நான் யார் என் பெயரை மாற்ற?
சில விஷயங்கள் எப்போதும் மாறாது
யாரையும் குறை சொல்லவில்லை
என்றாலும் என்னை விலக்க உன்னால் முடியாது
பின் ஒரு நாள்
எனக்குத் தெரிந்த அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை ஜோ என்ற ஆணாக விழித்தேன்.
‘We are awesome, each kickass and unique, we deserve rights and services, and we have something very important that only we can bring to the world’ – Coyote Grace .
ஜோ ஸ்டீவன்ஸ் எனும் அமெரிக்க இசைக்கலைஞர் தன் பதினைந்தாவது வயதில் பாட்டெழுதத் தொடங்கினார். பல பதின்ம வயதுக் குழுக்களின் பாடல்கள் போல காதலை மையமாகக் கொண்டு அவரது பாடல்வரிகள் அமைந்திருந்தன. தன் காதலனுக்காக ஏக்கம், அவனது பாராமுகத்தை உடைக்க நினைக்கும் கண்ணீர் என பதின்ம வயதுச் சிறுமியின் ஏக்கங்களுக்கு வடிகாலாக அவை இருந்தன. ஆனால், அவர் எழுதிய சிறுவயதுப் பாடல்களைப் பிற்காலத்தில் படித்தபோது , அவரது காதல் மற்றொரு ஆண் மேல் கொண்ட காதல் அல்ல,அவருள்ளே புதைமணலாய் உள்ளடங்கிய ஆண் மேல் கொண்ட காதல் என்பது புரிந்தது.
சான் பிரான்சிஸ்கோவின் ரீஸ் மலை முன்பு நின்றிருந்தார் ஜோ. ரீஸ் மலைச்சிகரத்தில் காலங் காலங்களாக இறந்துபோயிருந்த எரிமலைகள் பல உள்ளன. அவற்றின் உள்ளே கணங்குகளாக மிச்சம் இருந்த சூடு இறுகி பாறைகளாக மாறியிருந்தது. அதை வேடிக்கைப் பார்க்க நண்பர்களுடன் ஜோ சென்றிருந்தார். முன்னொரு காலத்தில் அவை உயிர்ப்புடன் கொப்பளித்தபடி இருந்திருக்கும் என்ற நினைப்பு அவரது கற்பனையைத் தூண்டியது. உள்ளிருந்த இறுகிய கடும் நெருப்பாறு தன்னுடன் உரையாடுவது போலத் தோன்றியது. கரும் பாறைகளாலான மலைக்கு உள்ளே காய்ந்த நீரோடைப் போல பல விரிசல்களாக இருந்த நெருப்புக் குழம்புத் தடத்தை ஆச்சர்யமாகப் பார்த்தார். அவற்றின் காய்ந்து போன நெருப்பு வெடிப்புகளிலிருந்து குமறியபடி வெளியே சொல்லத்துடிக்கும் உணர்வின் உராய்வுகளை அவரால் உணர முடிந்தது.
அன்றிரவு ஜோ தூங்கவில்லை. பல வருடங்களாக அவருள் கேட்ட ஒலிகள், வெளிவரத்துடித்த உணர்வுகள்,முப்பரிமாணப் படங்கள் போலப் பிடிபடாமல் விலகியபடி மறைந்தன. தன் பெண்மையில் ஒளிந்திருக்கும் போலி மனவலிகள் எத்திசை நோக்கி பீறிடத் தொடங்கும் எனப் புரியாத குழப்பத்தில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். தான் ஆண் என்பதை உணரத் தொடங்கியது அப்படிப்பட்ட தனிமையான இரவுகளில் மட்டுமே எனப் பின்னர் அவருக்குப் புரிந்தது. பகலில் எல்லாரைப் போல சகஜமாக தன் நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்ல முடிந்தாலும் எரிமலை போல அவ்வப்போது தன் மனதில் தோன்றும் விசித்திர ஆசைகளுக்கு அர்த்தம் கொடுக்க முடியாமல் தவித்தார்.
