ஒற்றைக் குதிரை

ஒற்றைக் குதிரை மீதமர்ந்து
ஒழுங்காய் சவாரி செய்கின்றோம்.
சற்றைக் கொருதரம் இன்னொன்று
சமமாய் அருகினில் ஓடிவரும்.

அமர்ந்த குதிரையை விட்டுவிட்டு
அதன்மேலும் கால் வைக்கின்றோம்.
அதுவோ சிட்டாய்ப் பறக்கிறது. அறியாமையில் மூழ் கடிக்கிறது.

ஒன்றாய் இருந்த அக்குதிரை
ஓராயிர மாய் விரிகிறது.
சுகம் என நினைத்த ஒரு குதிரை
சோகக் குழியைப் பறிக்கிறது.

இரண்டாம் குதிரை எதுவுமில்லை.
இறக்கை கட்டிப் பறப்பதில்லை.
அரள்வதும் மகிழ்வதும் மெய்யில்லை.
அமர்ந்திட வேறோர் குதிரை இல்லை.

இருபரிப் பயணம் விபத்துத்தான்.
பல பரிப்பயணம் பரலோகம்.
ஒருபரி மட்டுமே யிருக்கிறது.
உயிராய், உண்மையாய் ஒளிர்கிறது.

குதிரையும் நீயும் வேறில்லை.
அதிசயம் ஒன்றிதை அறிந்திடுவோம்.


2

கொன்றிடுவார், கூவிடுவார், அன்பு கொண் டாடிடுவார்,
வென்றிடுவார், தோற்றிடுவார், வீர உரை ஆற்றிடுவார்,
வியாக்யானம் செய்திடுவார், வீண்வம்பை வாங்கிடுவார்,
பட்டினத்தார் சொன்னது போல் உரைத்ததையே உரைத்திடுவார்

பிறர் சொன்ன வார்த்தைகளை, பிறர் கண்ட காட்சிகளை
தன்னுடையதாய் மயங்கி, ததும்பி நிற்கும்
தன்முனைப்பு, இறுமாப்பு, கர்வக் களிச் சிரிப்பு.
பின்னிவற்றில் பெருமை கொள அவர் பங்கு எத்தனையோ ?

கோடி கோடி காலங்களாய் கோடி கோடி மானுடர்கள்
கொண்டதென்ன கொள்வதென்ன? கொடுத்ததென்ன எடுத்ததென்ன?
மக்கும் குப்பை, மக்காத குப்பை
மறுசுழற்சி ஆகி மன்னராகும்,
மந்திரியும், குருவுமாகும்.
சிறு பிறழ்வில் உலகமெலாம் பஸ்பமாகும்.

விண்முட்டும் மாமலையின் ஓர் இடுக்கில்
விழுந்து மறைந்திருக்கும் துரும்பிலொரு
கண்காணா தூசாய் இருப்பவர் நாம். – சிறு
காற்றடித்தால் முற்றிலுமாய் மறைந்து போவோம்.

தூசெல்லாம் மலைக்கு ஒரு பொருளே இல்லை; – அதன்
துக்கமும் பக்தியும் ஒரு பொருட்டே இல்லை. – அங்கு
காசும் பொன்னும் கவைக்குதவா – அவை
கடல் நீரில் ஓர் உப்பாய் கரைந்து போகும்.

வெற்றுப் புலம்பலில்லை, விரக்தி இல்லை.
சற்றும் பொறுப்பு ஒன்றுமில்லை, பொல்லாப்புமில்லை.
முற்றிலுமாய் பாரம் இறங்கி விடில்
பயணம் இலகுவாகும்; பரம சுகம் கைகூடும்.

உன்னைச் சுமக்காமல் இருந்தாலே போதும்.
ஓர் பளுவும் உனக்கில்லை. – இவ்வுண்மை
தன்னை அறிந்ததனால் தானோ பட்டினத்து அடிகள் சொன்னார்:
” செத்தாரைப் போலே திரி.”


