
உயிர்க்குளிர்
உயிரின் வேர் நடுங்குகிறது
சப்தமின்றி பெரும் படையின்
நகர்வென
வீதிக்குள் நிறைகிறது குளிர்
ஜன்னல்களை இறுக்க அடைத்துவிட்டேன்
மூன்று கம்பளிகளில் உன்னைச் சுற்றினேன்
கனப்பில் மேலும் மூட்டினேன்
அனல் அனல் அனல் என
உச்சாடனம் செய்தேன்
இம்மாபெரும் இரவில்
மலைகள்
கம்பீரமாய் எதிர்கொள்கின்றன
இலை நுனிப்பற்றி
அதன் வரிகளில் பரவி
கிளைகளில் வியாபித்து
கூடுறங்கும் குஞ்சின்
இதயத்தின் துடிப்பினுள்
நுழையும் குளிரை
மஜ்ஜையின் மையத்தில்
ஊற்றெடுக்கும் குளிரை
என்ன செய்ய?
தோல் குருதி
தசை நரம்புகள் எலும்பென
தொல் ஆழங்களில்
பிறக்கும் குளிரை
என்ன செய்து தடுக்க?
கனவு மட்டும் சென்று தொடும்
தூரத்தில்
அனலின் துளி எரிகல்லாய்
பறக்கிறது
நம் உலகங்களின் பாதைக்குள்
அது வரும் வரை
அன்பே
பொறுத்துக்கொள்
உயிர்க்குளிரை
திறப்பு
நொடி முள்ளை
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்
மரணத்தின் மாபெரும்
வாயில் எக்கணமும்
திறந்துகொள்ளக்கூடுமென்று
ஜன்னல் திரைச்சீலையின்
மெல்லிய அசைவுக்கு
நிழல் அசைய
நுட்பமாய் திறந்துகொண்டது
ஒளிரும் இருள்வெளி
சிறு வெளிச்சத்தின்
வெளியில்
போரும் அமைதியும்
நடனமிடுகின்றன
இருளின் பெரும் வீதியை
அது வெளியாய் விரிவதை
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
புள்ளிகள் வழிகின்றன
உருவங்கள் பிறக்கின்றன
பால்வெளியின்
ஏதோ ஒரு மூலையில்
பிறந்து பிறந்து அழிகிறது
நட்சத்திரம்
சிறு சிறு வெளிச்சமாய்
சொற்ப எண்
அங்கிங்கெல்லாம்
அலைந்தாயிற்று
எத்தனை இல்லங்களோ
அத்தனை முன்னும்
யாசித்தாயிற்று
உயிரென வந்த ஒவ்வொன்றும்
கையேந்துகிறது
எதற்கு பிச்சையிடுகிறாய்
எதனை புறக்கனிக்கிறாய்
உன் கணக்குகளில் எது ஆனந்தம்
என் நோட்டுப்பக்கங்களின் கிறுக்கல்கள்
உனக்கு என்னவாக பொருள்படுகிறது
குஞ்சுக்கு இரை எடுத்துச்செல்லும்
பறவையை இரையென கொள்ள
ஒரு கூர் அலகை ஒளிர் உகிரை
செலுத்துவது ஏன்?
இத்தனை கண்ணீருக்கு
எது நிகர் வைக்கப்பட்டு
இத்தராசு சமநிலை கொள்கிறது?
வானங்களில் மேகத்தை
இறகின் மென்மையுடன்
அழகாய் வரைந்துள்ளாய்
கோள்களை இத்தனை பெரிதாக்கி
மௌனத்தில் சுழலவிட்டுள்ளாய்
முடிவிலியால் நிரப்பப்பட்ட
பேரேட்டில்
என் கைகளின் பத்து விரலுக்கும்
அதனால் எண்ண முடிந்த
சொற்ப எண்ணுக்கும்
என்ன இடம்?
பார்த்து இருப்பது
ஒளியும் இருளும்
தன்னைத்தான்
நிகழ்த்திக்கொள்கின்றன
அவை நடனமிடுவதாய்
பாடிக்கொண்டே இருக்கிறேன்
நிகழ்வின் தூண்டில்
பாடலில் சிக்கிக்கொள்ள
பாடலும் தன்னைத்தான்
பாடிக்கொள்ளத்துவங்கியது
செய்ய எஞ்சியது
கேட்பதும்
பார்ப்பதும்
அறிதல்
உன்னை
அறியவேயில்லை
மலைகளின் முகடுகளில்
ஊசியிலை மரங்களின் வழி
சீழ்க்கை ஒலி பிறக்கிறது
ஏரியின் சலனமின்மைக்குள்
ஆழ்கிறது காலம்
மௌனத்தின் பெரும் பெரும் பெருக்கில்
எத்துகளிலும்
உன்னை அறியவேயில்லை
கடல் துமியாதல்
அலை அடித்துக்கொண்டே இருக்கிறது
துமிகள் பறந்துகொண்டே இருக்கின்றன
காற்று ஏந்திக்கொண்டே இருக்கிறது
அத்தனை அத்தனை மௌனமாய்
துமிகள் அலைமீதே விழுகின்றன
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
