மறம் பழகிய நாஷ்வில் கறுப்பின மாணவர்கள்

‘The Power Of Moments’ (Penguin Random House ) என்னும் நூலின் ஒரு குறும் பகுதியான ‘Practise Courage’-ன் மொழிபெயர்ப்பு.

நூலாசிரியர்கள் : CHIP HEATH & DAN HEATH

தமிழாக்கம்: கோரா 

1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று ஜான் லெவிஸ், அஞ்சலா பட்லர் மற்றும் டாயேன் நாஷ் தலைமையில் ஒரு  கறுப்பின மாணவரணி நாஷ்வில் நகர்மைய உணவகங்களில் உள்ள வெண்தோலினர் மட்டுமே அமர்ந்து நண்பகல் உணவருந்த  அனுமதிக்கப் படுகின்ற  உணவுக் கவுண்ட்டர்களை ஆக்கிரமித்தது. இதுவே இன வேறுபாடு பிரிவினைக் கொள்கைக்கு எதிராக கறுப்பின மாணவர்கள் முன்னெடுத்த  நாஷ்வில்-லின் முதல் உள்ளிருப்புப் போராட்டம்.

குடிமை உரிமைகள் இயக்கம் குறித்த மிகச் சிறப்பான PBS (Public Broadcasting Services) ஒலிபரப்பு  நிகழ்த்திய “வெற்றிக்கனி மீதே கண்கள்” என்னும்  முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலில், ஜார்ஜியா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த நாடாளுமன்ற பிரதிநிதியாக இன்று இருந்து வரும் ஜான் லெவிஸ், போராட்டம் நடந்த விதம் பற்றி இவ்வாறு உரையாடி இருந்தார்:

“போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தேவாலயம் செல்வோர் போல் உடையணிந்து இருந்தனர். எங்களுக்கு உணவு பரிமாறல் மறுக்கப்பட்ட நிலையில், நண்பகல் உணவு கவுண்டர்களில் அமர்ந்திருந்தவாறே   பாடங்கள் படித்துக் கொண்டும் வீட்டுப் பாடங்கள் செய்து கொண்டும் எங்கள் எதிர்ப்பைத்  தெரிவித்தோம். உணவக நிர்வாகி நண்பகல் உணவுக் கவுண்டர்களையும்  உணவகங்களையும் மூடிவிட ஆணையிட்டார்”.

“நாங்கள் நடத்திய முதல் உள்ளிருப்பு போராட்டம் உண்மையில் வேடிக்கையானதாக இருந்தது. பணிப்பெண்கள் கலவரமடைந்து இருந்தனர். அவர்கள் அன்று  2000 டாலர் மதிப்பிலான உணவுகளை கை தவறி நழுவ விட்டனர்குறிப்பாக ஒருத்தி மிகவும் பயந்து போயிருந்ததால் தொடர்ந்து  உணவுகளை எடுப்பதும் கைதவற விடுவதுமாக இருந்தாள்” என்று டயான் நாஷ் கூறினார்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்திலும் இதற்கு அடுத்த வாரம் நடந்த உள்ளிருப்பிலும் கறுப்பின மாணவர்கள் ஒரே சீராக சம்பவங்கள் ஏதுமின்றி  அமைதியாகவும்  கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். ஆனால் பிப்ரவரி 27-ல் நடந்த மூன்றாவது உள்ளிருப்பில் அச்சுறுத்தல் அதிகரித்தது. கடையில் 

கூடியிருந்த இளம் வெண்தோலினர் போராடும் மாணவர்களை சீண்டுதலுக்கும் கேலிப்பேச்சுக்கும் உள்ளாக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்களில்  சிலரை இருக்கையை விட்டு அகற்றி கடுமையாக தாக்கினர். வன்முறையைத் தடுக்க அனுப்பப்பட்ட போலீஸ் 77 கறுப்பின மாணவர்களை சோம்பித்திரிதல் (loitering) மற்றும் ஒழுங்கற்ற நடத்தைக்காக கைது செய்தனர். பகைமை கொண்டு தாக்கிய வெண்தோலினர் எவரும் கைது செய்யப் படவில்லை. 

கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒழுங்கற்ற நடத்தைக்காக தண்டிக்கப் பட்டனர். ஜான் லெவிஸ் மற்றும் பல மாணவர்கள், 50$ அபராதம் கட்ட மறுத்து அதற்கு பதிலாக ஒரு மாத சிறை தண்டனையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையே தம் மக்கள் சிறையிலடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்ற 

பெற்றோர்,  கறுப்பின சமூகத்தைத் திரட்டி அனைவரும்  இன வேறுபாட்டுப் பிரிவினைக் கொள்கையை கடைபிடிக்கும் நகர் மைய கடைகளை புறக்கணிக்க வேண்டும்  என்ற  தீர்மானத்துக்கு ஒப்புதல் தந்தனர் . லியோ லில்லார்ட் என்னும் மாணவ போராளி – “நாம் மாற்ற முயற்சிக்கும் சமூக அமைப்பை நாமே  இனிமேல்  தாங்கி நிற்கக் கூடாது” என்றார். “நாஷ்வில் நகர் மைய கடைகளில் வாங்குவோர் வராத கொடுமையை உணர்ந்த  கடைக்காரர்கள்  நகர மேயர் மீதும் நகரின் அரசியல் மேலாண்மை மீதும் கொடுக்கப் போகும் அழுத்தம், விதிகள் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட வைக்கும்” என்றும் கூறினார். 

அடுத்து ஏப்ரல் 19, அதிகாலையில், கறுப்பின மாணவர்களின் வழக்குரைஞர் 

Z . அலெக்சாண்டர் லூபியின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த வெடி பேரழிவுக்கானது. அதே தெருவின் எதிரில் இருந்த கல்லூரி விடுதியின் 147 ஜன்னல்களை தகர்க்கும் அளவுக்கு அதன் அதிர்வலைகள் வலிமை கொண்டிருந்தன. லூபியும் அவர் மனைவியும் பின்பக்க படுக்கை அறையில் உறங்கியதால் அதிசயமாக காயப்படாமல் உயிர் தப்பினர்.

கொலை முயற்சி கறுப்பின சமூகத்தைக் கொந்தளிக்க வைத்தது. கறுப்பினத் தலைவர்கள் நகர் மண்டபத்தை நோக்கி நடைப்  பயணம் போக ஏற்பாடு செய்தார்கள். “மக்கள் திரளாக வர ஆரம்பித்தார்கள்.  நாங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தோம் .  சாப்பாட்டுக் கூடங்கள் மற்றும்  பல்கலை வளாகங்களில் இருந்து மாணவர்கள் வெளியேறி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்”.என்றார் மரியாதைக்குரிய தந்தை C .T . Vivian. அணிவகுப்பு ஜெபர்சன் அவென்யூ-வை நிரப்பியது. மதிய இடைவேளையில் வெளியே வந்திருந்த வெள்ளை தொழிலாளர்கள்  அணிவகுத்து செல்வோர் கடந்து செல்வதைக் கண்டு அதிசயித்தனர். இது போன்ற நிகழ்ச்சி இதுவரை அவர்கள் கண்டதில்லை. 4000 பேர் தெருவில் அணிவகுத்து நடந்த போதிலும் 

அவர்களின் மிதவேக நடையொலி மட்டும் காதில் கேட்டது. அணிவகுப்பு கடந்து  செல்லும் போது வெள்ளை தொழிலாளர்கள் என்ன செய்வது என்றறியாது சுவர் ஓரமாக பின்வாங்கி சுவருக்கு முதுகு காட்டி வெறுமனே பார்த்து  

நின்றனர். அவர்கள்  பார்வையில் அச்சம் மற்றும் பிரமிப்பு தெரிந்தது. ஆனால்   என்ன செய்வது என்று எதுவும் மனதில்  தோன்றவில்லை.  இருப்பினும் இதை நிறுத்துவதோ ,கேள்வி கேட்பதோ அல்லது கேலி செய்வதோ உகந்ததல்ல என்றறிந்திருந்தார்கள்.

