சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

2019-ல் எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை ஈரோடு புத்தக விழாவில் சந்தித்தேன். எஸ்.ரா 2018-ல்  சஞ்சாரம் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றார். இந்த நாவல் விருது பெற்றதற்கு  அவரை பாராட்டும் விதமாக  நாதஸ்வர கலைஞர்கள் எஸ்.ராவின் இல்லத்தின் முன் திரண்டு நாதஸ்வரம் வாசித்து தங்கள் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களிடம் கொடுப்பதற்கு பொருளில்லை என்று நாதஸ்வர இசையை சன்மானமாக வழங்கிய நிகழ்வை எஸ்.ரா நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். 

நாவலை வாங்கி அவரிடம் கையெழுத்து பெற்று ஒரு புகைப்படம் எடுத்துகொண்டேன். இப்படிதான் ஒருவர் என்னிடம் நாவலை வாங்கி புகைப்படம் எடுத்து நான் அவருடைய நூலை வாங்கிகொண்டு வெளியிட்டதாக வெளியே சொல்லிவிட்டார் என்று எஸ்.ரா சொன்னதும் அங்கிருந்த அனைவரும் குபீரென சிரித்துவிட்டோம்.

தமிழ்நாட்டிற்கே தனித்துவமான நாதஸ்வர கலைஞர்களையும் இசையையும்  பற்றி எழுதப்பட்ட நாவல் சஞ்சாரம். 

கரிசல் நிலத்தின் நாதஸ்வர கலைஞர்கள் சமூகத்தால்   புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் சென்ற நூற்றாண்டுகளில் சிறப்பாக வாழ்ந்ததையும் சஞ்சாரம் நாவலில் தெளிந்த நடையில் சித்தரித்திருக்கிறார் எஸ்.ரா. தஞ்சை சார்ந்த கலைஞர்கள் சிறப்பாக இருந்ததையும் குறிப்பாக சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கே தனித்துவமான இந்த நாதஸ்வர இசையையும் கலைஞர்களையும் போற்றி அவர்களுக்கு ஆதரவளித்த மன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் 1970 வரை இருந்திருக்கிறார்கள்.

60 ஆண்டுகளுக்கு முன் டி.என் ராஜரத்தினப்பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் போன்ற கலைஞர்கள் மகாராஜாக்கள் போல் வலம் வந்திருக்கிறார்கள். அவர்கள் காலம்வரை பொது மக்கள் உட்பட இசை ரசிகர்கள் பல திருவிழாக்களிலும், கச்சேரிகளிலும் நாதஸ்வர இசையை கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

இப்படிப் புரவலர்களும், ரசிகர்களும் நாதஸ்வர இசையை கேட்டு ரசிக்கவும், கலைஞர்களை போற்றி பாதுகாக்கவும் தற்காலத்தில் தவறியது ஏன்? அவர்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியானது ஏன்?

இந்தியக் கலை மற்றும் தத்துவ அறிஞர் ஆனந்த குமாரசுவாமி சிவ நடனம் என்ற கட்டுரை தொகுப்பில் மூவாயிரம் ஆண்டுகளாக இந்திய இசை எவ்வாறு பேணப்பட்டது என்று குறிப்பிடுகிறார். மன்னர்களும், பிரபுக்களும் தங்கள் தர்பார்களில் அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் மகிழ்ந்திருக்க பிரத்தியேகமான கலைஞர்களை வைத்திருக்கிறார்கள்.  கோவில்களில் கடவுளுக்காக வாசித்திருக்கிறார்கள்.  இன்று போல் கலைஞர்கள் பொது மேடைகளில் மக்களை மகிழ்விக்கும் வழக்கமும் இல்லை. 

சஞ்சாரம் நாவலில் பக்கிரி என்ற கற்பனை கதாபாத்திரத்தின் வழியாக எஸ்.ரா சமகால நாதஸ்வர கலைஞர்களின் கடின வாழ்க்கையை விவரிக்கிறார்.

