கைக்காட்டி என்ற வினையாகுபெயரை முன்வைத்துச் சில குறிப்புகள்
நீண்ட தார்ச்சாலையின் பக்கவாட்டில் சிறிய மண் சாலை ஒன்று பிரிந்து தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே எங்கோ வளைந்து வளைந்து செல்கிறது. அந்த மண்சாலை பிரியும் இடத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் பெரிய மரங்களில், ‘இது பொது வழி அல்ல’, ‘இது தனியார் சொத்து’, ‘யானைகள் நாடமாடும் பகுதி’ என எழுதிய பலகைகள் ஆணியடிக்கப்பட்டுள்ளன. அந்த பலகைகளுக்கு நடுவே, மண்சாலையின் தொடக்கத்தில், ஒரு கைத்தூக்கிக்கம்பம் – சோதனை மற்றும் சுங்கச் சாவடியில் உள்ளது போல – எப்பொழுதும் மேல்தூக்கியவாறு வானையும் மண்னையும் குறுக்குவெட்டாக இணைப்பது போல திறந்தமேனியாக அமைந்துள்ளது. இந்த இடத்தை, மற்றும் அங்கு ஒரு மனிதன் பணியமர்த்தப்பட்டால் அந்த மனிதனையும், குறிப்பதற்கு ‘கைக்காட்டி’ என்ற சொல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புழக்கத்தில் உள்ளது. செக்போஸ்ட், செகியுரிடிகர்ட்டு, வாட்ச்சுமேன், காவலாளி போன்ற சொற்களைத் தவிர்த்து ‘கைக்காட்டி’ என்ற சொல்லே வால்பாறைத் தேயிலைத் தோட்டங்களில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.

நான் தேயிலைத் தோட்டத்து மண் சாலையில் செல்லும் பொழுது, மேலாளரோ கண்காணிப்பளரோ என்னிடம் கேட்பார்கள்: “கைக்காட்ல சொல்லியாச்சா”, “கைக்காட்டி ரமேஷ் அங்க இருந்தார்ல … எப்போ வந்தாலும் கைக்காட்டீட்ட சொல்லிடுங்க, என்ன?”. நான் அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கியப்பின் உள்ளே சென்றாலும் கைக்காட்டியில் / கைக்காட்டியிடம் சொல்லிவிட்டு வருவதுதான் முறை என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த முறை முதலில் குழப்பத்தையும் சிரமத்தையும் என்னுள் ஏற்படுத்தினாலும் நாளடைவில் சில பல கைக்காட்டிகள் என்னை தெரிந்துகொள்ளவும், நான் அவர்களைப் பற்றியும் அவர்களின் தினசரி வேலைகள் பற்றியும் புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்தது. கைக்காட்டி என்ற சொல் இடத்தையும் மனிதனையும் குறிப்பதைத் தாண்டி ஒரு வினையையும் குறிக்கும் – வழிகாட்டுதல்; யார் யார் எந்தெந்த இடத்தில் எப்பொழுது இருப்பார்கள் என நிமித்தம் கூறி வழிகாட்டுவது. ஒரு கைக்காட்டி-மரம் என்ன செய்யுமோ அதையே கைக்காட்டியும் செய்வார். மனிதர்கள் மட்டும் அல்லாமல் யானைகள் குறித்தும் கைக்காட்டி வழிகாட்டுவார். கைக்காட்டியின் அருகாமையில் உள்ள பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்து தோட்டத்தில் வேலை செய்பவர்கள், வனத்துறை மற்றும் அரசுசாரா அமைப்புகளின் களப்பணியாளர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்துத்துறை சார்ந்த பேருந்து ஓட்டுனர்கள், பொதுமக்கள் முதலியவர்களுக்கு கைக்காட்டி எச்சரிப்பார், வழிகாட்டுவார். அந்த நாளிலோ, சமீபத்திய நாட்களிலோ யானைகள் எங்கிருந்தன, எங்கு சென்றன போன்ற தகவல்கள் கைக்காட்டியிடம் நிறைய, நீக்கமற இருக்கும். மனிதர்களின் நடை, போக்கு, குணம், நோக்கம் முதலியவற்றை நோட்டமிடுவது போலவே கைக்காட்டி யானைகளையும் நோட்டமிடுவார். அவரின் பணியிடம், அந்த இடத்திற்கே உண்டான வினைப்பண்பு, அந்தப் பண்பிற்கே உரித்தானவர்தான் கைக்காட்டி. பலவிதமான மனிதர்களையும் பலவிதமான யானைகளையும் தள்ளி நின்றுப் பார்த்த, அருகில் சென்று சூடுபட்ட, திரும்பிப் பார்க்காமல் ஓட்டம்பிடித்த வாழ்வனுபவம் கைக்கட்டிக்கு தேவைக்கதிகமாகவே உண்டு.
இப்படியாக அமையப்பெற்ற கைக்காட்டியிடம் இருந்து யானை – மனிதன் உறவு குறித்து சிந்திக்க முயற்சிக்கிறது இந்தக் கட்டுரை. பொதுவாக காட்டிற்கு அருகாமையில் வசிக்கும் மனிதர்களுக்கும் காட்டுயானைகளுக்கும் இடைப்பட்ட உறவை ‘மோதல்’ என்ற இலக்கணச்சட்டகத்தில் வைத்து பொருள்கொள்வதே அதிகம். மனிதர்களுக்கு யானையும், யானைகளுக்கு மனிதனும் சேதத்தையும் இழப்பையும் எற்படுத்தும் நிகழ்வை, எதார்த்தத்தை ‘மோதல்’ என்று குறிப்பது வழக்கம். ‘காட்டுயானைகள் அட்டகாசம் / அட்டூழியம்’, ‘பயிர்கள் சேதம், விவசாயிகள் அச்சம்’, ‘யானைகளைப் பிடித்து காட்டில் விட பொதுமக்கள் கோரிக்கை’, போன்ற தலைப்புச் செய்திகளை பார்த்திருப்போம். வனத்துறை மற்றும் யானை இனப்பாதுகாவலர்கள் மக்களிடம் கூறுவார்கள்: ‘அரிசி, வெல்லம் போன்றவற்றை சன்னல் ஓரம் வைக்காதீர்கள்’; ‘வீட்டின் அருகாமையில் வாழை, பலா மரம் இருந்தால் வெட்டிவிடுங்கள்’; ‘யானைகள் சாப்பிடாத பயிர்களை விவசாயம் செய்யுங்கள்’. இதற்கு மக்கள் எதிர்கூறுவர்: ‘எங்கள் வீடே சிறியது, அதில் எங்கே அரிசி வைத்தாலும் சன்னல் அருகில் தான் இருக்கும் … வீட்டிற்குள் அரிசியை வைக்காமல் வேறு எங்குபோய் அதை வைப்பது’; ‘எந்த மரமும் வீட்டின் அருகில் இல்லாமல் இருந்தாலும் யானை வருகிறதே … மரம் இல்லை என்றால்தான் வீட்டின் கதவு சன்னலை உடைக்கப்பார்கிறது யானை’; ‘எல்லா பயிர்களும் யானை சாப்பிட ஆரம்பித்துவிட்டது, நாங்கள் எதைத்தான் பயிர் செய்ய’. யானைகளை விரட்ட மனிதர்கள் வெடி வெடிப்பது, மின்சார வேலி அமைப்பது தவறு என்று ஒரு தரப்பும், அதைத் தற்காப்பிற்குத்தான் பயன்படுத்துகிறோம் என்று மற்றோரு தரப்பும் வாதிடும். இருதரப்பும் ஒருவர் கூறுவதை மற்றவர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற இயலாமை, வெறுமை, கோபம் அவர்களின் அகத்திலும் புறத்திலும் வெளிப்படும். ‘யானைப் பக்கம் நின்று பேசுகிறார்கள், மக்கள் பக்கம் நின்று அவர்கள் படும் பாடுகளை உணர்வதில்லை’, ‘மக்கள் யானைகளின் நிலத்தில், வழித்தடத்தில் வசிக்கிறோம் என்று உணராமல் எந்த முன்னெச்சரிக்கையும், மாற்று பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள்’, போன்ற நிகழ மறுத்த உரையாடல்களின் எச்சங்களே யானை – மனிதன் மோதலுக்கான பொருள்கோள் இலக்கணங்கள். இதற்க்கு நேமார்றாக காட்டுயானைகளை ‘சுட்டி’, ‘செல்லப்பிள்ளை’ போன்ற சொற்களைக் கொண்டு சித்தரிப்பது, யானையும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் எந்த எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாமல், சேதம் மற்றும் இழப்பில்லாமல், ஒருவர் மற்றவர்களின் வாழ்வை, இருப்பிடத்தை உள்ளார்ந்த புரிதலுடன் அணுகுவது, வனத்துறை மற்றும் யானை இனப்பாதுகாவலர்களும் பொதுமக்களும் கூட்டாகச் செயல்படுவது, ‘கூட்டிருப்பு’ என்ற சொல் முலம் இலக்கணப் படுத்தப்படும். யானை – மனிதன் கூட்டிருப்பிற்கு எந்தவிதமான உரையாடலை எடுத்துக்காட்டவென்று எனக்குத் தெரியவில்லை. கூட்டிருப்பை முழுமையாக விளக்கும் ஒரு உரையாடல் உள்ளதா என்றே எனக்கு சந்தேகமாக உள்ளது. உரையாடல் அற்றுப்போன சூழல் தான் கூட்டிருப்போ? மோதலைக் குறைத்து கூட்டிருப்பிற்கு யத்தனிப்பதைச் சுட்ட – கூட்டிருப்பு எப்பொழுதும் ஒரு யத்தனிப்பாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மையை ஆழமாக அறிந்துணர்ந்து – ‘எதிர்கொள்ளல்’ என்ற சொற்ப்பதத்தை சில அறிஞர்கள் பயன்படுத்துவர்.
