மூலம் : டானல்ட் பார்டல்மே
தமிழாக்கம் : வெங்கட பிரசாத்
“ஆமாம், உண்மையாவே இது தேவாலயங்களின் நகரம் தான்” என்றார் பிலிப்ஸ்
அவர் கை சுட்டிய இடத்தை பார்த்துக்கொண்டே செசீலியாவின் தலை பதிலை பெற்றுக்கொண்டது. தெருவின் இருபுறமும் வெவ்வேறு கட்டிட பாணிகளில் கட்டப்பட்ட தேவாலயங்கள் ஒன்றின் தோளில் ஒன்று ஒட்டிக்கொண்டு கனமான கோடு போட்டது போல் இருந்தது. “நம்பிக்கையாளர்களின் திருச்சபை” “புனித தூதுவர் சுதந்திர நம்பிக்கையாளர் திருச்சபை” க்கு பக்கத்தில் இருக்க, “புனிதர் பால் பேராய திருச்சபை”, “கிருபை சுவிசேஷ உடன்படிக்கை திருச்சபை”க்கு ஒட்டி இருந்தது. பிறகு “முதல் கிறிஸ்துவ அறிவியல் திருச்சபை, தேவனின் திருச்சபை , அனைத்து ஆன்மாக்கள், வெற்றியின் நம் திருமகள், நண்பர்களின் சமூகம், தேவனின் திருச்சபை, பரிசுத்த அப்போஸ்தலர்கள் தேவாலயம்” என ஒவ்வொவொன்றும் ஒன்றை ஒன்று உரசி நின்றபடி இருந்தது. பாரம்பரிய கட்டிடங்களின் செங்குத்தான, கூரான கோபுரங்கள் “நவீன” கட்டிடங்களின் பரந்து விரிந்த கற்பனை வடிவங்களின் ஊடே கலந்து நின்றுக்கொண்டிருந்தது.
“இங்க இருக்கிற ஒவ்வொருவரும் தேவாலயங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த பற்று கொண்டவங்க” என்றார் பிலிப்
பிரெஸ்டர் என்ற இந்த ஊருக்கு கார்களை வாடகை விடும் அலுவலகத்தின் புதிய கிளையை தொடங்க வந்திருக்கும் செசீலியாவின் மனதில் ““நாம இந்த கூட்டத்துக்கு இடையில இருக்க முடியுமா? “ என்ற கேள்வி எழுந்தது
“எனக்கு மதம் சார்ந்து பெரிய நம்பிக்கை கிடையாது”, வீடு, நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்யும் பிலிப்ஸிடம் சொன்னாள்.
“இப்போ இல்லை, ஆனா இங்க நிறைய இளைஞர்கள் கூட்டம் இருக்கு. சீக்கிரமா, நீங்க இங்கிருக்கிறவங்களோட ஒண்ணாயிடுவிங்க. உடனடி பிரச்னை, நீங்க எங்க தங்க போறீங்க? இங்க முக்காவாசி ஆளுங்க அவங்களுக்கு ஏத்த தேவாலயத்தில தங்கறாங்க. இங்க எல்லா தேவாலயத்திலயும் அதிகமான அறைகள் இருக்கு. எனக்கே கூட ஒரு சில இருக்கு, எந்த வாடகையில பார்க்கீறீங்க?”
அவர்கள் தெருவின் முனையில் திரும்ப, அங்கே மேலும் பல தேவாலயங்களால் எதிர்கொள்ளப்பட்டனர். புனித லூக், திருவெளிப்பாடு திருச்சபை, உக்ரைன் மரபுவழி புனிதர்கள் திருச்சபை, புனித கிளிமெண்ட், நம்பிக்கையாளர் நன் தொடக்க திருச்சபை, ஐக்கிய திருச்சபை, புனித அனார்ஜிரி, இம்மானுவல் தேவாலயம், முதல் சீர்த்திருத்த கிறிஸ்துவ திருச்சபை என்று அவர்கள் கடந்து சென்றனர். அனைத்து தேவாலயங்களின் நுழைவாயில்களும் அகன்று விரிந்திருந்தன. உள்ளே, மங்கலான ஒளி ஒழுகிக் கொண்டிருந்தது.
