நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp)

படம் 1 : மர்ஸல் துஷா (1887 – 1968)

மூன்று பரிமாணத்தில் பிரமிடாக காணுவது நான்காம் பரிமாணத்தில் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்? முதலில் நான்காம் பரிமாணம் என்பது உண்டா? அப்படியிருந்தால், நான்காவது பரிமாணத்தில் முயல் குட்டி யானையைவிட பெரியதாக இருக்குமா? சைக்கிளின் விளிம்பில்  கண்ணுக்கு தெரியாத ஆனால் சிந்தைக்கு புலப்படும் ஒரு மிக சின்ன சக்கிரம் விளிம்புடன் சேர்ந்து சுத்தினால் அதிவேகத்தில் சுற்றும்போது ஸ்பேஸ்-டைம் சுருங்கி கடந்தகாலத்திற்கு போய்விடமுடியுமா? மோனலிசாவின் முதுகுப்புறத்திற்கு இறக்கைகள் உண்டா? கோடாலியை உற்று பாருங்கள், அதில் அழகியல் தெரிகிறதா? இந்த கட்டுரையை ஏன் இப்படி படிக்கிறீர்கள்? அதாவது முதல் வாக்கியதிலேருந்து கடைசிக்கு, மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக? நடுவிலிருந்து ஆரம்பித்து முறையில்லாத விதமாக படித்தால் பொருள் விளங்குமா? கண்ணனுக்கு மட்டும் தான் ஓவியமா? 

இக்கட்டுரையை கேள்விகளைக் கொண்டு துவக்குவது, கட்டுரை நாயகரின் அறிமுகத்திற்கு உதவுகிறது. குறிப்பாக கடைசி கேள்வி அவர்  கலைவாழ்வின் மையத் தேடலாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஓவியக்கலையில் பெருமாற்றங்கள் எற்பட ஆரம்பித்தன . அழகியல் கோட்பாடுகளுக்குள் ஓவியக்கலை நுட்பம் மற்றும் அணுகுமுறை கட்டுப்பட்டிருந்தால் புதுமைகள் காண முடியாதென நினைத்தனர் சில கலைஞர்கள். உதாரணத்திற்கு “ஓவியக்கலையில் தர்க்கத்திற்கு இடம் உண்டா?” என்ற கேள்விக்கு அக்காலத்து ஓவியக்கலை நிபுணர்களிடம் பதிலில்லை.  இக்கேள்வியின் விடைதேடுபவர்களில் முக்கிய ஸ்தானத்தில் இருந்தவர் மர்ஸல் துஷா. 

மர்ஸலின் பிறப்பு 1887  ஆம் ஆண்டு ப்ரான்ஸ் நாட்டில் கலையை ஊக்குவிக்கும் குடும்பத்தில் நிகழ்ந்தது. பள்ளியில் கணிதத்தையும், இயற்பியலையும் நேசித்த மர்ஸல், பிற்காலத்தில் ஒரு சிறந்த சதுரங்க விளையாட்டு வீரருமானார். மர்ஸல்லின் ஆரம்பகால படைப்புகள் கல்விசார் படைப்புகளாகவே இருந்தாலும் வெகு விரைவில் அக்கால ஓவிய இயக்கங்களான இம்ப்ரெஷசனிசம்  (Impressionism) இக்யூபிசம் (Cubism) போன்றவற்றிலிருந்து  விலகி தனித்துவம் தேட ஆரம்பித்தது.  தர்க்கத்தின் தாக்குதல் அவருடைய எல்லா படைப்புகளிலும் மறைமுகமாக தெரிகிறது.  உண்மையான கலைப் படைப்புகள் நேரடியாக சிந்தைக்கே பேசக்கூடியவை என்பதால் அக்கால ஓவியப் படைப்புக்களை “ரெட்டினல் ” (“Retinal “, கண் சார்ந்த)  என நிராகரித்தார். ஒரு கலைப் படைப்பின் மகத்துவம் அது நேயர்களிடம்  எற்படுத்தும் கேள்விகளிலும், சர்ச்சையிலும் உள்ளது. கேள்விகளே  எழுப்பாத ஓவியங்கள் தொங்கும் சுவருடன் சுவராகி மறைந்து போகிறது. மர்ஸல்லின் படைப்புகள் இன்றும் நேயர்கள் மத்தியில் கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது. அத்தகைய மூன்று படைப்புகளின் மூலம் மர்ஸல்லின் சிந்தைக்குள் பயணிக்க முயல்வோம்.  

