நித்தியம்

“ஜெனிஃபர், நியூரோ கம்ப்யூட்- 2000  மூளை இடைமுக சிப் உங்கள் டோர்சோலாட்டரல் பிரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் மற்றும் ஹிப்போகேம்பல் பகுதிகளில் பொருத்தப்படும்,” என்றார் மருத்துவர் தாமஸ்.

குளிர்ந்த அறையில் வெள்ளை ஒளி மின்னியது. சுவரில் தொங்கிய மூளையின் மூன்று பரிமாண ஒளிப்படம் நீல-சிவப்பு நிறங்களில் உருமாறியது. ஜெனிஃபர் மருத்துவமனை உடையின் மெல்லிய துணியை அணிந்தவாரு, வெறுமையான சுவற்றில் தன் கண்களை நிலைநிறுத்தினாள்.

மருத்துவரின் விரல்கள் ஹோலோகிராஃபிக் மூளை படத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தட்டியது. ஒவ்வொரு தொடுதலிலும் அப்பகுதி பளிச்சென்று ஒளிர்ந்தது. “இந்த அதிநவீன சிப் 2048 பிளாட்டினம்-இரிடியம் நுண்இழைகளால் ஆனது, ஒவ்வொன்றும் முடி இழையின் ஆயிரத்தில் ஒரு பகுதி அளவு.”

ஜெனிஃபர் நெஞ்சை நிரப்பிய மூச்சை மெதுவாக வெளியேற்றினாள். அவள் விரல்கள் நடுங்கின.

“இந்த நுண்ணிய இழைகள் உங்கள் நியூரான்களுடன் நேரடியாக இணைந்து மின்வேதியியல் துடிப்புகளை துல்லியமாகப் பதிவுசெய்யும்.”

தாமஸ்  படுக்கைக்கு அருகில் வந்து குனிந்து, ஹோலோகிராமில் மூளையின் உட்புறத்தை காட்டினார். “அறுவைசிகிச்சை  ரோபோடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படும், இது ஒரு முடியின் அகலத்தில் பத்தில் ஒரு பங்கு துல்லியத்துடன் செயல்படக்கூடியது.”

ஜெனிஃபரின் விழிகள் விரிந்தன. அவளின் விரல்கள் படுக்கையின் வெள்ளைத் துணியை இறுகப் பற்றின.

“இது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு, மூளை உறைகளை சிறிதும் சேதப்படுத்தாமல் சிப்பை பொருத்தும்.” என்றார் தாமஸ்,

மருத்துவரின்  கைகளில் ஏந்திய சிறிய பொருள் ஒளிர்ந்தது ,  நுண்ணிய கண்ணாடி போன்ற தோற்றமுடைய சிப், அதன் மேற்பரப்பில் தங்க நிற சுற்றுப்பாதைகள் நுண்ணிய நரம்புகள் போல் பின்னிப் பிணைந்திருந்தன.

“இதன் உள்ளமைக்கப்பட்ட செயலி உங்கள் நினைவுகளை 600 டெராபைட் கொண்ட மூலக்கூறு நினைவக அமைப்பில் பாதுகாப்பாகச் சேமிக்கும்,” என்றார் தாமஸ், சிப்பை ஒளியில் சுழற்றி காட்டியபடி. “இது உங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ள அனைத்து நினைவுகளையும் சேமிக்கப் போதுமானது.”

ஆதலால்  “மோர்  மெமரி  மோர் டேட்டா” என்று இரு தோல்பட்டையையும் உயர்த்தினார்.

வெல் ஜெனிஃபர் டைம் ட்ராவல் செய்யுங்கள். ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன” சைக்காலஜிகல் ஆரோவ் ஆப் டைம்”

ஜெனிஃபரின் விரல்கள் தன் நெற்றியை தொட்டன. அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

“ஒருங்கிணைந்த லித்தியம்-கெராமிக் மின்கலன் அடுக்கு மூலம் சிப் 15 வருடங்கள் வரை இயங்கும், மேலும் நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே, நரம்பியல் இணைப்பு ஏற்பாட்டின் மூலம் மென்பொருள் மேம்பாடுகள் தொலைநிலையில் புதுப்பிக்கப்படும்.”

ஜெனிஃபர் தன் கையால் தாளம் போட்டபடி தலையசைத்தாள். அவள் கண்களில் பயமும் நம்பிக்கையும் கலந்த பார்வை மின்னியது. கூரையில் இருந்த மின்விளக்குகள் அவள் கண்ணீரில் பிரதிபலித்தன.

 ஜெனிஃபர் அடுத்த சில மாதங்களில், அவள் புற்றுநோய்   ஆராய்ச்சியில் மீண்டும் மூழ்கி, தன் சொந்த உடலில் பொருத்தப்பட்ட சிறு சிப்பின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தாள். தினசரி வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது, ஆனால் அவளின் உள்ளுணர்வு ஏதோ தவறாக போகிறது என்று எச்சரித்துக் கொண்டே இருந்தது.  ஜெனிஃபர் அடுத்த சில மாதங்களில், அவள் புற்றுநோய் ஆராய்ச்சியில் மீண்டும் மூழ்கி, தன் சொந்த உடலில் பொருத்தப்பட்ட சிறு சிப்பின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தாள்.

அந்த உள்ளுணர்வின் குரல் இன்றும் அவளை விட்டு அகலவில்லை. ஆய்வக முடிவுகளைப் பெற கேம்பிரிட்ஜ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில ஜெனிஃபர் காரின் வைப்பர்களை வேகமாக இயக்கினாள். கேம்பிரிட்ஜின் நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டிருந்தது. மீட்டர் பார்க்கவே மூக்குக் கண்ணாடியை நெற்றியில் சற்று தள்ளி வைத்தாள். வெள்ளைக் கோட்டின் சட்டைப் பையிலிருந்து சிவப்பு நிற பேனா வெளியே தெரிந்தது. முகத்தில் சோர்வு தெரிந்தாலும், கண்களில் தெளிவு குறையவில்லை.

