புகையும் நிஜங்கள்

செருப்புகளைக் கழற்றிவிட்டு வீட்டிற்குள் செந்தில் நுழைந்துதான் தாமதம். உள் அறையிலிருந்து அம்மா தழதழத்த குரலில் என்ன கேட்டிருப்பாள் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.

“மட்டிப்பால் சாம்பிராணி வாங்கியாந்தியா?” 

அதையே அவனுக்குப் புரியவைப்பது போல் சரோவும் சொன்னாள். “மத்தியானத்திலிருந்து அத்தையோட பிடுங்கல் தாங்கலை. இன்னிக்கு என்ன எளவோ வழக்கத்தைவிடவும் மூணு ஜாஸ்திதான்” என்றபடி அவனிடமிருந்த கட்டைப்பையை வாங்கி அதனுள்ளே கையை விட்டுத் துழாவினாள்.

“நமக்கெல்லாம் நாத்தம் பழகிப் போச்சு. எங்க வீட்டுக் கிழவிக்குத்தான் ஒத்துக்க மாட்டேங்குது.. இந்த வாடகைக்கு வேற எங்க வீடு கிடைக்கும்.” என்று புலம்பியபடி உள்ளே போனான் செந்தில்.

ஆரம்பத்தில் அம்மாவின் புலம்பலைத் தவிர்க்க முதலில் விலை குறைந்த ஊதுபத்திக் கட்டை வாங்கிக் கொண்டிருந்தான்.  மஞ்சள்நிறக் கண்ணாடிப் பேப்பரில் சுற்றிய ஊதுபத்திகள். அதைக் கொளுத்தி அம்மாவின் அறையில் வைத்தால், ‘எங்கிட்டு இதை வாங்கின..? பொணத்துக்கு தலமாட்டுல வெக்கிறமாதிரி நாத்தம் அடிக்குது” என்று அதற்கும் புலம்பினாள்.

கடைசியில் மின்சார ரயிலில் , இடதுகையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையைத் தொங்கவிட்டபடி ஊதுபத்திகளை விற்று வருகிற கண்ணிழந்தவர்தான் மட்டிப்பால் கூம்பு சாம்பிராணியை கொளுத்தி வைக்கச் சொன்னார். அவரிடம் பணத்தை நீட்டியவுடன், அதன் நீள,அகலத்தை விரல் நுனியால் தடவி அளந்து, மதிப்பறிந்து பாக்கிச் சில்லறையைக் கொடுத்துவிட்டுப் போனார். கிழவிக்கும் அதில்தான் இஷ்டம்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகக் கண்ணில்படாதவரைத் தேடிப்பிடித்து ஒருவழியாக மட்டிப்பாலை வாங்கியாயிற்று. இனி இரண்டு வாரங்களுக்குக் கவலை இல்லை.. கணக்குப் பார்த்தால், அதற்கே மாதத்திற்கு நானூறு ரூபாய் செலவாகிறது. எல்லாம் இந்த வீட்டிற்கு மாறி வந்தபிறகுதான்.

முன்பிருந்த வாடகை வீடு வசதியாகத்தானிருந்தது. இருபத்திநாலு மணி நேரமும் வீட்டு வாசலில் இருக்கும் பம்பில் அடித்தால், கார்ப்பரேசன் தண்ணீர் கொட்டுகிறதை, வசதியான வீடு என்றுதானே சொல்லவேண்டும்? தவிரவும், ஐந்து நிமிடங்களில் எட்டிவிடுகிற ரயில்வே ஸ்டேஷன். வாசலில் காய்கறிக்கடைகள். தெருவில் ஜனசந்தடிக்குக் குறைவில்லை. திருட்டு பயம் கிடையாது. 

