ஒரு துரோகம், ஒரு தண்டனை

எனக்கு ரத்தம் கொதித்தது. எப்பேர்ப்பட்ட துரோகம் செய்திருக்கிறார்கள் இருவரும்.  அதுவும், சிறுவயதிலிருந்தே என்னோடு நன்றாக பழகியவன், ஒன்றாக ஓடி விளையாடியவன், இப்போது என்னுடைய வாழ்க்கையிலும் விளையாடி விட்டானே. நினைக்க நினைக்க என் நெஞ்சம் வெதும்பியது.  என் மனைவி? கல்யாணத் தரகர் அவளுடைய போட்டோவை காட்டிய அந்தக் கணத்தில் குப்புற விழுந்தேனே? அவர் என்னை டிஸ்கரேஜ் செய்யும் விதத்தில், ‘ரொம்ப சாதாரண குடும்பம். அப்பா ஸ்கூல் டீச்சர். இரண்டு பெண்களில் இவள் இளையவள். நர்சரி ஸ்கூல் டீச்சராக வேலை பார்க்கிறாள். உங்கள் அந்தஸ்துக்கு சரிப்பட்டு வராது’ என்றாரே? நான்தான் பிடிவாதமாக இவள்தான் வேண்டும் என்று தீர்மானம் செய்தேனே? எப்படி நேசித்தேன் அவளை? கல்யாணமான இந்த ஒரு வருடத்தில் என்ன குறை வைத்தேன் அவளுக்கு? அவளுமா இப்படி? விடக்கூடாது அவர்களை. சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

கதையின் முதல் பாரா நன்றாக வந்திருக்கிறதா என்று ஒரு முறை படித்துப் பார்த்தேன். முதல் பாராவிலேயே  வாசகர்களின் கவனத்தை சுண்டி இழுக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து படிப்பார்கள். இல்லையென்றால் மனம் லயிக்காமல், வேறு எங்காவது தாவி விடுவார்கள். கையில் ரிமோட் வைத்துக்கொண்டு டிவி சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பதைப் போல.

சமீபத்தில்தான் நான் கதை எழுத ஆரம்பித்திருந்தேன். அதுவும் விடுமுறை நாட்களில் மட்டும். வார நாட்களில் எங்கே நேரமிருக்கிறது?  ஆபிஸில் ப்ராஜெக்ட் டெட்லைனை பிடிக்கவே நேரம் போதாது. என் மனைவி ஜானு போட்டுக் கொடுக்கும் சூடான பகோடாவை சாப்பிட்டுக் கொண்டே கதை எழுதுவேன். 

முதலில், சிறிது குழப்பம் இருந்தது. நிஜமாக நடந்த சம்பவங்களை வைத்து கதை எழுதுவதா, முழுவதும் கற்பனையாக எழுவதா, இல்லை நிஜத்தையும் கற்பனையும் கலந்து எழுதுவதா? கதையில் சொல்லியது நிஜமாக நடந்ததா, இல்லை வேறு விதமாக நடந்ததா என்பதை வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விடுவதா? 

சரி, எழுதுவோம். எப்படி போகிறது என்று பார்ப்போம்.

நாங்கள் இருவரும் ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்தோம். இருவரும் ஒரே பள்ளி, ஒரே கிளாஸ். எங்கு போனாலும் ஒன்றாகத்தான் போவோம், எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். அவன் வீட்டில் நானும், என் வீட்டில் அவனும் எத்தனையோ நாட்கள் சேர்ந்து படுத்துத் தூங்கியிருக்கிறோம். சாப்பாடும் அப்படியே. கிளாஸில் முதல் இரண்டு ரேங்க் நாங்கள் தான். இருவரும் மாற்றி மாற்றி முதல் ரேங்க் வாங்குவோம். இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. கிளாஸ் டீச்சர் ரிப்போர்ட் கார்டை கொடுக்கும் போது எங்கள் இருவருடைய கார்டை மட்டும் கடைசியாக சஸ்பென்ஸ் வைத்து கொடுப்பார். சக மாணவர்கள் எல்லாரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்கள் ரேங்க்கை அறிவித்ததும் கைதட்டுவார்கள். இன்று, ஊரே என்னைப் பார்த்து கை கொட்டி சிரிக்கும் படியான காரியத்தை செய்து விட்டானே?

பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஒரே காலேஜில் இன்ஜினியரிங் சேர்ந்தோம். நான் மெக்கானிக்கல், அவன் எலெக்ட்ரானிக்ஸ். அதில் நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றதும், நான் தொடர்ந்து மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்க சேர்ந்தேன். அவன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு போக முடிவு செய்தான். பெங்களூரில் நல்ல வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆனான். நானும் மேனேஜ்மென்ட் கோர்ஸை முடித்துக் கொண்டு பெங்களூரில் வெளிநாட்டு கம்பெனி ஒன்றில் சேர்ந்தேன். இருவரும் மீண்டும் சேர்ந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்தோம்.

ஒன்றாக வளர்ந்திருந்தாலும், நிறைய விஷயங்களில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தோம்.  நான் சற்று முன்கோபி. எதையும் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’  என்று செயல்படுவேன். சரியான அவசரக்குடுக்கை. நான் பிடித்த முயலுக்கு ‘மூன்றரை’ கால் தான் என்பதில் மூர்கத்தனமாக இருப்பேன். பொறுமை என்பது சுத்தமாக கிடையாது. அவனோ எதை செய்தாலும் தீவிரமாக அலசி ஆராய்ந்துதான் செய்வான். அசாத்திய பொறுமை அவனுக்கு. சுலபத்தில் உணர்ச்சி வசப்படமாட்டான்.  நல்ல சங்கீத ஞானம் வேறு. இது இந்த ராகம், அந்த ராகம் என்று சட்டென்று சொல்லி விடுவான். தமிழ், இந்தி சினிமா பாடல்கள் நன்றாகப் பாடுவான். நான் அந்த விஷயத்தில் ஞானசூன்யம்.

வாழ்வின் அடுத்த கட்டமாக, எங்களுக்கு திருமணம் செய்ய எங்கள் குடும்பத்தினர் பேச்சை ஆரம்பித்தனர். எனக்கு, இந்த காதல், கத்திரிக்காய் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஒரு பெண்ணுக்கு ஒருவனை காதல் செய்யும் அளவிற்கு துணிவு இருந்தால், எதற்கும் துணிந்தவளாகத்தான் இருப்பாள். வேறொருவனுடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து அவனைவிட இவன் பெட்டர் என்று முடிவு செய்திருக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம், என்பது என் வாதம். அவன், ‘சேச்சே, பெண்களை அப்படி தரக்குறைவாக எடை போடாதே. அப்படியே இருந்தாலும், அதில் என்ன தப்பு. அவர்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான துணையை அவர்களே தேடிக் கொள்வதில் என்ன தவறு’ என்பான். ஒரு பெண்ணை நன்றாக புரிந்து கொண்டு காதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருந்தான். தானாக சொல்லும்வரை அவசரப்படுத்தாதீர்கள் என்று வீட்டிலும் சொல்லி விட்டான். இன்று, என் அடி மடியிலேயே கை வைத்து விட்டானே?

அம்மா நிறைய ஜாதகங்களையும், போட்டோக்களையும் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஜாதகங்களை நீயே பார்த்துக்கொள். போட்டோக்களை மட்டும் எனக்கு அனுப்பு என்றேன். நானும் இங்கேயே எனக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லியிருந்தேன். அப்படித்தான் அந்த தரகர் அவளுடைய போட்டோவை கொண்டு வந்து காண்பித்தார். ஆரம்பத்தில் சொன்னது போல, அப்போது குப்புற விழுந்தவன் தான். இப்போது, இரண்டு பேரும் என் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணம் பெங்களூரிலேயே நடந்தது. எல்லா செலவையும் நாங்களே ஏற்றுக் கொண்டோம். உங்களால் என்ன முடிகிறதோ அதை மட்டும் செய்யுங்கள் போதும் என்றோம். என் மாமனார் என் கையைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு பெரிய மனசு என்றார். என் ஆத்ம நண்பன்தான் கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்தான்.

குளிக்கப் போவதற்கு முன், ஜானு ஒட்டடைக் குச்சியுடன் ஒவ்வொரு ரூமாகப் போய் ஒட்டடையை அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள். ஏதோ பாட்டை முணுமுணத்துக் கொண்டு, மளமளவென்று இறைந்து கிடந்த புத்தகங்களையும், துணிமணிகளையும் ஷெல்ஃபில் அடுக்கி வைத்தாள்.

