அடுத்த பரிணாமம்

“கடவுள் குறித்த ஆதாரம் காண ஒரு அரிய வாய்ப்பு. அதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இதர பொழுது போக்கு மற்றும் அறிவுத்தளங்களுக்கு நேரடியாகக் காட்ட, ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஏனைய தளங்களின் நிருபர்கள், செய்தி சேகரிப்பாளர்கள் ஹவாய்த் தீவுகளில் அமைந்துள்ள விண்வெளி உயர்த்துவான் தளத்துக்கு (Space Elevator Platform) வரும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

வானொலிச் செய்தி கேட்டு பரபரப்படைந்தாள் மட்டில்டா.

அவசர அவசரமாக, நிறுவனத்தின் அடையாள அட்டை, காமிராக்கள், லென்சுகள், மற்றும் மடிக்கணிணி ஆகியவற்றைத் தோள்ப்பையில் எடுத்துக்கொண்டு ஹவாய் தீவுக்கு, தன் பயன்பாட்டிற்கெனத் தரப்பட்டிருந்த ஒரு நபர் மட்டுமே பயணிக்கக்கூடிய விண்ணூர்தியில் பயணப்பட்டாள்.

சுமார் இரண்டு மணி நேர கால அவகாசத்துக்குப் பின், பாதுகாவல் சோதனைகள் (Security check) முடிந்து,  மற்ற எல்லா அனுமதிகளும் (Clearance) பெற்று விண்வெளி உயர்த்துவானுக்குள் (Space Elevator) அமர்த்தப்பட்டாள் மட்டில்டா. சீனர்கள் கட்டிய விண்வெளி உயர்த்துவான், சீன சிப்பந்திகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் மூலமாகவே முழுப் பயன்பாட்டில் இருந்தது. நூற்றைம்பது பேர் கொள்திறன் கொண்ட அந்த உயர்த்துவானில் வெறும் எழுபத்தி ஐந்து பேர் தான் அமர்ந்திருந்தனர் – அதுவும் ஒரு பக்கம் மட்டுமே. மற்றொரு பக்கத்தில் யாரும் நுழைய முடியாதவாறு மஞ்சள் நாடாவால் (Tape) தடுக்கப்பட்டிருந்தது. அதன் மத்தியில் இருக்கைகள் அகற்றப்பட்டபிறகு, அவற்றுக்கு பதிலாக, ஒரு மிகப்பெரிய, ஈயத்தாலான குடுவை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன் வெளிப்புறத்தில் ஒரு திரை, குடுவைக்குள் இருந்த பொருளை காமிரா மூலம் படம் பிடித்துக் காட்டியது. திரையில், ஒரு இரும்புச் சுவர் எங்கும் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அப்பியிருப்பது போல் தோன்றியது.

“என்னவாக இருக்கும்?” என்றாள் மடில்டா அருகாமையில் அமர்ந்திருந்த மற்றொரு நிருபரிடம்.

“ஏதோ ஒரு பூஞ்சை (Fungi)” என்ற அவர், “என் பெயர் ஸ்காட்” என்று சொல்ல மடில்டாவின் மென் கரங்களைப் பற்றிக்கொள்ள வாய்ப்பேற்படுத்திக்கொண்டார்.

“என் பெயர் மடில்டா” என்று பதிலளித்துச் சிரித்தவள், 

“கருப்பு நிறத்தில் பூஞ்சையா?” என்றாள் தெளிவின்மையுடன்.

“அப்படித்தான் தெரிகிறது” என்றார் ஸ்காட் தனக்குத் தெரிந்ததைப் பகிரும் எண்ணத்துடன்.

“ஒரு பூஞ்சைக்காகவா இத்தனை அக்கப்போரு” என்றாள் மடில்டா ஆச்சர்யத்துடன்.

“செர்னோபில்லில் (Chernobyl) வளர்ந்த பூஞ்சை என்று கேள்வியுற்றேன்” என்றார் ஸ்காட் மீண்டும்.

அதனைக் கேட்டமாத்திரத்தில் மடில்டாவுக்கு விழிகள் விரிந்தன. 

உயர்த்துவான் மெல்ல மேலெம்பியது. உண்மையில் அது மேலெழும்புவது போலவே இல்லை. மடில்டா, இருக்கையுடன் பிணைக்கும் அரைக்கச்சு (Belt) தன்னை இணைத்திருக்கிறதா என்று ஒரு முறை சோதித்துக்கொண்டாள். 