மரியாதைக்குரிய விவியனும் டியான் நாஷ்-ம் திரளாக  மற்றும் அதிகரித்துக்  கொண்டு வருவதுமாக   இருந்த  கூட்டத்துக்கு முன்பாக  நகர் மண்டபத்தின் படிகளில் நின்று மேயர் பென் வெஸ்ட் -ஐ  எதிர்கொண்டனர். “மேயர் வெஸ்ட் அவர்களே, இனம் அல்லது  தோலின் நிறத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு மனிதனை வித்தியாசப் படுத்திப் பார்ப்பது தவறு என்று உணர்கிறீர்களா?” என்று நாஷ் கேட்டார். தவறு தான் என்று வெஸ்ட்  ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நாஷ்,  “நண்பகல் கவுண்டர்களில் காணப்படும்  இன  வேற்றுமை பாகுபாடுகள் களையப் பட வேண்டும் அல்லவா?” என்று மேயரைக் கேட்டார் . “ஆம்” என்று கூறி மேயர்  ஒப்புதல் தெரிவித்தார் 

மேயரின் பதில் வெள்ளையர் பலருக்கு கோபமூட்டியது  இருப்பினும்,

மூன்று வாரங்களில் உணவு கவுண்டர்களின்  பாரபட்சமான கொள்கை திரும்பப் பெறப்பட்டது . முதல் முறையாக கறுப்பின வாடிக்கையாளர்களும் வெள்ளையர்களும் ஒன்றாக உணவு பரிமாற பட்டார்கள். நாஷ் வீல் உணவுக்  கவுண்டர்களில் இனப் பாகுபாடு ஒழிப்பு  சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஆரம்ப பெரு வெற்றிகளில் ஒன்றாகும். 

இந்த வெற்றியின் கட்டுமானப் பொருள் வீரம்-தார்மீக ரீதியில் தவறான நடத்தையை எதிர்த்து நிற்க அவமதிப்பு, உடல் காயம்  மற்றும் சிறைவாசம் அனைத்தையும் அறவழியில்  எதிர்கொண்ட மாணவர் குழுவின் வீரம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, உணவு கவுண்டரில் அமர்ந்த தருணம், அவர்கள் வாழ்வின் ஒரு வரையறுக்கும் (Defining)  தருணம். இது போன்ற ஒட்டுமொத்த எத்தனிப்புகள்(efforts ) பெரிதாகி  தேசத்தின் வரையறுக்கும் தருணத்தை ஈன்றன.. 

இக்கதையில் மிகக் குறைவாக கவனிக்கப் பட்ட விசயம்  என்னவென்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீரம் காட்டி வெறுமனே  அமர்ந்திருக்க வில்லை. அவர்கள் வீரம் பழகினார்கள். அதை ஒத்திகை பார்த்தார்கள். இந்த தெளிவு நம்மை ஜேம்ஸ்  லாசன் என்னும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையின் கதைக்கு கொண்டு வருகிறது.

மெதடிஸ்ட் அமைச்சர் லாசன், மகாத்மா காந்தியின் சீடர்களிடம் இருந்து அஹிம்சை முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தியை கற்க இந்தியாவுக்கு பயணம் செய்து திரும்பியவர். நாஸ் வில்-க்கு  வந்ததும் பின்னாளில் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாகத் திகழப் போகிற லெவிஸ்,

நாஷ் மற்றும் பலருக்கு பயிற்சி அளித்தார். லாசன்  சாத்வீக எதிர்ப்பு போராட்டங்கள் வெற்றி பெற முன்னேற்பாடுகள் தேவை என்று அவர் உறுதியாக நம்பினார். “ 25 பேரை வைத்துக் கொண்டு  அவர்கள்  இஷ்டப்படி நடந்து கொள்ள அனுமதிப்பது ஆர்ப்பாட்டம் அல்ல. அவர்கள் கூட்டாக கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும்- என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியம்.. தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் கடும் பயிற்சியின் அவசியத்தை அடையாளம் காணாமல் இருந்து விடுவதே  அகிம்சைவாதிகள் மற்றும் அகிம்சை முயற்சிகளின் தோல்விக்கு காரணமாகி விடுகிறது” -என்றும் கூறியிருந்தார்.

