நான் கத்தி வீரனான கதை ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்தது. என் மனைவியை பொறுத்தவரை நான் சொல்லும் கதைகளெல்லாம் டைனோசர்களின் காலத்தில் நடந்தவை தான். இத்தனைக்கும் அவளுக்கும் எனக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். அவளுக்கு என்னமோ நான் அவள் தாத்தாவுக்கு முந்திய தலைமுறை என்று நினைப்பு.
கதை என்னமோ பத்து வார்த்தைகள் கூட தாண்டாது. நான் ஐந்து வயதாக இருக்கும்போது என் அப்பாவை ஒரு சிறு கருக்கருவாளுடன் அம்மாவை அடித்ததற்காக வீட்டுக்குள்ளே துரத்தினேன் என்பதுதான் அந்த வீர வரலாறு. நாங்கள் அப்போது இருந்த வீடு ஒன்றும் பெரிய மாளிகை அல்ல. ஒரு ரயில்வே மெஷினிஸ்ட்டுக்கு என்ன ஏழு கட்டு வீடா கொடுப்பார்கள்? மூன்று அறைகளை சேர்த்து கட்டிய கருங்கல் வீடு. வெளியே குளியல் மற்றும் கழிவறை. திரும்பினாலே இடிக்கும். நான் அதற்குள் அவரை துரத்தி இருக்கிறேன்.
அப்பா ஏன் அம்மாவை அடித்தார் என்பதற்கெல்லாம் காரணமில்லை. அப்போதெல்லாம் அப்படித்தான். ஆண்கள் அடிப்பார்கள் பெண்கள் வாங்கிக் கொள்வார்கள். திருப்பி கொடுப்பவர்கள் கூட இருந்திருக்க கூடும். யார் கண்டார்கள்? நான் பார்த்ததில்லை. சண்டைக்கு வழக்கம் போல ஆயிரத்தி ஐநூறு காரணம் – ஏதோ சண்டை. ஒரு வேளை அம்மா குரல் உயர்த்தி பிள்ளைகளுக்கு சோறில்லாததை சொல்லியிருக்கலாம். குழந்தைகளின் வயிறுகள் வாடினால் யாருக்கென்றாலும் சொல்லத் தோன்றாதா என்ன? மரபுப்படி இதில் அம்மா வயிறெல்லாம் கணக்கில் இல்லை. இந்த அபாண்டத்தை கேட்ட அப்பா கடும் கோபத்தில் வெள்ளைக்காரன் காலத்து கருங்கல் சுவரை அம்மாவின் தலையைக் கொண்டு உடைக்க முயற்சி செய்தார். சுவர் எதிர்த்து நின்றதில் அம்மாவின் நெற்றியில் ரத்தம். தோளுக்கு மேல் வளர்ந்த என் அண்ணனும் அக்காக்களும் இந்த வழக்கமான நிகழ்வை கண்டு உறைந்திருந்தார்கள். நான்தான் அவிழ இருந்த டவுசரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கிடைத்த ஒன்றரை இன்ச் கறுக்கருவாளுடன் களத்தில் குதித்தேன். இளங்கன்று!
ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது. அப்பாவோ மடித்து கட்டிய வேட்டியும் கைவைத்த பனியனுமாக ஓடிக்கொண்டிருந்தார். பின்னால் கட்டை விரல் நீள கத்தியுடன் நான். கிட்டத்தட்ட தெலுங்கு அரசியல் படம்தான். ஒரு வழியாக என் அண்ணன் என் சட்டை காலரை பிடித்து குரங்கு குட்டியை தூக்குவது போல தூக்கி ஒரு மூலையில் வீசி சட்ட ஒழுங்கிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்ற சித்தாந்தத்தை நிலை நாட்டினார்.
ஆனால் அது முதல் என் அம்மாவுக்கு என் மேல் ஒரு துளி அதிகம் பிரியம் வந்துவிட்டது. பொறுங்கள்! அந்த பிரியத்தைப் பற்றிய உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் அடக்கி நிறுத்துங்கள். இதெல்லாம் வறுமையில் வாடிக்கொண்டிருந்த இந்தியா. வறுமையில் வாடும் குடும்பத்தில் கடைசி பிள்ளையெல்லாம் செல்லம் கொஞ்சியா வளர்ப்பார்கள்? ஏதோ சோத்துக்கு கேடு பூமிக்குப் பாரம். இதில் பிரியம் எல்லாம் ஒரு வேளை சோறு அம்மாவே ஊட்டினால் முடிந்தது. இல்லாவிட்டால் வழக்கம் போல அக்கம்மா தான் அன்னை.