மேலே உயர உயர மெல்ல மெல்ல,தூரத்தில் தெரிந்த மிகப்பெரிய கடல் ஒரு சிறிய குளம் போல் சுருங்கித் தோற்றமளிக்கத்துவங்கியது. நீல நிறக் குளம். வெண்மை நிறத்தில் வெண் தாடி விளிம்புகள் கொண்ட குளம். உயர்த்துவான் உயர உயர, வெள்ளை நிற மேகம் குளத்தை மறைத்தது. உயர்த்துவான் தொடர்ந்து விண் நோக்கி உயர, பூமிப்பந்தின் வட்ட விளிம்புகள், பிரகாசத்துடன் தோன்றின. சூரியனின் வெளிச்சம் ஒளிவிலகல் மற்றும் பிரதிபலிப்பினால் பூமிப்பந்தின் விளிம்புகளைப் பிரகாசிக்கச்செய்திருந்தது. 

தொடர்ந்து மேலே செல்லச் செல்ல, விண்வெளியின் இருள் பரிச்சயமானது. கொஞ்சம் கொஞ்சம் அது வலுப்பெற்று அடர்ந்து ஒரு பாரிய கரும்பள்ளம் போல் தோற்றமளிக்கத் துவங்கிய நோடிகளில், மடில்டா ஈர்ப்பு விசைக் குறைவால் மெல்ல மிதந்தாள். இருக்கையை விட்டு அகண்டு அலைபாய்ந்த அவளை, அரைக்கச்சு இருக்கையுடன் பிணைத்து வைக்கப் பிரயத்தனப்பட்டது. உயர்த்துவானில் மெல்ல வேகம் குறைந்து மெல்லிய அதிர்வுடன் நின்றது. 

முதலில், பயணித்த எல்லோரையும் விண்வெளி நிலையத்தின் காவல் அதிகாரிகள் வெளியேற்றினார்கள். வெளியேற்றப்பட்ட எல்லோரும், விண்வெளி நிலையத்தின் காட்சி அறைக்கு வரவழைக்கப்பட்டனர். செயற்கை ஈர்ப்பு விசை உந்தப்பட்ட அந்த இடத்தில்  எல்லோருக்கும் விண்வெளியைப் பார்க்கும் வகையில் இருக்கைகள் தரப்பட்டிருந்தன. அவர்களது காமிராக்களை வைத்துக்கொள்ளவும் படம் பிடித்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு காமிராக்கள் பொருத்திக்கொள்ள நேரம் தரப்பட்டது.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி மடில்டா, தான் கொண்டு வந்திருந்த காமிராவைப் பொருத்திக்கொண்டாள். தொலைதூரக் காட்சிகளைத் தெளிவாகப் படமெடுக்கும் வகைக்குத் தோதான லென்சுகளைத் தெரிவு செய்து காமிராவில் இருத்திக்கொண்டாள். பின்னர், அக்காமிராவைத் தன் மடிக்கணிணியுடன் இணைத்தாள். எல்லாமும் சரியாக வேலை செய்கிறதா என்று சோதிக்க விண்வெளியை ஒரு புகைப்படம் எடுத்து மடிக்கணிணியில் அது சரியாக வந்திருக்கிறதா என்று சோதித்தாள். ஸ்காட் இங்கேயும் அவளருகே தன்னை இருத்திக்கொண்டிருந்தான்.

“கவனிக்க! விண்வெளியில் மாதிரி (sample) டிப்ளாய் செய்யப்படுகிறது” என்றொரு குரல் கேட்க, மடில்டா உள்பட எல்லோரும் ஆயத்தமானார்கள்.

மடில்டா புரிந்துகொள்ள இயலாமல்,

“கடவுள் குறித்த ஆதாரம் காட்டத்தானே அழைத்தார்கள். இப்போது, மாதிரி டிப்ளாய் என்கிறார்கள். நான் சரியாகத்தான் கேட்டேனா?” என்றாள் ஸ்காட்டிடம்.

“ஆம். நீங்கள் சரியாகத்தான் கேட்டீர்கள். அப்படித்தான் எனக்கும் கேட்டது” என்றார் ஸ்காட் தனது காமிராவின் லென்சுகளிடம் தந்த பார்வையை மீட்க விரும்பாமல்.

அவர் கவனச்சிதறலுக்கு இடமளிக்காமல் காரியத்தில் கவனமாய் இருப்பதை கவனித்துவிட்டு, தானும் தன் பங்கு வேலைக்குத் திரும்பினாள் மடில்டா. துரிதமாய் இயங்கி காமிராவை இயக்கினாள்.

அப்போது அவர்கள் தொலை தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட ஒரு பொருளை அவர்கள் தங்கள் காமிராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதைச் சற்று உண்ணிப்பாக கவனித்தவள், 

“செர்னோபில் பூஞ்சையா அது?” என்றாள் தன்னையுமறியாமள்.

