மொகதிஷு
“ உன் உடன்பிறந்தானின் உடற்பாகங்கள் உன் வீட்டு சுவற்றில் பெயிண்டைப் போல் அப்பி கிடப்பதை நீ பார்த்திருக்கிறாயா”
எப்போதும் போல் உடற்பாகத்தை அழுத்தி, அப்பிஐ சற்று குரல் இடர சொல்லிவிட்டு முன் அமர்ந்திருந்தவனை பார்த்தேன்.
எதிர்பார்த்த மிரட்சி அவன் கண்களில் தெரிந்தது. ஒருவன் கூட விதிவிலக்கில்லை. அத்தனை சி ஐ ஏ காரனும் ஒன்று போலவே இருக்கிறார்கள்.
ரத்தமும் நிணமும் சதையும் அமெரிக்க சினிமாவும் தொலைகாட்சியும் காட்டும் அளவிற்கு தெறித்தால் அவர்கள் கண்களில் ஒரு கிளர்ச்சி.
எங்கள் அன்றாட ரத்த களறி இவர்களால் கற்பனை கூட செய்ய முடிவதில்லை. கேட்கும் போதே இவ்வளவு மிரட்சி.
குண்டு வெடித்து சில நிமிடங்களே ஆன, ரத்தம் பனி போல் காற்றில் படர்ந்து மெல்ல தரையிறங்கி கொண்டிருந்த, கசாப்பு கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஆட்டு தொடை போல சிவப்பேறிய மனித உறுப்புகள் சிதறி கிடந்த ரோட்டில் ஒரு சி ஐ ஏ ஆளை ஒரு முறை கூட்டி சென்றேன்.
வாந்தி, மலம், மூத்திரம் என சகல துவாரங்களிலும் பார்த்த மாத்திரத்தில் கழிந்தான். அதன் பிறகு நான்கே நாட்களில் ஊருக்கு திரும்பி சென்று விட்டான்.
என் வண்டியில் அவன் விட்டு சென்ற நாற்றம் நீங்க அதை விட அதிக நாள் பிடித்தது.
“உன் இழப்பிற்கு நான் வருந்துகிறேன்” சற்று தயங்கி கம்மிய குரலில் சொன்னான்.
“ நன்றி நண்பா. உன் வருத்தத்தை வாங்கி கொள்வதற்காக நான் இதை சொல்லவில்லை. மோதுமான அளவிற்கு இழப்புகளை நான் பார்த்தாகிவிட்டது. இனியாவது எதையும் இழக்காமல் வாழ முயற்சிக்க வேண்டும். எங்கள் நாடு சகஜமாகி கொண்டிருக்கிறது. பார் ஆறு மணிக்கு மேலாகிவிட்டது இன்னும் ஆட்கள் நடமாடி கொண்டிருக்கிறார்கள். மொகதிஷுவில் ஒரு வருடத்திற்கு முன்னால் இதை யோசித்து கூட பார்க்க முடியாது. எனக்கு இங்கு வாழ வேண்டும். என் பிள்ளைகளை லண்டனிலிருந்து இங்கு அழைத்து வந்து விட வேண்டும். என் அண்ணன் ஷெல் அடித்து சிதறிய போது எங்கள் வீட்டு முன் கால் பந்தாடி கொண்டிருந்தான். என் பிள்ளைகள் அதே தெருவில் கால் பந்தாட வேண்டும் . அவர்கள் பெரியப்பாவிற்கு இப்படி நடந்தது என்பதை நம்பவே முடியாத அளவிற்கு நாட்டில் அமைதி நிலவ வேண்டும். ஆம் கனவுதான், ஆனால் அது நடந்து விடுவதற்கான சாத்தியங்களை அல்லா இப்போது கொடுத்து கொண்டிருக்கிறார். நான் அதை இங்கு இருந்து அனுபவிக்க வேண்டும். நீ என்னை உளவு பார்க்க சொல்கிறாய். நீ சொல்வதை செய்தால் நான் மீண்டும் சோமாலியாவில் அடியெடுத்து கூட வைக்க முடியாது.” என்றேன்.
