பராக்குப் பார்த்தல்!

பணி நிமித்தம் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டி வரும். முன்பெல்லாம் எல்லார் கவனத்தையும் திரைகள் இன்றுபோல் ஆக்கிரமித்தது கிடையாது. எனவே அருகில் இருப்பவர்களோடு ஏதேனும் பேசி உரையாடுவது என்பது சகஜமான ஒன்றாக இருந்தது. நமக்குச் சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்பவராக இருப்பார், நாம் செல்ல ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஊரில் இருந்து வந்தவராக இருப்பார், நமக்குப் பிடித்த விளையாட்டு அணியின் ரசிகராக இருப்பார், அல்லது நமக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாதவராகவும் போகலாம். அவர்களுடனான இந்த உரையாடல்கள் மூலம் சுவாரசியமாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம், புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்,  அட இவர் நம் இனம் எனப் பாசம் பெருகி அவருக்கு நாமோ இல்லை நமக்கு அவரோ ஒரு பியர் வாங்கித் தரும் நட்பாகலாம். இந்த விமானப் பயணங்களுக்கெல்லாம் முன்பு ரயில் பயணங்களில் இது போல ஒரு தற்காலிக நட்பினை உண்டு பண்ணிக் கொள்வதற்கு ரயில் சிநேகம் என்றே பெயர் உண்டே. 

ஆனால் இன்று இந்த வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்தே போய்விட்டது. எல்லார் கையிலும் ஒரு தொலைப்பேசியோ டேப்லட்டோ இருக்கிறது. அதில் படிப்பதும், பார்ப்பதுமாக தம்மைச் சுற்றி நடப்பவை எதையும் கண்டுகொள்ளாது தமக்கான உலகத்தில்தான் அனைவரும் இருக்கின்றார்கள். போதாகுறைக்கு காதுகளில் ஓர் ஒலிப்பானை வேறு மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். இவர்கள் பரவாயில்லை, ஆனால் இந்த ஒலிப்பான்கள் இல்லாமல் எதையோ அலறவிட்டுக் கொண்டு பார்க்கும் சிலரைக் கண்டால் கடுப்பாக இருக்கும். அடுத்தவர்  கையில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தால் கூட என்ன புத்தகம் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். இப்பொழுது அதுவும் தொலைப்பேசிக்குள் போய்விட்டதால் அதற்கும் வழி இல்லாமல் ஆகிவிட்டது. 

நான் மட்டும் ரொம்ப ஒழுங்கு என்றில்லை. நானும் திரைப்பைத்தியம்தான். படிப்பதும் எழுதுவதும் கணினியிலோத் தொலைப்பேசியிலோதான். ஆனால் பெரும்பாலும் பணியில் கணினித் திரையையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதாலும் ஹோட்டலில் தங்கி இருக்கும் பொழுது இவற்றைக் கொண்டே பொழுது போக்குவதாலும் விமான நிலையங்கள், உணவிடங்கள், காப்பிக் கடைகள் எனப் பொது இடங்களில் இருக்கும் பொழுது மற்றவர்களை வேடிக்கை பார்ப்பது என் பொழுதுபோக்காகி விட்டது. ஆங்கிலத்தில் இதற்கு ‘People Watching’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். 

தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். அதனால் ‘People Watching’ என்ற பதத்திற்கு பராக்குப் பார்த்தல் என்ற தமிழ்ப்பதம் சாலப் பொருத்தம் என்றே நினைக்கிறேன். 

பராக்குப் பார்ப்பது மனித இயல்பு. மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்று பார்ப்பதில் எல்லாருக்கும் ஆர்வம் உண்டு. எந்த விதமான முன்னேற்பாடுகளோ, கருவிகளோ செலவோ தேவைப்படாத எளிமையான பொழுதுபோக்கு இது. இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க மின்கலம் அனுமதிக்குமா என்ற பயமே கிடையாது. நம் கண்களில் தென்படும் காட்சிகளை வைத்து நம் மனம் அதற்கு ஏற்ப கதைகளை உண்டு பண்ணிக்கொள்ளும். 

