இரண்டடுக்குகளுடன் ஒரு மாபெரும் தீவைப்போலிருந்த HMS எண்டேவர் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மிதமான வேகத்தில் தஹிதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டு 12 நாட்கள் ஆகி இருந்தது.
HMS எண்டேவரில் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் அந்த முதல், அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கான முக்கியமான பயணம் 1768 முதல் 1771 வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்திற்கு வெளிப்படையான மற்றும் இரகசியமான நோக்கங்கள் இருந்தன. இந்தப்பயணத்துக்கான பல ரகசியக்கடல் வழிகளை குக் மட்டுமே அறிந்திருந்தார்.
இந்தப் பயணத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம் 1769-ம் ஆண்டு வீனஸ் கோள் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை (transit of Venus) பசிபிக் கடலின் நடுவில் உள்ள தஹிதி தீவிலிருந்து பார்ப்பது. இந்த நிகழ்வைப் பூமியின் பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பார்ப்பதன் மூலம், பூமியிலிருந்து சூரியனுக்கான தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என அறிவியலாளர்கள் நம்பினர்.
இந்த நிகழ்வை முடித்தபிறகு, தெற்கு நோக்கிப் பயணித்து, அப்போது நில வரைபடங்களில் இல்லாத, ‘டெரா ஆஸ்ட்ராலிஸ் இன்காக்னிட்டா’ (Terra Australis Incognita) என்று அழைக்கப்பட்ட பெரிய தெற்கு நிலப்பரப்பை குக் தேட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு அவரிடம் ரகசியமாகக் கூறியிருந்தது. அப்படி ஒரு நிலப்பரப்பைக் கண்டால், அதன் கடற்கரைகளை வரைபடமாக்கி, அங்குள்ள மக்களைப் பற்றி ஆய்வு செய்து, பொருத்தமான இடங்களை இங்கிலாந்திற்காக உரிமை கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கப்பல் மறுநாளிலிருந்து வேகமெடுக்கும் என்னும் அறிவிப்பைத் தொடர்ந்து முந்தைய நாள் அவர்கள் புதிதாகக் கண்டடைந்த தீவு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்னும் சத்திய பிரமாணத்தை கப்பலில் இருந்த 95 பேரும் எடுத்துக் கொண்டார்கள். பிறகு மதிய உணவுக்காக அனைவரும் கூடினார்கள்.

வழக்கமாக உணவுண்ணும் கீழ்த்தளத்து உணவுக்கூடத்திலல்லாமல் கப்பலின் கமாண்டர் ஜேம்ஸ் குக் ஆணையிட்டபடி அன்று கப்பலின் மேல் தளத்தில் திறந்த வெளியில் மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலுமிகளுக்கும் பிற அதிகாரிகளுக்குமான மேசைகள் நடுவிலும், அதைச்சுற்றி நீள் வட்ட வடிவில் மற்றவர்களுக்கான மேசைகளும் போடப்பட்டிருந்தன. அவரவருக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு அமர்ந்த பின்னர் கமாண்டர் குக் தலைமை சமையைல்காரரை அழைத்து ’’அதைக் கொண்டு வந்து அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டும் பரிமாறுங்கள்’’ என்று சொன்னதும் அழகிய சிறு தட்டுகளில் புளித்த முட்டைகோஸான ’சாவெர்கிராட்’ பரிமாறப்பட்டது.
குக் அதைச் சுவைத்துப் பார்த்து விட்டு உரத்த குரலில் ’’ஆஹா! என்ன அற்புதமான சுவை’’ என்று பாராட்டினார். அதைச் சாப்பிட்ட அனைவருமே அதன் சுவையையும் அதனால் உண்டாகவிருக்கும் உடல் நலனையும் வெகுவாகப் பாராட்டினர்.