“நண்பா நான் இதை செய்ய சொல்வது அனைவர் நன்மைக்காகவும்தான். ஜிலிப் (Jilib) மொகதிஷு இல்லை. உனக்கு தெரியாதது இல்லை, அல் ஷபாப் (Al shabab) இன்னும் அங்கு பலத்தோடுதான் இருக்கிறார்கள். உன்னை போன்ற ஆள் கடத்தல் தொழிலில் இருப்பவனின் உதவி அவர்களுக்கு கட்டாயம் தேவை படும். உன்னை அழைத்து பேசாமல் இருக்க மாட்டார்கள் “ என்றான்
நான் பலமாக சிரித்தேன் “நீங்கள் யார் நன்மைக்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமோ இல்லயோ எங்களுக்கு நன்றாகவே தெரியும் “ சொல்லி நிறுத்தி அவனை பார்த்தேன். பதிலில்லை நான் தொடர்ந்தேன்
“நீ சொன்னதில் ஒரு பெரிய திருத்தம். நான் செய்வது ஆள் கடத்தல் இல்லை. போக்குவரத்து சேவை. இத்தனை சிப்பாய்களை இறக்கி வைத்திருக்கிறீர்களே,
மொகதிசு முதல் ட்றிபோலி வரை அதிகம் வேண்டாம் ஒரு நான்கு பேரை பாதுகாப்பாக உயிருடன் உங்களால் கொண்டு போய் சேர்க்க முடியுமா?” என்றேன்
அவன் மெலிதாக புன்னகைத்து, கைகளை விரித்து தன் தோள்களை குலுக்கினான்.
“என் வண்டியில் இடம் பிடிக்க ஒரு வருடம் காத்திருக்கிறார்கள். இடம் இல்லை என்றால் கெஞ்சி கதறி அழுகிறார்கள். இதற்கு நீங்கள் வைக்கும் பெயர் ஆள் கடத்தல் தொழில். இதை என்னை போன்றவர்கள் செய்யாமல் விட்டால் எங்கள் வீதிகளில் இன்னும் பிணங்கள் நிறையும்” என்றேன்
“பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் சொல் அது. உன்னை புண்படுத்த வேண்டும் என சொல்லவில்லை. உதவி கேட்டு வந்திருக்கிறேன் உன்னை சிறுமை செய்வேனா” என்றான். அவன் கண்களில் உண்மை இருந்தது.
புது அரசு அமைந்த இந்த மூன்று வருடத்தில் சண்டைகள் நிறையவே குறைந்துவிட்டது. ஐரோப்பாவிற்கு தப்பி செல்ல முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
போக்குவரத்து தொழிலை விட்டுவிட்டு மொபைல் பண பரிவர்த்தனை சேவை ஒன்றை நண்பர்களோடு சேர்ந்து தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இருக்கிறேன்.
அதற்கான ஏஜெண்டுகளை நியமிக்க நான் ஜிலிப் செல்ல வேண்டும்.
“அவர்களுக்கு இல்லாத போக்குவரத்து காரர்களா. என்னை எல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதுவும் நான் போவது வேறு வேலைக்கு. நான் இந்த தொழிலில் இருக்கிறேன் என்று கூட அவர்களுக்கு தெரியாது” என்றேன்
அவன் புன்னகைத்தான்.
“நீ ஜிலிப்புக்குள் நுழைந்த ஐந்து நிமிடத்தில் உன் மொத்த வரலாறையும் அவர்கள் தோண்டி எடுத்து விடுவார்கள். தென் சோமாலியாவில் உன் வண்டியில் குடும்பத்திற்கு ஒருத்தனாவது ஏறி இருப்பான். உன்னை பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. அதுமில்லாமல் இப்போது அவர்களிடம் நம்பகமான ஆட்கள் இல்லை. அதுவும் நீ ஹைவை இனத்தை சேர்ந்தவன் என்பதால்.. ” என்றான்
அவனை இடை மறித்து “உங்கள் அளவிற்கெல்லாம் அவர்கள் இனம் பார்ப்பதில்லை. அல் ஷபாபில் அனைத்து இனத்தினரும் இருக்கிறார்கள்” என்றேன்
“உண்மைதான் ஆனால் தலைமை பொறுப்பில் அதிகமும் ஹைவை இனத்தவர்தான்” என்றான்
“நண்பா நான் இங்கே புதிதாக ஒரு தொழில் தொடங்கி நிம்மதியாக வாழ முயன்று கொண்டிருக்கிறேன். நான் உனக்கு உதவ போய் இங்கு யாரையும் பகைத்து கொள்ள முடியாது. அரசாங்கம், அல் ஷபாப், பத்து பேரும் ஐந்து துப்பாக்கியும் வைத்திருக்கும் கிராம தலைவன் வரை யாரையும். என்னால் முடியாது, மன்னித்துக் கொள்” என்றேன்
அவன் முகம் ஏமாற்றத்தில் தொங்கி போனது.
அவன் சட்டைப்பையில் இருந்து செய்தி தாளில் இருந்து வெட்டி எடுத்தது போன்ற ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மேஜையில் வைத்தான்.