கொரோனா காலத்தில், அவனது முதலாளி சம்பளத்தைக் குறைத்ததும், அதுவரை கொடுத்து வந்த  மாதவாடகை பூதாகரமாய் உருவெடுத்தது.   அவன் தன்னுடைய நிலைமையைச் சொல்லி அவ்வளவு கேட்டுக் கொண்டும், வாடகை சல்லிக்காசு குறைக்கமாட்டேன் என்று வீட்டு ஓனர் கண்டிஷனாகக் கூறியது, அவனுக்கு கௌரவப் பிரச்சனையாகத் தோன்றியது. அப்போது எழுந்த உத்வேகத்தில் அவசர அவசரமாகத் தேடிக் கண்டுபிடித்த வீடுதான் இது.

வீடு வசதியாக இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, தீர்மானிக்கும்படியான பணவசதியில் அவன் என்றைக்குமே இருந்தது கிடையாது. ஆனாலும் அவனால் கொடுக்க முடிந்த வாடகைக்குள் கட்டுப்பட்டு இருந்தது. அந்த வீடு இருக்கும் தெருவின் வழியாக பலமுறை கடந்து சென்றிருக்கிறான் என்கிற அறிமுகம் மட்டுமே அவனுக்குப் போதுமானதாகத் தோன்றியது.

கொரோனா காலத்தில் குடியேறிவந்த சமயத்தில் அவ்வளவாக ஒன்றும் தெரியவில்லை. சகஜநிலை மீண்டு வந்ததும்தான் எப்பேர்ப்பட்ட தெருவிற்கு வந்திருக்கிறோம் என்று உரைத்தது. 

ஐநூறு அடித் தொலைவில்  இருக்கும் அந்த உயரமான சுற்றுச் சுவரையும் அதனுள்ளிருக்கும் சுடுகாட்டையும் எப்படி கவனிக்காமல் போனோம் என்று நினைத்துக் கொள்வான். சுடுகாட்டிற்கு எதற்காக அத்தனை அடி உயரத்தில் சுவர்? யார் உள்ளே தாண்டிக் குதிக்க?.. யார் வெளியே தாவி ஓடிவர..? இந்த லட்சணத்தில், சுவற்றின் மேல் ‘நிரந்தர முதல்வரே வருக’ என்கிற போஸ்டர்கள் நகைமுரணாக.

உள்ளே நுழைந்து பார்த்தால், சவத்தைச் சுமந்துவந்த பாடைகளும், பூப்பல்லக்குகளும் ஓரமாய் தூக்கி வீசப்பட்டுக் கிடக்கும். நடைபாதையில் பதித்த கருங்கற்களின் ஊடே வளர்ந்திருக்கும் புற்களைக் கறித்தபடி ஆடுகள் திரிந்து கொண்டிருக்கும். மனிதர்களின் சாம்பலில் விளைந்ததைத் தின்று கொழுக்கும் ஆடுகளே மனிதனின் இரையாக.. இயற்கைநீதியின் சுழற்சியில் உலகம் .

தினசரி மூன்று, நான்கு பிணங்களாவது சாலையில் அவனது வீட்டைக் கடந்து செல்லும். கூடவே செல்கிறவர்கள், உதிர்த்துச் செல்கிற சாமந்திப்பூக்கள் உலர்ந்து மஞ்சள் நிறம் சற்றும் குறையாமல் அங்குமிங்குமாக சாலையில் அங்குமிங்குமாக ஊசலாடியபடி ஓரமாக ஒடுங்கிப் போகும். கூடவே அவர்கள் வெடித்துவிட்டுப் போகிற பட்டாசுகளின் சுருள் காகிதங்கள் மரணச் செய்திகளைத் தாங்கி அங்குமிங்குமாக அலைக்கழியும். 

பெற்றவரையும், பெற்றதையும் மாறி மாறிச் சுமந்து செல்கிற சாலையில் கலிகாலத்தின் கணக்கு கழிந்து கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு வந்த புதிதில் அவனது மனைவி சரோஜா, பிணம் கடந்து செல்லும் போதெல்லாம், வாசற்படியில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிட்டு வருவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தாள். சாவுத் தீட்டு கழிக்க, ஒரு வாளித் தண்ணீர் விடுவது வழக்கம் என்று அவளது கிராமத்து பழக்கத்தைச் சுட்டினாள். 