“ஆம். கதிர்வீச்சில் எந்த உயிருமே வளராது என்று எண்ணியிருந்த நேரத்தில் கதிர் வீச்சையும் தின்று செரித்து வளர்ந்திருக்கிறது இந்தப் பூஞ்சை” என்றார் ஸ்காட் இப்போதும்.

சற்றைக்கெல்லாம் ஒரு அணுவெடிப்பு நிகழ, அந்த சிமென்ட் சுவர் விண்வெளியில் நாலா பக்கமும் சிதறடிக்கப்படுவதை அத்தனை காமிரா கண்களும் படமெடுத்துக்கொண்டன. 

தொடர்ந்து, 

“நிகழ்வு முடிவுற்றது. நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள், பூமிக்குத் திரும்ப, மீண்டும் உயர்த்துவான் தளத்திற்குத் திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றது அறிவிப்பு.

“என்ன? கடவுள் குறித்த ஆதாரம் எங்கே? காட்டிவிட்டார்களா? நீங்கள் பார்த்தீர்களா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, எல்லோரும் உதட்டைப் பிதுக்க, பார்வையாளர் அறையில் குழப்பமும், சலசலப்பும் கேட்டது.

“பார்வையாளர் அறையில் என்ன குழப்பம்?” என்று மீண்டும் ஒலிப்பெருக்கி வாயிலாகக் குரல் வர,

“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.

சற்று நேரம் ஒலிப்பெருக்கி  அமைதி காத்தது. பார்வையாளர்கள் அறையிலிருந்த அனைவரும் யாரேனும் பேசுவார்களா அல்லது அப்படியே விட்டுவிட்டார்களா என்ற குழப்பத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும், உதடுகளை பிதுக்கிக்கொண்டுமிருந்தார்கள்.

சிறிது நேரம் கழித்து,

“பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றின என்பது குறித்து என்ன தெரியும் உங்களுக்கு?” என்றது ஒரு குரல்.

“முதலில் நீங்கள் யார் பேசுகிறீர்கள்?” என்றாள் மடில்டா தைரியமாக.

“உங்களுக்குத் தேவை, பதில் மட்டும் தான் அல்லவா?” என்றது குரல்.

உதடுகளைச் சுழித்துவிட்டு,

“பூமியில் சுமார் எழுநூறு முதல் ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூஞ்சைகளின் வரவே உயிர்களைத் தோற்றுவித்தது என்பதற்கான சான்றுகள் நம்மிடையே உள்ளன என்று படித்திருக்கிறேன்” என்றாள் மடில்டா.

“நல்லது. இப்போது நாம் என்ன செய்தோம் என்று எண்ணுகிறீர்கள்?” என்றது குரல்.

“உக்ரைனின் செர்னோபில்லில் இருந்து பூஞ்சைகளை எடுத்து வந்து விண்வெளியில் பரவ விட்டிருக்கிறீர்கள். செர்னோபில்லில் கதிர்வீச்சையே தாங்கி வளர்ந்த பூஞ்சைகள், பிரபஞ்சத்தின் கதிர்வீச்சையும் தாங்கிக்கொண்டு பிரிதேதோவோர் கிரகம் செல்லும். அங்கே உயிர்களைத் தோற்றுவிக்கும்” என்றாள் மடில்டா.

“இப்போது புரிகிறதா?” என்றது குரல்.

“நாம் தான் புதிய கடவுளர்கள் என்கிறீர்களா?” என்றாள் மடில்டா சற்றே எக்காளத்துடன்.

“இது நகைச்சுவையாக அல்லவா இருக்கிறது” என்றாள் தொடர்ந்து.

சற்று நேரம், ஒலிப்பெருக்கி மெளனித்தது. அது ஏதோ ஒரு இழவிற்கு துக்கம் அனுஷ்டிப்பது போலிருந்தது. பின்,

“நீங்கள் புரிந்துகொள்ளவில்லை” என்றது குரல்.

மடில்டாவின் புருவங்கள் சுருங்கின. ‘என்ன?’ என்பதாய் ஒலிப்பெருக்கியையே பார்த்தாள் மடில்டா.

“பூமிக்கு ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்த பூஞ்சைகளை இப்படி, நமக்கு பல காலம் முன் வாழ்ந்த அதியுயர் வேற்று கிரக வாசிகள் அனுப்பியிருந்திருப்பின், அது அவர்களது கடைசி முறையாக இருந்திருக்காது. இல்லையா?” என்றது குரல்.

மடில்டாவின் கண்கள் இடமும் வலமும் துரிதமாக அசைந்தன.

“புரியவில்லையே?” என்றாள் மடில்டா.

“இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பூமிக்கு பூஞ்சைகள் வந்ததாய் நமக்கு ஆதாரங்கள் கிட்டவில்லை. சரிதானே?” என்ற குரலுக்கு,

“சரிதான்” என்று தான் மடில்டா சொல்ல வேண்டி இருந்தது. 

“இதன் பொருள் என்ன?” என்றது குரல்.

மடில்டா எதுவும் பேசத்தோன்றாமல் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்க, 

“ஒருக்கால் நாம் இப்போது செய்ததைச் செய்யாமல் இருந்து, பூமியின் மீது ஒரு விண்கல் மோதி பூமி அழிய நேர்ந்தால், இதே செர்னோபில் பூஞ்சைகள் வேறொரு கிரகம் சென்றடையும். ஆனால்,அப்படி அடைகையில்,அது பூமியின் அழிவின் தருணத்தில் வெளிப்பட்ட ஒரே மற்றும் கடைசி பூஞ்சை வெளிப்பாடாக இருக்கும். அல்லவா?” என்றது குரல்.

“பூமிக்கு பூஞ்சைகள் ஒன்றுக்கு மேற்பட்ட காலகட்டங்களில் வந்ததாய் ஆதாரங்கள் ஏதும் இல்லை. பூமியின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பூஞ்சைகள் பெரிதாக வேறுபடவில்லை. அதை வைத்துப் பார்க்கையில், பூமியை வந்தடைந்த பூஞ்சைகள், நம் போல், வேற்றுலக அதியுயர் வாசிகள் வேண்டுமென்றே அனுப்பியதாக இருக்க வாய்ப்பில்லை. இதன் பொருள் என்னவென்றால், அவர்களின் கிரகம் அழிவைச் சந்திக்கையில்,  வெளிப்பட்ட பூஞ்சைகளே நம் கிரகம் வந்தடைந்திருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும்” என்றாள் மடில்டா.

“இப்போது சொல்லுங்கள். எது அழிகிறதோ, அது கடவுளாகுமா?” என்றது குரல்.

“நிச்சயமாக இல்லை தான்” என்றாள் மடில்டா.

ஒலிப்பெருக்கியிலிருந்து அடுத்து என்ன கேட்கப்போகிறது என்று மடில்டா ஆர்வத்துடன் காத்திருக்க ஒலிப்பெருக்கி தொடர்ந்து மெளனித்தது. 

அதே நேரம், பார்வையாளர்கள் அறையின் கதவு திறந்து கொள்ள, விண்வெளி உயர்த்துவான் தளத்தின் கதவும் திறந்துகொண்டது. 

மடில்டா உள்பட, எல்லோரும் மெல்ல மெல்ல விண்வெளி உயர்த்துவான் தளத்தின் திறந்த கதவுகளினூடே அனுப்பப்பட்டனர். சற்றைக்கெல்லாம் விண்வெளி உயர்த்துவான் தளத்தின் கதவுகள் மூடிக்கொள்ள, உயர்த்துவான் மெல்ல மெல்ல கீழிறங்கத்துவங்கியது.

“என்ன எதுவும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்?” என்றாள் மடில்டா ஸ்காட்டிடம். 

“கடவுள் அழியாதவர் என்பதை  நிரூபிக்க வேண்டுமானால், பூஞ்சைகளின் வரவிற்குப் பின்னும், கடவுள்கள் ஜீவித்திருந்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும். மனிதர்கள், இப்போது அந்த ஆதாரத்தைத்தான் செயற்கையாக விண்வெளியில் பரவ விட்டிருக்கிறார்கள். இந்தப் பூஞ்சைகள் பிரிதொரு கிரகம் சென்றடைந்து, அங்கே உயிர்கள் உருவாகி, பரிணாம வளர்ச்சியடைந்து, அகழாய்ந்து தங்கள் கடவுளைத் தேடுகையில், கடவுள் அழிந்தாரா என்ற கேள்வியில் தான் வந்து நிற்பார்கள். அப்படி நிற்க நேர்ந்தால், மனித இனம் அழிந்ததாக இருக்கக் கூடாது என்பதற்கான ஆதாரத்தை இன்று விண்வெளியில் பரவச்செய்தாகிவிட்டது. நமக்கு முன் கடவுள் ஒரு உயிரின் ரூபத்தில்  இருந்தாரா என்பது தெரியாது. நமக்குப் பின் வரும் உயிர்களுக்கு நாமே கடவுளாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இன்று செய்துவிட்டார்கள்” என்றார் ஸ்காட். 

“கடவுள் குறித்த ஆதாரம் காண ஒரு அரிய வாய்ப்பு என்றார்களே?” என்றாள் மடில்டா, குழப்பத்துடன்.

“ஆமாம். ஆதாரம் உருவாக்கியாகிவிட்டது அல்லவா?” என்றார் அவர்.

***


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.