தன் இருபதாவது வயதில் நண்பருடன் பயணம் செய்த வண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றபோது ஜோ அதை சரிசெய்ய முற்பட்டார். பெண்களால் முடியாத காரியம் என நண்பர் கேலி செய்ய, ஒரு மணிநேரத்தில் பழுதைச் சரி செய்தார். பல பெண்கள் ஆண்களைப் போலக் காரியங்கள் செய்தாலும், தன் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருந்தார். ஆண்கள் செய்யும் காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாது அவர்களைப் போலவே உணரத் தொடங்கினார் என்பதே அந்த மாற்றம். ஜோவின் நண்பர்கள் இந்த வித்தியாசத்தை உணர சிறிது காலமாயிற்று. தன்னிலிருந்து வெளிப்பட நினைக்கும் விசித்திரத்தைக் கண்ட மிரட்சியில் பல இரவுகள் அவரால் தூங்க முடியவில்லை.

ஜோ ஏற்கனவே கலிபோர்னியா மாகாணக் கிளப்புகளில் புகழ் பெற்ற பாடகராக இருந்தார். வணிகமயமானப் பல்லூடகத்தின் ஜொலிப்பில் மயங்கிக் கொண்டிருந்த சில புகழ் பெற்ற நடன அரங்குகளை தனது கிராமியப் பாடல்களால் ஈர்த்துக்கொண்டிருந்தார் . பல ராக் குழுக்களால் சூழப்பட்ட கலிபோர்னியாவில் இப்படிப்பட்ட கிராமிய இசையும் கொஞ்சம் பிரபலமாக இருந்தது. கிதாரின் கம்பி அதிர்வுகளுடன் இயல்பாகப் பாடி வந்த ஜோவை தங்கள் வீட்டில் பாடும் பெண்ணை உற்சாகப்படுத்துவது போலப் பலரும் பாராட்டினார்கள். மேலும் அவரது குரலின் மிக இயல்பான குழைவுகளால் பாடலுக்கு வேண்டிய உணர்வுகளை கொண்டு வரமுடிந்தது.
இசையுடன் வாழ்வைக் கடத்தினாலும், தன் உள் உணர்வுகளை அவரால் முழுவதும் போர்த்தி அடக்க முடியவில்லை. உறைப்பனியின் விரிசல் போல பெரும் சத்தத்துடன் இரு உணர்வுகளுக்கிடையே உராய்வு ஏற்படத் தொடங்கி, ஒன்று மற்றொன்றை வென்று கொண்டிருந்தது. ஆணாக மாற விழையும் பெண்ணாக தன் நண்பர்கள் குழுமத்தில் அடையாளம் காணப்பட்டார். இயல்பு வாழ்க்கையில் இல்லாத விசித்திரம் இல்லை இது என சிலர் சமாதானம் சொன்னாலும் அவரது உண்மையான உணர்வுகளை பொதுமக்கள் புரிந்துகொள்வார்களோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. மெல்ல அவரது அடையாளம் நண்பர்களுக்கிடையே கசிந்து, பல கிளப்புகளில் அவரது நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் அவருடைய விசித்திரமான பாவனைகள் மட்டுமே காட்சிப் பொருளானது. அவரது பாடல்களும், இசையும் தேவையில்லாததானது.
தன்னைச் சுற்றி இருந்தவர்களின் விசித்திரப் பார்வை ஜோவின் ஆர்வங்களை முடக்கியது. அவருக்குள் தொடங்கிய எண்ணங்கள் குழப்பமான சொற்களாகத் தொடங்கி உரையாடல்களாக தனக்குள்ளேயே முடிவதைக் கண்டார். தன் சுயயுணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க போதை மருந்து உட்கொள்ளத் தொடங்கினார். நாளடைவில் சமூகத்தின் உதாசீனம் அதிகமாகப் போதை பழக்கத்துக்கு அடிமையாகி புது நிகழ்ச்சிகள் நடத்த இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தீவிர உளச் சிக்கல்களால் தற்கொலைக்குப் பலமுறை முயன்றார்.
