“மகாபாரதக் கதையை முதலிலிருந்து சொல்ல வேண்டாம். எந்த இடத்தைத் தொட்டும் கதையை ஆரம்பிக்கலாம்-அப்படி ஒரு சுவாரயஸ்யம் கேட்கக் கேட்க”என விளாத்திகுளம் சுவாமிகள் இசை எப்படி இருக்கும் என்பதற்கு கி.ரா. இவ்வாறு உதாரணம் தருகிறார்.
சுவாமிகள் காடல்குடி ஜமீந்தார்களான தொட்டிய நாயக்கர் எனப்படும் ராஜகம்பளத்தார் வகையைச் சேர்ந்தவர். இவரின் முன்னோர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நெருங்கிய உறவினார்கள். கட்டபொம்மனோடும் அவர் தம்பி ஊமைத்துரையோடும் விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தூக்குத் தண்டனை பெற்றவர்கள். ஆங்கிலேய அடக்குமுறையால் காடல் குடியை விட்டுப் புலம் பெயர்ந்து விளாத்திகுளம் வந்துவிட்டனர்.
விளாத்திகுளம் சுவாமிகளின் சங்கீத ஞானம் அவருக்குப் பிறவியிலேயே வாய்த்து விட்டது. சொல்லப்போனால் இயற்கையிடத்திலிருந்து அதைக் கூர்ந்து உள்வாங்கிக் கற்றுக்கொண்டது .
“இசை கற்க குருபீடம் இல்லை
இயற்கையே அவரின் குரு பீடம்”
எனப் பா.செயப்பிரகாசம் சுவாமிகளின் கல்வி பற்றிக் குறிப்பிடுகிறார். அதனால் தான் “அவரின் வாழ்வின் முதல் காலகட்டத்தில் நாதத்தை உபாசித்து , சஞ்சரித்து, தானும் அனுபவித்து, மற்றவர்களையும் அனுபவிக்கச் செய்தார்.இந்த உபாசனை அடுத்த கட்டம் அடைந்தது. அது தான் நாதத்தில் ஒன்றிய கட்டம்.” என்ற விதமாக அமைந்ததாகச் சாத்தூர் வில்லிசை வேந்தர் பிச்சுக்குட்டி தெரிவிக்கிறார்.
இப்படிப்பட்ட மேதையின் இசைமயமான வாழ்வை இக்கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

“ஆஜானுபாகுவான கரிய திருமேனி. நாலரை முழ கதர் வேட்டி .போர்த்திய அங்கவஸ்திரம் மட்டும்.அதிகப்படியாக பட்டுத்துணியில் தைத்த ஒரு சிறிய திருநீற்றுப்பை மடியில். ஜமீனுடைய அய்வேஜே (சொத்து என்பதற்கான பழைய காலச் சொல்) இவ்வளவு தான்!+சங்கீதம்.” என சுவாமிகளின் தோற்றத்தைக் கி.ரா காட்சிப்படுத்துகிறார்.
கம்பர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கவிச்சக்ரவர்த்தி கம்பனுடைய ஞாபகமே வருகிறது . என சுவாமிகளின் தோற்றத்தைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிடுகிறார்.
சுவாமிகள் மிக இரக்க குணம் உள்ளவர். யாரேனும் பொழுது போகாமல் அவரிடம் பேச வந்தால் கூட “சாப்டாச்சா” என விசாரித்து , சாப்பிடவில்லை என்றால் பணம் தந்து சாப்பிட வைப்பார் .
தன் கச்சேரிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு மட்டும் உரிய தொகையைப் பேசி வாங்கித் தந்து விட்டுத் தனக்குரிய தொகையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தருவதே போதும் என்பார்.
பல பரிசில்கள் பெற்றாலும் ஏழைகளுக்கு தானம் செய்துவிடுவார். இவை போன்ற தகவல்களைச் சுவாமிகளை பற்றி நன்கறிந்த பலர் கூறுகின்றனர்.
______________
- மைசூர் மகாராஜாவின் அவையில் இலட்சுமணப்பிள்ளை என்பவர் ஒரே ராகத்தில் மூன்று நாள்கள் தொடர்ச்சியாகப் பாடிப் பரிசில் பெற்றபின் தன்னைப்போல் பாடவல்லவர் உண்டா? என அறைகூவல் விடுக்க அதையேற்ற விளாத்திகுளம் சுவாமிகள் ஐந்து நாள்கள் பாடி அவரை வென்றார்.
- இசையை இடையறாது யோகமாகப் பயின்றதால் தவளைகளின் ஓசை, மில் சங்கின் ஒலி போன்றவற்றைக் கூட நாதமாக அணுகினார்.
- பாடுவதை விட ராகங்களை முனகுவது, சீழ்க்கை அடிப்பது ஆகியவற்றையே பெரிதும் விரும்பினார்.
என அவரைப்பற்றி வாய்மொழியாக வழங்கும் பல செய்திகள் அவரின் இசையார்வத்தையும் திறனையும் புலப்படுத்துவன.