“அதில் என் சேட்டிலைட் போன் நம்பர் இருக்கிறது. மனப்பாடம் செய்துவிட்டு கிழித்துவிடு. என்னிடம் நீ எப்போது வேண்டுமானாலும் அந்த எண்ணுக்கு அழைத்து பேசலாம். நண்பா, எனக்கும் உன் கனவு நிறைவேற வேண்டும் என ஆசைதான். மொத்த நாடும் ஒரு அரசாங்கத்தின் கீழ் வரும் வரை அது நடக்க சாத்தியம் இல்லை. “ என்றான்
“நாங்கள் சோமாலிகள், அமெரிக்கர்கள் அல்ல. இப்படிபட்ட சிதறிய ஆட்சி முறை எங்களுக்கு பழகிய ஒன்றுதான்” என்றேன்
அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முன்னால் இருந்த ஷாவை ( டீயை ) ஒரே மடக்கில் குடித்து விட்டு, என் கையை குலுக்கிவிட்டு எழுந்து ரோட்டில் இறங்கி கூட்டத்தில் கலந்தான்.
ஜிலிப்
“நம் கழுத்தில் சிலுவை தொங்க வேண்டும். அதுதான் அமெரிக்கர்களின் இலக்கு. “ என்றுவிட்டு என் கண்களை உற்றுப்
பார்த்தார் எமீர்
நான் ஆம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டு அமைதியாய் அவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
“எத்தியோப்பிய படையெடுப்பில் உங்கள் உடன் பிறந்தவனை இழந்ததாக கேள்விப்பட்டேன். சகோதரா, எத்தியோப்பியர் அம்புதான், எய்பவன் அமெரிக்கன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்
நான் அதற்கும் ஆமோதிப்பாய் தலையசைத்தேன்.
என்னை சற்று கனிவாய் பார்த்தார். “சபர் (பயணம்) செய்யும் போது கூட நீங்கள் அழைத்து செல்பவர்கள் தினமும் தொழுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வீர்கள் என கேள்விபட்டேன். சுன்னா மீதான உங்கள் பற்று எனக்கு மகிழ்ச்சி தருகிறது. “ என்றார்
“அது என் கடமை” என்றேன்
அவர் கண்களில் ஒரு நிறைவு தெரிந்தது.
எங்கள் முன்னால் இருந்த ஷா (டீ) குடுவையிலிருந்து பெரிய கோப்பைகளில் ஊற்றினார். கோப்பைகளில் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் அவர் கைகளில் இருந்து என் இரு கரங்களை நீட்டி வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு என் இரு உள்ளங்கைகளுக்கு இடைய கோப்பையை வைத்து கொண்டேன். கோப்பையின் மிதமான சூடு உள்ளங்கைகளில் இதமாக படிந்ததது.
“தொழில் விஷயமாக வந்ததாக சொன்னார்கள்” என்றார்
“ஆம். பண பரிவர்த்தனை சேவைக்காக ஜிலிபில் உங்கள் அனுமதி இருந்தால் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும். இங்குள்ள வரிகளை அவர்கள் தவறாமல் செலுத்துவதற்கு நான் பொறுப்பு.” என்றேன்
“பண பரிவர்த்தனை…” என்றவர் சற்று நிறுத்தி
“தாஹாப்ஷில் போலவா” என்றார்
“அவர்கள் பெரிய நிறுவனம் . அதே தொழில்தான் ஆனால் நாங்கள் சிறிய அளவில் தொடங்குகிறோம்” என்றேன்
“நேர்மையான சிறிய தொழில்களுக்கு அல்லாவின் கருணை என்றும் உண்டு” என்றார்
“மாஷா அல்லா. உங்கள் நல்வார்த்தைகளுக்கு நன்றி” என்றேன்
“வியாபாரிகள் அனைவரும் அனுதினமும் சுரா ஆல்-நிஸா 29 ஐ நினைவில் கொள்ள வேண்டும். மூமினாகிய (உண்மையான நம்பிக்கையாளன்) உங்களுக்கு நான் அதை சொல்ல வேண்டியதில்லை” என்றார்
“மூமினே, மற்றவர் சொத்துகளை அநியாயமாக அனுபவிக்காதே. பரஸ்பர ஒப்புதலோடு மட்டும் தொழில் செய். “ என்று அரபியில் அல் நிஸா 4:29 ஐ சொல்லி விட்டு “நான் மனதில் பதித்து வைத்து ஒரு நாளும் தவறாமல் கடை பிடிக்கும் சொற்கள் இவை” என்று சோமாலியில் சொன்னேன்.
