்கள் என்பதால் பெரியவர்களை ஒன்றும் சொல்ல முடியவில்லை.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்தபிறகு அந்தப் பெண் மருத்துவர் “அந்தக் காய்ச்சல்ல மூளைத் திறனும் நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கு. அப்பவே கவனிச்சிருந்தா ஏதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். இத்தனை மாதத்திற்கு பிறகு இதைச் சரி செய்யிறதுக்கு வாய்ப்பே இல்லை. குழந்தை மாதிரித்தான் எப்பவுமே இருப்பா. எதையுமே கத்துக் கொடுக்க முடியாது…” எனக் கூறினார்.
“ஆபரேசன் ஏதாவது செஞ்சு சரி பண்ண முடியாதா டாக்டர்..”
“நான் இருக்கிற உண்மையச் சொல்றேன். சில பேரு அதையிதைப் பண்றேன்னு செலவழிக்க வச்சிட்டு கடைசியா எங்களால முடிஞ்சத பண்ணினோம்னு கைவிரிப்பாங்க… பாத்துக்கங்க” எனக் கூறி மூளை மேலும் செயல் குன்றாதிருப்பதற்கான மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
திலகாவை யாரும் திட்டுவதோ அடிப்பதோ இல்லை. எப்போதாவது வலிந்து தூக்கினால் மட்டுமே எழுந்து சில அடிகள் எடுத்து வைப்பாள். மற்றபடி உட்கார்ந்தபடியே இருப்பாள். உட்கார்ந்தபடியே கையை ஊன்றிக் கொண்டு நகர்வாள். தொண்டையை தடவினால் தண்ணீரும் வயிறைத் தட்டினால் உணவும் அளிக்க வேண்டும். உணவுக்கோ தண்ணீருக்கோ தாமதமானால் “ஹூம்…” ‘ ஹூம்…” என்ற உறுமல் தொண்டையிலிருந்து கார்வையாக வெளிவரும்.
சிறுநீர் இருந்த இடத்திலேயே கழித்துவிடுவாள். மலம் கழிக்கத் தோன்றும்போது புட்டத்தைத் தட்டுவாள். தூக்கிக் கொண்டோ நகர்த்திக் கொண்டோ செல்லவேண்டும். மூன்று வயதிலேயே உடல் பருமனாகிவிட்டது. பெரியவர்கள் இருவரும் மெலிந்த தேகம் என்பதால் அவளைத் தூக்க முடியவில்லை. ராணி எப்போதும் அவளுடன் இருக்க வேண்டியதானது.
பெரியவர்கள் இருவருக்கும் திலகாவின் நிலை பற்றி கவலை ஏதுமில்லை. வயதான காலத்தில் தங்களை தொந்தரவு செய்யாமலிருப்பதில் நிம்மதியடைந்தார்கள். ராணிக்கோ அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தவள், கொண்டு வரப்போகிறவள் என்பதால் அவளைப் பராமரிப்பதில் சலிப்படையாமல் இருந்தாள். ராமிற்கு அவள் செல்லப்பெண். அவளை அத்தனை குறைகளோடும் ஏற்றுக்கொண்டார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்தக் குடும்பத்தினரிடமும் திலகாவின் மீதும் சற்று இரக்கம் கொண்டிருந்தனர். .
