அது நமக்கான தூக்கு மேடை

மலையாளம் : எம்.சுகுமாரன்

ஆங்கிலம் : ஏ.ஜே.தாமஸ்

தமிழாக்கம் : தி.இரா.மீனா

’எனக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது, நான் ஓர் இரவிலாவது குற்றவாளிகளுக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய அளவு வெளிச்சமும் புக முடியாத கற்கோட்டையில் தூங்குவேன் ’ என்று ஒருவன்  நினைப்பானே ஆனால் அது முட்டாள்தனம். நீங்கள் முட்டாள்களின் சுவர்க்கத்திற்கான சாவியைத் தேடுகிறீர்கள்! வேறு என்ன சொல்ல முடியும்! முதுமையும், சுருங்கிய தோலும், நரைமுடியும், பற்களற்ற தோற்றமும் கொண்ட தூக்கிலிடும் பணியைச் செய்பவன் தனது கடைசி மூச்சை இழுக்கும் போதும், என் மரண தண்டனைக்கான சாரக்கட்டு கரையான்களால் அரிக்கப்பட்டு நொறுங்கி விழும் போதும் நான் அனுதாபப் படுவேன்.

நீங்கள் அந்தக் கிராமத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க முடியாது. 

நான் நீண்ட தூரம் நடந்து விட்டேன். ஆலமரத்தினருகே போன போது ஒரு பெண்ணின் அழுகுரலைக் கேட்டேன். காற்று மலைகளை மோதிக் கடக்கும் போது, எழும் புலம்பல் போல, அவள் விம்மல் அலைகள் என் காதில் விழுந்தன. சுற்றி அங்கே கூடியிருக்கிறவர்கள் ஏன் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்? நான் சிறிது நேரம் நின்றேன். ஒரு ஜோடிக் கால்கள் மிக வேகமாக முன்னோக்கிப் போய் அந்தக் குடிசையின் கதவை உதைத்துத் திறக்குமென எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்த அநாகரிகமான விவசாயிகள் மூக்கில் விரல் வைத்தபடி—அவமானத்தின் அடையாளம் ––இரக்கம் அல்லது எதிர்ப்பு — தமக்குள்ளே மெதுவான குரலில் பேசியபடி போய் விட்டனர். அந்தப் பெண்ணின் ஓலம் கோயில் மணி போல இருக்கிறது என்பது போல. என் ரத்தம் கொதித்தது. பனையோலையால் வேயப்பட்ட அந்தக் கதவை நான் மெதுவாகத் தள்ள அது திறந்து கொண்டது. வியர்வை பெருகியிருந்த கழுத்தைப் பிடித்து, அந்த மனிதனைத் தூக்கினேன். வியர்வைக் குளியலில் கிடந்த பெண்ணிடம் அவள் ஆடைகளைத் தூக்கி எறிந்தேன்: ’உன்னை ஏற்றுக் கொண்டு வரும் பெண்கள் பலர் உலகிலிருக்கும் போது ஏன் ஒரு பெண்ணை நீ கற்பழிக்க வேண்டும்? இவள் உன் தங்கை என்றும், நான் உன்னிடத்தில் இருப்பவன் என்றும் கற்பனை செய்து பார். இந்த உலகின் காற்றைக் கூட நான் சுவாசிக்க நீ அனுமதிக்க மாட்டாய் ,இல்லையா? குளத்தின் குளிர்ந்த தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டு விட்டுப் போ. உடலும் ,உள்ளமும் குளிரட்டும்.’ நான் அவனைத் துன்புறுத்தவில்லை; அறிவுரைதான் சொன்னேன்

மந்தமாகத் ,தடுமாறியபடி குற்றவுணர்வில் அவன் குடிசையை விட்டு வெளியேறினான். நான் அங்கு நிற்கவில்லை. நன்றியுணர்வில் அந்தப் பெண் தரும் பாலும், பழங்களும் எனக்கு வேண்டாம்.