“அருமை. என்ன அருமையான அரபி உச்சரிப்பு. சபர்காரர்களின் மொழி புலமை எப்போதும் என்னை வியக்க வைக்கிறது” என்றவர் சற்று நிறுத்தி
“ சகோதரா, நம் நாட்டுக்கு உங்களை போன்ற நேர்மையான வியாபாரிகள் நிறைய தேவை. நீங்கள்தான் பசியையும் பஞ்சத்தையும் விரட்டும் அல்லாவின் மலக்குகள் (தேவதை) . எங்கள் அரசாங்கம் உங்களை போன்றவர்களை எப்போதும் அரவணைக்கும்” என்றார். அரவணைப்பை மிக அழுத்தி சொன்னார்.
“நன்றி சகோதரரே” என்றேன்
ஷாவை ஒவ்வொரு மிடறாக குடித்தார். குடித்து முடிக்கும் வரை ஒன்றும் பேசவில்லை. நானும் சில மிடறுகள் குடித்துவிட்டு அவர் பேசுவதற்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.
குடித்து முடித்து கீழே வைத்த கோப்பையில் மீண்டும் குடுவையிலுருந்து ஷாவை ஊற்றினார்.
நான் அமர்ந்திருப்பது அப்போதுதான் நினைவு வந்தது போல
“ இப்போதும் சபர் செய்கிறீர்களா” என்றார்
“முன்பை போல இல்லை, கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு சென்றேன்” என்றேன்
“ராணுவங்களுக்கு கூட திறக்காத சாலைகள் உங்களைப் போன்ற சபர்காரர்களுக்கு திறந்து கொள்கிறது” என்றுவிட்டு வாய்விட்டு சிரித்தார்
நானும் சேர்ந்து கொண்டேன்
முடித்துவிட்டு என் கண்களை உற்று பார்த்து
“சகோதரா உங்களை போன்ற அனுபவமிக்க சபர்காரரால் மட்டுமே எங்களுக்கு செய்ய கூடிய உதவி ஒன்று உண்டு. கேக்கலாமா?” என்றார்
“கேளுங்கள் சகோதரரே” என்றேன்
“எங்கள் படையின் ஒரு பிரிவு எத்தியோப்பியாவில் ஜிகாத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு தெரிந்திருக்கும்”
நான் ஆமோதித்து தலையசைத்தேன்
“அவர்களுக்கு ஆயுதங்கள் அவசரமாக தேவைபடுகிறது. ஆயுதம் ஏற்றபட்ட லாரி தயாராக உள்ளது. அதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திறமையுள்ள ஆள் தற்போது உங்களை தவிர வேறு யாரும் ஜிலிப்பில் இல்லை” என்றார்
“எங்கு சேர்ப்பிக்க வேண்டும் சகோதரரே” என்றேன்
“அடிஸ் அபாபா” என்றார்
எத்தியோப்பிய சோமாலிய எல்லை பகுதியான ஒகடனில் சண்டை நடக்கிறது, ஆயுதங்கள் எதற்கு அங்கிருந்து ஐநூறு கி மீ தொலைவில் இருக்கும் அடிஸ் அபாபாவிற்கு என்னும் எண்ணம் என் மனதில் ஓடியது. என் புருவங்கள் சுருங்குவது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்
“என்ன யோசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அமெரிக்க செயற்கை கோள்களையும், எத்தியோப்பிய படைகளையும் தாண்டி நேராக ஒகடனுக்கு ஆயுதம் அனுப்புவது இயலாத காரியம். நீங்கள் லாரியை அடிஸ் அபாபா சேர்த்துவிட்டால் அங்கிருந்து ஆயுதங்களை சிறிது சிறிதாக பிரித்து எங்கள் வீரர்கள் அதை ஒகடனுக்கு கொண்டு சென்று விடுவார்கள். இது வரை ஒரு முறை கூட அவர்களால் ஆயுதங்களை பிடிக்க முடிந்ததில்லை” என்றார்
அவர் கண்கள் என்னை எடை போட்டுக் கொண்டிருந்தன.
“என் கடமை, சகோதரரே. எப்போது கிளம்ப வேண்டும்” என்றேன்
மெலிதாக புன்னகைத்துவிட்டு “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.” என்றார்.
சபர் (பயணம்)

விருப்பமற்றவற்றை எங்கும் மறுக்ககூடிய நிலையில் இருப்பவர்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள். இந்த உலகில் மிருகங்களுக்கு கூட அருளப்பட்டுள்ள அந்த ஆசிர்வாதம் பெரும்பாலான மனிதர்களுக்கு அருளப்படவில்லை.
