வாங்-ஃபோவின் மீட்சி

மூலம் : மார்கரித் யூர்செனார்

தமிழாக்கம் : நிர்மல்

முதிய ஓவியரான வாங்-ஃபோவும், அவரது சீடன் லிங்கும் ஹான் பேரரசின் சாலைகளில் அலைந்து திரிந்தனர். இரவு நேரங்களில் வாங்-ஃபோ விண்மீன்கள் நிறைந்த வானத்தையும், பகலில் தும்பிகளையும் கண்டு வியந்து நிற்பதால் அவர்கள் மெதுவாகவே முன்னேறினர். 

வாங்-ஃபோவுக்கு பொருட்களைக் காட்டிலும் அவற்றின் சித்திரங்களே பெரிதும் பிடித்திருந்ததால், அவர்கள் மிகச் சொற்பப் பொருட்களையே சுமந்து சென்றனர்.அவருக்குத்  தூரிகைகள், வண்ணப் பொடிகள், படம் வரையத் தேவையான மெழுகெண்ணெயின் ஜாடிகள், பட்டுத் துணிகள், அரித்தாளில் ஆன சுருள்கள் தவிர வேறெந்தப் பொருளும் சொந்தம் கொண்டாடத் தகுதியற்றதாகத் தோன்றியது.

அவர்கள் ஏழைகளாக வாழ்ந்தனர். வாங்-ஃபோ சிறிதளவு உணவுக்காகத் தன்னுடைய ஓவியங்களைப் பரிமாறிக் கொண்டார். சிறிய வெள்ளி நாணயங்களைக் கூட அவர் வெறுத்தொதுக்கினார்.

லிங் ஓவியங்கள்  நிறைந்த பையின் பாரத்தால் லிங் எடை பொறுக்காமல் நடந்தான். வானவெளியையே சுமப்பதைப் போல மரியாதையுடன் முதுகை வளைத்துக் கொண்டான். ஏன் தெரியுமா?  அந்தப் பை – லிங்கின் பார்வையில் – பனி மூடிய மலைகளாலும், வசந்தகால நதிகளாலும், கோடைக்கால நிலவின் முகத்தாலும் நிறைந்திருந்தது.

விடியலைத் தன் சக்தியாகக் கொண்டிருந்த, மாலை வெளிச்சத்தைக் கைப்பற்றத் தெரிந்திருந்த அந்த முதியவரின் பக்கத்தில் நடப்பதற்கு லிங் பிறந்திருக்கவில்லை. அவன் தந்தை தங்க வியாபாரி; தாய், மரகத வியாபாரியின் ஒரே மகள். அவள் ஆண் குழந்தையாகப் பிறக்காததற்காக அவளது தந்தை சபித்துவிட்டு தன்னுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் அவளுக்கே விட்டுச் சென்றிருந்தார்.

லிங் செல்வச் செழிப்பால் பாதுகாப்பின்மையை அகன்றதொரு வீட்டில் வளர்ந்தான். அடைகாக்கப்பட்ட அந்த வாழ்க்கை அவனைப் பயந்த சுபாவம் கொண்டவனாக மாற்றியது. அவன் பூச்சிகள், புயல், கொந்தளிப்பு, இறந்தவர்களின் முகபாவங்கள் என அனைத்தையும் கண்டு அஞ்சினான். 

அவனுக்குப் பதினைந்து வயது நிறைவடைந்தபோது, அவன் தந்தை ஒரு மணப்பெண்ணைத் தேடினார். இரவுகள் வெறும் உறக்கத்திற்கு மட்டுமே பயன்படும் வயதை எய்தியிருந்த அவருக்கு, மகனுக்கு அப்பெண் வழங்கக்கூடிய இன்பத்தின் கற்பனையே ஆறுதலாக இருந்ததால், பேரழகியான பெண்ணையே தேர்ந்தெடுத்தார்.

லிங்கின் மணப்பெண் நாணல் போல மெலிந்தவள்; பால் போலக் குழந்தைத்தனமானவள்; உமிழ்நீர் போல இனிமையானவள்; கண்ணீர் போல உப்புச்சுவை கொண்டவள். திருமணத்திற்குப் பின், லிங்கின் பெற்றோர் பிள்ளையின் திருமண வாழ்வு நன்றாக இருக்கட்டும் என விலகி விலகி மரணம் வரை சென்றனர். அவர்களின் மகன், சிவப்புச் சாயம் பூசப்பட்ட அந்த வீட்டில், எப்போதும் புன்னகை மாறாத தன் மனைவியுடனும், ஒவ்வோர் வசந்தத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும் பிளம் மரத்துடனும் தனித்து விடப்பட்டான்.

நீராவி படிந்தும் மங்காத கண்ணாடியை ஒருவன் நேசிப்பது போல, ஒருபோதும் பாதுகாப்பு தர தவறாத தாயத்தினை நேசிப்பது போல, லிங் அந்த தெளிந்த இதயம் கொண்ட பெண்ணை நேசித்தான். அக்கால வழக்கப்படி தேநீர் விடுதிகளுக்குச் சென்று, நடன மங்கையரையும் கலை நிகழ்த்துபவர்களையும் மிதமான அளவில் ஆதரித்தான்.

ஒரு நாள் இரவு, அத்தகைய பிரபலமான தேநீர் விடுதிகளில் ஒன்றில், வாங்-ஃபோ அவனது மேசையில் உடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். குடித்திருப்பவர்களின் தோற்றத்தை ஓவியமாக்கும் திறனைப் பெற தேடி அந்த முதியவர் மதுவருந்தியிருந்தார். தன் கைக்கும் மதுக்கிண்ணத்துக்கும் இடையேயுள்ள தூரத்தைத் துல்லியமாக அளக்க முயல்வது போலத் தலையை ஒருபுறமாகச் சாய்த்திருந்தார்.