ஓரிரு வாரங்களிலேயே அவளுக்கு அலுத்துப் போய்,  வாளித் தண்ணீரில் ஆரம்பித்த கிராமப் பழக்கம், ஒரு சொம்பாகக் குறைந்து கடைசியில் நின்றே போய்விட்டது. 

வீட்டிற்கு முதன் முதலில் குடியேறிவந்த முதல் வாரம் மட்டும் அம்மா ஒன்றும் சொல்லாமலிருந்தாள். அருகில் சுடுகாடு இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை . ஓரிண்டு சவ ஊர்வலங்கள் வாசல் வழியாகச் செல்வதைக் கவனிக்கத் தொடங்கியதிலிருந்து அவளது புலம்பலை நிறுத்த முடியவில்லை. 

குழந்தைகள் சகிதம் அவனது குடும்பம் பிணநாற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்க, அவனது அம்மா மட்டும் “பிணம் எரிகிறது, நாற்றம் அடிக்கிறது” என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு, வெளிச்சம் இல்லாத அறைக்குள் எப்போதும் கிடக்கிறாள். சதா சர்வகாலமும் காற்றில் அதன் நெடி வியாபித்துக் கிடப்பதை ஞாபகப்படுத்தியபடி இருக்கிறாள்.

நடைபாதையில் நடக்கும்போதுகூட, கடையில் தீக்கனல்களின் ஊடே சுழன்று கொண்டிருக்கும் ஷவர்மா உணவுகளிலிருந்தும் வாடை அடிக்கும்போது, அவனது அம்மா காதருகில் வந்து புலம்புவது போல் ஒரு பிரமை.

வீட்டிலிருக்கும் பெண்டுகள் சவத்துடன் சுடுகாடு செல்கிற வழக்கம் அவனது குடும்பத்திலும் இல்லை. வீதி வரை உறவு.  அதனாலேயே அவர்களுக்கு எரியும் நாற்றம் பரிச்சயமில்லை. ஆனால், இந்த வீட்டிற்கு வந்தபிறகு அதுவே  ஒரு வித ஒவ்வாமை போல் அம்மாவிற்கு ஆகிவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. மனைவிக்கும், குழந்தைகளுக்கு பழகிப் போன நாற்றம் அவனது அம்மாவிற்கு மட்டும் அப்படியென்ன வினோதமாய்? கேள்விகள் அவனது மண்டையைக் குடைந்த வண்ணம் இருந்தன. 

அலுவலகத்தில் இருக்கையில், திடீரென்று முத்தையன் மாமாவிடமிருந்து போனில் அழைப்பு வந்தது. அம்மாவின் சொந்த அண்ணன்தான். அதையும் விட, அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கூடவே பணிபுரிந்தவரும் கூட. அப்பாவின் நல்ல குணத்தைப் பார்த்து , வீட்டில் பேசி தன்னுடைய தங்கையை மணம் பேசி மாமன் மச்சான் என்றாகிவிட்டனர்.

ஒன்றும் புரியாத சிறுவயதில் அப்பா காலமான போதும் கூட, மாமாதான் அம்மாவிற்கு  துணையாக நின்று உதவி செய்து வந்தார். அவனது கல்லூரி படிப்பிற்கும் அவர்தான் உதவி செய்தார். கடைசியில், அவரது மகளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றதும்தான் கோபித்துக் கொண்டு உறவுமுறையை அறுத்துக் கொண்டு போனார். கடந்த ஏழெட்டு வருடங்களாக, நல்லது கெட்டது எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. 

போனை எடுத்ததுமே, மேலே பாய்ந்து கடிக்காத குறைதான்.

“என்ன மாப்ள.. எல்லாரும் பெரிவங்களா ஆயிட்டிங்க.. வீடு மாறிப் போனா மாமனுக்கு ஒரு தாக்கல் கிடையாது.. “ என்று ஆரம்பித்தார்.