கென்ய நெம்பர் பிளேட் மாட்டப்பட்ட லாரியை என்னுடன் அனுப்பபட்ட அல் ஷபாப் போராளிகள் இருவர் என்னிடம் ஒப்படைத்தனர். வண்டியின் கூடு அடர்பச்சை தார்ப்பாயால் இழுத்து மூடப்பட்டிருந்தது.
நான் குனிந்து எத்தனை டீசல் டாங்குகள் உள்ளன என பார்த்தேன். மூன்று இருந்தது.
“மூன்றும் நிரப்பபட்டுள்ளது . போய் சேர போதும்” என்றான் உடன் வந்த இருவரில் ஒருவன்.
1400 கி மி போக மூன்று டாங்கு டீசல் தேவையில்லை. பளு அதிகமாக இருக்க வேண்டும். துப்பாக்கிகளோடு வேறு ஏதாவது கன ரக ஆயுதங்கள் ஏற்றி இருக்கக்கூடும். உள்ளே என்ன இருக்கிறது என இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பார்த்தாலே தெரிகிறது இருப்பதிலேயே கடை நிலை போராளிகள் இவர்கள். புதிதாய் சேர்ந்திருக்க வேண்டும்.
லாரியை சுற்றி டயர்களை தட்டி பார்த்தேன்.மோசமில்லை, நன்றாகவே இருந்தது. என் பயண தோள்பையை லாரி கேபினுக்குள் வைத்துவிட்டு, ஜிப்பை திறந்து தொழுகைக்கான விரிப்பை எடுத்தேன்.
பயணத்திற்கு முன்னால் இரண்டு ராக்கத் நவாபில் (Nawafil) தொழுகையை செய்வது என் வழக்கம்.
லாரிக்கு அருகில் இருந்த பெரிய கருவேல மரத்தடிக்கு சென்று கால்களால் செத்தை, குப்பைகளை ஒதுக்கினேன். விரிப்பை தரையில் இட்டு மெக்கா நோக்கி தொழுதேன்.
விரிப்பை உதறி எடுத்துக் கொண்டு லாரியில் ஏறினேன். கதவை இழுத்து அடித்து சாத்திவிட்டு அவர்களை நோக்கி விடை பெறுவது போல கைகளை ஆட்டினேன். என்னோடு ஒரு சொல் கூட பேசாமல் நின்றவன் கதவருகில் ஓடி வந்து நின்றான். சட்டைப்பையில் இருந்து ஒரு USB stick ஐ எடுத்து நீட்டினான்.
“ஹத்ராவியின் கவிதைகள். கேட்டு கொண்டே போனால் களைப்பு தெரியாது” என்றான் புன்னகையுடன்
“நன்றி சகோதரா. ஆனால் நான் இதை வாங்கி கொள்ள முடியாது. என்னை விட உங்களுக்கு இதன் தேவை அதிகம்” என்றேன்
“என்னிடம் இதை போன்று இன்னும் நான்கு குச்சிகள் இருக்கின்றன. நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்
நான் வாங்கி என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்
“மிக்க நன்றி சகோதரா” என்றுவிட்டு வண்டியை நகர்த்தி சாலையில் ஏற்றினேன்.
போராளிகள் இருவரும் பின் கண்ணாடியில் நகர்ந்து நகர்ந்து பின் சென்று சிறு புள்ளியாய் தெரிந்து பின்னர் மறைந்தனர். இருவருக்கும் பதினாறு, பதினேழு வயதிருக்கலாம். இவர்கள் இருபது வயதை தாண்டி வாழ்வதற்கான சாத்தியக்கூறு மிக குறைவு. ஆனால் நான் பார்க்கும் எல்லா போராளியும் கிழவனாகும் வரை தான் வாழப்போகிறோம் எனும் மிதப்பில்தான் துப்பாக்கியை சுமந்து திரிகிறார்கள்.
இங்கிருந்து புர்ராக் வரை அல் ஷபாப் ஆட்கள்தான். ஒரு பிரச்சினையும் இருக்காது. புர்ராக் தாண்டினால் கென்யா. கென்யாவிலும் பண சுருளுக்கு திறக்காத செக் போஸ்டுகள் எதுவும் இல்லை. கென்ய எல்லையை தாண்டி எத்தியோப்பியா நுழைவதற்கு முன் எத்தியோப்பிய நெம்பர் ப்ளேட்டுகளை மாட்ட வேண்டும். எத்தியோப்பியாவில் அகதி பயண வழிகளில் எனக்கு அத்தனை வழிகளும் திறக்கும். அதுவும் பிரச்சினை இல்லை. நான் நிற்காமல் ஓட்டினால் கூட அடிஸ் அபாபா சென்று சேர 25 மணி நேரம் பிடிக்கும். நான் கொண்டு செல்வது ஆயுதம், ஆட்களல்ல . அதனால் நிற்காமல் சென்றுதான் ஆக வேண்டும். இந்த பயணத்தில் தூக்கமின்மைதான் பெரிய பிரச்சினை.