மற்ற வீரர்களும் பயணிகளும் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தனர். ஒருவாரத்தில் அந்தப் புளித்த முட்டைகோஸ் உணவான ’சாவெர்கிராட் அந்தக் கப்பலில் இருக்கும் உயரந்தஸ்து கொண்டவர்களுக்கானது என்பது கப்பல் முழுக்க பேசு பொருளானது.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு வீரர் மட்டும் குக்கிடம் எனக்கும் ’சாவெர்கிராட்டைத் தருவீர்களா என்று கேட்டார். குக் மிகவும் சலித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து ’’பொதுவாக இந்த ஆற்றல் அளிக்கும் உணவு உயரதிகாரிகளுக்கு மட்டும் தான் இருந்தாலும் நீ கேட்பதால் கொஞ்சம் தரச் சொல்கிறேன்’’ என்று அவனுக்கு அதைக் கொடுக்கச் சொன்னார். கப்பலில் அவனுடைய மரியாதை கிடு கிடுவென உயர்ந்தது. ’சாவெர்கிராட் உண்பது உயரதிகாரிகளுக்கிணையான அந்தஸ்தை அளிப்பது என்னும் எண்ணம் உருவாகி வளர்ந்து அனைவரும் அதைச் சாப்பிட விரும்பிக் குக்கிடம் வேண்டிக்கொண்டார்கள். பின்னர் ’சாவெர்கிராட் அனைவருக்கும் அன்றாடம் அளிக்கப்பட்டது.
அந்த மாபெரும் கப்பல் புறப்படுகையில் அதில் 8000 பவுண்டு ’சாவெர்கிராட்’ (sauerkraut) எனப்படும் நொதித்த முட்டைக்கோஸ் அடைக்கப்பட்டிருந்த பீப்பாய்கள் ஏற்றப்பட்டிருந்தன. பல காரணங்களால் அதைச் சாப்பிட விரும்பாத பிரிட்டிஷ் வீரர்களை, அதை விரும்பிச் சாப்பிட வைக்கத்தான் கமாண்டர் ஜேம்ஸ் குக் இந்த நாடகத்தை நடத்தினார்.
18 -ம் நூற்றாண்டு கடற்பயணிகளுக்கு நீண்ட கால கடற்பயணத்தில் சத்தான புதிய காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளின் பற்றாக்குறையால் ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் சி குறைபாட்டால் உண்டாகும் நோய்த் தொற்று தவிர்க்க முடியாததாக இருந்தது.
வைட்டமின் சி குறைபாடு நீண்ட நாட்களுக்கு நீடித்தால் இந்த நோய் வரும். பழங்காலத்தில், நீண்ட கடல் பயணங்களுக்குச் செல்லும் மாலுமிகளுக்கு இது ஒரு பொதுவான மற்றும் ஆபத்தான நோயாக இருந்தது. ஏனெனில், நெடுங்காலம் கடலில் பயணிக்கும் அவர்களின் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்காது.
மனித உடல் வைட்டமின் சி-யை தானாக உற்பத்தி செய்யாது. எனவே, வைட்டமின் சி-யை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். வைட்டமின் சி, கொலாஜன் (collagen) என்ற புரதத்தை உற்பத்தி செய்ய மிகவும் முக்கியமானது. இந்தக் கொலாஜன் மனிதர்களின் தோல், ஈறுகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள் போன்ற இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கியமான கட்டுமானப் பொருளாகும்.
வைட்டமின் சி குறைபாடு ஏற்படும் போது, கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்த திசுக்கள் பலவீனமடைகின்றன. இதுவே ஸ்கர்வி நோய்க்கு வழிவகுக்கிறது.
கண்கள் பிதுங்கி, சருமம் செதில் செதிலாக உரிந்து ரத்தம் கசிந்து, கேசம் வறண்டு போவது ஆகியவை ஸ்கர்வியின் விளைவுகள். நூற்றண்டுகளாகக் கடல் போரிலும். கப்பல் விபத்துகளிலும், கப்பலில் பரவும் பிற நோய்களிலும் இறந்தவர்களைக் காட்டிலும் ஸ்கர்வியினால் இறந்தவர்களே அதிகம்.
பல காலமாக மாலுமிகள் கப்பலில் திரியும் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு எலியின் உடம்பில் தானாகவே உருவாகி இருக்கும் வைட்டமின் சி யை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவியலாளர் மற்றும் வரைபட நிபுணரான ஜேம்ஸ் குக் ஸ்கர்விக்குத் தீர்வு காணத்தான் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய, நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடிய ’சாவெர்கிராட்’ எனும் முட்டைக்கோஸ் உணவைக் கப்பலில் ஏராளமான பீப்பாய்களில் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கடற்பயணத்தில் கேப்டன் குக்கிற்கு பிரச்சனையாக இருந்தது ஸ்கர்வி மட்டுமல்ல ’தார்கள்’ என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் (தார்பாலின் துணிகளாலான ஆடைகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணிவதால் அவர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்) தாங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்ததும் அவருக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிரிட்டிஷ் வீரர்கள் அவர்களின் வழக்கமான உணவான செங்கல்லின் அளவு கொண்ட, மிகக்கடினமாக இருக்கும் பிஸ்கெட்டுக்களையும் உப்பிலிட்ட பன்றி இறைச்சியையும் மட்டுமே சாப்பிட்டார்கள்.