பக்கிரி சிறுவயதிலேயே அவனுடைய தந்தையார் கோவிலில்  நாதஸ்வரம் வாசிப்பதை கேட்டு ஆர்வமோடு கற்றுக்கொள்கிறான்.  கிராமங்களில் உலாவரும்  நாதஸ்வர தொன்மக் கதைகள் அவனுடைய ஆழ்மனதை கட்டமைத்திருக்கிறது. தானும் ஒருநாள் புகழ்மாலை சூட முடியும் என்று நம்புகிறான். ஊர் குலதெய்வ விழாவில் சாதி அதிகாரத்தால் அவமானப்படுகிறான்.  அங்கிருந்த வைக்கோல்போரை கொளுத்திவிட்டு தப்பி ஓடுகிறான். நாவலில் பக்கிரியின் பயணத்தின் ஊடாக கரிசல் நிலத்தில் புகழோடு வாழ்ந்த நாதஸ்வர கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். 

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதஸ்வர கலைஞர் அரட்டானம் லட்சய்யா. மாலிக் கபூர் அரட்டானம் கோவிலை சூரையாடவரும்போது உள்ளே லட்சய்யா நாதஸ்வரம் வாசித்துகொண்டிருக்கிறார். உள்ளே இருந்து கசிந்து வரும் இசை அவன் நரம்புகளை சீண்டி கிளர்ச்சியூட்டுகிறது. கதவை உடைத்து உள்ளே சென்றால் தனியொருவராக கைலாசநாதருக்கு முன்னால் லட்சய்யா  கல்லால் செய்த  நாதஸ்வரம் வாசித்து கொண்டிருக்கிறார். மாலிக் கபூர் இந்த இசை கல்லுக்கு கேட்குமா ஏன் இப்படி தனியாக வாசிக்கிறாய் என்று கேட்கிறான். அவன் முன் லட்சய்யா தன் இசையால் கல் யானையையும் காதாட்ட வைக்க முடியும் என்று கல்யாணி ராகத்தில் வாசிக்கிறார்.  கல்யாணி ராகம் தாயின் பரிவோடு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதாக இருந்தது. கல் யானையையும் காதாட்ட வெறிகொண்டு மாலிக் கபூர் காதை வெட்டி விடுகிறான். பிறகு அவரை மாலிக் கபூர் டெல்லி  சுல்தான், கில்ஜியிடம் அழைத்துச் செல்கிறான். லட்சய்யாவின் இசையால் அவர்களுக்கு பித்தேறி ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள். 

இடவலம் ஜமீனின் கதையில் ஜமீன்தார் தங்கராஜாவின் 

ரசனை நன்கு புலப்படும்.  ஜமீன் முறை ஒழுப்பால் வருவாய் இழந்து நொடிந்து போன

ஜமீன்தார் ஒரு காலத்தில் கிராமத்தில் நடக்கும் திருமணங்களுக்கு அரிசி மூட்டை, தங்கம் என்று சீர் கொடுப்பார். ஜமீன்தாரின் கொள்ளுத் தாத்தா கருணாகரபூபதி பன்னிமலைக்கு வேட்டைக்கு சென்றபோது அங்கிருந்த மலைசாதிப்பெண்ணான கடம்பியிடம் மயங்கி காட்டிலேயே பல ஆண்டுகள் தங்கிவிடுகிறார். ஒருநாள் கடம்பியின் பிடியிலிருந்து தப்பி வந்து, பித்து பிடித்து மரணமடைகிறார். 

அவர் மகன் அமிர்தீஸ்வரமூர்த்திக்கு ஜபார் என்ற தோல்வணிகர் ரசவாதம் செய்கிறார். சித்த ரகசியத்தில் வேதை/வாதம் பகுதியில் ஒரு பொருளின் தன்மையை மாற்றுவது, பாதரசத்தை கட்டுவது, தங்கம் செய்வது சாகாமல் இருக்க ரசாயனம். முப்பூ மருத்துவத்தால் தோல் வெடித்து அமிர்தீஸ்வரமூர்த்தி மரணமடைகிறார். 