அவள் வந்ததிலிருந்து வீட்டிற்கு ஒரு தனி களை வந்திருந்தது. என் புத்தகங்கள், துணிமணிகள் எல்லாம் அங்கங்கே இறைந்து கிடக்கும். அவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி, அடுக்கி வைத்திருப்பாள். வீடே துப்புரவாக பளிச்சென்று இருக்கும். நாம் வசித்த வீடா இது என்று எனக்கே ஆச்சரியமாகத் தோன்றும். வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொள்வாள்.

நன்றாக சமைக்கத் தெரிந்திருந்தது அவளுக்கு. விதவிதமாக சமைப்பதில் அப்படி ஒரு ஆர்வம். சிறுவயதில் முறையாக சங்கீதம் கற்றிருந்ததால், பாடிக்கொண்டே சமைப்பாள். அவள் போடும் சூடான பகோடாவுக்கு ஈடு இணையே இல்லை எனலாம். நர்சரி ஸ்கூலில் இருந்ததால், மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்து இரவு உணவை தயார் செய்வாள். காலையில் செய்ததே இரவிலும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பண்டிகை நாட்களில் என் நண்பனும் விருந்திற்கு வந்து விடுவான்.  சிலசமயம் விடுமுறை நாட்களில் மூன்று பேரும் சேர்ந்து வெளியே போய்விட்டு ஹோட்டலில் சாப்பிடுவோம். 

இப்படி ரம்மியமாகப் போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கை, எங்கே, எப்போது, எப்படி தடம் புரண்டது என்று தெரியவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்தேன். விடை கிடைக்கவில்லை.

முதலில் அவளிடம் சிறுசிறு மாற்றங்களைக் கவனித்தேன். சிறியவை தான். ஆனால், நிச்சயமாக முன்பில்லாத மாற்றங்கள். உன்னிப்பாக கவனித்தால் தான் தெரியும்.

இப்போதெல்லாம் அவள் என்னிடம் பேசும்போது ஒரு அதிகார தோரணை இருந்ததைப் போல உணர்ந்தேன். முன்பு அப்படி இருந்ததில்லையே? மிகவும் விநயமாக அல்லவா நடந்து கொள்வாள்?  பேசுவதில் மட்டுமா? இப்போது காபி கொண்டு வைத்த தோரணையைப் பார்த்தீர்களா?

“ரமேஷ், காலங்கார்த்தாலே எழுந்ததும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து கதை எழுத ஆரம்பிச்சிட்டியா? லீவு நாள் வந்தா போதுமே? இன்னும் பல்லு தேய்ச்சியா இல்லையா? போய் முதல்லே பல்லு தேய்ச்சிட்டு வா. டைனிங் டேபிள் மேலே காபி வைச்சு அஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆச்சு. திரும்பத் திரும்ப சுட வைச்சா, காபி நல்லா இருக்காது” என்றாள் ஜானு. 

“ம்…ம்.. இதோ போய் பல் தேய்ச்சிட்டு வரேன்” என்று சொல்லி பாத்ரூமுக்குப் போய் பல் தேய்த்து விட்டு வந்தேன்.

அவள் கொடுத்த காபியைக் குடித்தேன். எட்டிக்காயாக கசந்தது. காபியில் குறையில்லை. என் மனம் தான் கசந்திருந்தது. இப்போது இவள் தேன் கொடுத்தாலும் எனக்கு கசக்கத்தான் செய்யும்.

முதலில் என் நண்பனிடம் தான் எனக்கு சொல்லத் தோன்றியது. என் மனக்குமுறலைக் கொட்ட வேறு யார் இருக்கிறார்கள்?  

என் நண்பன் சிரித்தான். “இப்போது உன்னிடம் உரிமையும், அன்னியோன்யமும் ஜாஸ்தியாகி இருக்கிறது என்று அர்த்தம். இது கூடவா உனக்கு தெரியவில்லை” என்றான்.

“அது மட்டும் காரணம் இல்லையடா. சில மாதங்களாக போனில் யாரிடமோ ரகசியமாக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கிறாள். நான் வருவது தெரிந்ததும் போனை கட் செய்து விடுகிறாள்.”

என் நண்பன் திடுக்கிட்டான். “அப்படியா, யாரிடம் பேசினாள் என்று தெரிந்ததா? கால் ரெக்கார்ட்டை பாத்தாயா” என்றான். 

“இல்லை. போனை கட் செய்தவுடனே கால் ரிக்கார்ட்டையும் எரேஸ் செய்து விடுகிறாள்.”