நான் அந்த இடத்தை விட்டுத் தலை நிமிர்ந்து நடந்த போது , கிராமத்து மக்கள் அமைதியாக நின்று என்னை கவனித்துக் கொண்டிருந்தனர்.

யாருக்கும் இது தெரிய வேண்டாம். கிராமத்தின் அதிகாரிக்கு இந்தச் சம்பவம் பற்றித் தெரிய வந்தால், அவர் பரிசுகளால் என்னைக் குளிப்பாட்டுவார். பட்டுச் சால்வை, தங்கக் கைச் செயின், என் பெயர் பொறித்த ஒரு அழகான கத்தி ஆகியவைகளைக் கொடுப்பார். 

என்னைப் போன்ற ஓர் ஆள் எப்படி தண்டனைக்குள்ளாக முடியும்? பூமியில் நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு சொர்க்கத்திற்குப் போகும் பாதை பட்டால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருக்கும், நான் அந்த வழயில் வந்தவனில்லை! என் பாதை வித்தியாசமானது!

ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்தும், சண்டையிட்டும் கொண்டிருந்த காலத்தில், நான் மனிதனாக காற்று, தண்ணீர் மற்றும் உலகத்தின் வெளிச்சம் தேடி இங்குமங்கும் ஓடியிருக்கிறேன். 

ஞாபகத்தின் முதல் மொட்டு முகிழ்த்த போது…

பாம்பு கடித்து நஞ்சேறியவரின் உடலிலிருந்து விஷத்தை எடுக்க, அப்பா அந்த விஷப் பாம்புகளை வரவழைத்து, அவற்றைக் கொண்டே நஞ்சை எடுக்க வைப்பார். அதற்குப் பிறகு அந்தப் பாம்புகள் தம் தலையைத் தரையில் அடித்துக் கொண்டு இறந்து போகும். அதன் விளைவாக வெண் நோயின் அணுக்கள் தரவாட்டைச் சுற்றிப் பறக்கும். குறி சொல்லும் சடங்கிற்காக அப்பா சோழிகளைப் பரப்பி வைத்திருப்பார். ஆவி, பேய் ஆகியவற்றை அவற்றின் குடியிருப்பிலிருந்து வரவழைத்து பட்டை மரத்தில் கட்டி வைப்பார்.

என் அப்பா தண்டனைக்குத் தகுதியானவர். அவருடைய ஐம்பது வயதில் அது அவருக்குக் கிடைத்தது. பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி இருக்க, காலியான சாராய பாட்டில்களின் இடையே அவர் கிடந்தார். கன்னங்களில் ரத்தம் ஓட, அவருடைய உடல் உயிரற்றதானது. அப்பா என் ஞாபகங்களில் நின்றுவிட நான் தனியனானேன்.

நேற்றிரவு இவையெல்லாம் ஞாபகத்தில் வந்தன. நான் என் அப்பாவிற்காக வருத்தப்படவில்லை. அவர் பல தண்டனைகளால் துன்பப்பட வேண்டி இருந்த பொழுதில் சாவு என்ற மிகப் பெரிய தண்டனை அவரைக் காப்பாற்றி விட்டது என்று்தான் நான் நினைத்தேன்.

நிலம் உழப்பட்டிருந்ததால், மண் மணம் காற்றில் அடர்த்தியாகப் பரவியிருந்தது, ஒதுக்கப்பட்ட காதலியைப் பார்ப்பது போல சூரியன் பூமியைப் பார்த்திருந்தான். கோடைக்கால  நள்ளிரவு நிலவொளி நேரத்திலிருந்து, மதியச் சூரியன் எழும் வரை அவன் வயலில் உழுது கொண்டிருந்தான். எந்தக் கணத்திலும் அவன் மயங்கி விழலாம். அவன் அப்படியிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. என் இடது கையால் அவனுக்கு உதவி செய்தேன். இளநீரை அவன் வறண்ட உதடுகளின் வழியாக வாய்க்குள் ஊற்றினேன். அவனைத் தூக்கித் தென்னை மர நிழலில் படுக்க வைத்தேன்.’ நன்றாக ஓய்வெடுத்துக் கொள். சோர்வு முழுவதும் நீங்கிய பிறகு வயலுக்குள் போய் வேலை செய்யலாம். அந்த நான்கு கால் பிராணிகளும் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்’