‘மோதல் – கூட்டிருப்பு – எதிர்கொள்ளல்’ என்ற சொல் அலைவரிசை, இலக்கண முறை, பொருள்கோள் விதி சில தருணங்களில் யானை – மனிதன் உறவை நன்கு புரிந்துகொள்ள உதவும், மற்ற சில தருணங்களில் புளித்தச் சொல்லாடலாகவும், அபத்த உச்சாடனமாகவும் அமையக்கூடும். யானைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவை மட்டுமல்ல, மனிதர்களுக்குள் உள்ள உறவுகள் மற்றும் அனைத்துக்கும் அனைத்துக்குமான உறவுமுறைகளைக் கூட இந்த ‘மோதல் – கூட்டிருப்பு – எதிர்கொள்ளல்’ என்ற சட்டகத்தில் வைத்து விளக்கிக்கொள்ளலாம் என்னும் பொழுது அதன் பொதுப்படைத்தன்மை சிறு சலிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இது காட்டுயிர் மற்றும் இயற்கை பற்றிய கலைச்சொற்கள் உற்பத்தியில் உள்ள போதாமையா அல்லது உறவுகள் – குறிப்பாக மனிதன் – விலங்கு உறவுகள் – குறித்த அடிப்படைப் பொருள்கோள் இலக்கணத்திலேயே மனிதப் புரிதலுக்கு, மனித இருப்பிற்கு போதாமை உள்ளதா என்று தெரியவில்லை. மனிதர்களுக்குள் செயல்படும் உறவுமுறைகளைச் சுட்ட எத்தனையோ சொற்கள் உள்ளன. ஒரு மனிதனை இழிவுபடுத்த, பகடிசெய்ய, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட, அந்த மனிதனின் மனிதவுறவுகளை முதன்மைப்படுத்தி, பல சொற்கள் நம்மிடையே மிகச்சாதாரணமாக வாய்மொழியிலும் செவ்வியல் இலக்கியங்களிலும் அமையப்பெற்றுள்ளன. ஆனால் மனிதன் – விலங்கு உறவுகள் குறித்தான, அதற்கு மட்டுமே பொருந்தக்குடிய தனித்தன்மையிலான சொற்கள் அரிது. விலங்குகள், பறவைகள், தாவரங்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் உருவாக்குவதை விட அவைகளுக்கும் நமக்குமான உறவுகளை சுட்ட மதிப்பிற்குறியச் சொற்களை உருவாக்குவதே சவாலான செயல்பாடாக இருக்கும். உறவை சொல்லாக்குவதே மொழிவாழ் உயிரி என்று தன்னைத்தானே பெயரிட்டழைக்கும் மனிதர்களுக்கு அழகு. இது இப்படியே இருக்க, நாம் ‘மோதல் – கூட்டிருப்பு – எதிர்கொள்ளல்’ என்ற தார்ச்சாலையில் இருந்து விலகி மண் சாலையில் உள்ள கைக்காட்டியிடம் முறைப்படி சொல்லிவிட்டு அவரிடம் இருந்தே யானை – மனிதன் உறவை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
இடம், பொருள், ஏவலின் புலன் சாட்சியம்
கைக்காட்டி காலை ஆறு மணிக்கு எழுந்து ஏழு மணிக்குத் தன் பணியிடத்துக்கு வந்துவிடுவார். தோட்டத் தொழிலாளர்கள் தங்கும் லயன்வீட்டில் – ஒரே கூரையின் கீழ் தடுப்புச்சுவர் அமைத்து 3, 4 குடும்பங்கள் வசிக்கும் நீளமான வீடு – வசிக்கிறார். அங்கிருந்து அவர் பணியிடம் 2, 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் பலரும் கைக்காட்டிக்குத் தெரிந்தவர்களாக இருப்பதால், காலையில் அந்த வழியாகச் செல்லும் யாருடைய வண்டியிலேனும் ஏறிக்கொண்டு கைக்காட்டி கைக்காட்டிக்கு வந்துவிடுவார். வந்தவுடன் தன் சாப்பாட்டுச் சம்படத்தை தன்னுடைய சிறிய தடுப்பறையில் – ஒரு ஆள் நிற்கும் அளவே நீள அகலமுடைய அறை – வைத்துவிட்டு, நாலாபுறமும் சுற்றிப்பார்ப்பார். குளிருக்கு கைகளை உரசிக்கொள்வார். கைக்காட்டியின் பணியிடம், பெரும்பாலும், ஒரு பக்கம் தேயிலைத் தோட்டங்கள் சூழ, மற்றொருபக்கம் – அதாவது தார்ச்சாலையின் பக்கம் – துண்டுச் சோலை ஒன்றும் அமையப்பெற்றிருக்கும். துண்டுச் சோலை என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கப்பால் சிறு சிறு துண்டாக உள்ள காடு. இந்தத் துண்டுச் சோலைகள் தேயிலைத் தோட்ட நிலப்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்திருக்கும். நூற்றாண்டுகளுக்கு முன் காடுகள் வெட்டப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட பொழுது வெட்டாமல் விடப்பட்ட காட்டுப்பகுதி எனவும் துண்டுச் சோலைகளை அணுகலாம். கைக்காட்டி தார்ச்சாலையைப் பார்த்தவாரு நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு வலதுபுறம் தேயிலைத் தோட்டம், இடதுபுறம் துண்டுச் சோலை. அவருக்கு முன்னால் இறக்கம், பின்னால் ஏற்றம். அந்த ஏற்றத்தில் ஏறி மேலே மேட்டிற்குச் சென்று பின் வலதுபுறம் கீழே இறங்கினால் வரிசையாக தொழிலாளர்கள் தங்கும் லயன்வீடுகள் தெரியும். அங்கே இருந்து எட்டு மணிக்கு தேயிலை பறிப்பவர்களும், பூச்சி மருந்து அடிப்பவர்களும், கண்கானிப்பாளரும் வந்துவிடுவார்கள். ஏழு மணிக்கு வந்த கைக்காட்டி அந்த நாளை மெதுவாக அசைப்போடத் தொடங்குகிறார்.