ஜமீன்தார் தங்கராஜா 1919-ல் சென்னை மிண்ட் தெருவில் நடந்த டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் முதல் கச்சேரியை பார்த்திருக்கிறார். அப்போதுராஜரத்தினம் பிள்ளை வாசித்தது திமிரி நாயனம்,  சற்று காதை அடைக்கச்  செய்யும். பின்னாளில் ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரத்தின் வடிவில் மாற்றம் செய்து அமுதகானம் பொழிய செய்தவர். வெறும் உடம்போடு நாயன வித்வான்கள் வாசித்த காலத்தில் காதில் கடுக்கன், தங்கமாலை, ஷெர்வாணியில் வைரம் பதித்த பட்டன்கள், பாகவதர் கூந்தல் என்று ராஜரத்தினப்பிள்ளை கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். பவுன் 20 ரூபாய் விற்ற காலத்தில் 1000 ரூபாய் வாங்கியவர். 

“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த”  என்று துவங்கும் ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடலை பக்கிரியை வாசிக்க சொல்லி ஜமீன்தார் தங்கராஜா லயித்திருக்கிறார். பக்கிரி மேலும் பல பாடல்களை அதன் ராகத்தின் ஆரோக அவரோகண எல்லைகளை எடுத்துக்காட்டி துரித பிருகாக்களை பொழிகிறான். ஜமீன்தார் பரிசாக பக்கிரிக்கு பதக்கங்களை அணிவிக்கிறார்.

இப்படி இசையை ரசிப்பவர்கள் இருந்துவிட்டால் எப்படி அந்த இடம் கலைக்கட்டும் என்று கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகளை பற்றி இசை மகா சமுத்திரம் என்ற கட்டுரையில் சுவையாகச் சொல்கிறார்.

விளாத்திகுளம் சுவாமிகளுக்கு அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பக்கிரி என்ற நாதஸ்வர கலைஞரை மிகவும் பிடிக்கும். பின் ராஜரத்தினம் பிள்ளை மீது விருப்பம். விளாத்திகுளம் சுவாமிகளும் ராஜரத்தினம் பிள்ளையும் போட்டி போட்டு கொண்டு நண்பர்களுக்காக தனி கச்சேரி செய்து மகிழ்விப்பார்கள். சாமிகள் மேடையில் பாடும்போது பல ஜாடைகள் காண்பிப்பார். மேல்ஸ்தாயை பஞ்சமத்தில் தொட்டுவிட்டு மேலே கையை உயர்த்தி காண்பிப்பார். அது மேல் தைவதம் என்று உணர்ந்தவர்கள் அனுபவிப்பார்கள். உடனே கீழேயிருந்து மேலேறி தைவதத்தில் நின்று இரண்டு கைகளையும் உயர்த்தி விரிப்பார். இப்படி அதிமேல் ஷட்ஜமம் வரை போய், ஹார்மோனியம் வாசிப்பவர் இதற்கு மேல் கட்டைகள் இல்லை என்று உதட்டை பிதுக்குவார். எத்தனையோ கோட்டை கோபுர கலசங்கள் என்று அதிசயத்தில் ஆழ்த்துவார். சங்கீதம் என்றால் அதிலொரு அதிசயம் வியப்பு இருக்கணும் என்பார். 

சஞ்சாரம் நாவலில் ஓதியூர் கண்ணுசாமிப்பிள்ளை என்பவரின் கதை வருகிறது. அவர் பக்கிரி பிறந்த ஊரில் புகழோடு இருந்த நாயனக்காரர். ஒருமுறை சூரநத்தம் ஜமீன்தார் வீட்டுக் கல்யாணத்தில் வாசிக்காமல் அரசமரத்தடியில் நடக்கும் ஒத்துவாசிக்கும் ஏழை தங்கவேலுவின் மகள் கல்யாணத்திற்கு வாசிக்கிறார். ஊரே மயங்கி நிற்கிறது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி ஜமீன் மாளிகையிலிருந்து வெளியேறி சாதாரண மக்களுக்கு வாசிக்கும் காட்சியை நினைவுபடுத்தும்.