நம்மைக் கடந்து செல்லும் ஒருவர் “இப்போ பரவாயில்லையா?” என்று தொலைப்பேசியில் சொல்வதை, அவர் நடக்கும் விதம், உடை, முகபாவம் என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அவர் யாரிடம் பேசுகிறார், எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றெல்லாம் நாமே கதை புனைந்து கொள்ள முடியும். மாலை வேளையில் ஓர் இளம் தந்தை தோற்றத்தில் இருப்பவர் மென்மையாக இந்தக் கேள்வியைக் கேட்கும் பொழுது அவர் தன் மகனிடமோ மகளிடமோ பேசுகிறார். எதோ சின்ன அடி பட்டு இருக்கும் போல, அது இப்போ சரியாகிவிட்டதா எனக் கரிசனமாக விசாரிக்கிறார் என்ற எண்ணம் தோன்றலாம். அதுவே அவர் கவலையோடு தலையைக் கோதிக்கொண்டு சற்றே உரக்க அவசரமாக இந்தக் கேள்வியைக் கேட்டாரென்றால் அவர் குடும்பத்தில் யாருக்கோ உடம்பு சரியில்லை. அவர்கள் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். ஒரு வேளை அவர்களைப் பார்க்கத்தான் செல்கிறாரோ என்று தோன்றலாம். இவை எதுவுமே உண்மையாக இல்லாது இருக்கலாம், ஆனால் நமக்கு அது தெரியப்போவதில்லை. நம் மனத்தில் எழுந்த கதைதான் நம்மளவில் உண்மை. 

தனியே பயணம் செய்யும் மூதாட்டி, ஒரு வெள்ளையினப் பெண்ணின் கையில் ஆசியத் தோற்றம் கொண்ட குழந்தை, ஒரே ஐஸ்க்ரீமை உண்ணும் இளம் ஜோடி, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கலாம் என நினைக்கத் தோன்றும் சற்றே திகலடைந்த பார்வையுடன் இருப்பவர், எதையும் பற்றிக் கவலைப்படாமல் உரக்க தம் மொழியில் பேசிக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர் எனப் பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்கும் நம் மனம் கதைகளை உருவாக்கிக் கொள்ளும். 

அடிப்படையில் மனிதர்கள் எல்லாரும் கதைசொல்லிகள். இப்படிப் பராக்குப் பார்க்கும் பொழுது நம் உள்ளே இருக்கும் கதைசொல்லி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகிறான். இந்தக் கதைகளை மற்றவர்களுக்கு ஆர்வம் வரவைக்கும் வகையில் சொல்லக் கூடியவர்களை இந்தச் சமுதாயம் அதனால்தான் கொண்டாடுகிறது. அவர்கள் நன்றாகக் கதை சொல்ல முடிவதன் காரணம் தம்மைச் சுற்றி நடப்பவற்றை கவனித்து அவற்றை தம் கதைகளில் சரியானபடி நுழைத்துக் கொள்வதால்தான். அதன் மூலம் அவர்களின் கதைகளுக்கு ஒரு நம்பகத்தன்மை வந்துவிடுகிறது. ஒரு வாசகரை கட்டிப் போடுவதற்கு இந்த நம்பகத்தன்மை முக்கியமான ஒன்று. 

ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிய ஜே.கே. ரௌலிங் சொல்கிறார், “காப்பிக்கடைகளில் உட்கார்ந்து கொண்டு உலகம் என்னைச் சுற்றி இயங்குவதை வேடிக்கைப் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் அதுதான்”. அதே போல திகில் கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கும், “பராக்குப் பார்க்கும் கலை ஓர் எழுத்தாளனின் உற்ற நண்பன்” என்கிறார். கதை சொல்வது மட்டுமல்ல உடற்பயிற்சியைப் போல இப்படி பராக்குப் பார்ப்பது மனபயிற்சி என்கிறது அறிவியல் ஆய்வு. இதன் மூலம் கற்பனைவளம் பெருகும் மற்றவர்களைப் பற்றிய புரிந்துணர்வும் கூடும் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு. பிரித்தானிய உளவியலாய்வுக் கழகத்தின் மற்றொரு ஆய்வு பராக்குப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 25% வரை மன அழுத்தம் குறைவதாகத் தெரிவிக்கிறது. அது மட்டுமில்லை, பராக்குப் பார்க்கும் சமயத்தில் ஆழ்மனது, அதுவரை இணைக்கப் படாத புள்ளிகளை இணைத்து பிரச்சனைகளைத் தீர்க்கவும் செய்யுமாம். 