நேற்று இரண்டு யானைகள் துண்டுச் சோலைக்குள் இருந்தன. மாலை வெளியே வரும் என எதிர்பார்த்தேன், வரவில்லை. காலை வெளியே வந்து தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலைமேட்டைக் கடந்து சென்றிருப்பதற்கான காலடித் தடங்களோ, உடைந்த மரக்கிளைகளோ எதுவும் காணவில்லை. கண்டிப்பாக இரண்டு யானைகளும் இப்பொழுதும் சோலைக்குள் தான் இருக்க வேண்டும். வெளியே வருவதென்றால் காலை 6, 7 மணிக்குள் வெளியே வந்திருக்கவேண்டும், அப்படித் தெரியவில்லை. இன்று ஒரு லாரி, பெரிய கான்கீரிட்டு குழாய்களை ஏற்றிக்கொண்டு வரவேண்டியுள்ளது. தோட்டத்திற்குள் சிறிய நிரோடை ஒன்று உள்ளது. அங்கே கான்கீரிட்டு குழாய் பதித்து ஓடை நீர் தடையின்றிச் செல்ல வழி செய்துவிட்டு, மேலே மண் அள்ளிப்போட்டு பாதை அமைக்கும் வேலை தொடங்கியுள்ளது. இன்று அந்த லாரி கான்கீரிட்டு குழாய்களை எடுத்து வருவதாக நேற்று என்னிடம் சொன்னார்கள். இப்போழுது விசையம் என்னவென்றால், அந்த ஓடையருகே ஒரு அத்தி மரம் உள்ளது. சோலைக்குள் இருக்கும் இரண்டு யானைகளில் ஒன்று எப்பொழுதும் மண் சாலையின் நடுவே மெதுவாக நடந்துசென்று அந்த அத்தி மரத்தை தும்பிக்கையால் ஆட்டி ஆட்டி பழங்களை உதிரச்செய்து, நின்று நிதானமாக சாப்பிட்டிவிட்டுத்தான் போகும். மற்றொரு யானை சோலையை விட்டு வெளியே வந்தவுடன் தோட்டத்திற்குள் சென்று அடுத்த மலையை தொட்டுவிடும். பின்பு இந்த அத்திமர யானைக்காக காத்திருந்து அது வந்தப் பிற்பாடு இரண்டும் ஒன்றாக நடந்து செல்லும். இப்பொழுது லாரி வந்தால் கான்கீரிட்டு குழாய்களை எங்கே இறக்கச் சொல்வதென்று குழப்பமாக உள்ளது. அத்திமரத்தின் அருகே ஓடைக்கு முன்னால் வைத்தால் யானைக்கு இடைஞ்சலாக இருக்கும். அந்த யானை கோபப்பட்டு அங்கு உள்ள பொருட்களை உதைத்தாலும் உதைக்கும். அத்திமரத்தைத் தாண்டி ஓடைக்கு பின்னால் குழாய்களை இறக்கலாம் என்றால் லாரி ஓடையில் போகமுடியாது, மேலும் குழாய்களை தொலைவில் வைத்தால் வேலையாட்கள் அதை உருட்டிக்கொண்டு வந்து ஓடையில் பதிப்பது சிரமம். என்ன செய்யவென்று தெரியவில்லை. லாரி ஓட்டுனரிடம் பேச வேண்டும்.
இப்படியாகக் கைக்காட்டி அந்த நாளை அசை போட்டுக் கொண்டிருக்கும்பொழுதே தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களும், பூச்சி மருந்தடிக்கும் ஆண்களும், சில கண்காணிப்பாளர்களும் வரத்தொடங்கினார்கள். எல்லோரும் யார் யாரைப் பற்றியோ கைக்காட்டியிடம் கேட்டார்கள் – ‘அவன் எங்கே’, ‘அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள்’, ‘அவர்கள் வந்தால் அங்கே போகச் சொல்லுங்கள்’, போன்ற சில பல விசாரிப்புக் கலந்த ஏவல்கள் நிகழ்தப்பட்டன. ஒரு சிலர், குறிப்பாக தேயிலை பறிக்கும் பெண்கள், யானைகளைப் பற்றி கைக்காட்டியிடம் கேட்டார்கள். உடனே கைக்காட்டி யானைகள் நேற்று இரவு சோலையில் இருந்து வெளியேறி தோட்டத்தைக் கடந்து சென்றிருக்கலாம் அல்லது இன்று மாலை வரை வெளியே வராது என கூறும் முன், நேற்று என்ன நடந்தது, யானைகள் எங்கே நின்றது, சென்ற மாதம் வந்த யானைக் கூட்டத்திற்கும் இந்த இரண்டு யானைகளுக்கும் என்ன வேறுபாடு, மாலையில் பணிமுடிந்து வீடு செல்லும் பொழுது கைக்காட்டி என்ன கணித்தார், இரவில் எவ்வாறு சிந்தனைப்பட்டார் என்று கடந்தகாலத் தொடர்ச்சியை விலாவாரியாக பேசினார். இன்று என்பது நேற்றின் தோடர்ச்சி என்பதைக் குறித்து பாடம் எடுப்பதைப் போன்று அந்தப் பெண்களிடம் பேசிக்கொண்டே போனார். அவர்களும் கைக்காட்டி சொல்வதைக் கேட்டுக்கொண்டே நடந்து தோட்டத்தின் உள் சென்று தேயிலைக் கொழுந்தைப் பறிக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெண்கள் தோட்டத்தில் கிடைமட்டமாக சிதறுண்டு ஊடுபாவி வேலை செய்யும் பொழுது கைக்காட்டி என்னிடம் திரும்பி யானைகளும் இப்படித்தான் தோட்டத்தின் நடுவே நடக்கும் என்று கூறினார். தேயிலைச் செடிகளுக்கு இடையில் உள்ள சிறிய அளவிலான ஒர் ஆள் மட்டுமே நின்று இலை பறிக்கும் அகலத்தில் அமைக்கப்பட்டப் பாதையில் யானைகளும் தன் பெரிய உடலை குறுக்கி, நீட்டி, வளைத்து ஒன்றின் பின் ஒன்றாக செங்குத்தாக நடந்து செல்லுமாம். பெண்கள் கிடைமட்டமாகச் செல்வார்கள், யானைகள் செங்குத்தாகச் செல்லும், அதுவே அவர்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்று கூறினார் கைக்காட்டி. ஆனால், கைக்காட்டி அழுத்தமாகக் சொன்னார், அந்த அத்திமர யானை இருக்கிறதே அது தோட்டத்திற்குள் நடக்காது; சாலையில் நட்ட நடுவாக வாகு எடுத்தார்ப்போல தலை மற்றும் தும்பிக்கையை வீசி வீசி நடந்து செல்லும்; அதற்கு உடல் வளையாது என்றார் கைக்காட்டி. பூச்சி மருந்தடிக்க வந்த ஆண்கள் மண்சாலையில் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தார்கள். கைக்காட்டியும் அவர்களைப் பார்த்தவாரேதான் அத்திமர யானை பற்றியும் அதன் தலை வீசி நடக்கும் உடல் வளையாத குணம் குறித்தும் பேசிக்கொண்டே போனார்.
மருந்தடிக்க வந்த ஆண்கள் மண்சாலையில் நடந்து தூரமாக போய்கொண்டே புள்ளிப்புள்ளியாக காட்சியளிக்கும் பொழுது ஒரு வண்டி பத்துப்பதினைந்து சுண்ணாம்பு முட்டைகளோடு கைக்காட்டியிடம் வந்தது. கைக்காட்டி அந்த வண்டியின் ஓட்டுனரிடம் சுண்ணாம்பு முட்டைகளை மண்சாலையில் மேல் வைக்காமல் சாலையில் ஓரத்தில் தேயிலைச் செடிகளின் கீழ் ஒவ்வொன்றாக வைக்கும் படி கேட்டுக்கொண்டார். வழமையாக அந்தச் சுண்ணாம்பு வண்டி தார்ச்சாலையில் வந்து மெதுவாக மண்சாலையில் இறங்கி 200, 300 அடிக்கு ஒரு முட்டையாக மண்சாலையின் நடுவே தள்ளிவிட்டுப் போகும். வேலையாட்கள் மருந்தடிக்கும் உபகரணங்களை தோளில் மாட்டிக்கொண்டு, ஓவ்வொரு முட்டையாக திறந்து சுண்ணம்பை தண்ணீருடனோ, வேறு இரசாயணத்துடனோ சேர்த்து அருகாமையில் உள்ள தேயிலைச் செடிகளில் தெளிப்பார்கள். பின்பு அதேபோல 200, 300 அடி இடைவேளையில் உள்ள முட்டைகளைத் திறந்து அங்கு அருகாமையில் உள்ள செடிகளில் தெளிப்பார்கள். இப்படித்தான் எப்பொழுதும் வேலை செய்வார்கள். ஆனால் இப்பொழுது அத்திமர யானை உலா வரும் பாதையாக அந்த மண்சாலை இருக்கலாம் என்பதாலும், பொதுவாகவே யானைகள் சுண்ணாம்போடு விளையாடும் மற்றும் கொஞ்சம் சுண்ணம்பை எடுத்துச் சாப்பிடும் பழக்கம் உடையதாக கைக்காட்டி நினைப்பதாலும் சுண்ணாம்பு முட்டைகளை மண்சாலையின் நடுவே தள்ளிவிடாமல், வண்டியை நிறுத்தி ஒரு ஆள் இறங்கி ஒரு முட்டையை தூக்கிக் கொண்டு போய் தேயிலைச்செடியின் அடியில் பதுக்கி வைக்க வேண்டும். பின்பு இதே போல பத்துப்பதினைந்து சுண்ணாம்பு முட்டைகளையும் 200, 300 அடி இடைவேளையில் வைக்க வேண்டும். இது பெரிய வேலை, அதுவும் யானை உறுதியாக வரும் என்று நிச்சயித்துக் கூறமுடியாத பொழுது, அப்படியே வந்தாலும் மாலையில் தானே சோலையை விட்டு வெளியே வரும் அதற்கு முன்பே மருந்தடிப்பவர்கள் வேலையை முடித்துவிடுவார்களே, என்றெல்லாம் கூறாமல் வண்டியின் ஓட்டுனர் கைக்காட்டி சொல்லியதைத் தட்டாமல் ஒப்புக்கொண்டார், அப்படியே செய்தும் முடித்தார். சுண்ணாம்பு முட்டைகள் தேயிலைச் செடிகளின் கீழ் பதுங்குவதை இப்புறம் இருந்து நிம்மதியாக கைக்காட்டி பார்த்தார், எதிர்ப் புறம் இருந்து மருந்தடிக்க வந்த வேலையாட்கள் குழப்பத்துடன் புள்ளிப்புள்ளியாக பார்த்திருப்பார்கள்.