பாலைவன சாலைகள் துக்கமும் தூக்கமும் ஒரு சேர வரவழைக்கிற வரம் பெற்றவை. நல்ல வேளையாக அந்த போராளி சிறுவன் பாட்டு குச்சியை கொடுத்தான். ஹத்ராவி உரக்க கவிதை சொல்லிக்கொண்டே வருவார்.
எல்லாவற்றிலும் முரண்பட்டு துப்பாக்கி சண்டை போட்டுக் கொள்ளும் நாங்கள் உடன்படும் ஒரே இடம் ஹத்ராவிதான். அத்தனை பிரிவினருக்கும், அத்தனை இனத்திற்கும் அவர்தான் சோமாலி மொழியின் தலைசிறந்த கவிஞன். அவர் கவிதை வரிகளை சொல்லாத சோமாலி இந்த உலகில் இல்லை.
அவரை நினைத்தவுடன் என்னை அறியாமல் ஓர் புன்னகை. சட்டைப்பையில் இருந்து பாட்டு குச்சியை எடுத்து முன்னால் இருந்த பாடும் கருவியில் செருகி, அருகில் இருந்த பொத்தானை அழுத்தினேன். பச்சை மஞ்சளெனெ வண்ணங்களை உமிழ்ந்து அது உயிர் பெற்றது. ஹத்ராவி தன் மெல்லிய குரலில் தீர்க்கமாக வாசிக்க ஆரம்பித்தார். முதல் கவிதையே திகைப்பு என்ற அவர் காதல் கவிதை. போராளி சிறுவன் ரசனை மிக்கவன்!
ஹத்ராவியோடு சேர்ந்து நானும் கவிதை சொல்ல ஆரம்பித்தேன்:
ஓ என் ஒளிரும் அன்பே
இனிய தற்செயல்களும் நியாயமான அதிர்ஷ்டங்களும் உனதாகட்டும்
மனதை மயக்குபவளே
நம் பரிச்சியத்திற்கு பின்
என் ஒரே காய்ச்சல் நீதான்
புன்னகையுடன் சில கவிகள், உற்சாகமாக சில, தொண்டை புடைக்க கத்தி சில, கண்கள் தழுதழுக்க சிலவென கவிதை சொல்லிக் கொண்டே கென்ய எத்தியோப்பிய எல்லை வரை வந்துவிட்டேன்.
நெம்பர் ப்ளேட் மாற்ற நான் இறங்கியபோது சியாத் பர்ரே ஆட்சியில் ஹத்ராவிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுத்த “பெண் ஒட்டகத்தை கொல்லுதல்” கவிதையை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்
எப்படி விரைந்து வந்தார்கள் பார்
பெண் ஒட்டகத்தின் பிணம் கிடக்கும் இடத்திற்கு
எவ்வளவு தள்ளுமுள்ளு பார்
அவள் மாமிசத்தில் தன் பங்கை
கீறி எடுக்க
என் உதடுகள் என்னை அறியாமல் அவ்வரிகளை உடன் சொல்லிக் கொண்டிருந்தது.
ப்ளேட்டுகளை மாற்றிவிட்டு, டயர்களில் சிக்கி இருந்த சிறு கற்களை வளைகொறடு கொண்டு நீக்கினேன்.
மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்த போது இருக்கையை இன்னும் சற்று பின்னால் தள்ளினால் சவுகரியமாக இருக்கும் எனப்பட்டது. இருக்கைக்கு கீழுருக்கும் கம்பியை எவ்வளவு இழுத்தும் இருக்கை நகரவே இல்லை.
மண்டியிட்டு திரும்பி அமர்ந்து இருக்கையின் பின்னால் பார்த்தேன். இருக்கை நகராமல் இருக்கும் அளவிற்கு பின்னால் எந்த பொருளும் இல்லை.
கால் வைத்து ஏறும் இடத்தில் இறங்கி நின்று சீட்டுக்கடியில் பார்த்தேன். ஒரு பெரிய இரும்பு பெட்டி போல் ஒன்றிருந்தது. தலையை சிரமபட்டு சற்று உள்ளே விட்டு அந்த இரும்பு பெட்டிக்கு அப்பால் பார்க்க முயற்சி செய்தேன். மூன்றாவது முயற்சியில் கத்தையாக ஒயர்கள் லாரியின் லோடு பகுதிக்குள் செல்வதைப் பார்த்துவிட்டேன்.
