மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றன

தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

மூலம் : யுஷிமா ஒனிட்சுரா

தமிழாக்கம் : நந்தாகுமாரன்

நீங்கள் திரும்புகிறீர்கள்
திடீரென்று அங்கு
ஊதா நிற இலையுதிர்கால வானத்தில்
வெள்ளை நிற ‘ஃப்யூஜி’1 மலை


இந்தப் பயனற்ற கனவுகள், ஐயோ!
வாடிய புல் வயல்களுக்கு மேல்
கடக்கும்போது காற்று கிசுகிசுக்கிறது


இவ்வாறே என் இனிய வாழ்வும் முடிய வேண்டும்
மற்றொரு மலர் உதிர்ந்து மிதந்து செல்வதைப் போல


குளிர், குளிர் மாலை
வெள்ளை நிலவு
இலையுதிர்காலக் காற்று வீசுகிறது


ஒரு குரலற்ற மலர்
கீழ்ப்படிதலுடன் கேட்கும் காதுடன் பேசுகிறது


‘கமீலியா’2 செடி
தன் வெண்மையைத் திறக்கும் தோட்டம்
அமைதியாக இருக்கிறது


இறுதியாக
‘ப்ளம்’3 பற்றி அறிய
முழு இதயத்தையும்
உங்கள் மூக்கையும் பயன்படுத்தவும்


கண்கள் முன்னும் பின்னுமாக
மூக்கு மேலும் கீழும்
வசந்த மலர்கள்


என் கனவை திரும்ப கொடு காக்கையே
நீ என்னை எழுப்பிக் காண்பித்த இந்த நிலவின் மேல்
மூடுபனி உள்ளது


எந்த இடமும் இல்லை
பயன்படுத்திய குளியல் தண்ணீரை வீசி எறிய
எங்கும் பூச்சிகளின் குரல்கள்


இந்தக் குளிர் காற்று
வெற்று வானம் நிரம்புகிறது
‘பைன்’4 மரங்களின் ஒலிகளுடன்


என் உயிரும்
தண்ணீரில் மூழ்கிப் பின் வெளியேறுகிறது
அந்த நீர்க்காகத்துடன்


ஏன் சிலப் பனிக்கட்டிகள்
நீளமாகவும் சில குறுகியதாகவும்
இருக்கின்றன5


இங்கே வா! இங்கே வா!
நான் அழுகிறேன், ஆனால் மின்மினிப் பூச்சிகள்
வெறுமனே பறந்து செல்கின்றன6


பார்த்தபடியே நான் ஆச்சரியப்படுகிறேன்
எந்தக் கவிஞனால் தன் எழுதுகோலைக் கீழே போட முடியும்
ஒரு மிகச் சரியான நிலவு


நாளின் விடியல்
‘பார்லி’7 இலையின் நுனியில்
வசந்தத்தின் உறைபனி


எனக்கு நன்றாகத் தெரியும்
‘ஜூன்’ மாதம் மழை பெய்யும் என்றும்
அது வெறுமனே விழும் என்றும்


பள்ளத்தாக்கில் உள்ள ஓடை
கற்களும் பாடல்கள் பாடுகின்றன
‘செர்ரி’ப்8 பூக்களின் கீழ்


அவசரகதியில் நகரும் மக்கள்
மக்களுக்குப் பழகிக் கொள்ளும்
குட்டிக் குருவிகள்


குதிக்கும் ‘ட்ரவ்ட்’9 மீன் பார்க்கிறது
வெகு கீழே, சில வெள்ளை மேகங்கள்
அவையும் பாயும் போது


பனியின் நேர்மை
சந்திரன் மற்றும் செர்ரி பூக்கள்
கலையின் உண்மைத்தன்மை


நிலவொளி ஆலங்கட்டிகள்
இரவுப் பருந்துகள் திரும்புகின்றன


இராப்பாடி10 பாடவில்லையெனில்
அது ஒரு வெறும் சிறு பறவை தான்


ஊர்ந்து வருகிறது
கிட்டத்தட்ட கவனிக்கப்படாமல்
இந்தப் புத்தாண்டு தினம்


இலையுதிர்காலக் காற்று
குறுக்காக வீசுகிறது
மக்களின் முகங்களின் தோற்றம்


காற்று விசில் அடிக்கிறது
வானம் முழுவதும்
குளிர்கால ‘பியோனி’கள்11


வெள்ளைத் தங்கம்
சாயங்காலத்தின் மேல் விழும் மழைத் தூறல்
புத்தாண்டுக் கொண்டாட்டம்


பரந்த சமவெளிக்கு மேல்
எல்லா இடங்களிலும் சரிந்து
‘பேம்பஸ்’12 புற்கள்


குறிப்புகள்

1 ஃப்யூஜி – Mount Fuji – ஜப்பானின் மிக உயர்ந்த எரிமலை (இது இறுதியாக 1707 முதல் 1708 வரை வெடித்தது) – ஜப்பானின் ஒரு மிக முக்கிய கலாச்சார அடையாளம் இந்த மலை