கைக்காட்டி யானைகளைப் பற்றி பல்வேறு விடையங்களைக் கூறுவார், பேச்சின் நடுநடுவே. வெயில் அதிகமாகும் பொழுது, சூரியன் வானில் மேல் ஏறும் பொழுது, யானைகள் சோலைக்குள் புகுந்துவிடும். பின்பு, மாலை வெயில் குறைந்த பிற்பாடே யானைகள் சோலையைவிட்டு வெளியே வரும். மாலையில் பூச்சிகள், பெரியப் பெரிய கொசுக்கள் யானைகளை சோலையில் தோந்தரவு செய்யும், அதனாலும் யானைகள் சோலையை விட்டு வெளியே வருகின்றன. யானைகள் சோலையை விட்டு வெளியே வரும்பொழுதும் சரி, உள்ளே நுளையும் பொழுதும் சரி, மனிதர்கள் நடமாட்டம் அறிந்து அதன் பின்னரே யானைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு நகரும். குறிப்பாக ஒரு யானைக் கூட்டம் சோலையில் இருந்து வெளியே வரும் பொழுது மனிதர்கள் வண்டியிலோ, நடந்தோ சென்றால் அவைகள் சோலையின் உள்ளேயே நிற்கும். மனித நடமாட்டம், சப்தம், வாடை குறைந்த பின்னரே, மனிதர்கள் அங்கு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு பின்புதான் யானைகள் வெளியே வரும். அப்பொழுதும் ‘நான் வருகிறேன்’ என்று அறிவிப்பதைப் போல சிறு சப்தம் ஒன்றை எழுப்பிவிட்டுத் தான் வெளியே வருமாம். ஆனால் வெளியே வந்தப்பின்பு மனிதர்கள் அருகில் வருவதோ, சப்தம் செய்வதோ யானைகளுக்குப் பிடிக்காது. ஒரு யானைக் கூட்டம் – குட்டியும் பெரிதுமாக 12 யானைகள் – கைக்காட்டியின் அருகாமையில் உள்ள சோலையின் ஓரத்தில் ஒரு மணி நேரத்திற்க்கும் அதிகமாக நின்றுள்ளது. ஏனென்றால் தார்ச் சாலையில் மனித நடமாட்டம், வண்டிப் போக்குவரத்து குறைந்தபாடில்லை. கூட்டத்தில் இருந்த பெரிய தாய் யானை தன் தலையை மட்டும் கொஞ்சமாக சோலையின் வெளியே நீட்டி பார்த்துக் கொண்டே நின்றுள்ளது. மற்ற யானைகள் தாய் யானைக்கு பின்னால் மண்னை மிதித்துக்கொண்டு, புல்லை அல்லி வாயில் போட்டிக் கொண்டு நின்றுள்ளது. வெகு நேரம் கழித்து மனிதர்கள் நடமாட்டம் குறைந்தப் பிறகே யானைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துள்ளது. யானையின் காத்திருப்பையும் மனிதர்களின் அவசரத்தையும் ஒருசேர கைக்காட்டி பார்த்துக்கொண்டே நின்றுள்ளார். யானைகளையும் மனிதர்களையும் பினைத்துப் பார்க்கும் வாய்ப்பை கைக்காட்டி கைக்காட்டிக்கு கையளித்திருக்கிறது.
கைக்காட்டியிடம் எதைப்பற்றிக் கேட்டாலும் சென்ற ஆண்டு, சென்ற மாதம், நேற்று, இன்று, இப்பொழுது என்று சீரிய காலத்தொடர்ச்சியோடுதான் பதிலுரைப்பார். யானை எப்பொழுது சோலையைவிட்டு வெளியே வரும் என்று கேட்டால், காலையில் உள்ளே சென்றதில் இருந்து பேசத் தொடங்குவார். அந்த அத்திமர யானை இப்பொழுது வந்தால் எந்தப் பாதையில் நடந்து செல்லும் என்று கேட்டால், கடந்த ஆண்டு அது எந்தப் பாதையில் சென்றது, அப்பொழுது பாதையில் இடைஞ்சலாக ஏதேனும் இருந்ததா, இருந்திருந்தால் அந்த யானை பாதைத்தடைகளை எப்படி கடந்து அத்தி மரத்தை அடைந்தது என்று கூறிவிட்டு தற்காலத்திற்கு வருவார். யானைக்கு மட்டுமல்ல மனிதர்கள் பற்றி கேட்டலும் இப்படியாகவே பதிலுரைப்பார் கைக்காட்டி. “அவர் எங்கே”, என்று ஒரு மேலாளர் கைக்காட்டியிடம் கேட்டால், “அவர் நேற்று வந்ததப் பார்த்தேன், போனதப் பார்க்கல”; “காலையில் உள்ள இருந்தார் போல, வந்தப்ப நான் அங்கே போய்யிருந்தேன், இப்ப வந்து அதைக் கொடுத்துட்டு போனார், அதை வாங்கி உள்ளே வைத்துள்ளேன்”, என்பார். கைக்காட்டி மிக அதிகமாக உச்சரிக்கும் வாக்கியங்கள்: “வந்ததப் பார்த்தேன், போனதப் பார்க்கல”, “நேற்று இரண்டும் மேல நின்னுச்சு, இன்னைக்கு கீழ இறங்கிடுச்சு”. பொதுவாக சாதாரண மனிதர்கள் இப்படி அழுத்தமான காலத்தொடர்ச்சியோடு பேசமாட்டார்கள். “யானையை பார்த்தீர்களா” என்று கேட்டால், “பார்த்தேன் / பார்க்கவில்லை”, “அங்கே நேற்று இருந்தது / இங்கே இப்போது இருக்கிறது”, என்று ஏதாவது ஒரு காலத்தில் நின்று தான் பதில் கூறுவார்கள். கைக்காட்டி ஒரே இடத்தில் நின்றாலும் பல காலத்தை பார்ப்பவர். கைக்காட்டியின் காலத்தொடர்ச்சிக்கான அழுத்தம் அவர் பணியின் காரணமாக பழக்கப்பட்ட முறையின் வெளிப்பாடு. மனிதர்கள் மற்றும் யானைகளை ஒருசேரப் பினைத்துப் பேசுவது, நேற்றைக்கும் இன்றைக்குமான காலத்தொடர்ச்சியை அழுத்தமாக கூறுவது கைக்காட்டிக்கு விதிக்கப்பட்ட சிந்தனைக்குணம், வினைப்பண்பு மற்றும் பேச்சுமொழி. கைக்காட்டி என்ற இடம், அந்த இடத்தின் பொருள், அப்பொருள் கோரும் ஏவல்கள் அனைத்தும் சுற்றி நிகழும் நிகழ்வுகளை உள்வாங்கி சாட்சிப்பிரமாணமாக, புலன் சான்றாகக் காலவரிசையோடு கூறுவது என்பதாகவே அமையும். கைக்காட்டியின் புலன் மற்றும் மொழியில் யானைகளையும் மனிதர்களையும் ஒருசேரப் பார்ப்பதும் காலத்தொடர்ச்யோடு வினையாற்றுவதும் ஊடுபாவியுள்ளது. கைக்காட்டி ஒரு நிலத்தில் சுற்றி வேலி அமைத்துக்கொண்டு நடுவில் நிற்பவர் அல்ல. கைக்காட்டி காலங்காலமாக யானைகள் வந்து போகும் இடத்தில் தான் தானும் நிற்பதாக அவர் பிரக்ஞையில், புலனறிவில், வாழ்ந்த அணுபவ உறவில் நிச்சயிக்கிறார். இந்த இடத்தில் இருந்துதான் கைக்காட்டியின் பொருள்கோள்முறை, யானைக்கும் தனக்குமான உறவின் பொருளை விளைதல் தொடங்குகிறது. இந்த இடம் தான் கைக்காட்டியின் பொருள், மொழி, சாட்சி, புலன் அனைத்தும். அந்த இடத்தில் நின்றுப் பார்த்தால் தான் காலவொட்டம், மனிதன் – யானைத் தொடர்ச்சி, நம் மொழியில் மட்டுமல்ல நம் புலன்கள் அனைத்திலும் குடியேரும். கைக்காட்டி ஏன் அப்படியாகப் பேசுகிறார், ஏன் தேயிலைப் பறிக்கும் பெண்களின் நடையையும் யானைகளின் நடையையும் பினைத்துப் பார்க்கிறார்? ஏன் சுண்ணாம்பு முட்டைகள் பற்றியும் காங்க்ரீட்டு குழாய்கள் பற்றியும் அதிகமாகச் சிந்திக்கிறார்? ஏனென்றால் அவர் கைக்காட்டி. கைக்காட்டியின் யானை – மனிதன் உறவிலக்கணம் கைக்காட்டி என்ற இடத்தில் இருந்து எழுதப்பட்டது, எழுதப்படுகிறது, எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும், யானைகளும் மனிதர்களும் உள்ளவரை.