அரிசி ஒயின் அன்று பழைமையான, அமைதியான கலைஞனின் நாவை கட்டவிழ்த்தது. அந்த இரவில், அமைதி என்பது ஒரு சுவர் என்பது போலவும், தன் வார்த்தைகள் அதில் வண்ணம் பூச வேண்டியவை என்பது போலவும் வாங் உரையாடினார்.

லிங் அவர் வழியாகப் புதிய அழகுகளைக் கண்டுணர்ந்தான் – சுடச்சுட வரும் பானத்தின் புகையில்  மங்கலாய் குடிப்பவர்களின் முகங்களில் தெரியும் அழகு தெரிந்தது. நெருப்பின் நாக்குகளால் வருடப்பட்ட சுட்ட இறைச்சியில், அதன் சருமத்தில் பொன்னின் ஒளிர்வு எழுந்தது, மேஜை விரிப்பில் சிந்திய மதுவில் அற்புதமான இளஞ்சிவப்பு கறைகள், வாடிய இதழ்களாயின.

திடீரென்று காற்றின் வேகம் ஜன்னலைத் திறந்தது, புயல் அறைக்குள் புகுந்தது. மின்னல் கீற்றென அப்பொழுது ஜொலித்த அழகை லிங் ரசிக்க வேண்டி வாங்-ஃபோ விரைவாகக் குனிந்தார். அன்று வியப்பில் ஆழ்ந்த லிங், அப்பொழுது முதல் புயலைக் கண்டு அஞ்சுவதை நிறுத்தினான்.

முதியவரான ஓவியர் வாங்-ஃபோவின் கட்டணத்தை லிங் செலுத்தினான். வாங்-ஃபோவிற்கு பணமோ, படுக்கையோ, வாழிடமோ இல்லை. லிங் அவரிடம் பணிந்து தஞ்சம் வழங்கினான். இருவரும் சேர்ந்து நடந்தனர், லிங் ஏந்திய விளக்கின் ஒளி நடக்கும் வழியில் தேங்கிய நீரில் மின்னலையும் பளபளப்பையும் எறிந்தது.   தன் வீட்டின் சுவர்கள் தான் நினைத்திருந்தது போல சிவப்பு சாயப்பொடியின் நிறத்தில் இல்லை, மாறாக அழுகத் துவங்கிய ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தில் இருந்தது என லிங் அன்றிரவு வியப்புடன் கவனித்தான்.

லிங் வீட்டின் முற்றத்தில் அதுவரை யாரும் கவனிக்காமலிருந்த மென்மையான புதர் ஒன்றின் வடிவத்தை வாங்-ஃபோ சுட்டிக்காட்டினார். தன் கூந்தலை உலர வைக்கும் இளம்பெண்ணின் நிழலுருவத்தோடு அதை ஒப்பிட்டார். முற்றத்தினைத் தாண்டி நடக்கும் பாதையில் இருந்த சுவரின் விரிசல்களில் ஊர்ந்து செல்லும் எறும்பின் அலைபாயும் பாதையில் கவனம் சிதறி, தடுமாறும் நடையுடன் மெதுவாக நடந்தார். அப்போது லிங்கின் மனதில் அந்தச் சிறு உயிரினங்கள் மீதிருந்த அச்சம் மறைந்தது.

அந்தக் கணத்தில், வாங்-ஃபோ தனக்கொரு ஆன்மாவை, புதியதொரு பார்வையை வழங்கியுள்ளார் என்பதை லிங் உணர்ந்தான். தன் பெற்றோர் உயிர்நீத்த அறையிலேயே, அந்த முதியவரை மரியாதையுடன் உறங்க வைத்தான்

அலையென வீசும் வில்லோ மரத்தடியில் யாழ் மீட்டும் பழங்காலத்தினைச் சேர்ந்த இளவரசி ஒருவளின் ஓவியத்தை வரைய வேண்டும் என்று வாங்-ஃபோ பல ஆண்டுகளாக ஒரு கனவு கண்டிருந்தார். ஆனால் எந்தப் பெண்ணையும் அவ்வளவு கற்பனைக்குள் அவரால் பொருத்த முடியவில்லை. லிங், பெண்ணல்லாதவன் என்பதால், அதற்கு ஏற்றவனாக இருந்தான்.

பின்னர், வானுயர்ந்த செடார் மரத்தடியில் வில்லொன்றினை வளைக்கும் இளவரசனின் ஓவியத்தை வரைய வாங்-ஃபோ விரும்பினார். அவரது காலத்து இளைஞர்கள் யாரும் அந்த கற்பனைக்கு ஏற்றவாறு இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.  லிங் தன் மனைவியைத் தோட்டத்து பிளம் மரத்தடியில் வில்லும் அம்பும் ஏந்தி நிற்க வைத்தான்.

பின்னர் வாங்-ஃபோ அவளை மேகங்களுக்கிடையே பறக்கும் தெய்வப்பெண்ணாக வரைந்தார். இது மரணத்தின் முன்னறிவிப்பு என அவள் கண்ணீர் சிந்தினாள்.

லிங்கின் மனைவி, தன் நிஜ வடிவத்தைவிட வாங்-ஃபோவின் தூரிகையில் உயிர்பெற்ற தன் உருவங்களையே லிங் பெரிதும் நேசித்ததால், புயலிலும் பேய்மழையிலும் சிக்கிய மென்மலரெனத் தன் முக அழகை இழந்தாள். ஒரு புலரியில், இளஞ்சிவப்பு மலர்க்குவியல்களால் கனத்திருந்த பிளம் மரத்தில், மென்பட்டால் கழுத்தை நெருக்கி உயிர்துறந்தவளாய்க் காணப்பட்டாள். தென்றலில் ஆடிய அவள் கருங்கூந்தலில் உயிர்கொண்ட பட்டுத்துணி பின்னிக்கிடந்தது. முன்னெப்போதையும் விட மெல்லியளாய், தொன்மைக் கவிஞர்கள் புகழ்ந்து பேசிய பேரழகிகளின் தூய்மையுடன் காட்சியளித்தாள். அன்றிலிருந்து லிங் மரணத்தின் முகத்தை நோக்கி நடுங்கவில்லை.