சூரியக் கதிர்களைப் பிரித்தபடி நான் நடந்தேன். கிழக்கில் என் தலையின் நிழல் விழும் வரை நான் நடந்து கொண்டிருந்தேன்.

பருவ மழை மேகங்களின் மழைத்துளிகள் என் தலைமுடியில் விழுந்து கொண்டிருந்தன. பருவங்கள் மாறுகின்றன.

தலைக்கு மேல் பனித் திரைக்குப் பின்னால் முழு நிலவு படர்ந்திருந்தது. கீழே விழுந்த இலைகளுக்குக் காவலாளியாய் மரங்கள் நின்றிருந்தன.

பனிக் கூடாரத்தினடியில் காட்டுவாசிகள் தாம் உருவாக்கிய சொக்கப்பனை சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். டிரம்களைச் சத்தமாக முழக்கியபடி யானைகளையும், காட்டுப் பன்றிகளையும் அவர்கள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரவு உணவு சாப்பிடவில்லை.

அவர்களின் நடுவில் நின்று கொண்டு ’நீங்கள் பசியில் எரிந்து கொண்டு இருக்கிறீர்கள்! வெறும் வயிற்றோடு நின்று கொண்டு பயிர்களைப் பாதுகாக்கிறீர்கள்! இந்தப் பயிரை விதைத்த நீங்கள்தான் இதை அறுவடை செய்ய வேண்டும். அவர்கள் பயிர்களை விதைக்கவில்லை.அவர்களின் முற்றத்திற்கு தானியங்கள் போய்ச் சேருவதற்கு முன்னால்,நீங்கள் இன்றிரவு அறுவடை செய்து விடுங்கள்!’ என்று கர்ஜித்தேன்.

நிலா வெளிச்சத்தில், அந்தக் குளிரில் அவர்கள் வயலுக்குள் இறங்கி, இரவு முழுவதும் நின்று அறுவடை செய்தனர். சில மாதங்களுக்கு முன்னால் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டுதான் பயிர்களை விதைத்தனர்.

விடிவெள்ளி எழுந்த போது,வயல்கள் காலியாகக் கிடந்தன. நான் சாப்பிடுவதற்காகத் தினையைத் தேனோடு கலந்து வைத்து, என் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் நான் அவர்களைக் கடந்து வெகு தூரம்— பள்ளத்தாக்குகள், நிலங்கள், ஆறுகள் ஆகியவற்றைக் கடந்து மலைப் பகுதியையும் கடந்து விட்டேன்.

எனக்கு கிரீடம் தேவையில்லை. மாலைகளுக்காக என் கழுத்து குனியாது.

இந்தக் களஞ்சியத்தின் வராந்தாவில் நான் பல காலம் வாழ்ந்திருக்கிறேன். ஓர் ஒற்றை மாடோ அல்லது எருமையோ இல்லாத கொட்டகை, ஓர் எருதோ அல்லது கலப்பையோ இல்லாத நிலம் ,ஒரு பொட்டுக் தானியம் இல்லாத களஞ்சியம் ,என்று எதுவுமே என்னைப் பாதித்ததில்லை. என் பசி அவர்களுடையதுதான். என் விழிகளினூடே பாய்ந்தவை அவர்களின் கண்ணீர். என் காலடிச் சத்தத்திற்குப் பாம்புகள் வழிவிட்டன. மந்திரங்களின் மூலம் அவற்றை வரவழைத்துக் கடிபட்டவனின் உடம்பிலிருந்து விஷத்தை எடுக்கச் செய்து, நான் அவற்றை என்னிடம் இருத்தவில்லை, காலடியில் படும் எறும்புகள் கூட நசுக்கப் படுவதைத் தவிர்க்கிறேன்.

