ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

அருகிருக்கும் தனியன்

நாகஸ்வரக் கலைஞனின்
வீட்டை உதறிய மகன்
நடு வயதுப் பரதேசி

கோயிலே
வாழ்வு

கெளபீனமும் அரை வேட்டியுமே
இடையாடை

மேல் துண்டே
சட்டை

சத்திரமே
படுக்கை
பொதுக்கிணற்றில்
குளியல்

மந்தார இலைப் பிரசாதமும்
இசையுமே உணவு

பாடகி பாடப் பாட
கருத்து கணக்கு
அழகு உரையாடல்
அறியாமை தீர்மானமென
மாயச்சுழல் லெளகீகத்தால்
ஏகமாய் நிறைந்த அர்த்தமின்மைகள்
கண் திறந்து தலையாட்டித் தாளமிடும் வேளையில்
மூலையோரம்
முகவெளியில் துயில்மேவும் பாவனையில் ஆழ்ந்து
அலைக்கழிபவனுக்குள் நுழைகிறது கானம்

வெக்கைக்குப் பின்னான இரவின் மழையில்
தலையாட்டுகின்றன தளிர்கள்

தேங்கு கனம் விலக
அனாந்திரப் பாதை திறந்து
அவன் நாசியை ஸ்பரிசிக்கிறது
அருகியதொரு ராக வாசனை

குரலும் கீதமும் தாண்டிய உணர்தலில்
துயருரு கரைய
பெருகி வழிகிறது கண்ணீர்

அவனுக்காகப் பாடுவதாகவே உணர்கிறான்
நிகழும் கானமும் அவனும் ஒன்றாக
காலியான பாத்திரத்தில்
சற்றும் எதிர்பாரா வேளையில்
ஸ்வராட்சர அமுதத் துளிகள் விழ
‘அய்யோ’வென்கிறான் தாளாமல்.

கலைஞன்

நீங்கள்
அவனைத் தேட
ரொம்பச் சிரமப்பட வேண்டாம்

அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில்
‘அட்டேன்ஷன்’ என்ற
லெளகீகத்தின் கணீர் குரலுக்கு
‘சட, சட’ வென எல்லோரும் எழுந்து விறைப்பாய் நிற்க
அதோ அப்படியே தந்தரையில் அமர்ந்தபடி
சாவதானமாகக் கடலை சாப்பிடுகிறானே
அவன்தான்
அவனேதான்.

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை

அந்தரத்தில் முன் பாய்ந்து
கெண்டைக்கால் சதை இறுக
ஓடி ஓடித் துள்ளி
வியர்வை வழிய உக்கிரமாய் வீசி
வாளுருவி நின்றோர் மேல்
ரத்தக் கோடிழுத்துச் சரியவைத்து
துரிதத்தில் மீட்டு வந்தேன்

துரத்தி வந்த புரவிகளும் களைத்துப் பின்வாங்க
மார்பணைத்துக் காத்து
மலையிறக்கிக்கொணர்ந்தேன்

நிழல் மேவிய வனப்புல்லில் கிடத்தினேன்
ஈன்ற குட்டியின் பனிக்குட வழுவழுப்பாய்
உடலெங்கும் வியர்வைச் சுகந்தம்
ஓடிக்கொணர்ந்த சுனை நீரைத்
தோள் சாய்த்துப் பருகத் தந்தேன்
குடித்த பின்னும் துவண்டு
விழி மூடிக்கிடந்தாய்க் களைப்பில்

எங்கிருந்தோ வந்த செம்போத்தும்
நின்று வாசித்தது உன்னை

செக்கர்வானம் கதிரை மெல்ல வழியனுப்ப
சொடுக்கிய சவுக்கின் முதுகுக் கோடுகளில்
உதிர்ந்த என் கண்ணீர்த் திவலைகளால்
தோல்சுருக்கித் திடுக்கிட்டு விழிதிறந்து
மெல்லக் கைகோர்த்தாய் நெகிழ்ந்து

பாறைப் பிஞ்சடுப்பில் கொதித்த சாறெடுத்து
இலைக் குவளையில் நீட்டினேன்
ஆசுவாசித்தாய்
இனிமை ரேகை பரவ
அதிர்வில்லாக் களிகொண்டாய்

நீர்நிலையில் குளிப்பாட்டிக் கரையேற்றி
வகிடெடுத்து வாரமுடியாக் கூந்தல் இழைகளை
விரல்களால் சிக்கெடுத்து உதறி
இளவெயிலில் உலர்த்தினேன்

