அன்பு

அன்பின்மையின்
தடத்தை
அவ்வளவு தெளிவாய்
ஒளித்துள்ளேன்

ஆழ்கிணறொன்றில்
இலைவிழ எழும்
மென் அலைவட்டம்
என் அன்பின் சொற்கள்

அதற்கும் கீழே
ஒரு பாறையாய் உள்ளது
எனது அன்பின்மைகள்


பின் எப்படி
நம் கடல்களில் பாதியென
நம் காலங்களில் பாதியென
நம் வானங்களில்
நம் வனங்களில்
உள்ளதில் உணர்வில்
பாதியெனக்
கிடக்கிறது
நாம்தான் திகைக்கிறோம்
இதோ
கடல்களின் ஏக்கத்தை
இசைக்கும் பெருமீன் அறியும்
அன்பின் மறுமாதி
அன்பின்மையென்று


ஒன்றும் பிடிபடாமல்
கடைசியாக
ஒரு கிருகப் ப்ரவேசம்
செய்தோம்
பின் ஒரு ஹோமம்
கூட வளர்த்தோம்
இந்த இல்லத்தில்தான்
எங்கள் வெறுப்புகள்
நிரந்தரமாயின
பகை ஸ்தூலமாக
நிர்வாணமாய்‌ நெஞ்சு விரித்து
நின்றது
அன்பற்றவை தரையின்
விநோத வரிகளில்
ஓடத்துவங்கின
மனங்களின் எல்லைகளை
மீறி உடலுக்குள் விழுந்து
வன்மத்தை உடலில்
பாய்ச்சத்துவங்கியதும்
இங்குதான்
மனதின் கோரங்கள்
மணிக்கட்டுகளை கீறி
குருதியுண்டது
ஓலமும்‌ அழுகையும்
பெருகும்‌ வீட்டில்
சிரிப்பென்னவோ
பொருந்தாது நின்றது அவ்வப்போது
யாகமும் ஹோமமும்
எப்படியாவது நீங்கிவிட்ட
அன்பின் நறுமணத்தை
மீண்டும் கொண்டுவரும்
என உறுதியாய்
நம்பினோம்
இரவில் வெடுக்கென
கடந்து செல்லும்
உருவங்களைக் காணத்
துவங்கிய நாளில்
தெரிந்தது
அத்தனை புனிதங்களுக்கும்
சற்றும் சளைக்காதவை
அன்பின்மையின் வேர்கள் என்று


இதற்குமேல்
துளிக்கனத்தைக்கூட
தாங்காது இவ்வில்லம்
சற்றே எங்கள் துன்பச்சாதனங்களை
ஓரம்‌ வைத்துவிட்டு
தேடத்துவங்கினோம்
இருளடைந்த மூளைகள்
தூசு படர்ந்த உத்தரங்கள்
கிருமி வாழும்‌ கைவிடப்பட்டப் பகுதிகள்
தேடிச் சலித்து
சுவரின் பூச்சையிடித்து
ஒவ்வொரு செங்கல்லாய்
உடைத்துப்பார்த்தோம்
கண்ணீரால் நெளிக்கப்பட்ட குரலில்
இங்கிருப்பதாய் விக்கினாள்
ஆம்
அன்பின் ஊற்றைப்போலவே
அவ்வளவு இயல்பாய்
பெருக்கின் சுழிவுகள்கூட
அச்சசலாய்
இருந்தது
அன்பின்மையின் ஊற்று


சரிசெய்துகொள்
உடலை
மனதை
உணர்வுகளை
உன் இறகுகளை
செப்பனிட்டு வை
பாதங்கள் தயராகட்டும்
முள் தைக்காத ஒரு
பாதம் தேவையாகும்
நிலத்தையும்
வானத்தையும்
மனமென ஆக்கிக்கொள்
நட்சத்திரங்கள் சொல்லுதிர்க்கும்
பொழுதுகளில் ஏந்திக்கொள்ளத்
தயாராக இரு
இன்பம் மட்டும் அல்ல
என்பது பாலப்பாடம்
ருபாய்கள் இல்லாத
அன்பு வணிகமொன்று உள்ளது
நினைவிருக்கட்டும்
கெடுதலும் கேடுநினைப்பதும்
சரித்துவிடுவதும் கைகொடுத்தலும்
எல்லாம்‌ எல்லாம் உண்டு
எல்லா‌ வீதிகளையும்
கடக்கவேண்டுமென்றில்லை
எப்புள்ளியோ யாரறிவார்
இகப்பெருக்கில் குருதிச்சொரியும்
காயங்கள் பிறக்கும் முன்னோ பின்னோ
எப்புள்ளியோ யாரறியார்
வானத்திற்கும் அப்பாலிருந்து
வரும்‌ பறவையொன்று
தூக்கிச்சென்றுவிடும்
உயிரென நீ கொண்டிருக்கும் ஒன்றை
எஞ்சுவது சடலமல்ல
கருணையால் உயிர்க்கும்
கரு பிறக்கும் மையம்


இதோ
உள்ளது
உள்ளபடி
வெளிப்பட்டு
கணம் கூட ஆகவில்லை
கிளையறியாமல்
இலைகூட அறியாமல்
பறத்தல் முடித்து
அமரும் சின்னப்பறவையைப்போல்
வந்துவிடுகிறது
பாவனை

இதோ
உள்ளதை
உள்ளபடி
கண்டு
ஒரு ஷணம் கூட ஆகவில்லை
நட்சத்திரம் விழுந்ததோடு
நகர்ந்துவிட்டேன்
பிரம்மாண்டங்களுக்கு
முன்னிருந்த
என் எளிய வானங்களுக்கு


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.