ராம் ஓட்டலுக்கு வேலைக்குச் சென்றார். முதலில் பரிமாறுபவராகச் சேர்ந்தார். அவருக்கான சாப்பாடு அங்கே கிடைத்து விடுவதும் சாப்பிடுபவர்கள் கொடுக்கும் கொசுறுப் பணமும் கூடுதல் பலன்கள். இரண்டு ஆண்டுகளில் சமையல்காரர்களுடன் பழகி அவர்களுக்கு ஒத்தாசை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சமையல் செய்யும் நுட்பத்தை அறிந்து கொண்டார். அந்த ஆண்டு தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற சமையல்காரர் இரண்டு நாட்கள் கழிந்த பின்பும் வராததால் முதலாளி இவரையே சமைக்கும்படி கோரினார். தயக்கமின்றி ஒத்துக்கொண்டு சமைத்தார். சுவை பெரிதாக மாறுபடாமல் இருந்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி. ராமின் குடும்பமும் அருகிலேயே இருந்ததால் ஊருக்குச் செல்லும் அவசியம் இருக்காது என்ற எண்ணத்தில் இவரையே தொடர்ந்து சமைக்கச் சொல்லிவிட்டார். சம்பளமும் மரியாதையும் அதிகம். அதோடு கடையில் எஞ்சுவதை வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் எளிதாக இருந்தது. இதனால், வீட்டிலும் ஓட்டல் சாப்பாடு என்ற நிலை தோன்றிவிட்டது.
திலகாவின் நிலை கண்டு கவலையுடன் திரிந்தவர்களுக்கு சிறிது மகிழ்ச்சியளிக்கும் விதமாக சத்யா பிறந்தான். பிறக்கும்போதே நல்ல உடல்வாகுடன் அழகாக இருந்தான். இவன் இப்படிப் பிறந்ததற்கும் திலகாதான் காரணம் என திருமுல்லைவாயில் இருந்த ஒரு சோதிடர் கூறியதை ராணி அப்படியே நம்பினார்.
திலகாவோடு சேர்ந்து ராணியின் உடலும் பருத்துக் கொண்டே வந்தது. உடல் பருமனாவதால் உண்டாகும் நோய்கள் ராணிக்கு வரத் தொடங்கின. திலகாவிற்கான மருந்துகளோடு ராணியின் மருத்துவத்திற்கும் செலவழிக்க வேண்டியதிருந்தது. வீட்டுச் செலவுகள் அதிகரித்த அளவிற்கு ராமின் சம்பளம் உயரவில்லை.
ராணியின் தூண்டுதலால் ராம் சிங்கப்பூர் செல்லச் சம்மதித்தார். ராணிதான் கடன் வாங்கி விசாவிற்கான தொகையைக் கட்டினாள். இரண்டு பெரியவர்களையும் இரண்டு பிள்ளைகளையும் கவனிக்கும் சுமையை ராணியிடம் விட்டுச் செல்ல மனமேயில்லாமல் ராம் கிளம்பிச் சென்றார். சிங்கப்பூரில் சமையல்காரருக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. ஆறு மாதங்களுக்குள்ளேயே கடன் அடைந்துவிட்டது. அதன் பிறகு வீட்டின் நிதி நிலைமை மேம்பட்டது. ராணி, வீட்டின் மேலே வாடகைக்கு விடுவதற்கு ஏற்றாற்போல இரண்டு தளங்களைக் கட்டினாள். இதற்கெல்லாமே திலகாவின் அதிர்ஷ்டம்தான் காரணம் என்பதை ராணி அவ்வப்போது தனக்கும் ராமிற்கும் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள்.
பத்து ஆண்டுகள் மிக விரைவாக ஓடிவிட்டன. சிங்கப்பூரிலிருந்து திரும்புவதற்கான நேரம் வந்தபோது மகிழ்வான தருணங்கள் எப்போதும் விரைந்து ஓடுவதையும் துயரமான தருணங்கள் நகர்ந்து செல்வதையும் ராணியிடம் குறிப்பிட்டார்.