மரணம் தழுவிய முகங்களில் படியும் பசுமை கலந்த நிறம் வாங்-ஃபோவின் கலை நெஞ்சைக் கொள்ளை கொண்டதால், அவளை இறுதி முறையாக வரைந்தார். அவரது சீடனான லிங், வண்ணங்களை அரைத்துக் கொடுக்கும் பணியில் அத்தனை ஆழ்ந்திருந்தான், கண்ணீர் சிந்தவே மறந்துபோனான்.

மேலைத் தேசத்தில் இருந்து வரும் ஊதா வண்ணக் குவளைகளைத் தன் ஆசானுக்குப் பெற்றுத்தர, லிங் படிப்படியாய்த் தன்னிடமிருந்த அடிமைகளையும், பச்சைப் பவளக் கற்களையும், நீரூற்றில் மிதந்தாடிய பொன்னிற கொய் மீன்களையும் விற்றுத் தீர்த்தான். இல்லம் வெறுமையானதும் இருவரும் பயணமானார்கள்; லிங் தன் இறந்த காலத்தின் கதவுகளை என்றென்றைக்குமான அடைத்தான். நகரத்து மனிதர்களின் முகங்கள் அழகையோ, அவலத்தின் மறைபொருட்களையோ இனியும் வெளிப்படுத்த இயலாது என உணர்ந்த வாங்-ஃபோவின் உள்ளம் வெறுப்புற்றது. அதன்பின் ஆசானும், சீடனும் ஹான் பேரரசின் நெடும் பாதைகளில் அலைந்து திரியும் பயணிகளானார்கள்.

கிராமங்களிலும், நகர விளிம்புகளிலும், கோட்டை வாயில்களிலும், மாலைப்பொழுதில் அலைந்துதிரியும் புலம்பெயர் பறவைகள் தஞ்சமடையும் கோயில் வாசல்களிலும் என அவர்களின் புகழ் அவர்களுக்கு முன்னால் எல்லாப் பக்கமும் பரவியது. வாங்-ஃபோவிற்கு ஓர் அற்புதச் சக்தி உண்டெனச் சொன்னார்கள். அவர் தனது ஓவியங்களின் கண்களில் இறுதியாக இடும் வண்ணத்தின் மூலம் அவற்றுக்கு உயிரூட்டுவதாக சொன்னார்கள். நாட்டுப்புற மக்கள் காவல் நாய்களின் ஓவியங்களை வரைந்துதருமாறு வேண்டினர். பிரபுக்கள் வீரர்களின் உருவங்களைக் கோரினர். துறவிகள் அவரை ஞானியெனப் போற்றினர்; பொதுமக்கள் மந்திரவாதியெனக் கருதி அஞ்சினர். இப்படி வெவ்வேறு கருத்துக்கள் வழியே தோன்றிய நன்றியுணர்வு, அச்சம், வணக்கம் ஆகியவற்றின் பல்வேறு வெளிப்பாடுகளை ஆராய முடிந்ததால் வாங்-ஃபோ மகிழ்வுற்றார்.

லிங் அன்றாட உணவுக்காகப் பிச்சையெடுத்தான், தன் குருவின் தூக்கத்தைக் காவல் காத்தான், அவர் மகிழ்வுற்றிருக்கும் தருணங்களில் அவருடைய பாதங்களை மெதுவாய் வருடிக்கொடுத்தான். விடியல் நெருங்கும் வேளையில் ஆசான் உறங்கிக்கொண்டிருக்கையில், புதர்களுக்கும் நாணல்களுக்கும் அப்பால் நாணமுற்று ஒளிந்திருக்கும் நிலப்பரப்புகளைத் தேடி அலைவான்.

இரவு நேரங்களில் தன் ஆசான் மனம் தளர்ந்தோ ஏமாற்றமுற்றோ தன் தூரிகைகளைத் தரையில் வீசும்போது, லிங் அவற்றைப் பொறுக்கி எடுப்பான்.  வாங்-ஃபோவின் ஆன்மாவை கலை வெறி மீண்டும் ஆட்கொள்ளும் வரை அதைக் கவனமாய்ப் பாதுகாத்து வைப்பான். ஆசான் துயருற்று தன் முதுமையைப் பற்றிப் பேசும்போது, லிங் புன்னகைத்துக்கொண்டே பழைய ஓக் மரத்தின் வலிமையான தண்டினைச் சுட்டிக்காட்டுவான். அவர் மகிழ்ச்சியில் இளகிய மனதுடன் சீண்டி பேசும்போது, லிங் பணிவோடு கேட்பதுபோல் நடித்துக்கொள்வான்.

ஒருநாள், அந்தி சாய்ந்த வேளையில், பேரரசர் ஆட்சிக்கு உட்பட்ட நகர எல்லையை அடைந்தனர். இரவைக் கழிக்க லிங் சத்திரம் ஒன்றை தேடி அடைந்தான். முதியவர் தன் கந்தல் துணிகளில் தன்னைச் சுற்றிக்கொண்டார். லிங் தன் உடல் வெம்மையைப் பகிர்ந்துகொள்ள அவர் பக்கத்தில் படுத்தான். வசந்தம் புதிதாய் வந்திருந்தாலும் களிமண் தரை இன்னமும் பனிபடிந்தே கிடந்தது. 

விடியல் பொழுதில் சத்திரத்தின் கூடத்தில் ஓசை ஒலிக்கும் காலடிச் சத்தங்கள் எதிரொலித்தன; சத்திரக்காரரின் பயந்த முணுமுணுப்புகளுக்கு இரைச்சலுடனான கூச்சல்கள் பதிலளித்தன. லிங் தன்னை நீட்டி முறுக்கிக்கொண்டே, நேற்று தன் குருவின் உணவுக்காகத் திருடிய அரிசி அடையை நினைத்தான். தன்னைக் கைது செய்யத்தான் வந்திருப்பார்கள் என்பதில் அவனுக்கு ஐயமில்லை. நாளை வாங்-ஃபோவுக்கு உணவளிப்பவர் யார்? அடுத்த ஆற்றைக் கடக்க அவருக்கு உதவுவது யார்? என அவன் கவலையுற்றான்.