அந்த நாளின் அந்தி பரவத் தொடங்கியிருந்தது. ஆரம்பக் கால கட்ட சூல் போல பயிர்கள் மயக்கமாகச் சாய்ந்திருந்தன. நடுவிலுள்ள குளம் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது.  மலையின் மேல் சூரிய அஸ்தமனம் நிகழ, வானம் துக்கமாயிருந்ததைப் பார்த்தேன். அந்தத் துக்கத்தின் அழுத்தத்திற்குச் சாட்சியாய் காற்று அதிகாரம் செலுத்தியது. மூன்று திரிகளுடனான உயரமான வெண்கல நிலவிளக்கின் சுடர்கள் பிறந்த சிசுக்களைப் போல நெளிந்தன.

நான் மாங்காய் ஊறுகாயைத் தொட்டுக் கொணடு அரிசிக் கஞ்சியைக் குடித்தேன். கால்களைக் குறுக்காகப் போட்டு, வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு, லட்சக் கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என் சிஷ்யர்கள் வந்தனர்.

என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு ’நாங்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்?’ என்று கேட்டனர்.

’குழந்தைகளே! நீங்கள் ஒரு முத்துச் சிப்பி போல இருக்க வேண்டும். இது ஒரு பழங்கதை போல உங்களுக்கு இருக்கலாம். அது இப்படித்தான் நடக்கும்: ஓர் ஒற்றை நட்சத்திரத்தால் உருவமைக்கப்பட்ட விண்மீன் தொகுப்புக் காலத்தில், மதியம் மழை பெய்யும் போது, ஒரு துளி மழை சிப்பிக்குள் விழும். அந்தத் துளிதான் முத்தாக மாறும். அதனால் விண்மீன் தொகுப்பு எழும் போது, தண்ணீரின் மேற்பரப்பில் சிப்பி அந்த மழைத் துளிகளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும். சிப்பியில் மழைத் துளி விழுந்தவுடன், தன் ஓட்டை மூடிக் கொண்டு, கடற் படுகைக்குள் சென்று, தான் முழுமையான முத்தாவதற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும். நீங்கள் அந்தச் சிப்பியைப் போல இருக்க வேண்டும். முதலில் அறிவுரைகளைச் செவி கொடுத்துக் கேட்டுப், பின் அது பற்றிச் சிந்தித்து, பின்….

அப்போதுதான் அவர்கள் வந்தார்கள். நான்கு பேர். ஒரே மாதிரி உயரம், உடல்வாகு.

’குழந்தைகளே, போய் விட்டு, நாளை வாருங்கள். அவர்கள் யார், எதற்கு வந்திருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்.’

குழந்தைகள் மௌனமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

’வாருங்கள்.அருகே வாருங்கள்.’ இருட்டு அவர்களின் முகங்களை மறைத்து இருந்தது.

மூன்று பேர் வரிசையாக வர, நான்காமவர் சிறிது இடைவெளி விட்டு வந்தார். நிலவிளக்கு வெளிச்சத்தில் அவர்களின் உறுதியான தசைகள் மிளிர்ந்தன.

’நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்?’

அவர்களில் மூன்று பேர் பற்களைக் கடித்தனர். தாடை எலும்புகள் நடுங்கின. கண்கள் நெருப்பைக் கக்கின. நான்காமவன் புருவத்தை நீவினான். உணர்ச்சிகளை வெளிக்காட்டாத வகையில் அவன் திரிகளின் மேலான ஜுவாலையில் தன் பார்வையை நிறுத்தினான். அவன் உதடுகள் அசைந்தன.

’எங்களுடன் வெளியே வாருங்கள்.’

என் உடம்பு நடுங்கவில்லை. என் ரத்தக் கொதிப்பும் அதிகரிக்கவில்லை.