சத்யா திலகாவை முதலில் தன் பெரிய விளையாட்டுப் பொருளாக எண்ணினான். இதற்கேற்றவாறு அவன் நெருங்கும்போது ஏதோவொரு நெகிழ்வில் அமர்ந்திருப்பாள். வளரவளர தன் வளர்ப்புப் பிராணி என்று எண்ணம் கொண்டான். அருகிலிருந்த ஐந்து வீடுகளுக்கும் பொதுவானதாக திரிந்த சிபி என்று பெயரிடப்பட்ட நாய் அந்த வீட்டிற்குள்ளும் உலவியது. சத்யா அந்த நாயிடம் போலவே திலகாவிடமும் விளையாடினான். தன் வீட்டில் தனக்கு மட்டும் பிரத்யேகமாக ஒரு விளையாட்டுப் பிராணி இருப்பதில் பெருமிதமும் இருந்தது. வளரவளர தன் சகோதரி என்பதைப் புரிந்து கொண்டான். தன்னைப்போல ஓடவோ பேசவோ அவளால் முடியாதென உணர்ந்தபோது அவள்மேல் பரிதாபமும் பிரியமும் தோன்றியது. எனவே, அவளின் இயலாமைகள் சங்கடத்தையோ ஒவ்வாமையையோ அளிக்கவில்லை.
திலகா, உறங்கும் நேரம் தவிர எப்போதும் அமர்ந்த நிலையில் கைகளால் தரையை தட்டியபடியே இருப்பாள். அதனால் கைகள் காய்த்து தடிமனாக இருக்கும். எப்போதாவது கோபத்தில் கையை ஓங்கி அடித்தால் ராமினால் கூட தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். கோபத்தினால் மட்டுமல்ல செவியில் கேட்கும் ஏதேனும் சத்தம், நாசியைத் துளைக்கும் வாசனை போன்றவற்றால் சிலவேளைகளில் நிலையழிந்து ஒருவித பதட்டத்துடன் இருப்பாள். அப்போது கைகளால் தரையில் தட்டும் சத்தம் பலமாகக் கேட்கும். அப்போது அருகில் செல்லாமல் கைக்கெட்டாத தூரத்தில் இருந்து மெல்லப்பேசி சாந்தப்படுத்துவாள் ராணி. சத்யா வீட்டிலிருந்தால் அருகில் சென்று அணைத்துக் கொண்டு தணிப்பான்.
ராம், சென்னைக்கு வந்து ஒருமாத காலம் ஊருக்கும் அதன் பிறகு உறவினர்கள் வீடுகளில் நடந்த விசேசங்களுக்கும் சென்று வந்தனர். எல்லா இடங்களுக்கும் திலகாவையும் அழைத்துச் செல்ல வேண்டுமென ராணி கூறினாள். மிகப் பருமனாகிவிட்டவளை காரில் ஏற்றுவதும் இறக்குவதும் ஒவ்வொருவருக்குமே மிகவும் சிரமமாயிருந்தது. ஆனாலும், சிரமத்தை சொன்னால் அடுத்தவர்கள் மனம் வேதனையுறும் என்ற எண்ணத்தால் யாரும் பிறரிடத்தில் கூறவில்லை.
திலகாவிற்கு புத்தாடைகளுடன் தங்க நகையும் அணிவித்தே ராணி அழைத்து செல்வாள். ஆனாலும், திலகாவை எதிர் கொள்வது விசேசங்களுக்கு வருபவர்களுக்கு ஒருவித அசூசையாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்தது. திலகா, அப்பா அம்மாவிற்கு சம்பந்தம் இல்லாத வகையில் நல்ல கருமையான நிறத்தில் பருமனாக இருப்பாள். புதிதாக பார்ப்பவர்கள் திகைக்கும் வகையில் உடலே ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். குட்டையான கால்களுடன், கண்கள் அகன்று கருவிழி விரிந்திருக்க, கருநாக்கு துறுத்தியபடியோ மடித்தோ இருக்கும். கோயில் தூண்களில் சிற்பமாக இருக்கும் பூதகி தரையில் நிற்பதாகத் தோன்றும். பார்ப்பவர்களின் மனம் பெண் எனச் சொல்லும்போதும் காணும் காட்சியால் மூளை நம்ப மறுத்து தவிக்கும்.
சிறுவர்கள் இவளின் அருகில் வருவதற்கல்ல காணவே சகியாமல் கூசி வேறு பக்கம் சென்று விடுவார்கள். ஏதேனும் ஒரு பிள்ளை, விளையாட்டு மும்முரத்தில் கவனிக்காமல் அருகில் வந்துவிட்டால் “சப்…” என்ற அடிதான். உடலில் எந்தப் பாகத்தில் பட்டாலும் விண்ணென்று உயிர் தெறிக்கும். வீல்ல்.. என்று அலரும் பிள்ளையை சமாதானப்படுத்த அரைமணி நேரமாவது ஆகும்.