பராக்குப் பார்க்கும் பொழுது நம் உலகத்தின் இருக்கும் ஒரு லயத்தை நாம் கண்டுகொள்ளலாம். எதிரும்புதிருமாக நடக்கும் மக்கள் எப்படி மோதிக்கொள்ளாமல் இரண்டு ஆறுகளின் நீரோட்டம் ஒன்றோடு ஒன்று இணையாகப் பாய்ந்தாலும் ஒரேடியாகக் கலந்துவிடாமல் இருப்பதைப் போன்ற ஓர் அழகினை இதில் பார்க்கலாம். விமானநிலையத்தின் அறிவிப்புப் பலகைகளைக் கடக்கும் அனைவரும் தாம் எங்கு செல்ல வேண்டும், தமது விமானம் கிளம்பும் நேரம் எது என்று தெரிந்தாலும் கூட ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுப் போவதை இயல்பாகச் செய்வதை நாம் கவனிக்கலாம். வயதான தம்பதியினர் எப்படி அவர்களையே அறியாமல் ஒருவரின் நடவடிக்கையை மற்றவர் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப்  பார்ப்பது கிளர்ச்சியைத் தரக்கூடிய ஓர் அனுபவம். இருவர் பேசிக் கொண்டிருக்கும் விதத்தினை வைத்து அவர்கள் நெருங்கிய நண்பர்களா, ஒருவருக்கொருவர் அறிமுகமானவரா, அதிகாரியும் அவரின் கீழ் வேலை செய்பவருமா என்றெல்லாம் நாம் புரிந்துக் கொள்ள முடியும். நம் வாழ்வில் அப்படி நாம் நடந்துகொள்ளும் பொழுது அது குறித்த பிரக்ஞை நமக்கு இருக்கும். 

இப்படி நாம் மற்றவர்களைக் கவனிப்பதை மற்றொருவர் பார்க்கலாம். அப்படி அவர் கவனிக்கும் பொழுது நம் கண்கள் அவர் கண்களைச் சந்தித்தால் ஒரு சிறிய புன்முறுவலுடன் வேறு பக்கம் திரும்பிக் கொள்வதும் நடக்கும். அந்த ஒரு நொடியில் அவருக்கும் நமக்கும் எதோ ஒரு தொடர்பு உண்டானது போல் இருக்கும். மனிதம் என்ற பெருங்கடலில் நாம் இருவரும் இரு துளிகள் என்பது போல ஓர் உணர்வு உண்டாகும். அது பெருமிதத்தையும் அடக்கத்தையும் ஒரு சேரத் தரும். 

அடுத்த முறை ஒரு காப்பிக் கடையிலோ, தொடர்வண்டி நிலையத்திலோ, விமான நிலையத்திலோ இருக்கும் பொழுது திரைகளை அணைத்துவிட்டுப் பராக்குப் பாருங்கள். மக்களின் சிரிப்பை, அவர்கள் நகர்வதில் இருக்கும் லயத்தை, ஓடி விளையாடும் குழந்தைகளை, அவர்கள் பின் ஓடும் பெற்றோர்களை, இவர்களை ரசிக்கும் வயதான தம்பதியை என அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். இந்த உலகத்தோடு ஏற்படும் இணைப்பை இறுக்கப் பிடித்துக் கொள்ளுங்கள். மனிதத்தில் முங்கி எழுங்கள்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.