“நூற்றிப்பத்து வரைக்கும் போகலாம்” என்றால் செசீலியா. “தேவாலயங்கள் இல்லாம வேற ஏதாவது இருக்கா?”
“ஒண்ணு கூட இல்லை” என்றார் பிலிப்ஸ். “சொல்லப்போனா, இங்க இருக்கிற பல தேவாலயங்கள் வழிபாட்டுக்கும் மேலே வேற சில காரணங்களுக்காகவும் பயன்படுது. ஜார்ஜியன் தேவாலய கட்டிடத்தை சுட்டி, “அங்க தான் பள்ளி வாரியமும் செயல்படுது. அதுக்கு பக்கத்தில இருக்கற ஆன்டியாக் திருச்சபையில தான் முடித்திருத்தும் கடையும் இருக்கு”.

அது உண்மை தான். சிவப்பும் வெள்ளையும் நிறத்தில் கடைக்கான விளம்பர பலகை திருச்சபையின் முகப்பில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
“இங்க பல பேர் காரை வாடகைக்கு எடுப்பார்களா? “இல்ல, அப்படி கொடுக்க கூடிய ஒரு இடம் இருந்தா வாடகைக்கு எடுப்பாங்களா?
“ம்ம், எனக்கு தெரியல” என்றார் பிலிப்ஸ். “எங்கேயாவது போகணும்னு தேவை இருந்தாதான் கார் வாடகைக்கு எடுக்கணும். இங்க இருக்கிற பல பேருக்கு இந்த நகரத்தை தாண்டி போக அவசியமும் இல்ல அவங்களுக்கு இந்த ஊரே போதுமானதா இருக்கு. நானா இருந்தா, இந்த ஊருல காரை வாடகைக்கு விடற ஒரு தொழில தொடங்க மாட்டேன். இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு நல்லதாவே நடக்கும்.” செங்கல், கண்ணாடி, எஃகு கொண்டு கட்டப்பட்ட அதி நவீன ஆனால் மிக சிறிய கட்டிடத்தை காண்பித்தார். “அது புனித பார்னபாஸ், அருமையான மக்கள், சுவையான இரவு உணவு அங்கே கிடைக்கும்” என்றார்.
கண்ணாடி வழியே தன்னை காணும் பல தலைகளை கண்டாள் செசீலியா. ஆனால் இவள் அவர்களை காண்பதை உணர்ந்தும் அந்த தலைகள் தலைமறைவாகியது.
“ஒரே இடத்தில, இத்தனை தேவாலயங்கள் இருக்கிறது ஆரோக்கியமானது ன்னு நினைக்கறீங்களா? ஒரு மாதிரி… சமத்துவம் இல்லாத மாதிரி இருக்கு, நான் சொல்ல வர்றது புரியுதா?
“எங்க ஊரே தேவாலயங்களுக்காக தான் பிரபலம், அதனால ஒரு பிரச்சனையும் இல்ல. இதோ இந்த இடத்தை பாருங்க “ என்றார் பிலிப்ஸ்.
அவர் கதவை திறக்க, அழுக்கும், தூசியும் ஆடைகளாய் அணிந்த படிகளில் இருவரும் ஏறி சென்றனர். மேலே, சதுரமான, நான்கு பக்கமும் சாளரங்கள் இருந்த ஒரு விசாலமான அறைக்குள் நுழைந்தனர். அங்கே ஒரு கட்டில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், விளக்குகள் மற்றும் தரை விரிப்பு ஒன்று இருந்தன. அறையின் நட்ட நடுவில், நான்கு பெரிய பித்தளை மணிகள் தொங்க விடப்பட்டிருந்தது.
“வாங்க, வந்து இங்க பாருங்க. இங்கிருந்து வெளியில பார்க்க அத்தனை அருமையா இருக்கு”, பிலிப்ஸ் வியந்தார்.