2 கமீலியா – Camellia – ஒரு வகைப் பூச்செடி

3 ப்ளம் – Plum – உண்ணக்கூடிய ஒரு பிரபலமான பழம்

4 பைன் – Pine – நீண்ட ஊசி வடிவக் கொத்து கொத்தான இலைகள் கொண்ட ஒரு பசுமையான மரம். இது மரச்சாமான்கள் செய்யப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

5 முதற் பார்வைக்கு இந்த ஹைக்கூ மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு குழந்தை கேட்கும் கேள்வி போல் தெரிகிறது. இருப்பினும், இது ஒனிட்சுராவின் ஜென் (zen) நடைமுறையை பிரதிபலிக்கும் ஒரு ஆழமான கேள்வி (அவரது வயதான காலத்தில், அவர் ஜென் மட்டுமே பயிற்சி செய்ய, ஹைக்கூ எழுதுவதை நிறுத்தினார்). இந்த ஹைக்கூ முன் வைக்கும் கேள்விக்கு பதில் என்று எதுவும் இல்லை. பனிக்கட்டிகள் சீரற்ற முறையில் அதிகம் நீளமாகவோ குறைவான நீளத்துடனோ இருக்கும். இதில் எந்த விதியும் இல்லை, பொறியியலும் இல்லை. அவை தன்னிச்சையாக உருவாகின்றன. இந்த ஹைக்கூ, பனிக்கட்டிகளின் நீளம் முக்கியமில்லை, ஒரு பனிக்கட்டியை உருவாக்கும் செயல் மட்டுமே முக்கியம் எனச் சொல்கிறது, மேலும் இதற்கும் மேல் இது குறித்துச் சிந்திக்கவும் எதுவும் இல்லை. நீளமானதாக இருந்தாலும் சரி, குட்டையாக இருந்தாலும் சரி, பனிக்கட்டி ஒரு பனிக்கட்டி தான். ஜப்பானின் ‘வாபி-சபி’ (wabi-sabi) தத்துவத்தின் ஒரு பகுதி, இருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்வதும், அபூரணமாகத் தோன்றும் அழகைப் பார்ப்பதும் ஆகும். இந்த அர்த்தத்தில், எவ்வளவு நீளமாக இருந்தாலும் அல்லது குறுகியதாக இருந்தாலும், ஒவ்வொரு பனிக்கட்டியும் அதன் சொந்த வழியில் சரியானது தான். முக்கியமாக, ஓனிட்சுரா, விஷயங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதை வாசகர்கள் சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறார். இதற்கான எளிதான பதில்: அவை ஏன் அப்படி இருக்கின்றன எனில் அவை அப்படி இருக்கின்றன அவ்வளவு தான்.

6 ஒனிட்சுரா தன் 8 வயதில் எழுதிய ஹைக்கூ

7 – பார்லி – Barley – புல் குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக் கூடிய ஒரு முக்கிய தானிய வகை

8 செர்ரி – Cherry – செர்ரி மலர்களின் மலர்ச்சியை ஆண்டுதோறும் கண்ணுற்றுக் கொண்டாடுவது என்பது ஜப்பேனியப் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, கலை மற்றும் இலக்கியத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட ஒரு மாபெரும் வருடாந்திர நிகழ்வு – இது உண்ணக் கூடிய ஒரு வகைச் சிவந்த பழம் வரும் மரம் கூட

9 ட்ரவ்ட் – Trout – ஒரு வகை நன்னீர் மீன்

10 இராப்பாடி – Nightingale – அதீத அழகியல் சார்ந்த உணர்வுகளின் வாழ் நிலை அறிக்கைகளையும், சிறுமை தாண்டும் பெருமைகளாக மலரும் மிகைப்படுதல்களையும், பொழுது சமையும் பொருட்டு நிகழ்த்தப்படும் வெளிப்படையான கற்பனைகளையும் உண்மை நிலைக்கு நேர்மையின் கலை வார்ப்பில் கொணர்ந்தவர் யுஷிமா ஓனிட்சுரா – இது அப்படியான ஒரு கவிதை

11 பியோனி – peony – பியோனிகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் மேற்கு வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரங்கள். அவை ஆசியாவில் “பூக்களின் ராஜா” என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை சக்தி, செல்வம் மற்றும் அழகு ஆகியவற்றின் அடையாளமாக உள்ளன.

12 பேம்பஸ் புற்கள் – Pampas grass – ஒரு பெரிய வற்றாத புல் வகைத் தாவரம். கோடையின் பிற்பகுதியில், வெள்ளி-வெள்ளைப் பூக்கள் கொண்டு இது உயரமாக வளர்ந்து நிற்கும்.

