நள்ளிரவின் நடுவினிலே இருளோடு சேர்த்து நிசப்தத்தையும் இரவு கொண்டு வந்திருந்த வேளையில் நொடிமுள் இல்லாத அந்தக் கடிகாரத்தின் முட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்றாகி பன்னிரண்டைச் சுட்டிய தருணத்தில் அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவனைப் போல மெல்ல சுவரை நோக்கி நடந்து சென்றவன் அந்தச் சுவர் அவன் காதில் ஏதோ இரகசியம் சொல்வதைப் போல முகத்தைச் சுவற்றில் பக்கவாட்டில் வைத்து அழுத்தியபடி நின்றிருந்தான். பறவை ஒன்று தன் இறக்கைகளை விரிப்பதைப் போல மெல்லமாய்த் தன் கைகள் இரண்டையும் காற்றில் விரித்தான். பின்னர் அவனைப் போலவே அவன் கைகளும் அந்தச் சுவற்றைத் தழுவ முயல்வனவாய் இருபுறமும் பரவின.
அவனே ஒரு இரும்புத் துண்டாகவும் அந்தச் சுவரே ஒரு பெரும் காந்தப்பரப்பாகவும் மாறியதைப்போல சற்றும் இடைவெளியின்றி சுவரோடு சுவராய் ஒட்டிப் போயிருந்தான். பின்னர் அந்த அறையில் எந்தவொரு அசைவும் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இரவின் இருள் யாவையும் விழுங்கும் பேராசையுடன் காற்றில் மிதந்து வந்தது சின்னஞ்சிறு ஒளிப்பந்தொன்று. நெருங்க நெருங்கவே புலப்பட்டது அது அவள் கையில் எடுத்து வந்த அலங்கரிக்கப்பட்ட வண்ணப் பனிக்கூழ்க் களியில் நடப்பட்ட எரியும் மெழுகுவத்தி என்று. எத்தனை வயது ஆகியிருந்தாலும் அவளிடம் மட்டும் சமயங்களில் அவன் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வான். அப்படித்தான் அவள் அறைக்குள் நுழைந்தபோதும் அவள் வருகையை அறியாதவன் போல கண்களைச் சுவற்றோடு வைத்து மூடி போக்கு காட்டுகிறான் என்று நினைத்து ஒரு கணம் சிரித்தாள். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அந்தச் சிரிப்பு மறையும்படி ஆனது.
சுவரோடு சுவராய் ஒட்டியிருந்தவன் அதிலிருத்து மெல்ல விலகித் திரும்பிப் பார்க்காமல் கைகளை விரித்தபடியே பின்னோக்கி நடந்தான். அவனது கால்கள் மட்டுமே அசைந்தன அதுவொரு சிலைக்கு உயிர் வந்து நடப்பதைப் போல் இருந்தது. அறையின் மறுமுனையை அடைந்தவன் வேகம் கொண்டான், பாய்ச்சலுறும் விலங்கைப் போல முன்னோக்கி விரைந்தான். தனக்கு முன் சுவர் உள்ளது என்பதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை. சுவற்றை நெருங்கியவுடன் வேகத்தைக் குறைக்கவுமில்லை, அதே வேகத்தோடு பெரும் சத்தம் வரும்படி சுவற்றில் மோதிக் கீழே விழுந்தான்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்டு கையில் வைத்திருந்த பனிக் கூழ்க்களியைக் கீழே போட்டு அவனை நோக்கி விரைந்தாள். அது தரையில் விழுந்து நாற்புறமும் சிதறியது. அதில் அந்த அறையில் பரவியிருந்த கொஞ்சமான மெழுகுவத்தியின் மஞ்சள் ஒளியும் இருளில் அமிழ்ந்தது. அவள் அவனை நெருங்குவதற்குள் தரையிலிருந்து எழுந்தவன் மீண்டும் பின்னோக்கி ஓடி முன்பை விட வேகமாய் மீண்டும் சுவற்றில் மோதிக் கீழே விழுந்தான். அவள் அவன் பெயரைச் சொல்லிக் கதறியபடி அவனை நோக்கி விரைந்து இரண்டு கைகளாலும் அவனைப் பிடித்துக் கொண்டாள். அவனோ அவள் பிடியிலிருந்து திமிறியெழுந்து இன்னும் வேகமாய்ச் சுவரில் மோதினான். இந்த முறை அவனால் மீண்டும் எழ முடியவில்லை. பலமாக மோதியதில் அவன் தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுவற்றிலும் ஆங்காங்கே சிவப்புத் திட்டுகள் படிந்திருந்தன. பொறுக்க முடியாமல் அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு கதறியழுதாள். அவன் முகம் அவளது கண்ணீரில் நனைந்தது.
