1.
கண்ணாடியைக் கொத்துகிறது
குருவி.
வலையிலாடுகிறது சிலந்தி.
கொத்துதலும் தப்பித்தலும்
நின்றபாடில்லை.
உள்ளிருந்து வெளியேயும் வெளியிலிருந்து உள்ளேயுமாய்
ஒரே ஊசலாட்டம்.
நின்றாடும் பிம்பங்களோ
எதையும் பிரதிபலிப்பதில்லை
குருவியின் கொத்துதலால்
கண்ணாடியும் உடைவதில்லை.
ஆனாலும்
விளையாட்டுகள்
தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன பிரபஞ்சத்தில்.
2

குலை தள்ளிய வாழையை
வெட்டி வீழ்த்தியாகிவிட்டது.
தூர் மட்டும் நிற்கிறது.
தன்னையே தந்த பின்னும் வெட்டப்படுதல்
இங்கு வாடிக்கை.
வாழைத் தோப்பை பார்த்த கண்களுக்கு
வெட்டப்பட்ட தூர்களைக் காண்பதுதான் நிரந்தரமின்மை.
கல்யாணக்கவர் ஒன்றில் பழத்தைக் காண்கையில்
வெட்டிக்கடையொன்றில்
பழம் ருசிக்கையில்
தூர்கள் உறுத்துகின்றன.
மறுபடி ஒரு பயணம்
தோப்பைக் காண்கிறேன்
பக்கவாழைகள்
துளிர்த்திருக்கின்றன.
3
இராட்சசக் காற்றாடி
சுழலாமல் நிற்கிறது
பிரம்மாண்டம்
சுழலாமல் நிற்பது
காற்று சுழலாததைப் போல்
நீர் சுழலாததைப் போல்
நெருப்பு சுழலாததைப் போல்
இந்தப் பூமி சுழலாததைப் போல்
சிறு மாயை.
இங்குச் சுழற்சிகள்
நின்று போனால் என்னவாகும்
நீர் ஆவியாகி
மறுபடியும் நீராய் மாறும் ரகசியம் அல்லவா அது.
பிறப்பு இறப்பு
நின்று போனால் என்னவாகும்
சிறியது சுழலாவிடினும்
பெரியது சுழலாவிடினும்
சுழலுதல்தான்
இயக்கத்தின் ஆதாரம்.
இலேசாகக் காற்று வீசுகிறது
பிரம்மாண்டம்
சுழலத் தொடங்குகிறது.
4
ஒரு பட்டாம்பூச்சியை
பின் தொடர்வதென்பது
உலகின் மிகக் மிக
கடினமான செயல்
ஓரிடத்தில் அசையாது
பறக்க வேண்டும்.
ஒவ்வொரு பூவோடும் பேசுவதற்கு
அனுமதிக்க வேண்டும்.
பரபரப்பான சாலையில்
ஆசுவாசமாய் அமர வேண்டும்
ஜோடியாய் பறக்கையில்
தொட்டுத் தொட்டு
விலக வேண்டும்
மகரந்தத்தைச் சுமந்து சென்று
வெளி எங்கும் தூவ வேண்டும்
ஒலிக்காத மணியில் அமர்ந்து
தன்னை மறந்து தூங்க வேண்டும்
சிறுமியின் விரல்களுக்கு
வண்ணங்கள் வழங்க வேண்டும்
ஆள் அரவமற்ற
அத்துவான காட்டில்
உருவம் பெரிதாகிப் பெரிதாகி
சிறியதான இப்புவியை
ஏந்திக்கொண்டு
உயர உயரப் பறக்க வேண்டும்.
5
இரவு வானத்தில்
தனித்துப் பறக்கிறது பறவை.
வானம் தனித்திருக்கும்
பறவை தனித்திருக்கும்
தனித்திருக்கும்
இரண்டின் சந்திப்பிலும்
தனிமையிருக்கும்
தனிமையின் கரங்களில்
வானம் புகும்
பறவை புகும்
இங்கு யாவுமே உட்புகும்.
தன்னைச் சேரும் எதற்கும்
தனிமை
தன்னைப் பிய்த்துக் கொடுக்கும்
ஆனாலும்
தனிமை மலர்கையில்
பிரபஞ்சமும்
பின் நிற்குமல்லவா.
6
சாலையின் குறுக்கே
பறக்கும் பறவை
எதிர்ப்படும் வேகத்தோடு
மோதுகிறது
தடுமாறும் வேகங்கள்
திசைக் கொன்றாய் பிரிய
புதிய வேகங்கள்
இரண்டுபட்டு நிற்கிறது
எதன் வேகம்
எதற்குச் சென்றதென்று
உணரும் முன்னரே
பறத்தலை
தொலைத்துவிட்டு
தவிக்கிறது பறவை.
7. மழைச்சாலை தவளை
குதித்துக் குதித்துச் செல்லும் தவளை
பார்வையிலிருந்து
வெளியே குதிக்கிறது.
உள்ளிருந்து வெளியேயும்
வெளியிலிருந்து உள்ளேயும்
குதித்தல் தொடர்கிறது.
முன்னோக்கிய குதித்தல்
ஓரு நாளும் பின்னோக்கி நிகழ்வதில்லை
பயணங்களும் ஓய்வதில்லை
குதித்துக் குதித்துக் களைப்பாகி
ஓரிடம் அமர்கிறது நுணல்.
பயணக் களைப்பு தீர
மெல்லிய ராகம் மீட்டுகிறது
பாடும் தவளைகளை
காணக் கிடைக்கும் நாட்கள்
இறை தரிசனத்திற்கு ஒப்பானவை.
நாளும் பொழுதும் நாமும்
குதித்துக் கொண்டிருக்கிறோம்
ஒரு பாடலைக் கேட்கவோ
அல்லது இசைக்கவோ
தவறுகிறோம்.
இந்தக் கோடை மழையில்
ஒரு தவளையாவது
பார்த்துவிடக் கிளம்புகிறேன்
மழைச்சாலைகள்
பரிசுத்தமாய் இருக்கின்றன
ஒரு தவளை துள்ளித்துள்ளி
குதித்து
என்னை நோக்கி வருகிறது
மழை விட்ட பிறகும் நனைகிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