3

செத்தார் சிரிப்பாரோ ? அழுவாரோ ? முத்தந்தான் கொடுப்பாரோ ?
உண்ணும் உணவை அவர்தான் செரிப்பாரோ ?
உள் செல்லும் மூச்சை அவர்தான் விடுவாரோ ?
அத்தனையும் அவர் செய்யார் – அந்த
அவரே தான் அவை செய்வார் !

தண்ணீரை, சோறை, பல்லுணவை, மூச்சை
தசையாய், எலும்பாய், தோலாய், முடியாய்
எண்ணிறந்த திசுவாய் அவர்தான் செய்தாரோ ?
செய்தவற்றை எல்லாம் வளர்த்துக் காத்தாரோ ?
அத்தனையும் அவர் செய்யார் -அந்த
அவரேதான் அவை செய்வார் !

சந்திரரை, சூரியரை, சமுத்திரத்தை, வான் கடலை,
சதிராடும் பல் பிரபஞ்ச பொம்மைகளை,
நாதத்தை, ஒளியை, பஞ்ச பூதத்தை
சேதாரம் ஏதுமின்றி சீராய் அவரா இயக்குகிறார் ?
அத்தனையும் அவர் செய்யார் – அந்த
அவரே தான் அவை செய்வார் !

இதயத்தை, புப்புசத்தை, கல்லீரல், மண்ணீரல், மூளையென
இருக்கும் அவயவங்கள், பொறிகள், புலன்களை
இரத்தம், மஜ்ஜை, நரம்பணுக்கள் படைப்பை,
இருப்பை, இயக்கும் இரகசியத்தை அவர்தான் சமைத்தாரோ ?
அத்தனையும் அவர் செய்யார் – அந்த
அவரே தான் அவை செய்வார் !

தன்னை, பிறரை, தாவரத்தை, விலங்கை,
பொன்னை, கரியை, பூச்சிகளை, கிருமிகளை
இன்ன பிற பொருட்களை, ஜட, உயிரை – எது
ஒன்றேனும் அவர் என்றும் தானாய்ப் படைத்ததுண்டோ ?
அத்தனையும் அவர் செய்யார் – அந்த
அவரே தான் அவை செய்வார் !


4

உள்ளில் உணர்ந்தவர் அன்புமிக உலகுக் கெல்லாம் அறிவிக்க
வார்த்தையில் வர்ணனை செய்தார்கள்
வடிவையும் பெயரையும் சொன்னார்கள்.

சொல்லும் உருவமும் பொருள் இல்லை; – அவை
சுட்டும் பொருளின் கைகாட்டி
சுவையா உணவு, சொல் நெருப்பு
சோதி இலாத வெறும் விளக்கு.

கற்றை சடை முடி மாதேவன்,
கடற்பா லரவத் தறிதுயிலோன்
மற்றை தெய்வங்கள் யாவையுமே
மனதால் விளைந்த தோற்றங்களே.

மனமோ ஓடும் சிற்றாறு;
மஹா நதியிலோர் நுரைக்குமிழி
நனவாய், நினைவாய்க் கனவாகும்
நாளை நேற்றாய் உருமாறும்.

உலகமும் நீயும் வேறில்லை.
உலக நன்மையே உன் நன்மை
உலகத் தூலம் ஒன்றுமில்லை,
உள் நிகழ் உலகினை ஒப்பிட்டால்.

பிரார்த்தனை, பூசை, வழிபாடு,
நூற்றிடும் விரதம், நோன்பதனால்
ஆர்த்திடும் மனம் கொஞ்ச மமைதியுற்றால்
அதுவே கோவில் நடை திறப்பு.

ஆடும் மனதைக் கவனித்தால்
அதுவே தானாய் அடங்கிவிடும்
அடங்கிய மனமே கடவுள் காண் !
அதைத் தினம் பூசை செய்திடுவாய் !


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “ஒற்றைக் குதிரை”

Leave a Reply to இரா. கண்ணன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.