வீரர்கள் விளக்குகளை முன்னே நீட்டியவாறு நுழைந்தனர். அதிலிருந்து வண்ணத் தாள்களால் வடிகட்டப்பட்டு ஒளி பரவியது. அந்த ஒளி வீரர்களின் தோல் தலைக்கவசங்களில் சிவப்பும் நீலமுமான வடிவங்களை உருவாக்கியது. தோளில் வில்லின் நாண் அதிர்ந்தது, வந்த வீரர்களிலேயே மிக கோபமாய் இருந்த ஒருவன் காரணமின்றியே உறுமினான். இன்னொருவன் வாங்-ஃபோவின் பின் தலையில் முழு பலத்துடன் கையை வைத்தான். அப்போதும்கூட வாங்-ஃபோவால் அவன் சட்டையின் கை நிறம் மேலங்கியின் நிறத்துடன் பொருந்தவில்லையே என்பதைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

தன் சீடனின் உதவியுடன் வாங்-ஃபோ வீரர்களைப் பின்தொடர்ந்தார், மேடு பள்ளமான தரையில் தடுமாறியபடி. அவர்களைச் சூழ்ந்து நெருக்கி அந்த குழு முன்னே சென்றது; தங்கத் தலைகளை விரைவில் இழக்கப் போகின்றவர்களை பார்த்து வீரர்கள் நகைத்தனர். வாங்-ஃபோவின் கேள்விகளுக்குக் கொடூரமாக, அச்சுறுத்தும் முகங்களே பதிலளித்தன. கட்டப்பட்ட அவருடைய கைகள் வலித்தன. துயருடன் லிங், தன் ஆசானை நோக்கிப் புன்னகைத்தான். அவனுக்கு அழுவதைவிட மென்மையான வெளிப்பாடாகப் புன்னகை பழக்கமாகிப்போயிருந்தது.

அரசகுல மாளிகையின் வாயில்களை அவர்கள் அடைந்தனர். மாலைப்பொழுதின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து சுவராக மாறியது  போல அதன் ஊதா நிறச் சுவர்கள் பகலொளியில் உயர்ந்து நின்றன. வட்டமாகவும், சதுரமாகவும் இருந்த அறைகள் பருவங்களையும், திசைகளையும், ஆண்மை-பெண்மை என்ற இருமைகளையும் குறியீடாகக் குறியீடாகக் கொண்டிருந்தன. அந்த அறைகளின் வழியே படையினர் வாங்-ஃபோவை அழைத்துச் சென்றனர். அதிகாரத்தின் எல்லைகளை அவற்றின் நீளங்கள் வரையறுத்தன.

கதவுகள் தமது கீல்களில் திரும்பும்போது இசையோசை எழுப்பின. கிழக்கே சூரியன் உதிக்கும் புள்ளியிலிருந்து மேற்கே அது மறையும் புள்ளி வரைக்கும் ஒவ்வொரு கதவையும் கடக்கும்  வண்ணம் கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மானுட எல்லைகளைக் கடந்த ஆற்றலையும் நுண்ணறிவையும் சுட்டிக்காட்டும் வகையில் எல்லாமே கட்டமைக்கப்பட்டிருந்தன. அச்சமூட்டும் ஆணைகள் எங்கும் தென்பட்டன. கடந்த காலத்தின் ஞானம் போலவே அவற்றின் கொடூரமான உள்ளடக்கமும் மாற்றமுடியாததாய் இருந்தது.

காற்று கூட அரிதாகி, மெல்லியதாகி ஆனது போல அங்கு அமைதி இருந்தது. அந்த அமைதியில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் கூட அலறத் துணியாத அளவுக்கு  மௌனம் நின்றிருந்தது. ஆணும், பெண்ணும் இல்லாத சேவகன் திரைச்சீலையை உயர்த்தினான். உயர்ந்த திரைச்சீலைக்குப் பின்னர் கண்டு வீரர்கள் நடுங்கினர். அந்தச் சிறு குழுவானது விண்ணின் மைந்தன் தன் சிங்காதனத்தில் வீற்றிருந்த அறையினுள் நுழைந்தது.

அது நீலக்கற்களாலான தூண்கள் தாங்கி நிற்க, சுவர்களே கண்ணுக்குத் தென்படாத  மண்டபம். தூண்களுக்கு அப்பால் பூந்தோட்டமொன்று மலர்ந்திருந்தது. கடல்கள் கடந்து கொணரப்பட்ட அரிய செடிகளால்  உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணின் ட்ராகனாக வீற்றிருந்த பேரரசனின் தியானத்தைக் கலைக்கும் என்ற அச்சத்தில் அங்கிருந்த எந்தச் செடியும் மணம் வீசவில்லை. அவரது சிந்தனைகளைச் சூழ்ந்த அமைதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் எந்தப் பறவையும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேனீக்கள் கூட வெளியேற்றப்பட்டிருந்தன.

உயரமான சுவரொன்று அந்தத் தோட்டத்தைப் புற உலகிலிருந்து பிரித்து நின்றது. இறந்த நாய்களின் உடல்கள் மீதும் , போர்க்களத்து மனித உடல்கள் மீதும் வீசும் காற்று பேரரசரின் ஆடையின் விளிம்பைக்கூடத் தொடக்கூடாது என்பதே அதன் நோக்கமென்பார்கள்.

விண்ணின் அதிபதி மரகதத்தால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். இருபது வயதைக் கடந்திருக்க முடியாத அவருடைய கைகள் முதியவரின் கைகளைப் போல் சுருக்கங்கள் நிறைந்திருந்தன. குளிர்காலத்தின் நினைவாய் நீலமும், வசந்தத்தின் குறிப்பாய் பச்சையுமாக அவருடைய ஆடைகள் அமைந்திருந்தன. 