“ஐயோ…. ஏன் டா இப்படி இருக்க நீ” என்று அழுதபடியே வழியும் இரத்தத்தைத் துடைத்தாள். அவன் மெல்லமாய்க் கண்களைத் திறந்தான்.
“சொல்லு…. ஏன் இப்படி பண்ற?” என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் வரவில்லை.
“என்னது இது கை கால்லாம் இவளோ காயம்? என்ன பண்ற சொல்லு?”
“தெரியாம தடுக்கித் தடுக்கித் தான் கீழ விழுறனு இவளோ நாளா நினச்சேன், ஆனா எல்லாத்தையும் நீயே தான் வேணும்னேதான் பண்றியா?”
“சொல்லுடா… என்ன பண்ற சொல்லு? ஏன் இப்படி?”
“இது என்ன பச்சை உடுப்பு, கோமாளித்தனமா?”
என்ற தொடர் கேள்விகளை அவன் மீது வீசினாள். எதற்குமே பதிலில்லை. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இரத்தம் நின்றும் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.
அப்போது தரையில் சிதறிக்கிடந்த பனிக்கூழ்களி உருகி வழிந்து அவள் காலை நனைத்தது.
அவள் கண்களைத் துடைத்தபடியே “இத எதுக்கு கொண்டு வந்தேன் தெரியுமா?…. அக்டோபர் ஏழாம் தேதி…. இன்னிக்கு என்ன நாள் னு ஆச்சும் ஞாபகம் இருக்கா உனக்கு?” என்று கேட்டாள்.
அவள் மடியில் படுத்திருந்தவன் மெல்லிய புன்னகையோடு “அக்டோபர்-7-2025…… எப்படி மறப்பேன் ?…..” என்று இழுத்தான்.
அவள் சற்றே ஆசுவாசம் அடைந்தாள். இதையாவது நினைவில் வைத்துள்ளானே என்று. ஏனென்றால் அது சாதாரண நாள் இல்லை. அக்டோபர்-7-2025 என்பது அவன் பிறந்த நாள். அத்தோடு அக்டோபர்-7-2045 அவன் தன் காதலை அவளிடம் முதன்முதலில் சொன்ன நாள். அதனால் அக்டோபர்-7 மட்டும் அவளுக்கு எப்போதும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள். ஆயினும் அவன் வாயிலிருந்து அதைக் கேட்டிட வேண்டும் என்ற ஆவலுடன் “ம்… சொல்லு…” என்றாள்.
அவனும் தொடர்ந்தான் “எப்படி மறப்பேன்?….. அக்டோபர்-7-2025…. குவாண்டம் டன்னலிங் கோட்பாட்டுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்” என்றான்.
அவன் மனதுக்குள்ளும் எண்ணங்களிலும் அவளுக்கான இடம் என்று ஒன்று கொஞ்சம் கூட இல்லையா என்று அவள் மனதுக்குள் கோபம் கனன்றது.
அவன் மேலும் கோர்வையற்று ஏதேதோ பிதற்றத் தொடங்கினான். ஆனால் அந்த உளறலில் கூட அவளைப் பற்றி எதுவுமே இருந்திடவில்லை. அப்போது அவள் மனதின் புழுக்கத்தை இரவின் மௌனத்தைக் கிழிக்கும் பேரொலியாய் எழுப்பிக் கொண்டு அவர்கள் வீட்டை ஒட்டியபடியிருக்கும் தண்டவாளத்தில் வீடு அதிரும்படி தூரத்தில் வந்து கொண்டிருந்தது நீண்ட இரயில் ஒன்று.
அந்த இரவைக் கிழிக்கும் பேரொலி அவளுக்குள் கனன்ற கோபத்தீயைத் தூண்டுகோலாய்த் தூண்டி இன்னும் கொழுந்து விட்டு எரியச் செய்தது. அந்தத் தருணத்தில் நாகாக்கத் தவறினாள் அவளையும் மீறி வெளியே வந்து விழுந்தன சொல்லக் கூடாத அந்தக் கடுஞ்சொற்கள்.