தோண்டிக் கழுவிய கிழங்கும்
கொய்து வந்த பழங்களும் புசிக்கத் தர
ஊட்டினாய் எனக்கும்

குத்திட்டு நிலைகொண்டு
மதியின்றி மருண்ட காலம்
நினைவில் நீ காண
இழுத்தணைத்து நான்
கன்னம் தட்டித் தாடை தடவ
நிகழில் காலூன்றிப் புன்னகைத்தாய்

ஆறாப் புண்களில்
இலைகள் கசக்கிச் சொட்டிட்டேன்
பட்ட எரிச்சலில் சட்டெனக் கண்மூடித் தோல் சுருக்கி
ஆ… ஆ…வெனத் துடிக்க
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை சரியாச்சு என்றபடி
நின் நாமம் உச்சரித்தேன்

மருண்ட விழி நீரில் மாலையிட்டு
மங்கல நாண் கேட்டாய்

ராட்சஸச் சிலந்தியின் தடம் பதிந்த கழுத்தில்
மனமியைந்து பூட்டினேன்

மனத்திரையின் தும்புகள் துடைத்தெடுக்க மடிகிடத்தி
உயிர் அதிரச் சொல் எடுத்து
உள்ளோர்மையில் லயித்து
ஒன்றிணைந்த சுதியில் பண் செய்தேன்

இருள் சூழ்ந்த இரவெலாம்
அமிர்தத் தாரை

மனமெங்கும் மது நிரம்பி மயங்கிப் பாய
இதழ் கவ்வினாய்
பின் பொறி கண்டு எம்பிக் கொத்தும்
குளத்துக் கயல்களாய்
மாறிமாறிப் பாய்ந்தன எல்லாம்

மனச் சுனைக்குள்
மின்னி நீந்தின மின்மினிகள்

வெட்கச் சருகுகளின் சரசரப்பு ஒலி நடுவே
கண்டனக் கண்கள்
கீழ்த் தொடையின் மச்சத்திலும் ஓர்
சூட்டுத் தீற்றல்

சிகையடர்ந்த நெஞ்சில்
மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து
அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே
நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன்
இனி இந் நதியின் கரையெலாம்
நின் பொன்னொளியால் சுடரட்டும்

இப்போது நீ நன்றுறங்கு
நன்றுறங்கு என் செல்லமே.

எல்லா நாளும் ஞாயிறாய் இருந்த நாட்கள்

வீடடங்கு என்றார்கள்
பின் திடீரென வெளியே வா என்றும்…

உள்ளவா வெளியவா
இச்சா இனியா
நேரா சப்பையா
காயா பழமா
தெரியாமல் திகைத்துக் கிடந்தோம்

உலகம்
அவ்வளவு சீக்கிரம் முடிவடைந்துவிடாதென்பது
அவர்களுக்குத் தெரிந்ததால்தான்
அப்போதும் கோணிப்பைகளோடேயே திரிந்தார்கள்

சகல ஸ்தம்பிப்புகளுக்குப் பின்னும்
வழக்கம்போல்
எஜமானர்களின் முடிவுக்கே காத்திருந்தனர்

அந்த நாட்களில்தான்
வாசல் மரத்து மலர்களில் வட்டமிடும்
சிள்வண்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

புத்தகங்களைச்
சீராக அடுக்கிவைத்தேன்
காலவர்த்தமான நெருக்கடியின்றிப்
படித்தேன்

பார்க்காத
படங்கள் பார்த்தேன்

ஏதேதோ
எழுதினேன்

பெய்த மழையை
அபூர்வமாய் வந்த மைனாவை
நிதானமாய்ப் பார்த்தேன்

கண்ணுக்கு நேரான மரணங்களுக்குப் பின்னும்
அடுத்தடுத்த பதவிகளுக்குத் தயாராகவும்
ஊழிக் குறிகளையும்
வெவ்வேறு சமன்பாடுகளாக்க முடிந்தது அவர்களுக்கு

எளிய கீரைக்கும் காய்கறிகளுக்கும்
ரொட்டிக்கும் கஞ்சிக்கும்
தயார்ப்படுத்திக்கொண்டு கிடந்தோம்
முகக் கவசத்திற்கும் கையுறைகளுக்கும்
அமைதியாய் நட்சத்திர நிறை வான் பார்க்கவும்
தேனூறிய பழங்கீதங்கள் கேட்கவும்

எப்போது எல்லாம் முடிவடைந்ததென
இப்போது நினைக்க யாருக்கும் நேரமில்லை.