ராணியும் ராமுவும் உறவினர்களிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டிருந்தனர். திலகாவை அழைத்து வராதீர்கள் எனக் கூற யாரும் முன்வரவில்லை. ராணி ஏன் இப்படி அழைத்து வருகிறாள் என்பதை உறவினர்களால் உணரமுடியவில்லை. ராணிக்கே சில நேரங்களில் இந்தக் கேள்வி எழுந்தாலும் பதிலை நோக்கி யோசிக்காமல் கடந்தாள்.
“ஏன்தான் கூட்டிக்கிட்டு வாராங்களோ…” என ராணிக்கும் ராமுக்கும் கேட்காத வகையில் சுற்றத்தார் பேசிக்கொள்வார்கள். “பொண்ணு மேல பாசத்தோட இருக்கான்னு காட்றதுக்காக இல்ல. இப்படியொரு பொண்ண வச்சுக்கிட்டு கஷ்டப்படறாங்கன்னு மத்தவங்களுக்கு தெரியனும்னுதான். இல்லேன்னா மூனு மாடி வீடு கட்டி சுகபோகமா வாழ்றாங்கன்னு கண்ணு வச்சிடுவீங்கள்ல… அந்தப் புள்ளய கஷ்டப்படுத்தி அவங்களும் கஷ்டப்பட்டு இங்கே இருக்கறவங்களையும் தவிக்க வைக்கிறாங்க. இத மொகத்துக்கு நேரா சொல்லவும் மனசு வரமாட்டேங்குது…”. ஒவ்வொருமுறை திலகா வெளியே வரும்போதும் யாராவது ஒருவர் மெல்லிய குரலிலும் மற்றவர்கள் யாருக்கும் கேட்காத வகையில் மனசுக்குள்ளும் இப்படி பேசிக்கொள்வார்கள்.
உறவினர்களின் பேச்சுகள் காதில் விழுந்தாலும் கவனிக்காதது போலவே கடந்துவிடுவார்கள். ஒரு முறை “இவர்களோட பாவம்தான் இப்படி பொண்ணாப் பொறந்திருக்கு. அவங்க பாவ மூட்டைய அவங்க சுமந்துதானே ஆகனும்னு..” முனங்கலாக ஒரு குரல் கேட்டது. இவர்களுக்கு உடலே தீப்பற்றிக் கொண்டதுபோல வேதனை தோன்றியது. இருவரும் முகம் நோக்கிக் கொள்ளாமல் விரைந்து அங்கிருந்து கிளம்பினார்கள். மனம் அந்த வார்த்தைகளை நோக்கிச் செல்ல முயன்று கொண்டேயிருந்தது. அரவைக் காண அஞ்சும் மந்தியென கடும் பிரயத்தனத்துடன் அதை விலக்கிக் கொண்டேயிருந்தார்கள். இல்லையில்லை… அது உண்மையில்லை. அது பாவமில்லை. வந்த மகாலட்சுமியை ஏற்றுக் கொள்வது எப்படி பாவமாகும். அது அபாண்டம். அபாண்டமேதான்.. என்று சொல்லிச் சொல்லி மனதை தேற்றிக் கொண்டனர்.
திலகாவின் நுரையீரல் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு தினமும் மாத்திரை உட்கொள்வது அவசியமானதாக இருந்தது. ஒரு நாள் உட்கொள்ளாவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உக்கிரம் கொள்ள நேரும். இரண்டு நாட்களுக்கு மேல் என்றால் நுரையீரல் செயலிழந்துவிடும். எனவே, ராணியும் ராமுவும் இதில் மிக விழிப்புடன் இருந்தார்கள்.