மிக உயரத்தில் பொருத்தப்பட்டு வெறும் வானவெளியை மட்டுமே பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல அவரது முகபாவம் அழகானதாக இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. மாற்றமுடியாத, இரக்கமற்ற வானம் போல இருந்தது.

அவரது வலப்புறத்தில் பரிபூரண இன்பங்களுக்கான அமைச்சரும், இடப்புறத்தில் நியாயமான சித்திரவதைகளுக்கான ஆலோசகரும் அமர்ந்திருந்தனர். தூண்களோரம் வரிசையாக நின்றிருந்த அரசவை உறுப்பினர்கள் பேரரசரின் மிகச் சிறிய உச்சரிப்பையும் கேட்கக் காதுகளைக் கூர்மைப்படுத்தியதால், அவர் மிக மெல்லிய குரலில் மட்டுமே பேசும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

“விண்ணாளும் ட்ராகனே,” என்று வாங்-ஃபோ தரையில் விழுந்து வணங்கியபடி கூறினார், “நான் கிழவன், ஏழை, பலவீனமானவன். நீங்கள் கோடைக்காலம், நான் குளிர்காலம். உங்களுக்குப் பத்தாயிரம் உயிர்கள், எனக்கோ ஒரே ஓர் உயிர். அதுவும் விரைவில் முடிந்துவிடும். நான் உங்களுக்கு என்ன தீங்கிழைத்தேன்? உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காத என் கைகளை அவர்கள் கட்டிவிட்டார்கள்.”

“கிழட்டு வாங்-ஃபோ, நீ எனக்கு என்ன செய்தாய் என்றா கேட்கிறாய்?” பேரரசர் கேட்டார்.

கேட்பவர் கண்களில் நீர் கொண்டு வரும் இனிமையை அவரது குரல் கொண்டிருந்தது. அவர் தனது வலக்கரத்தை உயர்த்தியபோது,  அவரது மோதிரம் மரகத கல்லால் ஆன தரையில் பிரதிபலித்தது. மோதிரத்தினைத் தரை  கடல்பாசி போல் பச்சையாக்கியது. அந்த நீண்ட மெல்லிய விரல்களைக் கண்டு வாங்-ஃபோ வியந்தார். மரண தண்டனைக்குரிய அளவுக்கு மோசமான ஓவியம் ஏதேனும் தாம் வரைந்திருக்கிறோமா என நினைவுபடுத்த முயன்றார். 

ஆனால் அத்தகைய குற்றத்தை நினைவுகூர முடியவில்லை. அரண்மனைச் சூழலுக்குள் அவர் அதிகம் நுழைந்ததில்லை. மாறாக விவசாயிகளின் குடிசைகளையோ, நகரங்களில் விலைமாதர் குடிசைகளையோ, துறைமுகத்து மீனவர்கள் சண்டையிடும் மதுக்கடைகளையோ விரும்பியதால் அது சாத்தியமற்றதாகவே தோன்றியது.

தமது மெல்லிய கழுத்தை வளைத்த பேரரசர் “கிழட்டு வாங்-ஃபோ எனக்கு நீ என்ன செய்தாய் என்றா கேட்கிறாய்” என்று கேட்டார். “சொல்வதைக் கேள். நஞ்சு நம் உடலின் ஒன்பது துவாரங்கள் வழியாக மட்டுமே உள்நுழைவதைப் போல, உனது குற்றத்தை உனக்கு உணர்த்த நான் என் நினைவுகளின் மண்டபங்களில் நடந்து செல்லவேண்டும், என் வாழ்க்கையை முழுவதும் சொல்லவேண்டும்.”

என் தந்தை உன் ஓவியங்களின் தொகுப்பொன்றை அரண்மனையின் மிக ரகசியமான அறைகளில் வைத்திருந்தார். ஏனெனில் அந்த ஓவியங்கள் சாதாரணப் பார்வைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். வாங்-ஃபோ, அந்த அறைகளில்தான் என்னை வளர்த்தார்கள். என் எதிர்காலக் குடிமக்களின் கொந்தளிப்பான உணர்வலைகள் என் தூய்மையைச் சிதறடிக்காமல் தடுப்பதற்காக, எனக்குப் பெரும் தனிமையை ஒதுக்கினர்.

நிழல்கள் என்னைத் தொட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தில் எவரும் என் கதவுகளைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பணிவிடை செய்ய அனுமதிக்கப்பட்ட சில பணியாளர்கள்கூட தங்களை முடிந்தவரை காட்டிக்கொள்ளாமலேயே இருந்தனர். நேரம் முடிவற்ற சக்கரமாகச் சுழன்றது. உன் ஓவியங்களின் வண்ணங்கள் விடியலில் உயிர்பெற்று, மாலையில் வெளிறின. இரவில் தூக்கம் வராத போதெல்லாம் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொடர்ச்சியான பத்து ஆண்டுகள், எண்ணற்ற இரவுகள், நான் அவற்றையே பார்த்தேன்… பார்த்தேன்…

பகல் நேரங்களில், மனப்பாடமாகிப்போன வடிவமைப்புகள் கொண்ட விரிப்பில் அமர்ந்து, என் மஞ்சள் பட்டு முழங்கால்களின் மீது வெறுங்கைகளை ஓய்வாக வைத்தபடி, எதிர்காலம் எனக்கு வாக்களித்த இன்பங்களைக் கனவு கண்டேன். ஹான் பேரரசை மையமாகக் கொண்ட உலகத்தை என் உள்ளங்கை போலக் கற்பனை செய்தேன், அது  என் கைரேகைகள் போல ஓடிய ஐந்து ஆறுகளால் பிரிக்கப்பட்டு இருந்தது.  அரக்கர்கள் பிறக்கும் ஐந்து கடல்களால் சூழப்பட்டு, அதற்கும் அப்பால் வானத்தைத் தாங்கும் மலைகள் கொண்டிருந்தது. 