அவரின் வாழ்வே நாதமயம். “அவரின் சங்கீத சாதகம் மிக அரிய தன்மை வாய்ந்தது. அவர் சாரீரமோ அபூர்வ சக்தி படைத்தது. ரக ஆலாபனையில் அவர் கையாண்ட கற்பனை அற்புதமானது.” எனப் பா.வேலப்பர் குறிப்பிடுகிறார்.
72 மேளகர்த்தா ராகங்களையும் அறிந்தவராக ,அவற்றில் மிகச் சிக்கலானவற்றை எளிதாகப் பாடக்கூடியவராக, தைரியத்துடனும் , தன்னெழுச்சியுடனும் இந்துஸ்தானியையும் வைதிகமானதும்-செவ் வியலானதுமான கர்நாடக திசையிலிருந்து ஐரோப்பிய இன்னோசைகளையும் வளர்த்தெடுக்குக்கும் ஒரே இந்தியராக அவர் இருந்தார் என ஜி.வெங்கடாச்சலம் தம் MYSINDIA ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
சங்கீதம் தேசம் வாரியாக வேறுபட்ட அமைப்புகளில் அமைந்த ஒரு விசித்திரமான கலை. ஆனால் நம் விளாத்திகுளம் சுவாமிகள் ஆங்கிலப் பண்களை நம் கர்நாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்திப்பாட்டினார்கள். “சங்கீதத்தில் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு தேடிக்கொடுத்த பெருமை நம் சுவாமிகளையே சாரும்” எனச் சுவாமிகளின் இசைச் சாதனையைக் கு.அழகிரிசாமி அடையாளப்படுத்துகிறார். நவீன ஆய்வுலகம் தற்பொழுது பேசும் Interdisciplinary Studies எனும் பல்துறை ஆய்வியல் பார்வை இசைத்துறையில் சுவாமிகளுக்கு அன்றே இருந்துள்ளது.
நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராகங்களைப் புதிய வடிவங்களில் வழங்கியவர்களுள் ஒருவராகவும் ராக ஆலாபனையில் புதுப்புது விதங்களைக் காட்டி இசைத்தவர்களில் ஒருவராகவும் சுவாமிகள் விளங்கியதாகக் கி.ரா.குறிப்பிடுகிறார்.
குற்றாலம் சென்றிந்த பொழுது குளிப்பு எப்படி? என்று கேட்டால் சங்கீதமா இருக்கு என்றும் குடிக்கிற காபி சூடு அதிகம் இருந்தால் சுருதி எச்சா இருக்கு என்றும் சாப்பாட்டின் பொழுது தொடுகறிகளைப் பக்கவாத்தியம் என்றும் அவியலை ராகமாலிகை என்றும் பாயசத்தைத் தோடி என்றும் வற்றல் ஊறுகாய்களை துக்கடா என்றும் சுவாமி குறிப்பிடுவாராம். அவர் வாழ்வில் சர்வமும் சங்கீத மயம் எனத் தெரிகிறது.
சற்குரோ… ஞானபண்டிதா… என மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் சுவாமிகள் சுத்த சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். அவருக்கு எல்லா ராகங்களும் பிடிக்கும் என்றாலும் ‘சண்முகப் பிரியா’, ‘கரஹரப்பிரியா’, ‘காம்போதி’ , ஆகியவை மிகவும் பிடிக்கும். குறிப்பாக கரஹரப்பிரியா ராகத்தில் அவருக்கு இருந்த தோய்வு காரணமாக ‘கரஹரப்பிரியா சக்கரவர்த்தி’ என அவர் போற்றப்பட்டார். “கரஹரப்பிரியா என்கிற நாவலை அவர் வாழ்நாள் பூராவும் புதுப்புது அத்தியாயங்களாக கொடுத்துக் கொண்டே இருந்தார். நாவல் என்று சொல்வதை விட காவியம் என்று சொல்ல வேண்டும்.” என அந்த ராகத்துக்கும் சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கி.ரா விவரிக்கிறார்.
_______________
சுவாமிகள் பாரதியாரைப் பார்த்துள்ளார். பாரதியாரின் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘நெஞ்சுக்கு நீதியும்’, ‘முருகா முருகா முருகா’ ஆகிய பாடல்களை பாரதியைப் போலவே இமிடேட் செய்து அபிநயித்துப் பாடுவார் எனக் கி.ரா சொல்கிறார்.
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச் சொல்கிறார்.
ராஜரத்தினம் பிள்ளையின் சீடர் காருகுறிச்சி அருணாசலம். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் வரும் ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலுக்கு நாயனம் வசித்தவர். இவரும் விளாத்திகுளம் சுவாமிகளிடம் இசை பயின்றுள்ளார். 1960 இல் கோவில்பட்டியில் சுவாமிகளின் மணிவிழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். விழாத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திரைப்பட இயக்குனர் ஏ.பி. நாகராஜன் நடிகர்கள் டி. கே. சண்முகம், டி.கே. சிவதாணு ஆகியோர் சுவாமிகளைப் புகழ்ந்து பேசினார். விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுவாமிக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
சுவாமிகள் பாவம் உணர்ந்து பாடுபவர் என்றும் அதனால் அவர் பாட்டுக்கு முக்கியமாக ராக விஸ்தாரத்துக்கு அபூர்வமான நயம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதன் சிறப்பினைக் கூறும் ரசிகமணி டி.கே.சி. அவரின் சங்கீதத் திறனைச் சங்கீத உலகம் சரிவர அங்கீகரிக்கவில்லை என வருந்துகிறார்.