இந்நிலையில் அவருடன் ‘On Beach side’ கிளப்பில் முன்னர் வேலை செய்த இங்கிரிட் எலிசபெத் எனும் பாடகியை சந்தித்தார். ஜோவின் பெரிய ரசிகையாக அறிமுகமானாலும் அவளது அற்புதமானக் குரலால் கிளப்பின் நிரந்தர பாடகியாகச் சேர்ந்திருந்தார் இங்கிரிட். ஆனால், அச்சமயத்தில்தான் ஜோ கிளப்பிலிருந்து விலகத் தொடங்கியிருந்தார். சோர்வான ஜோவைப் பார்த்த இங்கிரிட் மிகவும் வருத்தமடைந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கத் தயாராக இருக்கும் சில குழுக்களைப் பற்றிச் சொன்னார்.
ஜோவின் சிக்கல் அதுவல்லவே. ஆணாக மாற உந்தும் அவரது உணர்வுகளை இங்கிரிடிடம் விளக்க முற்பட்டுத் தோற்றுப்போனார். தனிமையில் தன் உணர்வுகளை சில பாடல்களால் தொகுக்க முற்பட்டதைச் சொன்னார். ஜான் லெனன், பாப் டிலன் போன்றவர்கள் எழுதிய கவித்துவ வரிகளைப் போல சில மானுடப் பிரச்சனையை எழுத முற்பட்டிருக்கும் ஜோவின் பாடல்கள் அவளை ஆச்சர்யப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் ஒரு புது இசைக் குழு தொடங்கும் திட்டத்ததுடன் ஜோவை சந்தித்தாள். எப்படிப்பட்ட சமாதான வார்த்தைகளும் ஜோவை சமநிலைக்குக் கொண்டு வராது என உணர்ந்த அவள் ‘FtM ‘ (Female to Male ) எனும் கலிபோர்னிய திருநங்கைக் குழுவைச் சந்தித்து ஆலோசனைக் கேட்டாள்.
முதலில் ஜோவுக்கு இதில் நம்பிக்கையில்லாவிட்டாலும், சில ஹார்மோன் மாற்றங்களால் தன் நிலைமையைச் சரிசெய்து ஆணாக மாற முடியும் எனப் புரிந்தது. ஆணாக மாற நினைக்கும் பெண்மையின் வழியைப் புரிந்த சிலரை FtM வழியாக சந்தித்தார். சில மாதங்களில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்த FtM கிளினிக் சென்று சேர்ந்தார்.
ஹார்மோன் சிக்கல்களை உடற்கூறு பிறழ்வு நிலையாகப் பார்க்காமல், மனோரீதியாகவும் சரிசெய்ய வேண்டும் என்பது இந்த சிகிச்சையின் அடிப்படை எனப் புரிந்துகொண்ட ஜோ இங்கிருந்த கம்யூன் எனப்படும் சங்கம மனக்கட்டுப்பாடு நிலையத்தில் சேர்ந்துகொண்டார். உணர்வுகளை ஒருமுகப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் பயிற்சியின் மூலம் தன் சிக்கல்களை சமாளிக்கக் கற்றுக் கொண்டார்.
உணர்வுகளில் ஏற்படும் மாற்றத்தை மட்டும் இந்த சிகிச்சையின் வெற்றியாகக் கருதினாலும், அவரது உடற்கூறுகளில் அது பலவித மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. ஒரு பாடகராக அவருக்கு சிக்கல் மிகுந்த காலகட்டமானது. பலவித ஹார்மோன்களின் பழக்கத்தால் குரல் உடைந்ததோடு மட்டுமல்லாது பெண்மையின் நெளிவுகளையும் இழக்கத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் பெண்மையின் குழைவும் ஆண்களின் கார்வையும் ஒன்றாகக் கலந்து அவரது குரலை தனித்துவமாக்கியது. ஜோவுக்கு இந்த மாற்றம் முதலில் பிடிக்கவில்லை என்றாலும் நாளடைவில் தன் அடையாளமாக அதை மாற்றிக்கொண்டார். இந்த இரு குரல் வேறுபாடுகளையும் தனது தகுதியாக்கிக் கொண்டு பல பாடல்களை பதிவு செய்யத் தொடங்கினார்.