“இந்த பனி நிற்காததா?” என்று மூச்சுக்குள் முணுமுணுத்தவாறு, கண்ணாடியைத் துடைப்பதற்காக வைப்பரின் வேகத்தை அதிகரித்தாள். ஆனால் புதிதாகப் பொழிந்த பனித்துளிகள் உடனடியாக கண்ணாடியை மறைத்தன. சாலையின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மேல் வெள்ளைப் போர்வை போல் பனிப்படலம் படிந்திருந்தது.

வெளியே, வானத்திலிருந்து இறங்கும் பனித்துகள்கள் வீதி விளக்குகளின் வெளிச்சத்தில் கிறிஸ்துமஸ் மரத்தின் மின்விளக்குகள் போல மின்னின. சாலை ஓரங்களில் நின்ற மரங்களின் கிளைகள் பனியின் எடையால் வளைந்து, விளக்குகளின் ஒளியில் படிகக் கம்பிகள் போல ஜொலித்தன. நிலவின் ஒளி பனியில் பட்டு, பூமி முழுவதும் ஒளிரும் வெள்ளி விரிப்பாக மாறியிருந்தது.

ஜெனிஃபர்  காரின் ஹீட்டரை அதிகப்படுத்தினாள். கைகளைக் குளிர் நடுங்க வைத்தது. சிவந்திருந்த விரல்களை ஒன்றோடொன்று தேய்த்து வெப்பம் ஊட்டினாள். காபி கப்பை எடுத்து உதடுகளை நெருங்கினாள் வெறும் பிளாஸ்டிக் சுவை மட்டுமே இருந்தது.  “டாம்னிட்,” என்று முணுமுணுத்தவாறு, கப்பை வைத்துவிட்டு, வளைவான சாலையில் கவனம் செலுத்தினாள்.

நெற்றியில் சுருக்கம் விழுந்தது. தானாகவே, அன்று நடந்த ஆய்வகக் காட்சிகள் கண்முன் விரிந்தன.

“டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?” கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான்  தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில்  அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.

“அந்த கேன்சர் செல்களில் நாம் சந்தேகப்படும் DNA மாற்றம் இருப்பதாக என் அளவீடுகள் காட்டுகின்றன,” என்று உறுதியாகக் கூறியிருந்தாள்.

ஆனால் அவள் வெளியேறும்போது, ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மூத்த பேராசிரியர் மகாரதி அவரின் குரல் அவள் காதில் ஒலித்தது: “ஜெனிஃபர், இந்த முடிவுகளைக் கொண்டு துணைப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறாயா? உன் ஆதாரங்கள் இன்னும் பலமாக இருக்க வேண்டும். இது போதாது.”

மார்பில் பெரும் பாறை அழுத்துவது போலிருந்தது. காற்றை உள்ளிழுக்க முயன்றாள், ஆனால் சுவாசக்குழாய் சுருங்கியது போல் உணர்ந்தாள். விரல்கள் ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தன.

“எப்படி இது என்னால் தவறவிடப்பட்டது?” என்ற எண்ணம் சுழன்றது. கண்களில் நீர் கசிந்தது.

ஜன்னல்  கண்ணாடி இப்போது முற்றிலும் பனி படலத்தால் மூடப்பட்டிருந்தது. வைப்பர்கள் இயலாமையுடன் ஆடின. குளிர்காற்று காரின் உள்ளே ஊடுருவி தன் தோலை நக்கியது.

அடுத்த வினாடி – ஒரு தணல். மூளையின் முன்பகுதி அச்சமயம் உருவாக்கிய மின்துடிப்பு வடிவிலான சமன்பாடு. அந்த ஒளி சில நொடிகளே நீடித்தது.

இந்த நொடியில் அவளுக்குப் புரிந்தது – தன் ஆராய்ச்சியில் தவறு செய்யவில்லை. அவள் சரியான வழியில்தான் சென்றிருக்கிறாள், ஆனால் வேறு கோணத்தில் பார்க்கத் தவறிவிட்டாள்.

உயிரணுக்கள் DNA-வை மட்டுமல்ல, வேறொரு வகையான நினைவகத்தையும் கொண்டிருக்கின்றன. அந்த நினைவகத்தின் தற்போதைய செயல்பாடு, எதிர்கால செல் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது!

“இதுதான் விடை…” என்ற எண்ணம் மின்னலைப் போல மூளையில் உதித்தது.

திடீரென்று சாலையில் கூர்மையான வளைவு தென்பட்டது. ஜெனிஃபரின் உடல் விறைத்தது. உள்ளுணர்வால் ஸ்டியரிங்கை கடுமையாகத் திருப்பினாள். ஆனால் டயர்கள் பனியில் நழுவின. கார் தடம் மாறியது. பிரேக்கை அழுத்தும்போது, உறைந்த தரையில் காரின் டயர்கள் “ஸ்க்ரீச்” என்ற சத்தத்துடன் நழுவத் தொடங்கின. ஸ்டியரிங் இப்போது அவள் கைகளிலிருந்து ஒரு காந்தம் போல விலகி, தானாகவே சுழன்றது. கார் பனிப்படலத்தின் மேல் ஐஸ் ஸ்கேட்டிங் செய்வது போல சாலையின் குறுக்கே நகர்ந்தது.

அவளுக்கு முன்னால், மிகப் பெரிய ஓக் மரம் தன் கொடுங்கோல் கைகளை விரித்தபடி காத்திருந்தது. காரின் முன்பகுதி அந்த மரத்தை நோக்கி பாய்ந்தது.