ஜெர்மெனி பாணியிலிருந்த முட்டைக்கோஸ் ஊறுகாயான ’சாவெர்கிராட்’டை சாப்பிடுவதில் அவர்களனைவருக்கும் விலக்கமும், புதிய உணவான அதைக் குறித்த சந்தேகமும் இருந்தது . அவர்களில் பலருக்கு ஸ்கர்வி தொற்று உருவாகி இருந்தாலும் அந்த விநோதமான, கடும் நெடிகொண்ட முட்டைக்கோஸை சாப்பிடுவதைக் காட்டிலும் ஸ்கர்வியின் பாதகங்களே பரவாயில்லை என்னும் மனநிலையில் இருந்தார்கள்.
நேரடியாக ’சாவெர்கிராட்’டை சாப்பிடச்சொல்லி ஆணையிட்டால் அவர்கள் மறுத்து ஒரு கிளர்ச்சியோ, எதிர்ப்போ கப்பலில் உண்டாவதற்கான சாத்தியங்களை அறிந்திருந்த கேப்டன் குக் இந்த உளவியல் நாடகத்தை நடத்தி அனைத்து வீரர்களும், ’சாவெர்கிராட்’டை சாப்பிடும்படி செய்தார்.
கட்டாயப்படுத்தியிருந்தால் தண்டனையாகிப் போயிருக்கும் விஷயத்தைக் குக் பெருமைக்குரியதொன்றாக மாற்றிவிட்டார். அந்தப்பயணம் முழுக்கவே ஸ்கர்வியை குணமாக்கும் வைட்டமின் சி கொண்டிருக்கும் அந்த உணவு அனைவருக்கும் அன்றாடம் வழங்கப்படுவதை குக் உறுதி செய்தார் அதன் விளைவு அற்புதமாக இருந்தது. மூன்றாண்டுகள் நீடித்த அந்த முதல் கடற்பயணத்தில் ஒரே ஒருவர் கூட ஸ்கர்வியினால் இறக்கவில்லை.
இதுமட்டுமல்லாது குக் கப்பலில் சுத்தம் பேணப்படுவதற்கும் மிகவும் முக்கியமளித்தார் போர்வை உள்ளிட்ட படுக்கையறைத் துணிகள் அவ்வப்போது வெயிலில் உலர்த்தப்படுவதை குக் கட்டாயமாக்கியிருந்தார்.
சாவெர்கிராட் மட்டுமல்லாமல் இறைச்சிப்பசையை கலந்து தயாரிக்கும் உடனடி சூப், பார்லிச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றையும் அன்றாட உணவில் இடம்பெறச்செய்திருந்தார். எந்தத் தீவில் கப்பல் நின்றாலும் அங்கிருந்து புத்தம் புதிய காய்கறிகள் கிழங்குகள், பழங்கள் மற்றும் இறைச்சியை முடிந்தவரை கப்பலில் ஏற்றிக்கொண்டார் குக்.
குக் தனது கப்பலில் இருந்தவர்களின் உடலாரோக்கியத்தை சாவெர்கிராட் அளித்துப் பாதுகாப்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டிக்கு சமர்ப்பித்தார். நூற்றாண்டுகளாக இருந்து வந்த, பல லட்சம் மாலுமிகளின் உயிரைக் காவு வாங்கிய ஸ்கர்வி நோய்க்கு இந்த எளிய நொதித்த முட்டைகோஸைக் கொண்டு கேப்டன் குக் தீர்வு கண்டதற்காக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் அறிவியல் சாதனைகளுக்காக அளிக்கப்படும் பிரசித்தி பெற்ற ’கோப்லே பதக்கம்’ அளிக்கப்பட்டது. சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரும் இந்த விருது பெற்றிருக்கிறார்கள்.