பிறவியிலே பார்வை இல்லாத நாயனக்காரர் மேலையூர் தன்னாசி தன் நாதஸ்வரத்தால் வாழைக்காயைப் பழுக்கவைக்கிறார், அம்மை கொப்பளங்களை மறையச்செய்கிறார்.  சிறு வயதுமுதல் தன் மீது அன்பு பாராட்டும் சரஸ்வதியை அவர் காரணமாகவே அந்த குடும்பம் தண்டிக்கிறது.  அந்த பெண் இறந்துவிட அவளை எரித்த சுடுகாட்டில் மயான சாம்பலை பூசி வெறி கொண்டவன் போல் தன்னாசி அலைகிறார். ஒருநாள் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் தென்பாண்டியார் வாசித்த நாதஸ்வர இசையை கேட்டு பீறிட்டு அழுது அவர் காலில் விழுகிறார். நாதஸ்வர இசையால்

மனம் கசிந்து உருகி பழைய நினைவுகளில் சஞ்சரிக்கிறார். அவரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுகொண்டு சுவாமி ஊர்வலம் நடக்கும்போது மல்லாரி வாசித்தபடி நுழைந்து நான்கு மணி நேரம் வாசித்து ஊரையே கட்டிபோடுகிறார்.  தன்  துயரத்தின் காரணமாகத் தாசிகளைக் கொடுமைப்படுத்தும் தன்னாசி அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வருகிறார். அந்த நிலையில் தாசி சௌந்தரம் அவருடைய  இசைக்காக மணந்துக்கொள்கிறார். அவர் இறந்த பின் சோலையூரில் கோவில் ஒன்றைக் கட்டுகிறாள்.

இப்படி ஒரு காலத்தில் புகழோடு வாழ்ந்த நாதஸ்வர கலைஞர்கள் இன்று அடையாளம் இல்லாமல் போனதையும்,  கோவில்களில் மின் இயந்திரங்களால் வாத்தியங்கள் வாசிக்கப்படுவதையும் வருத்தத்தோடு சஞ்சாரம் பதிவு செய்கிறது. 

சமகாலத்தில் பக்கிரி நாதஸ்வரம் வாசிக்க செல்லும் இடங்களில் பலவாறு அவமானப்படுகிறான். மூதூர் சூலகருப்பசாமி கோவில் விழாவில் லயித்து வாசித்து கொண்டிருக்கும் போது ஒரு குடிகாரனால் தாக்கப்படுகிறான். 

அங்கு விசாரிக்கும் பெரியவர் அவன் ஜாதியை குறிப்பிட்டு தராதரம் வேண்டாமா என கேட்கிறார். இவர்களுக்கு இசை மீது எந்த நாட்டமும் இல்லை.

அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ரைஸ்மில் முதலாளி ஆர்கே போட்டியிடுகிறார். ஓட்டுசேகரிக்க பக்கிரியின் வாத்தியக் குழுவினர் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். கூட்டம் சேர்ப்பதற்கு இளவயசுப் பிள்ளைகளாக இருபது ஆட்டகாரிகளை அழைத்துவர சொல்லி பணம் கொடுக்கிறார்கள். கலெக்டர் ஆபிஸ், குலதெய்வ கோவில் என்று ஓடுகிறார்கள். திடீரென அங்கு வந்திருந்த ஒரு மந்திரி ஆர்கேவை வேறொரு கோவிலுக்கு அழைத்து செல்ல இவர்கள் குலதெய்வ கோவிலில் காத்துகிடந்து வாசிக்காமல் திரும்பி வர நேர்கிறது. பின்னர் ஏன் கோவிலுக்கு வாசிக்க வரவில்லை என்று ஏசப்படுகிறார்கள். வேட்பாளர் அறிமுக விழாவில் மதுரை நடன குழுவினர் கூலிங்கிளாஸ் அணிந்த பெண்களோடு வர இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். சொலையா ஐம்பதாயிரம் வாங்கிவிட்டு நாலு கிழகட்டைகளை ஆட விட்டதாக சொல்லி பணத்தை திரும்பகேட்டு அழவிடுகிறார்கள். 