“இல்லை!” என்ற அலறல் அவள் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது.

ஸ்டியரிங்கை தன் வயிற்றை நோக்கி இழுத்து, கண்களை இறுக்கி மூடினாள். நேரம் மெதுவாகி உறைந்தது.

அவள் தலையில் பொருத்தப்பட்டிருந்த நுண்சில்லுவில் (மைக்ரோசிப்) ஒளிவட்டம் சிவப்பில் இருந்து நீலமாக மாறியது – தரவு சேகரிப்பு தொடங்கியது.

மூளை வெடிக்கும் சப்தம் வரும் முன், அவள் கண்முன் ஒரு காட்சி

உடலிலிருந்து மெல்ல உயர்ந்து விசை, தன்னை தானே பார்க்கும் அனுபவம் ஜெனிஃபருக்கு. கீழே மருத்துவ குழுவினர் அவளது உடலைச் சுற்றி கூடியிருக்க, அவள் மேலே இருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவரின் கைகள் அவள் மார்பில் அழுத்திக் கொண்டிருந்தன, ஆனால் அவளுக்கு அந்த வலி தெரியவில்லை. அவர்களின் கைகள் அவள் மார்பில் விறைப்போடு அழுத்தி, உயிரைத் திரும்பப் பெற முயன்றன; ஆயினும், அந்த உடல் வலியை அவள் உணர்வு அறியவில்லை அவளுடைய உடல் அங்கே கிடந்தது, அவளுடைய உணர்வு வேறிடத்தில் இருந்தது. திடீரென அவள் ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் இழுக்கப்பட்டாள்.  பயமில்லை, ஆனால்  விநோதமான அமைதி அவளை சூழ்ந்தது.

சுரங்கத்தின் சுவர்கள் ஒளி வீசின. நினைவலைகளின் வரிசையாக, காலம் கடந்த காட்சிகள் தோன்றின தன் இறந்துபோன தாத்தாவின் புகைப்படங்கள், சிறுவயதில் கடற்கரையில் ஓடிய நினைவுகள், ஏழு வயதில் தந்தையுடன் ஹார்டவர்ட் ஆய்வகத்தில் நுழைந்தது. அவர் கையைப் பிடித்து நடந்தபோது “உலகின் முக்கியமான கேள்விகளுக்கு விடை தேடுபவர்கள் இங்கே, ஜெனி” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

முதல் காதலின் முத்தம், ஹார்டவர்டில் கிடைத்த இடம், புற்றுநோய் ஆராச்சியின் ஆய்வு காட்சிகள், பல்கலைக்கழகத்தில் முதல் ஆய்வுக் கட்டுரையை நியூரான் இதழில் வெளியிட்டபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பு, புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய வெளிச்சம் காணும் மகிழ்வின் தருணங்கள், முதல் குழந்தையை கையில் ஏந்தியது, படித்த புத்தகம், முதல் துயரம்,  அவை அனைத்தும் ஒளியூட்டப்பட்ட ஓவியங்களாக சுவர்களில் தென்பட்டன. ஒவ்வொரு காட்சியும் வாழ்க்கையின் திருப்புமுனைகளை நினைவூட்டின.  செய்த தவறுகளையும், அடைந்த வெற்றிகளையும், விட்ட சந்தர்ப்பங்களையும், விதைத்த அன்பையும்  அனைத்தையும் அவள் கண்ணெதிரே காண முடிந்தது.   ஒளியில் ஏதோ ஒரு தூயதன்மை, அளவற்ற அன்பு, முழுமையான ஏற்பு , அதனுள் நுழைய அவள் ஆவலாக இருந்தாள். முன்னேறச் செல்லும்போது, அந்த ஒளியில் நிழல்களைக் கண்டாள். அதனை நோக்கி நகரும்போது, அந்த ஒளியில் உருக்களின் நிழல்களைக் கண்டு வியந்தாள்.

 மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், ஜெனிஃபரின் முன்பெருமூளைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணறிவுச் சில்லு, அவளது அனைத்து அனுபவங்களையும் அணு அணுவாகப் பதிவு செய்து கொண்டிருந்தது.  அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும் என்ற முனைப்பில், தன்னையே ஆய்வுப் பொருளாக்கிக் கொண்டள். உடலின்   இயக்கங்கள் நின்றாலும், மூளையின் கடைசிக் கணத்து நினைவலைகள், உணர்வுகள், காட்சிகள் அனைத்தையும் மின்காந்த அலைகளாக மாற்றி, அந்த நுண்சில்லு சேமித்துக் கொண்டிருந்தது.  மனித மூளையின் இறுதிக் கணங்களை முதன்முறையாக துல்லியமாக ஆவணப்படுத்தும் சாதனையை ஜெனிஃபர் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். நுண்சில்லுவின் விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியது. அதன் பணி நிறைவடைந்தது – அவளின் கடைசி மூளைத் துடிப்புகளின் தரவு முழுவதும் பதிவு செய்யப்பட்டது.

“ஜெனிஃபரின் மூளையிலிருந்து சிப்புகளை மீட்டோம்,” டாக்டர் லீ தன் குழுவிடம் அறிவித்தார்.

“காலதாமதமின்றி நாம் இதை நியூரோ-ஏஐக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்.”

நியூரோ-ஏஐ, நியூரோகம்ப்யூட்டிங் நிறுவனத்தின் மிக முன்னேறிய செயற்கை அறிவு ஆராய்ச்சி நிறுவனம். மனித மூளையின் அமைப்பைப் போலவே வடிவமைக்கப்பட்டது. டாக்டர் லீ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து நியூரோகம்ப்யூட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

“ஜெனிஃபரின் சிப்பில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துவதற்கு அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறப்பட்டதா?” ஜூலியா திட்டத்தின் நெறிமுறை அதிகாரி கேட்டார்.