அம்மாவுக்கு என் மேல் பிரியம் வந்த விஷயமெல்லாம் எனக்கு ரொம்ப பின்னால் தான் தெரியும். அதுவும் நான் குடும்பத்தோடு பூமி பந்தின் அந்த பக்கம் வந்த பிறகு. பிரியத்தை காட்டுவதென்றால் என்னவென்று நினைத்தீர்கள்? அம்மா குடும்பத்தில் யாரிடம் பேசினாலும் இந்த கதையை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் தடவையாக சொல்வார். “என்ன இருந்தாலும் சின்னவன் மாதிரி வருமா? நீ ஒரு போன் கூட செய்ய மாட்டேங்குறே!” என்று தொலைபேசியின் மறு முனையிலிருக்கும் என் உடன் பிறப்புகளை எரிமலையாக்குவார்.
இருந்தாலும் நாட்டில் யின்-யாங் தத்துவமும் உண்டுதானே? அம்மா இதை கொண்டு சில சமயம் என்னையும் பிளாக் மெயில் செய்வார். “சின்ன வயசில என் மேல் எவ்வளவு பாசமாக இருந்தே? இப்போ நட்டாத்துல விட்டுட்டு போய்ட்டே. எப்போ திரும்பி வருவே?” வாராவாரம் ஒரே கேள்வியை பல மாடுலேஷனில் கேட்பார். நான் என் அம்மாவை விட்டு வந்த நட்டாறு என் அண்ணன் வீட்டிலிருந்து இரண்டு நிமிட தூரத்தில் ஒரு குட்டி அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் இருந்தது. ஆற்றொழுக்கை என் அண்ணன் காலையிலும் மாலையிலும் வந்து மட்டுறுத்திக் கொண்டிருந்தார். “சின்னவன் அமெரிக்கா போனாலும் என் நினைப்பாவே இருக்கான். அவன் அஞ்சு வயசிலேயே எனக்காக கத்தி தூக்கினவன். நீ ஏதோ தெண்டத்துக்கு என்னை பாக்க வரே!” என்று அம்மா என் மீது பிரயோகித்த ஆயுதத்தின் மறு முனையை என் அண்ணன் மீது உபயோகிப்பார். அனால் என் அண்ணனோ புத்தருக்கே பொறுமையை கற்றுக்கொடுத்தவர். என் அண்ணிதான் இந்த கதையை கேட்டாலே என்னை கண்ணாலேயே எரிப்பார்.
கொஞ்ச காலம் கழித்து ஒரு சுபயோக சுபதின நாளில் நான் என் அண்ணனையும் அண்ணியையும் அமெரிக்காவுக்கு கூப்பிட்டேன். பாஸ்போர்ட், விசா மற்றும் இன்ன பிற சடங்குகளெல்லாம் முடிந்து அண்ணனும் அண்ணியும் வந்து சேர்ந்தார்கள். நான் குடும்பத்தோடு ஏர்போர்ட் போய் அழைத்து வந்தேன். “எவ்ளோ பெரிய ரோடு?”, “கார் வெண்ணை மாதிரி வழுக்குதில்ல?”, “ஹாரன் சத்தமே இல்லேல்ல?” போன்ற சங்ககால தேய் வழக்குகளெல்லாம் கேட்டு “இவங்களை என்ன சொல்லி கூப்பிடனும்?” என்று நூறாவது முறை கேட்ட சிறுசை ரகசியமாய் அடக்கி ஒரு வழியாக வீடு வந்தோம்.
வீட்டுக்குள் அண்ணி வந்தவுடனேயே காலுக்கு குறுக்கே ஓடிய என் வீட்டுப் பூனையைப் பார்த்து “இதென்ன இந்த பூனை இப்படி இருக்கு? முடியே இல்லாம? ஏதாவது பிரச்சினையா?” என்றார் தும்மியபடி. என் மனைவியோ “அதெல்லாமில்லை. இது கனேடியன் ஸ்பின்க்ஸ். ரொம்ப விலை அதிகம். இத்தோடு மூன்றாவது பூனை. என்னமோ தெரியல. எங்கள் வீட்டில் மட்டும் பூனை தங்கறதே இல்லை. அடிக்கடி காணாம போயிடுது” என்றாள். அண்ணி “கனடாவுக்கும் ஸ்பின்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்? பூனை குறுக்கே போன அப சகுனமுன்னு சொல்வாங்க. நீங்க என்னடான்னா பூனையை வீட்லேயே வளர்க்கிறீங்க” என்றார். ஏதோ சொல்ல வந்த என் மனைவியை நான் கண்களால் தடுத்துவிட்டேன்.