குடிநீரும் கிடைக்கவில்லை

உதிர நிறத்து வான்
கண்ணீர் கனத்த மேகங்கள்
மணம் கமழ மலர்கள் மலரும்
வசந்த ருதுவிலும் கந்தக நெடி

சுகந்தக் காற்றலையும்
நிச்சலனப் பாதைகளில்
கண்ணி வெடிகள்

ஷெல்களால் நொறுங்கிய வீடுகளிலிருந்து
தப்பித்த குழந்தைகள்
ரோஜாக்கள் சிதைந்த பூங்காக்களில்
கஞ்சிக்கு வரிசையில்

இமைக்காது வெறித்த விழிகளில்
ஊர்ந்து செல்லும் எறும்புகளும்
சுவாசிக்கா நாசியில் மொய்க்கும் ஈக்களுமென
சாவின் சாலையெங்கும் மனித உடல்கள்

எல்லோரும் சற்றுக் கண்ணயர்ந்த நேரத்தில்
வீட்டுக்கு வெளியே வந்து
தன் பிஞ்சுக் கரத்தை வான்நோக்கிக் காட்டி
தடுமாற்றத்தோடு ஓடிக் களிக்கிறதொரு
சின்னஞ்சிறு குழந்தை

கைக்குக் கிட்டிய ஏதோ ஒன்றைக் குனிந்து எடுத்து
நெஞ்சில் துடைத்து
மறுபடி அதையும் வான்நோக்கி நீட்டிச்
சிரித்தபடி ஓடுகிறது

யுத்தகாலத்தை முடித்துக்கொள்ள
அது அனுப்பும் செய்தியைப் பார்க்காமல்
இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறான் இறைவன்.

சாமக்கோடாங்கி

அடர் நீள்மயிர் தரை புரள
தலைசுழற்றி அலறிய
நைட்டி போட்டிருந்த பேயை ஓட்ட
சாமமெல்லாம் உடுக்கையடித்து
மந்திரம் சொல்லி

கருவாடு கறி மீன் சாராயம்
சுருட்டு படையலோடு
பரிகாரப் பூசைசெய்து
சாம்பிராணிப் புகை மேவ
குங்கிலியத் தூளிட்டுத் தீ எழுப்பி
சூடம் காட்டி

அறுத்து குங்குமம் தோய்த்த எலுமிச்சைகளை
இட வலம் வீசி
ஒரே வீச்சில் விடைச்சேவல் கழுத்தறுத்து
நிலைவாசலில் ரத்தம் பீய்ச்சி
ஓங்கரித்து சன்னதம் வந்து ஆடியதை
வேப்பமரக் கொப்புக்குக் கதற ஓடவிட்டு
விடியலில் வீடேகுகிறான்

குழந்தையற்ற மீப்பெரும் துயரம் மீதூறி
பொழுதுகளைத் திருகித் திருகி
நீள் பெருமூச்சு சப்தத்தால்
வீட்டை நிரப்பும் பொஞ்சாதிக்கு
முதல் நாள் வாங்கி வைத்த
அல்ப்பிராக்ஸ் (Alprax 0.5 Mg Tab)
மாத்திரைப் பட்டியோடு .

ஞானம்

போதும் இருந்ததென
அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து

இன்னும்
ஒரு நாளோ
இரு நாளோ
புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது

வெயிலை வாங்கியபடி காற்றுக்கு அசையும் அதை
அதன் சொற்ப வாழ்வுக்குள்
என் கரமும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன்

எத்தனை ம்ருது
வண்ணம்
வாசனை
வடிவம்

தானென்ற தான்மை இல்லை
சலனமில்லை

மெல்ல அதைத் தரையிலேயே
வைத்துவிட்டு நடந்தேன்

நீங்கள்
ஒரு மலரைப் போல மாற வேண்டுமென
எப்போதோ படித்தது நினைவுக்கு வர.

தற்படம்

இன்று என்
பிறந்த ஊருக்கு வந்தேன்

எங்கள் வீடு இருந்த இடத்தில்
வங்கியிருக்கிறது
விடுதியிருந்த இடத்தில் நகைக் கடை
அங்காடியிருந்த இடத்தில் டாஸ்மாக்

எனக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லா
அத் தெருக்களில்
என்னைத் தெரிந்த ஓரிருவர்
வணக்கம் சொல்லி
புன்னகைத்துக் கடந்தனர்

கொடிகட்டி வாழ்ந்த ஊரின் சாலைகளைக்
கடந்துகொண்டேயிருந்தேன்

எல்லையோர ஊர்ப் பலகையும் வந்துவிட்டது
அதன் முன் நின்று
ஒரு தற்படம் எடுத்துக்கொண்டு
பேருந்தில் ஏறிவிட்டேன்
எனக்கென யாருமற்ற
என் ஊரில்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ரவிசுப்பிரமணியன் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.