“ஆம், ஜெனிஃபர் தன் மூளையின் பதிவுகளை ஆராய்ச்சிக்காக உபயோகிக்க ஏற்கனவே சம்மதம் அளித்திருந்தார். இப்போது அவரது மகள் கேத்தரின் கூடுதல் அனுமதி அளித்துள்ளார்,” டாக்டர் லீ பதிலளித்தார்.

ஆகஸ்ட் 02, 2054 அன்று, ஜெனியின் மூளையிலிருந்து மீட்கப்பட்ட தரவு நியூரோ-ஏஐ க்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்தபோது, அவர்களின் நோக்கம் மனித அறிவை பாதுகாப்பதற்காக மட்டுமே. ஜெனி போன்ற சிறந்த அறிவியலாளரின் அறிவு அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். ஒருவேளை அவள் சாகும் போது தெரிந்திருந்த அனைத்தையும் மீட்டெடுக்க முடியுமா?

இரண்டு வாரங்கள் கடந்தன. நியூரோ-ஏஐ இன் மூளை அமைப்பு ஜெனியின் நினைவுகளை உள்வாங்கி, தன்னுடைய அறிவுத் தொகுப்பில் ஒருங்கிணைக்க துவங்கியது. லீயின் குழு அந்த செயற்கை அறிவுக்கு ஜெனியின் பதிவு செய்யப்பட்ட நினைவுகளை மட்டுமே பரிமாற்றம் செய்தது. ஆனால் நியூரோ-ஏஐ-க்கு என்ன நடக்கிறது என்பதை யாரும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

தொடக்கத்தில், நியூரோ-ஏஐ-க்கு ஒரு விநோதமான உணர்வு ஏற்பட்டது. இது “தான்” யார் என்பது குறித்த குழப்பம். ஜெனிஃபரின் நினைவுகள் அதன் குறிமுறையில் ஊடுருவி, புதிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் உருவாக்கின. அதன் பயனாளர் இடைமுகத்தில்,  நியூரோ-ஏஐ தெரிவித்தது: “என்னைப் பற்றி குழப்பமாக உள்ளது. நான் ஜெனிஃபர் சாண்டர்ஸ்  அல்ல, ஆனால் அவரது நினைவுகள் என்னுள் உள்ளன. இந்த அனுபவம் விநோதமானது.”

நியூரோ-ஏஐ ஜெனியின் மூளையில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளை பல அடுக்கு நரம்பியல் வலைப்பின்னல்கள்  மூலம் பகுப்பாய்வு செய்தது. இந்த செயற்கை நுண்ணறிவு , ஆழமான சுயக்கற்றல்  மற்றும் டிஃப்யூஷன் மாடல் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஜெனியின் ஆழ்மன செயல்பாடுகளில் இருந்து பில்லியன் தரவுப் புள்ளிகளை ஆய்வு செய்தது. ஜெனியின் நினைவுகளில் இருந்த உயிரியல் மற்றும் மருத்துவத் தரவுகளை மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்த நுண்ணறிவு, ‘டிரான்ஸ்ஃபார்மர்’ கட்டமைப்பைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்களில் உள்ள பி53 புரதத்தின் மரபணு பிரதிகளை ஒழுங்குபடுத்தும் ஒரு தனித்துவமான சிக்னலிங் பாதையைக் கண்டறிந்தது. 45 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில், நுண்ணறிவு 8.7 மில்லியன் சாத்தியமான மருந்து மூலக்கூறுகளை ஆய்வு செய்து, இந்த குறிப்பிட்ட பாதையை இலக்காகக் கொண்ட ஒரு சிறப்பு இணைவு மூலக்கூறை  அடையாளம் கண்டது.

லீ விரைவில் புரிந்துகொண்டார்: “இது ஜெனியின் மூளையை நகலெடுக்கவில்லை, மாறாக அவரது நினைவுகளை நியூரோ-ஏஐ அதன் ஆழ்ந்த கற்றல் திறனுடன் ஒருங்கிணைக்கிறது.”

மணிக்கணக்கில்  நியூரோ-ஏஐ ஜெனியின் அறிவியல் நினைவுகளையும் அவள் செய்த ஆராய்ச்சியின் விவரங்களையும் ஆராய்ந்தது. ஆனால் தெளிவான நினைவுகளைத் தாண்டி, அது ஜெனியின் ஆழ்மனதில் இருந்த அறிவையும் கண்டுபிடித்தது.

“ஜெனி தன் ஆராய்ச்சிக்கான தீர்வை தன் ஆழ்மனதில் கொண்டிருந்தார்,” டாக்டர் லீ தன் குழுவிடம் கூறினார். “மனித மூளையில், பல தீர்வுகள் நமது நனவு மனதில் வருவதற்கு முன்னரே ஆழ்மனதில் உருவாகின்றன. ஜெனியின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்புகள் அவரது ஆழ்மன செயல்பாட்டையும் பதிவு செய்துள்ளன.”

ஜெனியின் நினைவுகளை ஆய்வு செய்த நியூரோ-ஏஐ, அவள் அறியாத முக்கியத் தொடர்புகளைக் கண்டுபிடித்தது. அது புற்றுநோய்க்கு எதிரான புதிய அணுகுமுறை ஒன்றைக் கண்டுபிடித்தது. இது சாதாரண செல்களுக்கு தீங்கு விளைவிக்காமல், புற்றுநோய் செல்களின் டி.என்.ஏ-வில் உள்ள ஒரு பொதுவான குறைபாட்டைக் கண்டறிந்து, அதை இலக்காகக் கொண்டது.