“இந்த மணிகளை உண்மையிலே அடிக்கிறாங்களா?” சந்தேகமாக செசீலியா கேட்டாள்
“ஒரு நாளைக்கு மூன்று முறை”, சிரித்துக் கொண்டே சொன்னார் பிலிப்ஸ்
“காலை, மதியம், இரவு. அப்புறம், அது அடிக்கும் போது, உடனே விலகி போய்டுங்க, இல்லனா, அந்த குழந்தைகளல ஏதோ ஒண்ணு உங்க தலையில முத்தம் கொடுத்தா போதும், உடனே உங்க தலையெழுத்து முடிஞ்சிடும், பாத்துக்கோங்க ”
“சேசுவே”, அனிச்சையாக சொன்னாள். “இந்த மாதிரி “மணியான” இடத்தில யாரும் இருக்க முடியாது. அதுனால தான் இது காலியா இருக்கு”
“ம்ம்..உங்களுக்கு அப்படியா தோணுது?” என்று பிலிப்ஸ் கேட்டார்.
“பின்னே, ஊருக்கு புதுசா வரவங்களுக்கு மட்டும் தானே இந்த மாதிரி ஒரு இடத்தை நீங்க வாடகை விட முடியும்”, நக்கல் தொனியோடு சொன்னாள்.
“நான் அப்படி செய்ய மாட்டேன், அது கிறிஸ்துவ நம்பிக்கைக்கு மாறானது” என்றார் பிலிப்ஸ்
“இந்த ஊரு கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருக்கு, தெரியுமா?
“இருக்கலாம், ஆனா நீங்க சொல்ல கூடாது. நீங்க ஊருக்கு புதுசு. கொஞ்ச நாள் ஜாக்கிரதையா இருக்கணும். உங்களுக்கு மேல் மாடி வேணாம்ன்னா, மத்திய பிரெசிபிடேரியன் தேவாலயத்தில் அடித்தளம் வாடகைக்கு இருக்கு. அங்கே இரண்டு பெண்கள் ஏற்கனவே இருக்காங்க, நீங்க அவங்களோட அறையை பகிர்ந்துக்கணும்”
“மன்னிக்கணும், எனக்கு தனியா ஒரு அறை வேணும், பகிர்ந்துக்க முடியாது”
“ஏன்? என்ன காரணம்?” ஆச்சர்யத்துடன் பிலிப்ஸ் கேட்டார்.
“காரணம்?… குறிப்பா காரணம் எதுவும் இல்லை, எனக்கு வேணும், அவ்வளவு தான்”
“இங்க அந்த பழக்கம் இல்லை. எல்லாரும் யாரோ ஒருத்தரோட சேர்ந்து தான் இருக்காங்க. கணவன் மனைவி, அம்மா அவங்க பிள்ளைங்க. எல்லாரும் அறையை பகிர்ந்து தான் இருக்காங்க”
“இருக்கட்டும், ஆனா எனக்கு தனி அறை தான் வேணும்”
“ரொம்ப வித்தியாசமா இருக்கே”
“உங்களுக்கு அந்த மாதிரி இடம் ஏதாவது இருக்கா, இந்த “மணி”யான கோபுரங்கள் இல்லாம”
“கொஞ்சம் இருக்கு”, தயக்கத்தோடு பிலிப்ஸ் சொன்னார். “ ஒண்ணு ரெண்டு காட்ட முடியும்னு நினைக்கிறேன்”
சற்றே நிறுத்தினார்.
“எங்களுக்குனு சில பழக்கம், கொள்கை இருக்கு சுற்று வட்டார ஊரில் இருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கலாம். எங்க இடத்தை பற்றி நிறைய எழுதி இருக்காங்க. ஒரு முறை, டிவியில கூட நாலு நிமிடம் வந்தது. மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி, “தேவாலயங்களின் நகரம்” அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.
“இந்த மாதிரி ஒரு இடத்தில நான் வாழணும் ன்னா, எனக்கே எனக்குன்னு ஒரு இடம் வேணும்” செசீலியா சொன்னாள்.
“உங்களோட நடவடிக்கை விசித்திரமா இருக்கு, நீங்க எந்த ஆளுங்க?” பிலிப்ஸ் கேட்டார்
செசீலியா மௌனமாக இருந்தாள். உண்மையில், அவள் எந்த பிரிவையும் சேர்ந்தவள் அல்ல.
“நீங்க எந்த ஆளுங்க ன்னு கேட்டேன்”, குரலில் அழுத்தம் கூடியது.