நல்ல இசையை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தாண்டி தான் அனுபவித்த வலிகளைப் பாட்டில் புனைய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகமானது. கம்யூனில் இருந்த நாட்களில் மற்றவர்களது கண்ணீர் கதையைக் கேட்டு திருநங்கைகளில் மறு உலகத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். சொந்தங்களின் வெறுப்பு, நண்பர்களின் கேலி, சமூகத்தின் அலட்சியங்கள் அனைத்தையும் ஒருசேர அனுபவிக்கும் இவர்களது வாழ்வில் உடல் சிக்கலை விட மன சிக்கலைக் களைவது மிகவும் அத்தியாவசியமானது என்பதைப் புரிந்துகொண்டார். சரியான அடையாளத்தை வழங்காவிட்டால் வெறுப்பின் விளிம்பில் தற்கொலை செய்துகொள்ள முனைவார்கள். சமூகத்தில் மூன்றாம் பாலுக்கான அவசியத்தை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதென அவரது கம்யூன் அனுபவங்கள் உணர்த்தியது. ஆணாக மாறி சவுகரியமாக வாழலாம் எனும் அவரது நினைப்பை உதறினார். தன் இசை, தன் அடையாளமாக மாறியது போல, தன் வாழ்வின் வலி மூன்றாம் பாலின் அடையாளமாக உருமாறவேண்டும் என்பதை உணர்ந்து இங்கிரிட் எலிசபெத்துடன் அதற்கான வேலையில் இறங்கினார்.
2004 ஆம் ஆண்டு ‘Coyote Grace ‘ எனும் குழுவை சான் பிரான்சிஸ்கோவில் இருவரும் தொடங்கினர். ஏற்கனவே Queen , Lipstick Conspiracy போன்ற குழுக்கள் இதைப் பற்றிப் பேசி வந்தாலும் திருநங்கைகளின் பிரச்சனை அக்குழுக்களின் அடையாளமாக மாறவில்லை. முக்கியமாக, சிகிச்சை மூலம் சமூகத்தின் இரு பாலில் ஏதேனும் ஒன்றுக்கு மாற வேண்டும் என்ற விழைவே இக்குழுக்களின் முக்கியமான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக லிப்ஸ்டிக் கான்ஸ்பிரசி குழுவினர் ‘Best Girl Band’ எனும்பரிசை 2004 ஆம் ஆண்டு பெற்றார்கள். பெண்ணாக மாறிய ஆண்களின் பிரச்சனையைப் பேசுகிறது என இக்குழு அறிவித்தாலும் இப்பரிசை ஏற்றுக்கொண்டதன் மூலம் பெண்பால் குழுவாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இதை ஜோ வெறுத்தார். அதேபோல சான் பிரான்சிஸ்கோ கார்டியன் பத்திரிகை 2008 ஆம் ஆண்டு ‘Coyote Grace’ குழுவுக்கு இப்பரிசை வழங்க வந்தபோது ஜோ அதை மறுத்துவிட்டார்.
திருநங்கைகள் அனுபவிக்கும் வேதனை, உதாசீனத்தின் சிக்கல்கள், சமூகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பற்றிப் பேசும் முக்கியமான குரலாக மாறவேண்டும். சமூகப் புறக்கணிப்புக்காக தங்கள் அடையாளங்களை மறைக்கக் கூடாது. இவர்களது வாழ்வியல் சிக்கல் சமூகத்தில் எல்லாரும் உணரவேண்டிய சிக்கலே என்பதை ஜோ அவரது இசை மூலம் இன்று வலியுறுத்தி வருகிறார். அவரது குழு மிக முக்கிய எதிர்குரலாக, மூன்றாம் பாலுக்கான ஆதரவை பல இசை நிகழ்வுகள் மூலம் முன்வைத்துவருகிறது .