பெரியவர்கள் இருவரும் ஆறுமாத இடைவெளியில் இக்குடும்பத்திலிருந்தும் பூவுலகத்தில் இருந்தும் விடுபட்டுச் சென்றுவிட்டார்கள்.
திலகா வீட்டிலிருப்பதால் சத்யாவிற்கு சொந்தத்தில் யாரும் பெண் தரவில்லை. இவர்களின் தெருவில் இருக்கும் வடமாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஷ்மிதா சத்யாவை விரும்பி இந்த வீட்டிற்கு வந்தாள். திருமணத்தன்று சத்யா அப்பா அம்மாவை வணங்கிய பிறகு அருகில் அமர்ந்திருந்த திலகாவின் காலில் விழுந்தான். ஒரு கணமும் தயங்காமல் அவனோடு இணைந்து சுஷ்மிதாவும் வணங்கினாள். திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தையில்லாததால் ராணியின் வற்புறுத்தலால் இருவரும் பல கோயில்களுக்குச் சென்று வெவ்வேறு பரிகாரங்களைச் செய்தனர். எப்படியோ, ஓராண்டிற்கு முன் அஸ்வத் பிறந்தான்.
சத்யாவும் சுஷ்மிதாவும் மாடியில் இருந்த ஓர் அறையில் இருந்தனர். ஆனால் கீழே ஒரே சமையல்தான் என்பதால் பெரும்பாலான நேரங்களில் கீழேயே இருந்தனர். அஸ்வத் திலகாவிடம் செல்லும்போது அவள் முகம் பூரிப்படைவதைக் கண்டு நால்வருமே மகிழ்ந்திருந்தனர்.
திலகாவின் உடலில் எப்போது எம்மாதிரியான வாதை தோன்றும் என்பதையோ அவள் இயல்பாக இருக்கிறாளா அல்லது உக்கிரமாகவா என்பதையோ பெரியவர்களாலேயே கணிக்க இயலாதபோது அஷ்வத்தால் எப்படி முடியும். நேற்று மூன்றாவது முறையாக அடி வாங்கிவிட்டான்.
ராம் கூறிய விசயத்தைப் பற்றி யோசித்தபடியே தன் காலில் இருந்த புண்மீது களிம்பு தடவி புதுக்கட்டுப் போட்டாள் ராணி.
“ஏங்க.. பக்கத்தில வாங்க”
ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த ராம் திரும்பிப் பார்த்தான். கைகளால் சைகை காட்டியதும் அருகில் வந்து அமர்ந்தார்.
“நீங்க என்ன யோசிக்கிறீங்க..”
திலகாவை திரும்பிப் பார்த்தார். சுவரில் சாய்ந்தபடி கால்களை விரித்து அமர்ந்திருந்தவளின் பார்வை எதிர் சுவரில் இருந்த பல்லியின் மீது நிலைத்திருந்தது.
“அஷ்வத்துக்காக மட்டும் சொல்லலை. அவளும் ரொம்ப வேதனப் படறா. பார்வையும் கொறஞ்சிக்கிட்டே வருது. அவளைத் தூக்கறப்ப எப்படித் துடிக்கிறான்னு ஒனக்கே தெரியுமே..”
“விசயத்துக்கு வாங்க..”
“நாம தனியா எதுவும் பண்ண வேண்டாம். ரெண்டு நாளைக்கி மாத்திரைய நிறுத்துனா போதும்… இதனால அவளுக்கும் விடுதலைதான்.. ”
“இதைச் செய்யிறதுன்னா எப்பவோ செஞ்சிருக்கலாமே…”
“கோயில் குளமெல்லாம் சுத்தி நம்ம வாரிசப் பெத்திருக்குதுக. அவன் முதுகில இருக்குற வீக்கத் பாக்க முடியல. ஒடம்பும் கொதிக்குது. 24 மணி நேர ஆஸ்பத்ரிக்கு போறதுக்கு சத்யா கெளம்பிக்கிட்டிருக்கான்..”