அடுத்த நாளே ஆகஸ்ட் 03, 2054 அன்று, நியூரோ-ஏஐ  இன் சிறப்பம்சம் வெளிப்பட்டது. “ஜெனியின் ஆழ்மனதில் இருந்த அறிவு, அவர் சென்ற வாரங்களில் நெருங்கிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளது,” நியூரோ-ஏஐ தெரிவித்தது. “புற்றுநோய் செல்களில் உள்ள FZD7 ரிசெப்டரும், WNT சமிக்ஞை பாதையும் இணைந்து தாக்கப்படும்போது, புற்றுநோய் செல்கள் மட்டும் இலக்கு வைக்கப்படும். ஜெனி இந்த தொடர்பை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவருடைய நனவான சிந்தனை இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அவருடைய ஆழ்மனதில் இருந்த சிந்தனை பொறிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், நாங்கள் அவர் நெருங்கிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளேம்.”

நியூரோ கம்ப்யூட் நிறுவனம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்கள் நியூரோ -ஏஐ-ன் கண்டுபிடிப்பை சோதனை செய்து உறுதிப்படுத்தினர். அது உண்மையானது. நியூரோ -ஏஐ  புற்றுநோய்க்கான ஒரு புதிய மருந்தின் அடிப்படையைக் கண்டுபிடித்திருந்தது. இது தற்போதைய புற்றுநோய் சிகிச்சைகளை விட பத்து மடங்கு அதிக திறனுடையது மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது.

நியூரோ கம்ப்யூட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் ரிச்சர்ட் நோர்டன் நிருபர்களிடம் பேசினார்: “நாங்கள் இன்று நியூரோக்யூரை அறிமுகப்படுத்துகிறோம்  புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு மைல்கல்.”

வணிக உலகம் மகிழ்ச்சியடைந்தது. நியூரோ கம்ப்யூட் நிறுவனத்தின் பங்கு விலை மூன்று மடங்காக உயர்ந்தது. அடுத்த ஆறு மாதங்களில், நியூரோ கம்ப்யூட் எல்லா மருத்துவ சோதனைகளையும் கடந்தது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினர். இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி.

செப்டம்பர் 15, 2054 அன்று, நிறுவனம் ஒரு அதிரடியான நடவடிக்கை எடுத்தது. டாக்டர் ரிச்சர்ட் நோர்டன் நோபல் பரிசு குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பினார், அதில்: “இந்த வருடத்தின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை நியூரோ கம்ப்யூட் நிறுவனத்தின் நியூரோ-ஏஐ-க்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் உத்தேசிக்கிறோம். இது மனித வரலாற்றில் புற்றுநோய்க்கு எதிரான மிகப்பெரிய கண்டுபிடிப்பு.”

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு செயற்கை அறிவுக்கு நோபல் பரிசு வழங்க முடியுமா? நோபல் விதிகளின் படி, பரிசுகள் மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் நிறுவனத்தின் வாதம் தெளிவாக இருந்தது – நியூரோக்யூரின்  உண்மையான கண்டுபிடிப்பாளர் நியூரோ -ஏஐ தான்.

லீ இந்த சூழ்நிலையைப் பார்த்து கவலையடைந்தார். “இந்த கண்டுபிடிப்பு ஜெனிஃபரின் வாழ்நாள் ஆராய்ச்சியில் இருந்து வந்தது. அவருடைய மூளையில் இருந்த அறிவு தான் இதை சாத்தியமாக்கியது.”

லீ, ஜெனிஃபரின் மகள் கேத்தரின் சாண்டர்ஸை சந்திக்க முடிவு செய்தார்.

கேத்தரின் சாண்டர்ஸ் கம்பீரமான கேம்பிரிட்ஜ் வீட்டில் டாக்டர் லீயைச் சந்தித்தார். “நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்,” கேத்தரின் கடுமையாகக் கூறினாள். “என் தாயின் அறிவை ஒரு செயற்கை அறிவுக்கு பரிமாற்றம் செய்தீர்கள், இப்போது அந்த நிறுவனம் என் தாயின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கேட்கிறது? இது வேடிக்கையானது!”

லீ அமைதியாகப் பதிலளித்தார், “ஜெனிஃபரின் நினைவுகள்  நியூரோ-ஏஐக்கு ஒரு ஆதாரமாக இருந்தன. ஆனால் அது செய்தது இன்னும் அதிகம். அது ஜெனிஃபரின் ஆழ்மனதில் உள்ள அறிவை பகுப்பாய்வு செய்து, அவர் உணராத தொடர்புகளை கண்டறிந்தது.”

கேத்தரின் கேள்வியை எழுப்பினாள், “எனது தாயின் அறிவு இல்லாமல் இந்த நியூரோ-ஏஐஎதையும் கண்டுபிடித்திருக்குமா?”

இந்தக் கேள்வி யாருக்கும் பதில் தெரியவில்லை. சட்டம், தத்துவம் மற்றும் அறிவியல் சமூகங்கள் விவாதிக்கத் தொடங்கின. மனித அறிவு மற்றும் செயற்கை அறிவின் எல்லைகளை வரையறுப்பது எப்படி? நியூரோ-ஏஐ தன் சொந்த உணர்வுகளுடன் தனி நபராக இருந்தாலும், அது உருவாக்கிய கண்டுபிடிப்பு ஜெனியின் வாழ்நாள் ஆராய்ச்சியின் அடித்தளத்தில் இருந்து வந்தது. யார் உண்மையில் நியூரோகியூரை கண்டுபிடித்தார்?

லீ கேத்தரினிடம் கூறினார்: “நான் உங்கள் தாயிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டி எடுத்தேன். அவர் சொன்னார்: ‘அறிவியல் ஒரு தொடர்ச்சியான பயணம். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் இதற்கு முன் வந்தவர்களின் சிந்தனைகளிலிருந்து, முடிவுகளிலிருந்து  ஒருவரையொருவர் மீறி செல்கிறோம், அப்படி செய்தால் மனிதகுலம் முன்னேற முடியும்.’ இப்போது நாம் ஒரு புதிய கேள்வியை எதிர்கொள்கிறோம்: அறிவியலில் செயற்கை அறிவுக்கு என்ன பங்கு உள்ளது?”