படம் 2: “Nude Descending a Staircase (No 2) – 147 x 90 சிம். அமெரிக்காவிலில் உள்ள பிலடெல்பியா கலைக் கூடத்தில் கண்காட்சியில் இருக்கிறது. எண்ணைச் சாயம் கித்தானின் மீது. 

ஒரு மனிதன் நிர்வாணமாய் படியில் இறங்கி வருகிறான். அவனுடைய முகம் முக்கியமில்லை, உடலின் வெளித்தோற்றம் முக்கியமில்லை. முக்கியமானது அவனுடைய அசைவுகள், உடம்பின் ஒவ்வொரு இணைப்பின் அசைவுகள். இறங்கி வரும்போது அவனுடைய உடல் இணைப்புகள் எப்படி நகரும்? இந்த கேள்விக்கு மர்ஸல் அளித்த பதில் இந்த படைப்பு. முதலில் சில விளக்கங்கள். படத்தில் இருப்பது ஆண் தானா? நிர்வாணமாய் இருக்கிறான் என எப்படி சொல்லமுடியும்? படத்தில்  இருப்பது நிச்சயம் ஆண்தான் என்பதற்கு மார்பகங்கள்  ஒத்த வடிவங்கள் இல்லாமல் இருப்பதை வைத்து புரிந்துகொள்ளலாம். மேலும் இப்படைப்பின் ஃரேஞ்சு தலைப்பில் “ஆண்” என்ற சொல் இருபத்தினாலும் இந்த விஷயம் புலப்படுகிறது. ஒரே உடல் நிறத்தில் முழு வடிவம் இருப்பதால் அந்த ஆண் ஆடைகள் எதுவும் அணியவில்லை எனவும்  தீர்மானிக்கலாம். 

ஒன்றின் பின் ஒன்றாக பலகையை ஜோடித்தது  போல காணப்படும் வடிவம் ஒரு காட்சி தொடர்ச்சி. படியிறங்கி வரும் போது ஒவ்வொரு வினாடியில் அந்த மனிதனின் உடல் இணைப்புகள், அங்கங்கள் உள்ளாகும் அசைவுகளின் கட்சி தொகுப்பு. உடலமைப்பை பின்பியல் வெளிப்பாட்டமாக  சுருக்கி, உடலின் முக்கிய இணைப்புகளின் அசைவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றின் வேகம், திசை, கோணம் போன்ற விஷயங்களை கற்பனை மூலம் 

சித்தரிக்க நினைத்ததின் விளைவுதான் இந்த படைப்பு. பார்ப்பதற்கு மனிதனைப்போல இல்லாமல், பின்பியல் (Abstraction) மூலம் உடலை சித்தரித்திருப்பது வேண்டுமென்றே கண்களுக்கு புலப்படாமல் சிந்தைக்கு மட்டும் விளங்க வேண்டும் என்ற பகிரங்க விருப்பத்தினால்  இருக்கலாம். முக்கியமாக உடல் இணைப்புகளை, பாகங்களை, கூம்பு (Cone) உருளை (Cylinder) போன்ற வடிவவியல் எளிமைகளின் மூலம் சித்தரிப்பது இப்படைப்பின் சிறப்பு. வடிவத்தின் திசைத்திருப்பதின் மூலமும், அசைவுகளின் தீவிரத்தின் மூலமும்  படிகள் செங்குத்தாகவும் , கரடுமுரடாகவும் இருப்பதை அறியமுடிகிறது. முதலில் இடப்புறம் செல்லும் உருவம் திரும்பி வலப்புறம் போவதைப்போல அமைந்திருக்கிறது. முதற்பார்வையில் குழப்பமூட்டும் சித்திரம் தலைப்பை மனதில் கொண்டு பார்க்கும்போது விளங்குகிறது.  

மர்ஸலின் இப்படைப்பு 1912 அம ஆண்டு முதலில் கண்காட்சியில் வைக்கப்பட்டது. க்யூபிஸத்தின் தாக்கத்தில் வரையப்பட்டாலும்    அசைவுக் கலை (“Kinetic Art”) என்ற பிரிவில் இதனை உள்ளடக்கலாம்.   

பெரியக் கண்ணாடி (“Large Glass”, 1926):

படம் 3: “The bride stripped bare by her bachelors, even “, 9 x 6 அடி, கண்ணாடி, தூசி, என்னைச்சாய நிறங்கள், கம்பிகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா கலைக் கூடத்தில் இருக்கிறது.

