மலையாள மூலம் – வி. மதுசூதனன் நாயர்
தமிழாக்கம் – குமரி எஸ். நீலகண்டன்

ஒரு பூரணமான கேரளம் நியூயார்க் பட்டண
இருதயத்தில் ஒன்றாக இணைந்தது.
ஒன்றாயிருந்து ஓணம் உண்ணவே
பல வர்ணக் கிளிகளெல்லாம் கிளைகள் தேடுகின்றன.
பல இறகுகளினுள்ளில் ஒரே நினைவாய்
அலையடித்து உணர்ந்ததனாலிருக்கலாம்
பழைய கால மனதில் நின்றூர்கிற
*நெடிய பந்தத்தின் உணர்வூட்டலாகலாம்.
ஒரு கூட்டிலிருந்து விரிந்து ஊர்ந்து ஒரு ஆகாயத்தில்
பரந்து பல இடத்தில் வேரிட்டும்
ஒருமைக்காய் துடிக்கிற வேரிடலானது
ஒரு தளத்தில் வந்து கூடுகிறது.
ஏழு திரி தீபமும் பட்டு வேட்டியும் வந்ததோ
எர்ணாகுளத்திலிருந்தென்றாலும்
இளந்தளிர் வெற்றிலையோ ஃப்ளோரிடாவிலிருந்து
காலை விமானம் ஏறி வந்தது.
பச்சைச் சூழலில் பரிணமித்த கேரளம்
பிளாஸ்டிக் இலையினைத் தொட்டு நக்குகிறது.
பச்சைக் கதலி தையினை போற்றுவதற்காய் மலையாளி
பாவம் புலம் பெயர்ந்தவனாய் வியர்த்துக் கொண்டிருக்கிறான்.
தெற்கும் கிழக்கும் வடக்கும் மேற்கும்
ஒன்றாகத் தீரும் உதயங்கள்
வெட்சியும் முல்லையும் ரோஜாவும் லில்லியும்
ஒன்றாகச் சிரிக்கிறத் தாளங்கள்
கடலுகளுக்கப்பால் ஓணக் கதைகளின்
கரையிலுணர்கிற குழந்தைகள்
அறியாத சொந்தங்களை
அறியாமல் அறிகிறார்கள், பாடுகிறார்கள்
அதுவரைக் காணாதிருந்தாலும் உள்ளே
இருக்கிறது ஒரு பண்டைய ஆகாயம்
அதிலே இருக்கிறது ஒரு ஊஞ்சலும் ஓணப் பாட்டும்
கும்மியடியும், பூ வட்டியும், பூம்பாட்டும்
காணாதப் பூக்களெல்லாம் மணக்கின்றன, கற்பனை
ஊஞ்சலில் சாய்ந்தாடுவர்
வாமனனாகிறார்கள், மாவேலியாகிறார்கள்
மானுட லோகமே லயிப்பில் கரையும்
எங்கே முளைத்தாலும் வித்தினுள்ளில்
தனித்துவம் தன்னையே தெளிந்திடலாம்
எவ்விடத்தின் உணவு உண்டாலும் தொப்புள்கொடி
தனி ரசம் தானாய் உணர்ந்திடலாம்.