“ஏதாவது நண்பர்கள் அல்லது உறவினர்களாக இருக்கலாமே?  என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாதே.”

எனக்கு அப்படி தோன்றவில்லை. எதையோ என்னிடமிருந்து மறைக்கிறாள் என்று என் உள்மனம் சொல்லியது.

அப்போதும் எனக்கு என் நண்பன் மீது சந்தேகம் வரவில்லை. அந்தக் கடிதத்தை தற்செயலாக என் மனைவியின் அலமாரியில் பார்க்கும் வரை. 

‘இந்த கடிதத்தில் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் உள்ளத்தில் இருப்பதை எப்படி சொல்வது என்றும்  புரியவில்லை. இது முறை தவறிய செயல் என்று எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாகவே இருக்கிறது. உங்களை முதல் முறையாக பார்த்ததும், நீங்கள் எல்லாரிடமும் பேசிய விதமும், பழகிய விதமும் என்னைக் கவர்ந்தது. உங்களைப் போல எனக்கும் இசை என்றால் உயிர். எனக்கு பொருத்தமான துணை நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நான் மட்டும் நினைத்தால் போதுமா? உங்களுடைய விருப்பத்தையும் அறிய ஆவலாக உள்ளேன். ஏற்கெனவே மணம் ஆகி இருந்தால் என்ன? மனப் பொருத்தம் தானே முக்கியம். இந்தக் காலத்தில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதில்லையே? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’. கீழே அவனுடைய கையெழுத்து இருந்தது.

துரோகி. நீதானா அது? அன்று, மனைவியின் கால் ரெகார்ட்டை பார்த்தாயா என்று நீ திடுக்கிட்டு கேட்டதன் அர்த்தம் இப்போதுதானே தெரிகிறது. இருக்கட்டும். இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்கிறேன்.

மறுநாள் போனில் கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தாள், நான் கவனிக்கிறேனா இல்லையா என்று பார்த்துக்கொண்டு. நான் கவனிக்காதது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். அப்போது காலிங்பெல் சத்தம் கேட்க, ‘இதோ வரேன்’ என்று சொல்லி போனை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வாசலுக்குப் போனாள். நான் பாய்ந்து சென்று, போனில் யாரென்று பார்த்தேன். வேறு யார்? அந்த துரோகி தான்.

திரும்ப வந்தவள், மீண்டும் சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்தாள். நான் அப்போதுதான் கவனித்தது போல, ‘போனில் யார்’ என்று கேட்டேன். என்னோட வேலை செய்யும் ஸ்கூல் டீச்சர் என்றாள். 

‘நீ எப்போதடா நர்சரி ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்தாய்? இன்று இருவரும் என்னிடம் சரியாக மாட்டிக் கொண்டீர்கள்’. 

என் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தேன். எங்கு, எப்போது ஆரம்பித்தது இது? ஆ, மூன்று மாதங்களுக்கு முன் என் பிறந்த நாளைக் கொண்டாட மூன்று பேரும் ஹோட்டலுக்குப் போனோமே, அப்போதா?  வட்டவடிவ டேபிளில் ‌‌மூவரும்  ‌மூன்று மூலையில் உட்கார்ந்திருந்த போது ஆரம்பித்ததா இந்த முக்கோணக் காதல்?  என்ன கொட்டம் அடித்தார்கள் அன்று?  இவள் ஒரு ராகம் பாட, அவன் ஒரு பாட்டு பாட, பதிலுக்கு அவனொரு ராகம் பாட, அதற்கு இவள் ஒரு பாட்டு பாட, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவர்கள்தான் கணவன் மனைவி என்று நினைத்து விட்டார்கள். இதில் ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்று பாட்டு வேறு. பக்கத்து டேபிளில் இருந்த பெரியவர் ‘சரியான ஜோடிதான்’ என்று சொன்னது என் காதில் விழுந்ததே? சர்வரிடம் மொபைல் போனைக் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்களே? சர்வரும் இவர்கள் இருவரும் தான் ஜோடி என்று நினைத்து, என்னை ஃபிரேமிலிருந்து ஒதுக்கி, விதவிதமாக போட்டோ எடுத்தானே? அப்போதே உறைத்திருக்க வேண்டாமா எனக்கு?