இரண்டு மாத திட்டத்தில் இரண்டு வார தூக்கத்திற்கு பிறகு ஒரு வழியாக உலகின் உன்னத நகரை சுற்றி பார்க்க போனோம். என் பொண்ணுக்கு ஏதோ படிக்க வேண்டியிருந்ததால் நான் மட்டும் அண்ணனையும் அண்ணியையும் கூட்டிக்கொண்டு போனேன். “இங்கே பிச்சையெல்லாம் உண்டா? என்ன வேற மாதிரி எடுக்குறாங்க?”, “இதென்ன ஒடம்புல பெயிண்ட் மட்டும்தானா? கருமம். நீ ஏன் இங்கெல்லாம் கூட்டிட்டு வர?” போன்ற பல வியத்தகு சம்பவங்களுக்கு பிறகு முக்கியமான தலங்களை தரிசித்து முடித்தபோது மாலை ஆறு மணி ஆகியிருந்தது.
“தலை வலிக்குது. நல்ல காப்பி வேணும். நீ குடிக்கிற கழனித் தண்ணியை வாங்கிறாத“ என்ற அறிவுறுத்தலின் பேரில் குவீன்சில் கும்மோணம் காபியை தேட ஆரம்பித்தோம். அதென்னமோ தேடும்போது மட்டும் காபி கடையை கண்ணிலேயே காண முடிவதில்லை. தேடுவது கிடைக்காது என்ற ஜென் தத்துவமெல்லாம் இப்படித்தான் ஜப்பானில் காபி கடையை தேடும்போது உதித்திருக்குமோ என்னமோ போன்ற ரூட்காஸ் அனாலிசிஸ் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஒருவாறாக கடையை கண்டு பிடித்தோம்.
காபி குடித்து வெளியே வரும்போது திடீரென இருட்டி விட்டது. அமெரிக்காவின் கால நிலையையும் கணவனின் நடத்தையையும் நம்பக் கூடாதென்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அண்ணிக்கு வெரிகோஸ் வெயின் காலை சுருட்ட நான் ரயிலுக்கு போக சுருக்கு வழியை தேட ஆரம்பித்தேன்.
“இதென்ன ஒரு தெரு திரும்பினாலே ஆள் அரவமே இல்ல?” என்று அண்ணி வியக்கும் போதுதான் அவன் வந்தான். ஆள் மாமிசமலை போல இருந்தான். கொள்ளையடித்து சாப்பிட்டால்தான் கட்டுப்படியாகும் போல. கழுத்திலும் கையிலும் இருப்பதை அவன் கேட்க, அண்ணி தர மறுக்க, அவன் பளபளவென ஆறங்குலத்தில் கத்தியை உருவினான். நான் கேட்ட கதையில் எல்லாம் நியூயார்க் திருடர்கள் துப்பாக்கி தான் கொண்டு வந்திருந்தார்கள். இவனோ துப்பாக்கி வாங்க காசில்லாத அளவுக்கு ஏழை போல. கத்தியின் உபயத்தில் நான் வாடிய பயிரைக் கண்ட வள்ளலாரானேன்.
அண்ணி தாலியின் முக்கியத்துவத்தை அவனுக்கு புரிய வைக்க முயல அவன் எங்களின் கலாச்சார விண்ணப்பங்களை கேட்கும் மன நிலையில் இல்லை. அண்ணனும் நானும் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தோம். கத்தியின் நீளம் அப்படி. கத்தி என் கழுத்தில் பதிந்தது. அண்ணி தாலியையும் கழட்ட தயாரானார். ஆனால் கடவுள் இருக்கான் கொமாரு என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப அந்த பக்கம் போலீஸ் ரோந்து வண்டி போக ஒரு விநாடியில் மாமிசமலை மறைந்தது. அண்ணி “வந்த அன்னிக்கே பூனை குறுக்கே போனப்பவே நான் ஏதோ நடக்கப் போகுதுன்னு நினச்சேன்” என்றார். கழுத்து தப்பியதற்கு எந்த சாமிக்கெல்லாம் மாலை சாத்த வேண்டும் என்ற காரசாரமான விவாதத்தோடு வீடு வந்தோம்.

