ஆனந்த்குமார் கவிதைகள்

1. உனது பெயர்

நிற்க ஒரு நிலம் மாதிரி
உன் பெயர்
நான் அதை
பாதையாக்கினேன்

உடனே
மலையிலிருந்து ஓடை ஒன்று
இறங்கி வந்து
இணைந்துகொண்டது
மரங்கள் அதை
வேர்களால் தாங்கின
சின்ன மலர்கள் இலைகள்
அதன் முதுகில்
ஏறிக்கொண்டன

செய்தி கேட்டு
குட்டிக் குட்டி பாதைகள்
தொட்டுப்பார்கக
கிளம்பிவிட்டன

நீண்டு திசைகளைந்த
புராதன விடை
எப்போதுமிருக்கும்
புத்தம்புதிய மர்மம்

எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை
எப்போதும் தளர்வுறச் செய்வதில்லை
ஆயினும்
பறவைகள்
நடந்து செல்லும்
அதில்

2.

மீன் நீரையென
என்னை நிறைப்பது
உன் பெயர்

3.

அர்த்தமல்ல
உனது பெயர் வெறும்
காரணம்

4.

சொல்லிச் சொல்லி
உனது பெயர்
சப்தமாகியது
சப்தம் ஒலியாகி
ஒலி
எங்கும் நிறைந்தது

ஒலி உண்மை
ஒலி சாந்தி
ஒலி திளைப்பு
ஒலியே
உள்ளத்தருள் வளர்க்கும்
தீ

ஞானியில் தெரியும்
குழந்தையென
ஒலிக்குள் ஒளிர்வது
உனது பெயர்

உனது இருப்பு

உனது இருப்பு
உன்னை கவனிக்கவிடாமல்
ஆக்குகிறது
உன்னைப் பற்றி நினைக்கவிடாமல்
செய்கிறது

உன்னைத் தொழ
உன்னை எழுத
உன்னை கைகொள்ள
நீ
எழுந்துசெல்ல வேண்டியிருக்கிறது

உனது இருப்பில்
நானும் இருப்பதென்பது
நாம் இல்லாமல் இருப்பது

நீயெனும் இயல்பு

நீர் ஒளியையென
என்னில் உன்னை
அனுமதித்தேன்

தீயின்
விடுதலை அஞ்சும் திரியென
உன் பாதங்களை
பற்றிக்கொண்டும் கிடந்தேன்

நிறைக்கும்
எரிக்கும்
நீயே
நானெனும் நிகழ்வு

நீயே
எனது இயல்பு


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆனந்த்குமார் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.