இன்னொரு நாள், பண்டிகை தினத்தன்று எங்கள் வீட்டிற்கு சாப்பிட வந்தானே.  அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றையெல்லாம் சமைத்து விருந்து வைத்தாளே. என்னோட அம்மாவோட சமையல் மாதிரியே அருமையாக இருக்கிறது என்று அவனும் புகழ்ந்தானே. இனிமேல் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி விருந்து சாப்பிட வரவேண்டும் என்று கண்சிமிட்டிக் கொண்டு சொன்னாளே? 

ச்சே, எல்லாம் என் கண் முன்னாலேயே நடந்திருக்கிறது. நான்தான் கவனிக்கத் தவறிவிட்டேன். முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். எல்லாம் என் தப்பு தான. 

தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.  

‘என்னங்க, தலை வலிக்குதா? தைலம் தடவி விடட்டுமா?’ என்று கேட்டாள்

“ரமேஷ், இது என்ன பைத்தியக்காரத்தனம். ஆபிஸ்லே வாரம் பூரா வேலை செய்யறது போதாதுன்னு லீவ் நாள்லேயும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்திருக்கே. தலை வலிக்கப் போகுது. டிபன் ரெடியாயிடுத்து. உனக்கு பிடிச்ச ஆனியன் ஊத்தப்பம். போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடு” என்றாள் ஜானு.

ஆஹா, என்மீது ரொம்பவும் அக்கறை உள்ளவள் போல எப்படி நடிக்கிறாள்? பாசாங்குக்காரி. என்ன நடக்கிறது என்று எனக்கு எல்லாம் தெரியும். இந்த நாடகத்தை கூடிய சீக்கிரம் முடித்து வைக்கிறேன்.

“ரமேஷ், இங்கே ஹால்லே மொபைலை சார்ஜுக்கு போட்டுட்டு, அங்கே ரூம்லே கதை எழுதிட்டுருக்கே. உன் க்ளோஸ் ஃப்ரெண்ட் அவினாஷ் மூணாவது தடவையா போன் பண்றாரு. அட்டெண்டு பண்ணு. நான் இங்கே வேலையா இருக்கேன்” என்றாள் ஜானு. 

போய் போனை எடுத்தேன். 

“என்னடா, எவ்வளோ தடவை உனக்கு போன் பண்றது. இன்னக்கி சாயந்தரம் மூணு பேரும் ரஜினி படத்துக்குப் போயிட்டு, அப்படியே ஹோட்டல்லே சாப்டுட்டு வரலாமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன்”

“இல்லேடா. முக்கியமான வேலையா இருக்கேண்டா”

“என்ன, கதைதானே எழுதிட்டுருக்கே. எனக்குத் தெரியாதா என்ன முக்கிய வேலைன்னு” 

அடப்பாவி. எப்படிக் கண்டு பிடித்தான்?  

“என்ன கதை எழுதிட்டிருக்கே? காமெடியா இல்ல ட்ராஜெடியா?”

“எனக்கு காமெடியெல்லாம் சரிப்பட்டு வராது. ட்ராஜெடியாத்தான் முடிக்கலாம்னு இருக்கேன்”

“என்னவோ பண்ணித் தொலை” என்று சொல்லி போனை வைத்தான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜானு, “நாம உன் ஃப்ரெண்டோட படத்துக்கு போயிட்டு வந்திருக்கலாமே ரமேஷ். உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருந்திருக்கும்”  என்றாள்.

“இல்லே ஜானு. ரொம்ப நாளாக போயிட்டிருக்கு இந்தக் கதை. சீக்கிரம் முடிக்கணும்” என்றேன்.

என்ன செய்யலாம், எப்படி இதை செய்து முடிக்கலாம் என்று யோசித்தேன். இவர்கள் செய்த துரோகத்திற்கு இருவரையும் ஒன்றாக பரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முதலில் தோன்றியது. ஊஹும்,  அது கஷ்டம். முதலில் இவள். பிறகு அவன்.  அதுதான் சரி. அதற்கான திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். 

‘என்னங்க, இன்னைக்கி சாயந்தரம் எங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன். போய் ஒருநாள் தங்கிட்டு நாளான்னிக்கு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டாள் என் மனைவி.

‘இல்லை எனக்கு வேலையிருக்கு. நீ மட்டும் போயிட்டு வா’ என்றேன். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தேன்.

‘சரி, புளிக்காய்ச்சல் செஞ்சி வெச்சிட்டு போறேன். ஃபிரிட்ஜிலே தோசை மாவு இருக்கு. ஒரு நாளைக்கு மேனேஜ் பண்ணிக்குங்க’ என்றாள்.