திருவோண விருந்திற்காய் இலை வைத்த பலர்
வரிசையாய் நின்று பரிமாற
பல மலைநாடுகளொன்றாய் மலரும்
மலையாள வாசம் வீசும்
மலையாள நாட்டின் மாபச்சடி, கோட்டக்கல்லின்
புளி இஞ்சி, கோழிக்கோட்டின் உப்பேரி,
மணமுள்ள பாலக்காட்டின் வேப்பிலைக்கட்டி
குமரநல்லூரைக் கூறும் காளன்
ஓணாட்டுக் கரப்பாகத்தின் அவியல், கொட்டாரக்கரையின்
கிச்சடி, உண்ணியப்பம்
திருவல்லாவின் துவரன், திருபிரங்கோட்டின் ஓலன்
திருவில்வமலையின் கொண்டாட்டம்
வெங்கடன் வைத்த பருப்பு நெய், சோறாய்
மங்கொம்பின் சீரகச் சம்பா
திருவிதாங்கோட்டின் சாம்பார், பப்படம்
திருவனந்தபுரத்தின் கூட்டுக்கறி
பொன்னானிச்சேலியின் புளிஸேரி
வாசமுள்ள செம்பகச்சேரி எரிசேரி
நன்றாய் இடப்பள்ளி கற்கண்டு பாயாசம்
தோன்னய்க்கல்லின் அடைப் பிரதமன்
இனிக்கும் பக்குவமாய் திரூரின் பாலடை
குருவாயூரின் தேன் கதலி
திருக்காகரப்பனிற்கு நெய்வேத்யம் செய்த பூ வடை
திருவாரன் முளப்பாள மோர்
ஒரு பிடிச்சோறுக்கு மணமேற்ற நமக்கு
ஜீவிதங்கள் நிறைய சேர வேண்டும்
ஒரு பூக்கோலத்தின் அழகேற்ற நமக்காய்
வர்ணங்கள் அதிகம் இணங்க வேண்டும்
ஒற்றை மலர் கொண்டு ஒரு தோட்டத்தை உருவாக்க
ஒற்றையாய்த் திரிந்து நடக்கிற போது
வற்றியப் பூக்கோலம் கண்டு வருந்தியே நாம்
சொந்த மொழியை அழைக்கிறோம்.
மலையாள ருசியெல்லாம் ஒன்றானது.
இங்கே மறுநாட்டில் பொன்னோண நினைவானது
மலையாள மொழியெல்லாம் இனிதாக்கவே
இங்கே மலநாட்டு சங்கீத ஸ்ருதியானது
அகலும் போதும் அந்நியமாகும் போதும்
நினைவுகள் அபயமாய் அகமே உதிக்கும்.
அயலகத்தின் தாசனாய் ஆகிற போதே
சுதந்திரப் பொக்கிஷங்கள் பெருமிதமாய் வலிக்கும்
அடுத்திருக்கும் போது சண்டையிடுவர் அகன்றால்
மலையாளமாய் ஒட்டுவதற்காய் இனம் தேடுவர்
ஒற்றையாய் அகன்று நடக்கிற வார்த்தைகள்
ஒன்று சேரவே துடிப்பேறும்
வேறுவேறு சுவை தேடும் நாவிற்கு
எதிராக மாறலாம் வாக்குகள்
நட்பானப் பக்குவத்திற்காய், பசையால் வர்ணங்கள்
ஒட்டிச் சுவைக்க முயலலாம்
எழுத்து நீலமோ காவியோ மஞ்சளோ
பச்சையோ சிகப்போ எனத் தெரியலாம்.
இச்சைக்கேற்றார் போல் நிறமேற்ற நாம்
சிறு மனதோடு அலைந்திடலாம்
*இரண்டு பேர் கூடுகிறபோது பலசாலி
பலவீனனை தந்திரமாய் புறந் தள்ளுவான்
அல்லாது அன்னிய பலத்தினைத் தன்னுள்ளேற்றி
பாவனையில் தன்பலத்தை இரண்டாக்குவான்
ஒன்றும் இணங்காமலிருந்தாலும் இடையில்
சமரசம் செய்பவன் கொழுத்திடுவான்
சொந்தமாய் ஒருவரைக் கொண்டு சேர்த்தே
ஒருவன் இரண்டாமவனைப் புறந் தள்ளுவான்
*ஒன்று குறைந்தாலும் ஒன்று இரண்டாயினும்
ஒன்று போய் மற்றொன்று வந்தாலும்
ஒன்று இன்னொன்றை ஏற்காது நில்லும்
இடையில் வர்ணம் இணக்கமாய் வந்திடினும்
உள்ளாகும் எண்ணங்கள் ஒன்றாகும் போதே
மொழித் துளிகளெல்லாம் ஒத்தொழுகும்
கள்ளமில்லா மனங்கள் மட்டுமே
வேறு வேறென்றில்லாத ஒரு கூட்டாகும்.