தன் கையில் படிந்திருந்த இரத்தக் கறையைப் பார்த்தபடியே கோபம் கொப்பளிக்கச் சொன்னாள் “இப்படித் தினம் தினம் சாவதற்கு, ஒரேதடியா அந்த இரயிலில் போய் விழுந்துவிடு. உன்னோடு சேர்ந்து நானும் விழுந்துட்றேன்” என்று.
சொல்லி முடித்த பின்னரே அந்தச் சொற்களின் கனம் அவளுக்கு உரைத்தது. ஆனால் கொட்டிய சொற்களை அவளால் அள்ள முடியவில்லை.
அவள் இப்படிச் சொல்லியதைக் கேட்டவுடன் பாதி மூடியிருந்த தன் கண்களை அகல விரித்தான். அவன் முகத்தில் ஒரு சொல்ல முடியாத மாற்றத்தைக் காணமுடிந்தது. அவள் தன் தவறை உணர்ந்து “டேய்… அது வந்து….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அதற்குள் அவள் மடியிலிருந்து எழுந்தவன் வீட்டிலிருந்து வெளியேறி, இரயில்த் தண்டவாளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
எல்லாம் இமைப் பொழுதில் நடந்திருந்தது.
தன்னை நிலை படுத்திக்கொண்டு அவளும் அவன் பின்னால் விரைந்தாள்.
எவ்வித அரவமுமற்ற அந்த இரவுப் பொழுதில் தடதடக்கும் ஓசையுடன் கிட்டத்தில் அந்த இரயில் வந்துகொண்டிருந்ததில் அந்த இரவே அதிர்ந்தது.
அவனோ இரையைக் கண்ட விலங்காய் இரயிலை நோக்கி ஓடிட அவளோ தன்னோடு சேர்த்து தன் மனதுக்குள் இருக்கும் சொல்லவொண்ணாத் துயரத்தையும் தூக்கிச் செல்வதால் அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தாள்.

அவன் எல்லை மீறிப் போயிருந்தான். அவளுக்கு நேரெதிரே தூரத்தில் தண்டவாளத்தின் நடுவே சற்றும் அசையாது இரயிலை எதிர்நோக்கி நின்றிருந்தான்.
ஏதும் அதிசயம் நிகழ்ந்து, ஓடி வரும் இரயில் அப்படியே நின்றுவிடக் கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது. ஆயினும் ஓடி விரைவதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
இரயில் அவனிடமிருந்து சில அடிகள் தொலைவிலேயே இருந்தது. அவளுக்குத் தெரிந்து விட்டது, அவளால் அவனைச் சென்று அடைய முடியாது என்று. அவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் பெயரைச் சொல்லி ஒரு முறை கதறினாள் ஆனால் அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவள் கண் முன் நிகழப் போவதைப் பார்க்கும் தெம்பு அவளுக்கில்லை. திரும்பிச் செல்லவும் அவளுக்கு மனம் ஒப்பவில்லை. நிகழவிருப்பதைத் தடுக்காமல் அங்கு நிற்கவும் முடியவில்லை. செய்வதறியாது திக்குமுக்காடினாள்.
அதற்குள் புயல் வேகத்தில் வந்த இரயில் அவன் மீது மோதியது.
பின்னர் அவன் அங்கு நின்றதற்கான சுவடேயின்றி வலமிருந்து இடமாய்க் கடந்து போய்க்கொண்டு இருந்தது. அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சற்று முன் வரை தன் கண்முன் நின்று கொண்டிருந்தவன் எங்கே என்று அவள் மனம் ஏங்கியது. அவன் மீது கோபம் கொள்வதா இல்லை இரயிலின் மீது கோபம் கொள்வதா என்றும் தெரியவில்லை. அந்த இருப்புப் பாதையில் இரயில் ஏற்படுத்தும் தடதடக்கும் உலோகச் சத்தம் யாரோ ஆளுயரச் சுத்தியல் ஒன்றை வைத்து விடாது அவள் தலையில் அடித்துக் கொண்டே இருப்பதைப் போல் இருந்தது. உடல் நடுக்கமுற்று கதறியழுதாள். எல்லாம் இதே அக்டோபர் ஏழில் தான் நடக்க வேண்டுமா? ஒரே நொடி எல்லாவற்றையும் எப்படித் தலைகீழாய் மாற்றிவிட்டது என்று அழுது கரைந்தாள்.