ஒரு வருடம் மேனேஜ் பண்ணி விட்டேனே. ஒரு நாள் முடியாதா என்ன?

என் மனைவி சமையலறையில் மும்முரம் ஆனாள். நான் கீழே கார் ஷெட்டிற்கு போய் காரின் ப்ரேக்கை பிடுங்குவதில் மும்முரமானேன். ப்ரேக்கை அழுத்தினால் ப்ரேக்பெடல் ‘புசுக்’கென்று உள்ளே போகும். அவள் உயிர் மேலே போகும்.

கைகளை வேஸ்ட் க்ளாத்தில் துடைத்துக்கொண்டு தலையை தூக்கியவன் திடுக்கிட்டேன். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வேலைக்காரி சரோஜா.

‘நேத்திக்கி தானே வண்டியை சர்வீஸ் உட்டு எடுத்தாங்க அம்மா. திரும்பவும் என்னாத்த நோண்டிக்கினுருக்கே’ என்றாள்.

‘உன் வேலையே பாத்துக்கிட்டுப் போவியா?’ என்றேன் கடுப்புடன்.

‘உக்கும்’ என்று தன் மோவாயை தோளில் இடித்து, ‘எனக்கு என்ன வந்துது. அம்மாகிட்ட கைமாத்தா பணம் கேக்க வந்தேன்’ என்று சொல்லிவிட்டு போனாள்.

ரமேஷ், இவ்ளோ நேரமா இங்கே ரூம்லே உக்காந்து கதை எழுதிக்கிட்டிருந்தே. தீடீருன்னு ஆளைக் காணும். எங்கே போயிட்டு வரே?” என்றாள் ஜானு. 

ச்சே, ஜானுவுக்கு தெரியாமல் எப்படியாவது ரூமுக்குள் நுழைய வேண்டும் என்று நினைத்தேன். பார்த்து விட்டாள்.

“கீழே கார் ஷெட்டுக்குப் போயிட்டு வரேன்” என்றேன்.

“கார் ஷெட்டுலே என்ன வேலை?” என்றாள் சந்தேகத்துடன்.

“இல்லே, பர்ஸை கார்லேயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன். அதை எடுக்க தான் போனேன்” என்று சொல்லி பர்ஸை காண்பித்தேன்.

“உனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டுருக்கு” என்றாள் ஜானு அலுப்புடன்.

மாலை நேரம். என் மனைவி நேர்த்தியாக ஆடை அணிந்து, கண்ணாடி முன் நின்று, ஏதோ பாட்டை ஹம் செய்து கொண்டு புடவைத் தலைப்பை  நீவி விட்டுக் கொண்டிருந்தாள். என்றுமில்லாத அளவு சந்தோஷமாக இருந்ததாகத் தோன்றியது எனக்கு. 

‘தலை வலிக்குது. காபி குடுக்கறியா’ என்று கேட்டேன். 

‘இதோ குடுக்கறேன்’ என்று சமையலறைக்கு போய் அவள் கேஸ் லைட்டரை அமுக்கிக் கொண்டிருந்த போது, மேஜையில் இருந்த அவளுடைய போன் ஒலித்தது. இந்த முறை ஓடிப்போய் யார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை எனக்கு. காபியை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு போனில் பேசினாள். 

‘இதோ கிளம்பிட்டேன்’ என்றாள் என் மனைவி.

“ரமேஷ், ரஜனி படத்துக்கு உன் ஃப்ரெண்டோட போகலாம்னு பார்த்தா வேண்டாம்னுட்டே. நீ எழுதற கதையை இன்னிக்கு முடிச்சே ஆகணும்ன்னு உக்காந்திருக்கே. எவ்வளோ நேரம்தான் நான் தனியா டிவி பார்த்துக்கிட்டு இருக்கறது? எனக்கு போர் அடிக்குது. நான் கோவிலுக்கு போயிட்டு வரேன். கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோ. யாராவது உள்ளே வந்தா கூட தெரியாது உனக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் ஜானு. 

போய் வா, என் அருமை மனைவியே. நீ எங்கே போகிறாய், யாருடன் போகிறாய் என்று எனக்குத் தெரியாதா என்ன? உன் இறுதிப் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று என் போன் ஒலித்தது. அந்த துரோகி தான் போனில். இவன் எதற்கு இப்போது போன் செய்கிறான்? வேண்டா வெறுப்பாக போனை எடுத்தேன்.