“இங்க பாருங்க, நான் என்னன்னு நான் தான் முடிவு செய்வேன். எனக்கு விருப்பமான கனவை நான் காண்பேன். பாரிஸ், இல்லேன்னா வேற ஏதாவது ஒரு நகரத்தில நான் சந்தோஷமா இருக்கிற மாதிரி கனவு காணனும் நினைச்சா, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்னு தான் – தூங்கணும். நான் எதை வேணுமானாலும் கனவு காண்பேன். என் கனவுகளை நான் மட்டும் தான் தீர்மானிக்க முடியும்”
“பொதுவா, உன்னுடைய கனவுகள் எதை குறித்து இருக்கும்?” – அவளை உற்று நோக்கியப்படி பிலிப்ஸ் கேட்டார்.
“பொதுவா.. அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள்” அவரின் மீது எந்த அச்சமுமின்றி பதில் வந்தது.
“பிரெஸ்டர் அந்த மாதிரி ஊர் கிடையாது” – வேறெங்கோ பார்த்தப்படி பிலிப்ஸ் சொன்னார்.
தேவாலயத்தின் கதவுகள் தெருவின் இருப்புறம் நோக்கி திறந்தது. செசீலியாவையும் பிலிப்ஸையும் வெறித்து பார்க்கும் சிறு மக்கள் கூட்டம், தேவாலயத்தின் முன்னர் குழுமியது,
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் முன்னே வந்து, “இங்கே எல்லாருக்கும் ஒரு கார் இருக்கு, ஊர்ல கார் இல்லாம ஒருத்தர் கூட இல்ல”
“அவன் சொன்னது உண்மையா?” பிலிப்ஸை கேட்டாள் செசீலியா
“ஆமா, உண்மை தான். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் ஒருத்தர் கூட வாடகை கேட்டு வர மாட்டாங்க”
“அப்ப, நான் கிளம்பறேன், வேற ஊருக்கு போறேன்”
“நீ இங்க தான் இருக்கனும். இங்க வாடகை கார் அலுவலகம் ஏற்கனவே இருக்கு. மொராயா நமபிக்கையாளர் தேவாலயத்தின் மாடியில் இருக்கு. அங்க தொலைப்பேசி, நாள்காட்டி, கார் சாவிகள் வைக்கிற வசதியோடு உனக்கு ஒரு இடம் தயாரா இருக்கு.”
“நான் இருக்க மாட்டேன், ஒருத்தரும் வராத கடையில என்னால வேலை செய்ய முடியாது”, கனலோடு எதிர்ப்பதில் வந்தது
“எங்களுக்கு நீ வேணும்” என்றார் பிலிப்ஸ். “அந்த அலுவலகத்தில வேலை செய்யற பெண்ணாக நீ நிற்கும் போது தான் இந்த ஊரு முழுமை அடையும்”
“ஆள விடுங்க, என்னால முடியாது”
“நீ இருந்து தான் ஆகணும்”
“நான் கனவு காண்பேன், உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத விஷயங்கள்”
“எங்ககிட்ட ஏதோ ஒண்ணு குறையுது, முழு நிறைவில்லாம இருக்கோம்” என்றார் பிலிப்ஸ்.
“நான் இருளின் ஆழ் ரகசியங்களை கனவு காண்பவள், நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க” என்றாள்
“மத்த ஊரு மாதிரி தான் எங்க ஊரும், ஆனா ஏதோ ஒரு துளி கம்மியா இருக்கு. அதை சரியாக்காம எங்களுக்கு நிம்மதி கிடையாது. எங்களுக்கு கார் வாடகை அலுவலக பெண் தேவை. ஒருத்தி அந்த வரவேற்பு அறையில நிற்கணும்”
“நீங்க மிகவும் பயப்படற வாழக்கையை நான் கனவு காண்பேன்” செசீலியா குரல் ஏறியது
அவள் கரங்களை அழுத்திப்பிடித்து, “அந்த கார் வாடகை அலுவலகத்தில வேலை பார்த்துகிட்டு, நீ எங்களோட தான் இருக்கணும், அதனால ஒழுங்கா இரு. உன்னால வேற ஒண்ணும் செய்ய முடியாது”
“பார்க்கத்தானே போறீங்க”, செசீலியா சொன்னாள்.
***
மூலம்: A City of Churches – Donald Barthelme
https://www.newyorker.com/magazine/1972/04/22/a-city-of-churches
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