இவற்றை எல்லாம் கற்பனை செய்ய உன் ஓவியங்கள் எனக்கு உதவின. கடல் உன் ஓவியங்களில் உள்ளதைப் போலவே இருக்கும் என்று நீ என்னை நம்பவைத்தாய் – அந்த நீலம் எவ்வளவு ஆழமானது என்றால், அதனுள் விழும் கல்கூட நீலமணியாக மாறிவிடும் போலிருந்தது. பெண்கள் என்பவர்கள் வெறும் மலர்கள் போல், உன் ஓவியத் தோட்டங்களில் காற்றில் ஆடிச்செல்லும் பூக்கள் போல, வெறும் மலர்தலும் கூம்புதலும் மட்டுமே அறிந்தவர்கள் என்று நீ என்னை நம்பவைத்தாய்.  நம் கோட்டைகளின் எல்லைகளைக் காக்கும் மெல்லிய இளம் வீரர்கள் நம் இதயத்தைத் துளைக்கும் அம்புகளைப் போன்றவர்கள் என்றும் நீ என்னை நம்பவைத்தாய்.

பதினாறு வயதில் என்னை உலகிலிருந்து பிரித்த கதவுகள் திறக்கப்பட்டன. மேல்மாடத் திண்ணைகளுக்குச் சென்று மேகங்களைப் பார்த்தேன், ஆனால் அவை உன் ஓவியங்களின் மாலைப்பொழுதுகளைவிட அழகற்றவையாக இருந்தன. பல்லக்கில் பயணித்தேன்; நான் எதிர்பார்க்காத பாறைகளும் தூசியும் என்னை உலுக்கின.

என் மாகாணங்களில் பயணம் செய்தேன், ஆனால் மின்மினிப் பூச்சிகளைப் போன்ற பெண்கள் நிறைந்த உன் தோட்டங்களைக் காணவில்லை – உடலே பூந்தோட்டமாக இருந்த அந்தப் பெண்களை நீ வரைந்திருந்தாய். கடலோரத்தில் கூர்மையான பாறைகளும் கைவிடப்பட்ட சிப்பிகளும் என்னை வெறுப்படையச் செய்தன. தூக்கிலிடப்பட்டவர்களின் இரத்தம் உன் ஓவியங்களில் இருந்த மாதுளம்பழத்தின் சிவப்பைவிடக் குறைந்த சிவப்பாகவே இருந்தது.

கிராமங்களின் ஒட்டுண்ணிகள் நெற்பயிர்களின் அழகை நான் ரசிக்க முடியாமல் தடுத்தன. இறைச்சிக்கடைகளில் கொக்கிகளில் தொங்கும் இறந்த மாமிசம் எவ்வளவு வெறுப்பூட்டியதோ, அதே அளவுக்கு பெண்களின் உடல்கள் என்னை வெறுப்படையச் செய்தது. என் வீரர்களின் பண்பற்ற சிரிப்பு என்னை குமட்டலடைய செய்தது.

முதிய வஞ்சகனே, நீ என்னிடம் பொய் சொன்னாய். இந்த உலகம் என்பது யாரோ ஒரு முட்டாள் ஓவியன் வெற்றிடத்தில் வீசிய குழப்பமான வண்ணத் துளிகளின் திரட்சி மட்டுமே – நம் கண்ணீரால் இடைவிடாது அழிக்கப்படும் வண்ணத் துளிகள். ஹான் பேரரசு மிக அழகானது அல்ல, நானும் பேரரசன் அல்ல. ஆளத்தகுந்த ஒரே பேரரசு உன்னுடையது மட்டுமே, வாங்-ஃபோ. உன் உலகம் ஆயிரம் வளைவுகளும் பத்தாயிரம் வண்ணங்களும் கொண்டது.

பனி எப்போதும் உருகாத மலைகளையும், பிச்சிப் பூக்கள் எப்போதும் வாடாத வயல்களையும் ஆள்பவன் நீ மட்டுமே. வாங்-ஃபோ, இப்போது நான் உன் சாபத்தின் வேதனையைக் கண்டுகொண்டேன். என்னிடம் உள்ள அனைத்தும் எனக்கு வெறுப்பூட்டுகின்றன, என்னால் அடைய முடியாதவற்றை மட்டுமே நான் விரும்புகிறேன்.

நீ தப்பிக்க முடியாத ஒரே சிறையில் உன்னை அடைக்க நான் முடிவு செய்துவிட்டேன். உன் கண்கள் உன் இராஜியத்திற்கான மாய வாயில்கள் – அவற்றை எரித்துவிடுவேன். உன் இராஜியத்தின் இதயத்திற்கு இட்டுச்செல்லும் பத்துக் கிளைப்பாதைகள் கொண்ட இரு பெருவழிகளான உன் கைகளை வெட்டிவிடுவேன். என் சொற்கள் புரிகின்றனவா, வாங்-ஃபோ?

அந்த தண்டனையைக் கேட்டதும், சீடனாகிய லிங் தன் இடுப்புப் பட்டையிலிருந்து பல் இல்லாத கத்தியொன்றை உருவி, பேரரசர் மீது பாய்ந்தான். ஆனால் அவன் விண்ணின் மைந்தனை நெருங்குவதற்கு முன்பே இரு காவலர்கள் அவனைப் பிடித்துக்கொண்டனர். ட்ராகனை போன்ற பேரரசர் புன்னகையுடன் மெல்லிய குரலில்  “கிழட்டு வாங்-ஃபோ, உன்னை இந்த அளவு நேசிப்பவர்கள்  இருந்ததற்காகவும் நான் உன்னை வெறுக்கிறேன் – இந்த நாயைக் கொல்லுங்கள்!” என கூறினார்.