“அவங்கள ரெண்டு தெரு தள்ளி தனியா வச்சிட்டா என்ன…”
சட்டென முகம் வெளிற “ஒத்தப் புள்ளையவும் பேரனையும் தனியா வச்சிட்டு இங்க நாம அனாதைகளாட்டம் கெடக்கனுமா. அதோட ஒரு தடவ பிரிச்சிட்டா அப்புறம் எப்பவுமே ஒட்டாமப் போயிடும்மா..”
“அப்பா அஷ்வத்த ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடறோம்…”
சத்யாவின் குரல் கேட்டு ராம் எழுந்தார். அவர்களை வழியனுப்பியபோது ஊரிலிருந்து அழைப்பு வந்தது. ராமுவின் சித்தப்பா இறந்துவிட்டதாக பங்காளி முத்தையா தெரிவித்தார். இதுநாள் வரை ராமுவின் விவசாய நிலங்களை பராமரித்து வந்தவர் சித்தப்பாதான். பெரியதாக விளைந்தவற்றை இவர்களுக்கு அளிக்காதபோதும் ஊரில் நடக்கும் திருவிழா மற்றும் கோயில் காரியங்களுக்கான பணத்தை அவர்தான் கொடுத்து வந்தார். உடன் பங்காளி என்பதால் முறைப்படி எல்லோரும்தான் செல்லவேண்டும். இருக்கும் நிலைமையால் ராம் மட்டும் கிளம்பினார்.
சித்தப்பாவின் இறப்பிற்கு ஊரே கூடியிருந்தது. சொந்தக்காரர்களோடு முதலாளியின் மகனும் கண்ணில் தென்பட்டான். இளவயதுப் பையன் உடல் தளர்ந்து நரைத்த தாடியுடன் வயதானவர்போல் தோற்றம் கொண்டிருந்தான். பங்காளி முத்தையாதான் அவர்கள் குடும்ப நிலையினைக் கூறினார்.
“சென்னையிலிருந்து ஊருக்கு வந்த ஒரு வருடத்திற்குள் முதலாளி படுத்த படுக்கையாகி விட்டார். சொத்துகளை விற்று வைத்தியம் பார்க்க வேண்டியதாகிவிட்டது. இரண்டு ஆண்டிற்கு முன்புதான் இறந்தார். அதற்குள் நிலங்களை எல்லாம் விற்று இருக்கும் வீட்டையும் அடமானம் வைக்க வேண்டியதாகி விட்டது. மகன் பஞ்சு மில்லில் வேலை பார்க்கிறான். குறைவான சம்பளத்தில் அடமானத்திற்கான வட்டியை கட்டிவிட்டு எஞ்சியதில் பொண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையானதை வாங்கமுடியாமல் நிலைகுலைந்து திரிகிறான்..”
அக்கணம் சிறிய பையனைக் கையில் பிடித்தபடி முதலாளி ஊருக்குக் கிளம்பிய காட்சி நினைவில் தோன்றியது. சட்டென ராமுவின் நெஞ்சில் பெரும் விம்மல் எழுந்தது. அடுத்த கணமே உள்ளிருந்து ஓர் ஆவேசம் தோன்றியது. “அண்ணே, எனக்கு மொதலாளியா இருந்தவரோட பையன் இப்படி திரியிறத என்னால தாங்கிக்க முடியல. என் சொத்தை வித்து மொதலாளி பையனுக்கு குடுத்திடலாம்னே. அதுக்கான வேலையப் பாக்குறதுக்கு எனக்கு கூடமாட நில்லுங்கண்ணே..” என்று முத்தையாவிடம் கூறினார்.
முத்தையா அண்ணன் முதலில் ஆச்சர்யப்பட்டாலும், முக்கந்தர் வீட்டுக்காரர்களிடம் விலைபேசி முடித்து பத்திரங்கள் தயாரிக்க உதவினார். இதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நான்காவது நாள் பத்திரப் பதிவு முடிந்ததும் பணத்தைக் கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு இருவரும் நேராக முதலாளி வீட்டிற்குச் சென்றனர். இரண்டு தள வீடு வண்ணம் தீட்டி பல்லாண்டுகள் ஆனதால் மிகப் புராதனமான கட்டடமாக காட்சியளித்தது.