1912 தொடங்கி 1923 வரைக்கும் மர்ஸல்லின் கலைக்கூடத்தில் கட்டுமானத்தில் இருந்த “பெரியக் கண்ணாடி” எனும் படைப்பு முடிவில் 1926 ஆம் ஆண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. மர்ஸல்லின் சொந்த  கருத்துப்படியே  இது ஒரு முழுமையடையாத படைப்பு. “பெரியக் கண்ணாடி” என்பது இப்படைப்பிற்கு கலை விமர்சகர்களால் சூட்டப்பட்ட பெயர். அதன் முழு பெயரான , “The bride stripped bare by her bachelors, Even” என்பதற்கு தமிழாக்கம் எதுவும் கிடையாது. ஒரு படைப்பில் படைப்பாளிக்கு இருக்குமளவுக்கு தற்ச்செயலுக்கும், காலத்தின் செயல்பாடுகளுக்கும் பங்கிருந்தால் அதன் வெளிப்பாட்டியம் எப்படியிருக்கும்? காலப்போக்கின் அறிகுறிகளை ஒரு படைப்பிற்குள் உள்ளடக்க முடியுமா? கண்களுக்கு புலப்படாமல் சிந்தைக்கு மட்டும் புலப்படும் ஒரு நிகழ்வை, ஒரு கதையை, நிலைப்படத்தின் மூலம் சொல்ல முடியுமா? இந்த கேள்விகளின் விடை வெளிப்பாட்டியம்தான்  இந்த படைப்பு.

ஒன்பதுக்கு ஆறடி பரப்பில் இரண்டு கண்ணாடி பலகையின் மத்தியில், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நூல், தூசி, மின் கம்பி,  போன்றவற்றால் உருவாக்கப்பட்டது. மேலிருக்கும் பிரிவு “மணமகள்” பிரிவு எனவும் கீழிருக்கும் பிரிவு “மணமகன்கள்” அல்லது “மணமகன்களின் இயந்திரம்” பிரிவு எனவும் பெயரிடப்பட்டது. “மணமகள்” என அழைக்கப்படும் உருவம், வடிவமில்லாத முழுமையான பின்பியல் வெளிப்பாட்டையமாக காண்கிறது. மேகத்தைப்போல காட்சியளிக்கும் பின்னணியில் தோலை நினைவூட்டும் வடிவத்தினுள் மூன்று சதுரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இடப் பக்கத்தில் எலும்புக்கூட்டை நினைவூட்டும் ஒரு வடிவம் அத்தோலுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூம்பு, உருளை, அரை சக்கிரம் போன்ற வடிவங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் மேல் உடல் மெல்லிதாக கண்களுக்கு தோன்றுகிறதுபோல இருக்கிறது. 

மறைந்திருக்கும் பெண் உருவம்.

Oplus_131072

முழுமையடையாத இந்த தோற்றம் சில வடிவங்களினால் இன்னும் சிதைக்கப்படுகிறது. 

“மணமகன்கள்” பிரிவு சற்றே தெளிவான சித்தரிப்பாக அமைந்திருக்கிறது. ஆறு அல்லது எட்டு “மணமகன்கள்” உருவமின்றி ஆடைகளாக மட்டும் காண்கின்றனர், “மணமகன்கள்” பக்கத்தில் ஒரு இயந்திரம் காணப்படுகிறது. ஒரு கட்டமைப்பிற்குள் இரு சாக்கிரங்கள் சுழன்றுகொண்டிருக்கிறது. அந்த இயந்திரத்திற்கு  “மணமகன்கள்” ஒரு வித கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். “சாக்லேட் கிரைண்டர்” என அழிக்கப்படும் மூன்று பல் சக்கிற இயந்திரம்  ஒன்று சுழன்றுகொண்டிருக்கிறது, அதன் வலப்புறத்தில் சில வடிவங்கள் காணப்படுகின்றன. மேலே ஒரு கூம்பு ஆகாயத்தில் தானாகவே திசை மறுவதைப்போல காண்கிறது. “மணமகள்” பிரிவை விட சற்று தெளிவாக காணப்பட்டாலும் வடிவங்களின் சேர்க்கை வினோதமாக காண்கிறது. 