எனினும் ஸ்கர்வியை சாவெர்கிராட் குணப்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்தது கேப்டன் குக் அல்ல. நூற்றாண்டுகளாகவே ஸ்கர்விக்கான தீர்வுகளுக்கு ஆய்வுகள் நடந்தவண்ணமிருந்தன.
1622-ல் கடலாய்வாளர் ரிச்சர்ட் ஹாக்கின்ஸ் ’’ஸ்கர்வியை எலுமிச்சை குணப்படுத்தும், யாரேனும் இதை ஆராய்ந்து எழுதலாம்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஒரு நூற்றாண்டு கழித்து 1730-களில் அரசுக் கடற்படையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் லிண்ட்’தான் ஸ்கர்விக்கு தீர்வளித்தார். 1742-ல் ஸ்கர்வியினால் பாதிக்கப்பட்டிருந்த 12 கடற்பயணிகளுக்கு தொடர்ந்து வைட்டமின் சி இருக்கும் உணவுகளைக் கொடுத்து அவர்கள் குணமானதை ஆதாரத்துடன் லிண்ட் நிறுவினார். 1753-ல் அவரது ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு லிண்ட் எழுதிய , A Treatise on the Scurvy, என்னும் நூல் வெளியானது என்றாலும் அந்த வழிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. அதை ஜேம்ஸ் குக் முயற்சி செய்யவே மேலும் இருபதாண்டுகள் ஆயின.
கடற்பயண நோய்களுக்கான சிகிச்சை உணவுகளில் கேப்டன் குக் அறிமுகம் செய்த இந்தப் புளித்த முட்டைக்கோஸான சாவெர்கிராட் பின்னர் வெகுவாகப் பிரபலாமானது.
கேப்டன் குக் உண்மையில் இந்த சாவெர்கிராட் ஸ்கர்வியை குணப்படுத்தும் என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் செய்திருக்கவில்லை. பயணிகளின் நல்வாழ்வில் அவருக்கிருந்த அக்கறையினால் தான் இதை அவர் செய்தார். அதன் பிறகு சாவெர்கிராட்டில் பல ஆய்வுகள் நடந்து அதன் பல பயன்கள் வெளிச்சத்துக்கு வந்தது. பிரிடிஷ் கடற்படையிலிருந்தே ஸ்கர்வி முற்றிலும் நீங்கியது
ஐரோப்பாவையும் அண்டோலியா தீபகற்பத்தையும் சேர்ந்ததுதான் முட்டைக்கோஸ் என்றாலும் ஜெர்மானிய மொழியில் புளித்த முட்டைக்கோஸ் என்று பொருள் படும் சாவெர்கிராட் (sauer -sour -kraut -cabbage)) ஐரோப்பிய உணவல்ல. இதன் வரலாறு சீனாவிலிருந்து தொடங்குகிறது.
2500 வருடங்களுக்கு முன்னர் சீனப்பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடுங்குளிர் காலத்திலும் உணவைச் சேமிக்க முட்டைக்கோஸை உப்பிலிட்டு ஊறவைத்த ஊறுகாயைக் கண்டுபிடித்தார்கள். சீனாவுக்குள் ஊடுருவிய செங்கிஸ்கானின் படையில் இருந்த மங்கோலிய நாடோடிகள் இந்த ஊறுகாயை அரிசி மதுவிலிருந்து தயாரித்த வினிகரில் ஊற வைத்து மேலும் பல மாதங்களுக்கு முட்டைகோஸ் கெட்டுப் போகாமலிருக்கும் வழியைக் கண்டறிந்தார்கள்.
ரோமானியர்களும் மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த ‘செல்ட்ஸ்’ (Celts) பழங்குடிச் சமூகத்தினரும் ஐரோப்பா முழுவதும் இந்தப் புளித்த முட்டைக்கோஸை அறிமுகம் செய்தார்கள். 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய சாம்ராஜ்யம் ஐரோப்பாவுக்குள் விரிந்த போது பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அரிசி மதுவின் வினிகரில் ஊற வைத்த முட்டைக்கோஸ் ஊறுகாயும் இருந்தது.
அறிமுகமானதோடு கிழக்கு ஐரோப்பியர்களின் உணவிலும் இது முக்கிய இடம் பிடித்தது. இந்த முட்டைக்கோஸ் ஊறுகாயை ஊற வைக்க அரிசி மது வினிகர் ஐரோப்பாவில் அச்சமயத்தில் இல்லாததால் லேக்டிக் அமில நொதித்தலுக்கு அதை உட்படுத்தி மேலும் காரமானதாகக் கடும் நெடி கொண்டதாக அதை மேம்படுத்தி இப்போதிருக்கும் இந்த சாவெர்கிராட் வடிவம் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது.