தமிழ் சினிமாவின் முதல் படலாசிரியரான மதுரகவி பாஸ்கரதாசுக்கும் சுவாமிகளுக்குமிடையில் மிக நெருக்கமான நட்பு நிலவியது. மதுரைக்குச் சுவாமிகள் வந்தால் மங்கம்மா சத்திரத்தில் தான் தங்குவார். அங்குத் தங்கும் சுவாமிகளைச் சுண்ணாம்புக்காரத் தெருவிலிருக்கும் தம் வீட்டிற்கு அழைத்து பாஸ்கரதாஸ் விருந்து உபசரிப்பு செய்வார். நாகலாபுரம் பள்ளிவாசல்பட்டியில் உள்ள தம் சொந்த வீட்டில் சாமிகளை அழைத்துப் பாட வைத்து உபசரிப்பார். தன் இசைத்தட்டுகளைப் போட்டுக் காட்டுவார். வெளியூர் சென்று வந்தால் சுவாமிகளுக்குப் புத்தகங்கள் வாங்கிவருவார். யாருடனும் அதிக அளவு பேச்சு வைத்துக் கொள்ளாத சுவாமிகள் பாஸ்கரதாசுடன் மணிக்கணக்கில் உரையாடும் இயல்பு கொண்டிருந்தார் போன்ற செய்திகளை பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் குறிப்பிடுகின்றன.மேலும் சுவாமிகளுக்குப் பொருளாதார உதவி செய்யும் பொருட்டுச் சிவாகாசியில் தாமோதரன் என்பவரை வைத்து பாஸ்கரதாஸ் நாடகம் நடத்தியுள்ளார்.
ஏழிசை வேந்தர் எனப்புகழப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம். கே. தியாகராஜ பாகவதர், கொடுமுடி கோகிலம் கே. பி. சுந்தராம்பாள், திருமுருக கிருபானந்த வாரியார் போன்றோர் சுவாமிகள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர்.
கே.பி. சுந்தராம்பாள் போல் படக்கூடிய குருமாலை இலட்சுமியம்மாள் சுவாமிகளின் முக்கிய சீடர்களுள் ஒருவர். வி.எம். துரைராஜ் என்னும் தவில் கலைஞர், சோழவந்தான் ரெங்கையா, புதூர் சூசை என்னும் கிளாரிநெட் கலைஞர், வேம்பார் ராஜாமணி நாடார் போன்ற பலர் சுவாமிகளிடம் இசை பயின்றவர்கள். .
ஆற்றங்கரை ஜமீன்தார் பெத்தண்ண பூபதி, திண்டுக்கல் அங்குவிலாஸ் முதலாளி, சூரங்குடி முனியாண்டிப் பிள்ளை, சேலம் குலாலர் சங்கத் தலைவர் வள்ளியப்பச் செட்டியார், குலாலர் மட நிர்வாகி நடராஜன் போன்றோர் சுவாமிகளுக்கு உதவிய புரவலர்கள்.
சுவாமிகள் பற்றிய தம் அனுபவங்களைக் கி.ரா.வின் சங்கீத நினைவலைகள் நூல் பதிவு செய்கிறது. அவரின் விரிவான வரலாற்றை அரிய உழைப்பால் தொகுத்தவர் என்.ஏ.எஸ். சிவக்குமார் (இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள், அட்சரம் பதிப்பகம் வெளியீடு,) இன்று சுவாமிகளை மக்கள் தெய்வமாக வணங்கத் தொடங்கிவிட்டனர் என்றும் தங்கள் இல்லங்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு முதல் பத்திரிகையை சுவாமிகள் சமாதியில் வைத்து வணங்குகின்றனர் என்றும் பதிவு செய்கிறார். குறிப்பாக வாய்ப்பாட்டு, மிருதங்கம்,தவில், ஆர்மோனியம், வில்லிசைப் பயிற்சி பெறுவோர் சுவாமிகள் சமாதியில் அருளாசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது முக்கியமான செய்தி. சுவாமிகள் கரிசல் மண்ணின் இசை தெய்வம் ஆகிவிட்டார். . விளா, அத்தி என்ற இருவகை மரங்களால் சூழப்பட்ட குளம் உள்ள ஊர் விளாத்திகுளம் ஆனதைபபோல இசைக்குளமான சுவாமிகளின் வாழ்வில் கரிசல் இலக்கியப் பேராளுமைகளான கி.ராவும் கு.அழகிரிசாமியும் இடம்பெற்றுள்ளனர் எனலாம்.
“எப்படி இன்னொரு கிருஷ்ணாவதாரம் கிடைக்காதோ அப்படித்தான் இன்னொரு விளாத்திகுளம் சுவாமிகள் வரப்போவதில்லை” என்ற கி.ரா. வின் நெகிழ்வான சொற்களுடன் இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.
***
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