அதிர்ச்சியில் தடுமாறி மண்ணில் விழுந்தேன். பாலை மணல் என்னை மிருதுவாக வாங்கி கொண்டது.
இதயம் படுவேகமாக அடித்து கொண்டது. கண்களில் என்னை அறியாமல் நீர் வழிந்து கொண்டே இருந்தது.
பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் ஒரு வெடிகுண்டிற்குள் அமர்ந்திருந்திருக்கிறேன். இன்னும் 13 மணி நேரம் இதில் நான் பயணம் செய்ய வேண்டும்.
அப்படியே விட்டுவிட்டு ஓடுவது வண்டிக்குள் இருப்பதை விட ஆபத்தானது.
ஆத்திரமும் அழுகையுமாய் லாரியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
வாய் அநியாயம் அநியாயம் என அரபியில் அரற்றி கொண்டிருந்தது.
இதிலெங்கே இருக்கிறது பரஸ்பர ஒப்புதல். இதுதான் நீ குரான் சொல்படி நடக்கும் லட்சணமா என விரிந்த பாலையை நோக்கி கத்தினேன்.
லாரிக்கு அருகில் போகவே எனக்கு அச்சமாக இருந்தது.
லாரி இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி சென்றேன். சோர்ந்து போய் மணலில் படுத்து வானை பார்த்தேன். பாலை நிலவு ஒளியள்ளி வீசிக் கொண்டிருந்தது.
நிலவையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண் அயர்ந்துவிட்டேன்.
அரை மணி நேரம் கழித்து விழிப்பு வந்து சடக்கென எழுந்து அமர்ந்தேன்.
ஓடிச்சென்று லாரியில் ஏறி அதனை உயிர்ப்பித்து ஓட்ட ஆரம்பித்தேன். மிக ஜாக்கிரதையாக சீரான வேகத்தில் அதனை செலுத்தினேன்.
பிரதான சாலைகளை தவிர்த்து அகதி வழிகளில் வண்டியை விட்டேன். செக் போஸ்டுகளில் இருந்தவர்களுக்கு என் முகம் பரிச்சியம். பணச்சுருள்களை வாங்கி கொண்டு திறந்து விட்டு கொண்டே இருந்தனர். அகதி வழிகளில் இருக்கும் காவல் அதிகாரிகள் வெறும் பணத்திற்காக மட்டும் இதை செய்வதில்லை. பலருக்கும் வண்டியில் பயணம் செய்பவர்கள் வாழ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் ஒருவகை சேவை இது. உள்ளே இருப்பது ஆட்கள் அல்ல என்பது தெரிந்தால் அந்த இடத்திலேயே நான் கொல்லபடுவேன்.
என் பல ஆண்டு பழக்கம் கை கொடுத்தது. யாரும் கூண்டிற்குள் எட்டிக் கூட பார்க்கவில்லை.
என் மனம் பலவாறாக தத்தளித்து கொண்டிருந்தது.
அவர்கள் சொன்ன இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டு உடனடியாக சுடான் சென்று அங்கிருந்து மொகதிசு போய் விட வேண்டும்.
ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க கூடாது.
இவர்களுக்கு செய்த இந்த உதவி மறக்கபடாது. என் புது தொழிலுக்கு அது நல்லது.
அல் ஷபாபே என் பரிவர்த்தனை சேவையை அவர்கள் ஆட்சியில் உள்ள மக்களுக்கு பரிந்துரை செய்ய கூட வாய்ப்பிருக்கிறது.
அந்த சி ஜ ஏ காரனின் எண்ணை மனப்பாடம் செய்திருக்கிறேன். அவனுக்கு அழைத்தால் என்ன?
அது ஒரு வழி பாதை. அதன் பிறகு அல் ஷபாப் இருக்கும் வரை நான் சோமாலியாவில் கால் வைக்க முடியாது. என் மொத்த கனவும் முடிந்து போகும். லண்டனிலோ, நியூ யார்கிலோ கார் கழுவிக் கொண்டு, கட்டிட வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும்.
அதற்கு நான் சாகலாம். இப்போதே என் சகோதரனை போல உடல் சிதறி சாகலாம்.
ஆம் சாவை விட அது கொடிது.
பனியில் கிடந்து நடுங்கிச் சாக நான் பிறக்கவில்லை. பாலை நிலவில், எரிக்கும் வெயிலில், பொன் மணலில், எங்கள் கடலின் இதமான உப்பு காற்றில் வாழ பிறந்திருக்கிறேன். என் பிள்ளைகள் இங்கு வர வேண்டும். இங்கு நாங்கள் வாழ வேண்டும்.