இந்த சாவெர்கிராட் இலையுதிர் காலத்தில்தான் ஐரோப்பாவில் தயாராகிறது. கோடைக்காலம் முடிகையில் முழுக்க அறுவடையாகி இருக்கும் முட்டைக்கோஸ்கள் சாவெர்கிராட் ஆகக் குறுகிய காலத்திலேயே தயாரிக்கப்பட்டு பின்னர் மாதக்கணக்கில் ஊறிக் கொண்டிருக்கும்.
ஐரோப்பியர்கள் காய்கறிகள் கிடைக்காத குளிர்காலத்திற்கான உணவாகவும், அந்தப் பருவம் முழுவதும் ஆற்றல் அளிக்கும் சுவையான உணவு தடையின்றி கிடைக்கவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட, நீடித்த அலமாரிவாழ்வு கொண்டிருந்த இந்த சாவெர்கிராட்டையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். 1960-களிலிருந்து ஜெர்மனியின் பிரதான உணவாக ஆகிவிட்டிருக்கும் சாவெர்கிராட் அங்கு சூப்பர் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
உலகப்போரின்போது ஜெர்மானியப் போர்க்கப்பல்களில் சாவெர்கிராட் எப்போதும் நிறைத்துக் கொண்டு வரப்பட்டதால் ஜெர்மானிய வீரர்களின் செல்லப் பெயராகவே ’க்ராட்’ என்பது இருந்தது. சாவெர்கிராட் என்னும் ஜெர்மானியப் பெயரால் அமெரிக்க வீரர்கள் இதை விரும்பாமல் போகக் கூடுமென்பதால் முதலாம் உலகப்போரின்போது சாவெர்கிராட் அமெரிக்கர்களுக்கு ’லிபர்டி முட்டைக்கோஸ்’ என்னும் பெயரில் அளிக்கப்பட்டது.
ஐரோப்பியக் குடியேறிகளால் 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகமான இந்த சாவெர்கிராட் இப்போதுவரை அமெரிக்க உணவுகளில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
ஐயோவாவில் ’சாவெர்கிராட் நாள்’ பல நகரங்களில் வேறு வேறு நாட்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது அப்பலேச்சியன் மலைப்பகுதிகளின் முட்டைக்கோஸ் நடவு மற்றும் அறுவடை ஆகியவை ஜோதிடத்தின் அடிப்டையிலேயே நடக்கிறது. சாவெர்கிராட்டை தேய்பிறையில் தயாரித்தால் அது கெட்டுப் போய்விடும், வளர்பிறையில்தான் தயாரிக்க வேண்டும் என்னும் நம்பிக்கையும் அங்கு இருக்கிறது.
அப்பகுதி முழுவதும் முட்டைக்கோஸ் அறுவடை நாளில் நாம் தீபாவளிப் பலகாரம் செய்வது போல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாவெர்கிராட்டைத் தயாரித்து அவரவர் வீடுகளுக்கு அவரவர் பங்கைக் கொண்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது. அதன் சுவையும் அதிலிருக்கும் சத்துக்களாலும் அமெரிக்க சூப்பர் உணவுகளின் பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பது இந்த சாவெர்கிராட் தான்.
பென்சில்வேனிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சாவெர்கிராட்டை பன்றி இறைச்சியுடன் உண்பது நெடுங்கால மரபாக இருக்கிறது. பால்டிமோர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் நாள் விருந்துகளிலும் சாவெர்கிராட் தவறாமல் இடம் பெறுகிறது
தயாரிக்கும் முறை

நல்ல அழுத்தமாகக் கடினமாக இருக்கும் பச்சை நிற புத்தம் புதிய முட்டைகோஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு சிலர் ஊதா முட்டைக்கோஸையும் உபயோகப்படுத்துகிறார்கள்.
பின்னர் முட்டைக்கோஸ் நீள நீளமாக ஒரே அளவிலான பட்டைகளாகச் சீவப்படுகிறது. ஒரு கிலோ முட்டைகோஸுக்கு 2% என்னும் அளவில் (அயோடின் இல்லாத) உப்பு சேர்க்கப்படுகிறது. பின்னர் இந்தக் கலவை ஒரு அகலமான (உலோகமல்லாத) பாத்திரத்தில் கொட்டப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குக் கைகளால் பிசைந்து பிழியப்படுகிறது.