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான். தன்னிலிருந்து வெளிப்படுவது நாதமல்ல, மணம். பூவிலிருந்து வெளிபடும் நறுமணம் போல் என்று உணர்கிறான். 

ஒருநாள் மோகனம் வாசிக்கும்போது இறந்த அம்மாவின் ஞாபகம் வருகிறது. இவ்வளவு சந்தோஷமான ராகத்தை வாசிக்கும்போது துக்கம் பாரமாக அழுத்துகிறது.கோவில் மடப்பள்ளியில் வேலை செய்யும் முதியவர் கண்ணீர் மல்க கும்பிட்டு மோகனத்தை கேட்டுகொண்டே செத்துபோய்விடலாம் என்று சொல்கிறார். அவரிடமிருந்த நாலணாவை கொடுத்து இந்த பிச்சைகாரபயலிடம் ஒன்றும் இல்லை என்று காலில் விழுகிறார். இதுவே உண்மையான மரியாதை என சக கலைஞர்கள் பாராட்டுகிறார்கள். 

பக்கிரி சிறுவயதில் ஓதியூர் சிவன் கோவிலில் வாசிப்பதை கேட்டு பழகி கொண்டிருப்பான். திருக்கோவிலின் பூசைக்கு நீர் கொண்டுவரும்போது மேகராககுறிஞ்சி ராகமும், குடமுழுக்கின் பொழுது தீர்த்த மல்லாரியும், தளிகை எடுத்து வரும்போது தளிகை மல்லாரியும், திருக்கல்யாணம் நடக்கும்போது நாட்டை குறிஞ்சியோ, கல்யாண வசந்தமோ  வாசிப்பார்கள். 

திருச்சூழி ஊமை ஐயர் தேர்ந்த இசை ரசிகர், நல்ல இசைக்குக் கற்கண்டை மட்டுமே கலைஞர்களுக்குப் பரிசாக அளிப்பவர். ஆணவமிகுந்த வித்துவான் ஏ.என்.எஸ் பாடியபோது இவர் நடுவில் எழுந்துசென்று கழுதைக்குக் கற்கண்டை ஊட்ட, ஊரே சிரிக்கிறது. அவர் இறக்கும் தருவாயில் பக்கிரி சந்தித்து நாதஸ்வரத்தை வாசித்துத் துளி கருப்பட்டி இனிப்பைப் பரிசாகப் பெற்றதைப் பெறும் ஆசியாகக் கருதுகிறான். கலைஞர்கள் பணத்தைவிட தங்கள் கலைக்கான அங்கீகாரத்தையே விரும்புகிறார்கள்.

பிரிட்டீஷ் காலத்தில் கரிசலில் வழிதவறி தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நாயனக்காரனுக்கு சாதி கட்டுப்பாடால் எவரும் தண்ணீர் தரவில்லை. தாகத்தில் வெறியோடு நாதஸ்வரம் வாசிக்க அந்த வெக்கையில் ஊராரால் விரட்டப்படுகிறான். பனைக்காட்டில் அவன் இறந்துவிட பல ஆண்டுகளைக்கு பிறகு உறங்காப்பட்டியில் ஆடுமேய்க்கும் சிறுவன் வாலன் கரிசலில் புதையுண்ட நாதஸ்வரத்தைக் கண்டடைகிறான். அதை எடுத்து தூய்மைப்படுத்தி வாசிக்க துவங்குகிறான். இசையை கேட்க கேட்க ஊரார்களுக்கு இறந்தவர்கள், துலைந்த உறவுகள், நினைவில் வந்துபோகிறது.  துயரமாக மட்டுமில்லாமல் முடிந்துபோன சந்தோஷத்தின் இசையாகவும், இச்சையின் இசையாகவும், ரகசியத்தின் இசையாகவும், வெயிலின் சங்கீதமாகவும் உணர்கிறார்கள். படிப்படியாக ஊரே அவனுடைய நாதஸ்வர இசையில் மயங்குகிறது. வறண்ட நிலத்தில் மீண்டும் மழை வருகிறது. நாதஸ்வரம் கரிசலையும் பூக்க வைக்கிறது. 