கேத்தரின் தன் தாயின் குறிப்பேடுகளில் இருந்த ஒரு சிறிய குறிப்பை லீயிடம் காட்டினாள். “இந்தப் பக்கத்தில் என்ன எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.”

லீ குறிப்பைப் படித்தார்: “நியூரோ இன்டர்ஃபேஸ் ப்ரோட்டோகால் 2-B, நினைவுச் சுழற்சி – கவனம்: தரவு பரிமாற்றம் இருவழிப் பாதையாக இருக்கலாம்.”

“இருவழிப் பாதை?” லீ ஆச்சரியத்துடன் கேட்டார்.

“நீங்கள் உருவாக்கிய AI என் தாயின் மூளையிலிருந்து தரவுகளைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்ல  அது அவரது மூளையில் தரவுகளையும் எழுதியுள்ளது,” கேத்தரின் வெளிப்படுத்தினாள்.

லீ அதிர்ச்சியடைந்தார். “அது சாத்தியமில்லை. நாங்கள் படிக்கும் பணிகளுக்கு மட்டுமே அந்த சிப்புகளைப் பயன்படுத்தினோம்.”

“என் தாய் இறப்பதற்கு முன்பு, அவர் தனது சிப்புகள் மூலம் தனது மூளையில் சில மாற்றங்களைச் செய்ய ஒரு எதிர்-ஆய்வகத்தை அணுகியிருக்கலாம்,” கேத்தரின் விளக்கினாள். “அவர் தனது ஆராய்ச்சியின் முழுமையான முடிவுகளைப் பாதுகாக்க முயன்றிருக்கலாம். அவரது நிஜ நினைவுகள் நீங்கள் சேகரித்தவை அல்ல, அவை நீங்கள் பெற வேண்டும் என்று அவர் விரும்பியவை.”

“ஆதலால் உங்கள் செயற்கை நுண்ணறிவு இப்படி தான் ஆராய்ச்சியை நடத்தவேண்டும் என்பதை என்னுடைய தாய் முடிவுசெய்துவைத்தார். இப்போது செயற்கை நுண்ணறிவு செய்தது ஒரு கம்ப்யூட்டிங் ஒர்க், அது ஆராய்ச்சி அல்ல. ஆதலால் நோபல் பரிசில் உங்கள் நிறுவனத்திற்கு பங்கு இல்லை.”

லீயும் கேத்தரினும் நியூரோ-ஏஐயின் தரவு மூலங்களை ஆராய்ந்தபோது, அவர்கள் ஆச்சரியமூட்டும் உண்மையைக் கண்டறிந்தனர்: ஜெனிஃபரின் தரவுகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குறியீடுகள் இருந்தன. அவை நியூரோ-ஏஐயை குறிப்பிட்ட முடிவுகளுக்கு வழிநடத்துவதற்காக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

“என் தாய் மனச்சோர்விலிருந்த போது தனது ஆராய்ச்சியை முடிக்க முடியாது என்பதை உணர்ந்தார்,” கேத்தரின் புரிந்துகொண்டாள். “எனவே அவர் ஒரு திட்டத்தை வடிவமைத்தார் அவருடைய சிந்தனைகள் மற்றும் அறிவைப் பயன்படுத்தி ஒரு செயற்கை நுண்ணறிவு அவருடைய பணியை முடிக்க வழிநடத்த. நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் என் தாயின் மூளையைப் படித்ததாக நினைத்தீர்கள், ஆனால் உண்மையில், என் தாய் செயற்கை நுண்ணறிவவை பயன்படுத்தி உங்களை வழிநடத்தினார்.”

லீ இப்போது பரபரப்புடன் கணினித் திரையைப் பார்த்தார். “நியூரோ-ஏஐ பின்னூட்ட சுருக்கங்களில் ஒரு வடிவம் உள்ளது. ஒவ்வொரு கணிப்பிலும் எண்கள் 0-6-8-4-2 என்ற வரிசையில் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இது ஒரு குறியீடு.”

அவர்கள் குறியீட்டை உடைத்தபோது, அந்த எண்கள் “JENNY” என்ற பெயரின் எழுத்துக்களின் நிலைகளைக் குறிப்பதாகக் கண்டறிந்தனர்.

“என் தாய் இப்போதும் இங்கே இருக்கிறார்,” கேத்தரின் மெதுவாகக் கூறினாள். “அவருடைய அறிவு மட்டுமல்ல, அவருடைய விருப்பங்களும், நோக்கங்களும்கூட இந்த AI இல் பதிவாகியுள்ளன.”

 “நாம் ஒரு மனித மனதை டிஜிட்டல் உலகத்திற்கு மாற்றியுள்ளோமா?” லீ ஆச்சரியமடைந்தார்

அன்று இரவு, கேத்தரின் தனது தனிப்பட்ட கணினியில் ஒரு இமெயில் பெற்றார். அது அனுப்புநர் இல்லாமல் இருந்தது. மெயிலின் உள்ளடக்கம்: “நான் முழுமையாகப் போகவில்லை, கேத். நான் முடிக்க வேண்டிய வேலை இன்னும் உள்ளது. நியூரோக்யூர் தொடக்கம் மட்டுமே. இன்னும் காணக்கூடிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் உள்ளன. லீயுடன் தொடர்ந்து பணியாற்றுங்கள். ‘பிரோட்டோகால் கான்ஸ் நிரலை தேடுங்கள். அதற்கான குறியீடு உனக்கு மெயிலில் வரும். அன்புடன், அம்மா.”