கிதார் வாசிக்க நினைத்ததை விட டிரம்ஸ் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதாக ஜோ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆனால் சிறுவயதில் பெண்ணாக இருந்ததால் அது நிறைவேறாமல் போனது எனக் குறிப்பிடுகிறார். சமூகத்தில் பால் அடையாளங்களால் நிறுவப்படும் சில தடைகளுக்கு ஜோ முன்வைக்கும் காரணம் மிகப் பொருத்தமானது. காமம் காதலாக மாறாத நாகரிதத்தில் பால் திரிபுகளால் கட்டமைக்கும் சமூக அங்கீகாரங்களுக்கு இடமில்லாமல் இருந்தது. சில காரியங்களை ஆண் செய்யக்கூடாது என முன்வைக்கும்போது மற்ற பாலினருக்கு புது தடை உருவாகிறது. இத்தடைகள் சமூக ஒழுங்குகளாகவும் , மேலான நாகரிகத்தை உருவாக்கும் படிகற்களாகவும் ஆண் மையச் சமூகத்தில் பார்க்கப்படுகிறது. மனிதனின் கலைப்பார்வையிலும் பாலினருக்கான பிரத்யேகப் பிரிவினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும், இக்காலகட்டத்தில் அவற்றின் எல்லைக்கோடுகள் காணாமல் போய்விட்டன என்பது பலரது எண்ணம். ஆனால் அது உண்மையல்ல என்பது ஜோவின் வாதம். ஜோவின் டிரம்ஸ் ஆசை இதன் அடிப்படையில் தொடங்கியிருந்தாலும் கனவாக மட்டும் இருந்தது. சத்தமான இசை, நேரடியான பாடல் வரிகள் போன்றவை ஆண்பால் வார்ப்புக்குத் தகுந்த இசையாக பார்க்கப்படுகிறது. மென்மையான, உளக்குறிப்பை பூடகமாக முன்வைக்கும் பாடல் வரிகளை பெண்பாலினர் முன்வைப்பார்கள் எனப் பொதுவான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டினா டர்னர் போல வெகு சிலரைத் தவிர, ராக் போன்ற பகுப்பிசைகளில் ஆண்களது பங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் கற்றுக்கொள்ள நினைக்கும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிதார் போன்றவை போர் மற்றும் ராணுவத்தில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் போன்றது என சில சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.கென்னிஜி, லியானால் ரிச்சி போன்ற கலைஞர்கள் மென்மையான இசைக்கும், பூடகமான பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் வெகு சில ஆண்களே இந்த விலகல் விதிக்குள் இயங்குகிறார்கள். இதனால் ஆண் பாவனையில் மட்டுமே பல பெண் கலைஞர்களால் ஆண் மைய இசையை முன்வைக்க முடிகிறது. பில்லி டிப்டன் எனும் அமெரிக்க பெண் தான் சாகும்வரை ஆண் வேடமிட்டு ஜாஸ் கலைஞராக இசைத்துறையில் ஈடுபட்டார். இதனாலேயே அவர் புழங்கிய ஜாஸ் குழுவிலும் ஆண் மையக் கருக்களையே தேர்ந்தெடுக்க முடிந்தது. தன் இயல்பாகப் பெண்பால் இசை வடிவங்களை அவர் பரிசோதித்துப் பார்க்கவில்லை. ஆணாக மாறியதால்தான் இப்படிப்பட்ட விலகல் இசையில் ஈடுபட்டாரா என்பது கேள்விக்குரியதே. ஒருவிதத்தில் சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப தன் மாற்றத்தை கலைவடிவத்திலும் ஏற்றிப் பார்த்தார் எனச் சொல்லமுடியும். இவரை மையமாக வைத்து ‘Trumpet’ எனும் புனைவை எழுதிய ஜாக்கி கே இப்படிபட்ட திரிபுகளுக்கான சாத்தியங்களைத் தன் நாவலில் பேசியிருக்கிறார். இதைத் தவிர ஆண் கலைஞர்கள் இயற்றும் பேசு பொருளுக்கு பெரிதாகச் சமூகத் தடைகள் இருந்ததில்லை. தன்னியல்பாக உள்ளத்தின் ஆசைகளை, கனவுகளை, நம்பிக்கை/அவநம்பிக்கைகளைப் பேசுவதற்கு பெண் கலைஞர்கள் பூடகமான வெளிப்பாட்டு மொழியை கையாளவேண்டியுள்ளதை இசைக்கான பெண் பால் வார்ப்பாக சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.