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து 

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” – சிலப்பதிகாரம்

பாலை நிரந்தரமல்ல, பசுமையான நிலம் மழையில்லாமல் வரண்டு விடுகிறது. ஒரு நல்ல மழை பெய்தால் மீண்டும் மலரத் துவங்கும்.

தி.ஜாவின் மோகமுள், யுவன் சந்திரசேகரின் கானல் நதி போன்ற நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கலைஞர்களின் அக உணர்வுகளில் எழும் இசையை வாசகர்கள் சஞ்சாரத்திலும் எதிர்பார்க்கலாம். சஞ்சாரம் கரிசலை சார்ந்த நாதஸ்வர கலைஞர்களின் தற்கால நிலையை சொல்லும் சமூக நாவல் என்று வகைபடுத்தினாலும் பல இடங்களில் எஸ்.ரா தான் சிறுவயதிலிருந்து  கேட்டு வந்த நாதஸ்வர இசை அனுபவத்தை வாசகர்கள் உணர்ந்து ரசிப்பதற்கு பல குறிப்புகளை அளித்துள்ளார். எஸ்.ரா தரும் குறிப்புகள் வழியே பயணித்தால் இசை அனுபவத்தில் சஞ்சரிக்கலாம். லட்சய்யா கல்யாணி ராகத்தில் வாசிக்கும்போது தாயின் பரிவோடு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதாக இருந்தது. டெல்லி சுல்தானுக்கு வாசிக்கும் போது காற்றில் எலுமிச்சை மணம் எழுந்து அவர்களின் அந்தரங்கத்தில் புதைந்துள்ள ஏக்கங்களை தட்டி எழுப்புகிறது. 

நாதஸ்வர கலைஞனாக பக்கிரியின் அக அனுபவ சித்தரிப்பில், வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதையும் , அந்த உணர்வில் அவன் பெற்ற ஆனந்தத்தையும் உணரலாம். பக்கிரி மோகனம் வாசிக்கும்போது இறந்த அம்மாவின் ஞாபகம் வந்து துக்கம் பாரமாக அழுத்துகிறது. அதை கேட்டு ஒரு முதியவர் கண்ணீர் மல்க கும்பிட்டு செத்துபோய்விடலாம் என்பதும் வாசகர்களுக்கு இசை அனுபவத்தை கடத்தும். 

இந்த நாவலை வாசிக்கும்போது கல்யாணி ராகத்தை கேட்க வேண்டுமென்றால் யூடியுபில் தேடி கேட்கலாம்.  அப்படி ஒரு காணொளியில் பாகனேரி கே. பில்லப்பன் என்ற நாதஸ்வர கலைஞர் ஒரு கோவிலில் தனிமையில் அமர்ந்து கண்ணிரை துடைத்து கொண்டு  வாசிக்கும் இசையும், அது கல் மண்டபத்தில் எதிரொலிப்பதும் நமது மனதை பிசையும். அவர் கல்யாணி ராகத்தை சுவரம் பிரித்து இலக்கண சுத்தமாக வாசித்து காட்டுகிறார். பிறகு டி.என்.ராஜரத்தினம் பிள்ளை இதை எப்படி வாசிப்பார் என்று ஒருவர் கேட்க, அவர் அசுர சாதகம் புரித்தவர் என்று துரித பிருகாக்களை சேர்த்து வாசித்து காட்டுவது நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.  இப்படி ரசிகர்களாக நமது ரசனையை வளர்த்து கொள்வதே நாதஸ்வர இசையை நோக்கி நம்மை இழுக்கும். நாதஸ்வரம் இந்த மண்ணில் மீண்டும் உயர்ந்து எழும். தமிழ்நாட்டிற்கே தனித்துவமான நாதஸ்வர இசையையும் கலைஞர்களையும் மறந்திருந்த நாம் அவற்றுக்கான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்க முன்வர வேண்டும்,  மதிக்க வேண்டும் என நம்மைச் சிந்திக்க வைப்பதே இந்த நாவலின் வெற்றி.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.