முத்தையா அண்ணன் உடன் வந்ததால் முதலாளியின் மருமகள் வரவேற்றாள். வரவேற்பறை சுவர்களில் சிறியதும் பெரியதுமான பல கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மாட்டப்படிருந்தன. முதலாளியின் படமும் அவர் மகனின் திருமணப் படமும் மட்டும் வண்ணத்தில் இருந்தன. முதலாளியின் படத்தில் பல மாதங்களுக்கு முன் போடப்பட்ட பூச்சரம் காய்ந்து வாடியிருந்தது. ராமு, அப்படத்திலிருந்த முதலாளியின் முகத்தில் சில கணங்கள் பார்வையை நிறுத்தி கூர்ந்து பார்த்தபின் காய்ந்த பூவை எடுத்துவிட்டு தான் வாங்கிச் சென்றிருந்த கதம்பத்தைச் சூடினார். முதலாளியை கைகூப்பி வணங்கியபின் பணப்பையை படத்தின் முன் வைத்தார். ராமுவைப் பற்றி முதலாளி மருமகளிடம் விவரத்தை சொல்ல வாயெடுத்த முத்தையா அவளின் முகத்திலிருந்த தெளிவினைக் கண்டு அமைதியடைந்தார். அவளிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
முத்தையாவின் இருசக்கர வாகனத்தில் ஏறியபோது ராணி அழைத்தாள்.
“சொல்லுமா, ஊர்லேர்ந்து இப்ப கெளம்பப் போறேன்…”
“ஏம்பா… நம்ம திலகா…” ராணியின் குரல் உடைந்து தளர்ந்தது.
“சொல்லுப்பா, திலகாவுக்கு என்னாச்சு” பதட்டத்துடன் கேட்டார்.
“திலகா போயிட்டாப்பா. எங்களுக்கு ஒன்னும் புரியல. நீங்க வேகமா வாங்கப்பா..” சட்டென துளிர்த்த கண்ணீர் கன்னத்தில் பட்டு தெறித்தது. அத்துளியை உணர்ந்த முத்தையா சட்டென திரும்பி இவர் முகத்தைப் பார்த்தார். சற்று பொறுக்கச் சொல்லி கையால் சைகைகாட்டியபடி வண்டியிலிருந்து இறங்கி சற்றுத் தள்ளி சென்று நின்று “சரி விடு ராணி . திலகாவ வலிகளிலிருந்து விடுதலை பண்ணினதா நெனைச்சுக்க. இதுல தப்பு எதுவும் இல்லம்மா. நல்லதுதான் பண்ணியிருக்க..” அவளைத் தேற்ற முயன்றார்.
“அதெல்லாம் இல்லை. நீங்க போன அன்னிக்கி சத்யா இனி நானே மாத்திரை கொடுக்குறேன்னு சொன்னான். நானும் சரின்னு சொல்லிட்டேன். நீங்க அவன்கிட்ட ஒன்னும் கேக்காதீங்க.. ஏய்ய் சத்யா இரு பேசிக்கிட்டிருக்கேன்ல.. ஏய் ஏன் போனைப் பறிக்கிற…”
“அப்பா… மூனு நாளுமே நான் திலகாகிட்ட மாத்திரையக் கொடுத்து போடச் சொன்னேன்பா.. அவளும் வாயில போட்டுக் கிட்டா. ஆனா இன்னைக்கி காலையில அவ மயக்கமானப்பதான் அவளத் தூக்குறதுக்காக சோபாவ நகத்தினேன். சோபாவுக்குக் கீழே செவத்து மூலையில மாத்திரைங்க கெடந்துச்சுப்பா… எப்படின்னு எனக்குத் தெரியலப்பா..” சத்யா குழறியபடிக் கூறினான்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