“டேய், ரொம்ப நாளா உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்துச்சு. நீ எப்படி எடுத்துக்குவியோன்னு மனசை உறுத்திக்கிட்டிருந்தது. வேறே வழி தெரியலே. இன்னிக்கு சொல்லியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்றான்.

என்ன நெஞ்சழுத்தம் உனக்கு? செய்வதெல்லாம் செய்துவிட்டு என்னிடமே பாவமன்னிப்பு கேட்கிறாயா? மன்னிக்கக்கூடிய பாவத்தையா செய்திருக்கிறாய் நீ?

“உன்னோட கோணத்துலேர்ந்து பாக்கும்போது, இது தப்பாத்தான் தோணும் உனக்கு”

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இது தப்புத்தாண்டா, மூடனே.

“ஆனா எனக்கு இது தப்பா தோணலை. நம்மோட மனசுக்கு பிடிச்சிருந்தா போதும். இந்த காலத்திலே மத்தவங்களுக்காக பயப்பட்டுக்கிட்டு பொய் வாழ்க்கை வாழறதுலே அர்த்தமே இல்லே.”

இந்தக் காலம், அந்தக் காலமென்று, காலத்தை எதற்கு உன் துணைக்கு அழைக்கிறாய், முட்டாள்?

“உன்னோட கல்யாணத்திலே பார்த்தவுடனே எனக்கு மனசுலே ஒரு நல்ல அபிப்ராயம்  உண்டாச்சு. அவங்க எல்லோரோடையும் பேசிப் பழகிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்கதான் எனக்கு சரியான வாழ்க்கைத் துணைன்னு முடிவு செஞ்சேன்”. 

நீ முடிவு செய்துவிட்டால் போதுமா? நான் எதற்கு இங்கே இருக்கிறேன்?

“ஆனா அவங்க ஏற்கெனவே கல்யாணமாகி கணவனை விபத்துலே இழந்தவங்கன்றதாலே இதுக்கு ஒத்துப்பாங்களான்னு சந்தேகமா இருந்தது”

என்ன குழப்புகிறான் இவன்? என்ன சொல்கிறான்? 

“என்னடா சொல்றே? யாரைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கே?”

“சாரிடா, என்னோட பதட்டத்துலே யாருன்னு சொல்லாமே என்னென்னவோ உளறிக்கிட்டு இருக்கேன். உன் மச்சினிச்சியைப் பத்தி தான் பேசிக்கிட்டிருக்கேன். உங்களோட கல்யாணத்துல அவங்களை பார்த்ததிலிருந்து ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்தது. உனக்குத் தான் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதே. அதுவும் விதவையான உன் மச்சினியை லவ் பண்றேன்னு சொன்னா நீ எப்படி எடுத்துக்குவியோன்னு தெரியலே. அதான் உன் மனைவிகிட்டே என் மனசுலே இருக்கிறதை சொன்னேன். அதை கேட்டு அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. தன்னோட அக்காவுக்கு மறுவாழ்வு கிடைக்கப் போகுது, அதுவும் தன்னோட புருஷனோட க்ளோஸ் ஃப்ரெண்ட் மூலமான்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. முதல்லே அவங்க அக்கா இதுக்கு ஒத்துக்கல்லே. உன் மனைவிதான் எங்களுக்குள்ளே தூது போய் ஒரு வழியா ஒத்துக்க வைச்சாங்க.  இப்போ நாங்க இரண்டு பேரும் சில மாதங்களாக பேசிப் பழகிட்டிருக்கோம். இன்னிக்கு அவங்களோட அப்பாவை பார்த்து பேசத்தான் போயிட்டிருக்கேன். நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும். உன்கிட்டே முதல்லயே சொல்லாததுக்கு திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கறேன். உடனே வந்து சேருடா” என்றான்.

என் தலை சுற்ற ஆரம்பித்தது. என்னவெல்லாம் கற்பனை செய்து கொண்டுவிட்டேன்? என் அவசர புத்தியால் என்ன காரியம் செய்து விட்டேன்?

அலறி அடித்துக் கொண்டு என் மனைவிக்கு போன் போட்டேன். 

ரிங்க் போய்க் கொண்டேயிருந்தது………….

திடீரென்று என் போன் ஒலித்தது. அவினாஷ்தான் போனில். 

“டேய், ரொம்ப நாளா உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்…………” என்றான்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “ஒரு துரோகம், ஒரு தண்டனை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.