அப்படிச்செய்கையில் முட்டைக்கோஸ் செல்களின் சுவர் உடைந்து அதன் சாறு வெளியே வருகிறது. இப்போது இந்தக் கலவை பாதி திரவ நிலையில் இருக்கும்.

பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் இந்தக் கலவையைக்கொட்டி கைகளால் இடைவெளி இல்லாமல் நன்றாக அழுத்தி நிறைக்க வேண்டும். இப்படி அழுத்துகையில் முட்டைகோஸ் துண்டுகள் பாட்டிலின் அடியிலும் அதிலிருந்து வெளியே வந்த சாறு மேலே அதனை மூடியும் இருக்கும்படி நிறைக்க வேண்டும்
சாற்றில் மூழ்காமல் ஒரே ஒரு முட்டைக்கோஸ் துண்டு வெளியே தெரிந்தாலும் அதில் பூஞ்சைக்காளான் தொற்று உண்டாகி விடும். எனவே முட்டைக்கோஸ் முழுமையாகச் சாற்றில் மூழ்கும் வரை பொறுமையாக இந்தச் செயல் செய்யப்படுகிறது.
ஜாடி அல்லது பாட்டிலின் வாயைச் சுத்தமான மெல்லிய துணியால் கட்டி நொதித்தலின் போது உள்ளிருந்து வெளியாகும் வாயு வெளியேற வசதியாக இறுக்கமாக இல்லாமல் சற்றுத் திறந்திருக்கும்படி மூடப்படும்இந்த பாட்டில் நல்ல காற்று இருக்கும், இருட்டான, குளிர்ந்த இடத்தில் 15-24°C வெப்பநிலை இருக்கும்படி வைக்கப்படுகிறது.
மற்ற நொதித்தலுக்கு தேவைப்படுவதைப் போல இதற்கு starter culture எனப்படும் நொதித்தலைத் துவக்கும் நுண்ணுயிர்கள் தேவையில்லை முட்டைகோஸிலேயே இந்த நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்கள்தான் முட்டைகோஸின் மாவுச்சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றி சாவெர்கிராட்டின் பிரத்யேக புளிப்புச் சுவையை அளிக்கிறது
இந்த முட்டைக்கோஸ் உப்புக் கலவையில் நொதித்தல் நடந்து முடிய 3 நாட்களிலிருந்து பல வாரங்களாகும். இந்தக் காலத்தில் நன்கு நொதித்தல் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறிகளான கலவையின் மீது வெண்ணிறத் திரை உருவாதல், குமிழிகளும் நுரையும் வெளியேறுதல் ஆகியவை நடைபெறும். இளஞ்சிவப்பு நிற அழுக்கு உருவாகி மிதக்கையில் அது உடனே அகற்றப்படுகிறது.
தேவையான அளவு நொதித்தல் நடந்ததை உறுதிப்படுத்திய பின்னர் பாட்டில் நன்கு இறுக்கமாக மூடப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலையில் சாவெர்கிராட் சேமிக்கப்படுகையில் நொதித்தல் மேலும் நடக்காமல் தேவையான அளவில் அதன் சுவையும் மணமும் தங்கி நிற்கும்.
இதன் நன்மைகள்
நொதித்தலில் லேக்டோபேசில்லஸ் உள்ளிட்ட ஏராளமான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாவதால் இதை ஒரு Probiotics ஆக உபயோகிக்கலாம். நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் இது வெகுவாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே, இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிறைந்திருக்கிறது.