“எங்கே ?”

நான்காமவன் மெதுவாக முன்னால் வந்தான்.’ வா! எங்கள் கிராமத்தின் நீதிமான் உன்னை அழைத்து வரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார்.’

’என்னையா?’

’ஆமாம், நண்பனே! நீ தண்டிக்கப்படப் போகிறாய்!’

பிறகு அந்த மூன்று பேரும் வேகமாக என்னை நோக்கி வந்தார்கள். அவர்களின் இறுக்கமான பிடியில் என் தோள் நசுங்கியது.அவர்கள் என்னை இழுத்தனர். நான் முற்றத்தில் தடுக்கி விழுந்தேன். என்னை மூர்க்கமாகத் தூக்கினர். எங்கிருந்தோ பலமான காற்று வீச, நிலவிளக்கு அணைந்தது.

’நான் என்ன தவறு செய்தேன்?’ அவர்கள் என்னை இழுத்துப் போகும் போது கேட்டேன்.

’முதலில் நீதிமானிடமிருந்து தண்டனை பெற்றுக் கொள்! குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிற அவர்தான் எங்கள் கடவுள்’ மூவரில் ஒருவன் உறுமினான்.

நான்காமவன் உணர்ச்சியற்ற முகத்தோடு அமைதியாகப் பின்னால் நடந்து வந்தான்.

நான் பலவீனமாக உணர்ந்தேன். கூரான கற்கள் குத்தியதால் பாதங்களில் கீறல்கள்..கால்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

’கீழே இறங்கு!’

சகதியான படிகளில் இறங்கினேன். நாங்கள் இப்போது ஒரு மலை அடிவாரத்தில் இருந்தோம். பன்னிரண்டாம் நாள் சந்திரனைப் பார்க்க முடிந்தது. குடசப்பாலை பூக்களின் மணத்தை என்னால் உணர முடிந்தது.

’இடதுபுறம் போ!’

இரண்டு தீப்பந்தங்களின் ஒளி தெரிந்தது. காற்று அணைத்து விடும் என்று பயந்தவை போல அவை மின்னின.

அவர்கள் என்னை வேகமாகத் தள்ளினார்கள். மண் பரப்பப் பட்டிருந்த அந்த முற்றத்தில் நான் விழுந்தேன். வலி தாங்க முடியாமல், தலையைத் தூக்கினேன். பெரிய புருவங்களும், ஆந்தைக் கண்களும், கரும் உதடுகளும் உடைய தோற்றத்தோடு நீதிமான் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு இரண்டு பக்கத்திலும் அடிமைப் பெண்கள் நின்று கவரிமானின் தோலாலான விசிறியால் விசிறிக் கொண்டிருந்தனர்.

’இந்தக் கிராமத்தின் மரபுப்படி, நீ முதலில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்! குற்றவாளிகள் மட்டுமே இங்கு தண்டிக்கப் படுவார்கள்! குற்றப் பத்திரிக்கையை நாங்கள் பிறகு சமர்ப்பிக்கிறோம்.முதலில் தண்டனையைப் பெற்றுக் கொள்!’ என்று நீதிமான் தன் கையை உயர்த்திச் சொன்னார்.

நீதிமான் இறகை மைக் கூட்டில் நனைத்தார். நால்வரில் ஒருவனை அழைத்து’ உங்களில் முதலில் நிற்பவன் வந்து, இவன் வலது கையை வெட்டட்டும்!’ என்றார்.

என் கையிலிருந்து பீறிட்ட ரத்தம் கையில் மின்னும் அரிவாளோடு நின்றிருந்தவனின் முகத்தில் தெறித்தது. நான் மண்ணில் சுருண்டு விழுந்தேன். என் வலது கை செயலற்று இரத்த மண்ணில் கிடந்தது. முதலாமவன் அருகில் வந்து மருத்துவ மூலிகைகளைக் கசக்கி, சாற்றைப் பச்சைப் புண்ணில் பிழிந்தான். ரத்தம் நின்ற பிறகு, தரையில் என்னை நிமிர்த்தி உட்கார வைத்து விட்டுப் போனான்.