“இல்லிங்க மாமா.. உங்க மேலே மரியாதை என்னிக்கும் குறைஞ்சது கிடையாது.. நீங்க என்மேலே கோபிச்சுக்கிட்டு ஒதுங்கிட்டீங்க.. எனக்கும் ஆபீசுல வேல டைட்டா இருக்கு.. நீங்க எப்படி இருக்கீங்க மாமா.. வீட்டுல அத்தை எல்லாரும் சௌக்யந்தானே.. வீட்டுக்கு வாங்க..” என்று பேசிக்கொண்டே போனான்.

“இங்க மெட்ராசுக்கு ஒரு கலியாணம் விஷயமா நான் மட்டும் வந்தேன். மனசு கேக்கல.. என் தங்கச்சி எப்படி இருக்கு.. நீங்க எப்படி இருக்கீங்கன்னு பாக்கணும்னு தோணிச்சி”

“கடவுளாப் பாத்துதான் உங்களை அனுப்பி வெச்சிருக்காப்ல.. எங்க இருக்கீங்க.. நானே வந்து கூட்டிடுப் போறேன்” என்றான்.

உடனே அரை நாள் லீவு போட்டுவிட்டு மாமாவைப் பார்க்கக் கிளம்பியவன், அவரை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான். 

அண்ணனைப் பார்த்ததும் அவனது அம்மா மௌனமாக அழுதாள். 

“என்னண்ணே.. இப்படி எங்களைத் தவிக்க விட்டுட்டு உன் குடும்பம்தான் முக்கியம்னு  போயிட்ட.. “ என்றாள்.

“அதனால என்ன தங்கச்சி.. என் மருமகன்தான் நல்லபடியாக பாத்துக்கறாரே.” 

“ஆமாம். நல்லாத்தான் பாத்துக்கிறான் என் பையன். ஆனா கோபத்துல என்ன சொல்றதுன்னு தெரியாம பைத்தியக்காரின்னு சொல்றான். எப்பவும் நாத்தம் அடிக்குதுன்னு சொல்றேனாம். நீயே சொல்லுண்ணே.. நீயும்தானே கூட இருந்தே. உனக்கும்தானே அடிக்குது.. எரியற நாத்தம்?”

அப்போதுதான் முத்தையன் அறைக்குள் பரவியிருந்த ஊதுபத்தி வாசனையை உணர்ந்தார்.

“எதுக்கு தங்கச்சி.. இப்படி ஊதுபத்தியைக் கொளுத்தி வெச்சிக்கிட்டு படுத்துக்கிட்டு இருக்க?” என்றார்.

“ஏண்ணே.. உனக்கு பொண நாத்தம் அடிக்கிலியா? தோல் எரியுதுண்ணே.. எம் புள்ளக்கித்தான் தெரியாது.. உனக்குமா?” என்று படபடவெனப் பொரிந்தாள்.

ஒன்றும் புரியாமல் நின்ற  மருமகனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார் முத்தையன்.

“எங்கம்மா என்ன சொல்றாங்க மாமா?” என்றபடியே அவரை தெருவின் மறுபக்கத்திலிருந்த டீக்கடைக்கு அழைத்துப் போனான்.

“மாப்பிள.. உங்கப்பாரைப் பத்தி என் தங்கச்சி ஏதாவது சொல்லி இருக்கா?”

“ஒண்ணும் சொன்னது கிடையாது..  எதுக்குக் கேக்குறீங்க?”

“மாப்பிள.. அப்போ நீ சின்னக் குழந்தை..  உனக்கு வெவரம் எதுவும் தெரிய நியாயமில்லை..” டீயைக் குடித்துக் கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.