அன்று இரவு சாப்பிட்ட பின் பாத்திரங்களை நான் சுத்தம் செய்யும்போது “என்னமோ நீ நல்லா கத்தி சுத்துவேன்னு சொன்னாங்க! ஆனா அப்படி ஒண்ணும் தெரியலியே?” என்று அண்ணி என் காலை வாரினார். நான் அண்ணியிடம் “கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா புலியும் எலிதானே? உங்களுக்கு தெரியாததா? நான் சுத்தமான அஃக் மார்க் புலி.” என் கற்றுக்குட்டி வார்த்தை விளையாட்டை நானே மெச்சியபடி கையிலிருந்த ஸ்பாஞ்சை காட்டினேன். “அதான் நான் வந்ததிலிருந்து உன்னை பார்க்குறேனே. பூனை கூட புலி இனம்தான்னு சொல்வாங்க இல்லே? அப்படி வேண்ணா வச்சிக்கலாம்.” என்று அண்ணி அதை முடித்து வைத்தார்.
தலையும், நகையும் தப்பியதல்லாமல் ஊரில் சொல்ல ஒரு கதையும் கிடைத்ததால் ஒரு சாமான்யன் இறும்பூதடைய மாட்டானா? நான் அனந்த சயனத்திற்கு ஆயத்தமானேன். ஆனால் வாழ்க்கை என்பது ஒரு ரோலர் கோஸ்டர் என்றறிக.
தலையணையை தட்டி போட்டபடி என் மனைவி “என்ன புலி இன்னும் சிரிக்குது?” என்றாள்.
“ஹேய்! அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது” புலியோ பூனையோ எதுவானாலும் பதுங்கத்தானே வேண்டும்?
“விளையாட்டா?அதான் உங்க அண்ணி சொன்னாங்களே நான் உன்னை கொடுமை படுத்துறப் பத்தி.” வேட்டைக்களம் ஒருங்கியது.
“அவங்க சும்மா கிண்டல் பண்றாங்க. நீ அதை சீரியஸா எடுத்துக்காதே.” நான் மேலும் பின்னடைந்தேன்.
“நீ கேட்டுட்டு சும்மாதானே இருந்த. வாயிலென்ன கொழுக்கட்டையா? வீட்டு வேலைல உதவி செய்யறதனாலே நீ ஒன்னும் கொறைஞ்சிட மாட்டேன்னு சொல்றதுதானே?” என் மனைவியின் கண்கள் மேலும் கூர்மை கொண்டன.
நான் அதைக் கவனிக்காமல் போனை நோண்டிக்கொண்டே “அண்ணி சொன்னதுக்கு நானா பொறுப்பு? அவங்க பார்த்ததை சொல்றாங்க” வார்த்தைகளில் வழுக்கினேன். படுக்கையில் ஒரு no man’s land உருவானது.
“ஓ! அப்போ நீயும் அப்படித்தான் நினைக்கிறே இல்லை?” புருவம் வில்லாகி கணை கொண்டது.
“சே.. அப்படில்லாம் இல்ல. அவங்க ஜெனரேஷன் வேற. நீயும் நானும் வீட்டு வேலைய சேர்ந்து செய்யறத அவங்க வேற மாதிரி பார்க்கலாம் இல்லையா?” நான் தர்க்கத்தை துணைக்கழைத்தேன்.
“அவங்க பொண்ணுக்கு நாளைக்கி கல்யாணமானா அவளையும் அவ புருஷனையும் இப்படித்தான் பார்ப்பாங்களா?” தர்க்கம் ஒரு பூமராங். அது திரும்பி வரும்போது பிடிக்கத் தெரியாவிட்டால் மூக்கில் ரத்தம் வரும்.
“தேவையில்லாம ஏன் சின்ன விஷயத்தை பெரிசாக்குற? நீ எப்பவுமே இப்படித்தான்” என்றேன் மூக்கை தடவியபடி.
“அப்போ நாந்தான் தேவையில்லாம சண்டை போடுறேன். நீ ரொம்ப அமைதியின் சொரூபம். அதான் நியூயார்க்கில திருடனை பார்த்தப்ப கூட ரொம்ப அமைதியா இருந்ததா கேள்விப்பட்டேன்” என் மூக்கை பார்த்தால் ஸ்பிங்ஸே சிரிக்கும்.
மறத்தமிழன் மனைவியிடம் தானே வீரத்தை நிரூபிக்க வேண்டும்? நான் கண்கள் சிவக்க “ஆமா. நீ ஆனாவூன்னா கேரக்டர் அஸ்ஸாசினேஷன் பண்ண ஆரம்பிச்சுரு. உன் நாக்கே கத்திதான்” என்றேன்.