நாம் உண்ணும் பிற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக உறிஞ்சிக்கொள்ள இதிலிருக்கும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. முட்டைக்கோஸில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நொதித்தலின்போது மேலும் மேம்படுத்தப்படுவதால் புற்றுநோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல நலன்களும் கிடைக்கின்றன
- கொரியாவில் முட்டைகோஸ், முள்ளங்கி, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நொதிக்கச் செய்த கிம்சி-(Kimchi)
- முட்டைகோஸ், கேரட், வெங்காயம், ஓரிகேனோ, ஜலபினோ ஆகியவை கலந்து நொதிக்கச் செய்து pupusas எனப்படும் சோளமாவும் பாலடைக்கட்டியும் கலந்த ஒரு உணவுடன் சேர்ந்து உண்ணப்படும் எல் சால்வடோரின் கர்டிடோ-(Curtido)
- சீனாவின் கடுகு முட்டைக்கோஸை உப்புச்சேர்த்து நொதிக்கச் செய்து கிடைக்கும் சுவான் காய் -(Suan Cai)
- முட்டைக்கோஸுடன் இறைச்சி, உருளைக்கிழங்கு சேர்த்து நொதிக்கச் செய்து சாஸுடன் கலந்து உண்ணப்படும் ஃப்ரான்ஸின் சவுர் க்ரேட்- (Choucroute)
என இந்த சாவெர்கிராட் பல நாடுகளில் சிற்சில வேறுபாடுகளுடன் வேறு வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கிறது.
சாவெர்கிராட்டை பாஸ்டுரைஸ் செய்யாமல் உண்ணும் போதுதான் இதன் பலன்கள் கிடைக்கிறது. பாஸ்டுரைஸ் செய்யும்போது கொடுக்கப்படும் வெப்பம் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது.
சாவெர்கிராட் பல நாடுகளின் முக்கிய உணவாகியிருப்பதற்கு முக்கிய காரணமாயிருந்த ஜேம்ஸ் குக் அவரது இரண்டாம் கடற்பயணத்தில் 98 பீப்பாய்களில் 36000 பவுண்ட் சாவெர்கிராட்டை எடுத்துச் சென்றார்.
துரதிர்ஷ்டவசமாகக் குக்கின் இறுதிப்பயணமுமாகி விட்டிருந்த மூன்றாவது பயணத்திலும் சாவெர்கிராட் ஏராளமாக எடுத்துச்செல்லப்பட்டது. குக்கின் HMS ரிசல்யூஷன், HMS டிஸ்கவரி ஆகிய இரண்டு பெருங்கப்பல்களில் பல்லாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது அந்த மூன்றாம் கடற்பயணம். 1779-ல் பழுதுகாரணமாக மாதக்கணக்கில் ஹவாய் தீவுகளிலேயே இரு கப்பல்களும் நிலை கொண்டிருந்தன.
ஹவாய் பழங்குடியினர் கேப்டன் குக்கின் குழுவினரை மரியாதையாக வரவேற்று உபசரித்தார்கள் என்றாலும் மாதக்கணக்காக பெருந்திரளான கப்பற்பயணிகளுக்கு உணவளிக்க வேண்டி இருந்ததும், கடற்பயணிகளால் பழங்குடியினப் பெண்களுக்கு பால்வினை நோய்கள் உருவாகி இருந்ததும் அவர்களைக் கோபம் கொள்ளச்செய்திருந்தது.
எனவே முதலில் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை அளிக்க ஹவாய் பழங்குடியினர் மறுத்தார்கள். குக்கின் குழுவினர் பலவந்தமாக பல மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டதும், மயானங்களில் இருந்த வேலிகளையும், ஹவாய் பழங்குடியினச்சமூகத்தின் தொல்மரபில் முக்கியமானவைகளாகக் கருதப்பட்ட மரச்சிற்பங்களை உடைத்து எரிவிறகாகக் கொண்டு சென்றதும் அவர்களை ஆத்திரமூட்டியது.
எனவே பழங்குடியினர் மாதக்கணக்காக நின்றுகொண்டிருந்த கப்பலிலிருந்து இரவில் சில பொருட்களைத் திருடினால் பாதுகாப்பின்மை காரணமாகக் கப்பல்கள் அங்கிருந்து புறப்படும் என நம்பினார்கள். 1779 பிப்ரவரி 13 அன்று இரவு டிஸ்கவரி கப்பலிலிருந்து ஒரு நீள் படகு ஹவாய் பழங்குடியினரால் திருடப்பட்டது.
கோபமடைந்த குக் முந்தைய பயணங்களில் செய்தது போலவே பழங்குடியினத் தலைவரைச் சிறைப்பிடித்து பதிலுக்குத் திருடப்பட்ட கப்பலைப் பெறும் திட்டத்தில் இறங்கினார். ஒரு சிறு குழுவினருடன் குக் பழங்குடியினத் தலைவரை கைது செய்துகொண்டு வர தீவுக்கு சென்றார்.
ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த அவர்கள், தலைவர் கைதியாக பிடிக்கப்பட்டபோது பொறுமை இழந்தார்கள்
1779 பிப்ரவரி 14 அன்று பணயக்கைதியாக குக்கினால் பிடிக்கபட்ட பழங்குடியினத் தலைவர் குக்குடன் கப்பலுக்கு வரமறுத்து கடற்கரையில் அமர்ந்து கொண்டதும், ஏறத்தாழ 3000 ஹவாய் பழங்குடியினர் கப்பலைச் சூறையாடி அங்கிருந்த ஆயுதங்களுடனும் கட்டாரியும் அம்பும் வில்லுமாகக் குக்கின் சிறு குழுவைச் சூழ்ந்து கொண்டார்கள் தற்காப்புக்காக குக் துப்பாக்கியில் கூட்டதைப் பார்த்துச்சுட்டபோது ஒரு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் கூட்டம் கட்டுக்கடங்காத வன்முறையில் இறங்கியது. நிலைமை கைமீறி விட்டதை உணந்த குக் அவசரமாகக் கப்பலுக்குத் திரும்ப முயற்சித்தார் ஆனால் வெறிகொண்ட கும்பல் அவரைப் பின்பக்கமிருந்து கத்தியால் பலமுறை குத்தியும் தலையில் கட்டையாலடித்தும் கொலை செய்தது. அவருடன் மேலும் நான்கு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மூன்று கடற்பயணங்களிலும் பல தீவுகளில் பழங்குடியினருடன் சுமுகமான உறவைப்பேணி வந்த, கடற்பயணிகளின் ஆரோக்கியத்தைக் குறித்துப் பெரிதும் கவனம் கொண்டிருந்த பேரறிஞரான குக் கலாச்சாரப் புரிதலின்மையால் கொல்லப்பட்டது பெரும் சோகம்
கொல்லப்பட்ட எதிரிகளில் மிக உயரிய இடத்தில் இருப்பவர்களின் இறப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதையாக ஹவாய் பழங்குடியினத்தவரால் குக்கின் உடல் பல பாகங்களாக துண்டு போடப்பட்டு உரிய சடங்குகள் செய்யப்பட்டு ஹவாய்த் தீவில் புதைக்கப்பட்டது. பிற்பாடு கப்பலின் பிற அதிகரிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்கி சில எலும்புகள், துண்டாக்கப்பட்ட ஒரு கை ஆகியவை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடலில் கழித்து, கடற்பயணியரின் ஆரோக்கியத்துக்காகப் பாடுபட்ட கேப்டன் ஜேம்ஸ் குக்கின் உடலின் மிச்சங்கள் பிப்ரவரி 22 அன்று உரிய மரியாதையுடன் கடலுக்கே அளிக்கப்பட்டது
கேப்டன் குக்கின் பயணங்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குக் காரணம், அவரது குழுவினரின் சிறந்த ஆரோக்கியமே. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, ஸ்கர்வி நோயைத் தடுக்க சாவெர்கிராட் உள்ளிட்ட சமச்சீரான உணவை அவர் கட்டாயப்படுத்தியதே ஆகும்.
அவரது வாழ்க்கை ஒரு கலாச்சார மோதலில் முடிவடைந்தாலும், பசிபிக் கடலில் அவர் மேற்கொண்ட விரிவான பயணங்களும், அவர் வரைந்த பல புதிய தீவுகள் மற்றும் நிலப்பரப்புகளின் துல்லியமான வரைபடங்களும் மிகவும் முக்கியமானவை.
மனித இயல்புகளை நன்கு உணர்ந்திருந்ததால், உளவியல் ரீதியாக தனது குழுவினரை ஸ்கர்வி நோயிலிருந்து காப்பாற்றிய ஜேம்ஸ் குக், அறிமுகமில்லாத புதிய நிலப்பரப்பு மனிதர்களின் செயல்களை கணிக்கத் தவறியதால் கொல்லப்பட்டது அவரது வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு.
மனிதன் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும் எவ்வளவு மகத்தானாவனாக இருந்தாலும் ஊழின் இரக்கமற்ற விதிகளுக்கு முன் மண்டியிட்டுப் பணியத்தான் வேண்டும் என்பதற்கு கேப்டன் ஜேம்ஸ் குக்கின் வாழ்வும் ஒரு உதாரணம்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