தன் இரத்தம் சிதறி ஆசானுக்கு அவமரியாதை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக லிங் விரைவாகப் பின்னோக்கி நகர்ந்தான். காவலர்களில் ஒருவன் தன் வாளை உயர்த்தினான்; பறிக்கப்பட்ட பூவைப் போல லிங்கின் தலை உடலிலிருந்து பிரிந்தது. வீரர்கள் அவன் உடலின் துண்டுகளை அப்புறப்படுத்தினர். வாங்-ஃபோ துயரத்தில் மூழ்கையிலும், பச்சைக்கல் தரையின் மீது படிந்த அந்த அற்புதமான செந்நிற இரத்தக் கறையின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

பேரரசர் மெல்லிய சைகை செய்ததும், ஆணும், பெண்ணுமில்லாத இரு வீரர்கள் ஓடி வந்து அவரது கண்களைத் துடைத்தனர். 

வாங்-ஃபோ, நான் சொல்வதை கவனி” என்றார் பேரரசர், “கண்ணீரைத் துடை. இது அழுவதற்கான நேரமல்ல. உன் கண்களில் மிஞ்சியிருக்கும் ஒளி ஒரு முக்கியமான காரியத்துக்காகப் பயன்படப் போகிறது. துக்கத்தின் மூடுபனி அதைக் கெடுத்துவிடக் கூடாது. நான் உன்னை வன்மத்தாலோ, கொடூரத்தாலோ கொல்ல விரும்பவில்லை. எனக்கு வேறொரு திட்டம் இருக்கிறது.”

என்னிடம் உன் ஓவியங்களின் தொகுப்பு இருக்கிறது. அதில்  முடிக்கப்படாத அற்புதமான கோடுகளைக் கொண்ட படம் ஒன்று உள்ளது. ஆற்றுமுகத்தில் மலைகளின் பிம்பம் அதில் தெரிகிறது. சிறியதாக இருந்தாலும், கண்ணாடிக் கோளத்தில் தெரியும் பிம்பம் போல, உண்மையான மலைகளை விட அதன் உண்மைத்தன்மை மேலோங்கி நிற்கிறது.

வாங்-ஃபோ அந்தப் படைப்பை நீ முடிக்கவில்லை. உன் சிறந்த படைப்பு வெறும் கோடுகளுடன் நின்றுவிட்டது. தனிமையான பள்ளத்தாக்கில் உட்கார்ந்திருந்தபோது, பறந்து சென்ற பறவையோ, அதைத் துரத்திய சிறுவனோ உன் கவனத்தைத் திருப்பியிருக்கலாம். பறவையின் அலகோ, சிறுவனின் கன்னமோ கடலின் ஊதா நிற அலைகளை நீ மறக்கச் செய்திருக்கலாம். கடலின் போர்வையையும், பாறைகளில் விரிந்த கூந்தலையொத்த கடற்பாசிகளில் நீ முடிக்கவில்லை.

உங்கள் வாழ்வின் மிஞ்சியுள்ள நேரத்தினை வாழ்வின் அனைத்து இரகசியங்களையும் அதன் அழகில் பொதிந்து  வைக்கும் இந்த ஓவியத்தை முடிக்கப் பயன்படுத்த வேண்டும் என நான் விரும்புகின்றேன்.உங்களை விட்டு விலகப் போகும் உங்கள் கைகள், பட்டின் மேல் நடுங்கி ஆடும் அந்த நொடியில், முடிவிலியின் பேரழகு உங்கள் படைப்பினுள் ஊடுருவிப் பாயும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அழிவின் விளிம்பில் நிற்கும் உங்கள் விழிகள், மானுட உணர்வின் எல்லையைத் தொடும் இடத்தில் புதிய உறவுகளின் நுட்பங்களைக் காணும் என்பதில் என் நெஞ்சம் சந்தேகம் கொள்ளவில்லை.

ஓவியத் துணிதான் நீங்கள் ஒருபோதும் தழுவிய ஒரே காதலி என்பதை நான் அறிவேன்; எனது இந்த இறுதி விருப்பம் என் தரப்பிலிருந்து உங்களுக்கு நான் அளிக்கும் பேரன்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இறக்கப் போகும் ஒரு மனிதனுக்குக் காதலி அளிக்கும் அன்பளிப்பைப் போல நான் உங்களுக்குச் சில தூரிகைகளையும் வண்ணங்களையும் வழங்குவதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

பேரரசரின் சிறு விரல் அசைவில், இரண்டு அரண்மனை ஊழியர்கள் வாங்-ஃபோ கடலையும் வானத்தையும் வரைந்த முடிவுறாத ஓவியத்தைக் கொண்டு வந்தனர். வாங்-ஃபோ கண்ணீரைத் துடைத்து, தனது இளமை நினைவுகளை மீட்டுத் தந்த பழைய வரைவைக் கண்டு புன்னகைத்தார். பட்டின் மேல் வரையப்பட்ட சில கோடுகளில் காணப்பட்ட ஆன்மாவின் துளிர்ப்பு, முதிய வாங்-ஃபோவால் இனி எட்ட முடியாதது. ஆனால் அதே நேரத்தில் அதில் ஏதோ முக்கியமான ஒன்று குறைந்திருந்தது – அதை வரையும் காலத்தில் வாங்-ஃபோ மலைகளின் பெருமிதத்தை, அவற்றின் பாறைகள் புனைந்த கதையை, அவற்றை அலைகள் தழுவும் கடலின் காதல் பாடலை.. மாலைப் பொழுதின் சோகத்தில் அவர் போதுமான அளவு உட்புகவும் இல்லை.

அடிமை நீட்டிய தூரிகைகளில் ஒன்றைத் தேர்ந்து, நீல வண்ணத்தின் பரந்த கோடுகளால் கடலை வரையத் தொடங்கினார். காலடியில் அமர்ந்திருந்த அரண்மனை ஊழியன் வண்ணங்களை அரைக்கும் கலையில் தேர்ச்சியற்றிருந்தான் – லிங்கின் நினைவு அவர் நெஞ்சை முன்பைவிட ஆழமாகத் துளைத்தது.