பெரியக் கண்ணாடியை புரிந்துகொள்ள எளிய விளக்கங்கள் இல்லை. மர்ஸல் இதனை ஒருவித சிந்தனை குறும்பாக படைத்ததாக கூறப்படுகிறது. ஆண் பெண் என பிரித்ததால் இது ஒரு பாலுணர்ச்சி சந்திப்பை குறிக்கும் சித்தரிப்பு என கருதலாம். ஆண் பிரிவில் காணப்படும் இயந்திரங்கள், பெண் பிரிவை அடைய உதவும்  கருவிகளாக  இருக்கலாம். தலைப்பை மீண்டும் படித்தால் “ஆடை களைந்த” (“Stripped Bare”) என்ற அடைமொழியிலேருந்து இது ஒரு நடந்து முடிந்த நிகழ்வை குறிக்கலாம் என தோன்றுகிறது. மேலும் “ஆடை களைந்த” என்பது பெண் உருவத்தை ஒரு கூட்டிற்குள்லிருந்து   பலவந்தமாக பிரித்தெடுத்த நிகழ்வையும் குறிக்கலாம். ஆண் பெண் பிரிவுகள் முழுமையாக இணையமுடியாததால், ஒரு வித பாலுணர்ச்சி நிராசையை கூட குறிக்கலாம். கூம்பின் அசைவுகள் உடலுறவின் போது ஆண் சுரபிகளின் தானியங்கி இயக்கங்களை குறிக்கலாம். ஆறு அல்லது எட்டு பேர் “சாக்லேட் கிரைண்டர்” எனும் இயந்திரத்தை இயக்குவது  அவர்களுக்குள் பெண் பாத்திரத்தை அடைய நடக்கும் போட்டியை குறிக்கலாம். “சாக்லேட் கிரைண்டர்” என்பதே கூட கசினோவில் சூதாட்டம் ஆட உபயோகிக்கும் ரௌலட் கருவியை போல ஒரு தற்ச்செயல் ஆதரம்கொண்ட விளையாட்டை குறிக்கலாம். சாக்லேட்டின் மேற்கோள், கொக்கொ   கொட்டையை  அடிப்படையாக கொண்டிருக்கலாம். கொக்கொ கொட்டை புராணகாலங்களில் பாலுணர்ச்சியையும், வீரியத்தையும் கூட்டுவதாக கருதப்பட்டது.  

மர்ஸல்லே இந்த படைப்பின்  விளக்கமாக மூன்று “பெட்டிகள்” (“Boxes”) எனும் உரைகளை வெவ்வேறு காலங்களில் வெளியிட்டார். விளக்கங்களை விட இப்பெட்டிகள் குழப்பத்தை எற்படுத்தின. மேலும் “பெரிய கண்ணாடி” யை ஒரு கண்காட்சியிலேருந்து இன்னொன்றிற்கு  மற்றும் போது கண்ணாடி மெல்லிதாக சிதறி விரிசல் விட்டது. இந்த விஷயம் மர்ஸல்லிற்கு தெரிந்தபோது விரிசல்களை சரி செய்ய மறுத்தார். தற்செயலாக விழுந்த விரிசல்கள் படைப்பின் அழகிற்கு மேலும் மெருகு சேர்ப்பதாக கூறினார்.

ரெடிமேடுகள்  (“Readymades”)

கலைத்  துறையில் இப்போது பிரபலமாகி இருக்கும் “இன்ஸ்டாலேஷன்ஸ்” (“Installations”) எனும் முறையின் முன்னோடி இந்த  “ரெடிமேடுகள்” எனும்  படைப்புகள். ரெடிமேடுகள் ஒரு வித கட்சிப்  பிழைகள். அன்றாடத்தில் உபயோகிக்கும் பொருட்களை அதன் உபயோகத்திற்கு பதில் வேறு ஒரு விளக்கத்துடன் இணைப்பதற்கான முயற்சி. உதாரணத்திற்கு இருசக்கிற வண்டியின் சக்கிரத்தை தலை கீழாக திருப்பி அதன் கடிவாளத்துடன் ஒரு மேஜையின் மீது வைப்பது “ரெடமேடு”களின் ஒரு உதாரணம். சைக்கிளின் சக்கிரத்தை பார்த்தும் பார்க்காதது போல போகிறவர்கள் நிறைய பேர் உண்டு. அதே சாக்கிரத்தை ஒரு மேஜையின் மேல் விளக்குகளால் சூழப்பட்டு தலை கீழாக வைத்தால் அதனுடைய அழகியல் வெளிப்படுகிறது. அழகியலையும் தண்டி இத்தகைய காட்சி நேயர்களை குழப்பத்திற்கு ஆளாக்குகிறது. மர்ஸலின் ரெடிமேடுகளின் நோக்கமே இது தான். 

