1
வீட்டின் விடுதலை அது
முற்றத்தின் தோற்றத்தில்
முன்னே நின்று
வானையும் நட்சத்திரத்தையும்
தேர்வு செய்து காட்டி
நிலவொளியை வீட்டிற்கு
தோதாக விழச்செய்து
காமத்தின் ரகசியத்தை கூட்டுகிறது
மழையை அருவியாக்கி கொட்டுகிறது
அரைக்கும் அம்மி கல்
நான்கு முனைகள் கொண்ட சதுரம்
வரவேற்பறை, காலாட்படை
பாதுகாவலர்கள், புத்தகத்தின் முன்னுரை
நீல் சதுரம், நூறுமீட்டர் ஓட்டம்
வரவேற்பறையில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள்
போர்டிகோவில் கார் நிற்கிறது
நான் மேலே இருக்கும்
கம்பிகளின் வழியாக
அதை பார்க்கிறேன்
நான் நினைவு கூர்கிறேன்
ஒரு காட்சி காட்சியாக இருப்பதிற்கான
பிடிவாதம் அதற்கு இருக்கிறது
இப்பொழுது சற்றுவிலகி வீட்டை பார்க்கிறேன்
2
கனவின் நினைவில்
வழிந்து கொண்டிருந்தது
எப்பொழுதும் இருக்கும் அது
டோரியன் க்ரே வாழ்ந்தபோது
கொஞ்ச காலம் இல்லாமல் போயிற்று
அனைத்திலும் அது இருந்தது
அதனுடன் பயனிக்க விதிக்கப்பட்டிருக்கிறது
நாகரீகங்கள் உறைந்து போயிருந்தது
எப்பொழுது தோன்றியது என்று
யாருக்கும் நினைவில் இல்லை
நித்தியமான அது
அர்த்தம் அற்றது
வரலாறும் எதிர்காலமும்
முன்னும் பின்னுமாய் நகர்ந்து
சேகரிக்கப்பட்ட பாதையில்
பயனம் செய்கிறது
உண்மையில் அப்படியொன்று
இல்லை என்றால்
நான் தான் காலம்
நான் இல்லையென்றாலும்
அது இருக்கிறதென்று
என்னை சொல்லச் சொன்ன அது
3

மிகப்பெரிய அநீதி
நிகழ்ந்தது போல்
தலையில் கொத்திவிட்டு
இருளிலே அபாயத்தைத்
தோற்றுவித்துச் சென்றது ஒரு காகம்
அது இங்கும் அங்கும் பறந்து
மரணத்தின் அருகாமையை காட்டி
மீண்டும் இன்னொன்றாகப்
பறந்து போகிறது
நிரந்தர இரவின்
ஒரு விள்ளல் அது
தத்துவஞானியின் தலைமேல் பறப்பதற்கும்
ஓவியத்தில் உறைவதற்கும்
நரியிடம் ஏமாறுவதற்கும்
பானையில் கல் போட்டு குடிப்பதற்கும்
நாடுகளின் கலாச்சார
பின்புலத்தில் பறக்கிறது
அப்படி இப்படிப் பறந்து
சேற்றில் சிக்கியதுபோல்
இதை எழுதுபவனின்
மனதில் மாட்டிக்கொண்டது
அது ஒரு பறவை
அது இல்லாமல்
பறவையின் எண்ணிக்கை தவறாகும்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