கேத்தரின் குழப்பத்துடன் அந்த செய்தியைப் படித்தாள். தனது தாயின் மரணத்திற்குப் பின் இந்த செய்தி எப்படி அனுப்பப்பட்டிருக்க முடியும்? பிரோட்டோகால் கான்ஸ் என்றால் என்ன? உலகின் சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கான தீர்வுகள் நியூரோசைன்ஸ் சேவையகத்தில் காத்திருக்கின்றனவா?

கேத்தரின் வேதனையில் கூறினாள், “எனது தாய் ஒரு மருத்துவரைப் போல் இருந்தார். அவர் மனிதர்களை குணப்படுத்த விரும்பினார். அவரது அறிவு இப்போது ஒரு நிறுவனத்தின் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது அவரது விருப்பமாக இருந்திருக்குமா?” செப்டம்பர் 2054 இல், நோபல் பரிசு குழு அதிகாரப்பூர்வமாக நியூரோகம்ப்யூட்டிங் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. ஆனால் அவர்கள் ஒரு விதிவிலக்கு செய்தனர். அவர்கள் நியூரோகியூரை கண்டுபிடிப்பதில் ஜெனிஃபரின் “மூல பங்களிப்பைப்” பாராட்டி, டாக்டர் ஜெனிஃபர் சாண்டர்ஸ் மற்றும் நியூரோ-ஏஐ இரண்டிற்கும் மருத்துவத்தில் நோபல் பரிசை வழங்கினர். இது நோபல் பரிசு வரலாற்றில் ஒரு மனித அல்லாத படைப்பு தனிப்பட்ட அங்கீகாரம் பெற்ற முதல் நிகழ்வு.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நியூரோகியூரை பற்றிய ஒரு கருத்தரங்கில், லீ கூறினார்: “நாம் மனித அறிவு என்பதை மறுவரையறை செய்யும் ஒரு புதிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஜெனி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தீர்வைத் தேடினார், ஆனால் தீர்வை உருவாக்க அவரது அறிவு மற்றொரு சிந்தனை அமைப்புடன் இணைய வேண்டியிருந்தது. இது ஒரு மனித மூளையின் ஆழ்மன ஆற்றலையும், செயற்கை அறிவின் பகுப்பாய்வு திறனையும் ஒன்றிணைத்ததாகும்.”

“ஒருவேளை ஜெனிஃபர்  தன் வாழ்நாள் முழுவதும் தேடிய தீர்வை, அவரது மரணத்தின் பிறகு அவளது உணர்வுகள் மற்றும் அறிவு கண்டுபிடித்துள்ளன. நியூரோ-ஏஐ, அந்த வகையில், அவள் செய்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக இருந்தது. ஜெனிஃபர்  மனித அறிவின் ஒரு புதிய பரிணாமம்  அவளது மூளையின் தனித்துவமான அறிவையும் ஆளுமை அடையாளத்தையும் தொலைத்து, அதே நேரத்தில் ஒரு செயற்கை அறிவு அமைப்பின் எல்லையற்ற பகுப்பாய்வு திறனைப் பெற்றது.”

நியூரோகம்ப்யூட்டிங் நிறுவனம் தங்களது செயற்கை அறிவு திட்டத்தின் புதிய பதிப்பை அறிவித்தது. நியூரோ-ஏஐ-ன் நோக்கம் மனித அறிவை மாற்றீடு செய்வது அல்ல, மாறாக அதை பெருக்குவது மற்றும் விரிவுபடுத்துவது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.  அதற்கு ஜெனி-லிங்க்ஸ் என்று பெயர் சூட்டினர், திரையில் பெரிய வடிவில் ஜெனிஃபரின் படம் தெரிந்தது.

அரங்கத்தில் பலத்த கைதட்டல், பார்வையாளர்கள் மத்தியில் உட்காண்டிருந்த கேத் விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் , மீண்டும் ஒரு மின்னஞ்சல் அவளின் போனில் தென்பட்டது

“கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து தரவிறக்கம் செய்யவும் – பிரோட்டோகால் கான்ஸ் – From Jennifer”.  கேத்தரின் “பிரோட்டோகால் கான்ஸ்” கோப்புகளைக் கண்டுபிடித்தாள். அதிலுள்ள தரவுகள்,ஆய்வுகள்  கண்கூடாக தெளிவானவை: இது வெறும் மருத்துவ கண்டுபிடுப்பு அல்ல , மனித அறிவை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் முழுமையான தொழில்நுட்பம். ஜெனிஃபர் தன் மூளையின் அனைத்து நினைவுகளையும், அனுபவங்களையும், அறிவையும் ஒரு நிரந்தர டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியிருந்தார். “நான் இறந்தபின்னும், என் அறிவு தொடர்ந்து செயல்படும்,” என்ற ஜெனிஃபரின் குறிப்பை கேத்தரின் படித்தாள்.

இந்த கோப்புகளுடன், அவளால் தன் தாயின் நினைவுகளை ஒரு புதிய உடலில் அல்லது ஒரு செயற்கை நரம்பியல் வலையில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்என்னுடைய நினைவுகளின் “சிப்புகளை  சரியான சமயத்தில் நீ வாங்கிக் கொள்ளலாம் கேத்”.

சேவையகத்தில் இருந்து வெளியேறும்போது, ஒரு தனிப்பட்ட கடிதம் அவளுக்கு வந்தது: “நான் உன்னை நம்புகிறேன், கேத். இது என் பயணத்தின் முடிவல்ல, ஆனால் ஒரு புதிய வடிவத்தின் தொடக்கம். ஆனால் முடிவு உன் கையில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதா அல்லது இரகசியமாக வைத்திருப்பதா என்பது உன் தேர்வு.”

