1
அத்தனை ஒளியும்
திரும்பிச்சென்ற பின்
இரவு முழுதும்
மலராத இதழ்களை
கைகளில் வைத்துக்கொண்டு
வான் பார்த்தபடியே
நிற்கிறது
ஒளியை ஒளியின்மையால் பார்க்கும்போது
வெளிச்சமாகிறது ஒளி
*
ஒளிக்கு
வெளியே இருக்கிறது
வெளிச்சம்
அதன் வேறு வேறு வடிவங்களாக
விழுந்துகிடக்கிறது நிழல்
*
ஒளியின் பொருள் பட்டு
மூழ்கியதெல்லாம் நிழல்களாக
நிழல்களின் வாயிலாக எதை நிரூபிக்க
விரும்புகிறாய்
ஒளியின் தோற்றத்தையா?
ரூபத்தின் நிழல் ரூபத்தைவிடவும்
ஒளிக்கே அர்த்தமாக விளங்குவதாய்
நிகழ்கின்றன யாவும்
அதுவும்
அஸ்தமனம்
கடந்தும்
2

சிறு இலை தான் விழுந்தது
அசைவின் அத்தனையுமாக நீரானது
விண்மீன்கள் ஒன்றையொன்று மோதிக்கொள்ள
நிலவு வேறு சற்று நின்றிருந்தது
அசைவுகள் ஓய்ந்த பிறகு
மோதிய எல்லாம்
அதனதன் இடத்திற்குச்
சென்றதும்
அசைவுகள்
அசைவின்மையால்
பொருள்
படுகின்றன
3)
நதி வளர்ந்த
கிளை வழியில்
ஒரு மேடு
தன் உயரத்திலிருந்துகொண்டே
நீரைத் தொட நினைக்கிறது
அதனருகில்
ஒரு பள்ளம்
நதியிலிருந்து விடுப்பட்டும்
கிளை நிரம்பும் பொழுதெல்லாம்
தானும் நிரம்புகிறது
4)
அன்பு மகளே…
ஒரு மரம்
இல்லாததின் வெட்டை
வானம் வரையிலும் தொடர்வது போல்
என் நோய்மையின் அறிகுறிகள்
உன்னிலும் வளர்கின்றன
5)
துயர் மிகுந்த
ஓர் இரவில் தான்
முழுநிலவையும்
மறைக்கக் கற்றுக்கொண்டது வானம்
இதில் மழை வேறு
பூக்கும் நேரத்தில் தான்
வரவேண்டுமா?
6)
காடுகள்
சிறு சிறு வேடங்கள்
தரித்து
நிற்கின்றன
ஒரு பூவிற்கும்
சிறு வேடம் தான்
நீரில் விழுந்த நிழல்களென
அத்தனை அசைவுகள்
மேலும்
காட்டின் பூக்களை
ஒளியின் வழியாகத் தொடுவதைவிடவும்
வேறு மெல்லிய வழிகள் ஏதேனும்
உள்ளனவா?
7)
நீரின் திசைகள் மீறி
மீன்கள் இங்கேயே இருப்பது
அடியாழத்தில் தான்
கரைகள் முழுதும் காத்திருக்கின்றன
நெளியும் புழுக்களென
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சைத்ரீகன் கவிதைகள்”