’உன் குற்றம்! கிராமத்தில் ஒரு குடிசையில் நெருக்கமான அணைப்பில் இருந்த ஓர் ஆரோக்கியமான ஆணையும், இளமையான பெண்ணையும் வலுக் கட்டாயமாகப் பிரித்து வைத்தாய்’ என்று நீதிமானின் குரல் வந்தது.

இருட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.’ வம்சம் வளர வேண்டும் என்ற எண்ணத்திலானது எங்கள் உறவு. அந்த உறவு வேர்கள் என்னோடு மட்டும் தொடர்வதில், முடிவதில் விருப்பம் காட்டி வந்தவரிடமிருந்து இந்தக் கொடுமைக்காரன் என்னைப் பிரித்து விட்டான். உறவின் உச்ச நிலையில் நான் கத்தியதும், ஓலமிட்டதும் நிஜம்தான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த மனிதன் என்னைப் பார்ப்பது கூட இல்லை. என் வம்சம் இறந்து போனதாகிறது.’ என்று அவள் அழுது கொண்டே நீதிமானிடம் சொன்னாள் . நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதபடியே அவள் இருட்டிற்குள் போய் விட்டாள்.

’உன் வலது கைதான் அவளிடமிருந்து அவனைத் தூக்கி எழுப்பி அவர்களைப் பிரித்தது. அதனால் நீ உன் வலது கையை இழந்தாய்.’ நீதிமான் உறுமலான சிரிப்போடு சொன்னார்.

தீப்பந்தங்களில் எண்ணெய் ஊற்றப்பட்டது. அவை மிகுந்த உத்வேகத்தோடு எரிந்தன.

.’உன் இரண்டாவது குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்கப் போகிறாய். கவனம்! இரண்டாமவன்! இவனுடைய இடது கையையும் வெட்டு! ’ அவர் மீண்டும் இறகைக் கையில் எடுத்துக் கொண்டார்.

என் இடது கையிலிருந்து பீறிட்ட ரத்தம் கையில் மின்னும் அரிவாளோடு நின்றிருந்த இரண்டாமவனின் முகத்தில் தெறித்தது. கசக்கப்பட்ட இலைகளின் சாறு காயத்தில் போடப்பட்டதும், இடது கையின் இரத்த வேகம் நின்று விட்டது.

எனது இரண்டு கைகளும் செயலற்று மண்ணில் கிடந்தன.

அவன் வெளிச்சத்தற்கு வந்தான். மண் நிறத்தில் ஒரு கோவணம் கட்டி இருந்தான். எலும்புகள் துருத்தி வெளியே வந்து விடுமளவிற்கு உடம்பை வளைத்துக் கொண்டு, என்னைக் காட்டி ’இவன் தன் இடது கையால் என்னைத் தாங்கிப் பிடித்தான். எனக்கு இளநீர் தந்தான். நிலத்தில் படுக்க வைத்தான். நான் தூங்கி விட்டேன். எனக்குத் தந்தது போல அங்கிருந்த பலருக்கும் அவன் இளநீர் தந்து, நிலத்தில் தள்ளி ,அவர்களை மயக்கமடையச் செய்திருக்க வேண்டும். இருட்டிய பிறகு தான் எனக்கு முழிப்பு வந்தது; உணர்வு வந்தது. வயலில் உழுவதற்குத் தாமதமானால், விதைப்பு தாமதமாகும், விதைப்பு தாமதமானால், அறுவடையும் தாமதமாகும் என்பதை உணர்ந்தேன். இந்தக் கொடியவனின் லட்சியம் உற்பத்தியைத் தாமதமாக்கி, சந்தையில் தானியத்திற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கிராமத்து மக்களுக்கும், கிராம தலைவரான நீதிமானுக்கும் பகையை உருவாக்குவதுதான்.’ என்று அவன் நீதிமானிடம் சொன்னான்.

