இஸுரு சாமர சோமவீர கவிதைகள்

சிங்கள மூலம் : இஸுரு சாமர சோமவீர

தமிழாக்கம் : எம். ரிஷான் ஷெரீப்

சிறு காட்டுக் குருவி

மரித்த சின்னக் காட்டுக் குருவியொன்றை
தனது உள்ளங்கையில் வைத்திருக்கும்
பிள்ளையொன்று அழுகிறது
நதியோரத்தில்

தோன்றியிருக்கின்றன குருதித் துளிகள்
காற்று அதிரச் செய்த சிறகுகள் உடைந்து

அணைந்திருக்கிறது பிரகாசம்
ஒரேயடியாக வானுயர்ந்து
ஒற்றைப் பார்வையில் உலகை நோக்கிய விழிகளின்

திறந்தேயிருக்கின்றன சிறு சொண்டுகள்
இவ்வளவு காலமும் பாடாத பாடலொன்றை
நிச்சலனமாய்ப் பாடுவது போல

தனது கவணின் இலக்கு
குறி தவறாமல் தாக்கியதில்
துள்ளிக் குதிப்பதற்குப் பதிலாக
இரையைக் கையிலேந்தி
அழுகிறது அந்தப் பிள்ளை
மெதுவாக விம்மி விம்மி

உருவம் தென்படாமல்
காட்டுக் குருவியொன்று பாடுவதைக் கேட்கையில்
நடந்து போகிறேன் மனதால்
நதிக்கரை மூங்கில் புதரின் கீழே
காட்டுப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
சிறிய கல்லறையொன்றை நோக்கி

சிறைப்பட்டிருக்கிறது கவிதையொன்று என்னுள்
ஒப்பாரிப் பாடலொன்றைப் போல

அவ்வப்போது கனவுகளில்
அழுகிறதோர் பிள்ளை விம்மி விம்மி


புத்தகப் பக்கங்களிடையே கண்ணாடியொன்று

திகைத்துப் போனேன் நான்
பெளத்த பாட புத்தகப் பக்கங்களிடையே
கண்ணாடியொன்று

என்னைப் போலவே ஓர்
ஒற்றைப் பார்வையை யாசித்தவாறு
நதிக்கரையோரத்திலிருந்து
தவித்திருக்கக் கூடும் தாகத்தில்
நீங்களும்

நிச்சலனமாக தனிமையில்
பெருவிருட்சத்தின் அடியில்
அவிழ்த்திருக்கக் கூடும் பெளத்த போதனைகளை
காண்பதற்கென
ஏதேனுமோர் ஈரக் குளிர்ச்சியை

சுற்றிவர பெரும் சனக் கூட்டத்தினிடையே
தனியாகத் தேடியிருக்கக் கூடும்
நிழலுக்கென சிறியதொரு புற்புதரை

வெளியேற்றப்பட்டதன் பிறகுதான்
நீங்கள் ஏற்றிருக்கக் கூடும் துறவை
ஊற்றெடுக்கையில் உங்களிரு விழிகளும்
நனைந்திருக்கக் கூடும் கற்படிகளும்

என்னைப் போல அல்லாமல்
உங்களுக்கென
இடி இடித்து மின்னல் வெட்டி அவ்வேளையில்
குளிர்ச்சியாகப் பெய்திருக்கக் கூடும் கனமழை


வெப்பவலயத் தோட்டத்தில்

சிவப்பு, வெள்ளைப் புள்ளிகள் விழுந்த
பெரிய இலைகளுடனான சேம்பிலை
கடும் ஊதா நிற செம்பருத்தி
தன்பாட்டில் உயர்ந்து கொண்டு போகும்
பனையின மரங்கள்
மூச்சுத்திணறும் அளவுக்கு மரங்களை
இறுக்கமாகக் கட்டியணைத்தவாறிருக்கும்
கிழிந்த இலைகளுடனான கொடிகள்
அடங்கிய சோலையொன்றில் இருக்கிறேன் நான்

பூக்கள் பூக்கின்றன
தளிர்கள் தோன்றுகின்றன
இலைகள் உதிர்கின்றன
மண்ணாக மாறுகின்றன

எண்ணற்ற நிறங்களுக்கு மாறும்
பச்சோந்திகள் வந்து ஏறுகின்றன என் மேல்
தூங்கி விழுகின்றன விடிகாலை வெயிலில்

மழைக்காலத்தில்
படர்ந்து வளர்கிறது பாசி என் தோலில்
உரிந்து விழவும் காத்திருக்கின்றன பட்டைகள்

எப்போதாவது
சிறிய கானகப் பட்சியொன்று வந்து
மிகச் சிறிய கவிதையொன்றைப் பாடி விட்டு
காணாமல் போகும் ஆகாயத்தில்

கருப்பும், வெள்ளையுமென புள்ளி விழுந்த
பளபளக்கும் சர்ப்பம் வரும் நாளில்
பிளந்த நாவால் மோப்பம் பிடித்து
மீண்டும் போகும் வேட்டைக்கு

பகலின் வெப்பத்தை விடவும்
தாங்க முடியாமலிருக்கிறது
இராக் காலக் குளிரை
பிறையைப் பூரணப்படுத்தியவாறே
மெதுவாகத் தொடர்கிறது
நிலவு கூட அதற்குரிய பயணத்தை

உடைந்த சிறகுடைய
பளிங்கு வெண்மை நிறம் மங்கிய
தேவ தூதனாகிறேன்
தெய்வங்களே மறந்து போன
வெப்பவலயத் தோட்டமொன்றில்


கவிஞர் பற்றிய குறிப்பு 

இஸுரு சாமர சோமவீர

சிங்கள மொழியில் கவிதைகளையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர் இஸுரு சாமர சோமவீர இலங்கையைச் சேர்ந்தவர். பூச்சியியல் வல்லுநராகப் பணிபுரியும் இவரது  நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவரது படைப்புகள் பலவும் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு  வெளியாகியுள்ளன. தனது கவிதைத் தொகுப்புக்காகவும், சிறுகதைத் தொகுப்புக்காகவும் தனித்தனியே கொடகே சாகித்திய விருதுகளை வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருமதி.பெரேரா’ எனும் தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘ஓர் இதயம் ஓர் உடல் ஓர் இரகசியம்’ எனும் தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. 


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.