கதையின் ஆசிரியர் தனது வாழ்க்கையை ஐந்து வயதிலிருந்து திரும்பிப் பார்ப்பதாகக் கூறி செல்லும் கதையே கய்த பூவு.
இரண்டாம் அத்தியாயத்தில் கைவிடப்பட்ட வனஜாளுக்கு முறையற்றுப் பிறக்கும் சம்மனசு அனாதையாகவே இறுதிவரை திரிகிறான். இதை ரோசாளின் அப்பாவே ரோசாளிடம் இப்படிச் சொல்வார், “அவனுக்குள் இருக்கும் வாஞ்சையும் சமூக அக்கறையும், ஆதரவில்லாத பிள்ளை அன்புக்காக எதுனா தப்பு செய்தா அதையே பெரிசுபடுத்தீருவாக”…
ரோசாளின் அம்மாவும் மாமியும் ஒரே சமயத்தில் விபத்தில் இறந்துபோக தனித்துவிடப்பட்ட இரண்டு குடும்பத்துப் பிள்ளைகளின் வாழ்க்கைப்பாடுகளும் இடிமேல் இடிவிழுந்த துயரங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
மூத்தவர்களாகப் பிறப்பவர்கள் எல்லாம் எப்படியோ தப்பிப் போய்விடுவார்கள். அவர்களுக்கு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படியான வாழ்க்கையும் இதில் இல்லை. கடைக்குட்டியாய் பிறப்பவர்கள் மாட்டிவிடுவார்கள் என்பது நிதர்சன உண்மை. பால்யத்தில் விளையாண்ட சுதனுடனான விளையாட்டுக் கல்யாணம் மனதில் பசுயாய் தங்கி அதே பிரியம் மாறாதிருக்கிறாள் ரோசா. ஆனால் சுதனோ காலப்போக்கில் Passing cloud போல எதையும் இலகுவாய் எடுத்துக்கொள்கிறான். அதுவும் தனக்குச் சாதகமான வழிமுறையில்.

கதையின் பெண் கதாபாத்திரங்கள் அத்தனையும் ஆண்களால் பந்தாடப்படுகின்றன. ப்ரேம் அண்ணனை திருமணத்துக்குப் பிறகு மதினி வேரோடு பெயர்த்தெடுத்துப் போவது போல மொத்தமாகக் கூட்டிச் சென்றுவிடுகிறாள்.
முதன்முதலாக சுதன் மறுத்த கணம்தொட்டு எந்தத் தவறும் செய்யாமலே ரோசாளின் பெயருக்குக் களங்கம் விளைந்துகொண்டே இருக்கிறது.
மாசி தேடிப்போன பிச்சியக்காளைப் போல ஒருத்தி உண்டா? என்னும் அளவுக்கு அன்பையும் உழைப்பையும் உழைப்பால் வந்த பணத்தையும் கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறாள். சிலபேர் அப்படித்தான் அன்புக்காக உருகிப் போய்விடுவார்கள்.
ஒரு இடத்தில் தனது வாடிக்கையாளன் கைதொட்டபோது கோபப்பட்ட ரோசாளிடம், “பஸ்ஸுல போம்போ இடிக்கலியா? அப்படியெல்லாம் இடிபடுறோம்னு பெண்இனம் சாகத்தொடங்குனா ஒலகத்துல ஒரு பெட்டச்சி உயிரோடு வாழமுடியாது….நாம நம்மள கட்டியெழுப்பிட்டேதான் இருக்கணும். கையப்பிடிச்சாலும் இடுப்பைப் பிடிச்சாலும் நம்ம டிபார்ட்மெண்ட் உடம்புல இல்ல. அது மனசுல கெடக்கு…. நம்ம மனசை மட்டும் இடிச்சிக்காம பார்த்துக்கறது நம்ம பொறுப்பு “, என்று சர்வ அநாயாசமாக பிச்சி மூலமாக பெண் மனதைப் பிட்டு வைக்கிறார் நாவலாசிரியர்.
ரோசாளை முதலில் பெண் பார்க்க வநதவன் தன்னைப் பார்த்துத்தான் கையசைப்பதாக நினைத்து அவளும் கையசைத்தது குற்றமாகிப் போய் தடைப்பட்ட திருமணம் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்காட்டி தடைபட்ட மயமாகிப் போகிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணம்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான தகுதியாகப் பார்க்கப்படும் பாழாய்ப்போன சமூகத்தை சபிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?
மல்லிகாவோ பிச்சியக்காளோ ரோசாளோ இப்படி ஊர்ப்பெண்களெல்லாம் ஊர்ஊருக்கு ஆண்களால் அல்லது ஊராரால் அங்கங்கே கிடக்கும் கல்லில் அமர்ந்து புறம்பேசும் இடங்களாகிப் போவது வாடிக்கை. அவர்களின் பேச்செல்லாம் பெண்களைப் பற்றியதாகவும் அவர்களின் உடம்பு சார்ந்த ஒழுக்கம் பற்றியதாகவும் இருக்கிறது. ரோசாளுக்கென்று ஒரு அறத்தோடு இருப்பது யாருக்கும் புரிவதேயில்லை.
விதவையான மல்லிகா தன்னை விரும்பும் ஒருவனை விரும்புவது தெரிந்ததும், சகோதரன் மாசி அவளைக் கண்டபடி திட்டித் தீர்க்கிறான். ஆனால் அவனே திருமணத்துக்கு மீறிய ஒரு உறவில் இருந்துகொண்டு பேசுவது ஆணுக்கான சுதந்திரமாய் இந்த சமூகம் கட்டமைத்திருக்கிற சலுகை. ஆனால் பாவம் அந்த மல்லிகாளும் ஏமாற்றப்பட்டு மரணித்தும் போகிறாள். அப்பாவால் தடம் மாறத் தயாரான மாசியோடு பிச்சியக்காளைச் சேர்த்து வைத்து நியாயம் சேர்க்கிற ரோசா மனதுக்குள் மணத்துக் கிடக்கிறாள்.
நீராளிக்குண்டு இருக்கும் காட்டுப்பூக்கள் பூத்துநிறைந்த பாறைகள் கிடந்த பொத்தை நிலமெல்லாம் கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்படும் போதும், தோழி லோட்டஸின் மகள் வயசுக்கு வந்த வைபவத்திற்குப் போகும் வழியில் மலைகள் உடைபட்டதையும் சாகடிக்கப்பட்ட குளம் பேருந்து நிலையமானதையும் கண்டு பெரும் விசனப்படும் ரோசா ஒரு நல்ல சூழலியல்வாதியாகத் தெரிகிறாள்.
அங்கேதான் ரோசாளுக்கு பாரதியம்மாவின் மூலம் ஞானம் கிட்டுகிறது.
அவர் , “எப்ப சாதாரண வாழ்க்கையை காலம் நமக்கு தரலியோ ….அப்பவே காலத்தால் நாம் ஆசீர்வதிக்கப் படுறோமுன்னு நினைக்கணும்” என்ற ரீதியில் நிறையப் பேசுகிறார். அதற்குப் பிறகு ரோசாளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே மணக்கும் கய்த பூவாகிறது.
கய்த பூவு : நாவல்
ஆசிரியர் : மலர்வதி
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.380/-
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