அன்யோன்யம் தனையே தெளிந்தறிய நாமும்
அந்நிய நாட்டிற்குப் போக வேண்டும்
நஷ்ட காலங்கள் தெளிந்தறிய நாமும்
இத்தனை தொலைவுகள் போக வேண்டும்
* நெடிய பந்தத்தின் உணர்வூட்டலாகலாம் – “பாவஸ்திராணி ஜனனாந்தரசௌஹிருதானி” என்று காளிதாஸ் அபிஜ்ஞானசாகுந்தலத்தில் கூறுகிறார்.
இரண்டு பேர் கூடுகிறபோது – மலையாளத்தில் வண்ணங்களின் இணைப்பினைக் கவனிக்க வேண்டும். மலையாள மொழியில் பொதுவாக காணப்படும் இயல்புகள்தான் இந்த வார்த்தையிலும் வெளிப்படுகின்றது.
- இரண்டு நிறங்கள் சேரும்போது, அவற்றில் பலவீனமானது மறைந்து செல்வது லோபம்.
- மற்ற நிறத்தின் சக்தியுடன் ஒரு நிறம் இரட்டிப்பாக்கிக் கொள்வது த்விதம்.
- இரண்டு வண்ணங்களுக்கிடையில் மற்றொரு வண்ணம் வந்து சேர்ந்தால் அது ஆகமம்.
- இரண்டு நிறங்களில் ஒன்றிற்கு மாற்றாக, வலிமை வாய்ந்த வண்ணத்திற்கு உகந்த ஒரு மூன்றாவது வண்ணம் இடையில் சேர்வது ஆதேசமாகும். இந்த நான்கு சந்திகளின் தன்மை மலையாள நாட்டின் மனதினில் இருக்கும் அதேவிதமானது என்கிற உணர்வு.
*ஒன்று குறைந்தாலும் ஒன்று இரண்டாயினும் – லோபமோ, த்விதமோ. ஆகமமோ, ஆதேசமோ என எதுவாக இருந்தாலும், அந்த சமூக வாழ்வின் அக இசையின் மூலம் இனிமை பெற்றிருக்கும்.
வி.மதுசூதனன் நாயர். 1949 ல் கேரளத்தில் நெய்யாற்றின் கரையில் பிறந்தார்.
தாய் – என். கௌரிகுட்டியம்மா, தந்தை – கே.வேலாயுதன் பிள்ளை. மலையாளத்தில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். கேரளா பாஷா இன்ஸ்ட்யூட், குங்குமம் – கேரள தேசம், வீக்ஷணம் என்ற தின இதழ் போன்றவற்றில் பத்திரிகை பணியாற்றிய பின், திருவனந்தபுரம் செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1986 முதல் மலையாளத் துறைப் பேராசிரியராகவும், தலைவருமாக பணி செய்தார். கேரள சாகித்ய அகாதெமி (1992, நாராணத்து பிராந்தன்), மத்திய சாகித்ய அகாதெமி (2019, அச்சன் பிறந்த வீடு) உட்பட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர், கேரள சாகித்ய அகாதெமியின் நிர்வாகக் குழு உறுப்பினர், மத்திய நவோதய நிர்வாக க்குழு உறுப்பினர், குமாரன் ஆசான் தேசிய கலாச்சார நிலையத்தின் தலைவர், மாநிலப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர், மலையாள மிஷனின் உறுப்பினர் ஆகிய பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறார். திரைப்படங்களுக்கு மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் கவிதையும், பாடல்களும் எழுதி இருக்கிறார். ’மலையாளம் பள்ளிக் கூட’த்திற்கும், தோண்ணைக்கல் குமாரன் ஆசான் தேசிய கலாச்சார நிலையத்திற்கும் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
