1

பெயரைச் சொல்லித்தான் அழைத்தாள்
அவள் குரல் கேட்டது
அது பெரும் நிகழ்வு
இங்குதான் மறைந்திருக்கிறாள்
சுற்றும் முற்றும் பார்க்கின்றேன்
ஆள் நடமாட்டமில்லாத
அந்தப் பரந்த வெளியெங்கும் மணல்
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது
பாதத்திற்கடியில் தகிக்கிறது அவளின் நினைவு
2
ஒவ்வொரு முறையும்
என்னை சுமந்துக்கொண்டு
உன்னைத் தேடி வருகின்றேன்
வழக்கம் போல இந்த முறையும்
நீ புதிதாக இருக்கின்றாய்
நான் தளர்ந்த முகத்துடன்
பழகிய இடத்திற்கே திரும்பி செல்கின்றேன்
ஆனால் எப்படியும்
ஒரு முறையாவது உன்னில் பார்த்து விடுவேன்
நான் நேசித்த அந்தப் பழைய முகத்தை
3
ஒரு சந்திப்பில்
நான் தற்கொலை பற்றி பேசினேன்
நீ காதலைப்பற்றி பேசினாய்
காதல் தூரத்தில் தெரியும்
மலைக்குன்று என்றாய்
இருவரும் ஏறி உச்சியில் நிற்கின்றோம்
நீ தற்கொலையப்பற்றி பேசுகிறாய்
நான் காதலைப்பற்றி பேசுகின்றேன்
இரண்டும் ஒன்றுதான் என்று
பின்னாலிருக்கிறவன் தள்ளி விட்டான்
சாதியே உடலாக கொண்டவன்
கீழே விழுந்துக்கொண்டிருக்கின்றோம்
நம் அகம் காதலை பேசிக்கொண்டிருக்கிறது
நம் புறம் தற்கொலையை பேசிக்கொண்டிருக்கிறது
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