’அந்த மனிதனுக்குதவிய உனது இடது கையை இழந்ததை நினைத்து விசனப்பட மாட்டாய் என்று நினைக்கிறேன்.’ என்று அவன் போன பிறகு நீதிமான் சொன்னார்.

நீதிமானின் இறகு இன்னொரு தடவை அசைந்தது. ’ மூன்றாமவன் முன்னால் வரட்டும்! மூன்றாவது தண்டனையாக, இனி பார்க்கவே இயலாத வகையில் அவன் கண்ணிமைகள் குதிரை முடியால் தைத்து மூடப்பட வேண்டும்.’ இவனுடைய நோக்கம் கிராமத் தலைமைக்கும், கடும் உழைப்பாளிகளான காட்டுவாசிகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுதான்.’

அந்தக் கூர்மையான ஊசி மென்மையான கண்ணிமைகளைத் துளைத்தது. நான் அசையவில்லை. முழுவதுமாக உணர்ச்சியற்றுப் போனேன்.எனக்கு இனி வலியே தெரியாது. பார்வையை இழந்தேன். என் முன்னால் இருப்பது இருட்டின் அரண்மனைதான்.

’நான்காமவன் முன்னால் வரட்டும்! நான் இவனுக்கு நான்காம் தண்டனை தரப் போகிறேன்! இவன் உயிருடனிருந்தால் இது போன்ற குற்றங்களைச் செய்வான். கடற்கரையிலிருக்கிற தூக்கு மேடையில் ஏற்றி இவனைக் கொன்று விடுங்கள்!’

நான்காமவன் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. ஒரு வாழும் பிணமாய் அவன் தோளில் கிடந்தேன். 

என் தோளில் அவன் மூச்சு மென்மையாய், இளம் சூடாய் விழுந்தது. முழுவதுமான மனக் கசப்போடு அவன் அதை விழுங்கும் சப்தம் என் காதில் விழுந்தது. 

இருட்டின் அடர்ந்த காட்டில் நான் தடுமாறி விழுந்தேன். ஓர் இழை வெளிச்சம் எங்கிருந்தாவது கிடைக்குமா? இந்த நான்காமவன் எனக்கு ஓர் வெளிச்சமாக இருப்பானா? என்னைக் காப்பாற்றுவதற்குப் பிறந்தவனாக இவன் இருக்கக் கூடாதா?

செயலற்றுப் போன என் நாக்கை அசைக்க முயன்றேன். என் எல்லா சக்தியையும் திரட்டித் ’ தோழரே’ என்றழைத்தேன்.

’ஹு’ம்”

’என்னைக் காப்பாற்றுங்கள்! இப்போது உங்களால்தான் அது முடியும். நீங்கள்தான் என் காப்பாளி!’

அவன் அமைதியாக நடப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தான். கடலின் சீற்றம் மிக அருகில் கேட்டது. தூக்கு மரம் எவ்வளவு தொலைவில்  இருக்கும்?

நான் விம்மினேன்.

’எந்தக் குற்றமும் செய்யாத என்னை இப்போதாவது காப்பாற்றுங்கள்!”

’அழாதே! அழுகை கோழையின் சொத்து !’

நான் திடுக்கிட்டேன். அவன் குரல் சன்னமாக இருந்தது. அலைகளின் பெரும் இரைச்சலின் மத்தியிலும் அது எனக்குக் கேட்டது. 

’நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். தூக்கிலிட மாட்டேன். நீ எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். உண்மை என்னும் சாம்ராஜ்யத்தில் உனக்கு கிரீடமும், செங்கோலும் வழங்கப்படும். அமைதியாக இரு!’