மனிதத்தன்மையும், யானை முன்னிலையும், பயத்தின் படர்க்கையும்
தோட்டத்தில் அனைவரும் அவரவர் வேலையை செய்யத் தொடங்கியப் பின், அனைத்து கண்காணிப்பாளரும், எதிர்பார்த்த மேலாளரும் உள்ளே சென்ற பின், கைக்காட்டி தன் காலை உணவை சாப்பிடுவதற்காக சம்படத்தைத் திறந்தார். பழைய சோறும் அதனுள் சிறிய கிண்ணத்தில் பொதிந்து வைத்த கூட்டும் ஒன்றோடொன்று கலந்திருந்தது. அதைப் பார்த்தக் கைக்காட்டி எரிச்சலோடு என்னிடம் கேட்டார் “யார் சாப்பாட்டை எடுத்து வைத்தது”. நான் அவரை குழப்பமாக பார்த்தபொழுது, அவரே சொன்னார் “நான் தான்”. ‘என்ன செய்வது எல்லாம் வயிற்றில் ஒன்று சேரத்தானே போகிறது’, என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது வனத்துறையை சேர்ந்த ஒரு களப்பணியாளர் கைக்காட்டியின் அருகில் தன் இருசக்கர வண்டியில் வந்தார். அவர் வண்டியை நிறுத்தும்மூன் கைக்காட்டி எழுந்து சாப்பாட்டுக் கை காய்ந்து போகும் படி நேற்று மாலையில் இருந்து யானைகள் எங்கே இருந்தன, எங்கே சென்றன, என்று நடந்தவை அனைத்தயும் கூறினார். மேலே சென்று தோட்டத் தொழிளாளர் குடியிருப்புப் பகுதியின் ஓரம் உள்ள சோலையில் யானைகள் நிற்கிறதா என பார்க்கும்படி கைக்காட்டி அந்த களப்பணியாளரை கேட்டுக்கொண்டார். அவரும் அன்று காலை கைக்காட்டியின் பக்கம் இருக்கும் சோலையில் இருந்து யானைகள் வெளியே வரவில்லை என்பதை ஒன்றிக்கு இரண்டுமுறை உறுதிப்படுத்திக்கொண்டு மேலே சென்று பார்ப்பதாக கூறிவிட்டுச் சென்றார். கைக்காட்டி திரும்பி வந்து தன் சோற்றில் கூட்டு கலந்துவிட்ட தன் விதியை நொந்து கொண்டே தன் காய்ந்துபோன கையை மறுபடியும் சோற்றில் வைத்தார். அவர் சாப்பிட்டு முடிக்கும் முன் ஒரு அரசுசாரா அமைப்பின் களப்பணியாளர் வந்தார். கைக்காட்டி அவரை வனத்துறையின் களப்பணியாளர் சென்ற இடத்திற்கு கைக்காட்டிவிட்டார். இவ்விரண்டு களப்பணியாளரும் நல்ல நண்பர்கள் என்றும், யானைகள் இருப்பிடம் நடமாட்டம் முதலியவற்றை அறிந்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யும் பணியில் அனுபவமும் வல்லமையும் மிக்கவர்கள் என்றும், தனக்கு இருவரையும் பல ஆண்டுகளாகத் தெரியும் என்றும், கைக்காட்டி என்னிடம் கூறினார். அவர் கூறாமல் விட்டது என்னவென்றால் யானைகள் நடமாட்டம் பற்றிய தகவல்கள் சேகரிப்பிலும் அந்தத் தகவலை பொதுமக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதிலும் கைக்காட்டி ஒரு முக்கியப் புள்ளி, பதிலீடுசெய்ய முடியாத தகவலாளி; கைக்காட்டியும் ஒரு களப்பணியளர்தானே. ஒருவாறு தன் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தக் கைக்காட்டி, சம்படத்தை மிகக்குறைந்த நீரில் சுத்தமாக அலசிக் கவிழ்த்து வைத்தார். பின்பு, யாரும் அவரிடம் பேச்சுக்கொடுக்க வராததால், சாவகாசமாக உண்டமயக்கம் போக ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேச அரம்பித்தார்.
ஒரு நாள் எப்பொழுதும் போல கைக்காட்டி தன் பணியிடத்திற்கு வந்த பொழுது அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர், தோட்டத்தில் வேலை செய்பவர், தார்ச்சாலையில் நடந்துப் போய்கொண்டிருந்தாராம். கைக்காட்டி அவரைக் கூப்பிட்டு ‘இன்று வேலைக்கு வரவில்லையா’ என்று கேட்டபொழுது அவர் வேலைக்குப் போக மனமில்லை என்று கூறி, தன் குடும்பத்தில் உள்ள ஒரு சில பிரச்சனைகளைப் பற்றிக் கைக்காட்டியிடம் மனம்விட்டு பேசியுள்ளர். கைக்காட்டி அவருக்கு ஆறுதலாக நாலு வார்த்தைகள் கூறிவிட்டு, வீட்டில் தங்காமல் வேலைக்குச் செல்வதே நல்லது, அது பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் என்று அறிவுறித்தியுள்ளர். அந்த நண்பரும் நாளை வேலைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இங்கும் அங்கும் உலாத்தியவாரே இருந்துள்ளர். பின்பு அவர் வீட்டிற்க்குச் சென்றுள்ளர். மறுபடியும் மாலையில் கைக்காட்டிக்கு அருகில் வந்து இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்துள்ளார். கைக்காட்டியும் அந்த நண்பரும் யானைகள் நடமாட்டம் குறித்தும் பேசியுள்ளனர். அந்த நாளில் யானைகள் அங்கு நடமாடுகிறது என்றும் ஒரு ஆண் யானை மாலையில் சோலையை விட்டு வெளியே வந்துவிட்டு இரவிலோ அதிகாலையிலோ மறுபடியும் சோலைக்குள் சென்றுவிடுகிறது என்று கைக்காட்டி கூற, அந்த நண்பரும் அந்த யானையை பார்த்ததாகக் கூறி, கடந்த ஆண்டில் இந்த யானை வந்ததா அல்லது எப்போழுதும் இங்கேயே இருக்கும் யானைகளில் இதுவும் ஒன்றா என்று கேட்டு, இருவரும் யானைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பின்பு அந்த நண்பர் காலார நடந்துவிட்டு வருவதாகக் கூறி சென்றுள்ளார். கைக்காட்டி வேலை முடித்து வீடு செல்வதற்காக யாராவது தெரிந்தவர் வண்டியில் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே தார்ச்சாலைக்கு வந்து நின்றுள்ளார். அப்பொழுது அந்த ஆண் யானை தோராயமாக 500, 600 அடிக்கு அப்பால் உள்ள செங்கல்லால் ஆன தண்ணீர்த் தோட்டியின் அருகில் அணுக்கமாக நின்றிருப்பதைப் பார்த்துள்ளார் கைக்காட்டி. அதே நேரத்தில் கைக்காட்டியின் நண்பர் தண்ணீர்த் தோட்டியின் மறுபுறமிருந்து எதையோ யோசித்துக்கொண்டு தலையை குனிந்த படியாக நடந்து யானையில் பின்னங்காலில் மோதியுள்ளார். உடனே யானை திரும்பி தும்பிக்கையால் அவரைத் தள்ள, தண்ணீர்த் தோட்டியில் ஓங்கி அடிபட்டு அந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். யானை உடனே அந்த இடத்தைவிட்டு வேகமாக நடந்து மறுபடியும் சோலைக்குள் புகுந்துவிட்டது. இவை அனைத்தும் நொடிப்பொழுதில் நிகழ்ந்தேறியுள்ளது. கைக்காட்டி அவர் நண்பர் யானைக்கருகில் செல்வதைப் பார்த்தவுடன் சப்தமிட்டு அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அந்த நண்பர் தன் சுய நினைவில் இல்லாமல் எதையோ நினைத்தவாறே நடந்து யானைக்கு அருகில் அல்ல யானை மேலேயே மோதிவிட்டார். யானை அவரை தள்ளிவிட்டப் பின்பு சோலைக்குள் செல்ல தார்ச்சாலையில் நிற்கும் கைக்காட்டியின் அருகில் தான் வேகமாக நடந்து சென்றுள்ளது. கைக்காட்டுக்கு கை, கால் ஒடவில்லை. யானை எப்பொழுது சோலையில் இருந்து வெளியே வந்தது, அவர் நண்பர் ஏன் வேளைக்கு விடுப்பு எடுத்தார், ஏன் அந்த தண்ணீர்த் தோட்டியின் அருகில் நடந்து சென்றார், என்று நின்றது நின்றவாறே யோசித்துக்கொண்டு தார்ச்சாலையிலேயே நின்றுள்ளார் கைக்காட்டி.