லாசன் நாஷ்வில் நகரில்  எதிர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிலரங்குகளை நடத்தினார். “ சாத்தியமுள்ள  100 வகை நெருக்கடி நிலைகள்  எதிர்ப்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; சோம்பித் திரிதல் சட்டத்தை மீறாமல் தவிர்ப்பது எப்படி; உணவு கவுண்டர் ஆக்கிரமிப்பின் போது எதிர்ப்பாளர் ஒருவர் இருக்கையை விட்டு   விலகி  மற்றவர் அதில்  அமரும்  இடமாற்றத்தை எப்படி ஒழுங்காக நிகழ்த்துவது,  சிலர்   கழிவறை செல்லும் அவசியம் நேரிடும் போது காலியாகும்  இருக்கைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது, எவ்வகை உடை அணிவது :பெண்கள்- காலுறைகள் மற்றும் ஹீல்ஸ்;

ஆண்கள்- கோட் மற்றும் டை” என்று எழுதினார் வரலாற்றாசிரியர் டெய்லர் பிரான்ச் 

ஆனால் லாசன் வெறும் அறிவுரை மட்டும் வழங்கவில்லை. மாணவர்கள் பாகமேற்று நடித்தலிலும் (Role-Play )பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நகர் மைய கடைகளில் உள்ள  நிசமான உணவுக் கவுண்டர் போல்  மாதிரிப் படிவம் உண்டாக்கி மாணவர்களை  அதன் எதிரே இருக்கைகளில் (ஸ்டூலில்) உட்கார வைத்தார். பின்னர் வெள்ளையர்களாக நடிக்கும்  லாசன் கூட்டமைப்பினர் மாணவர்களின் இடத்தை அபகரிக்க  

அவர்களை சுற்றி கும்பலாக நின்றனர். அவர்கள் மாணவர்களை நோக்கி  இனப் பழிச் சொற்களைக் கூறி கூச்சலிட்டனர்.  மாணவர்களின் முகங்களுக்கு முன்  சில அங்குலங்களே  இடைவெளி இருக்கும் அளவுக்கு குனிந்து அவர்களை நிந்தித்தனர். சிலர் மாணவர்களின் தலைமுடியில் சிகரெட் சாம்பல்களை உதிர்த்தனர். மாணவர்களை ஸ்டூலில் இருந்து கீழே  தள்ளி, அடி உதை  கொடுத்தும் அவர்களின் உடைகளை இழுத்தும் துன்புறுத்தினர்.

பயிற்சியில் நிஜம் போல் நடித்துக்  காட்டப்பட்ட  போலி தாக்குதல்கள் கொடுமையானவை ஆயினும் அத்தியாவசியமானவை. இது மாணவர்கள் 

சாத்வீக எதிர்ப்புக்கான இயல்பூக்கம் (instinct ) – தாக்குதலின் போது திரும்பத் தாக்குதல் அல்லது ஓடிப் போவது  ஆகிய  இயல்பான தூண்டல்களளை அடக்கி வைக்கும் மன உறுதி- பெற லாசன் விரும்பிப் போட்ட தடுப்பூசி. போராட்ட நாளில் நாஷ் வில் நகர் மைய உணவு கவுண்டர்களில் ஜான் லெவிஸ் மற்றும் இணையர்கள்  (peers ) தங்கள் நிலைகளில்  (position) பொறுப்பேற்றதற்கு  முன்பே போராடும் மாணவர்கள்  எல்லோரும் தயார் நிலையில் இருந்தார்கள் கட்டுப்பாடு உடையவராக ,மரியாதை  மிக்கவராக மன அமைதி கொண்டவராக. அவர்கள் சிறிது அச்சமடைந்திருந்தாலும்  பயத்தை கட்டுப்படுத்த கற்றிருந்தனர்.Mark Twain சொல்லி இருப்பது  “வீரம் என்பது பயம் எதிர்ப்பு, பய நிபுணத்துவம் (mastery of  fear) – ஆனால் பயம் இல்லாமை அல்ல” என்று   Mark Twain கூறியுள்ளார்.

சொல் விளக்கம்:

 தீரம்,வீரம்,சினம்,சீற்றம்,வலிமை,ஆற்றல்,வெற்றி,அமர்,அழித்தல்,கொல்லல்  ஆகிய பத்து பண்புகளும் மறம் என்ற தமிழ்ச் சொல்லில் அடங்கி இருக்கிறது.

 (தமிழ் விக்கிப்பீடியா). அறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் அல்ல மறம். இங்கு          “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்; மறத்திற்கும் அஃ தே துணை” என்னும் திருக்குறள் நினைவு கூரத்தக்கது.  


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.