படம் 5 : “Fountain”. இப்படைப்பின் அசல் துலைந்துவிட்டது.  

மர்ஸலின் மிக முக்கியமான படைப்பென கருதப்படும் “ஃபெளன்டன்” (“Fountain”, நீரூற்று) என்பது நேயர்களிடம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. “இதையெல்லாமா கலை என்கிறார்கள்?” என்ற கேள்வியையும் எழுப்பியது. சுருக்கமாக  “ஃபெளன்டன்” என்பது ஆண்கள் சிறுநீர் கழிக்கும் பீங்கான் பேசின். அழகியல் மட்டும் ஒரு கலைப்பொருளுக்கு ஆதாரமென்றால் சமசீர் வடிவமுடைய பீங்கான் சிறுநீர் கழிக்கும் பேசின் கூட கலைப் பொருளாக கருத முடியம் என்ற  மர்ஸல்லின் வாதத்தின் பிரதிபலிப்பு. “ஃபெளன்டன்” பேசினில் “R.Mutt 1917” என கைப்பட எழுதியது இப்படிப்பை உருவாக்கிய படைப்பாளி யார் என்ற கேள்வியையும் எழுப்பியது. “அது ஒரு காட்சிக்  குறும்பு” என இப்படிப்பை பற்றி பிற்காலத்தில் கூறிய மார்ஸல், கண்காட்சியின் தேர்வாளர்களுள் ஒருவராக தானே இருந்ததால் நேரடியாக தன் பெயரில் இல்லாமல் “R.Mutt” என்ற புனை பெயரில் வெளியிட்டதாக கூறினார். 

ரெடிமேடுகளின் முக்கியத்துவம் அதன் ஆக்க சிந்தனையிலும், நேயர்கள் மத்தியில் இத்தகைய படைப்புகள் உருவாக்கும் உணர்ச்சிகளிலும், குழப்பங்களிலும் உள்ளது. ரெடிமேடுகளில் அசல் என்பது கிடையாது. எளிதாக மறு உருவாக்கம் செய்யக்கூடியவை இத்தகைய படைப்புகள். வெகுஜெனரின் கைக்கு அப்பர் இருக்கும் விலை மதிப்பான கலை படைப்புகளை  போல் இல்லாமல் காப்புரிமை பற்றிய கவலைப்படாமல்  எளிதில் மருவுருவாக்கம் செய்ய உதவுகிறது இத்தகைய படைப்புகள். மேலும் நையாண்டித்தனத்திற்கும், நகைச்சுவைக்கும் பத்திரமாக இப்படைப்புகளை உபயோகித்தார் மர்ஸல். உதாரணத்திற்கு மோனா லிசாவின் மலிவு விலை புகைப்பட நகலின் மேல் மீசையை வரைந்து ” மோனா லிசா வசீகரமான பின் அழகுடையவள் ” என எழுதினார். கண்ணாடி குவளையில் “பாரிஸ் நகரத்தின் ஐம்பது கியூபிக் சென்டிமீட்டர் அளவு காற்று” என குறிப்பிட்டு ஒரு குவளையை அமெரிக்காவில் விற்க முயன்றார்.  “ஃபெளன்டன்” னை  பல கலைஞர்கள் தங்கள் ஆக்க பணியில் சேர்த்து கொண்டுள்ளனர். 

முடிவுரை: கலையின் மூலம் சிந்தனை மாற்றங்களை, கேள்விகளை சமுதாய நையாண்டித்தனத்தை எற்படுத்த நினைக்கும் இக்கால கலைஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மர்ஸல். சமகால ஓவியர்களான பிக்காசோ, ஹென்றி மாட்டிஸ் போன்று அதிகமாக  படைக்கவில்லை என்றாலும் அவர் படைப்புகள் அவருடைய சிந்தனையை பரப்ப செய்யும் ஒரு வாகனமாக இருந்ததே தவிர கலை பொருட்களாக ஒரு தனித்துவ மகத்துவம் பெறவில்லை. அதுவே அவருடைய விருப்பமும் ஆகும். பெரும்பாலும் காட்சி புதிர்களாகவும், சிந்தனை சிக்கல்கலாகவும் இருப்பினும் அவர் படைப்புகள் ஒரு புதிய சிந்தனை பரிமாண வழி காட்டிகள் , கலை துரையின் புது வரம்புகள்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.