இந்தச் சம்பவத்தில் யானை – மனிதன் ‘மோதல்’ என்பது அருபமான கருத்தல்ல. உள்ளபடியே ஒரு மனிதன் யானையை மோதி உள்ளார், இறந்தும் விட்டார். கைக்காட்டி பலமுறை என்னிடம் யானைகள் அறிவானது, பொறுமையானது, நல்ல மனிதர்களை எதுவும் செய்யாது, இடத்தையும் காலத்தையும் மனிதர்களையும் ஒருசேர நல்லது கெட்டது என பிரித்தறியும் நினைவாற்றல் திறன் கொண்டது என்று கூறியிருந்தபடியால் நான் அவரிடத்தில் இப்படியாகக் கேட்டேன்: யானைகள் அறிவுடையது என்றால் அது உங்கள் நண்பர் தன்னையும் அறியாமல் தான் மோதினார் என்று புரிந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டிருக்க வேண்டும் தானே? யானைகளின் நினைவாற்றல் தனக்கு தீங்கு விளைவித்த மனிதர்களை மட்டும் பிரித்தறிந்து அவர்களை மட்டும் தாக்கும் என்றால், யானைக்கு எந்தத் தீங்கும் செய்யாத உங்கள் நண்பரை ஏன் தாக்கியது? கைக்காட்டி இரண்டுப் பொருண்மைகளிள் அழுத்தமாக பதிலுரைத்தார்; அந்த இரண்டும் பயத்தை முன்னிருத்திக் கூறினார். ஓன்று, மனிதனின் பயம். மற்றொன்று யானையின் பயம். கைக்காட்டியின் நண்பர் எதையோ நினைத்துக்கொண்டு தன்னை மறந்து மட்டும் நடந்து செல்லவில்லை, அவர் தனது பயத்தையே மறந்துவிட்டாராம். கைக்காட்டியின் மொழியில் சொல்லவேண்டுமானால் “அவரைவிட்டு பயம் போய்யிடுச்சு”. பயம் என்பது இங்கே பாதுகாப்புணர்வுப் பிரக்ஞை, அவ்வளவு தான். யானையைக் கண்டு விரோதித்து, வெறுத்து, கோபப்பட்டு வரும் பயம் அல்ல. யானையை மதித்துக் கொண்டே சிறு பயவுணர்வு மனிதர்களிடம் இருக்க வேண்டும். இந்த பயம் இல்லாமல் போனால் என்னவாகும், கைக்காட்டி தொடர்ந்தார், “நாம யானையை பயமுறுத்திடுவோம்”. அதாவது யானையைப் பயமுறுத்திவிடாத அளவுக்கு நமக்குள் பயம் இருக்க வேண்டும். இந்த மோதல் சம்பவத்தில் நிகழ்ந்தத் தவறுகள் இரண்டு. ஓன்று, அந்த மனிதருக்கு பயம் அற்றுப்போனது. இரண்டு, பயமற்றுப்போன அவர் யானையை பயமுறுத்தியது. இதுவே கைக்காட்டியின் பயயிலக்கணத்தின் மோதலுக்கான அடிப்படை சூத்திரம். யானைகளுக்கு பெரும்பாலும் மேல்பார்வை மட்டும் தான் இருக்குமாம், கீழே அதன் கால் அருகில் திடீர் என்று மோதியவுடன் அது பயந்துபோய் திரும்பியப் பொழுது தன்னியல்பாக அதன் தும்பிக்கைப் பட்டு அந்த மனிதர் தண்ணீர்த் தொட்டியில் மோதி இறந்துள்ளார். நாம் நடக்கும் பொழுதோ, கைகளை நீட்டும் பொழுதோ தெரியாமல் பூச்சியையோ எறும்பையோ கொன்றுவிடுவதுப் போலத்தான் என்று கைக்காட்டி மற்றுமொருமுறை மனிதச்செயலை முன்னிறுத்தி, உவமையாக்கி யானையின் செயலுக்கு பொருள் கூறினார். அந்த யானை சோலைக்குள் புகும்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்தக் கைக்காட்டியை எதுவும் செய்யவில்லை, ஏனென்றால் கைக்காட்டி பயத்தில் இருந்துள்ளார், அவர் பிரக்ஞையில் பயவுணர்வு இருந்துள்ளது, மேலும், யானையும் கைக்காட்டியைப் பார்த்துப் பயப்படவில்லை. அதனால்தான் யானை தன்னை எதுவும் செய்யவில்லை என்பது கைக்காட்டியின் உப விளக்கம். யானை பயத்தில்தான் தும்பிக்கையை வீசியது என்று விளக்கக் கைக்காட்டி மற்றுமொரு குறிப்பைக் கூறினார். அஃதாவது யானை தன்னை துன்புறுத்தியவனை நினைவில் வைத்து நேரம் பார்த்துத் தாக்கும். அப்பொழுது தான் தாக்கி அடிபட்ட மனிதனை விட்டு வெகு நேரம் போகாமல் அந்தச் சம்பவ இடத்திலேயே நிற்கும். ஆனால் இச்சம்பவத்தில் யானை அந்த மனிதரை முழுமையாகப் பார்க்கக்கூட இல்லை, உடனே அந்த இடத்தில் இருந்து விலகி சேலைக்குள் புகுந்துள்ளது. அதனால் இது பயவெளிப்பாடே என்று கைக்காட்டி பயத்தின் பொருளை பயத்தின் பின்னொட்டுச் செயலைக் கொண்டு விளக்கினார்.