“சும்மா பொத்தாம் பொதுவா பேசாத. நான் எப்போ உன்னை கேரக்டர் அஸ்ஸாசினேஷன் பண்ணேன்?”
நான் பரிட்சையில் பதில் மறந்த பையன் போல இல்லாத மூளையை கசக்கி ஒன்றும் பேராமல் “எனக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் ஒவ்வொண்ணா உன்னை மாதிரி ஞாபகம் வச்சிக்க முடியாது.” என்றேன்.
“நீ சொன்னது உண்மைன்னா இதுக்கு முன்னாடி எப்போ நடந்ததுன்னு சொல்லு. உனக்குத்தான் ஹிஸ்டரின்னா ரொம்ப புடிக்குமே.” மனைவியின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தன.
“எனக்கு ஞாபகம் வரலைன்னா நடக்கவே இல்லன்னு ஆயிராது. ஒரு ஜோக்கை கூட சாதாரணமா எடுத்துக்க முடியல”
“ஏன்? நீயும் உங்க வீட்ல இருக்கிறவங்களும் மத்தவங்களை புண்படுத்தாம ஜோக் சொல்றது?” வேட்டைக்களம் விரிந்தது.
நான் பின் வாங்கும் முயற்சியில் “இப்ப எல்லாரையும் ஏன் இழுக்கற? உனக்கு என்கூட தானே பிரச்சனை? உனக்கு வீட்டு வேலைல நான் ஏதாவது ஏதாவது பண்ணனும்னா நேரடியா சொல்ல வேண்டியதுதானே?” என்றேன்.
“அப்போ சொன்னாதான் செய்வியா? ரெண்டு பேரும் வேலைக்கி போனா வேலைய ரெண்டு பேரும் சேர்ந்து செய்யணும்னு தெரியாதா?”
“இப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போயே ஆகணும்னு என்ன தேவை இருக்கு?” நானாக போய் பொறியில் கால் வைத்தேன்.
“ஏயப்பா! உண்மை வந்துருச்சில்ல. அதாவது பொண்ணுண்ணா வீட்டிலேயே இருந்து எல்லாருக்கும் சேவை செஞ்சிகிட்டே இருக்கணும். ஆணாதிக்கம்! ஆம்பளைன்னா திமிரா இருக்கணும். அதானே?”
“ஆம்பளைத் திமிரா? நான் இப்போ என்ன பண்ணினேன்? கையா நீட்டினேன்?” பொறியில் மற்றுமொரு கால்.
“அது ஒண்ணுதான் கொறை. யாரோட ரத்தம்?” அம்பு வீசப்பட்டு விட்டது. அதுவும் பீலி விழியனே பின் வாங்கிய நாகாஸ்திரம்.
அம்பு நெஞ்சை நோக்கி வரும் கணத்தில் கண்ணில் தெரிவது உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல. தென்புலத்தாரில் தொடங்கி தென்திசை முதல்வன் வரை மொத்த நிரையும் மற்றும் அவர்களின் குறையும்தான்.
“I am sorry. நான் சொன்னது தப்புதான். நான் அப்படி சொல்லியிருக்க கூடாது” என்றேன் என் மனைவியின் மெட்டியை ரசித்தபடி.
“ஏதேது அதிசயம்! நீயா முதல்ல மன்னிப்பு கேட்டது?” இதழ்க்கோடியில் தெரிந்த இள நகையுடன் என் மனைவி no mans land ஐ தாண்டி வந்தாள்.
மறுநாள் மாலை என் மனைவி பூனைக்கு உணவு வைக்கும் போது அது நொண்டிக்கொண்டே வந்ததை கண்டு என்னிடம் “என்ன ஆச்சோ இதுக்கு? எங்கே போய் அடி பட்டு வந்திருக்கு. நல்ல வேளை. மத்த பூனை மாதிரி காணாம போகாம வீட்டுக்கு வந்துடுச்சே” என்றாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
Subscribe to get the latest posts sent to your email.

வாசிக்கையில் நமக்கு புன்னகை தரும் விதத்துடன் கத்தி வீரன் கதை உள்ளது. ஒரு தலைமுறையில் பெண்கள் குடும்பத்தினை ஆளும் விதம் மாறியுள்ளதை காண முடிகின்றது. காணாமல் போகாமல் வீடு வரும் பூனைகள் நொண்டிக் கொண்டாலும் வீடு சேர்கின்றன.