மலை மீது சாய்ந்திருந்த மேகத்தில் இளஞ்சிவப்பின் நுண் புள்ளி ஒன்றைப் பதித்தார்; கடலின் மேற்பரப்பில் சுருக்கங்கள் சில வரைந்தார் – அவை கடலின் அமைதியை மேலும் ஆழப்படுத்தின.

பச்சைக்கல் தரை மெல்ல ஈரமாகியது, ஆனால் தன் படைப்பின் உலகில் மூழ்கியிருந்த வாங்-ஃபோவின் கண்களில் அது படவில்லை.

​​பட்டுச் சுருளின் முன்புறத்தில் மென்மையான படகு இப்போது முழு முதற்பரப்பையும் நிறைத்தது. தூரத்தில் கேட்ட துடுப்புகளின்  ஒலி மெல்ல மெல்ல நெருங்கி, மேலும் மேலும் உரத்து, வானமாலும் பேரரசனின் மண்டபம் முழுவதையும் நிறைத்தது.

பின் அந்த ஒலி நின்றது – தூக்கப்பட்ட துடுப்புகளிலிருந்து வழியும் நீர்த்துளிகளின் சோகம் மட்டுமே அசையாத அமைதியைக் கிழித்தது.

முதியவரான வாங்-ஃபோவின் கண்களை நிரந்தரமாக மூட காய்ச்சப்பட்ட சிவப்பு இரும்புகள் வெண்கலக் கிண்ணத்தில் எரியும் கரிகளில் அணைந்து குளிர்ந்து போய் வெகுநேரமாகியிருந்தது.

அரண்மனை மரபின் கட்டுப்பாட்டில் அசையாது நின்றிருந்த அவையினர், சுவரற்ற அறையை நிறைத்த நீரின் மேல் விரல்நுனியில் நின்று மூச்சுக்காக நீண்டனர்.

நீர் பேரரசரின் மார்பை எட்டியது; லிங் படகோட்டி கொண்டிருந்தான் – காலையில் வீரர்கள் கிழித்த கைச்சட்டை இன்னும் கிழிந்து, கழுத்தில் விசித்திரச் சிவப்புத் துணியுடன் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான். வாங்-ஃபோ தன் தூரிகையை நடத்தியவாறே தேனொழுகும் குரலில் சொன்னார்: “நீ மறைந்துவிட்டதாக எண்ணினேன். “”நான் உயிர்த்திருக்க, தங்களுக்கு மரணம் எங்ஙனம்?” என்றான் லிங்.

​​லிங் தன் ஆசானை படகின் மடியில் அமர்த்தினான். அசையாத நீரில் பச்சைக்கல் மேல் விதானம் தன்னையே கண்டு வியந்தது; அவையோரின் பின்னல் முடிகள் நாகங்களாய் தலையருகே நீந்தின; பேரரசரின் வெண்முகம் ஈரத்தின் மேல் தாமரையாய் மிதந்தது.

“என் அருமைச் சீடனே,” என்றார் வாங்-ஃபோ துயருடன், “இந்த வறியவர்கள் மூழ்கிப் போவார்கள், ஒருவேளை ஏற்கனவே மூழ்கியிருக்கலாம். ஒரு பேரரசரையே விழுங்க கடலில் இத்தனை நீர் உண்டென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நம்மால் என்ன செய்ய இயலும்?”

“குருவே, கவலை வேண்டாம்; விரைவில் இவர்கள் நனைந்த நினைவு கூட மீதமில்லாமல் போய்விடும். பேரரசர் மட்டும் இந்த நேரத்தின் நினைவாய் தம் இதயத்தில் சிறிது கடல் தந்த துவர்ப்பைத் தக்க வைத்திருப்பார். இந்த மக்கள் ஓவியத்தினுள் கரைந்து போவதற்காகப் படைக்கப்படவில்லை.”

பின் அவன் மேலும் சொன்னான்: “கடல் அமைதியாக இருக்கிறது, காற்றும் சாதகமாக வீசுகிறது. கடற்பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; குருவே, அலைகளுக்கு அப்பால் உள்ள நாட்டிற்கு நாம் புறப்படலாமா?”

“கிளம்புவோம்” முதுமை தழுவிய ஓவியர் சொல்லி எழுந்தார். வாங்-ஃபோ சுக்கானைத் தழுவ லிங் துடுப்புகளில் தன்னை மறந்தான். சுவரற்ற அந்த அறையில் அவற்றின் இசைத்தாளம் இதயத்துடிப்பென மீண்டும் நிறைந்தது. நீர் மெல்ல மெல்லத் தாழ்ந்தது ,உயர்ந்து நின்ற கம்பீரப் பாறைகள் மீண்டும் தூண்களானதும் , தரையில் சில நீர்த்திவலைகளும் பேரரசரின் ஆடையில் சிறிது கடல் நுரையும் மட்டுமே எஞ்சியது. 

தாழ் மேசை மீதிருந்த வண்ணப் பட்டுச்சுருளுக்குள் முன்னால் இருந்த படகு வாங்-ஃபோவின் கைவண்ணத்தில் பிறந்த நீலமணிக் கடலில் கரைந்தது. மெல்ல மெல்லச் சிறியதாகி மறைந்தது. லிங்கின் சிவப்புத் துண்டும் குருவின் நீண்ட வெண்தாடியும் மட்டுமே கடைசியில் தெரிந்தது.

  • How Wang-Fo Was Saved / Comment Wang-Fô fut sauvé
  • Marguerite Yourcenar
  • First published January 1, 1936
  • Publisher ‏ : ‎ GALLIMARD JEUNE (March 8, 2018)
  • Language ‏ : ‎ French
  • Pocket Book ‏ : ‎ 48 pages
  • ISBN-10 ‏ : ‎ 2075078432
  • ISBN-13 ‏ : ‎ 978-2075078436

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.