இப்படியாக பயத்தை – மனிதர்களுக்கு பயம் வேண்டும், யானைகளை பயமுறுத்திவிடாதபடி – மிக முக்கியமான இலக்கணமாக் கொண்டு மோதலை விளக்கினார் கைக்காட்டி. ஒரு விமான விபத்திற்குப் பின் அதன் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து விபத்தின் போது என்ன நடந்தது என்று பகுத்தாராய்வதைப் போல பயம் என்ற கருப்புப் பெட்டியைத் திறந்து யானை – மனிதன் மோதலை விளக்கினார் கைக்காட்டி. யானை அறிவுடையதுதான், நினைவாற்றல் உடையதுதான் இருப்பினும் பயத்தில் எதுவும் எடுபடாது. மனிதனும் அறிவுடையவன்தான், நினைவாற்றல் உடையவன்தான் இருப்பினும் பயம் இல்லாமல் போனால் எதுவும் எடுபடாது. இறந்துபோன அந்த மனிதர் அந்த இடத்திற்கு புதியவர் அல்ல, அங்கேயே பிறந்து வளர்ந்து, அங்கேயே வேலை செய்பவர். மேலும் அவருக்கு யானைகள் நடமாட்டம் குறித்துப் பொதுவாகவும் அன்றைய நாளிலும் தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக எதையோ யோசித்துக் கொண்டு தன் பயத்தை இழந்து யானையை பயமுறுத்தி அவர் இறந்து விட்டார். “யானை துரத்தித் துரத்தித் கொல்ல ஆரம்பிச்சா இங்க நாங்க வாழவே முடியாதே” என்று மோதல் பிற்றிய கருத்திற்கு எளிமையான உரை எழுதினார் கைக்காட்டி. மோதல் என்றால் மனிதனோ யானையோ மற்றவரை துரத்தித் துரத்தித் துன்புறுத்தி, சேதத்தையும் இழப்பையும் ஏற்ப்படுத்துவது அல்ல. மோதல் என்பது பயம் அற்றத் தருணம்; மோதல் என்பது பயத்தின் சமனிலை குலைதல்; யானைக்கு பயத்தை ஏற்படுத்தாமல் தன்னகத்தில் பயத்தை வைத்துக் கொண்டால் மோதல் ஏற்படாது என்பது கைக்காட்டியின் மோதல் குறித்தான பொருள்கோள் முறை. உள்ளுர்காரர் / வெளியூரில் இருந்து வந்தவர்கள், யானையைப் பற்றிய புரிதல் உடையவர்கள் / இல்லாதவர்கள், வண்டியோட்டும் பொழுது / நடந்து செல்லும் பொழுது, பகல் / இரவு, மழைக்காலம் / வெயில் காலம் என்று மோதலுக்கு ஒரு இலக்கணமும் இல்லை. மோதல் காலத்தொடர்ச்சி அற்றது, இடம் – பொருள் – ஏவலுக்கு அப்பாற்பட்டது. மோதல் ஒரு தருணம், பயம் அற்றுப்போன அறுதியிட்டுக் கணிக்க முடியாத தருண வெளிப்பாட்டு நிகழ்வு என்கிறார் கைக்காட்டி. எல்லோருக்கும் பிரச்சனைகள் குழப்பங்கள் வாழ்வில் உள்ளன. அவைகளை பொருட்படுத்தாமல் பயப்பிரக்ஞையை இழக்காமல் இருக்க முயச்சிப்பதே யானை – மனிதன் மோதலைத் தடுக்கும் வழி என்பது கைக்காட்டியின் முடிவுரை. இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவென்றால் இறந்து போன நபர் கைக்காட்டியின் நண்பர் என்றபொழுதும் கைக்காட்டி யானைப் பக்கம் நின்று வாதிடுகிறார், நியாயம் பேசுகிறார். அதே நேரம் அவரது நண்பரை குறைகூறி அவமரியாதை செய்யவும் இல்லை. மேலும் கைக்காட்டி அரசின் கடமை, கடவுளின் கருணை, மனிதர்களின் அறம், இயற்கையின் நீதி போன்ற டாம்பீகமான தேஜஸ் பொருந்திய சொல்லாடல்களில் சிக்கிக்கொள்ளாமல் பயத்தைக் கொண்டு மோதலை விளக்கியது – அது மனித இறப்பை மையப் படுத்தியதாக, துன்பியல் முடிவையே கொண்டிருந்தாலும் – கேட்பதற்கு அமைதியாகவும் நிறைவாகவும் இருந்தது. உயிர்கள் மோதிப் படும்பாட்டை பயத்தின் மெய்ப்பாடாக விளக்கியது தன்னிலை முன்னிலை படர்க்கை அனைத்திலும் பயத்தை ஊடுபாவச்செய்தது.
பசியே மெய்பாடென்ப
கைக்காட்டி பெரும்பாலும் மதிய உணவைச் சரிவர சாப்பிடமாட்டார். அவரை யாரும் கையைப்பிடித்து தடுக்காவிட்டாலும் பணி நிமித்தமாக சிலபல அவசரங்கள், விட்டகுறை தொட்டகுறையாக சிதறுண்ட ஏவல்கள் வந்துபோய்க் கொண்டே இருக்கும். தோட்டத்திற்குள் ஆட்கள் வண்டிகள் வந்துபோவது மட்டுமல்லாமல் சில நாட்களில் பறித்த தேயிலையை எடைபோடும் இடம் கைக்காட்டிக்கு அருகில் அமைந்துவிடும். அப்பொழுது எடைபோடுபவர் மற்றும் பல பெண்களும் அவர்கள் பறித்த தேயிலையை மூட்டையில் கட்டிக்கொண்டு கைக்காட்டிக்கு அருகில் வந்து நிற்பார்கள். கைக்காட்டி அவர்களுக்கு உதவுவார் அல்லது குறைந்தபட்சம் பேச்சுக்கொடுப்பார். இதுமட்டுமல்லாமல் யானையோ மற்ற காட்டு விலங்குகளோ சாலையைக் கடக்கும் பொழுது வண்டிகள் அதிகமாக சாலையில் போய்க்கொண்டிருந்தால், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வனத்துறைக் களப்பணியாளர்கள் கைக்காட்டியை உதவிக்கு அழைப்பார்கள். கைக்காட்டியும் சாலையில் நின்றுகொண்டு வண்டிகளை நிறுத்தி, ஓலி – ஓளி எழுப்பாமல் பயணிகளை வண்டிக்குள்ளேயே அமர்ந்திருக்கும்படி அறிவுருத்துவார், எவரேனும் ஆர்வமிகுதியிலோ கைப்பேசியில் படம் எடுக்க வேண்டும் என்ற உந்துதலிலோ விலங்கின் அருகில் செல்லப் பார்த்தால் அவர்களை எச்சரிப்பார். இப்படி உதிரியாக சில வேலைகள் வந்துகொண்டே இருப்பதால் கைக்காட்டி மதிய உணவை ஆற அமர நிம்மதியாக உட்கொள்ள முடியாது. ஆகையினால் கைக்காட்டிக்கு மாலை 4, 5 மணிக்கு ஒருவகையான பசி அல்லது இரவு உணவு கண்முன்ணே வருதல் என்ற வேதியல் நிகழ்வு அல்லது பகல் கனவு முறையே அரங்கேறும். ஐந்து மணிக்கு அனைத்து பணியாட்களும் வீடு திரும்பியவுடன் கைக்காட்டியும் கிளம்பிவிடுவார். ஆனால் பசிக்கனவு அதிகமாக வயிற்றைக்கிள்ளும் நாட்களில் நாலரை மணிக்கே தயார் நிலையில் பாதி அமர்ந்தமேனியாக பாதி நின்றமேனியாகவும் இருப்பார். இப்படியாக அமையப்பெற்ற ஒரு நாலரை மணிக்கு நான் கைக்காட்டியிடம் பொதுவான ஒரு கருத்தைப் பற்றிக் கூறினேன். அஃதாவது, யானைகள் காட்டில் உணவில்லாமல் இருப்பதால் தான் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகிறது, மேலும் மனிதர்கள் காட்டை அழித்து அங்கே குடியேறியதால் யானைகள் உணவு கிடைக்கும் இடங்களை இழந்து நம் வீடுகள் மற்றும் நியாயவிலைக் கடைகளிலும் உள்ள அரிசி, சக்கரை, வெல்லம் முதலியவற்றைச் சாப்பிட வருகிறது. இவ்வாறு நான் தொடர்ச்சங்கிலியாக காரணக்காரியத்தோடு கூறிமுடிக்கும் முன்பே கைக்காட்டி எரிச்சலோடும் சிறிய கோபத்தோடும் கூறினார், “அதான் வந்திருச்சில்ல அதுக்கு பசி, வயிறு பெரிசு, சாப்பிடட்டுமே”. கைக்காட்டியின் கோபம் கலந்த எரிச்சல் அவர்தம் நாலரை மணிப் பசியை பொருட்டு ஏற்பட்டதா அல்லது நான் யானையின் உணவுத்தேடலை அதன் பெரிய பசியை விலக்கிவிட்டு பெரியதொரு காரணக்காரிய பொருள்கோள் முறையில் விளக்கியதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. முன்பொருமுறை நான் கைக்காட்டியிடம் யானைகள் எந்த மாதங்களில் அதிகமாக வரும், எதையெதை சாப்பிடும் சாப்பிடாது என்று கேட்டு அனத்திய பொழுதும் இதேபோல சலித்த எரிச்சலோடு கைக்காட்டி, “யானைகள் எப்பொழுதும் வரும், போகும், சாப்பிடும்” என்று கூறினார். யானைகளுக்கு உணவுத்தேவை என்பது என்ன, அவைகள் எந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடும், எப்படி அந்தப் பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும், எந்த மாதத்தில் எந்தப் பாதையில் யானைகள் வரும், எப்பொழுது அண்டை மாநிலம் செல்லும், என அனைத்தும் அறிந்தவரே கைக்காட்டி. இருப்பினும் பசியை காரணக்காரியப் படுத்துவது, அது யானையில் நலனுக்காகவே என்றாலும், கைக்காட்டிக்கு ஏனோ சலிப்பை எரிச்சலைத் தருகிறது.