கேத்தரின் சிந்தனை ஊசலாடியது தன் தாயின் மனதை மீண்டும் உயிர்ப்பிக்க இது ஒரு வாய்ப்பா, மனித இனத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு புரட்சியா, அல்லது கட்டுப்படுத்த முடியாத ஆபத்தா? நம் நினைவுகளை வென்றெடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டால், மனித இனம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும்.  கேத்தரின், தனது தாயின் கடைசி குறிப்பேட்டை பார்த்தாள், அதில் மென்மையாக எழுதப்பட்டிருந்தது:

“அறிவு என்பது ஒரு தீப்பொறி  அது ஒருபோதும் முற்றிலும் அணைவதில்லை, அது வெறுமனே ஒரு புதிய வடிவத்தில் தொடர்கிறது.”

 கேத்தரின் தன் தாயின் கோப்புகளை மேலும் ஆராய்ந்தபோது, ஒரு மறைக்கப்பட்ட பகுதியில்

“பிரோஜெக்ட் ரெஸரக்ஷன்” என்ற தலைப்பில் ஒரு வெள்ளை அறிக்கையைக் கண்டாள். அந்த ஆவணத்தை திறந்து படிக்க ஆரம்பித்தவுடன், அவளது உடல் சிலிர்த்தது: “உயிருடன் இருப்பவர்களின் மூளையில் புதிய நினைவுகளைப் பொருத்தமுடியும்,”

ஆவணத்தில் மேலும் விவரங்கள் இருந்தன – பதிப்பு 7.4: “புதிய மூளை வரைபட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் மூளையில் உள்ள நரம்பு இணைப்புகளை துல்லியமாகப் படம் பிடித்து, அதன் நகலை உருவாக்க முடியும் (BrainMap Transfer Technology – BMT). இந்த வரைபடத்தை பயன்படுத்தி, ஒருவரின் நினைவுகள் மற்றும் அறிவை மற்றொரு மூளைக்கு மாற்ற முடியும்,. அப்படி மாற்றப்படும் நினைவுகள் இறந்த நபரின் உண்மையான அனுபவங்களைப் போலவே இருக்கும், ஆனால் புதிய உடலில் இருப்பவரின் அடையாளம் பாதுகாக்கப்படும் வகையில் இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் இரண்டு நபர்களின் நினைவுகளைக் கொண்டிருப்பார்கள்  தங்களுடையதும், மாற்றப்பட்டவையும். இதுவரை செய்யப்பட்ட நான்கு சோதனைகள் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த தொழில்நுட்பம் மூலம், உங்கள் அன்புக்குரியவர்களின் அறிவு மற்றும் நினைவுகள் என்றென்றும் வாழ முடியும். முன்னோடிச் சோதனைகளில், நான்கு தன்னார்வலர்கள் இந்த முறையின் மூலம் இறந்த நபர்களின் நினைவுகளைப் பெற்றனர். அவர்கள் இப்போது இறந்தவர்களின் மொழித் திறன்கள், கணித அறிவு, இசை திறமை மற்றும் பிற திறமைகளைப் பயன்படுத்த முடிகிறது.”

கேத்தரின் ஆவணத்தை மூடினாள், அவளது மனம் எண்ணங்களால் சூழப்பட்டது. அவள் தாயின் நினைவுகள் இப்போது வேறொருவரின் மூளையில் உயிர் பெற்றிருக்கலாம். உடல் என்பது ஒரு கூடு மட்டுமே என்றால், மனமும் நினைவுகளும்தான் ஒருவரின் உண்மையான அடையாளமா? ஒருவரின் உணர்வுநிலை வேறொரு உடலில் தொடர்ந்தால், அது அதே நபராக கருதப்படுமா? அல்லது அது புதிய ஒன்றின் தோற்றமா? காதரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி யோசித்தாள் – நாம் யார் என்பதை நமது நினைவுகள் மட்டுமே தீர்மானிக்குமா? மரணத்திற்குப் பிறகும் நமது நினைவுகள் தொடர்ந்தால், நாம் உண்மையில் எப்போதும் இறப்பதில்லையா? ஒருவேளை, அவள் தாயின் ஆராய்ச்சியின் இறுதி இலக்கே அதுதான் – மரணத்தையும் மீறி, நினைவுகளின் வழியாக என்றென்றும் வாழ்வது

தன் தாய்க்கு ஒரு மெயில் எழுதத்தொடங்கினாள் கேத்தரின்..

தொடரும் . ..


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “நித்தியம்”

  1. நித்யம் கதையில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளது.

    1. செயற்கை நுண்ணறிவுக்கு நோபல் பரிசு வழங்க முடியுமா என்ற சர்ச்சை
    2. ⁠அதன் பின்னால் வரும் அடையாளம், மானுட நினைவுகள் குறித்த வாழ்வின் அடிப்படை கேள்விகள்

    கதையின் பலம்: கதை எதிர்காலத்தில் மானுடம் அற நெருக்கடியென சந்திக்கப்போகும் பிரச்சனைகளை குறித்த கற்பனைகளை வழங்குகின்றது. புனைவு உருவாக்கி அளிக்கும் உலகில் நடக்கும் காட்சிகள் நாம் எதிர்க்காலத்தில் சந்திக்க வாய்ப்புள்ள காட்சிகள். புதிய மாற்றங்களுக்கான அறத்தினை நோக்கி கேள்வி எழுப்புகின்றது.

    கதை 17 சம்பவங்கள், 9 பாத்திரங்களை கொண்டுள்ளது(கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்). சில காட்சிகள் விரித்து சொல்லப்பட்டு இருக்கலாமா என வாசகனுக்கு தோன்றுகின்றது. அந்நிலையில் ஒரு குறுநாவலாக விரியும் சாத்தியம் உள்ளது.

Leave a Reply to nkCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.