மரணமும் அந்த அழைப்பும் ஒன்று.
முடியாது முடியாது முடியாது. அது சாத்தானுக்கு அஞ்சி நெருப்பில் குதித்த கதையாகிவிடும்.
என்னை இப்போது ஹத்ராவியின் பெண் ஒட்டகமாக உணர்ந்தேன். அமெரிக்கனோ அல் ஷபாபோ எல்லோரும் என் சதையை கீறி தின்ன காத்திருக்கிறார்கள்.
எப்படி விரைந்து வந்தார்கள் பார் எப்படி விரைந்து வந்தார்கள் பார் என அடி வயிற்றில் இருந்து கத்தினேன்
வண்டி குலுங்கலில் ஏதாவது ஒயர் பீய்ந்து வெடித்து சிதறினால்? அந்த நினைப்பு வந்தவுடன் வேகம் தானாக குறைந்து இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் அல்லாவின் இச்சை அதுவானால் அப்படியே ஆகட்டும் என நினைத்து கொண்டேன். அது சற்று அசுவாசமாக இருந்தது.
ஹைத்ராவி வேறு கத்தி கொண்டிருக்கிறார். அணைக்கவும் மனதில்லை. தனியனாகிவிடுவேன் அவரில்லாமல்.
சத்தமாக சன்னதம் வந்தவன் போல அவரோடு ஒவ்வொரு வரியாக கத்திக்கொண்டே வண்டி ஓட்டினேன். என் மனம் தறி கெட்டு ஓடாமல் இருக்க அது உதவியது.
பின் மாலை நேரத்தில் எமீர் எனக்கு சொன்ன அடிஸ் அபாபா புறநகர் பகுதியை அடைந்தேன்.
அவர் சொன்ன எண்ணுக்கு நான் அழைத்து சொல்லிவிட்டால் என் வேலை முடிந்தது.
சுடானுக்கு நான் நடையை கட்டலாம்.
என் சோமாலிய அலைபேசியை இங்கு பயன்படுத்துவது தற்கொலைக்கு சமம். குறைந்தது பத்து நாடுகளாவது அதனை ஒட்டு கேட்கும்.
இணைய சேவையும், தொலைபேசி சேவையும் அளிக்கும் கடை ஒன்று கண்ணுக்கு பட்டது. அதனை தாண்டி சிறிது தூரம் சென்று வீடுகளும் கடைகளும் இல்லாத ஒரு சிறு திடல் போன்ற இடத்தில் லாரியை நிறுத்தினேன்.
லாரியில் இருந்து இறங்கி மெதுவாக கதவை சாத்தினேன்.
என் பயணப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு அந்த தொலைபேசி சேவை கடையை நோக்கி நடந்தேன்.
பொன் வெயில் சாலையில் பொழிந்து அனைத்திற்கும் ஒர் பொன் பூச்சை அளித்து கொண்டிருந்தது. சிரிப்பொலிகள், பேச்சொலிகள்.
ஓர் வீட்டின் முன் கையில்லாத பனியனும், அரைக்கால் சட்டையும் அணிந்து, கழுத்தில் சிலுவை ஆட இரு சிறுவர்கள் கால் பந்தாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொள்ளும் தொனியிலேயே யாரும் சொல்லிவிட முடியும் அவர்கள் சகோதரர்கள் என்பதை.
நின்று அவர்கள் விளையாடுவதை பார்க்க வேண்டும் எனும் ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களை கடந்தேன். கடைக்குள் நுழைந்து அம்ஹாரிக் மொழியில் தொலைபேச வேண்டும் என்றேன்.
கடை ஆள் கணினியும் ஒரு தொலைபேசியும் வைக்கப்பட்டிருந்த ஒரு மேஜையை கை காட்டினார்.இருக்கையில் அமர்ந்து ஒரு நிமிடம் கண்களை மூடினேன். சாத்தானும்,நெருப்பும்,பெண் ஒட்டகமும், பந்தாடும் சிறுவர்களும் என் மண்டைக்குள் மாறி மாறி ஓடியது. நீண்ட பெருமூச்சோடு முடிவெடுத்து எண்களை அழுத்தினேன்.
ஐந்து நீண்ட அழைப்பு மணிகளுக்கு பிறகு அழைப்பு உயிர்பெற்றது.
நான் ஹலோ சொல்லி என் பெயரை சொன்னேன்.
“சொல் நண்பா” என்றான் சி ஐ ஏ காரன்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