யானையின் பசி மிக முக்கியம் கைக்காட்டிக்கு. ஆனால் பசியை ஒரு காரணத்தின் விளைவாகப் பொருள்கொள்வதில் கைக்காட்டிக்கு தீராச்சலிப்பு உள்ளது. காடு அழிகிறது, மனிதக் குடியேற்றம், காட்டில் உணவு இல்லாமல் போவது, இவை அனைத்தும் யானையின் பசிக்கு காரணமாக இருக்கலாம் ஆனால் பொருள் ஆகாது. யானையின் அறிவு மற்றும் நினைவாற்றல் நீண்டதொரு காலத்தொடர்சியில், பல நூறு ஆண்டு அளவீட்டில் அமைந்துள்ளது; யானையின் பயம் கணிக்கமுடியாத ஒரு நிகழ்த்தருணம், அத்தருணம் யானையிடம் காலகாலமாக அமையப்பெற்ற அறிவு மற்றும் நினைவற்றலை குலைத்துவிடும் அளவுக்கு வீரியமுடையது; ஆனால் பசி என்பது நெடியக் காலம் மற்றும் நொடித் தருணம் ஆகிய இரண்டிலும் வைத்து விளக்க முடியாத ஒன்று. பசியென்பது பயத்தைப்போல ஒரு புறக்காரணத்தால் – மனிதர்களின் பயமற்ற செயல்பாடுகள் – தன்னியல்பாக உடலில் வெளிப்படும் விடையம் அல்ல. யானை நேற்று ஒரு இடத்தில் நிற்கும் இன்று வேறு இடத்தில் நிற்கும், ஒரு தருணத்தில் பயப்படும் மற்றோரு தருணத்தில் அமைதியாக இருக்கும் – இவற்றைக் காலத்தோடர்ச்சியோடு பார்த்துப்பேசிக்கொண்டே இருக்கும் கைக்காட்டி, யானையின் பசியை நேற்று / இன்று, அப்பொழுது / இப்பொழுது, பார்த்தேன் / பார்ப்பேன் என்று பிரித்தறிய மாட்டார். கைக்காட்டியின் காலத்தொடர்ச்சி இல்லாமல் போகும் இடம் பசி. பசிக்கும் உணவுக்கும் கூட பெரியதொடர்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை, கைக்காட்டியின் பசியிலக்கணப்படி. பசியை அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக்கவில்லை கைக்காட்டி. மாறாக அனைத்து உயிர்களும் பசியின் முன் பொதுவானது என்று பார்க்கிறார். இதை இப்படியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன் – பசி உயிருக்குள் செயல்படுவது இல்லை, பல்வேறு உயிர்களும் பசி என்னும் குடையின் கீழ் செயல்படுகிறது. பசி உயிறின் உள்ளுறைந்த செயல்பாடல்ல, மெய்ப்பாடும் இல்லை, காலம் மற்றும் இடம் சம்மந்தப்பட்டது கிடையாது, உணவுக் கிடைக்கப்பெறாமை என்ற காரணத்தின் விளைவும் அல்ல என்றால் பசி என்பது என்ன? பசியெனப்படுவது மீபொருண்மையாக உயிர் / மெய், மனிதன் / விலங்கு, உணவின் இருப்பு / இன்மை, காலத்தின் சீரோட்டம் / கணிக்கமுடியாத் தருணம் என எந்த எதிர்மையிலும் அகப்பட்டுக்கொள்ளாத மிகச்சாதாரணமான அசைவியக்கம். இந்தச் சாதாரணத்தைக் கைக்காட்டியைப் போல மதியவுணவு சரிவர சாப்பிடமுடியாதவர்களுக்குத் தான் தெரியும் போல இருக்கிறது. பசியை இப்படியாக இலக்கணப்படுத்தினால் புதிய உறவுமுறைகளும் மாற்றுப் பொருள்கோள்முறைகளும் நமக்குக் கிடைக்கலாம்.
அடிப்படையில், கைக்காட்டிக்கு சொந்த இடமோ, வீடோ கிடையாது. தனிச்சொத்து என்ற ஒன்று இல்லாத மனிதன் யானையை அணுகுவதற்கும் நிலமுடைய விவசாயி, தோட்ட முதலாளி, சொந்த வீட்டில் வசிப்பவர், சுற்றுலா விடுதி உரிமையாளர் யானையை அணுகுவதற்கும் மறுதலிக்க முடியாத வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் கைக்காட்டியின் யானை – மனிதன் உறவு குறித்தானப் பார்வைகள், காத்திரமான பொருள்கோள் முறைகள், கோபமான உரைமொழிகள் அவர்தம் தனிச்சொத்தற்ற வாழ்வின் நீட்சியாக எனக்கு வெளிப்படவில்லை. தனிச்சொத்து இல்லாத அனைவரும் கைக்காட்டி ஆகிவிட முடியாது. கைக்காட்டி தினசரி கைக்காட்டியில் நிற்பதால் கைக்காட்டியாகிறார். யானை – மனிதன் மோதலைத் தடுப்பதுவோ, கூட்டிருப்பை நுகருவதோ, எதிர்கொள்ளலை போதிப்பதோ, கைக்காட்டியின் வேலைத்திட்டத்தில் கிடையாது. இழப்பு மற்றும் இறப்பு குறைந்தால் யாரும் கைக்காட்டியை பாராட்டப் போவதும் இல்லை, இழப்பு அல்லது இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தால் யாரும் கைக்காட்டியை கைக்காட்டப்போவதும் இல்லை. கைக்காட்டி மோதல் – கூட்டிருப்பு – எதிர்கொள்ளல் என்ற தார்ச்சாலையில் நிற்பவர் இல்லை, தார்ச்சாலையின் பக்கவாட்டில் அதையொட்டி ஆனால் அதிலிருந்து பிரிந்து நிற்பவர். கைக்காட்டி யானையின் மீது மேட்டுக்குடி பாசத்தையோ, தெய்வாம்சம் பொருந்திய லட்சணங்களையோ திணிக்க மாட்டார். மிக முக்கியமாக, மற்றவர்கள் “தான்” சொல்வதை கேட்கிறார்கள் / கேட்கவில்லை என்ற பெருமை / இயலாமை கைக்காட்டியிடம் இல்லை. அவர் பாட்டிற்கு அவர் வேலையை செய்துகொண்டே இருப்பவர்தான் கைக்காட்டி. அப்படியானால் யானை – மனிதன் உறவில் கைக்காட்டி என்பவர் யார்? அவர் வெறும் கைக்காட்டி மட்டுமே; யானையிடம் மனிதனையும், மனிதனிடம் யானையையும் கைக்காட்டிக்கொண்டே இருக்கும் ஒரு இடைக்கோடு; யானை “-” மனிதன். கைக்காட்டி என்பவர் யானையையும் மனிதனையும் முற்று முழுதாக பிரித்தே எதிர்கொள்ளும் முற்றுப்புள்ளியோ, ஒரு அரூபத் தொடர்வரிசைக் கூட்டிருப்பை சுட்டி நிற்கும் காற்புள்ளியோ, யானையா அல்லது மனிதனா என மோதல் கேள்வியேழுப்பும் சாய்வுக்கோடோ (/) அல்ல. மாறாக, கைக்காட்டி என்ற இடைக்கோடு மனிதன் மற்றும் யானைக்கான தனித் தனிப் பொருளையும் இருப்பையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ளாமல், மனிதன் மற்றும் யானையை சேர்க்கவும் செய்கிறது, அதே நேரம் ஒன்றுசேர்ந்துவிடாமல் அவரவர்கான இடத்தில் பொருள் மயங்காமல் இருக்கவும் செய்கிறது. இந்தக் கோட்டின் உராய்வில் தான் மனிதனுக்கும் யானைக்குமான உறவுப் பொருள் பொதிந்துள்ளது.
நன்றிக்குறிப்பு
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிதி நல்கையிலும், மாதுரி ரமேஷ் மற்றும் ஆனந்த குமாரின் நெறியாள்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் ஒரு பகுதி இந்தக் கட்டுரை.
Disclaimer : The content and opinions expressed are that of the author, and do not necessarily reflect the views of Azim Premji University.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