என் நரம்புகளில் மிச்சமிருந்த ரத்தம் கொண்டாட்டத்தில் குதித்தது. நான் காப்பாற்றப்படுவேன். என் காயங்கள் ஆறியவுடன், என் சிஷ்யர்களின் உதவிகளை நான் பெறலாம். என் கால்கள் பலமாக இருக்கின்றன. நான் இந்தக் கிராமத்தை விட்டுப் போய் விட முடியும். வேறோரு கிராமச் சத்திரத்தில் நான் தூங்க முடியும். களைத்திருக்கும் அவர்களுக்கு இளநீர் தர எனக்குக் கைகள் இல்லை; அவர்கள் பசியில் வாடும் போது, தானியங்கள் நிறைந்த வயல்களைச் சுட்டிக் காட்டக் கைகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கின்ற பறவைகள் போல வாழும் தரத்துடானவர்களுக்கு எதிரான வேளாண்மையை உயர்த்தும் நிலையை அமலாக்க வேண்டுமென அறிவரை சொல்வேன்.’ உன் ரத்தத்துடன் இணையானவர்களைக் கண்டுபிடி…தெளிவாகக் கண்டறி. ஒழுங்கு படுத்து..’

கடல் கண் முன்னால் இருந்தது.காற்றிலிருந்து தெறித்த உப்பு நீர் என் காயங்களைக் குத்தியது.

’தோழரே!’ நான்காமவன் தன்னையே அழைத்துக் கொண்டான்.

’நீ இப்போது தூக்கு மரத்தினருகில் இருக்கிறாய். நான் உன்னைத் தூக்கில் இட மாட்டேன். அப்பாவி ஒருவன் இறப்பதை என்னால் பார்க்க முடியாது. நாம் அந்தப் பாறைகளில் ஏறி மறுபக்கம் போய் விடலாம். இப்போது நீ தப்பித்து விட்டால் என்னவெல்லாம் செய்வாய்?’

’நான் இந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி விடுவேன். வயல்களின் வழியாக நடந்து வேறோரு கிராமத்திற்குப் போய் விடுவேன். ஜனங்களுக்கு சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பேன். இழப்பதற்கு இப்போது என்னிடம் எதுவுமேயில்லை!’

நான்காமவன் நின்று விட்டான்.

’ஏன் நின்று விட்டாய்?’

’ஒன்றுமில்லை. இப்போது நாம் மிக உயரத்தில் இருக்கிறோம். கீழே ஆர்ப்பரிக்கும் கடல். அதன் அலைகள் தம் தலைகளைக் கரடு முரடான சிற்றோடைகளோடு மோதி அழியும்.’

’ஹூம்.’

’நாம் கீழே இறங்குவோம்!’ நிரந்தரமாக நீ தப்பிப்பாய்!’.

நான்காமவன் தான் இருந்த இடத்திலேயே நின்று விட்டான்.

பாறைகள் அழுதன. கடற்பறவைகள் கீரீச்சிட்டன. 

கணங்கள் அருமையானது.

’கீழே இறங்கு தோழா!’

நான் இறங்குகிறேன்.’

என் இதயத் துடிப்பும், அவனுடையதும் போட்டி போட்டுக் கொண்டு …டிக்..் டிக்..டிக்.. டிக்… டிக்..டிக்..

அந்தக் கணத்தில், கடலின் மேற்பரப்பை நான் தொடுவதற்கு முன்பே ’நீந்தித், தப்பித்துப் போய் விடு. மேற்குப் பகுதியில் ஒரு வலுவான அடிமட்ட இழுப்பு இருக்கிறது. அந்தப் பக்கம் மட்டும் ஒரு போதும் போய் விடாதே’ என்று அவன் சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது.

***

மொழிபெயர்ப்பு   

சிறுகதை       :  மலையாளம்

மூலம்         :  எம்.சுகுமாரன் 

ஆங்கிலம்      :  ஏ.ஜே. தாமஸ்

தமிழில்        :  தி.இரா.மீனா                     

நன்றி : The Greatest Malayalam  Stories Ever Told  A.J.Thomas ,   Aleph Company ,India 2023


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.