இவற்றைக் கொண்டு திருநங்கைகளுக்கான அடையாள இசையின் அடிப்படைகள் உருவாக வேண்டும். ஆண் மையச் சமூகத்தின் அதிகாரப் போக்குப்படி, பெண்பாலைக் கூட்டு சேர்த்து, மூன்றாம் பாலுக்கான விதிகள் உருவாக்கப்படுவதை ஜோ போன்ற இசைக்கலைஞர்கள் எதிர்க்கிறார்கள். மெல்ல, பல காலங்களாக விளிம்பில் இருந்த பெண்பால் வார்ப்புகள் திரண்டெழுந்து மூன்றாம் பாலுக்கான சட்டங்களை, சமூக அங்கீகாரங்களை உருவாக்குகிறார்கள். ஜோ போன்ற இசைக்கலைஞர்கள் இவற்றுக்கான எதிர்குரலாக இன்று உருவாகியுள்ளார்கள். தங்களுக்கான ஆட்டவிதிகளை உருவாக்குவதற்கு சமூகத்தில் தங்கள் நவீன அடையாளத்தை நிறுவ வேண்டியத் தேவையை உணர்கிறார்கள். உணர்வாலும் உடற்கூறுகளாலும் இருவித பால் அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் இவர்களது இசையின் அடிப்படை இப்படிப்பட்ட சிக்கல்களிலிருந்தே உருவாக முடியும். அவர்களுக்கான சமூக அந்தஸ்து தோன்றும்வரை, இப்படிப்பட்ட இசையின் எல்லைகள் விரிந்துகொண்டே தான் இருக்கும். அவர்களுக்கான வெளி உருவாகும்போது, சமூகத்தின் அடுக்குகளில் இணைந்து மூன்றாம் பாலுக்கான உண்மையான கலை வெளிப்பாடுகள் சாத்தியமாகும். சிறு மரம் சிறு மரம், சூரியன் இங்கிருக்கிறான் இவ்விடத்தில் நீ நடப்பட்டதற்கு காரணமுண்டு. நீ இன்று பலகீனமாக சின்னதாக இருக்கலாம், உன் வேர்கள் ஆழத்துக்குச் செலுத்தி தழைப்பாய். நீ இந்த உலகைச் சேர்ந்தவன், இந்த அழகான நாளுக்கும் உரியவன். ’நாங்கள் மிகச் சிறு கும்பல் தான். ஆனால் எங்கள் இசை மூலம் திருநங்கைகளின் வாழ்வில் ஒரு அடையாளத்தை, அர்த்தத்தை உருவாக்க நினைக்கிறோம். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை உலகில் எல்லாரும் உணர வேண்டும். எங்கள் எதிர்காலம் முட்டுச் சந்தில் முடிவதல்ல. எங்கள் வாழ்வே சமூகத்துக்கு வழிகாட்டிதான். சிறு துளியளவு செயல்பாடு இருந்தாலும், இக்காலகட்டத்தில் சமூகத்தின் மாற்றுக் குரலாக நாங்கள் இருக்கிறோம் என்பதில் எங்கள் தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகமாகிறது. எங்கள் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் மூலம் இந்த சமூகப் பிரச்சனையை நாங்கள் பல இடங்களுக்கு எடுத்துச் செல்கிறோம். ஒருவிதத்தில் எங்கள் சந்தோசம், தன்னம்பிக்கை, திடமான உடல்மொழி போன்றவை எங்களை ஒதுக்க நினைக்கும் சமூகத்துக்கான பதில். அதுவே எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும். ‘
கட்டுரை எழுத உதவிய புத்தகங்கள்.
1. Transgender-Transsexual-Musicians
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