தன் உள்ளங்கைகளுக்குள் முகம் புதைத்து மீண்டும் அந்த இரயிலைப் பார்க்கும் சக்தியற்று இருந்தவள் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். கருணையற்று கடந்து போய்க்கொண்டிருந்தது அந்த இரவினும் கரிய இரயில்.
ஆனால் அதன் கடந்து செல்லும் பெட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளியில் மெல்லிய ஒளிப்பிழம்பாய் அவனது உருவம் அவள் கண்களுக்குத் தெரிந்தது.
அவள் தற்போது காண்பது பொய்யா இல்லை சற்றுமுன் நிகழ்ந்தது தான் பொய்யா என்ற வேறுபாடு தெரியாத நிலையில் உழன்றிருந்தாள். ஆனால் இரயில் கடக்கக் கடக்க அதன் பெட்டிகளுக்கு இடையிலான அவனது உருவம் அவளுக்குத் தொடர்ந்து தெரிந்துகொண்டே இருந்தது. அது தரையிலிருந்து சற்றே மேலெழுந்து காற்றில் மிதந்துகொண்டும் இளமஞ்சள் ஒளியினில் ஒளிர்ந்துகொண்டும் இருந்தது.
தான் கண்ட அவனது உருவம் உண்மையிலேயே அங்கு இருந்திடக் கூடாதா என்று நினைத்தபடியே மெல்லமாய்த் தண்டவாளத்தை நோக்கிச் சென்றாள்.
இரயில் முழுதுமாய்க் கடந்து சென்றிருந்தது.
இரயில் கடந்து போனதும் அவனது இளமஞ்சள் ஒளியுருவம் காற்றிலிருந்து மெல்லமாய்த் தாழ்ந்தது. மின்னும் ஒளி மங்கியதில் சற்றுமுன் தன் மடியில் கிடத்தியிருந்த அவனது அதே முகத்தை மீண்டும் பார்த்தாள். இரயில் அவன் மீது மோதுவதைத் தன்னிரு கண்களாலும் தான் பார்த்தாள். ஆயினும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான் அவன்.
இன்னும் பெருக்கெடுத்து வழிந்தது கண்ணீர்.
நம்பிக்கையின்றி அவன் கைகளைப் பிடித்தாள், அவனைக் கட்டியணைத்தாள். அவள் காண்பது பொய்யில்லை! அவள் கண்முன் நிற்பது அவனே தான்!
அவள் முகத்தில் கோபமும் அன்பும் கண்ணீரும் கலந்தோடின. அவன் கண்களோ புதுவித ஒளியில் மின்னின.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சொற்களற்று நின்றிருந்தாள். அவனே பேசத் தொடங்கினான்.
“எல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று பார்க்கிறாயா?”
அவள் ஒன்றுமே சொல்லவில்லை.
அவள் கேட்கும் நிலையில் இருக்கிறாளா என்றெல்லாம் யோசிக்காமல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல பேசத் தொடங்கினான்.