ஆசிரியர் குறிப்பு

யுஷிமா ஒனிட்சுரா (Uejima Onitsura) – (ஏப்ரல் 1661 – 2 ஆகஸ்ட் 1738)

யுஷிமா ஒனிட்சுரா, எடோ (Edo) காலத்தைச் சேர்ந்த ஒரு ஜப்பானிய ஹைக்கூ கவிஞர். இவர் இடாமி (Itami) எனும் இடத்தில் சகே (Sake) எனும் அரிசி மது (Rice Wine) தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்து, பிறகு ஒசாகா (Osaka) எனும் இடத்திற்குக் குடிபெயர்ந்து, அங்கேயே அதிக காலம் வாழ்ந்தார். அவரது கவிதைகளுக்காக ஒசாகா பகுதியில் மிகப் பிரபலமானார். பாஷோவின் கவிதை பாணியை வரையறுப்பதற்கும் எடுத்துக்காட்டுவதற்கும் யுஷிமா (பிற எடோ காலக் கவிஞர்களுடன்) உதவிய பெருமைக்குரியவர். 1650 ஆம் ஆண்டில், ஹைகை (haikai) வகைக் கவிதைகளை உயர்ந்த இடத்திற்கு நகர்த்தி அவற்றிற்குப் புதிய புகழைக் கொடுத்த இரண்டு கவிஞர்கள் உருவாகி வந்தனர். அவர்கள், மாட்சுவோ பாஷோ (1644-1694) மற்றும் யுஷிமா ஒனிட்சுரா (1661-1738) ஆகியோர்.

ஒனிட்சுரா தனது 8 வயதிலேயே கவிதைகளில் விதிவிலக்கான ஒரு திறமையைக் காட்டினார். 16 வயதில், ஹைகை மற்றும் பிற கவிதைகளைப் பயில, டேன்ரின் (Danrin) பள்ளியைச் சேர்ந்த மாட்சு ஷிகேயோரியுடன் (Matsue Shigeyori) சேர கியோட்டோவுக்குச் (Kyoto) சென்றார். சில காலத்திற்குப் பிறகு, டேன்ரின் பள்ளியின் கரடுமுரடான நகைச்சுவை மற்றும் மேலோட்டமான புத்திசாலித்தனம் சார்ந்த கவிதை இயக்கம் கொண்ட ஹைகை வடிவத்தைப் அவர் சந்தேகிக்கத் தொடங்கினார். அதனால் அவர் அந்த ஹைகை வட்டாரங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு தனது 5 ஆண்டு தீவிர படிப்பைத் தொடங்கினார், அதை அவர் தனது ஷுகியோ (shugyo) – ஒழுக்கம் மற்றும் பயிற்சி – என்று அழைத்தார்.

ஒனிட்சுரா தனது ஷுகியோவிலிருந்து வெளிவந்தவுடன், ஹைகை குறித்த ஒரு அதி முக்கிய பிரகடனத்தை முன் வைத்து அதையே தன் பள்ளியின் அடிப்படையாக உருவாக்கினார் – அது – “மகோடோ (makoto) எனும் உண்மை மற்றும் நேர்மை கொண்டு சொர்க்கத்தின் வழி செல்லுதல் இல்லாமல் ஒரு ஹைகை இருக்கவே முடியாது”, என்பதே.

ஒனிட்சுரா ஹிட்டோரிகோடோ (Hitorigoto) எனும் புத்தகத்தை இரண்டு பகுதிகளாக எழுதினார். அவற்றில் அவர் தனது ஹைகை கவிதைக் கோட்பாடுகளைக் கற்பித்தார். அதில் மகோடோ (உண்மை மற்றும் நேர்மை), ஹொன்ஜோ – honjo (தூய உள்ளம்) மற்றும் ஷோசென் – shosen (கவிதைச் சாரம்) ஆகியவை அடங்கும். ஹைகையில் இவை நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ஆர்.ஹெச்.ப்ளித் (R.H.Blyth) எனும் புகழ் பெற்ற ஒரு முக்கிய ஹைக்கூ மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகளில்: “ஒனிட்சுரா தான் முதல் உண்மையான ஹைக்கூவை இயற்றினார். அவரின் கவிதைகள் அவரது மேதைமையையும் தூய்மையான தன்மையையும் காட்டுகின்றன. அறிவுசார்ந்த அனுபவத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. அவை உணர்வு பூர்வமான சிந்தனைகளை எளிமையான வசனங்கள் மூலம் ஒரு மெல்லிசையைப் போல உருவாக்கி, கவிதைத் தன்மையைக் கொண்டாடுகின்றன. பாஷோவின் சமகாலத்தவர் எனினும், அவர் தனித்துவம் மிக்கவராக இருந்தார். ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) என்ற புகழ் பெற்ற கவிஞரின் கவிதைகளுக்கும் ஒனிட்சுராவின் கவிதைகளுக்கும் ஒரு பொதுத் தன்மை இருக்கிறது.”

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு நந்தாகுமாரன்

கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர், பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2012இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுதி ‘பாழ் வட்டம்’, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபெப்ருவரி 2019இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் மூன்றாம் கவிதைத் தொகுதி ‘வெறுமை ததும்பும் கோப்பை: தாந்த்ரீகக் கவிதைகள் – பாகம் – ஒன்று’, தமிழ்வெளி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2023இல் வெளியானது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.