“நாங்க வேலை பாத்துக்கிட்டிருந்த பேக்டரியில பிரச்சனை ஆரம்பிச்சு சீல் வெச்சிட்டாங்க.. சம்பளம் நின்னு போச்சு.. வயிறும் காய ஆரம்பிச்சிடுச்சு.. கலெக்டர் ஆபீசு முன்னாடி நின்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம். உங்கப்பன் திடீர்னு உடம்பு முழுக்க கிருஷ்ணாயில ஊத்திக்கிட்டு, ‘கொளுத்திக்க போறேன்’னு நின்னப்ப எனக்கு பக்குனு ஆயிடிச்சு. யாரு என்ன சொல்லி அவரை உசுப்பேத்தி விட்டாங்கன்னு தெரியலை.  அவரைப் பாத்துப்புட்டு போலீஸ்காரனுங்க ஓடி வரானுங்க. ஏகப்பட்ட அமளிக்கு நடுவுல எவனோ ஒருத்தன் அவர் மேல தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டான். பக்கத்தில நின்னுக்கிட்டிருக்கிற எனக்கு ஒண்ணுமே புரியாம கை கால் ஆடிப்போச்சு…

மனுசன் சுத்தி சுத்தி ஓடராறு.. நெருப்புப் பந்து மாதிரி அவர் உடம்பு ஆயிப்போயிருச்சு. வாழ்வாதரத்துக்காக அவர் ஆரம்பிச்ச போராட்டம் கடைசியில அவரோட உயிருக்கான போராட்டம் ஆயிடுச்சு.. அவசர அவசரமா ஒரு துண்டு அவர் மேல போர்த்தி நெருப்பை அணைக்கறதுக்குள்ள அவர் பாதி எரிஞ்சு போயிட்டாரு.. பக்கத்துலேயே நின்னுக்கிட்டுருந்த எனக்கு அந்த உடம்பு கருகுகிற நாத்தம்.  அதோட அவரது அலறல். உங்க ஆத்தா வேற ஓடி வந்தா.. புருஷனைக் கட்டிப் புடிச்சு ஒரே கதறல்“

கண்ணீர் மல்க மீண்டும் தொடர்ந்தார். 

“அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போய் என்னா பிரயோசனம்.. மனுஷன் துடிச்சு துடிச்சு செத்தே போனாரு..”

“நியாயமாப் பாத்தா இவ்வளவு வருஷத்துல உங்க ஆத்தா எல்லாத்தையும் மறந்து போயிருக்கணும். ஆனா நீ இங்க ஜாகை மாத்திக்கிட்டு வந்தபிறகு, பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு போல. தினமும் சுடுகாட்டிலேர்ந்து நாத்தம் அடிக்கும் போதெல்லாம், தினமும் உங்க அப்பாரு எரிஞ்சிக்கிட்டு இருக்காருன்னு உங்க அம்மா கற்பனை பண்ணுதுன்னு நெனக்கிது”.

செந்திலின் கண்களில் நீர் கோர்த்தது.

அம்மாவிற்காக தினமும் கொளுத்தி வைக்கும் மட்டிப்பால் புகை அவனுக்கு நாற்றமடிப்பது போல் தோன்றியது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “புகையும் நிஜங்கள்”

  1. பெசன்ட் நகர் வீட்டு வசதி வாரியம் கட்டிய வீட்டில் 1971ஆம் ஆண்டு குடிபுகுந்தோம். வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இடுகாடு. தினமும் இறந்தவர்களின் கடைசி ஊர்வலம் எங்கள் தெரு வழியேதான். இன்று மின்சார எரியூட்டினால் மற்றும் சிம்னி மிக அதிக உயரத்தில் இருப்பதால் நாற்றம் தெரிவதில்லை. எல்லாமே பழகி விடுகிறது. என் 50க்கும் மேலானா ஆண்டுகளுக்கு மேற்பட்ட நினைவுகளை மீண்டும் எழுப்பிய கதை. ஹரியின் நெஞ்சைத் தொடும் வாக்கியங்களால் மனதை என்னவோ செய்யும் கதை.

Leave a Reply to முருகன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.