“இந்தப் பரந்த அண்டத்தை எடுத்துக்கொள். இதிலுள்ள பெரிய பெரிய கோள்களெல்லாம் கூட தமக்கு விதிக்கப்பட்ட நீள்வட்டப் பாதையில் மட்டுமே நகர்கின்றன. ஆனால் அந்தக் கோள்களைக் கட்டுப்படுத்தும் அவ்விதிகளால் கூட அந்தக் கோள்களோடு ஒப்பிடுகையில் சிறு துகளளவிலான நம்மைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் நினைத்தபடியெல்லாம் இவ்வுலகில் நகரலாம். அதேபோலத்தான் நம்மைக் கட்டுப்படுத்தும் இயற்பியல் விதிகளான புவியீர்ப்பு விசை, மின்காந்தப்புல விசை போன்றவற்றால் நம்மினும் சிறிய நுண்துகள்களான குவாண்டம் துகள்களைக் கட்டுப்படுத்த முடியாது. இயல்பான இயற்பியல் விதிகளுக்கு மாறுபட்ட அந்தத் துகள்களின் உலகத்தை குவாண்டம் உலகம் அதாவது குவைய உலகம் என்கிறோம். அந்தக் குவைய உலகில் இருப்பவை எல்லாம் இருமைத் தன்மை கொண்டவையாகும். ஒரே நேரத்தில் அலைவடிவிலும் அதே நேரத்தில் துகள் வடிவிலும் இருக்கும் இயல்பு கொண்டவையாகும். ஆதலின் அந்த நுண்துகள்கள் ஒரு திடப்பொருளின் மீது மோதினால் அம்மோதலால் கீழே விழுந்து விடாமல் அந்தத் தடுப்பை ஊடுருவி உள்ளே செல்லக் கூடியனவாகும். இந்தப் பண்பையே குவாண்டம் டன்னலிங் அதாவது குவைய ஊடுருவல் என்கிறோம். அதையே நான் இப்போது நிகழ்த்திக் காட்டினேன். இந்தக் கோமாளித்தனமான பச்சை உடுப்பு இருக்கிறதே, இது என் ஆராய்ச்சியின் மூலம் முழுக்க முழுக்க குவையத் துகள்களால் உருவாக்கப்பட்டது. இது தன்னைச் சுற்றி ஒரு குவைய உலகத்தை உருவாக்கிடும். இதை நாம் அணிந்துகொண்டால் நாமும் குவையத் துகள்களின் திரட்டாய்த் திரிந்து அக்குவைய உலகத்தின் அங்கமாகிவிடுவோம். அதன் பொருட்டே என்னால் இரயிலை ஊடுருவி உள்ளே செல்ல முடிந்தது, அலையின் பண்பால் தண்டவாளத்தின் மேலேயும் இரயிலுக்கு உள்ளேயும் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடிந்தது. இந்த உலகத்தையே கட்டுப்படுத்தும் இயற்பியல் விதிகளால் இனி என்னைக் கட்டுப்படுத்த முடியாது.” என்று சொல்லி இரவே அதிர்ந்திடச் சிரித்தான்.
அவள் எதையுமே காதில் வாங்கியவளாய்த் தெரியவில்லை. கோபத்தில் கைகளை உதறிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
“நில்…. நில்….” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கொஞ்சும் பார்வையால் நிறுத்தினான்.
அவளுக்குக் கோபம் கொள்வதா அமைதி கொள்வதா என்று இன்னும் தெரியவில்லை. அப்போது அவளை அமைதி படுத்தும் விதமாய் அவன் ஒரு கேள்வி கேட்டான்.
“நான் எவ்வளவு பெரிய முட்டாள் பாத்தியா?”
அவள் சொன்னாள், “ஏன் அது உனக்கு இன்னிக்கி தான் தெரியுமா?”
“ஏய், நா சொல்ல வரத கேளு”
“சரி, சொல்லு”
“குவைய ஊடுருவலை நிகழ்த்தவே இத்தனை ஆண்டுகள் செலவிட்டேன். இவ்வளவு நேரம் அக்டோபர்-7-2065, அதாவது இன்றே அதை நிகழ்த்தியதாய் நினைத்தேன். ஆனால்….”
“சொல்லு, என்ன ஆனால்?”
“ஆனால்…. அக்டோபர்-7-2045 அன்றே அதை நிகழ்த்திவிட்டேனே!”
“என்னடா சொல்ற?”
“ஆம், அன்று என் காதலைச் சொன்னபோது உன் அருகில் தானே அமர்ந்திருந்தேன். ஆனால் அப்படி அருகில் அமர்ந்தபடியே உன் நெஞ்சுக்கூட்டை ஊடுருவி உன் உள்ளத்துள் நான் சென்றிருக்கவில்லையா? எனில் அன்றே நிகழ்ந்த ஒன்றை இத்தனை ஆண்டுகள் உணராது போனது முட்டாள்தனம் தானே?”
“ஆமா… ஆமா… ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சோன தான் உனக்கு காதல் ஞாபகம் வரும், போடா…” என்று சொல்லி அவனைச் செல்லமாய் அடித்தாள்.
நிலவற்ற அந்த இரவில் அவர்கள் முகங்கள் இரண்டும் ஒளி கொண்டு மின்னின.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
